இலங்கையில் உயிரை எடுத்தோம், தமிழகத்தில் மானத்தை வாங்குவோம் - அழியட்டும் தமிழன்..

Wednesday, July 20, 2011

தினமும் எதாவது ஆங்கில அல்லது ஹிந்தி - பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வடநாட்டு - செய்தி சேனல்களைப் பார்க்கும் போது தோன்றியது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. எந்த சேனலைத் திருப்பினாலும் "தமிழ் அமைச்சரின் ஊழல்" என்றே இந்த ஸ்பெக்ட்ரம் என்னும் விசயம் சொல்லப்படுகிறது. 

இன்று வரை இதில் எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. 1.76லட்சம் கோடி வருமான இழப்பு. இப்படி இழப்பு ஏற்படுத்த சாதாரண மந்திரிக்கு மட்டும் லஞ்சம் கொடுத்தால் போதுமா? இதை ஏன் வடநாட்டு மீடியாக்கள் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்ல மறுக்கின்றனவா? அவர்கள் அங்கே சொல்வதை இங்கே நமது அடிவருடிகளும் ஏதோ ராசாவும் தயாநிதி மாறனும் தான் ஊழல்வாதிகள் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.
நேரடியாக ஊழல் மற்றும் லஞ்சம் நிகழ்ந்த காமன்வெல்த், ஆதர்ஷ் போன்றவை பற்றி இப்போது எந்தத் தொலைக்காட்சியிலும் ஆங்கில நாளிதழ்களிலும் செய்தியே வருவதில்லை. வராத மாதிரி பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லலாம். ஏன் என்றால் காங்கிரஸுக்கு அது கெட்ட பெயரை உண்டு பண்ணிவிடும் நேரடியாக அந்தக் கட்சிக்காரர்களே அதில் ஈடு பட்டிருப்பதால். ஆனால் இந்த அரசு ஊழலை எதிர்ப்பது போலவும் காட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

'சிக்குனான்டா அடிம' என்பது போல் ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள். அது ஒன்றை மட்டுமே வைத்து இன்று வரை இதை தேய் தேய் என்று தேய்க்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சி என்றாலும் நாங்கள் ஊழலை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்பது தான் இவர்கள் சொல்ல வருவது. அதிலும் செய்திகளில் தமிழ் அமைச்சர்கள், தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு கூறும் போது இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

தன்னை வெறுத்த மாமியாரைக் கொன்ற சீக்கிய இனத்தவரை பிரதமராக்கி அழகு பார்ப்பவர் தான் அன்னை சோனியா (த்தா வச்சுருக்கான் பாரு தெளிவா. 'அன்னை சோனியா', 'புரட்சித்தலைவி அம்மா'னு). தன் கண்வனைக் கொன்றவர்கள் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் ஆதலால் அந்த இனத்தையே வேரோடு அழித்தாகிவிட்டது அங்கே. இன்னும் கொஞ்சம் நஞ்சம் அங்கே மிச்சம் இருப்பதும் சிங்களவனோடு கலந்து தமிழ் என்பது இலங்கையில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். 

அந்த அன்னைக்கு ஒரு இனத்தையே அதன் கலாச்சாரத்தையும் வேரையும் அழித்தும் தன் ரத்தவெறி அடங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம்? தமிழ் பேசுபவன் எங்கு இருக்கிறான் என்று தேடினால் இதோ தான் வாழ்க்கைப்பட்ட இந்திய நாட்டின் காலடியில் இருப்பது தெரிந்துவிட்டது. சொந்த நாட்டிலே போர் தொடுக்க முடியாது, இலங்கையில் செய்தது போல் பேடித்தனமாக பின் இருந்து தாக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவு தான் இந்த "தமிழர்களின் ஊழல்".

உயிரைத்தான் வாங்க முடியவில்லை. மானத்தை வாங்கலாம் அல்லவா? ஒரு காலத்தில் நாம் பிஹாரிகளையும் ஜார்கண்ட்காரர்களையும் ஊழல்வாதிகள் என்று எள்ளினோம். இன்று லட்சம் கோடி ஊழல் என்று உலகமே வாயைத் திறந்து பார்க்குமாறு செய்தாகிவிட்டது.

சரி, அந்த லட்சம் கோடி ஊழலும் தமிழன் செய்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் பணம் எங்கே என்று கேட்டால் 'அது ஊழல் இல்லை வருமான இழப்பு' என்றார்கள். எல்லா அமைச்சர்களும் அப்படித்தானே செய்தார்கள், பின் எதற்கு கைது? என்றால், "அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தார்" என்கிறார்கள்.

இன்று வரை அந்த லஞ்சப்பணத்தையும் சரி, லஞ்சம் கொடுத்தவர்களையும் சரி இந்த அரசாங்கமும் வடநாட்டு மீடியாக்களும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காரணம் நீரா ராடியா என்னும் வடநாட்டுக்காரி தானே? ரிலையன்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதே? டாடா கூட பேசினாரேப்பா? அவர்கள் மேல் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

இன்றைய தேதியில் ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும். அவர்களைப் பற்றி எல்லாம் இரண்டு நாட்கள் செய்தி போட்டுவிட்டு அப்படியே மறந்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி, தயாநிதி என்று ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். "Tamil Minister Arrested" என்று செய்திகள் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் மக்கள் சிரிதும் யோசிப்பதே இல்லையா? ஒரு அமைச்சர் எப்படி அத்தனையும் செய்ய முடியும்? "எனக்கு ஒன்னுமே தெரியாது"ன்னு ஒரு பிரதமர் சொல்றாரு. அமைச்சரவையில் வேறு யாருக்குமேவா தெரியாது? சரி ஊழல் நேரடியாகத் தெரிந்த ஆதர்ஷ், காமன்வெல்த் பற்றியெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை? மீடியாக்களும் மறந்துவிட்டனவா?

ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் தமிழனும் மற்ற ஊழல் பற்றி பேசுகிறானா? ஏதோ ஊழல் என்றாலே தமிழ்நாடு தான் என்றாகிவிட்டது. வடநாட்டுக்காரன் எல்லாம் நம்மை நக்கலாகத்தான் பார்க்கிறான். இப்போது கூட கட்சிக்கு நாயை விட அதிகமாக விசுவாசமாக இருக்கும் சிதம்பரத்துக்கு அவர் தமிழன் என்கிற காரணத்தால் தான் செக் வைக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கு குணமுண்டு"
தமிழனையும் அழித்தாகிவிட்டது, அவன் குணத்தையும் மானத்தையும் அழித்துவிட்டு அவனை தலைகுனியச் செய்ய இப்போது அடுத்த மூர்க்கத்தனம் நடக்கிறது. நாம் நம் அடையாளத்தை இழக்கப் போகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக. நம் மானம் போகப்போகிறது. இதற்கு இலங்கையைப் போல் செத்துப்போய்விடலாம்.


மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

சரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..

Thursday, July 14, 2011

இன்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்த நாளாம். எங்கள் ஊர் பக்கம் எங்கு திரும்பினாலும் ப்ளக்ஸ் போர்டுகள் தான். அந்த ப்ளக்ஸ்களில் காமராஜர் உப்புக்கு சப்பானியாக மேலே ஒரு ஓரத்தில் ஒரு வளையத்திற்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார், கீழே வரிசையாக நாடார் குல விடிவெள்ளிகள் (அதான் எங்க ஊர் பயபுள்ளைக, ஸ்கூல் பசங்க கூட இதுல இருக்கிறது தான் மிகவும் அபாயகரமான விஷயம்), நடுவில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நமது நாடார் குல நாயகன், சின்ன காமராஜர் சரத்குமார் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார்.

என்னோட டவுட்டெல்லாம் யாருய்யா இந்த சரத்குமாரு? எதுக்கு அவரையும் காமராஜரையும் இணைத்து இப்படி அட்டூழியம் செய்கிறார்கள் என்பது தான். சிறு வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது சக மாணவன் ஒருவன் சொன்னான், "யே சரத்து எங்க சொந்தக்காரு, தெரியும்ல? எனக்கு அதான் அவரப்புடிக்கும்" என்றான். 'பார்ரா இவனுக்கெல்லாம் ஒரு நடிகன் சொந்தக்காரரா இருக்கான். சே நமக்கு யாரும் இல்லையே? போன வாரம் கூட 'ரஜினி நமக்கு சொந்தக்காரன் எல்லாம் இல்ல. இனிமேல் ரஜினி மாமான்னு சொன்ன வாயில சூடு வச்சுருவேன் ரஸ்கல்' என்று அம்மா வஞ்சதை நினைத்துக்கொண்டேன். அப்போது அருகில் உள்ளவன் என்னிடம் கேட்டான். "நீங்க நாடாராடா?" என்று. "தெரிலடா" என்றேன். "நீ நாடாருன்னா சரத்து ஒனக்கும் சொந்தம் தான்டா" என்றான். 4ம் வகுப்புப் பையனின் பேச்சு இது.

'சாந்தரம் வீட்டுக்குப்போனவுடனே அம்மாகிட்ட..... வேணாம் வேணாம் அப்பா வந்ததும் கேப்போம், அம்மா அடிப்பாங்க' என்று முடிவு  செய்துகொண்டேன். சாந்தரம் வெளியில் அப்பா சைக்கிள் நிறுத்தும் ஓசை கேட்டது. வேகமாக வெளியில் சென்று அவர் வாங்கி வந்திருந்த பக்கோடா பொட்டலத்தை பிரித்துக்கொண்டே அப்பாவுக்கு கேட்காதவாறு மெதுவாகக் கேட்டேன், "அப்பா நாமா நாடாரா?"

"அத ஏன்டா கண்ணு இவ்ளோ மெதுவா பயந்துக்கிட்டே கேக்குற? தைரியமா சத்தமா கேக்கணும்" இவர் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை, அதான் இவ்ளோ தைரியம். இதே நான் சொல்லிருந்தா இந்நேரம் என் முதுகு வீங்கியிருக்கும். "நாமெல்லாம் நாடார் தான்டா" என்றார்.

அம்மாவுக்கு கேட்டுவிட்டது. "என்னது நாடாரா? பிள்ளைய கெடுத்து குட்டிசுவராக்குறதே நீங்க தான். டேய் இனிமேல் அப்பாகிட்ட போயி நாடாரு, ரஜினின்னு எதாவது கேட்ட தொடையில புடிங்கி வச்சுருவேன். ஹோம் வொர்க் நோட்ட எடு" அம்மாவின் கண்கள் பயமுருத்தின.

நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு மெதுவாக அப்பாவை எழுப்பினேன். "என்னப்பா கண்ணு?"

"யெப்பா சரத்து நமக்கு சொந்தக்காரனாப்பா?"

"இல்லடா கண்ணு யாரு அப்டி சொன்னது?"

"என் கிளாஸ்காரன் சொன்னியான்ப்பா. நம்ம நாடாரு தான? சரத்து நாடாரு எல்லாருக்கும் சொந்தக்காரன்னு அவன் தாம்ப்பா சொன்னியான்"

"இந்தா யே எந்திரி" அப்பா அம்மாவை எழுப்பிவிட்டார். போச்சி இன்னைக்கு நைட்டு அடி தான் என்று முடிவு செய்துவிட்டேன். அம்மா எழுந்தார். "மொத, நாளைக்கு பிள்ளைய ஸ்கூல்ல விடும் போது டீச்சர் கிட்ட சொல்லி வேற எடத்துல ஒக்கார சொல்லு"

"எதுக்குங்க?"

"எவனோ இவேன்கிட்ட சரத்குமாரு நாடாரு, நம்ம சொந்தக்காரன் தான்னு சொல்லிருக்கான். நாலாப்பு படிக்குறவன் பேசுற பேச்சாடீ இது? இந்த வயசுலயே சினிமாக்காரன ஜாதிய வச்சு பிரிக்குறாய்ங்க? நான் சொன்னத மொத செய்யி" என்னைப்பார்த்துச் சொன்னார் "கண்ணு, கண்ட கண்டவன எல்லாம் சொந்தக்காரன்னு சொல்லக்கூடாதுடா' என்று சொல்லி என்னைத் தூக்கி சுவரில் தொங்கும் காமராஜரின் படத்திற்கு அருகில் கொண்டு சென்று  "இவரு தான் நம்ம சொந்தக்காரரு, ஒனக்கு தாத்தா, சேரியா?" என்றார்.

எனக்கு அந்த வயசான ஆளைப்பிடிக்கவில்லை அப்போது. இப்போது விவரம் தெரிந்தவுடன் காமராஜரைப் பிடிக்கிறது, ஆனால் அப்பா அன்று சொன்னதும் தவறு என்றே படுகிறது. காமராஜர் வேறு ஜாதியாய் இருந்திருந்தால் என் அப்பாவிற்கு இந்த அளவிற்குப் பிடித்திருக்காது. நடிகனை ஜாதி வைத்து பிரிக்கக்கூடாது என்றவர் காமராஜரை மட்டும் அப்படி பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் என் அப்பா அளவிற்குக் கூட யோசிக்காத பல அரைவேக்காடுகள் படித்தும் விவரம் தெரிந்தும் இந்த மாதிரி நடிகர்களை ஜாதிவாரியாகப் பிரித்துக்கொண்டு தேவையில்லாமல் பேனர் கட் அவுட் என்று வைத்து உயிரை வாங்குகிறார்கள். இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு பதிவு. இந்த சரத்குமார் தனது ஆரம்ப கால சினிமா வாழக்கையில் ஜாதியை காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சேர்ந்ததும் தனக்கும் கட்சியில் நடிகன் என்கிற ஒரு நிலையைத் தாண்டிய அந்தஸ்து கிடைப்பதற்காக தன் ஜாதியை காட்ட ஆரம்பித்தார்.

அப்போது அந்த இன மக்களும் இவருக்கு கொஞ்சம் ஆதரவாக இருந்தனர். ஆனால் நக்மாவுடன் சுற்றிக்கொண்டும் தன் மனைவியை விவாகரத்து செய்த போதும் இவரை "எங்க ஆள்" என்று சொல்லிக்கொள்ள பலரும் கூச்சப்பட்டது உண்மை. பின்னர் தான் இவர் தி.மு.க.விற்கு வந்து தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதும் ஒன்றும் நாடார்கள் இவருக்குப் பெரிதாக ஒன்றும் ஆதரவளித்துவிடவில்லை. நாடார்களின் செல்வாக்கு மிகுந்த நெல்லையிலே தான் இவர் தோற்றார். அப்போதும் கூட இவருக்குப் புரியவில்லை ஜாதியில் பெரும்புள்ளியாக இருப்பது மட்டுமே அந்தக் குறிப்பிட்ட ஜாதிக்குத் தன்னை தலைவனாக்கப் போதுமானது இல்லை என்பது. இவரை தங்கள் ஜாதி என்று தான் கூறிக்கொண்டார்களே தவிர தங்கள் தலைவன் என்று யாரும் கூறிக்கொள்ளவில்லை.

அவர்களுக்கும் தெரியும், இந்த ஆளை தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் தன்னை அடுத்த காமராஜராக நினைத்துக்கொண்டு விடுவார் என்பது. ஏற்கனவே சென்ற வருட இறுதியில் சிவகாசியில் நடந்த நாடார் சங்க நூற்றாண்டு விழாவில் இவர் பேச்சுக்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கிறது இப்போது வரை மக்களிடம். எந்தத் தலைவனும் தன்னை தானே தலைவன் என்று  சொல்லிக்கொண்டது இல்லை. மக்கள் தான் தலைவர்களை அடையாளம் கண்டு தலைவன் ஆக்குகிறார்கள். ஆனால் இந்த ஆள், ஒரு சமுதாயத்தில் அந்த சமுதாயத்திற்காக இப்போது வரை பாடுபடும் மூத்தோர்களும் நல்ல தலைவனை எதிர் பார்த்து நிற்கும் மக்களும் நின்று கொண்டிருக்கும் ஒரு மேடையில், அந்த நிகழ்ச்சிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிக்கூட போடாமல் சொகுசாக 10நிமிடங்கள் மட்டும் வந்து மேடை ஏறி "நான் தான் உங்கள் தலைவன்" என்று சொன்னால் அதை உடனே நம்பி கைதட்ட மக்கள் ஒன்னும் எம்.ஜி.ஆர் காலத்தில் இல்லையே?!

இவர் இப்போது கூட தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் நாடார் வாக்கு வங்கியை மட்டும் நம்பி நின்றிருந்தால் வழக்கம் போல இன்னொரு தோல்வி தான் மிஞ்சியிருக்கும். மக்களை இவர்கள் இன்னும் இளிச்சவாயர்களாக நினைத்துக்கொண்டு, தான் சார்ந்த ஜாதியை எதாவது ஒரு பெரிய கட்சியில் அடையாளமாகக் காட்டி எதாவது ஒரு பதவியை அடைந்துவிடுகிறார்கள். இவர்களுடைய விசிட்டிங் கார்டை அன்றோடு மறந்துவிடுகிறார்கள்.

இப்போது வரை எனக்கு உண்மையிலேயே இவரது பிறந்த நாள் ஜூலை 14ல் தானா என்று ஒரு சந்தேகம் உண்டு. தன் ஜாதி மக்கள் உயிரையே வைத்திருக்கும் மறைந்து போன ஒரு தலைவரின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளை தன் பிறந்த நாளாக அறிவித்துக்கொண்டால் இவருக்கு அது மக்கள் மத்தியில் தலைவன் என்று கூறிக்கொள்ள சென்ட்டிமெண்ட்டாக உதவும் என்கிற நோக்கோடு கூட இருக்கலாம் அல்லவா?

ஆனால் நாடாரின மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஓரளவிற்கு விவரமானவர்கள் தான். இதை உணர்ந்ததால் தான் சரத்குமாருக்குத் தனியாக நிற்கும் தைரியம் இல்லை. இப்போதும் கூட விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை சரத்குமாருக்கு கணிசமான அளவில் ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாருக்கும் திரையில் காணும் நடிகனை நேரில் காண்கிறோம் என்கிற ஆசை மட்டும் தான் உண்டே தவிர தலைவனாக்கும் ஆசையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் காமராஜரோடு இணைத்து இந்த ஆளை வைத்து போஸ்டர் ப்ளக்ஸ் வைப்பது தான் அசிங்கமாக உள்ளது.

மற்ற இன மக்களும் இப்போது இப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். திரையில் கனவுத்தொழிற்சாலையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் தங்கள் பங்குக்கு இருக்கிறான் என்கிற சந்தோசம் அவர்களுக்குப் போதும். அவனே தலைவனாக நினைக்கும் போது தான் மக்களும் தங்கள் பவரை காட்டுகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது மட்டுமே தலைவனாகத் தகுதி இல்லை என்பதையும் மக்களும் உணர்ந்துள்ளனர். 

ஆனாலும் ஜாதி என்பது அனைத்தில் இருந்தும் தூக்கி எரியப்பட வேண்டும். ஒரு நடிகன் என்பவன் அவனுடைய நடிப்பாலும், தலைவன் என்பவன் நீதி தவராத நடுநிலையான தலைமையாலுமே நம்மைக் கவர வேண்டுமே ஒழிய ஜாதி மூலமாகவோ மதம் மூலமாகவோ கவர நினைத்தால் அது அவனின் முட்டாள் தனம் என்பதையே கார்த்திக்கும் சரத்குமாரும் இன்றைய தேதி வரை நமக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி முதலில் சொன்ன அந்த ஸ்கூல் மேட்டரை சொல்லி முடிக்கிறேன். மறுநாள் பள்ளி சென்ற போது வேறு இடம் மாறி உட்கார்ந்து கொண்டேன். அந்தப் பையன் ரீசஸ் பீரியடில் வந்து கேட்டான், "என்னடா நீங்க நாடாரா?"

"ஆமா"

"அப்ப சரத்து ஒனக்கும் சொந்தம் தான்"

"இல்ல எனக்கு காமராஜர் மட்டும் தான் சொந்தம்" வேகமாகத் திரும்பி ஓடினேன் ஒன்றுக்கு அடிக்க..

குத்துங்க எசமான் குத்துங்க..

Wednesday, July 6, 2011

'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது?' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா?) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க?' என்று அவனுக்கு இன்று இரவு வரப்போகும் தலையாய பிரச்சனையை தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே வந்தது நம்ம சிவகாசிக்குப் போற பஸ்ஸு. இன்னும் ரெண்டரை மணிநேரம் கொதிக்கும் தார் டின் பயணம். ஒரு அரை லிட்டர் 7அப் பாட்டிலுக்கு தண்டம் அழுதுவிட்டு பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடிக்கலாம்னு பாத்தா ரெண்டு ஜன்னல் பக்கமும் வெயில். சாயந்திரம் ஆரம்பிக்கும் வேளையில் இது தான் தொல்லை. சரி காற்றோட்டமாவது இருக்குமே என்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்.

'இந்த வேக்காடுல எவனாவது பக்கத்துல உக்காந்தான்னா தாங்க முடியாது' - பையை எனக்கு அருகில் சீட்டில் போட்டு "ஆள் வாராங்க" என்று  யாரையும் உட்கார விடவில்லை. 'அதான் அத்தன சீட் காலியா இருக்குல? இங்கேயே வந்து மொக்கிறாய்ங்க'. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று கேட்ட அழகான பெண்ணுக்குக்கூட என் பதில் "ஆள் வாராங்க". என் இருக்கையைத் தவிர அனைத்தும் நிரம்பி விட்டன. கண்டக்டர் சீடியை போட்டுவிட்டு டிக்கெட் கொடுக்கவும் டிரைவர் காலரை தூக்கி விட்டு வண்டியை ஆன்செய்யவும் தான் மனதில் ஒரு சந்தோசம்.

"யெய்யா யெய்யா ஏறிக்கிறேன், நிறுத்துயா" கண்டக்டர் விசிலில் வண்டி நின்றது. ஒரு கிழவி ஏறியது வண்டியில். என் ஒரு சீட் மட்டுமே காலி. கண்டக்டரும் டிரைவரும் என் ஜென்ம விரோதி போல் தோன்றினார்கள். கிழவி ஏறியவுடன் முன்பக்கம் சென்றது. "எம்மா அந்த ரெண்டாவது சீட்ல எடம் இருக்கு பாரு" கண்டக்டர் சொன்னார். சொன்னார் என்ன சொன்னார், சொன்னான் படுபாவி. அது மெதுவாக என்னை நெருங்கியது. என் அருகில் வந்ததும் "என்னயா ஆம்பளயாள் கிட்ட ஒக்கார சொல்ற? நான் நின்னுகிட்டே வாரேன்" என்றது அந்த பேரழகுப் பாட்டி. நான் சீட் கொடுக்க மறுத்த அந்தப்பெண் கிக்கிபிக்கி என்று சிரித்தாள். என் வாழ்வின் உச்சகட்ட அவமானம். இப்போது யாரையாவது என் அருகில் அமர வைத்துக்கொண்டால் தான் ஓரளவாவது சமாளிக்கலாம். இல்லேனா அடுத்து ஒரு பொம்பள வந்தா என்ன எந்திரிக்க சொல்லிருவாய்ங்க.

மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் ஒரே ஒருவன் ஏறினான். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 'அடச்சே அவன் தானா?' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு "டேய் மாப்ள" என்று கை காட்டினேன். முதலில் என்னை சரியாக அடையாளம் தெரியாமல் பின் சில மைக்ரோ செகண்டுகளில் தெரிந்து கொண்டது அவன் முகத்தில் ஓடியது. சிரித்துக்கொண்டே "டேய் மச்சீ" என்றான். அது என்னவென்று தெரியவில்லை. ஊரில் ஒழுங்காக கைலி கட்டிக்கொண்டு இருக்கும் வரை மாப்ளன்னு பேசுறாய்ங்க.. மெட்ராஸ் போயி முக்கா டவுசர் போட்டதும் வாயில இவைங்களுக்கு "மச்சீசீசீ"னு வந்துருது. ப்ளடி பாஸ்கர்ஸ்.

அருகில் வந்து அமர்ந்து கொண்டான். பல நாள் கழித்து பார்த்துக்கொண்டதால் நாங்கள் ஒன்னும் பின்னிப்பிணைந்து கொள்ளவில்லை. எனக்கு என் சீட் தப்பித்தது என்ற சந்தோசம், அவனுக்கு சீட் கிடைத்த சந்தோசம் அவ்வளவு தான். மூனு வருசம் ஒன்னாப் படிச்சதெல்லாம் எவனுக்கு வேணும்? படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். "அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது?"

"நல்லா போகுதுடா. ஒனக்கு?"

"சூப்பரா போகுது மச்சி"

மச்சினு சொல்லாதடா மானங்கெட்டவனே. "என்னடா மதுரப்பக்கம்? நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள?"

"இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் மச்சி. நம்ம சோபாவோட கல்யாணம்டா! ஒனக்கு சொல்லல? நீ என்ன இங்க?"

"எனக்கும் ஒரு கல்யாணம்டா. ஸ்கூல் ஃபிரண்ட் கல்யாணம். சோபாக்கும் இன்னைக்குத் தான் கல்யாணமா? சொல்லவே இல்லையேடா? ஹிம் செம ஃபிகர். எவனுக்கோ குடுத்துவச்சுருக்கு பாரேன்"

"அதப்பத்தி ஒனக்கென்ன? நம்ம செட்ல என்னத்தவிர யாருக்குமே சொல்லலடா" பெருமையாக சொல்கிறான் என்று பார்த்தால் முகம் சோகமாக இருந்தது.

"ஏன் யாருக்கும் சொல்லல?" முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்டேன். அவன் என்னை சட்டை செய்யாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான்.

என் தொடையில் ஏதோ உறுத்தியது. ஆஹா வைப்ரட்டரில் வைத்திருந்த ஃபோன். இவ்வளவு களேபரத்தில் அதை விட்டுவிட்டேன். வேகமாக எடுத்துப்பார்த்தேன். என் செல்லம் தான். 11மிஸ்டு கால்ஸ். 7எஸ்எம்எஸ். முதல் இரண்டு எஸ்.எம்.எஸ் சாதாரணமாக அடுத்த இரண்டு கெஞ்சல் தொனியில் கடைசி மூன்று 'என் மூஞ்சிலேயே முழிக்காத' என்னும் ரேஞ்சில்.

பதறிப்போய் ஃபோன் செய்தேன். கட் செய்தாள். மீண்டும் மீண்டும் கால் செய்தேன். அட்டண்ட் செய்து உடனே கட் செய்தாள். 'என்ன நெஞ்சழுத்தம்டீ ஒனக்கு!' கால் செய்வதை நிறுத்திவிட்டு எஸ்.எம்.எஸ் டைப் செய்தேன்.

"பொட்டச்சி சாகவாசம் மட்டும் வச்சுக்கிடாதடா மச்சி" அழுத்தமாக கலக்கமாக அவனிடம் இருந்து வார்த்தைகள் வந்தன. எஸ்.எம்.எஸ். டைப் செய்றத பாத்துருப்பானோ என்று பதறி ஃபோனை என் மடியில் கவுத்தி வைத்து  அவனைப் பார்த்தேன். அவன் அப்போது பார்த்த திசையிலே இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேள எஸ்.எம்.எஸ்அ பாக்கல.

"என்ன மாப்ள சொன்ன?"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டுறத மொத நிறுத்துறா"

"எனக்குக்கூட தான் நீ மச்சின்னு கூப்டுறது கேவலமா இருக்கு"

"மெட்ராஸ்லயே அப்டித்தான் கூப்டுறாய்ங்க தெரியும்ல"

"யெப்பா ராசா இது மதுர. சரி மேட்டர சொல்லு. எதுக்கு 'பொட்டச்சி சவகாசம் வச்சுக்காத'ன்னு சொன்ன?"

"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்"

"நான் என்னடா கேட்டேன்? ஓ ஒனக்கு மட்டும் சோபா பத்திரிக்கை வச்சதப் பத்தி கேட்டதா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே? அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா? ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன! அய்யோ ஆண்டவா. 


இவன் கறுப்பு. அவா தமன்னாவ விட செகப்பு. இவன் ஒடிஞ்சு விழுற விளக்கமாத்து குச்சி மாதிரி ஒல்லி. அவா தள தளன்னு பால்கோவா மாதிரி. இவன் குட்டை. அவா ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். அந்தக் கூந்தல்? அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன்? சரி வேண்டாம். சோகமாக இருப்பவனப் பத்தி தப்பா நெனைக்கக்கூடாது. அவனே ஆரம்பித்தான்.


"நாங்க காலேஜ் டேஸ்க்கு அப்புறம் சென்னைல ஒரு  இன்டர்வியூ நடக்கும் போது மீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பழக்கம்டா. மொத ஒரு வருசம் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம். அப்பறம் தான் நாங்க லவ் பண்றோம்னு எங்களுக்கே தெரிஞ்சது." ஏதோ கேன்சர் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தது போன்ற சோகத்தில் சொன்னான்.

"சரி இப்போ எதுக்குடா இன்னொருத்தன கல்யாணம் பண்றா? எதுவும் சண்டையா?"
"ஹிம்" விரக்தியாகச்சிரித்தான் "இப்போ வரைக்கும் நான் அவகிட்ட ஒரு தடவ கூட சண்ட போட்டது இல்ல" ஒரு பெருமூச்சோடு ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

"மாப்ள என்ன தான்டா பிரச்சன? ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா?"

"நானும் அவளும் வேற வேறயாம்"

"வேற வேறனா? வேற வேறயா இருந்தாத்தான்டா எல்லாம் சரியா நடக்கும்" என் புத்திசாலித்தனமான ஜோக்கை அவன் ரசிக்கவில்லை. பேசாமல் இவனைத் தள்ளிவிட்டு அந்தப் பாட்டியை உட்காரச்சொல்லலாமா என்று யோசித்தேன்.


"வேற வேற ஜாதிடா. அவங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்களாம்" அவன் சொல்லும் தொனியிலேயே தெரிந்தது சோபா இவனை கழட்டி விட சொன்ன வார்த்தை தானே அன்றி அதில் ஒன்றும் உண்மை இல்லை என்று. சோபா மட்டுமா எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு நல்ல ஆயுதம் தானே. இந்த ஜாதிங்குற ஒன்னு இல்லாமலே இருந்திருந்தா பொண்ணுங்கல்லாம் என்ன காரணம் சொல்லுவாளுக?
"சரி மாப்ள, அது நீ லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே தெரியாதா அவளுக்கு? அப்ப சொல்ல வேண்டியது தானடா?"

"மொத ப்ரொபோஸ் பண்ணதே அவா தான்டா" குண்டைத்தூக்கிப் போட்டான்.

"டேய் என்னது அவா ப்ரொபோஸ் பண்ணுனாளா? அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும்?"

"ஆமாடா. அத நானும் லவ்வுன்னு தான் நம்பிக்கிட்டு இருந்தேன். மொத எல்லார்கிட்டயும் என்ன பெஸ்ட் ஃபிரண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்னு சொல்லியே பேசிட்டு இருப்பா. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பெறகும் நான் மத்தவங்க முன்னாடி அவளோட பெஸ்ட் ஃபிரண்ட் தான். லவ்வர்னு சொன்னா அவளப்பத்தி தப்பா நெனைப்பாய்ங்களாம். நானும் சரி நம்ம ஆளோட பேர் கெட்டுப்போயிறக்கூடாதேன்னு கம்முனு இருந்தேன்டா" என் முகம் பார்க்கவேயில்லை அவன். இந்தப் பசங்க எல்லாவனுமே இப்படித்தான். தைரியம் கெடையாது. இதே ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைனா இந்நேரம் முகத்துக்கு நேரா பாத்து தைரியமா அழுதுகொண்டோ கோவத்தோடோ நியாயம் கேட்பாள். இவனுங்க ஒன்னத்துக்கும் ஆக மாட்டானுங்க.

"இப்படித்தான்டா ஒரு தடவ, என் கூட பாஸ்கர்னு ஒருத்தர் வேல செய்யுறாரு. அவர் கிட்ட இவள லவ் பண்றதப் பத்தி சொன்னேன். அவரும் 'வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க'ன்னு சொன்னாரு. இத அவாகிட்ட சந்தோசமா சொன்னேன்டா. அதுக்கு என் கூட எப்படி சண்ட போட்டா தெரியுமா?"

"ஆமா நீ பாட்டுக்க அவளுக்கு முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட சொன்னா அந்த்ப்பொண்ணுக்கு கோவம் வரத்தான செய்யும்?" என்னால் அவனிடம் எப்படியெல்லாம் கரக்க முடியுமோ அந்த மாதிரியெல்லாம் பேசினேன்.

"டேய் டெய்லி பேசும் போதே அவா சொல்ற கண்டிஷன் என்ன தெரியுமா? 'நாம லவ் பண்றது யாருக்குமே தெரியக்கூடாது'னு தான் சொல்லுவா" எனக்கு ஏதோ கள்ளக்காதல் கதையைக் கேட்பது போல் இருந்தது. "ஒனக்கே தெரியும் நானும் கண்ணனும் எப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு. நான் அவன் கிட்ட கூட இப்போவரைக்கும் சொல்லலடா. இந்த மேட்டர் தெரிஞ்ச ரெண்டாவது ஆளே நீ தான்"

கொஞ்சம் பெருமையாக இருந்தது. சுடச்சுட நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு விஷயம் கிடைத்ததால். "சரி அவளுக்கு யாருனே தெரியாத ஆள் கிட்ட சொன்னதுனால அவளுக்கு என்னப் பிரச்சனையாம்?"

"அதுக்கு அவா சொன்ன காரணம் தான்டா என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது மச்சி" சாகப்பொற நேரத்துலையும் இவன் மச்சியை விட மாட்டான் போல "அதாவது நாளைக்கு இவளுக்கு மாப்ள பாக்கும் போது அந்த மாப்ள வீட்டுக்காரங்க அவருக்கு சொந்தக்காரங்களா இருந்து அவரு இவளப் பத்தி அவங்க கிட்ட தப்பா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்டாடா!"

 "டேய் அவா ஒன்னத்தானடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா? பெறகு ஏன்டா அப்டி சொன்னா?"

"நானும் அதத் தான்டா கேட்டேன். 'நாளைக்கே என்னவேணும்னாலும் நடக்கும்'னு சொன்னாடா"

எனக்கு அவன் மீது லேசாக பச்சாதாபம் வந்தது. "டேய் நம்ம சோபாவாட இப்படியெல்லாம் பேசுனது? ரொம்ப நல்ல பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம்"

"எவளையும் அப்டி மட்டும் நெனைக்காதடா. அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக" என்னால் அவன் சொன்ன உவமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

'இதாவது பரவாயில்லடா. ஒரு தடவ என்ன நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல வெயிட் பண்ண சொன்னா. சாந்தரம் 4 மணிக்குப் போனேன். ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவா வரவே இல்ல. கால் பண்ணா அட்டண்ட் பண்ணல, எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை வரல. எனக்கு ரொம்ப பயம் ஆகிருச்சி. வீட்டுக்குப்போகவும் மனசு இல்ல. 8மணிக்கு மேல எனக்கு கால் பண்ணாடா."

"நீ அப்போ வரைக்கும் ஸ்டேஷன்லயா இருந்த?"

"ஆமா' அவன் முகம் மாறியது. "போன் பண்ணி 'ஸாரி செல்லம் கொஞ்சம் லேட் ஆகிருச்சி. இந்தா வந்துறேன்'னு சொல்லிட்டு என் பதிலுக்குக் கூட வெயிட் பண்ணாம ஃபோன வச்சுட்டா. நான் நாய் மாதிரி எவ்ளோ நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். 8.30க்கு வந்தா"

"நல்லா நாலு கேள்வி கேட்டியாடா?"

"அப்படி கேக்கணும்ன்னு தான் இருந்தேன். ஆனா அவளப்பாத்ததும் அவா மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சி"

"அதான்டா இவளுக நம்ம தல மேல ஏறி ஆடுறாளுக" என் கோவம் எனக்கு. கால் கட் பண்ணிய என்னவள் இப்போது வரை திரும்ப என்னை அழைக்கவும் இல்லை, ஒரு எஸ்.எம்.எஸ் கூட இல்லை.

"உண்மை தான்டா. நான் அமைதியா இருந்ததப் பாத்துட்டு 'நான் இப்போ சொல்றத கேட்டு நீ கோவப்படக்கூடாது'னு சொன்னா. இனிமேல் கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்."

"ஆமா இதுக்கு மேல என்னடா நடக்கணும் நம்மள அவமானப்படுத்த? சரி அப்டி அவா என்ன சொன்னா?"

"ஹா ஹா" சோகத்தில் சிரிப்பவனின் நிலையை அவன் வலியை உணர்ந்தேன். "பெருசா ஒன்னும் சொல்லலடா. 'ஸாரி செல்லம், என்ன பொண்ணு பாக்க வந்திருந்தாங்க, அதான் லேட்டு'ன்னு சொன்னா. அவா எதுக்கு சாரி சொல்றான்னு பாத்தியா? லேட் ஆனதுக்கு ஸாரியாம், பொண்ணு பாக்க வந்தது ஏதோ சாதாரண விசயம் மாதிரி சொன்னாடா"

எனக்கு சோபா இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவளாக இருப்பாளா என்று தோன்றியது. அதுவும் அவள் வாயில் இருந்து இவனையெல்லாம் 'செல்லம்' என்று சொல்லியிருக்கிறாள் என்றால் இது காலக்கொடுமை தான். "அடுத்து என்ன தான்டா ஆச்சு? நீ என்ன சொன்ன?"

"ஓஹ் அப்டியா? நீ என்ன சொன்னனு கேட்டேன். அதுக்கு அவா 'மாப்ள வீட்ல எல்லாருக்கும் என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் மாப்ளைய புடிச்சிருக்கு'னு சொன்னா."

"டேய் என்னடா இது? அவா கல்யாணம் இப்போ வேண்டாம்னு கூட வீட்ல சொல்லலையா?"

"எதுக்கு சொல்லணும்னு கேட்டாடா! 'நான் தான் முன்னாடியே சொல்லிருக்கேனே நம்ம லவ்வுக்குலாம் எங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்கன்னு, இப்போ எனக்கு மாப்ள வேற பாத்துட்டாங்க. என்னால எப்டி வீட்ல சொல்லமுடியும்டா? என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா? என்ன ஆனாலும் நீ தான்டா என்னோட பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னா. அன்னைக்குல இருந்து மச்சி, யார் 'பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னாலும் எனக்கு யாரோ என் பொறப்ப பத்தி தப்பா பேசுற மாதிரி இருக்கு"

"டேய் இப்படியெல்லாமாடா அவா நடந்துகிட்டா? அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா?" என்னை அவன் முறைத்தான். "ஸாரி மாப்ள"

"அவான்னு இல்லடா எல்லாப் பொண்ணும் அப்படித்தான். அதான் பொட்டச்சி சகவாசம் வச்சுக்கிடாதன்னு சொன்னேன். அவளுக்கு நான் ஒரு மோதிரம் வாங்கிக்கொடுத்தேன்டா. ஹிம் இன்னைக்குக் கூட அவ கைல இருந்தது. கல்யாணத்துகு ஒரு மாசத்துகு முன்னாடி ஃபோன் பண்ணா. ரொம்ப நாளைக்குப் பிறகு கூப்டுறாளேன்னு சந்தோசமா அட்டண்ட் பண்ணேன். 'GRT கடை எத்தன மணி வரைக்கும் தொறந்து இருக்கும்? நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு?"

"சரி விட்ரா. எதுக்கு டென்ஷன் ஆகுற? அதான் உன்ன விட்டு போயிட்டால? இன்னும் எதுக்கு வருத்தப்படணும்?"

"இல்லடா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இவளுக எல்லாருமே இப்படித்தான்டா. கல்யாணம் ஆகுற வரைக்கும் சப்ஜெக்ட்ல டவுட் க்ளியர் பண்றதுல இருந்து, ஊர் சுத்திக்காட்டி, துணிமணி எடுத்துக்கொடுத்து, அடிக்கடி கிஃப்ட் வாங்கிக்கொடுத்து, நல்லா கவனிச்சி, டெய்லி வாட்ச்மேன் வேல பாக்குறதுக்கு ஒருத்தன் வேணும் இவளுகளுக்கு. அவனுக்குப் பேரு லவ்வர். அது கூட அவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவாளுக. மத்தவங்களுக்கு அவன் ஒரு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு காலத்துல லவ்வரும் ஃபிரண்ட் புருஷன் இது எல்லாத்துக்குமே வேற வேற அர்த்தம்டா. ஆனா இன்னைக்கு புருஷன் லவ்வர் பெஸ்ட் ஃபிரண்ட்னு பேரு மட்டும் தான் வேற வேற. ஆனா எல்லாருக்கும் வேல என்னமோ ஒன்னு தான்"

அனுபவப்பட்டவன் சொல்வது எல்லாமே எனக்கு சரி என்று தோன்றியது. மீண்டும் ஆரம்பித்தான். "அது எப்டிடா லவ் பண்றவன் கிட்டயே தைரியமா 'நாம லவ் பண்றத வெளிய சொல்லாத'ன்னும், 'எனக்கு மாப்ள பாக்குறாங்க'னும், சொல்ல முடியுது? ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க? நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா?" கோவத்தில் மிகவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

"மாப்ள பைய பேசுடா" அவன் தொடையில் கையை வைத்து அழுத்தினேன். அதற்குள் வண்டி விருதுநகர் வந்துவிட்டது.

"காதல்னாலே எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்கடா. காதல்னா என்னன்னு தெரியுமா?"

எனக்கு பயமாகிவிட்டது. இவ்வளவு நேரம் வருத்தம் இனிமேல் தத்துவமா என்று பயந்துவிட்டேன். "மாப்ள நான் இங்க தான் எறங்கணும். உன்கிட்ட ஃபோன்ல பேசுறேன்டா"

"சிவகாசில தானடா ஒங்க வீடு?"

"இல்ல மாப்ள சித்தி வீட்ல வேல இருக்கு"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டாதடா"

"சரி மாப்ள வரேன்" என்று ஒரு வழியாக இறங்கி அவன் மொக்கையில் இருந்து தப்பித்து அடுத்த சிவகாசி பஸ்ஸுக்கு காத்திருந்தேன். தொடையில் ஒரு நமநமப்பு. ஆஹா போன் அடிக்குது. எடுத்துப் பார்த்தேன். என்னவள். அட்டண்ட் செய்தேன்.

"என்ன செல்லம் கோவமா? நான் நெறையா மெசேஜ் அனுப்பியும் கால் பண்ணியும் நீ கண்டுக்கவே இல்லையா, அதான்டா உன் கால கட் பண்ணிட்டேன். சாரிடா எரும. அதுக்காக என் கூட பேசாம இருந்திருவியாடா?"

"இட்ஸ் ஓகேடா செல்லம். ஒம்மேல எனக்கு கோவம் வருமாடா? பஸ்ல பழைய ஃபிரண்ட் ஒருத்தன பாத்தேன். அவன் கூட பேசிக்கிட்டே..."

"அப்போ உன் ஃபிரண்ட்ட பாத்தா என்ன மறந்துருவல்ல?"

"இல்லமா இது கொஞ்சம் சீரியஸ் விசயம்டா.... " முழு கதையையும் அவளிடம் சொன்னேன். 

"சே இப்டியெல்லாமாடா பொண்ணுங்க இருப்பாங்க?" என்றாள் என்னவள். நல்லவள்.

"ஆமா கண்ணு. அதானாலத் தான் அவன் இப்போ எல்லா பொண்ணுங்க மேலையும் வெறுப்பா இருக்கான்"

"சரி நீ நம்ம மேட்டர இன்னும் யார்கிட்டயும் சொல்லலையே? உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா? நீ பாட்டுக்க ஓட்ட வாய் மாதிரி யார் கிட்டயும் சொல்லிறாதடா"

நினைத்துக்கொண்டேன் 'குத்துங்க எசமான் குத்துங்க'..

வண்டிச்சக்கரம் - சிறுகதை

Monday, May 30, 2011

"என்னது? டிராக்டர் ஓட்டிக்கிட்டிருந்த பயலுக்கு வெற்றிவிலாஸ்ல லாரி ஓட்டுற வேலையா?" வாயைப்பிளந்தார் மாயாண்டி, நம்ம குருவம்மா புருஷன் செல்லப்பாண்டியின் மாமனார். ஆமா குருவம்மாவோட அப்பான்னும் சொல்லலாம்.

"ஆமாப்பா. இது வயக்காடு வேல மாதிரி இல்லயாம். தெனமும் வேல இருக்குமாம். மாசம் 3000ரூவா சம்பளம், அது போக தெனப்படி 100ரூவா வரைக்கும் வருமாம்" ஏற்கனவே திறந்திருந்த தன் அப்பனின் வாயை இன்னும் கொஞ்சம் பிளக்கவைத்தாள் குருவம்மா.
"எப்படியோ உருப்பட்டா சரி தான்" வாயை மூடி இயல்புக்கு வந்துவிட்டார் மாயாண்டி. "உன்ன எப்ப கூட்டிட்டு போறானாம்?"

"எப்பா கொஞ்சம் மரியாதயா பேசுங்க, அவர் உங்க மருமவன்". மகளைநேராகப் பார்த்து முறைத்தார் மாயாண்டி.. பிறகு என்ன, நேற்று வரை அவருக்குக் கூட தெரியாத புதுப்புது கெட்ட வார்த்தையில் புருசனை வைதுவிட்டு இன்னைக்கு அப்பனிடம் மரியாதை பற்றி பாடம் எடுத்தால் அவனுக்கு பற்றிக்கொண்டு வராதா?

'நேத்து வரைக்கும் அந்த நாபகம் எங்கம்மா போச்சி?' மனதுக்குள்ளே கேட்டுக்கொண்டார் நக்கலான கோபமுடன். ஆனாலும் அவருக்கு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 2மாதம் ஆகிறது அவள் கணவனுடன் சண்டை போட்டு கைக்குழந்தையுடன் வந்து. ஒரு பெண் (கர்ப்பம்) உண்டானதில் இருந்து குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை மட்டும் ஏன் இவ்வளாவு சண்டைகள்? தினமும் ஒப்பாரி, வாரம் இரண்டு முறை செல்லப்பாண்டி வந்து சண்டை என்று அவர்கள் தெருவிற்கே சில காலம் பொழுதுபோக்காய் இருந்தவள் இன்று முதல் ஒழுங்காக வாழப்போகிறாள் புருசனுடன் என்கிற திருப்தி அவருக்கு லேசான சந்தோசத்தை கொடுத்தது.

சந்தோசம் என்பதை விட நம்பிக்கை என்று சொல்லலாம். பின்ன, வெற்றிவிலாஸில் வேலை கிடைப்பது கவர்மென்ட்டில் வேலை கிடைப்பது போன்றது. இனிமேலாவது புருசனும் பொண்டாட்டியும் நன்றாக வாழ்வார்கள் என அவர் நம்புவதற்கு வெற்றிவிலாஸ் தான் வெற்றிகரமான காரணம். மாலையில் அவன் வந்தான். வழக்கமாக கையில் பீடியோடும், உடம்பில் சாராய நெடியோடும் இடுப்பில் இருந்து அவிழ்ந்து விழும் நிலையில் போனாபோகட்டும் என்பது போல இருக்கும் ஒரு கைலியோடும் வரும் செல்லப்பாண்டி இப்போது வெளுத்த வேட்டி கட்டி கலையாக வந்தான். கடைசியாக அவன் தன் பெண்ணுக்கு தாலி கட்டிய தினத்தில் தான் வேட்டி கட்டியதாக ஞாபகம் மாயாண்டிக்கு.

"மாமா....... எப்படி இருக்கீய?" சிரித்துகொண்டே வந்தான்.

'போன வாரம் வந்து தான மானத்த வாங்குன, எப்படி நல்லா இருப்பேன்?'.. "வாங்க மாப்ள நல்லா இருக்கேன்" இவருக்கும் பதிலுக்கு எப்படித்தான் சிரிப்பு வந்ததோ! குருவம்மா அதற்குள் தன் பிள்ளையை தூக்கிகொண்டு அந்த சாக்குப்பையுடன் செல்லப்பாண்டி அருகில் வந்து நின்றுகொண்டாள் முகத்தையே மறைக்கும் சிரிப்புடன். பல நாளைக்கு அப்பறம் இப்போது தான் அங்கு மகிழ்ச்சி. டீ குடித்து விட்டு "போய்ட்டு வாரேன் மாமா, போய்ட்டு வாரேன் அத்த" மாறாத சிரிப்புடன் விடைபெற்றான் செல்லப்பாண்டி.

"ஏங்க இந்தத் தீவாளிக்கு பட்டுச்சேல கண்டிப்பா வாங்கித்தருவீகல்ல?" சைக்கிளின் பின்புறம் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்துக்கேட்டாள்.

"மொத கடன அடைச்சுக்கிறேன்டீ பொறவு பாக்கலாம். புள்ளய கீழ விழாம பிடிச்சிக்கோ"

உம்மென்று ஆகிவிட்டாள் குருவம்மா. இந்த தீவாளிக்கும் பட்டுச்சேல இல்லேனா எப்படி? அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். வீட்டை நன்றாக நோட்டம் விட்டாள். "இப்படியா வீட்ட குப்ப மாதிரி வச்சுருப்பிங்க?"

"யாத்தா திரும்ப ஆரம்பிச்சுறாத. நீ கம்முனு அங்கிட்டு உக்காந்திரு, நானே தூத்துவிட்டுட்டு உன்ன கூப்பிடுறேன்" இவனுக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா? இவ்வளவு பொறுப்பாக பேசுகிறானே என்ற ஆச்சரியத்தோடு "வேணா வேணா நானே தூத்துவிடுறேன், பிள்ளய பிடிங்க" அவன் கையில் இருந்த விளக்குமாறை வாங்கிக்கொண்டாள். அவள் தூத்துக்கொண்டிருக்கும் போது சொன்னான், "உனக்கு இந்த தீவாளிக்கு கண்டிப்பா பட்டுச்சேல தான்". அவள் ஒன்றும் சொல்லவில்லை. கவனிக்கவில்லையா இல்லை கவனிக்காதது போல் நடிக்கிறாளா? 

"ஏய் உன்ன தான் சொல்றேன். கண்டிப்பா பட்டுச்சேல தான், சரியா?"

"எதுக்கு உங்களுக்கு செரமம்? நீங்க மொத கடன அடைங்க" நக்கலாக எங்கோ பார்த்துக்கொண்டு செல்லக் கோபத்துடன் சொன்னாள்.

"கடனலாம் ரெண்டே மாசத்துல அடச்சுரலாம், சரியா? ஆனா பட்டுசேல வாங்கணும்னா ஒரு கண்டிசன்"

"என்ன கண்டிசன்? எங்கப்பா கிட்ட குடுக்க இனிமே பத்து வெரல் தான் இருக்கு"

"யே ச்சீ அதெல்லாம் இல்ல. இந்தச்சேல உனக்கு நல்லால்ல. பட்டுச்சேல வாங்கித்தாரேன் இத இப்போ கழட்டலாமா?" குழந்தையை கீழே வைத்துவிட்டு அழுந்தான்.

"மொத குளிச்சிட்டு வேலைக்கு போற வழியப்பாருங்க. சாந்தரம் 5மணிக்கு அங்க இருக்கணும். நாபகம் இருக்குல?" நெருங்கி வந்தவனை லேசாக தள்ளிவிட்டு அடுப்பு வேலையை கவனிக்க சென்றாள்.

"சரி போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்" வேறு வழியில்லாமல் சிரித்துகொண்டு கிளம்ப ஆயத்தமானான்.

"என்னையா ஒழுங்கா ஆக்ஸிடண்ட் பண்ணாம ஓட்டுவியா? இல்ல நீயும் தாலி அறுப்பியா?" வெள்ளை வேட்டி சட்டையுடன் இடது கையில் பிரேஸ்லட்டும் வலது கையில் தங்க நிற கடிகாரத்துடனும் பணத்தை எண்ணி பாங்க சலானில் நிறப்பிக்கொண்டே பேசினார் முதலாளி.

"அதெல்லாம் நல்லா ஓட்டுவேன் அண்ணாச்சி"

"எல்லா பயலும் ஆரம்பத்துல இப்படித்தான் சொல்றான், கடைசில எங்கயாவது முட்டிக்கிட்டு வந்து நம்ம தாலிய அறுப்பாய்ங்க" அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்க செல்லப்பாண்டிக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

 "என்னத்த ஓட்டுவியோ. இந்தா பிடி சாவிய" சாவியைத் தூக்கி மேஜை மீது போட்டார். "அண்ணே செல்லப்பாண்டியண்ணே கரும்பு லோடு ஏத்தணும் கொஞ்சம் டிராக்ட்டர் எடுத்துட்டு வாங்கண்ணே" - ஏனோ பழைய ஞாபகம் வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. "வெளிய கணக்குப்பிள்ள கிட்ட கேட்டுக்கோ எங்க போணும்னு"

சாவியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியில் வந்தான். எவ்வளவு பெரிய மில்? பேசாம இந்த ஆளுக்கு மருமகன் ஆகியிருக்கலாம் என்று ஒரு நொடி யோசித்தான். "எலேய் அங்க என்ன பார்வ? இங்கவா" கணக்குப்பிள்ளை குரல் வந்த திசை நோக்கி நடந்தான். "அப்படி ஆகிருந்துச்சினா இந்த கணக்குப்பிள்ளலாம் என்ன வைவானா? ஏன், அந்த மொதலாளியே என் கிட்ட பம்மிக்கிட்டு தான பேசுவான்?" கணக்குப்பிள்ளை அருகில் வந்ததும் கற்பனை கடிவாளம் போட்டு நின்றது. இன்னைக்கு நைட்டு நீ நம்ம செவாசி ராலி செட்ல இருந்து.." செல்லப்பாண்டி சிரித்துவிட்டான்.

"ஏம்லே சிரிக்குற?"

"இல்லண்ணாச்சி, அது ராலி இல்ல லாரி"

"கொழுப்புடா ஒனக்கு. சரி அங்க இருந்து லோடு ஏத்திட்டு அருப்புக்கோட்ட போகணும். நைட்டு 10மணிக்கு வந்துரு, சரியா?"

"சேரிண்ணாச்சி" விடை பெற்றான். "எலேய் சாவிய  குடுத்துட்டு போ"

"அய்யயே ஒங்க லாரிய ஒன்னும் பண்ணிட மாட்டேன். இந்தாங்க ஒங்க சாவி" கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

இரவு வண்டியை எடுத்துக்கிளம்பும் போது  அவன் கையில் ஒரு செல்போன் கொடுக்கப்பட்டது. "இந்தா போன். எதும் பிரச்சனனா கூப்டு"

"சரிண்ணே" சாமி கும்பிட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினான். 10 மணி என்பது இவர்கள் பாசையில் இரவு 1மணி போல. மெதுவாக சென்றான். போன் மணி அடித்தது. "டேய் பாண்டி, காலைல 6மணிக்கு தான் குடவுன் தெறப்பாய்ங்க. நீ வழில வண்டிய போட்டுட்டு தூங்கிட்டு போ"

"த்தாளி மொதயே சொல்லித் தொலஞ்சுருந்தாய்ங்கன்னா வீட்ல இருந்து மெதுவா கெளம்பிருக்கலாம்" முன்முனுத்துக்கொண்டே வண்டியை ஆள் அரவம் இல்லாத சாலையின் மரத்தடியில் ஓரம் கட்டினான். அலாரம் வைத்தது போல் 4மணிக்கு எழுந்து வண்டியைக் கிளப்பினான்.


விருதுநகரைத்தாண்டி வில்லிபத்திரியில் போய்க்கொண்டு இருந்தான். 'டம்' என்று ஒரு சத்தம். வண்டி வலது புறம் எதிலோ ஏறியது போல் லேசாக குழுங்கியது. செல்லப்பாண்டிக்கு திக்கென்று ஆகிவிட்டது. கண்ணாடியில் பார்த்தான் ஒரு வண்டி நசுங்கிக்கிடந்தது. ஆள் தெரியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்து கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தன் கவனக்குறைவா வந்தவனின் அலட்சியமா தெரியவில்லை. முதல் நாளே இப்படியா ஆண்டவா என்று விதியை நொந்து கொண்டு வண்டியை நிறுத்தாமல் வேகமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தை நோக்கிப்போனான்.

அந்த நிலையில் அவனுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. வண்டியில் முன் பக்கம் இருந்து மிக மெலிசாக 'டக் டக்' என்று ஏதோ தட்டப்படும் சத்தம் கேட்டது. வழியில் வரும் ஒன்றிரண்டு பேரும் இவன் வண்டியைப்பார்த்து கையைக் காட்டி நிறுத்தச்சொன்னார்கள். மிகுந்த பதற்றத்துடன் வேகமாக மல்லங்கிணறு  காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினான். 

வெளியில் நின்ற காவலர் "யோவ் யோவ் மெதுவா நிறுத்துயா" வண்டியின் கீழே பார்த்துவிட்டு அவனும் பதறினான். வண்டியை காவல் நிலையம் ஒட்டிய அந்த இறங்குமுகமான சாலையில் நிறுத்தினான். போலிஸ்காரன் வண்டியின் முன்பக்கம் எதையோ நோக்கி ஓடினான். இவன் இறங்க ஆயத்தமான போது சாலையில் சருகலில் வண்டி இறங்கியது. ஏதோ ஒன்றின் மீது நசுக்கி ஏறுவது போல் தோன்றியது செல்லப்பாண்டிக்கு. போலிஸ்காரன் தலையில் அடித்துக்கொண்டான். "டேய் எறங்குடா கீழ" கழுத்தைப்பிடித்து கீழே இறக்கப்பட்டான்.

அப்போது தான் அதை செல்லப்பாண்டி பார்த்தான். இத்தனை நேரம் இடி பட்டவன் வண்டியின் முன்புறம் பிடித்துக்கொண்டு தட்டிக்கொண்டே வந்திருக்கிறான். இவன் அதை உணராமல் இப்போது அவன் மீதே ஏற்றி விட்டான். நல்ல லேசான ஊதா நிற சட்டை அணிந்து அதை கறுப்பு நிற பாண்டிற்குள் நேர்த்தியாக விட்டிருக்கிறான். காலில் ஷூ இடுப்பில் பெல்ட்டில் சொருகியிருக்கும் செல்போன் கூடு. தலை மட்டும் தான் இப்படி எதுவும் சொல்ல முடியாத படி ரோட்டோடு ஒட்டியிருந்தது. செல்லப்பாண்டிக்கு வாந்தியும் அழுகையும் ஒரு சேர வந்துவிட்டது. வாயை பொத்திக்கொண்டு காவல் நிலையத்திற்குள் சென்றுவிட்டான்.

காவல் நிலையம் முன் ஒரு காவலரின் கண் எதிரிலே அது ஒரு சுத்தமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விபத்தாக மட்டுமே நடந்தது. சாலையிலும் வண்டி இவன் லாரியின் வலதுபுறம் வந்தே மோதியதால் இவன் மீது குற்றம் இல்லை என்பதை எப்படியோ நிரூபித்து கொண்டுவந்துவிட்டார் இவன் முதலாளி. வேலையை விட்டு தூக்குவார் என்று பார்த்தால் அவரே ஜாமினும் எடுத்து விடுதலை பெறவும் உதவி செய்தார். "டிரைவர் வேலைக்கு ஆளே கெடைக்க மாட்டெங்குதுல, அதான்" என்று காதைக் கடித்தார் கணக்குப்பிள்ளை.

"ஏன்டா கைல தான் போன் இருக்குல, ஏத்துனவொடனே என்ன கூப்ட வேண்டியதுதான?"

"ஒங்க நம்பர் தெரியாது அண்ணாச்சி, அதான். பதட்டத்துல வேற இருந்தேனா அதான் கையும் ஓடல காலும் ஓடல"

"சரி என் நம்பர வாங்கிக்கோ.  இதெல்லாம் தொழில்ல சகஜம். இதுக்கு பயந்துட்டு வேலைக்கு வராம போயிறாத. சரியா?"

உண்மையில் வேலைக்கு வரவில்லை என்று சொல்லத்தான் அங்கு வந்தான் செல்லப்பாண்டி. முதலாளியே சொல்லியவுடன் வேலையை விட்டு செல்லும் முடிவை தூக்கிப்போட்டான். "இனிமே இது மாரி எதும் ஆச்சின்னா என்ன கூப்டு, என்ன?"

"சரிண்ணாச்சி"

வீட்டில் வேலை போய்விடும் பயத்தில் இருந்த குருவம்மாளுக்கு இது இனிமையான செய்தியாக இருந்தது. "இனிமேலாவது பாத்தி வண்டி ஓட்டுங்க. உங்களுக்கு எதாவது ஆயிருந்திருச்சினா?"

"அதெல்லாம் நாம் பாத்துக்கிறேன்"

அன்றிலிருந்து பல விபத்துகளை செய்துவிட்டான். எல்லாமே ஸ்பாட் மரணங்கள். குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொலைகள் அவனுக்கு பழகிப்போயின. அவன் செய்த முதல் விபத்தைத் தவிர வேறு எதுவும் குருவம்மாளுக்கு தெரியாது. முதல் விபத்தை மட்டும் முதலாளியிடம் சொல்லாமல் விட்டவன் அதற்குப் பின் அவருக்குத் தெரியாமல் ஒருவன் கதையையும் முடித்ததில்லை.

"மொதலாளி ஒருத்தன் கால்ல ஏத்திட்டேன். இன்னும் உசுரோட தான் இருக்கான். அப்டியே வழக்கம் போல வேமா வந்துரவா?"

"எலேய் அடிபட்டு  செத்துப்போனா மட்டும் தான் வேமா வரணும். இவன் சாகலேல?"

"என்னைய கைய காட்டி காப்பாத்த கூப்டுறான் மொதலாளி"

"பொழச்சான்னா நம்ம தாலி தான் அறுபடும். அவன ஏத்திட்டு வேமா வந்துரு. செத்துரணும்டா அவன், பாத்துக்கோ" இவன் சரி என்று சொல்வதற்குள் முதலாளி போனை வைத்துவிட்டார்.

வண்டியில் ஏறினான். சாவியைப்போட்டு ரிவர்ஸ் கியருக்கு மாற்றினான். தன் ரப்பர் செருப்பு அணிந்திருக்கும் கால்களால் அந்த மஞ்சள் நிற எமனை பின்னோக்கி செலுத்தினான். கண்ணாடியில் அடிபட்டு இருப்பவன் 'வேண்டாம் வேண்டாம்' என்று செய்கை செய்வது தெரிந்தது. கண்ணாடியில் தூரமாக தெரிந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் சாவை அருகில் பார்த்துக்கொண்டிருந்தான். வண்டி பூப்போல மெதுவாக அவன் உடலில் ஏறி இறங்கியது இரண்டு முறை.

முதன்முதலாக விபத்தையே கொலை என்று பயந்த செல்லப்பாண்டியின் மனம் இப்போது ஒரு கொலையை விபத்தாக மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றுக்கொண்டது. ஒரு வருடம் ஆகப்போகிறது இவன் லாரி ஓட்ட ஆரம்பித்து. அதற்குள் 6விபத்துகள், உண்மையில் 2விபத்துகள் 4 கொலைகள்.

ஆனால் குருவம்மாளுக்கு எதுவும் தெரியாது. தன் புருசன் மிகவும் ஒழுங்காக வண்டி ஓட்டுவதாக நினைத்துக்கொண்டிருந்தாள். கடனை அடைத்துவிட்டான். அவளுக்கு ஒரு கம்மலும் புது மூக்குத்தியும் வாங்கிக்கொடுத்துவிட்டான். இன்னும் பட்டுச்சேலை மாட்டும் தான் பாக்கி. இன்னும் இரண்டு மாதத்தில் தீபாவளி. ஆனால் எப்படியும் வாங்கிக்கொடுத்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருவருக்கும்.

தீபாவளி போனஸ் 6000ரூபாய் வாங்கிக்கொண்டான். முதலாளி இரவில் மதுரைக்கு வரச்சொல்லி கொடுத்தார். இந்த இரண்டு மாதங்களில் ஒரு விபத்து கூட நடக்கவில்லை. செல்லப்பாண்டிக்கு ஒரு விதமான சலிப்பு வந்துவிட்டது, கொலையே செய்யாமல். ஆனால் மனதில் ஒரு நிறைவு இருந்தது சட்டை நிறைந்ததால். பட்டுச்சேலை எடுக்க வீட்டிற்கு விரைந்தான் வண்டியில்.

திருமங்கலம் தாண்டி நான்குவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தான். இவ லாரியை பைக்காரன் சைட் எடுத்து முந்தினான். தலையை சாய்த்துக்கொண்டு செல்போனில் பேசியபடி வண்டியில் போனான் அவன். லாரிக்கு முன்புறம் இன்னொரு லாரி செல்வதை அவன் கனிக்காமல் சைட் எடுத்தான். திடீரென்று அதை உணர்ந்தவன் பதட்டத்தில் தள்ளாடி செல்லப்பாண்டியின் சக்கரத்தின் பல நாள் பசிக்கு இரையானான். வண்டியை நிறுத்திய செல்லப்பாண்டி மெதுவாக இறங்கி வந்தான். தலை நசுங்கியிருந்தவன் அழகாக இருந்திருக்க வேண்டும் என்பதை அவன் உடலின் மற்ற பாகங்கள் கூறின. மெதுவாக கொஞ்சம் தள்ளி விழுந்திருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தான்..

"என்னங்க என்னங்க, என்ன ஆச்சி" எதிர் முனையில் ஒரு பெண்குரல். இவன் மனைவியாக இருக்கலாம்.

"ஏய் அறிவில்ல உனக்கு? வீட்டுக்கு வரதுக்குள்ள என்னடீ அவசரம்? வண்டில போறவன போன் போட்டு கொன்னுட்ட. என் லாரில விழுந்து செத்துப்போயிட்டான். வந்து சொரண்டி எடுத்துட்டுப்போங்க. சந்தோசமா தீவாளி கொண்டாடு"

"...த்தா வந்து வாய்க்குறாய்ங்க பாரு நம்ம வண்டில விழுந்து சாகணும்னே" போனை தூக்கி எறிந்து சென்றுவிட்டான்.

மறுநாள் குருவம்மாள் மற்றும் விஷாலுடன் - ஆமா அவன் மகன் பேரு தான் - சைக்கிளில் தீபாவளிக்கு துணிமணி எடுக்க சென்றுகொண்டிருந்தான். புது ஜவுளி, பலகாரம் எல்லாம் வாங்கிக்கொண்டு சாயந்திர வேளையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். விஷால் நிறுத்தமாட்டாமல் அழுதுகொண்டிருந்தான். சைக்கிளில் சரியாக உட்காராமல் துருத்ருத்துக்கொண்டிருந்தான். குருவம்மாவால் அவனை அடக்க முடியவில்லை. இவனுக்கும் சைக்கிள் லம்பியது. அவன் ஊருக்கு போகும் பாதைத்திருப்பத்தில் மூவரும் விழுந்தனர். இவர்களுக்குப்பின் வந்த கார் டக்கென்று வெலகியது. ஆனால் காரைத்துரத்தி வந்த லாரிக்கு  இதைக்கவனிக்க எல்லாம் நேரம் இல்லை.

என்ன நடந்தது என்று உணர்வதற்குள் எல்லாம் முடிந்தது. முனகல் சத்தம் கேட்ட செல்லப்பாண்டியால் கண் திறக்க முடியவில்லை. லேசாக சத்தம் காதில் விழுந்தது. "மொதலாளி மூனு பேரு யாரும் சாகல, ஆனா கை காலு நஞ்சுபோயிருக்கு. " இரு இடைவெளிக்குப் பின் "சரி முதலாளி"

செல்லப்பாண்டியின் காதில் மனைவியின் கதறலும் குழந்தையின் அழுகையையும் மீறி அந்தப் பின்னோக்கி வரும் லாரியின் சத்தம் நிறைந்து ஒலித்தது...

சலூன் கடை - கவிதை

Sunday, May 8, 2011

இருக்கும் தொல்லைகளில் பெரிய தொல்லை
ஞாயிற்றுக்கிழமையில் முடி வெட்ட செல்வது தான்..
விடுமுறை தினங்களில்
திரையரங்கிற்கு அடுத்த படியாக
கூட்டம் கூடி - காத்திருத்தலில்
நமக்கு எரிச்சலைத் தருவது
இந்த சலூன் கடைகள் தான்..

சிறு வயதில் இருந்து
'ஒரே அம்பட்டன் கிட்டத்தான்
மசிர குடுக்கணும்' என்பார் அப்பா..
அவருக்குத் தெரியாமல் சென்ற
திருமுருகன் சலூன் - எங்கள் ஊரின்
முதல் குளிரூட்டப்பட்ட ஆண்கள்
அழகு நிலையம்! - ஆம்
அது சலூன் இல்லை.

சுவரில் ஒட்டியிருந்த
கையில் மைக்கோடு
வெள்ளை ஆடை அணிந்த
கறுப்பு மைக்கெல் ஜாக்சனும்
காதிலிருந்து வாய்க்கு நீட்டப்பட்ட மைக்கோடு
கறுப்பு ஆடை அணிந்த
வெள்ளை மைக்கெல் ஜாக்சனும்
வேறு வேறு என்றே நினைப்பேன் அப்போது..

பெரும்பாலும் யார் என்றே தெரியாத
வேற்று மொழி நடிகர்களும்
நடிகைகளுமே சுவரில் - ஆனால் தெரிந்த
முகங்களை விட அழகாக..
அங்கு இருக்கும் இரண்டே தெரிந்த முகம்
சச்சினும் சலூன்காரனும்..
புசு புசுவென்று வெட்டாத (வெட்ட முடியாத)
முடியைக் கொண்ட சச்சினுக்கு
இந்த சுவரில் என்ன வேலை
என்றெல்லாம் யோசித்ததில்லை அப்போது..

தலையில் முடிவெட்டுபவர் தண்ணீரை
ஸ்ப்ரே பண்ணும் போது - மனதில்
ஒரு சின்ன சந்தோசம் அந்த
கொஞ்சமான குளிர்ந்த நீரின் கிளர்ச்சியில்..
'டேய் தண்ணி விடாதடா பிள்ளைக்கு
சளி பிடிச்சுரப்போகுது'
தடுத்துவிடுவார் அப்பா..
கோவம் வரும் அவர் மேல்
தண்ணீர் கிளர்ச்சியை நிப்பாட்டியதற்காக
மட்டும் இல்லை - முடிவெட்டுபவரை
'டேய்' என்று விளித்ததாலும்..

சைக்கிளில் வீடு வரும் போது
'ஏன்ப்பா அந்த அண்ணன
டேய் வாடா போடானு சொல்றிங்க?'
என்னிடம் கோபமாக 'என்னது அண்ணனா?'
பிடரியில் வலிக்குமாறு தட்டினார்.
'அவனலாம் அப்படித்தான் சொல்லணும்
என்ன புரிஞ்சதா?' என்பார்
அப்பாவிற்கு பயந்தா இல்லை
வயதில் மூத்தவரை மரியாதை
இல்லாமல் கூப்பிடுவதில்
இருக்கும் ஒரு குரூர சந்தோசமா
தெரியாது - நானும் அன்றில் இருந்து
'யோவ் ஒட்ட வெட்டிராத'
என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன்.

இன்று வரை அப்படித்தான்
இதோ இப்போது தாடியை
எடுக்கும் போது என்
மூக்கின் அருகில் இரண்டு
கன்னங்களிலும் விரல்களைப்
பதித்தவாறு அவனின்
உள்ளங்கை அதில் ஒருவித
அசிங்கமான பலரின்
புழுக்கம் கலந்த ஈர வாடை.
'யோவ் கைய எடுய்யா
ரொம்ப நாறுது' கையை தட்டிவிட்டேன்.

'தெரியாம தம்பி' என்றார்.
பக்கத்து இருக்கையில் ஒரு
கல்லூரி மாணவன் போன்றவன்.
அவனுக்கு முடி வெட்டும்
பள்ளி மாணவன் போன்றவன்.
"கைய தூக்குங்க அண்ணே
கம்மங்கூட்டில் முடி எடுக்கணும்" என்றான்.
'இருக்கட்டும் தம்பி
வீட்ல நானே எடுத்துக்கறேன்' என்று
சிரித்த முகத்தோடு கூறிச்சென்றான்.
அவமானத்தோடு நானும்
பொறாமையோடு
எனக்கு முடி வெட்டிய அண்ணனும்..

யானை - சிறுகதை

Monday, April 25, 2011

எத்தனை முறை பார்த்தாலும் எவ்வளவு தொலைவில் பார்த்தாலும் எப்போதுமே சலிக்காத விசயங்கள் உலகில் உண்டு.. கடல், ரயில், கவர்ச்சி, ஊழல். இந்த வரிசையில் யானையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நாம் பார்த்து அதிசயிக்கும் மிகப்பெரிய உயிரினம். மனிதனைப் புரிந்து கொண்ட மனிதனால் புரிந்துகொள்ளப்படாத உயிரினம்.

ராஜபாளையம் - பழைமையும் கட்டுப்பாடும் சமுதாயத்திற்குத் தேவையான சில நல்ல பிற்போக்குத்தனங்களும் வரைமுறைக்குட்ப்பட்டு வாழும் மக்களும் நிறைந்த ஊர் இது. அந்த ஊரை மிகப்பெரிய வியாபார மையமாக மாற்றிய, மறைந்த தொழிலதிபர் ஒருவரின் பிறந்தநாள். ஊர் மக்களே கலை நிகழ்ச்சி, கோயில் பூஜை, என்று முன்னின்று செய்யும் ஒரு சிறு திருவிழா.

மூன்று நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். கர்னாடக சங்கீதத்திற்கும், கிளாசிக்கல் நடனத்திற்கும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதை நீங்கள் காணலாம். கடைசி நாளில் கோயிலில் பூஜை நடக்கும். அப்போது ஒரு யானை வந்து நிற்கும். ஏன் வந்திருக்கிறோம்? எதற்கு நிற்கிறோம்? என்று தெரியாத பல மனிதர்களுடன் அதுவும் நிற்கும் தான் வந்திருக்கும் வேலை அறிந்து. 

எனக்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் பூஜைகளைக் காண்பதை விட அந்த யானையைக் காண்பதே போதுமானதாய் இருந்தது. என்னை விடக் கொஞ்சமே கொஞ்சம் கறுப்பு! தீயில் கருகிப்போன பெரிய காகிதம் போல் காது. நாயக்கர் மஹாலின் தூணை பெயர்த்துக்கொண்டு வந்து சொறுகியது போல நான்கு கால்கள். எதையும் உவமைக்கு அழைக்க முடியாத அதன் நீண்ட மூக்கு. வாய்க்கும் தும்பிக்கைக்கும் இடையில் ஒழுகிக்கொண்டிருக்கும் தந்தம். அதன் கரிய பெரிய உருவத்திற்கு finishing touch கொடுக்கும் அதன் வால், அதன் நுனியில் வெட்டுவதற்கு பாக்கி இருக்கும் 4,5 முடி. ஒரு அழகான பெண்ணை ரசிக்கும் அதே உணர்வோடும் ஆசையோடும் தேடுதலோடும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த யானையும் ஒரு பெண்ணைப்போல் என்னை சட்டை செய்யவே இல்லை!

அந்த யானை தன் இடப்பக்க பின்னங்காலை ஊனாமல் தூக்கி வைத்துக்கொண்டே நின்றது. ஒவ்வொரு முறையும் அதை ஊன்ற முயற்சி செய்து முடியாம்லே போனது. அதோ இப்போது கூட ஊன்றுவது போல் வந்து வெடுக்கென்று காலை தூக்கிக்கொண்டது, கவனித்தீர்களா? ஏதாவது வலியாயிருக்கும். உடல் எடை பிரச்சனையோ? அப்போது தான் அதன் மேல் அமர்ந்திருக்கும் பாகனைக் கண்டேன். அவன் மேல் புரியாத ஒரு கோபம் வந்தது. கால் வலியில் அவதிப்படும் யானை என்று கூட பார்க்காமல் அதன் மீதே ஏறி அமர்ந்திருக்கிறானே? அதிலும் தெனாவட்டாக அதன் கழுத்தைச் சுற்றி இருகியிருக்கும் கயிற்றில் இவன் கால்களை நுழைத்துக் கொண்டு, அங்குசத்தை செங்குத்தாக அதன் பின்னந்தலையில் வைத்துக்கொண்டு இருந்தான். 

நான் அவனையே முறைத்துக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டான். என் பார்வையை வேறு பக்கம் திருப்புவது போல் பாசாங்கினேன். சில நொடிகளில் மெதுவாக மீண்டும் யானையைப் பார்க்க திரும்பினேன். அவன் என்னையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்தவன் திடீர் என்று யானையில் இருந்து இறங்க ஆரம்பித்தான். 'யான நின்னா யாருனாலும் பாத்துக்கிட்டு தான் இருப்பாங்க. அப்போ மேல இருக்குற உங்க மேலயும் பார்வ படத்தான் செய்யும்' அவன் என்னை எதாவது கேட்டால் இதையே பதிலாக சொல்ல முடிவெடுத்தேன். இறங்கியவன் என் அருகில் வராமல் யானைக்கு அருகிலேயே நின்று கொண்டான். நல்ல வேளை என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியது சிறப்பு விருந்தினர்கள் வருவதைப் பார்த்து என்பது உள்ளே நுழைந்த இரண்டு பி.எம்.டபிள்யூ கார்களைப் பார்க்கும் போதே தெரிந்தது. அந்தப் பாகன் மிகவும் பவ்வியமாக நின்றான்.

சிறுவர்கள் அந்த யானையைத் தொடுவதும், அது அசையும் போது விலகி பயந்து ஓடுவதுமாக இருந்தனர். காரில் இருந்து இறங்கிய அந்தக் குடும்பத்தின் மூத்தவர் யானையை நெருங்கினார். பாகன் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை விரட்டினான். யானையில் தும்பிக்கையில் பூஜை செய்யப்பட்ட மாலை கொடுக்கப்பட்டது. பெரியவர் யானைக்கு அருகில் வந்து வணங்கி நின்றார். பாகன் யானையின் காலை லேசாகத் தட்டினான். அது உடனே அந்த மாலையைப் பெரியவரின் கழுத்தில் போட்டது. பெரியவர் யானையை ஒரு முறை கும்பிட்டு விட்டு சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் வரிசையாக யானையைக் கும்பிட்டனர். அந்தப் பெரியவரின் குடும்பக்குழந்தைகள் யானையைக் கண்டு துள்ளிக்கொண்டிருந்தனர். பாகனிடம் வந்து, "இது கடிக்குமா?" என்றது ஒரு இரண்டடி பட்டுப்பாவாடை. "அதுக்கு பல்லே இல்ல. கோவம் வந்தா மிதிச்சுரும்" என்றான் அவளை விடக் கொஞ்சம் பெரியவன். "இது நல்ல யான, ஒன்னும் பண்ணாது" என்றான் பாகன். 'யே அங்க என்ன செய்றிங்க? இங்க வாங்க" தாயாரின் குரல் கேட்டு அவரிடம் ஓடின குழந்தைகள். 

பெரியவர் வீட்டினர் வந்து பார்த்த யானை ஆதலால், இப்போது ஒவ்வொருவராக வந்து அந்த யானையை கும்பிட்டனர். பாகனால் முதலில் பத்தி விடப்பட்ட குழந்தைகள் மீண்டும் யானையை தொட்டு விளையாடினர். ஒவ்வொருவரும் யானையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர். குழந்தைகளைத் தவிர யாரும் அந்த யானையை யானையாகப் பார்க்கவில்லை. பாகன் முகத்தைப்பார்க்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. யானை தன் வாலையும் தும்பிக்கையையும் உடம்பில் அடித்துக்கொண்டே இருந்தது. இடமும் வலமும் அதன் பெரிய உடல் குலுங்கிகொண்டிருந்தது. அதன் உடம்பில் கட்டியிருந்த மணிகள் குலுங்குவதைக்கேட்கும் போது ஒரு சந்தோசமும் இனிமையும் வந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். பாகனும் தன் அங்குசத்தை யானையின் பார்வையில் படுமாறு வைத்து எங்கோ சென்றுவிட்டான். யானை இப்போது வரை தன் பின்னங்காலை ஊன்றவே இல்லை. அதன் வாலையும் பின் பகுதியையும் பார்க்கும் போது, ஒரு பெருச்சாலியை லென்ஸ் கொண்டு பார்ப்பது போல் இருந்தது. யானை தன் வலதுபுற முன்னக்காலின் நகத்தை ஒட்டியிருக்கும் தோலை தும்பிக்கையின் துணையுடன் இழுத்தது. ஒரு இழுப்புக்கும் இன்னொரு இழுப்புக்கும் சிறு இடைவெளி. அப்போது தான் கவனித்தேன். அதன் முன்னங்காலின் நகத்தில் காயம் பட்டு இன்னும் ஆராமல் இருந்தது. அந்தத் தோலை தான் யானை பிய்த்துக்கொண்டிருந்தது. இப்போது பாகன் வந்தான். யானை காலை நோண்டுவதைக் கண்டு, அவனும் அதற்கு உதவினான்.

அவன் மெதுவாக அந்தத் தோலை யானையின் உடம்பில் இருந்து பிய்த்துவிட்டான். யானை மண்டையை வேகமாக ஆட்டிக்காட்டியது. மீண்டும் பழையபடி தன் உடம்பை தும்பிக்கையாலும் வாலாலும் தட்டிக்கொண்டே இருந்தது. பூஜை முடிந்து எல்லோரும் வந்தனர். பெரியவர் குடும்பம் சென்றது. அவரை தொடர்ந்து, ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். இப்போது கோயிலில் நான், யானை, பாகன் உட்பட ஒரு சிலர் மட்டுமே.

பாகனும் கிளம்பத்தயாராகத்தான் இருந்தான். ஆனால் கிளம்பவில்லை. மெதுவாக அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். "அதான் பூஜ முடிஞ்சுபோச்சில்ல? இன்னும் கெளம்பாம இருக்கிங்க?"

"எங்க ஓனர் வந்து வாடகை வாங்குனதும் தான் போவோம்" என்றான் யானையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே.

"அப்போ இது உங்க யான இல்லயா?"

"எனக்கு சம்பாரிக்கவே என்னால முடியல. இதுல யானய வேற சொந்தமா வச்சுருக்கணுமாக்கும்?" ஒரு வித எரிச்சலுடன் சொன்னான். இப்போது யானையைத் தடவுவதையும் நிறுத்திக் கொண்டான்.

ஓனரை எதிர் பார்த்து கோயில் வாசலைப்பார்த்துக் கொண்டிருந்தான். கைலி கட்டிக்கொண்டு நீண்ட தாடியுடன் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். பார்த்தவுடன் தெரிந்து விடும் அவர் ஒரு இசுலாமியர் என்று. நேராக எங்களை நோக்கி வந்தார். "என்னடா முடிஞ்சதா?" என்றார் பாகனிடம்.

"அப்பதையே முடிஞ்சுரிச்சி. உங்களுக்கு தான் வெயிட்டிங்"

"சரி இரு. நான் கூலி வாங்கிட்டு வந்துறேன்", என்னைப்பார்த்து "ரமேஷ் உள்ள தான இருக்காரு?"

"ஆமா". அவர் சென்றவுடன் பாகனிடம் "இதுக்குலாம் எவ்வளாவுங்க கூலி?"

"தெரியாது. எவ்வளவு வந்தாலும் எனக்கும் யானைக்கும் அது சேராது. இவங்க குடுக்குறது பாயிக்கு பத்தாது. பாயி குடுக்குறது எனக்கும் யானைக்கும் காணாது"

"ஓ.. உங்களுக்கு பாய் சரியான காசு குடுக்க மாட்டாரா?"

"அவரும் என்னங்க செய்வாரு? பாவம்"

பாய் வந்தார். அவர் முகத்தில் ஒரு வித கடுகடுப்பு தெரிந்தது. "காலைல எத்தன் மணிக்கு வந்த?"

 "6மணிக்கு"

"பேசுனதுல பாதி காசு கூட தரல. 'அடுத்த திருவிழால பாத்துக்கலாம்'னு சொல்றாய்ங்க. இந்த நெலமேல போனா அடுத்த திருவிழாவுக்கு நம்ம 3பேருமே இருக்க மாட்டோம்"


பாகன் ஒன்றும் சொல்லாமல் யானையையும் முதலாளியையும் பார்த்தான். "இந்தா 40ரூவா. யானைக்கு இந்தா 200 ரூவா"

"முதலாளி நேத்துல இருந்து ரெண்டு பேருமே சரியா சாப்பிடல" தயங்கினான்.

"கோயிலு சாமி இருக்குற எடம், புண்ணியம், அது இதுன்னு நீ தான நேத்து சொன்ன? இப்ப அனுபவி." முதலாளி அவனை வையவில்லை, ஆற்றாமையில் தான் பேசினார். "ஒன்னு பண்ணு நாளைல இருந்து திரும்பவும் இத தெருவுக்குள்ள கூட்டிட்டு போயி யாவாரம் பாரு. கைச்செலவுக்காச்சும் காசு மிஞ்சும்"

"அது நல்லா இருக்காதுன்னு தான மொதலாளி இங்க வந்தோம்?" பிச்சை எடுக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னான்.

"நீயும் நானும் இந்த சனியனும் ஒழுங்கா தின்னு உசுரோட இருக்கணும்னா அதான் வழி. நீயே முடிவு பண்ணிக்கோ. ஒனக்கு விருப்பம் இல்லாட்டி, சொல்லிரு இத வித்துரலாம்" சொல்லிக்கொண்டே முதலாளி நடக்க ஆரம்பித்தார். பாகன் தொடர்ந்தான், அவன் பின் கடவுள் சாமி என்று சில நிமிடங்கள் முன்பு வரை கும்பிடப்பட்ட யானை என்னும் சனியன் தன் மணிச்சத்தத்தை ஒலிக்கவிட்டுக்கொண்டே நாளைய பிழைப்பை நோக்கி செல்கிறது.

50வது பதிவு!!!! - தூர்தர்ஷனில் சிறு வயதில் கவரந்த நிகழ்ச்சிகள்..

Tuesday, March 29, 2011

பலரும் பிளாக் ஆரம்பித்து மாதத்துக்கு 100பதிவுகள் வரைப் போட்டுக்கொண்டிருக்கும் போது, 3வருடங்கள் கழித்து வரும் 50வது பதிவை பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி. 50 நெருங்கிவிட்டதால். என் பதிவுகள் பலவும் பழைமையையும் பழைய நிகழ்வுகளையும் சார்ந்தே அமைந்திருப்பதை நண்பர்களில் சிலர் அறிந்திருப்பார்கள். எனக்கு எப்போதுமே இனிமையான பசுமையான பால்ய காலத்து விசயங்களை அசை போடப்பிடிக்கும். அந்த வரிசையில் என் 50வது பதிவாக சிறு வயதில் தூர்தார்ஷனில் என்னைக் கவரந்த சில நிகழ்ச்சிகளை (தமிழ் & ஆங்கிலம்) இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஜங்கிள் புக்:




சின்ன சின்ன சிட்டுகளாம் என்று தமிழில் ஆரம்பிக்கும் பாட்டு இது.. என் வயதொத்த அனைவரையும் தன்  சந்தோசங்களால் சிரிக்க வைத்த பாலு கரடியையும், பிரிவால் அழ வைத்த மௌக்லியையும், வில்லத்தனத்தால் பயமுறுத்திய ஷேர்கான் புலியையும் எப்படி மறக்க முடியும்? இதன் இரண்டாம் பாகமும் தூர்தர்ஷனில் போடப்பட்டது. மௌக்லி காட்டில் இருந்து ஊருக்குள் வருவது. ஆனால் அது முதல் பாகம் அளவுக்கு என்னைக் கவரவில்லை. அந்தக் காடும் காட்டு விலங்குகளும் சித்திரங்கள் தான் என்றாலும் அவை நம் கண் முன் நின்று நம்மிடமே பேசுவது போல் இருக்கும். ருட்யாட் கிப்லிங் (Rudyard Kipling) இந்தியாவில் நடப்பது போல் இந்தக் கதையை எழுதியிருப்பார். (அவர் இந்தியாவில் பிறந்தவர் தான், ஆங்கிலேயெ ஆட்சியின் போது)


அலிஃப் லைலா:




இந்த நாடகம் ஒவ்வொரு திங்களும் இரவு 9.30க்குப் போடுவார்கள். அரேபிய இரவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மர்மத்தொடர். எனக்கு இதில் வரும் கதாநாயகன் முகம் மட்டுமே நினைவில் உள்ளது இப்போது வரை. பார்ப்பதர்க்கு கண்ணாடி போடாத பாக்கியராஜையும் அனில் கபூரையும் கலந்த கலவை போல் இருப்பார். அவர் கோபப்படும் போது இடது மேல் உதடை உயர்த்தி கோபப்படுவர். இப்போது வரை நான் அதை தினமும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் வலது உதடை மட்டுமே உயர்த்த முடிகிறது. இடது உதடு சொல் பேச்சு கேட்கவில்லை. அதே போல் இந்தத் தொடரில் வரும் இன்னொரு பாத்திரமும் மனதில் உள்ளது. அது கதாநாயகனின் தோழனாக வரும் ஒரு மந்திரவாதி. அவர் ஒரு தோல் பையை எப்போதும் வைத்திருப்பார். தன் உள்ளங்கையை மடக்கி அதில் ஒரு முத்தமிட்டு, கையை விரித்து இவர் உரிய ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்தும் அந்தப் பைக்குள் வந்துவிடும். அதே போல் இவர் ஊதினால் அந்தப் பையில் இருந்து இவர் எது வர வேண்டும் என நினைக்கிறாரோ அது வந்து விடும். ஒரு முறை அவர் தண்ணீரை வெளியிட்டு எதிரிகளை சுற்றிவழைத்து கதாநாயகனைக் காப்பார். அப்போது நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பக்கத்து வீட்டு அக்கா சொன்னது, "பாவிங்க, தண்ணிய இப்படி செலவழிக்குராய்ங்க பாரு" என்று.


சந்திரகாந்தா:


வாராவாரம் ஞாயிறு காலை 9 மணிக்குப் போடப்பட்ட நாடகம். "சந்திரகாந்தா சந்திரகாந்தா அவள் கதையே..." என்று வரும் அருமையான பாடல். சுடச்சுட இட்லி தின்று கொண்டே பார்ப்பதால் டபுள் சந்தோசம். (அப்போதெல்லாம் வாரத்தில் ஞாயிரில் மட்டும் தான் இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் ஐட்டங்கள்.) பிற நாடகங்களைப்போல் இதில் ஆரம்பத்திலேயெ பாடல் வராது. முதலில் ஒரு சிறு முன்குறிப்பு கொடுப்பார்கள், சந்திரகாந்தாவைத் தேடிச்செல்லும் இளவரசன் பற்றி. இடை இடையில் பாடல் வரும். "இந்த சூழ்நிலையிலே இளவரசனின் நினைவிலே உருகுகின்றாள் சந்திரகாந்தா.. உருகுகின்றாள் சந்திரகாந்தா" என்கிற வரியை இப்போதும் முனுமுனுத்து உருகிக்கொண்டிருக்கிறேன். இதில் வரும் எஃகு என்னும் வில்லனும், பண்டிதரும், மறக்க முடியாதவர்கள். அதே போல் சேட்டக் என்னும் குதிரையும் மறக்கவே முடியாத ஒன்று. பல நேரங்களில் நல்லவர்களை எதிரிகளிடம் இருந்து காக்க தக்க சமயத்தில் வந்து நம் வயிற்றில் பாலை வார்ப்பது இந்த சேத்தக் தான்..

சுரபி


ஞாயிறு இரவு 9.30க்குப் போடுவார்கள். அரை மணி நேர நிகழ்ச்சி.  பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி. மிகவும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பழக்க வழக்கங்களைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். அப்படித்தான் நான் Dead Sea பற்றி அறிந்து கொண்டேன், அங்கே யாரும் மூழ்கிவிட முடியாது என்று. டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) நான் தீவிர ரசிகன். தொகுத்து வழங்கும் ஆணின்  பெயர் சித்தார்த் என்று நினைக்கிறேன். இப்போது மதுரை வானொலியிலும் கோடை எப்.எம்.லும் இருக்கும் சுந்தர ஆவுடையப்பனின் குரலுக்கு நான் இவரின் முகத்தையே கற்பனை செய்து கொள்வேன். ரேணுகா மற்றும் அந்த ஆணின் சிரித்த முகமும் அதற்கு கொடுத்த எளிய தமிழ் மொழி மாற்றமும், அவர்களின் உடைகளும் மறக்கமுடியாதவை.

மகாபாரதம்:


இந்த நாடகத்தைப் பற்றி நினைத்தாலே எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் நான் போட்ட சண்டை. அவள் அந்த சண்டைக்குத் தண்டனையாக தனது வீட்டிற்கு இனி மகாபாரதம் பார்க்க வரக்கூடாது என்று சொன்னாள். நானும் அதற்குப் பின் இதைப் பார்த்தது இல்லை. எங்கள் வீடும் ஆச்சி வீடும் பக்கத்துப் பக்கத்து தெருவில் இருந்தன. ஞாயிறு காலையில் என்னை எழுப்பி விட வருவார் இந்த நாடகம் பார்ப்பதற்கு. எழுத்துப் போட ஆரம்பிக்கும் போது கேட்கும் சங்கொலி, நாடகத்தின் இடையிடையில் அண்ட வெளியில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு கம்பீரக்குரல் கேட்கும். அந்தக் குரல் சொல்லும் கருத்துக்கள் எதுவும் புரியாது என்றாலும், அந்தக் குரல் நம்மை வசீகரித்து 'என்ன தான் சொல்றாய்ங்க?' என்று கவனிக்க வைக்கவல்லது..


மேலும் சாந்தி, யுக், ஷக்திமான், ஸ்ரீகிருஷ்ணா போன்ற பலவும் மறக்க முடியாதவை. அதிலும் ஷக்திமானில், இரண்டு கைகளையும் குறுக்காக ஒன்றின் பின்புறத்தை மற்றொன்று பார்ப்பது போல் வைத்து "இருள் நீடிக்கட்டும்" என்று சொல்லும் வசனம் அப்போது எங்கள் பள்ளியில் பிரபலம். தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஆச்சியிடம் என்றைய சாந்தி மற்றும் யுக் கதைகளைப்பற்றி கேட்பேன். சாந்தி கதையை மட்டும் சொல்லுவார். யுக் அவருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது சாந்தி போல குடும்பக்க்கதை  (ஏக் கர் கி ககானி என்று ஹிந்தியில் நாடகம் போடும் போது சொல்வார்கள்) இல்லை. சுதந்திரப் போராட்ட கதை. இன்னொரு முக்கியமான விசயம், 3மணி அவர் தூங்கும் நேரம். 2.30க்கு சாந்தி ஆரம்பித்து 3 மணிக்கு முடிந்து விடும். ஆச்சியும் சாந்தி முடிந்ததும் 4 மணி வரைத் தூங்கிவிடுவார். அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே எனக்கு கடைசி வரைத் தெரியாமல் போனது. !

இதெல்லாம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழிலும் பல நல்ல நாடகங்கள் வந்தன. காத்தாடி ராமமூர்த்தி இயக்கி நடித்த "ஸ்ரீமான் சுதர்சனம்" என்னும் குடும்ப சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம், விவேக்கின் "மேல்மாடி காலி" என்னும் நகைச்சுவை நாடகம். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் போன்று ஒன்று வருமா? வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் இருந்து அழைத்து வரும் அம்மாவிடம் "எம்மா இன்னைக்கு ஒலியும் ஒலியும்ல என்ன பாட்டுலாம் போடுவாங்க?" என்பேன். அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்லுவார் "வால் போஸ்டர் எல்லாம் பாத்துக்கிட்டே வா, இன்னைக்கு என்ன படம்லாம் வந்துருக்குன்னு. அதுல இருந்து தான் பாட்டு போடுவாங்க" என்பார். 

ஆனால் ஒரு முறை கூட அவ்வாறு எங்கள் ஊரில் ஓடும் படத்தின் பாடலை ஒளியும் ஒலியுமில் போட்டதில்லை.. அதே போல் புதன் கிழமைகளில் இரவு 7.20 க்கு ஒளிபரப்பப்படும் "சித்ரகார்" மூலம் தான் "பர்தேசி, பர்தேசி - ராஜா ஹிந்துஸ்தானி", "தூ ச்சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் - மொஹ்ரா"  போன்ற பல ஹிந்திப்படப் பாடல்களும் பிரியமான பாடல்கள் வரிசையில் வந்தன.. தொடர்ந்து பல வாரங்களாக அவர்கள் முதல் பாடலாக பர்தேசி பாடலைத்தான் போட்டார்கள். இப்போது வரை அந்தப்பாடல் ஒரு எவர்கிரீன் தான். தூர்தர்ஷனைப் பற்றி இன்னும் நிறைய இப்படி பேசிக்கொண்டே போகலாம்..

டிஸ்கி : தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது என்ன மாதிரி நிகழ்ச்சிகள் இருந்தது என்று பாருங்கள். வரலாறு மற்றும் அதன் புனைவுகள், இதிகாசங்கள், இலக்கியங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட நாடகங்கள், பொது அறிவு சார்ந்த விசயங்கள் என்று நமக்குக் கற்பிக்க பலவும் இருந்தன. ஆனால் இப்போது கேபிள் சேனல்களில் போடப்படும் நாடகங்களைப் பார்த்தால்........... சரி விடுங்க, அதப் பத்தி பேசுனா வாயில் ரொம்ப அசிங்க அசிங்கமா வரும்..

கருணாநிதியை ஆதரிப்பவர்களின் லட்சணம்...

Wednesday, March 23, 2011

தேர்தல் வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கருத்துக்கணிப்பு, கட்சி ஆதரவு, மத, இன, ஜாதிச் சாயம் பூசுவது, கொடியைத்தூக்கிக் கொண்டு அலைவது என்று கிளம்பிவிட்டார்கள்.. பெரியார், secularism, என்று பேசுபவர்கள் தி.மு.க வையும், ஸ்பெக்ட்ரம், குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டுவோர் அ.தி.மு.க. வையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரே விதமான விஷயங்கள் போர் அடித்து விடும்.. அதனால் தான், ஒரு ஆட்சி நல்லா இருந்தாலும் சரி, நல்லா இல்லாவிட்டாலும் சரி, இந்த ஆட்சி நல்ல ஆட்சியா இல்லையா என்பது புரியாவிட்டாலும் சரி, அதைத் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த 5 வருடத்துக்கு இன்னொருவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்கள். அந்த அளவுக்குப் புதுமை விரும்பிகள்!

2001ன் அ.தி.மு.க ஆட்சியையும், 2006 தி.மு.க ஆட்சியையும் அப்படிச் சொல்லலாம். வென்றவர்களுக்கே நாம் எப்படி வென்றோம் என்று புரிபடவில்லை. ஆனால் ஆட்சியின் கடைசி வருடத்தில் இருவரும் ஒரு சில தவறுகளை செய்தது நிதர்சனம். என்னதான் மக்களின் மனம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், ஒரு சிலர் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இந்த இரு கட்சிகளையும் ஆதரித்துக்கொண்டு தான் வருகிறார்கள்..

தி.மு.க வை அப்படி யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம். அ.தி.மு.க தான் தெரியுமே நமக்கு.. பார்ப்பனர்களும், தேவர் சமுதாயத்தில் பலரும்.. சரி மேட்டருக்கு வருவோம்..

இந்தக் கட்சியின் (தி.மு.க) ஆதரவாளர்கள் என்று நினைத்தவுடன் மனதிற்குள் வரும் முதல் பிரிவினர் அரசு ஊழியர்கள். கருணாநிதியைப் போல் அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் எவரும் இல்லை. வகை தொகை இல்லாமல் எல்லாருக்கும் அடிப்படை சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு என்று இவர் செய்வது ஏராளம். ஓட்டுச் சாவடியிலும் ஓட்டு எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இவர் ஆசிரியர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் கொஞ்ச நஞ்சமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் விலைவாசி ஏற்றத்திற்கு இப்போது சில நாட்களாக கணினித்துறையைக் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் 20000, 30000 என்று சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். எந்த அரசு ஊழியர் குடியிருப்புக்கு அருகிலாவது குடிசை இருக்கிறதா? இருக்காது.. அங்குள்ள விலைவாசி குடிசையில் இருப்பவனுக்குக் கட்டாது. சொந்த வீடு இல்லாத, 10 வருடம் அரசுத் துறையில் பணியாற்றும் ஒருவரை காண்பியுங்கள் பார்க்கலாம். ஒன்னாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கும், அனுபவமே இல்லாத ஆசிரியர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் ரூ.21,000.. ஆனால் இதை விட "அதிகமாக வேண்டும்" என்று சில நாட்களுக்கு முன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் என்றால் தான் ஓட்டுக்கு ஆசைப்பட்டு கலைஞர் கொடுத்துவிடிவாரே?! இந்த ஆட்சியிலே பெற்றால் தான் உண்டு. இல்லை என்றால் அடுத்த ஆட்சியில் ஒன்னும் கிடைக்காதே. அரசு நடத்துனர், ஓட்டுனர் முதல் எல்லாருக்கும் இதே தான். ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் படித்து முடித்துவிட்டு (அது SSLC யாக இருந்தாலும் சரி MBA வாக இருந்தாலும் சரி) ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸிலோ, பட்டாசு அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்பவரின் முதல் மாத சம்பளம் 3,000ல் இருந்து 4000 க்குள் தான்.. தனியாரில் ஒருவன் எங்கள் ஊரில் 10000ரூ சம்பாதித்தால் அது பெரிய விசயம்.. ஆனால் அரசு இவ்வளவு இருந்தும் இந்த அரசு ஊழியர்கள் "இன்னும் இன்னும்" என்று திருப்திப் படாமல் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால் சாதாரண மக்களுக்கு அவர்கள் மேல் கோபம் வரத்தான் செய்யும்.


இந்த அரசு ஊழியர்கள் எல்லாம் எதற்கு அ.தி.மு.க வை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. "வேலையை ஒழுங்காக செய்" என்று கூறுவதாலா? தேவைக்கு அதிகமாக அரசு வேலைக்கு ஆட்களை எடுக்காததாலா? "இருப்பவர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே போதும். பலரை தேர்ந்தெடுத்து அதிகமான சோம்பேரிகளை நாட்டில் உருவாக்க வேண்டாம்" என்று அந்தம்மா நினைப்பதாலா?

தி.மு.க.விற்கு அரசு ஊழியர்களுக்குப் பிறகு அதிக செலவாக்குள்ளது கிறிஸ்தவர்களிடம். கருணாநிதி இவர்களுக்கு அப்படி என்ன தான் செய்தார்? ஹிந்து மதத்தைப்போல் தங்களின் மதத்தை அவர் அசிங்கப்படுத்தாமல் இருக்கிறாரே, அதுவே அவர் இவர்களுக்குச் செய்யும் உதவி தான். ஆனால் அந்தம்மா கட்டாய மத மாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்து வெளிநாட்டில் இருந்து கோடி கோடியாக பணத்தை இறைத்து மக்களை மூளைசலவை செய்வதை நிறுத்தியது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. யாருடைய தொழில் நஷ்டமடையும், எந்த குடும்பத்தில் பணக்கஷ்டம் வரும், யாருக்காவது தீராத நோய் வருமா?, எந்த வீட்டில் இழவு விழும் என்று காத்துக்கொண்டிருந்து அவர்கள் துன்பப்படும் நேரத்தில் அவர்களை மதம் மாற்றுவது எவ்வளவு குரூரமானது? இவர்கள் திருச்சபையில் 'இத்தனை பேரை மதம் மாற்றினேன்' என்று பெயர் எடுப்பதற்காக மற்றவர்களின் இயலாமையை பயன்படுத்துவது என்ன ஞாயம்? ஆனால் கருணாநிதியின் பகுத்தறிவுக்கு இதெல்லாம் மிகவும் சரியான செயல்கள். எனக்குத் தெரிந்த சிலர், கருணாநிதி ஹிந்து மதத்தை அசிங்கப்படுத்தும் போது அவ்வளவு ஆனந்தப்படுவார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வது "பாபர் மசூதியை இடித்ததால் சந்தோசப் பட்ட சில முட்டாள் ஹிந்துக்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை". இவர்களும் அரசு ஊழியர்களைப் போல எந்த ஒரு ஞாயமான செயலுக்காகவும் கருணாநிதியை ஆதரிப்பதில்லை.

அடுத்து வருபவர்கள் போலி ஜாதி மறுப்பாளார்கள். எப்படி ஹிந்து மதத்துவேசம் secularism எனப்படுகிறதோ, அதே போல பார்ப்பனர் துவேசம் ஜாதி மறுப்பு என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த போலி ஜாதி மறுப்பாளர்கள் எப்போது பார்த்தாலும் "பாப்பான் பாப்பான்" என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு  மலச்சிக்கல் என்றால் அதற்கும், ஆரிய திராவிட கதையை உருவாக்கி அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் என்று கிளப்பிவிடுவார்கள். இதையே இவர்களின் தமிழினத் தலைவரும் செய்வதால் இவர்களுக்கு இவரை ரொம்பப் பிடித்து விட்டது. சரி அந்த பாப்பானுக்கு நிகராக முன்னேறுங்கள் என்றால் மாட்டார்கள்.. "பாப்பானையும் எங்களைப்போல் கீழே இறக்கு" என்று கத்துவார்கள்.

இப்படிப்பட்ட சுயநல வல்லுனர்களால் தான் இந்த ஆட்சியும் இந்தக் கட்சியும் நல்லவையாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.. பார்ப்பனர் என்றாலே அவன் அ.தி.மு.க விசுவாசி என்பதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த, நான் படித்த ஒரு ஆசிரியர். அவர் ஐயர், தீவிரமான கடவுள் பக்தர் போல் தன்னைக் காட்டிக்கொள்வார். ஜாதி வெறியும் அவருக்கும் உண்டு. ஆனால் அவர் தி.மு.க அனுதாபி. "என்ன சார், இந்த ஆளு உங்க ஜாதிய இப்படிப் போட்டு கிழிக்குறாரு, அவர்ப்போயி சப்போர்ட் பண்றீங்க?" என்றேன் ஒரு நாள். "போடா, சாமியும் ஜாதியுமா சோறு போடப்போகுது" என்று 'டக்' என்று சொன்னவர், சில நொடிகளில் சுதாரித்து "ஈஸ்வரா என்ன மன்னிச்சுரு" என்றார்.. எதற்க்கு இந்தப் பாவ மன்னிப்பு, கடவுளிடம் பம்மாத்து எல்லாம்?

இன்னொரு ஆசிரியர். அவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது தீவிர தி.மு.க எதிர்ப்பாளர். "படிச்சவன், வெவரம் தெரிஞ்சவன் எவனும் தி.மு.க வுக்கு ஓட்டுப் போட மாட்டான். அந்தம்மா மாதிரி யாருக்குப்பா administration capacity இருக்கு? எல்லாத்தையும் ஓசில குடுத்து நாட்ட சீரழிச்சுட்டான்" என்பார்.. சென்ற வருடம் அவருக்கு கலைஞர் கையால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கான அரசானை கொடுக்கப்பட்டது. நேற்று பேசும் போது சொல்கிறார், "கலைஞர் தொலைநோக்குப் பார்வையோட நெறய விசயம் பண்ணிருக்காருப்பா.." அப்படி என்னத்தை செய்து கிழித்தார் என்று தான் தெரியவில்லை..

பேசாமல் நம் முதல்வர் இலவச அரிசியும் மிக்ஸியும் கிரைண்டரும் கொடுப்பதற்குப் பதில், தினமும் காலையில் கொஞ்சம் இட்லியும் தொட்டுக்கொள்ள கெட்டிச்சட்னியும் கொடுத்தால் நானும் அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிடுவேன் போல...

ஜமீன் கோட்டையும் ஒரு லூசுக்கிழவியும் ..

Thursday, March 10, 2011

இதோ கிராமமா நகரமா என்று புரிபடாமல், உரக்கடையும் செல்பேசி கடையும் அடுத்தடுத்து இருக்கும், கிராமத்து அழுக்கில் இருந்து நகரத்துக்கு தூசிக்கி மாறிக்கொண்டிருக்கும் இந்த வளர்ந்து வரும் நகர கிராமம் தான் சிவகிரி. 

"எலேய், பசிக்குதுடா சோறு போடுங்கடா" - அந்த ஊரின் கல்யாண மண்டப வாயிலில் இருந்த கிழவி கத்திக்கொண்டிருந்தாள். அவள் கத்துவதில் ஒரு பயமோ தயக்கமோ இல்லை. தனக்கு இல்லாமல் சோறு காலியாகிவிடுமோ என்கிற கோபம் மட்டும் தெரிகிறது. 'எலேய்' என்று அவள் கத்துவதில் ஒரு சுதி தெரிந்தது. அந்த வார்த்தையை அவள் ராகம் பாடுவது போல் சொன்னாள். சேலை கட்டி அதன் மீது நைட்டி அணிந்திருந்தாள் அந்தக் கிழவி. நைட்டியை வேட்டி போல் மடித்து கட்டியிருந்தாள். கையில் ஒரு தூக்குவாளியும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலும் இருந்தன. அந்த தண்ணி பாட்டிலில் ஒரு கயிறை கட்டி கையில் தொங்க விட்டிருந்தாள். அவளை பிச்சைக்காரி என்றும் சொல்ல முடியாது. தலைக்கு எண்ணெய் தேய்த்து படிய வாரி கிளிப் மாட்டியிருந்தாள்.

"யேத்தா உனக்கு குடுக்காம வேற யாருக்கு குடுக்கப்போறான் நம்ம சுப்ரமணி? செத்த பொறு" ஒருவன் சொன்னான்.

"எவ்வளவு நேரண்டா பொறுக்குறது? இந்தப்பய ஊருக்கெல்லாம் சோறு போடுறான், எனக்கு ஒரு கை போடவேண்டியது தானடா? நீயும் நல்லா தின்னுட்டு தானடா வந்துருக்க? அவங்கிட்ட சொல்றா" கிழவி யாருக்கும் மரியாதை தரவில்லை.

"சரி நான் சொல்றேன்" என்று கூறிக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

"எலேய் சொல்லிட்டு போடா. டேய் நில்ரா.. அய்யோ.." கிழவி போலியாக அழுதாள். குரலில் அழுகை தெரிந்தது கண்ணில் நீர் வரவில்லை.

"எலேய் அவன் சோறு போடமாட்டேன்னு சொல்லிடான்டா. இன்னைக்கு நான் என்னத்தடா சமப்பேன்?" அந்த கிழவி தன் முரட்டுத்தன்மான கீச்சுக்குரலோடு கத்திக்கொண்டே பேருந்து நிலையத்துக்குள் வந்தாள். நேராக பயணிகளுக்கு போட்டிருக்கும் கல் இருக்கைக்கு அருகில் வந்து, அதற்கு பின்புறம் இருக்கும் கோழிக்கறிக் கடைக்காரனைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"எலேய் நான் கேட்டத போட்டுட்டியாடா? என்னடா பண்ற?" கடைக்காரனிடமும் அதிகார தொனியில் சற்றே கெஞ்சலோடு கேட்டாள்.

"அங்க நின்னு கேட்டாலாம் குடுக்கமுடியாது. இங்க வா தாரேன்" கையில் இருக்கும் கத்தியை அவளை நோக்கி நீட்டி அழைத்தான் கடைக்காரன்.

"நான் வரமாட்டேன்டா. அந்த சனியன் என்ன கடிச்சுரும். அன்னைக்கே என்ன தொரத்தி கீழ தள்ளி விட்ருச்சில்ல? நீயும் பாத்திலடா? மறந்துட்டியாடா?" அவன் கடைக்கு வெளியில் கறியை எதிர் பார்த்துக்காத்திருக்கும் நாயைக் காட்டி சொன்னாள்.

"இங்க வந்தாத்தான் தருவேன் கெழவி" அவன் அவளிடம் விளையாடிப்பார்த்தான்.

"எலேய் நானும் காசுதானடா குடுக்குறேன்? ஓசிலயா வாங்குறேன்? கொஞ்சம் இங்க வந்து குடுடா. அடியே பாப்பா நீயாவது சொல்றி" தன் தந்தையோடு கடைக்கு வந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையப் பார்த்துச் சொன்னாள்.

"ஆமா காசுகுடுத்துக் கிழிச்சா" புலம்பிக்கொண்டே அந்த குழந்தையிடம் கொடுத்து கிழவியிடம் கொடுக்குமாறு கூறினான்.

"இவ்வளவு நேரமாடா? அடேய் கறி வேண்டாம்டா ஈரல் மட்டும் போடுடா.. பாப்பா வேமா வாடீ. குடு குடு குடு.. " குழந்தையிடம் பெற்றுக்கொண்டாள். அந்த பாலித்தின் பைக்குள் பார்த்ததும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.

"எலேய் ஒன்ன என்னடா சொன்னேன்? ஏன்டா என்ன இப்டி அழவைக்குற? நான் போயி சமைக்கணும்டா. துட்டு குடுத்தேன்லடா பன்னெண்டு ரூவா? இப்டி கறியா போட்டு வச்சுரிக்கியேடா? எலேய் உன்னத்தான்டா" மும்முரமாக கறி வெட்டிக்கொண்டிருக்கும் அவனை அழைத்தாள். "எனக்கு ஒழுங்கா ஈரல மட்டும் குடுடா. நான் போயி சமைக்கணும்டா. வவுறு பசிக்குதுடா. எலேய்" கத்தினாள்.

அந்தக் குழந்தை அந்தப் பையை கிழவியிடம் இருந்து மீண்டும் வாங்கி கடைக்காரனிடம் கொடுத்து, அவன் சிறு மாறுதல்கள் செய்தவுடன் கிழவியிடம் மீண்டும் கொடுத்தாள். "திரும்பவும் பாரு.. எலேய்.. இங்க பாருடா, ஈரல்ல கறி ஒட்டிருக்கு. நான் குடுத்த துட்டுக்கு என்னடா மரியாத?"

"யேத்தா அத எடுத்து போட்டு சமைக்க வேண்டியது தான?" பஸ் ஸ்டாப்பில் பீடி பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் சொன்னான்.

"துட்டு குடுத்துருக்கேன்டா துட்டு. நான் சம்பாரிச்சத குடுத்து வாங்குறேன்டா. இப்டி குடுத்தா நான் என்னடா செய்வேன்" அந்த கறி ஒட்டியிருக்கும் ஈரல் துண்டை எடுத்துக்காட்டினாள்.

"சரி, சரி, அதெல்லாம் கழுவி போட்டுக்கோ. உன் பேத்தி நாலு நாள்ல ஊருக்கு வாராளாம்?"

"ஏலேய் என்னடா சொல்ற? ஒரு மாசம் ஆவும்னு சொன்னாலடா எம்மவ?" இவ்வளவு நேரம் கத்திக்கொண்டிருந்த கிழவி இப்போது அமைதியாகப் பேசினாள்.

"ஆமா, உம்மவ போன மாசம் சொன்னா, ஒரு மாசம் ஆவும்னு. நாந்தான லெட்டர படிச்சேன்?"

"ஆமாடா நீ தான படிச்ச? அப்ப அவ நாலு நாள்லயா வாரா?" மீண்டும் கேட்டாள்

"ஆமா. சரி, நீ தான் சமைக்கணும்னு சொன்னில? போ.." அணைந்து போன பீடியை மீண்டும் பற்ற வைத்தான்.

"உனக்கு இவள பத்தி தெரியுமாடா?" இன்னொருவன் பீடி குடிப்பவனிடம் கேட்டான்

"என்னடா சொல்லிட்ட? இவளப்பத்தி எல்லாம் எனக்கு தெரியும். பாக்க பிச்சக்காரி மாரி இருக்கான்னு நெனைக்காத, இவளுக்கு லட்சக்கணக்குல துட்டு வர வேண்டியிருக்கு. அப்டித்தான கெழவி?"

"ஆமா அடுத்த வாரம் ஒரு 18000ரூவா கெடைக்கும்னு அந்த வக்கீலு சொல்லிருக்கான். அதெல்லாம் கெடக்கட்டும் குஜராத்ல இருந்து வரணும்னாலே நாலு நாள் ஆவும்லடா?" கிழவி மனதிற்குள்ளேயே கணக்குப்போட்டு பார்த்தாள்.

"ஆமா, இன்னைக்கு சாந்தரம் கெளம்பிருவா. சரி அந்த வக்கிலு எவ்வளாவு ரூவா தாரேன்னு சொன்னாரு?"

"எவ்வளவு ரூவானா ஒனக்கு என்னடா? நான் எனக்காடா சேத்துவக்கிறேன்? அவளுக்கு தானடா? அவ நல்லா இருக்கணும்னு தானடா நான் இங்க இருந்து அவ கஷ்டத்த எல்லாம் படுறேன்?" எதையோ நினைத்து சொல்ல ஆரம்பித்தவள் டக்கென சுதாரித்து, "சேரிடா நான் போறேன். சோறு ஆக்கணும்"

"பாத்தியாடா கெழவிய? காசப்பத்தி கேட்டதும் கெளம்புறா. யேத்தா நில்லு. வீடு நெலத்த எல்லாம் உம்பேத்தி பேர்லயா எழுதப்போற?"

"அதெல்லாம் எங்க இருகுன்னே தெரிலடா. நீ பாத்தியா? போன வருசம் அந்த சீனிக்கண்ணு என்ன வீட்ட விட்டு பத்தி விட்டுட்டு என் வீட்ல அவேன் வந்து தங்கிகிட்டான்டா. இப்ப நான் அங்க தெரணைல படுத்துக்கெடக்கேன். எல்லாம் போச்சுடா" கிழவி எதையோ நினைத்துக்கொண்டிருப்பவள் போல பேசினாள்.

"சேரி, பேத்திக்கு அடுத்த வாரம் நல்ல கவனிப்பு தான?"

"அவள கவனிக்காம வேற யாரடா கவனிக்கபோறேன்? இந்த வக்கீலு துட்டு குடுத்த ஒடனே அவளுக்கு ஒரு செயினு வாங்கலாம்னு இருக்கேன்டா. ஏன்டா அவ குஜராத்துல நல்லா இருக்கால்ல?"

"நான் என்னத்த கெழவி கண்டேன்? ஆனா அவா இங்க வந்தா தான் நல்லா இருப்பா.. நீ தான் அவள ஒன் தோளுல தூக்கிக்கிட்டு அலஞ்சுகிட்டே இருப்பியே பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி?"

"ஆமாடா அவளுக்கு என்ன ரொம்ப புடிக்கும்டா. இல்ல வேண்டான்டா, அவ அங்கயே இருக்கட்டும். இங்க வந்து அவ என்னப் பாத்த ஒடனே நான் அவள அனுப்பி வச்சுறேன். அவ அங்க இருந்தா தான் நல்லா இருப்பா. இந்தப் பாவமெல்லாம் என்னோடயே போட்டும்டா"

"செரி செரி போயி சோத்த ஆக்கு" அடுத்த பீடியை பற்ற வைத்துக்கொண்டே கிழவியை கிளப்பினான்.

"எலேய் பசிக்குதுடா, சோறு ஆக்கப்போறேன்டா" இவ்வளவு நேரம் அமைதியாக கிழவி இப்போது மீண்டும் கத்த ஆரம்பித்தாள்.

"யார்னே இந்தக் கெழவி. லூசா?" பீடி குடிப்பவனிடம் அருகில் இருந்தவன் கேட்டான்.

"என்னது லூசா? இவளுக்காடா லூசு? இவ வெவரமானவடா?"

"பொறவு ஏன்ணே இப்டி பேசுறா?"

"உசுராவது மிச்சம் இருக்கடுமேன்னு தான்" பீடியை கீழே போட்டுவிட்டு சொன்னான்.

"யப்பா இந்த கெழவி தான் இந்த சிவகிரி ஜமின். இவ புருசன் செத்துப்போனதும் இவ சொத்த எல்லாம் இந்த ஊர்க்காரன் அடிச்சு புடிங்கிட்டான். இந்தா கல்யாணம் நடந்துகிட்டு இருக்கே இந்த மண்டபம், இது தான் இவளொட அரண்மன. புருசன் செத்ததும் இவ லூசு மாதிரி ஆகிட்டா. சரி, லூச எதுக்கு கொன்னுகிட்டுனு விட்டுட்டாங்க. ஆனா இவ லூசு இல்ல."

"அப்டியா? அந்த பேத்தி?"

"இவ மகள பலபேரு சேந்து கெடுத்துட்டாங்கப்பா, சரி பேத்தியவாச்சும் காப்பாத்துவோமேனு இங்க இருந்த ஒரு வேதக்கோயில் பாதர் கிட்ட குடுத்து அனுப்பிட்டா. இப்போ தான் ரெண்டு வருசமா அந்த பொண்ணும் இந்த கெழவிய வந்து பாத்துட்டு போது"

"எதோ வக்கிலு சொத்து காசு பதினெட்டாயிரம்னு?"

"அதெல்லாம் இவளா சொல்றது. இவ பிச்ச எடுத்து தான் சாப்டுறா. பேத்தி வரும் போது மட்டும் அக்கம் பக்கம் கொஞ்சம் காசு குடுத்துட்டு போவா, பாட்டிய பாத்துக்க சொல்லி"

"பாவம்ணே"

"அதான்டா அந்த கெழவியும் நம்புறா. தான் குடும்பம் செஞ்ச பாவம் தான் இத்தனைக்கும் காரணம்னு இங்க இருந்து எல்லா கஷ்டத்தையும் இவளே படுறா. 'சாகுற வரைக்கும் நான் கஷ்டப்பட்டா என் பேத்திக்கு கொஞ்சம் இந்த பாவத்தோட கஷ்டம் கொறயுமே'னு சொல்லி எல்லா கஷ்டத்தையும் தானே படுறா. ஜமீன் பேர்ல இருக்குற 60000ஏக்கரும் இவ புருசன் பேர்ல தான் இன்னும் இருக்கு. ஆனா ஊர்க்காரன் சாப்பிடுறான்"

"இவளும் பேத்தியோட போயிற வேண்டியதுதானே?"

"அந்த பொண்ணும் கூப்பிட்டுகிட்டு தான் இருக்கு. எங்க தான் பேத்தியோட சேந்து இருந்தா அந்தப் பாவம் பேத்திக்கும் வந்திருமோன்னு இவ தனியாவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா."

அந்தக்கிழவி இப்போது கல்யாணவீட்டு வாயிலில் நின்றாள். "எலேய் கொழம்பு இருக்குடா எனக்கு. நானே காசு குடுத்து வாங்கிட்டேன். கொஞ்சம் சோறு மட்டும் குடுடா. எலேய்" மண்டபத்தில் இருக்கும் காவலாளி "அதெல்லாம் ஒன்னும் இல்ல, போடீ வெளில" கம்பை எடுத்துக்கொண்டு விரட்டினான்.

"எலேய் அடிக்காதடா. நான் போயிரேன்டா, அடிக்காதடா"  அவளுக்கு அந்த அரண்மனையில் இருந்து இப்போது தான் விரட்டப்படுவது வருத்தமாகவே இல்லை. அது பழகிப்போய்விட்டது அவளுக்கு. கிழவி அந்த மண்டபத்தை அவளின் அரண்மனையை பார்த்துக்கொண்ட, அதில் இருக்கும் எண்ணற்ற சாபங்களை எண்ணிக்கொண்டே அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்றாள்.

 "எலேய் காசு வாங்குனிலடா பன்னெண்டு ரூவா? அரிசி என்னடா ஆச்சி? எலேய்? நான் சம்பாரிச்ச காசுடா" கிழவி தன் வழகமான கத்தலை ஆரம்பித்தாள், அடிக்கடி அந்த மண்டபத்தை திரும்பிப் பார்த்துக்கொண்டே எப்போது தன் பரம்பரையின் சாபங்கள் முடிவுபெறும் என்று..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One