Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...

Sunday, April 19, 2015

நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசை என்றாலும், தோஸ்து எவனும் அவர் படங்களைப் பார்க்க ரெடியாக இல்லை.. “காதுலயே விழுகாதுரா வசனம்.. வாயிக்குள்ளயே பேசுவாய்ங்க”, ”என்ன கதைன்னே புரியாதுரா” என்று எதையாவது சொல்லிச் சமாளித்து, என்னையும் போக விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும் கே டிவி, லோக்கல் கேபிள் டிவி உபயங்களில் அவரின் முக்கால்வாசிப் படங்களைப் பார்த்து, “ஏய் நாங்களும் மணிரத்னம் ரசிகன் தான் தெரியும்ல?” என்று பீத்த ஆரம்பித்திருந்தேன்.

அதுவும் MBA படிக்கும் போது தான் அவரும் ஒரு MBA என்று தெரிய வந்தது.. சொல்லவும் வேண்டுமா? “அதான்யா படத்த அவ்வளவு நேக்கா எடுக்குறாரு.. ’புரிஞ்வன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் தேட்டர் பக்கமே வந்துறாத’ன்னு தைரியாமா விடாப்பிடியா அவர்  இஷ்டத்துக்குப் படம் எடுக்குறார் பாரு. டெக்னீசியன்ட்ட எப்படி வேல வாங்குறாரு பாரு, அதான்யா MBA” என்று கண்ணாபிண்ணாவென்று பேசும் ரசிகன் நான்.. கிட்டத்தட்ட இருபத்திச்சொச்சம் ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அவரின் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போதும் மனதில் ஒரே சந்தோசம். மணிரத்னம் என்கிற பெயரைத் திரையில் காட்டும் போது வந்த ரெண்டு மூனு விசில் சத்தங்களோடு மானசீகமாகக் கை குலுக்கிக் கொண்டேன், “என் இனமடா நீ” என்று..




ரெண்டு மாடர்ன் ஆட்கள், ஆமாம் ஆணொன்று பெண் ஒன்று.. பார்க்கிறார்கள், பிடிக்கிறது, ஒன்றாக வாழ நினைக்கிறார்கள், நிற்க.. ஆனால் கல்யாணம், கில்யாணம் கமிட்மெண்ட் கிமிட்மெண்ட் எதுவும் கிடையாது.. இருவரும் கொஞ்ச நாள் வாழ்வார்கள், அதற்குப் பின் பிரிந்துவிட வேண்டும் என்கிற ம்யூச்சுவல் ஒப்புதலுடன்.. பிரியப்போகும் அந்தக் கடைசி நாட்களில் அவர்களுக்குள் இருக்கும் உண்மையானக் காதலைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேண்டாம் என நினைத்த அந்தக் கல்யாணத்தையே கட்டி அழுகிறார்கள். இது தான் கதை.. என்னது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உங்க இளைய தளபதி விஜய்யின் ‘பிரியமானவளே’வைப் பட்டி டிங்கரிங் செய்த மாதிரி இருக்கா? ஹலோ பாஸ், இது மணிரத்னம் படம். வாய் இருங்குங்கிறதுக்காகவெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. ஒன்லி குவாலிஃபைடு பீப்புள் தான் கேள்வி கேக்கணும், மைண்ட் இட்... கதை இவ்வளவு தான்.

நடிப்பில் துல்கர், நித்யா மேனனுக்கு அடுத்தபடி தான்.. நித்யா மேனனின் கண்கள் இருக்கிறதே, ஆத்தாடி என்னா பவர்ஃபுல். சில பெண்களின் கண்களைப் பார்த்தால், ’All the world's a stage'ல் ஷேக்ஸ்பியர் சொன்னது ஞாபகம் வரும் - wild eyes.. அப்படிப்பட்ட கண்கள் நித்யா மேனனுடையவை.. அந்தக் கண்களுக்கு நான் அடிமை.. அதுவும் ‘உருமி’ படத்தில் மலையாள பாணி முண்டு கட்டிக்கொண்டு, சைடு கொண்டையுடன் பிரபு தேவாவை ஒரு லுக் விடுவார் பாருங்கள், அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்திலும் அவர் நடிக்கும் முன்பே அவர் கண்கள் நடித்து முடித்துவிடுகின்றன. ஒரு சின்ன சிரிப்பிலேயே சந்தோசம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறார்.. அழகு, திறமை இரண்டும் இருக்கிறது.. ஒரே பெரிய குறை அவரின் எடை. குட்டையான அவர் உயரத்திற்கு இது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.. எடை, இடை இரண்டையும் குறைப்பது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது..



பிரகாஷ்ராஜ் எப்பவும் போல டீ குடிப்பது மாதிரி மிகச்சாதாரணமாகத் தன் பங்களிப்பைச் செய்துவிட்டார்.. அலட்டல் இல்லாத நடிப்பு.. அவரின் மனைவியாக வரும் லீலா சாம்சன், ஒரு நல்லப் புதுவரவு. பிரகாஷ்ராஜிற்கும் அவருக்கும் உண்டான காதலை இருவரும் சொல்லும் இடம் அவ்வளவு அழகு. கோயிலில் மழையில் நனைந்து கொண்டே “வீட்டுக்கு எப்படி போறதுன்னு மறந்துட்டேன்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வசனம் போதும் அல்சைமர் என்பதின் அர்த்தத்தை நம் மக்களுக்கு உணர்த்த.. துல்கர் சல்மான் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோக்களைப் போல் அழகாக இருக்கிறார். அரவிந்த் சாமி மாதிரி அப்படியே நடிக்கிறார். தனித்துவம் எதுவும் இல்லை.

படத்தில் சில இடங்களில், மிகச்சில இடங்களில் மட்டுமே மணிரத்னம் டச் இருக்கிறது.. ஆஸ்பத்திரி காட்சி, பிரகாஷ்ராஜ் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் காட்சி, துல்கர் இரண்டு நாட்கள் என்ன ஆனார் என்பது, கடைசியில் லீலா “கணபதி எங்க?” என்று கேட்பது, இதில் மட்டுமே எனக்கு அவரின் டச் தெரிந்தது.. வசனம் யாரோ இரு ஃபேஸ்புக்/பிளாக் எழுத்தாளர்கள் பேசுவது போல் இருந்தன.. அவரின் காதல் படங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாமே ஏன் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போல் பேசுகிறார்கள் என்றுப் புரியவில்லை. நிஜத்தில் எவனாவது/எவளாவது நம்மிடம் அப்படிப்பேசினால் காதல் வராது, எரிச்சல் தான் வரும். மௌனராகம் கார்த்திக் மட்டுமே exception. ஒரு ஜாலிப் பேர்வழிக்கு அது தான் சரி.. ஆனால் எல்லாப் படத்திலும் - ரோஜாவில் ஆரம்பத்தில் வரும் அரவிந்த் சாமி, பம்பாயில் நாசரிடம் பேசும் அரவிந்த் சாமி, உயிரே படம் முழுக்க ஷாருக், அலைபாயுதேவில் மாதவன், ஷாலினி இருவரும், ஆயுத எழுத்தில் மூன்று ஜோடிகளும் - அனைவர் பேசுவதும் ஒரே மாதிரி, அவர்கள் வாழும் சமூகச் சூழலில் இருந்து விலகி, முழுக்க பக்குவப்பட்ட ஒரு மேடைப்பேச்சாளன் பேசுவது போலவே இருக்கிறது.. இந்தப் படத்திலும் அப்படித்தான். சில இடங்களில் வசனங்கள் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவர்கள் பேசுவது ரொம்பச் செயற்கையாக இருக்கிறது.

Living Togetherஐப் பற்றிச் சொல்ல வருவது மாதிரி அப்படியே போய் கடைசியில் கல்யாணம் தான் ஒரே வழி காதலுக்கு என்பது போல் முடிக்கிறார். அந்த லிவிங் டுகெதரையாவது உருப்படியாகக் காட்டினாரா என்றால் அதுவும் இல்லை.. மிக மிக மேம்போக்காகக் காட்டியிருக்கிறார்.. லிவிங் டுகெதரின் நன்மைகள், பிரச்சனைகள் என்று எதையுமே சொல்லவில்லை. அந்த வகையில் இது ஒரு வழக்கமானப் படமாகவே தெரிகிறது.. பிற படங்களில் காதலிப்பார்கள், கடைசியில் கல்யாணம் செய்து கொள்வார்கள்; இந்தப் படத்தில் லிவிங் டுகெதராக இருக்கிறார்கள் கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.. லிவிங் டுகெதரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் அவர்கள், அதை நன்றாக அனுபவித்தார்கள் என்பதற்கும் காட்சிகள் இல்லை, அது வேண்டாம் என்று கல்யாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் தெளிவானக் காட்சிகள் இல்லை..

அதுவும் பிரகாஷ்ராஜ் குடும்பத்தைக் காட்டியவுடனேயே க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிந்துவிடுகிறது நமக்கு. அடுத்தும் இரண்டு மணிநேரம் படத்தை இழுத்திருப்பது தான்  செம போர் ஆகிவிட்டது. முதல் பாதி ரொம்ப இழுவை. இரண்டாம் பாதியில் கடைசி அரைமணி நேரம் சூப்பர், மற்றபடி முதல் பாதி அளவுக்கு அது மோசம் இல்லை. மிகச்சின்னதாகப் படத்தை எடுத்திருக்கலாம்.. படத்தின் பெரிய ஆறுதல் பி.சி.ஸ்ரீராம் தான்.. அந்த வீட்டை, டபுள் டெக்கர் பஸ்சை, மும்பையின் சந்தடியை, ரயிலை, குக்கர் ஆவியை, துல்கர் சல்மானை என அனைத்தையும் அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். இசை என்னமோ எனக்குப் பிடிக்கவில்லை. வர வர ரெஹ்மான் ஏன் இப்படி மொக்கையாகிவிட்டார் என வருத்தமாக இருக்கிறது. அந்தக் கர்னாடகப் பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது..



கடைசியில், ஒரு அழகான உறவு வேண்டுமானால் கல்யாணம் என்கிற பந்தம் தேவை என்று மணிரத்னம் அழகாக முடித்திருந்தாலும், நம் ஆட்கள் அது எல்லாத்தையும் விட, லிவிங் டுகெதராக துல்கரும் நித்யாவும் போட்ட ஆட்டத்தை மட்டும் தான் மனதில் வைத்திருப்பார்கள், துல்கர் மேல் பொறாமைப் படுவார்கள்.. அது தான் மனித இயல்பு.  நம் மக்கள் ‘தேவர் மகன்’ படத்தில்  கடைசியில் நாசரைக் கமல் வெட்டியவுடனேயே தியேட்டரில் இருந்து கிளம்பிவிடுவார்கள், “போங்கடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா” என்கிற வசனம் ஓடும் போது தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டில் கூட்டம் வருவதற்கு முன் முதல் ஆளாக சைக்கிளை எடுத்துக் கிளம்பிவிட வேண்டும் என்று ஓடுவார்கள். ‘காதல்’ படத்தில் கடைசியில் பரத் வாங்கும் அடி, படும் அவஸ்தை எல்லாம் நம் மக்களுக்கு மண்டையில் ஏறாது. ’நியூ’ படத்தில் அழகான அம்மா செண்டிமெண்ட் உண்டு. ஆனால் எவன் அந்தப் படத்தில் அதையெல்லாம் கவனித்தான்? நம் மக்களுக்குப் படத்தில் என்ன வேண்டுமோ, எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் தான் எடுத்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட இந்தப் படமும் அப்படித்தான்..

ஆனால் இன்னொரு பக்கம் லிவிங் டுகெதர் எல்லாம் நம் இளைஞர் மத்தியில் வரவேற்பு பெருமா என்றும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் ஆசையை இன்னொருவர் மேல் திணிக்கக்கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது, எந்நேரமும் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்க வேண்டும், அழுகக் கூடாது, எப்போதும் ஜாலி தான் என்பது மிஷின் மாதிரி வாழும், பாசமே அறியாத வெளிநாட்டானுக்கு ஏற்றதாக இருக்கலாம். நம் இளைஞர்களுக்குப் பாசம் காட்ட, கோபம் வந்தால் கத்த, சோகத்தில் தோளில் சாய்ந்து அழ, விடிய விடிய மொக்கை போட, எந்த கஷ்டத்திலும் விட்டுவிட்டுப்போகாத ஒரு துணை வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்றைக்கும்... செக்ஸ் என்பதையும் தாண்டி, வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நம் இளைஞர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இது போன்றப் படங்களைப் பார்க்கும் நம்ம பசங்க காதல் என்கிற பெயரில் கசமுசா வேண்டுமானால் செய்வார்களே ஒழிய, லிவிங் டுகதர் அளவுக்கு அவர்களுக்குத் தைரியமும் கிடையாது, பொறுமையும் கிடையாது என்பது என் கருத்து.. உப்புச்சப்பில்லாத லிசிங் டுகெதருக்குப் பதில் கல்யாணமே பெட்டர் என்கிற விசயம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.. லிவிங் டுகெதர் இன்னும் 20 ஆண்டுகளுக்காவது இங்கு வராது என்பது என் கணிப்பு. அதனால் இதை வெறும் கதையாக, படமாக மட்டும் பார்க்கலாம். தேவையில்லாமல் நம் வாழ்க்கை முறையோடு தொடர்புப் படுத்துவது சரியல்ல.. 

ஆனால் படமாகப் பார்த்தாலும் ரொம்ப சுமார் தான். மொக்கையான முதல் பாதி, சற்றே சுமாரான இரண்டாம் பாதி, ஓரளவு நல்ல க்ளைமேக்ஸ். ஆனாலும் நான் எதிர்பார்த்தது, மணி லிவிங் டுகதெருக்கு ஞாயம் கறிபித்திருப்பார், அதிலும் இருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டலாம் என ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” போல் ideal relationshipஐக் காட்டுவார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.. ஆனால் அந்தக் க்ளைமேக்ஸ் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. யாரோ ஒரு இயக்குனர் இந்த க்ளைமேக்ஸை வைத்திருந்தால் சூப்பர் என்று தாராளமாகச் சொல்லியிருப்பேன். மணிரத்னம் இப்படி ஒரு சாதாரணமானக் க்ளைமேக்சை வைத்திருப்பது நிச்சயம் ஏமாற்றம் தான். மணிரத்னம் என்கிற இயக்குனருக்கு இது ரொம்ப ரொம்பச் சுமாரான படம்.. மணிரத்னம் என்கிற தயாரிப்பாளருக்கு பழைய ஃப்ளாப்கள் அளவுக்கு இல்லாமல் ஓரளவு வசூலைக் கொடுக்கும் moderate hit படம். அவ்வளவு தான்.

மணிரத்னத்திற்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் வொர்த்தா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சின்ன அட்வைஸ்.. இனிமேலாவது முழுக்க முழுக்க டெக்னீசியன்களை நம்பி படம் எடுக்காதீர்கள். கதை, திரைக்கதையைத் தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது உங்கள் படங்களில் இப்போதெல்லாம்.. படத்தில் ஒரே மாதிரியான பாத்திரங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வசனம் கொஞ்சமாவது இயல்பாக இருக்கட்டும். உங்கள் சினிமா வாழ்க்கையில் ‘பம்பாய்’ படம் வரை இருந்த மணிரத்னத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறோம்.. விரைவில் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு படம் எடுங்கள்.. இது போல் ஏ செண்டர் படங்கள் எல்லாம் உங்களை சினிமா விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்க வைக்கும்,  ஆனால் ரசிகர்களிடம் இருந்து விலக்கித் தான் வைக்கும்..



படத்தில் ஒரு வசனம் வரும், “நல்ல படத்துக்கு மொக்கை க்ளைமேக்ஸ்” என்று.. “ஓகே கண்மணி - மொக்கை படத்துக்கு நல்ல க்ளைமேக்ஸ்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்..

லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....

Saturday, December 13, 2014

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை தலைவர் படத்திற்கு விமர்சனம் எழுதியதில்லை என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமான விசயம் தான்.. ஏன் எழுதியதில்லை என்று யோசித்ததில் வந்த முதல் & ஒரே காரணம், அவர் படங்களை என்னால் விமர்சனக் கண்களோடு பார்க்க முடியாது.. ஒரு முக்கியமான இடத்திற்குப் போகிறீர்கள், அங்கு ஃபோட்டோ எடுப்பது ஒரு சுகம் என்றால், அனைத்தையும் மறந்து அந்த இடத்தைக் கண் கொட்டாமல் பார்ப்பது அதை விட சுகம்.. ரஜினி படம், ஃபோட்டோ எடுப்பதை மறந்து நம்மை ரசித்துப்பார்க்க வைக்கும் இடம் போன்றது.. படத்துக்குப் போனாமோ, என்ஜாய் பண்ணுனோமா என்று இருக்க வைப்பவை.. பட், ஒரு ஃபேஸ்புக் & பிளாக் பிரபலம் என்று ஃபார்ம் ஆக வேண்டுமானால் இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் நம் சமூகக் கடமையை ஆற்ற வேண்டுமல்லவா? அதனால் தலைவருக்கான என் கன்னி விமர்சனத்தைக் கொடுக்கிறேன்.. Lets begin.. 


கதை அல்ரெடி நேற்று இரவில் இருந்தே பலரும் பிரித்து மேய்ந்து துவைத்து அயன் செய்து விட்டார்கள்.. நாம ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே போயிருவோம்.. கோச்சடையானில் “பொம்மை ரஜினி” என்று ஊரே பேசியது.. அதை விட, “ஏ, ரஜினியால இனிமேலு நடக்கக் கூட முடியாதுப்பா, இதுல எங்க நடிக்கிறது? அதான் யாரையோ வச்சி பொம்மப்படம் எடுத்திருக்காய்ங்க” என்றெல்லாம் சொன்னார்கள்.. இந்தப் படம் அப்படிப் பேசியவர்களுக்கு எதிராக ரஜினி கொடுத்திருக்கும் செயல்முறை விளக்கம்.. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பியதும், “அந்த ஆள் அவ்வளவு தான், நடக்கக்கூட முடியாது” என்று பேசினார்கள்.. அடுத்தப் பொதுக்கூட்டத்தில், கரூர் என்று நினைக்கிறேன், மனுசன் விறுவிறுவென்று யார் உதவியும் இல்லாமல் படிகளில் துள்ளி ஏறி மேடைக்கு வந்தார்.. மொத்தத் தமிழ்நாடும் அன்று சந்தோசத்தில் அலறியது.. கிட்டத்தட்ட அதே மாதிரி தான், ”ஓ நண்பா” பாடலில் ரஜினி காட்டியிருக்கும் அந்த வேகம், நடனம், துள்ளல் எல்லாம்.. “தக்காளி மூனு மாசம் ஆஸ்பத்திரில படுத்துகெடந்து, ‘கண்ணா எப்படி இருக்கீங்க?’ என்று நடுங்கிய குரலில் வாய்ஸ் டேப் ரிலீஸ் பண்ணுன ஆளாடா இது?” என்று ஒவ்வொருத்தனையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.. அந்த ஒரு பாடல் போதும் ரசிகன் கொடுத்த 250ரூபாய்க்கு.. அதற்கு மேல் வருபவை எல்லாம் போனஸ்..


படத்தில், தற்கால ரஜினி செய்யும் ஸ்டைல், சேட்டைகள், அலப்பறைகள், முகபாவனைகள் எல்லாம், ‘தலைவர் இன்னும் ஃபார்மில் இருக்கிறார்’ என்று ஒவ்வொரு ரசிகனையும் மனதிற்குள் குதூகலம் அடையச்செய்பவை.. ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்ததும் ரசிகர்கள் லேசாக சோர்வாக ஆரம்பிக்கிறார்கள், ஆனால் குடும்பம் குட்டியோடு வந்தவன், அதன் பின் தான் படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறான்.. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஃப்ளாஷ்பேக்கில் ரஜினியின் ஹீரோயிஸமோ, பன்ச் டயலாக்கோ, சேட்டையோ, ஸ்டைலோ எதுவும் இருக்காது.. மனுசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீராப்பாய் நடந்து வருவதும், ராஜாவாய் கம்பீரம் காட்டுவதும், அணை கட்டுவதற்காக அனைத்தையும் இழப்பதும், பின் அவருக்கு ஏற்படும் முடிவும் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பது டவுட் தான்.. ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான் பெண்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் இந்தப் படத்தின் பக்கம் இழுத்து வரப்போகின்றன.. ஒரு குழாய் மைக்கை கையில் வைத்துக்கொண்டு, “உன் உடம்புல இந்தியனோட ரெத்தம் ஓடுனா வாடா” என்று சொல்கிற காட்சி மாஸ் & கிளாஸ்.. இந்த மாதிரி சின்னச்சின்ன விசயங்களில் தான் ரசிகர்களுக்கான ரஜினி தெரிகிறார்..


முக்கால்வாசிப்படம் அணை கட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது.. இரண்டாம் பாதி மெதுவாகச் சென்றாலும் நிறைவாய் இருக்கிறது.. ஒரு படத்தின் கதை மெதுவாய் நகர்ந்தாலும் போர் அடிக்கக் கூடாது.. இரண்டாம் பாதி அப்படித்தான், நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் விளக்கிக்கொண்டிருப்பார்கள்.. மேதாவி சினிமா ஞானிகளுக்கு அதெல்லாம் போர் அடிக்கலாம்.. எனக்கு இரண்டாம் பாதி தான் மிகவும் பிடித்திருந்தது.. கதையின் முக்கியத்துவமே அந்தக் காட்சிகள் தானே? அதை அப்படிச் சொன்னால் தானே அழகு? சும்மா, ரெண்டு சவால், நாலு ஃபைட்டு என்று எடுத்தால் இப்போது நடிக்கும் மற்றவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிக்கும் “இந்தியனே வா” பாடல் அங்கங்கு வந்து அணை கட்டுவதை படத்துடன் அழகாகக் காட்டுகிறது.. இந்த இடத்தில் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.. இரண்டு டூயட், ஒரு இண்ட்ரோ சாங்க் மட்டும் தான் படத்தில்.. மற்றவை எல்லாம் கதையின் பின்னணியில் வருபவை.. அந்த இரண்டு டூயட்டும் அழகாக எடுத்திருக்கிறார்கள்..  



படத்தில் இரண்டு ஹீரோயின் என்றாலும், என் பார்வை முழுவதும் அனுஷ்கா மீது தான்.. சோனாக்‌ஷி சின்காவை விட இவருக்குக் காட்சிகள் குறைவு என்றாலும், அந்த ஒரு சில காட்சிகளிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார்.. நகை திருடும் காட்சியில் கேபினுக்குள் ரஜினிக்கு அவ்வளவு அருகில், அவருக்கு ஈடாக சரி சமமாய் அசால்ட்டாக நடித்திருப்பதற்காகவே அனுஷ் செல்லத்திற்கு என் கிஸ்சஸ்.. சோனாக்‌ஷி சின்ஹா வழக்கமான கிராமத்தின் நல்ல, அப்பாவி, கொஞ்சம் விபரமான & பணக்கார ஹீரோவை லவ்வும் பொண்ணு.. தலைவருக்கும் நம்மள மாதிரி தான் டேஸ்ட் போல.. கொஞ்சம் கொழுக் மொழுக்குனு தான் அவர் படங்களில் ஹீரோயின் இருப்பார்கள், சிவாஜி & எந்திரன் விதிவிலக்கு.. இதிலும் அப்படித்தான் இரண்டு கொழுக் மொழுக் ஹீரோயின்கள்.. ரெண்டு ஹீரோயின்களும் லட்டு மாதிரி இன்னும் அழகாக இருக்கிறார்கள் பாடல்களில்.. ரஜினி படம் என்றாலே கவர்ச்சி கம்மியாக இருக்க வேண்டும் என்பது இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது..


சந்தானத்தின் கவுன்ட்டர் டயலாக்குகள் & உவமைகள் எல்லாம் சூப்பர்.. இந்த ஆளு எங்க இருந்து தான் இது மாதிரி உவமைகளை எல்லாம் பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. கடைசிக் காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் வரும் போது, “இவர் பேரு தான் finishing குமாரு” என்று அவரையும் கலாய்க்கத் தவறவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இருக்கும் அந்த வழக்கமான “ஊர்ப் பெரிய மனுஷ, பெரிய குடும்ப கும்பல்” இந்தப் படத்திலும் உண்டு.. அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு டயலாக் என்று சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு சோசியலிசம் போற்றப்பட்டிருக்கிறது,.. அந்த பிரிட்டீஷ் வில்லனின் பொண்டாட்டி மாதிரி இந்திய வைஸ்ராய்களுக்கெல்லாம் பொண்டாட்டிகள் அமைந்திருந்தால் இந்திய சுதந்திரம் மிக எளிதாய் கிடைத்திருக்கும்.. ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் மட்டும் தான் எடுபடவில்லை.. 


பாடல்கள் சூப்பர்.. பின்னணி இசை, படமே அடக்கி வாசிக்கப்பட்டிருப்பதால் அதுவும் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது.. ரத்னவேலுவின் உழைப்பு பல காட்சிகளில் தெரிகிறது.. கண்ணை உறுத்தாமல் பல நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.. ஹீரோயிச வசனங்கள் எங்குமே இல்லாமல், தத்துவம் & சில தேசப்பற்று வசனங்கள் இருப்பது ரஜினி படத்தில் பெரிய வித்தியாசம்.. வசனங்களில் லேசான அரசியல் வாடை இருந்தாலும், ரஜினி அதற்குப் பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.. ஷங்கரின் பிரமாண்டம் எல்லாம் வருடக்கணக்கில் நேரம் எடுத்தால், கே.எஸ்.ரவிக்குமாரின் பிரமாண்டம் நாள் கணக்கில் மட்டுமே நேரத்தை எடுக்கிறது.. மனுசன் மிலிட்டரியில் பெரிய ஆஃபிசராக ஆகியிருக்க வேண்டியவர்.. தப்பித்தவறி சினிமாவிற்குள் வந்துவிட்டார் போல.. இவ்வளவு பெரிய, பிரமாண்டமான படத்தை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எடுத்திருப்பதற்காகவே அவருக்குப் பெரிய சபாஷ் போட வேண்டும்.. பிரமாண்ட அணை கட்டிய லிங்கேஷ்வரனுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டியவர் இந்த பிரமாண்டமான படத்தை ஆறே மாதத்தில் கொடுத்த நம் finishing குமார்..


இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள்.. ரஜினியைக் கட்டி வைத்து அடிக்கும் போதோ, அல்லது அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிறகோ ஒரு சோகப்பாட்டைப் போட வேண்டும், நாம் தியேட்டரில் தலைவருக்காகக் கதறி அழ வேண்டும் என்றெல்லாம் இன்னும் எதிர்பார்க்காதீர்கள்.. பன்ச் டயலாக் பேசிக்கொண்டும், பறந்து பறந்து வில்லன்களை அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.. இப்போதெல்லாம் இரண்டாவது படத்திலேயே பக்கிகள் பன்ச் டயலாக் எல்லாம் பேசுகிறார்கள்.. பன்ச் டயலாக்கிற்கான மதிப்பே போய்விட்டது அவர்களால்.. இன்னமும் தலைவர் அதையெல்லாம் பேசுவது அவர் கௌரவத்திற்கும் மாஸிற்கும் அழகல்ல.. அதனால் அவர் இப்போது ஒரு நீட்டான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.. மக்களின் ரசனையும் மாறிவிட்டது.. இன்னமும் அழுகாச்சி செண்டிமெண்ட், பன்ச் டயலாக், விஷ்க் விஷ்க் சவுண்ட், 20 பேரை அடிப்பதெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.. தனக்கு இருக்கும் பிம்பத்தை உடைத்துத் தானும் நல்ல கதை இருக்கும் படங்களில் நடிப்பேன் எனத் தலைவர் எந்திரனைத் தொடர்ந்து இதிலும் காட்டியிருக்கிறார்.. அவரே மாறிவிட்ட போது நாம் இன்னமும் படையப்பா, பாட்ஷா மாதிரி 20 வருடங்கள் ஏன் பின் தங்கி இருக்க வேண்டும்? நாமும் இந்த மாற்றத்தைப் பின் தொடர்வோம்.. ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா????



மொத்தத்தில், ஒரு பெரிய கண்டத்தில் இருந்து மீண்டு வந்து, “நான் இன்னமும் அதே வேகமும் துள்ளலும் இருக்கும் பழைய ரஜினி தான்” என்று நிரூபித்திருப்பதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.. அவர்கள் கொண்டாடத் தயங்கினாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப் படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மூன்று மணிநேரம் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை ரசித்து விட்டு வாருங்கள்.. ரஜினி படத்தில் ரஜினியைத் தவிர வேறு என்ன இருந்தால் நமக்கென்ன, இல்லாவிட்டால் நமக்கென்ன? மொத்தத்தில், லிங்கா- எங்க தலைவர் வந்துட்டார்யா கிங்கா, பவர்ஃபுல்லா..

குரு - சினிமா விமர்சனம்..

Thursday, July 31, 2014

மணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயதில் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைபெறும். அங்கு வரும் கிருஷ்ண தேவராயருக்கு அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. எந்த ஓவியமும் முழுமை பெறாமல் அங்கங்கு தீட்டாமல் விடப்பட்டிருக்கும்.. பார்வையாளர்கள் அதை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக்கொள்ள வேண்டும், அல்லது தாங்களாக அந்த ஓவியங்களை உருவகித்துக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அந்த ஓவியங்களை ஆஹா ஓஹோ என்றுப் புகழும் போது மன்னனுக்கு மட்டும் அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஓவியர்கள் மீது டென்சன் ஆகி ஏதோ தண்டனை எல்லாம் கொடுத்து, பின் as usual நம்ம தெனாலி ராமன் வந்து ஏதேதோ செய்து  மன்னனைத் திருத்துவார்.. 



நம்ம மணிரத்னம் படம் பார்க்கும் போது ஏன் இந்தக்கதை ஞாபகம் வருமென்றால், அவரின் படம் கதையின் முக்கியமான விசயங்களை, சம்பவங்களை மட்டும் தொட்டுவிட்டுப் போய்விடும்.. பல விசயங்களை நாமாகத்தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும், ‘இது தான் நடந்திருக்கும்’ என்று. அவர் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு விசயமாக விவரித்துக்கொண்டோ, விளக்கிக்கொண்டோ இருக்க மாட்டார்.. பொதுவாகவே அவரின் படங்கள் பார்ட் பார்ட்டான காட்சிகளை தொகுத்துப் பார்ப்பது போலவே இருக்கும்.. ஒரு வேளை தனி காமெடி டிராக் இல்லாததால் கூட அப்படித்தோன்றலாம்.. நாயகன், தளபதி, பம்பாய் என அவரின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2007ல் வெளி வந்த அவரின் ‘குரு’ படமும் இதே வகையறா தான்.. இந்தப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பல முறை எழுதியிருந்தாலும் ப்ளாக்கில் ஒரு பதிவாக எழுத ரொம்ப நாள் ஆசை.. இப்போது தான் நிறைவேறுகிறது..



ஒரு கிராமத்தில் சாதாரண ஸ்கூல் வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்த ஒருத்தன், வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறி கொண்டு, தன் தகப்பனின் எதிர்ப்பையும் மீறி வியாபாரம் ஆரம்பித்து, சகப்போட்டியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சட்டம் என அனைத்தையும் மீறி இந்தியாவின் business icon ஆக வளர்ந்து, தன் கனவை நனவாக்குவதே “குரு”.. கேட்பதற்கு மிகச்சாதாரணமான விக்ரமன் பாணி, மசாலாக் கதை போலத்தான் இருக்கும்.. ஆனால் அதை மணிரத்னம் கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே க்ளாசிக்.. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இந்தப்படத்தில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் அது பாத்திரப்படைப்பும், வசனமும், இசையும் தான்.. ஒவ்வொரு பாத்திரமும் மிக மிக நேர்த்தியாக அதற்கென்று ஒரு இலக்கணத்துடன் தான் இருக்கும். குருபாயில் இருந்து ஆரம்பித்து இரண்டு நிமிடம் மட்டுமே வரும் அவரின் செவிட்டு மாமனார் வரை அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம். 



அதுவும் வியாபாரம் மட்டுமே உயிர், லாபம் மட்டுமே குறிக்கோள், வெற்றி மட்டுமே இலக்கு என்று ஓடும் ஒரு நாயகனை அவ்வளவு அற்புதமாக படைத்திருப்பார் மணிரத்னம்.. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் அபிஷேக் பச்சன்.. ஆரம்பக் காட்சிகளில் பம்பாய் மார்க்கெட்டில் துணி டிரேடிங் வியாபாரத்திற்கு மெம்பராவதற்காக ஒருவரிடம் சிபாரிசிற்குப் போய் நிற்பார் அபிஷேக். அந்த ஆள் கோல்ஃப் கிரவுண்டில் இருப்பான்.. “நீ இந்த பந்தை அந்த குழிக்குள்ள போடு, லெட்டர் தரேன்” என்பான்.. “பந்து பொந்துக்குள்ள விழுகணும், அவ்வளவு தான?” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க?” என்பார்.. குருவிற்கு சட்டம், ரூல்ஸ் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் அவனுக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை.. அவனுக்குத்தேவை இலக்கை அடைவது மட்டுமே, என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் தான் இந்தக்காட்சி.. பந்து குழிக்குள் விழ வேண்டும், கையாலோ, மட்டையாலோ அல்லது வேறு எதாலோ, ஆனால் பந்து குழிக்குள் விழ வேண்டும் அவ்வளவு தான்.. இது தான் குரு.. 





அதே போல் தன்னை மட்டமாக நினைப்பவர்களை, குறைத்து மதிப்பிடுபவர்களை, தன்னைப்பற்றி தவறாகப் பேசுபவர்களை அவன் கண்டுகொள்ள மாட்டான்.. ‘உன்னப்பத்தி தப்பா பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. அவன் வாயை அடைக்கணும்னா, நீ அவன கண்டுக்காம இன்னும் வேகமா உழைச்சி முன்னேறணும்’ என்பான்.. தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிடும் பத்திரிகைக்கு தான் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பான்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்பான்.. சட்டம், ரூல்ஸ் என எதையும் மதிக்கவில்லை என்றாலும் தன் ஷேர் ஹோல்டர்களை அவன் எப்போதும் கைவிடத் தயாராக இல்லை.. அவன் முன்னேறும் போது அவன் ஷேர் ஹோல்டர்களும் முன்னேற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.. இப்படி எந்நேரமும் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், லாபம் என்று திரிபவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு நிகராக இருக்க வேண்டுமே?

ஐஸ்வர்யா ராய் அப்படி ஒரு மனைவியாக இந்தப்படத்தில் வாழ்ந்திருப்பார்.. குருவுக்கு சரி சமமாகப் பேசுவதிலும் சரி கஷ்ட நேரங்களில் துணை இருப்பதிலும் சரி, அவரின் வியாபார ஆசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் சரி, ஒரு perfect match ஆக இருப்பார்கள் இருவரும்.. வேறு ஒருவனைக் காதலித்து அவனை மணக்க முடியாத சூழலில், ஒரு கட்டாயத்தில் தான் அபிஷேக்கை அவர் மணப்பார்.. திருமணம் முடிந்தவுடனே வியாபாரத்தைப் பார்க்க (ஆமா, புதுப்பொண்டாட்டிய விட அவருக்கு வியாபாரம் தான் பெருசு) பம்பாய் கிளம்புவார் அபிஷேக்.. அப்போது ரயில் நிலையத்தில் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் கவிதை.. பொதுவாகவே ஐஸ்வரயா ராய் என்றால் அவர் ஒருவர் தான் அழகு என்று பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்.. எனக்கு அவரைப் பிடித்த ஒரே படம் என்றால் அது இது தான்.. அவ்வளவு அழகாக இருப்பார்.. ஏனென்றால் அந்தப் பாத்திரம் அப்படி..




தன் கணவன், தந்தை போல் மதிக்கும் பத்திரிகை ஜாம்பவானிடம் கூட பதிலுக்குப் பதில் பேசக்கூடிய புத்திசாலி அவள்.. கணவனுக்கு பக்கவாதம் வந்தாலும் துணை நின்று அவனை ஜெயிக்க வைப்பவள், “பிசினஸ்ல மட்டும் இல்லைங்க கஷ்டத்துலயும் கூட நான் அவரோட பார்ட்னர் தான்” என்று கோர்ட்டில் தைரியமாகப் பேசுபவள் அவள்.. ஐஸ்வர்யா ராய் வேறு எந்தப்படத்திலும் இந்த அளவிற்கு நடித்திருப்பாரா என்றுத் தெரியவில்லை... கடைசிக் காட்சியில் கோர்ட்டில் அபிஷேக் அனைத்தையும் பேசி முடிக்கும் போது, அவரை பெருமையும், சந்தோஷமும், அழுகையும் கலந்த மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், செம காட்சி அது.. அந்த ஒரு காட்சி போதும் அவரின் நடிப்பைக் கூற..

அபிஷேக், ஐஸ்வர்யாவிற்கு அடுத்த முக்கியமான பாத்திரங்கள் என்றால் பத்திரிகையாளராக வரும் மிதுன் சக்ரபர்த்தியும், மாதவனும் தான்.. ஆரம்பத்தில் அபிஷேக்கின் தந்தை போல் பாசம் காட்டும் மிதுனே ஒரு கட்டத்தில் அபிஷேக்கின் சட்ட மீறல்களைக் கண்டு அவருக்கு எதிராகத் திரும்புகிறார். தன் பத்திரிகையில் அபிஷேக்கின் முகத்திரையை கிழிக்க அவருக்கு உதவுபவர் தான் மாதவன்.. இது அப்படியே அம்பானியின் வாழ்க்கையில் நடந்த விசயம்.. அம்பானிக்கு ஆரம்ப காலத்தில் "Indian Express”ன் ராம்நாத் கோயென்கா (Ramnath Goenka) மிகுந்த ஆதரவாக, ஒரு குடும்ப நண்பர் போல இருந்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் விரிசல் வந்ததால் அவர் எஸ்.குருமூர்த்தியின் (மாதவன் பாத்திரம்) துணை கொண்டு அம்பானியின் லஞ்சம், சட்ட மீறல்கள், என ஒவ்வொன்றாக கிழித்துத்தொங்க விட்டார்.. எஸ்.குருமூர்த்தி இன்றும் பல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் பற்றியெல்லாம் விரிவாக, practicalஆக எழுதும் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு தமிழரும் கூட..





இந்தப்படம் முழுக்க முழுக்க குருநாத் தேசிகன் @ குருபாய் என்னும் ஒரு வியாபார ஆசை கொண்ட மனிதனைச்சுற்றி நகர்வது மட்டும் தான்.. மேம்போக்காக பார்த்தால் ஒரு வறட்சியான, சுரத்தே இல்லாதக் கதை போல் தெரியும்.. ஆனால் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத ஒரு மாஸான ஹீரோயிசப்படம் என்று இதை தாராளமாகச்சொல்லலாம்.. ஏனென்றால் குருபாய் என்கிற பாத்திரம் நம் மனதில் அப்படி ஒரு பிம்பத்தை விதைக்கும்.. ஹீரோயிசப்படம் என்றால் சண்டைக்காட்சி அவசியம்.. ஆனால் சண்டைக்காட்சிகளை விட விறுவிறுப்பான வசனமும், பின்னணி இசையும்  இந்தப்படத்திற்கு அமைந்துவிட்டது.. 

குருபாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது “இல்லைங்கிற வார்த்தை என் காதுல விழாதே?”.. ஒரு இடத்தில் அவரின் நண்பர் சொல்வார், “நீ வியாபாரத்துல ரொம்ப வேகமா ஓடுற”.. அதற்கு குருபாய், “போடா நான் இதை விட வேகமா பறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்பார்.. மிதுன்சக்கரபர்த்தி குருபாயிடம் ஆரம்பக்காட்சியில் சொல்வார், “ஒரே நேரத்துல பணிவையும் புத்திசாலித்தனத்தையும் யாரும் எதிர்பாக்காத மாதிரி உபயோக்கிற திறமை உனக்கு இருக்கு” என்று.. உண்மை தான்.. தனக்கு ஒவ்வொரு முறை பிரச்சனைகள் வரும் போதும், பணிவாகப் போக வேண்டிய இடத்தில் பணிவாகவும், அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி காட்டவும் செய்வார்.. கலெக்டர் வீட்டில் மொத்த துணி பண்டல்களையும் இறக்கி வைக்கும் காட்சி அதற்கு நல்ல உதாரணம் (நாயகனை ஞாபகப்படுத்தும் காட்சி அது).. “குருநாத் கூட மோதணும்னா நீயும் குருநாத்தா மாறணும்.. ஆனா குருநாத் என்னைக்கும் ஒருத்தன் தான்.. அது நான் மட்டும் தான்” போன்ற வசனங்கள் எல்லாம் அந்த பாத்திரத்தை பில்ட்-அப் செய்வதில் பெரும் பங்கு கொண்டவை..







இந்தப்படத்தில் மிக மிக முக்கியமான, படத்தின் ஆணிவேரான காட்சி என்றால் அது க்ளைமேக்ஸ் கோர்ட் காட்சி தான்.. குருபாய் செய்த ஊழல்களுக்கு கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கும்.. அது வரை விசாரணையின் போதெல்லாம் வாயே திறக்காத குருபாய் தனக்குப் பேச வாய்ப்பு வேண்டும் என்பார்.. வெறும் 5நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.. அந்த 5 நிமிடத்தில் அவர் பேசும் பேச்சும், அபிஷேக்கின் நடிப்பும், அந்த வசனமும், இசையும் மிரட்டி எடுத்துவிடும்.. ’அப்படி என்னப்பா பெருசா தப்பு பண்ணிட்டான் இந்த ஆளு?’ என அவன் மீது குற்றம் சுமத்தியவர்களே சொல்லும் அளவிற்கு ஸ்ட்ராங்கான வசனம் அது.. கீழே இருக்கும் சுட்டியில் அந்தக்காட்சியைப் பாருங்கள்.. 



ஏ.ஆர்.ரெஹ்மான், வழக்கம் போல மணிரத்னம் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பார்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் இந்தப்படத்திற்கு.. ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தும் செம.. ஒரே கனா, ஆருயிரே மன்னிப்பாயா இரண்டும் என்னை மிக மிகக்கவர்ந்த பாடல்கள்.. இந்தப்படத்திற்காக IIFA மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ரெஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழில் வசனங்களை அழகம்பெருமாள் எழுதியிருந்தார்.. மிக மிகக்கூர்மையான வசனங்கள்.. “5நிமிஷம் டைம் குடுத்தீங்கல்ல எனக்கு? இப்ப நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன்.. 30 செகண்ட் ப்ராஃபிட்.. இது தாங்க பிசினஸ்” - மொத்தக் கதையையும் இந்த ஒரு வசனம் சொல்லி முடித்துவிடும்.. 

படத்தில் எனக்குத்தெரிந்த ஒரே நெருடலான விசயம், குஜராத்திய பாரம்பரிய உடை அணிந்து வரும் ஆட்களை, குஜராத் பக்கம் நடக்கும் கதையை (அம்பானியின் சொந்த ஊர் குஜராத் தான்) தமிழிலும் அப்படியேக் காட்டியிருக்கலாம்.. தேவையில்லாமல் இலஞ்சி என்றுக் கூறி, திருநெல்வேலிப் பேச்சு வழக்கில் அனைவரையும் பேச விட்டது தான் கொஞ்சம் இடித்தது.. இன்னொரு விசயம், ஓரளவாவது பிசினஸ் பற்றித்தெரியாத பாமர மக்களுக்கு இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும், அல்லது நாமாகவே புரிந்து கொள்வோம் என நினைத்து சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விசயங்கள் புரியாது.. மற்றபடி படத்தில் எதுவும் பெரிய தவறாகவோ குறையாகவோத் தெரியவில்லை எனக்கு..

இந்தப்படத்தில் காட்டியிருப்பதைப் போல் ஒரு மனிதன் நிஜமாகவே இப்படியெல்லாம் அரசை ஏமாற்றி, அதன் ஓட்டைகளை பயன்படுத்தி இந்தியாவின் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் அந்த மனிதன் மீது நமக்கு எவ்வளவு கோபம் வரும்? அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும்? ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி? ”அவன் திருந்த வேண்டிய அவசியமே இல்லை.. அவன் எப்பவும் போல வியாபாரம் செய்தான்” என்று தான் படம் முடிகிறது.. நாமும் சந்தோசமாக ரசிக்கிறோம்.. எதனால் இந்த முரண்?

இந்த இடத்தில் தான் எனக்கு இன்னொரு முக்கிய விசயம் ஞாபகம் வருகிறது.. ”சதுரங்க வேட்டை”யை லேசாக இந்தப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.. அதிலும் நாயகன் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றத்தான் செய்கிறான்.. ஆனால் அந்தப்படத்தில் அவன் திருந்துவது போல் முடித்திருப்பார்களே, ஏன்? சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்..  அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள்? அதனால் அவன் திருந்த வேண்டியக் கட்டாயம் அந்தக்கதையில்.. நாமும் அது தான் சரியான முடிவு என்றோம்..





ஆனால் “குரு”வில் அவன் ஏமாற்றுவது அரசாங்கத்தை.. அதுவும் எப்படி?மக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது, அவனும் எப்பவும் போல் சம்பாதித்துக்கொண்டே தான் இருப்பான், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன்.... ஆக, செய்யும் தவறை பெரிதாக செய்தால் பாமரனில் இருந்து பட்டத்தில் இருப்பவன் வரை நமக்கு உதவுவான் என்பது தான் இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது நமக்கு கிடைக்கும் moral of the stories.. :D

ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..


மக்களை மக்காக்கும் தி.மு.க. விளம்பரங்கள்...

Friday, April 18, 2014

கொஞ்ச நாளாவே எங்கும், எதிலும் அரசியல் தான்.. டீக்கடை, ஃபேஸ்புக், பஸ், தியேட்டர் க்யூ, அட அவ்வளவு ஏங்க சிக்னல்ல நிக்கிற முப்பது செகண்டுல கூட அரசியல் தான் பேசுறாங்க மக்கள்.. சினிமா, கிரிக்கெட் மாதிரி நம்ம மக்களுக்கு அரசியலும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் தான்.. தனக்கு பிடித்த நடிகரின் படம் ஹிட் ஆனால், தனக்கு பிடித்த ஐபிஎல் அணி வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதே அளவிற்கு, தான் ஓட்டுப்போட்ட கட்சி வெற்றி பெற்றால் சந்தோசப்படுபவன் தான் என் தமிழன். கிரிக்கெட், சினிமாவால் நம் குடிமகனுக்கு என்ன பயன் கிடைத்ததோ அதை விட அதிகமாய் அரசியலால் பயன் கிடைக்கவில்லை என்று நிச்சயமாய் சொல்லலாம். ஆனாலும் நமக்கு அரசியல் பேசுவது, அரசியல் சண்டை போடுவது, அரசியலால் குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள் கட்டி உருளுவது போன்றவை மிகவும் பிடிக்கும்.

இந்த அரசியல் கட்சிகளும், ‘ஜெயித்தால் நான் இதை செய்வேன்’ என்று சொல்வதை விட, ‘என்னை விட அவன் தான் பெரிய கேப்மாறி’ என்று சொல்வதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றன, ஆனந்தப்படுகின்றன..  சமீபத்தில் கூட ஒரு பிரச்சாரத்தில் ஒருவர், “ஊழலில் எங்களையே மிஞ்சி விடுவார்கள் போலேயே அவர்கள்” என்று வாய் தவறி ”உண்மை”யை உளறிவிட்டதாக கேள்விப்பட்டேன்.. தாங்கள் என்ன தான் மோசமானவர்களாக இருந்தாலும், எவ்வளவு தான் தவறுகள், அட்டூழியங்கள் செய்திருந்தாலும் தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்பகிற நப்பாசையும் நம்பிக்கையும் தான் தெரிகிறது நம் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்தில். 

ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது இதுவரை. தேர்தல் கமிஷன், இந்தி பேசும் சப்பாத்தி மாவு முகமுடைய போலீஸ்காரர்களை இங்கு அனுப்பி சைக்கிளில் செல்லும் கொய்யாக்காய் வியாபாரியை கூட விடாமல் சோதனை செய்கிறார்கள். அங்கிங்கு பணப்பட்டுவாடா நடந்தாலும், கட்சிகளால் எதிர்பார்த்த அளவிற்கு பணத்தை கொடுக்க முடியவில்லை என்பது செவிவழிச்செய்தி. ஆனாலும் கட்சிகள் எல்லாம் ஓட்டுக்கு காசு கொடுக்க கோடி கோடியாக பணத்தை ரெடி பண்ணி வைத்திருப்பார்களே? அதை என்ன செய்வது? எப்படியாவது அதையெல்லாம் ஓட்டாய் மாற்ற வேண்டுமே? இந்த சூழலில் அவர்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்தமாய் வந்த ஞானோதயம் தான் டிவியில் விளம்பரம் செய்வது. முன்பும் கட்சிகள் டிவியில் விளம்பரம் செய்தன. ஆனால் அந்த பழைய விளம்பரங்கள் எல்லாம், ”வளமான பாரதத்திற்கு வாக்களியுங்கள் வாக்மேன் சின்னத்திற்கு” போன்ற எதுகை மோனை வார்த்தைகளைக்கொண்டிருக்கும். அதன் கட்சித்தலைவர் நன்றாக குளித்து பவுடர் எல்லாம் போட்டு நம்மை நோக்கி கை கூப்பி சிரித்துக்கொண்டிருப்பார். மொத்தமே 10 செகண்டிற்குள் அந்த விளம்பரங்கள் முடிந்துவிடும்..

இப்போது வரும் கட்சி விளம்பரங்கள் எல்லாம் கதை, திரைக்கதை, பின்னணி இசை, அருமையான நடிகர்கள் என ஒரு மினி சினிமா ரேஞ்சிற்கு இருக்கிறது. தி.மு.க., அள்ளி வீசும் பொய்களும், காங்கிரஸின் காமெடியும், ஜெயலலிதாவின் சாந்த சொரூபமான அரிய முகபாவமும், வைகோவின் as usual மெகா சீரியல் பாணி அழுகாச்சியும் (அவை உண்மையாகவே இருந்தாலும் பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறது), என அனைத்துக் கட்சி விளம்பரங்களும் பெரும்பாலும் எல்லா செய்தி சேனல்களையும் ஆக்கிரமித்து நம் உயிரை எடுக்கின்றன.. ”இந்த கருமத்துக்கு ஓட்டுக்கு காசே கொடுத்திருக்கலாம், தயவு செய்து விளம்பரங்களை நிறுத்த சொல்லுங்க”னு தேர்தல் ஆணையத்துக்கு மனு போடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருக்கேன்.. இந்த விளம்பரத்தை எல்லாம் பாத்தா ஓட்டுப்போடணும்னு நெனைக்கிறவன் கூட போட மாட்டான்.. எல்லாம் தெலுங்கு படம் மாதிரி நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு. இதில் என்னை மிக மிக வெறுப்பேற்றுபவை தி.மு.க.வின் விளம்பரங்கள் தான்.. அவர்கள் மக்களை எவ்வளவு மட்டமாக, அறிவு கெட்டவர்களாக நினைத்தால் இப்படியெல்லாம் எடுப்பார்கள்? கொஞ்சம் கீழே இருக்கும் சில உதாரணங்களைப் பாருங்கள்.

விளம்பரம் 1:

ஒரு பையன் புக்கை திறக்கிறான்.. அதுவரை எரிந்து கொண்டிருந்த பல்பு பட்டென்று அணைந்துவிடுகிறது - பவர் கட்.. “அய்யோ கரெண்ட்டு போயிருச்சே”னு தலைய பிடிச்சிக்கிட்டு புலம்புறான்.. அவன் அப்பா, அக்கா, தங்கை, அம்மா என அனைவரும் மின்வெட்டால் புலம்புகிறார்கள்.. பின், கடைசியில ஒரு வெண்தாடி கோட், சூட், டை, ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (பெரிய வல்லுநராமாம்), ஒரு சேரில் அமர்ந்து கொண்டு, இன்றைய ஆட்சியில் கரெண்ட் கட்டுக்கான காரணங்களையும், இன்றைய ஆட்சியின் அவலங்களையும் அடுக்குகிறார்.. அவர் அடுக்கியதும், “மாற்றத்திற்கு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று அந்த விளம்பரம் முடிகிறது..

இந்த விளம்பரத்தை எப்படி கூச்ச நாச்சமே இல்லாமல் தி.மு.க.காரர்கள் எடுத்து ஒளிபரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. மின்வெட்டுக்கு அடித்தளமே அவர்கள் தானே? தி.மு.க ஆட்சியில் பவர் கட் 10ல் இருந்து 16 மணி நேரம் வரைக்கும் ஆனதற்கு தானே நாம் இந்தம்மாவிடம் ஆட்சியை கொடுத்தோம்?.. ”3 மாசத்துல மின்வெட்டே இருக்காது”ன்னு சொல்லிட்டு ஆட்சிக்கு வந்த இந்தம்மாவும் ஒன்னும் பண்ணலங்கிறது வேற விசயம்.. ஆனா மின்வெட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லங்கிற மாதிரி ஒரு விளம்பரம் எடுத்து ஓட்டு கேக்குறாங்க பாத்தீங்களா, இந்த மொள்ளமாறித்தனத்துக்கு தான் தி.மு.க.விற்கு விழுகிற ஓட்டும் விழுகாம போகுது.. மக்கள்னா ஒன்னுமே தெரியாத மக்காவே இருப்பாங்கன்னு இன்னமும் 1967 மாதிரியே நெனச்சிட்டு இருக்காங்க. பேசிப்பேசியே ஏமாற்றும் காலம் எல்லாம் முடிந்து விட்டது என்பதை தி.மு.க. உணர வேண்டும்.. மின்வெட்டில் அ.தி.மு.க.விற்கு என்ன பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு தி.மு.க.விற்கும் உண்டு. யோக்கியன் வேஷம் போடுவது எரிச்சலைத்தான் கொடுக்கும்..

விளம்பரம் 2:

ஒரு அக்கா சொல்லுது, “எங்க வீட்ல இப்பலாம் வரக்காப்பித்தான்.. பால் விக்கிற விலையில பால் வாங்க முடியுமா?” இன்னொரு அக்கா, அரிசி, பருப்பு எல்லாம் தி.மு.க., ஆட்சியில் என்ன விலை, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன விலை என்று விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்கிறது. இந்த விளம்பரத்திலும் முதல் விளம்பரத்தில் வந்த மாதிரி ஒரு ஆள் கோட், சூட்டெல்லாம் போட்டு வருகிறார்.. “மாற்றம் வேணும்னு தானே தி.மு.க.வை தூக்கி போட்டுட்டு, போன தேர்தல்ல அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்தீங்க, உங்களுக்கு நல்லா வேணும், அனுபவிங்க”ங்கிற மாதிரி டயலாக் பேசிட்டு கடைசியா நமக்கு ஆர்டர் போடுறார் ஒழுங்கா தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு..

முதலில் எனக்கு தோன்றிய விசயம், பொதுவாக தேர்தலில் தோற்றதும் கலைஞர் மக்களை கன்னாபின்னாவென்று ஏசுவார், சபிப்பார். இந்த விளம்பரம் சற்றும் அதற்கு குறைந்தது இல்லை.. ”எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நீங்கள் நல்லா அனுபவிங்க” என்று மக்களின் கஷ்டத்தை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் உள்ளது..

எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் விலை வாசியே ஏறாமல் இந்த உலகில் யாராவது ஆட்சி செய்ய முடியுமா? கலைஞர் ஆட்சியிலும் தான் விலைவாசி ஏறியது. விதவிதமான கலரில் பஸ்ஸை விட்டு, டிக்கெட் காசை இரு மடங்காக மறைமுகமாக ஏற்றினார். விலை உயர்வு என்பது யாராலும் மாற்ற முடியாதது. எனக்கு தெரிந்து கடந்த பல வருடங்களாக விலை மாறாத ரெண்டே பொருட்கள் ஹால்ஸ் மிட்டாயும், தீப்பெட்டியும் தான். விலை உயர்வுக்கு ஏற்ற மாதிரி ஒரு அரசாங்கம் தன் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே தோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை.. இதில் அ.தி.மு.க. மட்டும் தான் பெரிய வில்லன், தான் தான் தமிழகத்தை காக்க இருக்கும் இரட்சகர் என்பது போல் பேசுவதெல்லாம் ஓவர் கடுப்படிக்கிறது..

சரி, அ.தி.மு.க அரசு தான் பால், பஸ், கரெண்ட், அரிசி, பருப்பு விலைவாசி உயர்வுக்கெல்லாம் காரணம் என்றே வைத்துக்கொள்வோம்.. 1999ல் இருந்து (ஏன்? இந்திரா காலத்தில் இருந்து என்று சொன்னால் கூட சரியாகத்தான் இருக்கும்), இந்த 2014 வரை மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த தி.மு.க., பெட்ரோல், டீசல், காஸ், தங்கம் போன்ற பொருட்களின் விலை உயர்வின் போதெல்லாம் என்ன செய்தது? நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு தன் ஆதரவை தொடர்ந்து கொண்டு தானே இருந்தது? இன்று நம் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுவதை பார்த்து ஆற்றொன்னா துயரத்தில் மூழ்கும் தி.மு.க., எத்தனை முறை மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றிய போது தன் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கிறது? ‘கலைஞர் கண்டனம் செய்தாரே?’ என்று யாராவது சொன்னீர்கள் என்றால் கொலைவெறி ஆகிவிடுவேன்.. ஜெயலலிதா ‘கசப்பு மருந்து’ என்று சொன்னதற்கும், கலைஞர் கண்டனம் செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

விளம்பரம் 3:

”நாங்கெல்லாம் ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ். நாங்க யாருக்கு ஓட்டுப்போடுறது?”னு சில ஜீன்ஸ் டீசர்ட் ஆண்களும், ஃபேன்ஸி டாப்ஸ் போட்ட பெண்களும் தாங்களே கேள்வி கேட்டு தாங்களே பதில் சொல்லிக்கொள்கிறார்கள். “துணை நகரை கைவிட்டவருக்கா உங்கள் ஓட்டு?”, “புதிதாக பாலமே கட்டாதவருக்கா உங்கள் ஓட்டு?”, “மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தியவருக்கா உங்கள் ஓட்டு?” ஒரு வரிசையாக கேள்வி கேட்டுவிட்டு, “எங்கள் ஓட்டு தி.மு.க.விற்கு தான்” என முடிக்கிறார்கள்..

அந்த ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ் எல்லாம் இன்னும் சில கேள்விகளை கேட்டிருக்கலாம். “மத்தியில் ஒன்றாக சேர்ந்து கோடி கோடியாக ஊழல் செய்தவருக்கா உங்கள் ஓட்டு?”, “Breakfastக்கும், lunchக்கும் இடைப்பட்ட கேப்பில் சாகும் வரை உண்ணாவிரத டிராமா போட்டவருக்கா உங்கள் ஓட்டு?”, “தமிழ் நாட்டை வடக்கு தெற்கு என்று பிரித்து தன் மகன்களை சிற்றரசர்களாக மாற்றியவருக்கா உங்கள் ஓட்டு?’, “மான ரோசமே இல்லாமல் முந்தா நாள் பிரச்சாரத்தில் கூட ‘கையை கை விட மாட்டோம்’னு சொன்னவருக்கா உங்கள் ஓட்டு?”.. ஆனால் இப்படியெல்லாம் கேள்வி கேட்க அந்த ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ்க்கு அறிவு இல்லை போல.. பாவம், அவர்கள் சென்னையை தாண்டி யோசிக்க தெரியாத ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ் போல.. முதல் முறை ஓட்டுப்போடும் இளைஞர்களை இவ்வளவு மட்டமாக காட்டுவார்கள் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... மோடிக்கு ஓட்டுப்போட்டது போக மிச்சம் இருக்கும் ரெண்டரை சதவிகித முதல் முறை வாக்காளர்கள் தி.மு.க.விற்கு போடுவார்கள் என நினைத்திருந்தேன்.. ஆனால் இந்த விளம்பரம் பார்த்ததும் அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையுமே விவரமே தெரியாத முட்டாள்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்து ஓட்டு கேட்கிறார்கள்.

நான் மேலே சொன்ன மூன்று விளம்பரங்களிலும் இருக்கும் இன்னொரு முக்கியமான விசயம் இவர்கள் தாக்குவது ஜெயலலிதாவை மட்டுமே.. காங்கிரஸையோ, பி.ஜே.பி.யையோ கண்டுகொள்வதே இல்லை. ஜெயா அரசின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்கிறார்கள்.. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் தானே? ஏதோ சட்டசபை தேர்தல் போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டால் விலைவாசி எல்லாம் மாசக்கடைசி பேங்க் அக்கவுண்ட் மாதிரி ஜீரோ ஆயிரும் என்பது போலவும், தி.மு.க., 40க்கு 40 ஜெயித்து விட்டால் மே17ல் இருந்து 24 மணி நேரமும் கரெண்ட் வந்து விடும் என்பது போலவும், சென்னையில் தடைபட்ட பாலம், மெட்ரோ ரயில், துணை நகரம் எல்லாம் உடனே நடந்து விடுவது போலவும் அள்ளி விடுகிறார்கள். நம் மக்கள் சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாத கூமுட்டைகள் என தி.மு.க.காரர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை..

இதில் இன்னொரு மிகப்பெரிய காமெடி, மாநிலக்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே மத்தியில் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பது போல் தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் தி.மு.க., எப்படி விலைவாசியை குறைத்து, கரெண்ட்டை கொடுத்து, இன்னும் தன் விளம்பரத்தில் அள்ளி வீசிய பல திட்டங்களையும் செயல்படுத்தும்? இதே கலைஞர் தானே இந்திரா காலத்தில் இருந்து ”மத்திய அரசுடன் இணக்கமான கூட்டணி இருந்தால் தான் மாநிலத்தில் மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் வாங்கித்தர முடியும்?” என்று கூறி 2014 வரை மத்திய அரசுடன் ஒட்டிக்கொண்டார்? மாநிலத்திற்கு செய்தாரோ இல்லையோ, தன் குடும்பத்திற்கு மட்டும் அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டார்.. இன்று மத்தியில் யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லும் இவரால் விளம்பரங்களில் சொல்லப்பட்ட அத்தனையையும் மத்திய அரசின் உதவி இல்லாமல் எப்படி செய்ய முடியும்? அதில் 1% கூட இவர்களால் செய்து காட்ட முடியாது..

மக்கள், வரப்போகும் புது மத்திய அரசு தங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் இந்த தி.மு.க., அ.தி.மு.க., இரண்டையும் கண்டு கொள்ளாமல் பேசாமல் மத்தியில் ஆளப்போகும் கட்சிக்கே ஓட்டுப்போட்டு அவர்களை ஜெயிக்க வைக்கலாம்.. அது காங்கிரஸா, பி.ஜே.பி.யா என்று தேர்ந்தெடுப்பதில் தான் நம் புத்திசாலித்தனம் இருக்கிறது.. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லும் இந்த இரு திராவிட கட்சிகளையும் நம்பி, இருப்பதையும் இழப்பதை விட மத்தியில் வரப்போகும் கட்சிக்கு அட்லீஸ்ட் ஒரு 10 எம்.பி.யாவது தமிழகத்தில் இருந்து போனால் தான் நமக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்கும்..

அடுத்ததாக நம்ம தி.மு.க.விற்கு.. 1950களில் இருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பேசியே ஏமாற்றினீர்கள். காமராஜரை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினீர்கள். இன்று உங்கள் சுவர் விளபரத்திற்கு அவர் படத்தை பயன்படுத்துகிறீர்கள். எம்.ஜி.ஆரை இல்லாத வார்த்தை எல்லாம் கூறி துரோகி பட்டம் கொடுத்தீர்கள். ஆனால் இன்று அவரை புகழா விட்டால் ஓட்டு கிடைக்காது என்பதால் அவரையும் புகழ்கிறீர்கள்; கண்டும் காணாமல் சில போஸ்டர்களிலும் போட்டுக்கொள்கிறீர்கள். பேசிப்பேசிய இரண்டு தலைமுறைகளை ஏமாற்றி வீட்டீர்கள். இப்போது அடுத்த தலைமுறையை டிவி விளம்பரம் வழியாக ஏமாற்ற நினைக்கிறீர்கள். நம் மக்களை சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக, மின்வெட்டுக்கு அடிப்படையே நீங்கள் தான் என்பதை மறந்தவர்களாக, மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை மத்திய அரசு ஏற்றும் போதெல்லாம் பதவி சுகத்திற்கு அதனோடு ஒட்டி உறவாடினீர்கள் என்பதை தெரியாதவர்களாக இருப்பார்கள் என நீங்களாகவே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். 

மக்கள் இப்போதெல்லாம் 1967 போல் இல்லை. அதுவும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகமானதால் எல்லா தகவல்களும் உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன. தி.மு.க. தலைவர் நாளொரு பேச்சு, பொழுதொரு நிலைப்பாடு எடுத்ததெல்லாம் தினமும் ஃபேஸ்புக்கில் கழுவி ஊற்றப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.. இந்த சூழலில் மக்களை விபரம் தெரியாதவர்கள் போல் நினைத்துக்கொண்டு இப்படியா மொக்கைத்தனமாக விளம்பரங்கள் எடுக்க வேண்டும்? உங்களுக்கு கிடைக்கும் அற்ப ஓட்டுக்கள் கூட இல்லாமல் போய் விடப்போகிறது, ஜாக்கிரதை. ஃபேஸ்புக்கிலும், வலை உலகிலும், ஏன் எழுத்துலகிலும் கூட உயிரை மையாக வடித்து எழுதும் பல எழுத்தாளர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள்.. அவர்களிடம் நல்ல ஸ்க்ரிப்ட்டாக ரெடி பண்ணிக் கொடுக்கச்சொல்லி அடுத்த தேர்தலிலாவது உருப்படியாய் ஓட்டு கேளுங்கள்.. Better luck next time.. 

மரியாத ராமண்ணா (தெலுங்கு) - சினிமா விமர்சனம்..

Tuesday, April 8, 2014

இப்ப ஒரு ரெண்டு மூனு மாசமா நம்ம ஏர்டெல் புண்ணியவாளன் நெட் பேக்குக்கு வழக்கமா கொடுக்கிறத விட ரெண்டு ஜி.பி அதிகமா தரான்.. அதனால மாசம் ஒன்னோ ரெண்டோ படம் டவுன்லோடு பண்ணி பாத்துட்டு இருக்கேன்.. பிறமொழிப்படங்கள் மட்டும் தான் ஸ்ட்ரிக்ட்டாக.. இந்திப்படங்கள் எல்லாம் ஹாலிவுட்டுடன் போட்டிக்கு போய்விட்டதாலும், நான் இந்திப்படம் பார்க்க காரணமானவரும் ஹாலிவுட்டுக்கு போய்விட்டதாலும், என் தகுதிக்கு தெலுங்கும், மலையாளமும் தான் சரி என முடிவு செய்து கொண்டேன்.. உடனே, ’அப்படினா, இப்ப தெலுங்கு, மலையாளப்படம் எல்லாம் பாக்க யார் காரணமா இருக்காங்க?’னு குதர்க்கமான கேள்வி கேக்கிறவங்களுக்கு எல்லாம் கேப்டனின் பிரச்சார சிடி அனுப்பி வைக்கப்படும், ஜாக்கிரதை..

மலையாளத்தை விட தெலுங்குப்படங்கள் ஒரு விதத்தில் வசதி.. அவை எல்லாம் நம் தமிழ்ப்படங்கள் மாதிரி லாஜிக், ஹீரோவின் தகுதி தராதரம் எல்லாம் பார்க்காது.. ரெண்டரை மணிநேரம் பொழுதுபோக்கு. அவ்வளவு தான். ஏற்கனவே நான் பார்த்த தம்மு, தம்மாருகம் போன்றவை எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நன்றாக பொழுதுபோயின. அந்த வகையில் சமீபகாலமாக கப்பார் சிங், அத்தரின்டிக்கி டாரிடி, பாட்ஷா போன்ற ஆக்சன், ஃபேமிலி படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.. இந்த மாதம் என் ஃபேவரைட் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மரியாத ராமண்ணா (2010) பார்க்கலாம் என்று முடிவு செய்து நேற்று தான் டவுன்லோடு பண்ணி முடித்தேன்..



இந்த இடத்தில் நான் ராஜமௌலியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. இவர் ஷங்கர் பாதி, கே.எஸ்.ரவிக்குமார் பாதி கலந்து செய்த கலவை. 2001ல் இருந்து இதுவரை இவர் இயக்கிய படங்கள் மொத்தமே ஒன்பது. அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.. இவரின் பல படங்களும் இந்தி, தமிழ் என்று பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் கல்லாவை நிரப்பியிருக்கின்றன.. அனைத்துப்படங்களுமே மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கர்ஷியல், குடும்பம், ஆக்‌ஷன், ஃபேண்டஸி ரகப்படங்கள் தான். இவரிடம் எனக்குப்பிடித்த விசயம், இதுவரை இவர் தெலுங்கை தாண்டி திறமையை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று இந்தியிலோ தமிழிலோ நேரடிப்படம் எடுத்து பெயரைக்கெடுத்துக்கொள்ளவில்லை. தனக்கு எது வலுவான இடமோ அங்கிருந்து அடி வெளுக்கிறார். அனைத்தும் சிக்ஸருக்கு பறக்கின்றன.. இவரின் ஒவ்வொரு படத்திலும், படப்பெயருக்கு அருகில் “an s.s.rajamouli film" என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி அடித்திருக்கும்.. தன் பெயரை ஒரு முத்திரை போல் குத்தி படத்தை வெளியிடுகிறார் என்றால் தன் திறமை மேல் அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையும், தைரியமும் இருக்க வேண்டும்? நம்பிக்கையும், திறமையும், ஆடியன்ஸின் பல்ஸை அறிந்து வைத்திருக்கும் நுணுக்கமும் தான் அவரின் படங்களை எல்லாம் பாக்ஸ் ஆஃபிசில் சிதறடிக்கின்றன.

சரி இப்போது மரியாத ராமண்ணா படத்திற்கு வருவோம். ஒரு கிராமம், அதில் ஊர்ப்பெரியவரான ஒரு தாதா குடும்பம், அந்த ரவுடிக்குடும்பத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம்/கொள்கை/செண்டிமெண்ட், அந்த செண்டிமென்ட்டை பயன்படுத்தி அவர்களின் எதிரி அதாவது கதையின் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக சொல்கிற படம் தான் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் செய்திருக்கும் நாகிநீடு & சன்ஸின் மேல் இதுவரை ஒரு குற்றம் கூட நிரூபிக்கப்பட்டதில்லை. தனக்கு ஒருவன் சிறு தீங்கு இழைத்தாலும் அவன் வம்சத்தையே அழித்துவிடும் கொடூர வில்லன் அவர். ஆனால் இவ்வளவு கொடூரமான ஆளாக இருந்தாலும், தன் வீட்டிற்குள் ஒருவர் வந்து விட்டால், ஒரு கடவுளைப்போல் அவரை உபசரிப்பார், அவன் பரம எதிரியாகவே இருந்தாலும். விருந்தோம்பல் என்பது அவர் குலவழக்கம் மற்றும் வீடு அவரின் கோயில் மாதிரி. அங்கு எப்போதும் சந்தோசம் மட்டுமே இருக்க வேண்டும், யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பது அவர் கருத்து. ஆனால் வீட்டிற்குள் வந்துவிட்ட எதிரி தப்பித்தவறி வீட்டு வாசலை தாண்டி வெளியே காலை வைக்கிறான் என்றால் அவன் நரகத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்கிறான் என்று அர்த்தம்.

இந்த சூழலில் ஊரை விட்டு ஓடிப்போன அவரின் பரம எதிரி ஒருவனின் மகன், ஊரின் பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் தன் பூர்வீக நிலத்தை விற்க வருகிறான். வந்தவன் ஊர் மக்களின் அறிவுரைக்கிணங்க ஊர்ப்பெரியவர் நாகிநீடுவிடமே உதவி கேட்டு செல்கிறான். அவனை வரவேற்று, உள்ளங்கையில் தாங்கி, வீட்டில் பந்தி பரிமாறும் போது தான் தெரிகிறது பயல், 28 வருடங்களாக தான்  பழிவாங்கத்துடிக்கும் எதிரியின் மகன் என்று. இதையும், அவர்களின் கொலை செய்யும் எல்லை வீட்டு வாசலை தாண்டித்தான் ஆரம்பிக்கிறது என்பதையும் அறிந்து கொண்ட நம் ஹீரோ என்னவெல்லாம் செய்து தப்பிக்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.



அதுவரை காமெடி பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுனில் இந்தப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம். காமெடி ஓவர் டோசாகி விட்டால் படத்தின் சீரியஸ்னஸ் குறைந்து விடும்.. சீரியஸ்னஸ் ஓவர் ஆகிவிட்டால் ஒரு ஆக்‌ஷன் படம் போல் காமெடி ஹீரோவுக்கு சூட் ஆகாமல் போய்விடும் என்கிற ரிஸ்க்கான மெல்லிய கயிற்றில் அழகாக பயணித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, டான்ஸ், காமெடி, நடிப்பு என்று பிரமாதப்படுத்திவிட்டார்.. என்னைக்கேட்டால் பல தெலுங்கு மாஸ் ஹீரோக்களை விட இவர் கொஞ்சம் லட்சணமாகவே இருக்கிறார். வீட்டிற்குள் அழகான, பாசத்தை மட்டுமே கொட்டும் ஒரு குடும்பம், வீட்டு வாசலில் கையில் கத்தி, அரிவாளுடன் நூறு பேர் கொல்ல காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் வீட்டில் இருந்து போகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முறையும் இவர் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.. ஹீரோயின் அக்மார்க் கமர்ஷியல் சினிமா ஹீரோயினாக இருக்கிறார். அது போக படத்தில் ரயில் வண்டி போல 20,30 பாத்திரங்கள் இருக்கின்றன.. 

ஆனாலும் ஹீரோவை விட விஞ்சி நிற்பது நாகிநீடுவின் பாத்திரம் தான். ஒரு ஊர்த்தலைவராக, தாதாவாக, வீட்டிற்குள் பாசமான பெரியவராக என்று இவரின் நடிப்பும், பேச்சும், குரலும், கண்களும், அவற்றையெல்லாம் ஒரு கெத்தாக காட்டும் மீசையும் அருமையிலும் அருமை. சமகாலத்தில் தமிழ் சினிமாவில் இதே மாதிரி ஆள் என்றால் ஜெயப்பிரகாஷ் தான். ஆரம்ப காட்சியில் தன் கிராமத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்க வரும் கம்பெனி ஆட்களை தன் வீட்டில் உபசரித்து நன்றாக கவனித்துக்கொண்டிருப்பார். அதில் ஒருவன் இவரின் பணிவிடையை ஓவர் அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருப்பான். எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டிருப்பான். இவரும் அது எதையும் கண்டுகொள்ளாமல் சிரித்த முகத்துடன் சாந்தமாக எல்லா பணிவிடைகளையும் செய்வார். எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது அவனுக்கு முன் இவர் வாசலில் போய் நின்றுவிடுவார். அவனின் கால் சரியாக அந்த வாசலை தாண்டி ஒரு எட்டு வைக்கும் போது அருகில் உலக்கை குத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து அதை வெடுக்கென பிடுங்கி இவன் கழுத்தில் ஓங்கி ஒன்னு விடுவார். அவ்வளவு தான், ரெண்டு பேர் வந்து அவனை எங்கோ அள்ளிக்கொண்டு போவார்கள். மீண்டும் சிரித்த முகத்துடன் மற்ற ஆட்களிடம், “நீங்க ஹைதராபாத் போற வரைக்கும் ஓட்டல் ஒன்னும் சரி இருக்காது. அதனால இத எடுத்துக்கோங்க”னு ரெண்டு பெரிய டிஃபன் கேரியர்ல சாப்பாடு கொடுத்து அனுப்பிவைப்பார். நமக்கே இந்த ஆள் தான் இப்போது உலக்கையால் அடித்த ஆளா என்று டவுட் வரும் அளவிற்கு மிகவும் பாந்தமாக பேசுவார். அந்த பாத்திரம் ஒரு முழுமையை அடைவது அந்த இடத்தில் தான். சினிமாவில் தான் இப்படிப்பட்ட பெரிய மனிதர்கள் சாத்தியம் என்றாலும், அவரின் பாத்திரம் மேல் நமக்கு நிச்சயம் மரியாதை வரத்தான் செய்கிறது.



ஒரு சுவாரசியமான ஒன்லைனை, இன்னும் சுவாரசியமான திரைக்கதையால் அழகுபடுத்தியிருப்பார் ராஜமௌலி. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண, அல்லது ஹீரோ எதையோ பண்ணப்போக அதைப்பார்த்து ஹீரோயின் இம்ப்ரஸ் ஆகும் வழக்கமான ராஜமௌலி டெக்னிக் இந்தப்படத்திலும் உண்டு. ஆனால் ஒன்றிரெண்டு விசயங்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். ஹீரோயின் மேல் முறைப்பையனுக்கு வரும் காதல், ஹீரோ மேல் ஹீரோயினுக்கு வரும் காதல், ஹீரோயின் மேல் ஹீரோவுக்கு வரும் காதல் எல்லாம் சினிமாவுல கூட நடக்குமாங்கிறது டவுட்டு தான். பொசுக்கு பொசுக்குனு காதல் வந்துருது மை லார்ட்.. அதிலும் வில்லன்கள் துரத்தி வரும் போது ஹீரோவிடம்  ஹீரோயின் தன் காதலை சொல்கிறாள். அது வரை அவளை காதலிக்கும் எண்ணமே இல்லாதவன், புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்தவன் திடீரென ஓடுவதை நிறுத்திவிட்டு ஒரு டயலாக் சொல்கிறான் பாருங்கள், “நான் ஓடிப்போயி என் உயிர காப்பாத்திக்கணும்னு நெனச்சேன்.. ஆனா ஒன்ன மாதிரி ஒரு பொண்ண விட்டுட்டு ஓடிப்போயி நான் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வாழ்வோ சாவோ அது உன் கூடத்தான்”னு... எப்பா சாமி ஒரு ஃபிகரு லவ் பண்ணுறேன்னு சொன்ன உடனே நம்ம பயலுக உசுர கொடுக்கிற அளவுக்கு எல்லாம் போயிருவாய்ங்களா என்ன? ஆனா அதுக்காக நீங்க நெனைக்கிற மாதிரி ஹீரோ ஆவேசம் வந்து எல்லா வில்லன்களையும் அடித்து துவம்சம் எல்லாம் பண்ண மாட்டார்.. ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஹீரோயின் ஹீரோவை காப்பாற்றி குடும்பத்தினரையும் சமாதானப்படுத்திவிடுவாள். Happy endings.. :-)



பாடல்கள், இசை, காட்சியோடு ஒன்றச்செய்யும் ஒளிப்பதிவு, ஒரு பாத்திரமாகவே வரும் ஹீரோவின் இத்துப்போன சைக்கிள் (மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வருமே ஒரு பலூன் ஹீரோ & கோவை காப்பாற்ற, அது மாதிரி இந்த சைக்கிள்) என படத்தில் நம்மை போரடிக்காமல் ரெண்டே கால் மணிநேரம் கட்டிப்போட பல விசயங்கள் திரைக்கதையில் உண்டு.. இல்லாமலா இந்த படத்தை கன்னடம், பெங்காளி, இந்தி என்று எடுத்து எல்லா இடத்திலும் ஹிட் அடித்திருக்கிறார்கள்? ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும், ஊரின் பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சொல்லும் அந்த பின்னணிப்பாடல் சூப்பர்.. 

இந்தப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்கிறார்கள் இப்போது.. நம்ம சந்தானம் தான் ஹீரோவாம். தன் அதிகப்பிரசங்கித்தனத்தையும், ஓவர் டயலாக்கையும் அடித்து விடாமல், கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்கும். படத்தின் அடிநாதமான அந்த வீடும், அதன் ”சம்பிரதாயமும்” தான் ஹீரோ, வில்லன் அனைத்தையும் விட முக்கியம். அதை கெடுக்காத அளவிற்கு கொடுத்து, கிளைமேக்ஸில் இருக்கும் சிறு குறையையும் மாற்றி அமைத்தால் படம் நிச்சயம் தமிழிலும் பட்டையைக்கிளப்பும்.. தெலுங்கில் ரெட்டி ரெட்டி என்பார்கள்.. தமிழ் சினிமாவின் இலக்கணப்படி அது தேவராகவோ கவுண்டராகவோ இருக்கும்.. வேறு எந்த ஜாதி வீரமானதாக காட்டப்பட்டிருக்கிறது தமிழ் சினிமாவில்?

அடுத்ததாக “நான் ஈ” மிகப்பெரிய வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகளாக ராஜமௌலி இயக்கிக்கொண்டிருக்கும் என் டார்லிங் அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் ’பாகுபலி’யை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. 9படங்களில் கொடுத்த வெற்றியை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றியைக்கொடுக்க ராஜமௌலிக்கு வாழ்த்துக்கள்.. என் டார்லிங்கிற்கு வாழ்த்துக்கள் எல்லாம் வேண்டாம்.. ஸ்க்ரீனில் நீ வந்தா மட்டும் போதும்.. நீ வந்தா மட்டும் போதும்.. :-D

வீரம் - தல ரசிகனுக்கான தல வாழ விருந்து....

Saturday, January 11, 2014

எச்சரிக்கை:
இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பதிவு.. யாராவது வந்து லாஜிக், கூஜிக் என்று ஆராய்ச்சி செய்ய நினைத்தால் ப்ளீஸ் ஒன் ஸ்டெப் பேக்.. 


எனக்கு ஒரு கப்பித்தனமான ராசி உண்டு.. ஒரு படம் ரிலீஸ் ஆன முதல் நாளே நான் அந்த படத்தை பார்த்தால் அது கண்டிப்பாக ஒரே வாரத்தில் டப்பாவில் தூங்கப்போய் அடுத்த வெள்ளியில் வேற படத்தை தியேட்டரில் போட்டு விடுவார்கள்.. அப்படி ஒரு செம ராசி.. அன்பே சிவம், சச்சின், குசேலன், மதுர, சுள்ளான், எதிரி, மரியான், வல்லவன், மன்மதன் அம்பு, பில்லா 2 என என் ராசியால் பஞ்சர் ஆன படங்கள் என ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்டே உண்டு.. ஆனால் வில்லன் குரூப்பை அடித்து நொறுக்கி பட்டையை கிளப்புவது போல், என் ராசியை அடித்து துவம்சம் செய்து விட்டார் தல இந்த ஜனவரி 10, 2014ல்.. 


கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை பெரிதாக என்ன பெரிதாக, எலிப்புழுக்கை அளவுக்கு கூட ஒன்றும் கிடையாது. காதலுக்காக அடிதடியை விட நினைக்கும் ஒருவன், அதே காதலியின் குடும்பத்தை காக்க அடிதடியில் பின்னி பெடலெடுக்கும் படம் தான் ‘வீரம்’.. என்ன? தமிழ், தெலுங்கு, கன்னடம், என பல மொழிகளில் கேட்ட கதை மாதிரி இருக்கிறதா? ஆனால் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? தல இருக்காரு, அதுவும் வேஷ்டி சட்டை கெட்டப்பில், பத்த வச்ச ராக்கெட் மாதிரி ஒரு திரைக்கதை... இதற்கு மேல் என்ன வேண்டும்? அந்த ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்,  மாஸ் இது போதாதா? துப்பாக்கி விமர்சனத்தில் சொல்லியிருந்தேன், விஜய் விஜய் விஜய் தான் எல்லாம் என்று.. ஹா ஹா, அதை விட மாஸாய் அஜித் கலக்கியிருக்கும் ஒரு படம் இது.. திரையில் இத்தனை நாட்களாக (in fact வருடங்களாக) ’தல’யை எப்படி பார்க்க வேண்டும், படம் எந்த மாதிரியான mass entertainerஆக இருக்க வேண்டும் என ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்பட்டானோ அப்படி ஒரு படம் இது.


முதல் பாதி முழுக்க லோக்கல் தாதாவோடு சண்டை, சந்தானம் காமெடி, தமன்னாவோடு காதல் ஆரம்பிக்கும் படலம் என்று செல்கிறது.. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தவறாமல் அஜித்திற்கு மாஸ் ஏற்றுகிறார்கள்.. பயங்கர ஸ்பீடான திரைக்கதை.. இரண்டாம் பாதி தமன்னாவின் குடும்பம், அதன் செண்டிமெண்ட், வில்லனை அழிக்கும் படலம் என ஒரு கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தை இம்மி பிசகாமல், தூக்கலான ஆந்திர வாடையுடன் விருந்து வைத்திருக்கிறார்கள்.. முதல் பாதியோடு ஒப்பிடும் போது இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் கம்மி தான் என்றாலும், குடும்பம்,. செண்டிமெண்ட் என்று அதையும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.. ஒரு படத்தின் வெற்றி அதன் க்ளைமேக்ஸ் எந்த  அளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது என்பதை பொறுத்தது. அந்த வகையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை கண்டிப்பாக எல்லோரையும் திருப்திப்படுத்தும்.. இதுவரை தல எந்த படத்திலும் இப்படி ஒரு ஃபைட் போட்டதில்லை.. எல்லோரையும் நாயடி, பேயடி அடித்திருக்கிறார்.. படத்திற்கு சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ்.. 

தமன்னா அஸ் ஆல்வேய்ஸ் அழகு. நான்கு தம்பிகளில் ரெண்டு பேருக்கு நடிக்க சிறிய ஸ்கோப் கிடைத்திருக்கிறது. மீதி ரெண்டு பேர் கணக்குக்கு.. ஒரு தம்பியின் காதலியாக நம்ம நாடோடிகள் அபிநயா.. பாவம், அந்த திறமையான புள்ளைய இப்படிப்பட்ட டம்மி கதாபாத்திரத்துக்கு கொண்டு வந்துவிட்டார்களே?  ரொம்ப நாளைக்கு பிறகு சந்தானம் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார். “ஆடத்தெரியாத சிலுக்கு காலுல சுழுக்குனு சொன்னாளாம்” - ஒரு சாம்பிள் சந்தானம் வசனம். இரண்டாம் பாதியில் வரும் தம்பி ராமையா வேஷ்டி அவிழும் காட்சியிலும், சரக்கு அடித்துவிட்டு ஹீரோவும் நானே ஹீரோயினும் நானே என பண்ணும் அலம்பலும் நேரத்தை கடத்த உதவுகின்றன.. இவர்களுக்கு மேலும் முப்பத்தி சொச்சம் பாத்திரங்கள் படத்தில் இருப்பதால் எல்லோரையும் குறிப்பிட்டெல்லாம் சொல்ல முடியாது, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.. ஏனா? ஏன்னா அவர் ஒருத்தரு இருக்காரு.. அது மட்டும் போதுமே?.. ’என்னடா இவன் ஓவர் பில்ட்-அப் கொடுக்குறானே’ன்னு நெனைக்குறீங்களா?


ஒரு சின்ன டெஸ்ட் உங்களுக்கு.. மேலே இருக்கும் காட்சியை நீங்கள் படத்தில் பார்க்கும் போது உங்கள் முகத்தில் தன்னால் ஒரு புன்னகை வரும். அப்போது உங்களுக்கு தெரியும் நான் ஏன் இப்படி வரிந்து கட்டி புகழ்கிறேன் என்று. தம்பிகளோடு சேர்ந்து ’சண்டை பாடம்’ நடத்திக்கொண்டே லோக்கல் தாதாவை பந்தாடுவது ஆகட்டும், ரயில் சண்டையில் அனல் பறப்பது ஆகட்டும், வடிவேலின் காமெடி பாணியை உல்டா செய்து பாட்ஷா ரேஞ்சில் வில்லனிடம் பவ்யம் காட்டும் போது ஆகட்டும், குழந்தையோடு ஆடும் கண்ணாமூச்சி ஆகட்டும், கலகலவென ‘தல’ பண்ணும் ஒவ்வொன்றும் அழகு.. இவ்ளோ லோக்கல் விசயங்களை வைத்துக்கொண்டு ஏன் தல இவ்ளோ நாளா கம்முனு இருந்தீங்க? இனி இதே போல் இறங்கி விளையாடுங்கள்..


ஆனால் கண்டிப்பாக இந்தப்படத்தை அஜித் முழு மனதோடு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பது என் கருத்து.. அவருக்கு என்று ஒரு comfort zoneஐ உருவாக்கிக்கொண்டு, ரெண்டு கோட்டு, நாலு சன் கிளாஸு, அதை அணிந்த ஒரு உம்மனாமூஞ்சி, கார், பைக்கில் ஒரு சேசிங், முகத்திற்கும், வாயிற்கும் வலிக்குமோ என எண்ணும் அளவிற்கு மெதுவான வசன உச்சரிப்பு என அடைபட்டிருந்தவரை எப்படி சிவா அதை விட்டு வெளியே இழுத்து வந்தார் என தெரியவில்லை. அஜித்தும் இப்படி இறங்கி அடிப்பார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், பில்லா 2வில் ஒரு அரசியல்வாதி கேரக்டர் அஜித்திடம் சொல்லும், “நான் ஊன்னு சொன்னா எனக்காக உயிர கொடுக்க லட்சம் பேரு இருக்காங்க”னு.. அஜித் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோ அந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும்? ஸ்க்ரீனை க்ளோஸ் அப்பில் பார்த்து, ஹை பிட்ச்சில், “ஆனா நான் ஊன்னு சொன்னா கோடி பேர் உசுர கொடுப்பாங்கடா” என்று சொல்வது தான் aptஆக இருக்கும்.. ஆனால் அஜித் ரொம்ப சர்வசாதாரணமாக, நிதானமாக, “நீ சொன்னா ஓட்டு வேணா போடுவாங்க, உசுர கொடுக்க மாட்டாங்க” என்பார்.. தியேட்டரில் மயான அமைதி நிலவியது.. இது தான் பழைய அஜித்.. அப்படி ஒரு காட்சி வீரத்தில் இருந்திருந்தால் நான் முதலில் சொன்ன வசனம் தான் வந்திருக்கும், தியேட்டர் அதகளம் ஆகியிருக்கும்.. அந்த அளவுக்கு இந்த படத்தில் ஒரு மாஸ் ஸ்டாராக, அஜித்திற்கு இருக்கும் இமேஜை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கும்மாளம் போட்டிருக்கிறார் சிவா..

ஒரு இடத்தில் வில்லன் அஜித்திடம், “நீ என்ன ஜாதிடா?” என்பார்.. “நீ என்ன தேவன்னு நெனச்சா தேவன், நாடாருன்னு நெனச்சா நாடாரு, தலித்துனு நெனச்சா தலித்து.....” என வரிசையாக எல்லா ஜாதியையும் சொல்வார்.. இது போன்ற ராவான வசனங்கள் எல்லாம் அஜித் படத்திற்கு மிகப்புதிது.. அஜித்தும் பொதுவாக இது போன்றவைகளை தவிர்த்து விடுவார். ஆரோக்கியமான சினிமாவிற்கு இது போன்ற விசயங்கள் தேவை இல்லை என்றாலும், அந்த வசனத்தை அஜித் சொல்லும் போது தியேட்டரில் விழும் விசில் சவுண்ட் காதை கிழிப்பதென்னவோ உண்மை தான்... ரசிகர்கள் இது போன்ற ஒரு காரக்குழம்பை தான் அவரிடம் எதிர்பார்க்கிறோம், பீட்சா பர்க்கரை அல்ல..


படத்தில் இருக்கும் ஒரே ஒரு குறை, அதை குறை என்பதை விட திருஷ்டி என்று சொல்லலாம், அது நம்ம ’சரிகமபதநிசா ஏ கமான் கமான் ஏ சல்சா’ புகழ் அண்ணன் DSPயின் இசை தான்.. பின்னணி இசை கலக்கலாக இருந்தாலும் முதல் பாடலைத் தவிர வேறு ஒரு பாடலும் உருப்படி இல்லை. இன்னொரு சிறு நெருடல் ரெண்டாம் பாதியில் தல தன் தாடியை ட்ரிம் செய்து வருவது.. சால்ட் அண்ட் பெப்பர் லுக் தலையில் மட்டும் இருந்தால் ஓகே.. மீசையும் அப்படி ஆகி, தாடியையும் மழித்து விட்டுப்பார்த்தால் ஏதோ பக்கத்து வீட்டு சேட்டு மாமா மாதிரி இருக்காரு.. எப்படி கோட் சூட்டை விட்டாரோ, அதே போல் சால்ட் & பெப்பர் லுக்கையும் விட்டால் தேவலை.. பார்க்கலாம் அடுத்த படத்தில் எப்படி என்று..


அது 2002ம் வருட தீபாவளி.. தல படமும் (வில்லன்), தளபதி படமும் (பகவதி) ஒரே நாளில் ரிலீஸ் ஆகி, அதில் தல வென்றிருந்தார்.. அதற்கு பின் வரிசையாக நான்கு முறை இருவரும் மோதிக்கொண்ட போதெல்லாம் ’தல’யை விட அவரது ரசிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டோம், ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா என்று.. பரமசிவனும், ஆதியும் 2006 பொங்கலில் மோதிய போது ரெண்டுமே ஃப்ளாப் ஆகின என்பது ஒரு கொசுறு என்றாலும், 2007 பொங்கலில் அது ‘போக்கிரி’ பொங்கலாகவும், எங்களுக்கு ஆழ்வார் என்னும் டொக்கு பொங்கலாகவும் இருந்தது.. அதற்கு பின் ஏழு வருட காத்திருப்புக்கு பின் இப்போது மீண்டும் அஜித்தும், விஜய்யும் மோதியிருக்கிறார்கள் இப்போது.. கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து அஜித் இந்த நேருக்கு நேர் மொதலில் வென்றிருக்கிறார். ஒரு ரசிகனாக இந்த 12 வருட காத்திருப்பு சோர்வை கொடுத்தாலும், இன்றைய வெற்றி அனைத்தையும் ப்பூவென ஊதித்தள்ளிவிட்டது.. விஜய் தொடர்ச்சியாக ரெண்டு ஃப்ளாப் கொடுத்தால் அவர் ரசிகர்களே அவரை கிண்டல் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.. ஆனால் அஜித் ரசிகர்கள் என்றுமே அவரை விட்டுக்கொடுத்ததில்லை. அஜித் என்னும் நடிகன், தன் சக போட்டியாளரோடு மோதிய கடைசி நான்கு முறையும் மண்ணைக்கவ்வினாலும், நம்பிக்கையோடு ‘ஜெயிப்பான்டா என் தல’ என காத்திருந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த முறை தலை வாழை இலையில் கெடாய் வெட்டி விருந்தே படைத்துவிட்டார்..

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், ஹை கிளாஸ் நடிகராக இருந்த அஜித்தை ஒரு ரசிகனாக நாம் எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு அஜித்தை இதில் பார்க்கலாம்.. ரசிகர்கள், நமக்கு அந்த ஒரு காரணம் போதும்.. மற்றவர்களுக்கு? அவர்களுக்கும் மாஸாக, ஒரு ஆக்‌ஷன் - குடும்ப செண்டிமெண்ட் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.. அவர்களும் ஆச்சரியாக சொல்வார்கள், ‘அட அஜித் படமா இது?’ என்று.. மீண்டும் ’பழைய குருடி கதவை திறடீ’ என்பது போல் கோட்டு சூட்டுக்குள் நுழைந்து கொள்ளாமல் ‘தல’ இது போன்றே தொடர வாழ்த்துக்கள்.. தல தீபாவளி பாத்துட்டோம், இது தல பொங்கல்.. என்ன நான் சொல்றது?


ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை...

Sunday, March 10, 2013

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் எப்போதும் உண்டு.. தாலி செண்டிமெண்ட் படம் ஒன்று ஹிட் ஆகிவிட்டால் அடுத்த ரெண்டு மூன்று வருடங்களுக்கு, “புருஷன்னா யாருன்னு தெரியுமா?” என்று தத்துவம் பேசும் படங்களாக வந்து தள்ளும்.. திடீரென்று ஒரு சாமி படம் வரும். டிவி, பத்திரிகை, நாடகம், தியேட்டர் என்று எங்கு பார்த்தாலும் சாமியாட்டம் தான் இருக்கும். படம் பார்க்கு போது தியேட்டரில் இத்தனை பேர் சாமியாடினார்கள் என்று புள்ளிவிவர செய்திகள் வாய் வழியாக வந்துகொண்டிருக்கும். குடும்ப கதைகள் சினிமாவை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமா? ஏதோ இப்போது சீரியல் வந்து என்னை போன்றவர்களை காப்பாற்றி விட்டது. பாட்ஷா வந்த இந்த 18 வருடங்களில் ஹீரோவுக்கான ”அவன் யாருனு தெரியுமா?” என்கிற ஃப்ளாஷ்பேக் கதை விஸ்வரூபம் வரை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் படம் வந்தால், நாம் சளிப்படைந்து அந்த ஹீரோவையும் இயக்குனரையும் கிண்டல் செய்யும் வரை நம்மை விடாமல் நம் முகத்தை பார்த்து பன்ச் டயலாக் பேசி சாகடிப்பார்கள்.. இப்போது சில ஆண்டுகளாய் தமிழ் சினிமாவில் காமெடி பட ட்ரெண்டு இருக்கிறது.


சுந்தர்.சி எப்போதும் விடாமல் வைத்திருந்த காமெடி சினிமாவை கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் எஸ்.எம்.எஸ் படம் மூலம் குத்தகைக்கு எடுத்தார். அடுத்து பாஸ்@பாஸ்கரன். இந்த ரெண்டு படங்களும் காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவமும் அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பார்த்து ஆக்‌ஷன் பக்கம்  போயிருந்த சுந்தர்.சி யே கூட மீண்டும் காமெடிக்கு வந்துவிட்டார். எங்கு பார்த்தாலும் காமெடி படங்கள். காமெடிப் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. கதையோடு சேர்ந்து வரும் காமெடி.. இதை சுந்தர்.சி படங்களில் அதிகமாக பார்க்கலாம்.. உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, முறை மாமன், எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, பஞ்ச தந்திரம் படங்களில் எல்லாம் காமெடி படத்தோடு சேர்ந்து வரும். அடுத்த வகை தனி காமெடி ட்ராக் வருவது. கரகாட்டக்காரன், வின்னர், ரன், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். மூன்றாவது spoof வகை காமெடி. தமிழ்ப்படம் தான் இதில் உருப்படியாக சொல்லும் ஒரே உதாரணம்.

முன்னாடியே சொன்னது போல் இப்போது காமெடி ட்ரெண்ட் தான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா ட்ரெண்டும் எப்போது முடியும் என்றால் ‘இந்த ட்ரெண்ட் தான் ஹிட் அடிக்கும்’ என்கிற நம்பிக்கையில் சிலர் மொக்கையாக படங்கள் எடுக்கும் போது தான். ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கூட பவர் இல்லையென்றால் ஒரு மொக்கை காமெடிப்படமாக தான் அமைந்திருக்கும். ஆனாலும் காமெடி ட்ரெண்டை முடித்து வைக்க மொக்கையாக வந்திருக்கும் ஒரு படமாக “ஒன்பதுல குரு” இருக்கும் என நம்பலாம்.


தங்கள் திருமண வாழ்வால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மூன்று நண்பர்கள் தங்கள் நண்பர்கள் குரூப்பில் அடுத்ததாக திருமணமாகப் போகும் இன்னொருவனை காப்பாற்றுவதாக நினைத்து அவனை கல்யாணத்திற்கு முந்தைய நாள் கடத்திக்கொண்டு போவதும் அதற்கு அடுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதையும் நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்ய, முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி நம்மை சில பல கொட்டாவிகளும், சேர் தேயும் அளவுக்கு அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி உட்கார வைத்தும் பக்கத்து சீட்டில் இருந்து கோபத்தில் வெளிவரும் கெட்ட வார்த்தைகளுக்கும் நடுவிலும் நம்மை இம்சிக்கிறது.

படம் ஹிட் ஆக குத்துப்பாடலும் கவர்ச்சி டான்ஸும் இருந்தாலே போதும் என்கிற காலம் எல்லாம் எல்லாம் போய் இப்போது பவர் ஸ்டார் தலை காட்டினாலே போதும் என்றாகிவிட்டது. வால் போஸ்டர் முழுதும் பவரை பார்த்து தியேட்டருக்கு போய் ஏமாறாதீர்கள். சம்பந்தமே இல்லாமல் ஆரம்ப பாடலில் பவரை காட்டுகிறார்கள். மீண்டும் படம் முடிந்தவுடன் “அடுத்து பார்ட் 2 ல மீட் பண்ணுறேன்” என்று சொல்லும் போது மட்டும் வருகிறார் பவர். ‘ஐயய்யோ பார்ட் 2 வேறயா?’ என்று பலரும் பதறிவிட்டார்கள். பவரின் இடது கை சுண்டு விரலில் பேண்ட் எய்ட் சுற்றி இருக்கிறது. தலைவருக்கு என்ன ஆகிவிட்டதோ, இப்போது சரியாகியிருக்குமோ என என் நெஞ்சம் பதறுகிறது. விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக சொல்லவும்.

நாயகர்களுக்கு பில்லா, ரங்கா, குரு, கோச்சடையான் என்று பெயர் வைத்ததில் காமெடி இருக்கும் என்று நினைத்து கடுப்பை கிளப்பியிருக்கிறார்கள். பழைய படங்களில் இருந்து வசனங்கள், கதாபாத்திரங்கள், என்று சுட்டு, காமெடி என்னும் பெயரில் மொக்கையான காட்சிகளை வைத்து, யார் ஹீரோ, யார் காமெடியன் என தெரியாமல் குழம்பி, ஏன் க்ளைமேக்ஸில் திடீரென்று அப்படி ஒரு வில்லி?, ஹீரோ புசுக்கென்று எப்படி திருந்துகிறான்? என உங்களுக்குள் 1008 கேள்விகள் எழும். காமெடி படத்தில் இருக்கும் பெரிய ரிஸ்க், அந்த காமெடி மொக்கையாக அமைந்து விட்டால் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கவே முடியாமல் போய்விடும். ஆக்‌ஷம் படங்கள் சில மொக்கையாக இருந்தால் கூட சண்டைக்காக பார்க்கலாம். ஆனால் காமெடி படத்தில் காமெடி மொக்கையாகி விட்டால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.


அதற்காக படத்தில் காமெடியே இல்லை என்று சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன் ஒன்னே முக்கால் தடவையும், இடைவேளைக்கு பின் ரெண்டே கால் தடவையும் சிரித்தேன். எழுத்து போடும் போது, ‘அழகு தேவதை’ லஷ்மி ராய் என போடுகிறார்கள்.. இவர்களுக்கு காமெடிக்கு தான் அர்த்தம் தெரியாது என்று பார்த்தால் அழகு என்பதற்கும் தேவதை என்பதற்கும் கூட அர்த்தம் தெரியவில்லை. ஒரு வேளை அழகு தேவதை என்று லஷ்மி ராயை சொன்னதை கூட நாம் காமெடி என்று நினைத்துக்கொள்வோம் என்று நினைத்திருப்பார் போல இயக்குனர். லஷ்மி ராயை வைத்து க்ளைமேக்ஸில் வரும் ட்விஸ்டை பார்த்து என் பக்கத்தில் ஒருவர் கொதித்தெழுந்து ஹீரோ, இயக்குனரில் இருந்து தியேட்டர் ஓனர் வரை செந்தமிழில் கிழித்துவிட்டார். ரெண்டு புது வார்த்தைகள் கூட நான் கற்றுக்கொண்டேன். சரி பேக் டூ விமர்சனம், ப்ரேம்ஜி அமரன் திடீரென்று வருகிறார், திடீரென்று அப்பீட் ஆகிவிடுகிறார். ஒரு காட்சியில் ”நான் பிரியாணில பிஸி” என்று மறைமுகமாக உண்மையை சொல்லி கழண்டுகொள்கிறார். பாவப்பட்ட ஏதோ ஒரு தயாரிப்பாளரின் பணத்தில் ஒரு கும்பல் மஞ்சள் குளித்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

எல்லோரும் மிக மொக்கையாய் நடித்திருக்கிறார்கள், சத்யனை தவிர. கேட்கும் போது சுமாராக இருந்த ரெண்டு பாடல்கள் கூட படத்தில் மிக மொக்கையாக இருக்கின்றன. மொத்தத்தில் கதையோடு இழையோட வேண்டிய காமெடியாகவும் இல்லாமல், பழைய படங்களில் இருந்து காட்சியையும் வசனத்தையும் சுட்டிருந்தாலும், ஒரு spoof படமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது ஒன்பதுல குரு. இனி காமெடி ட்ரெண்ட் முடிந்து வேறு ஒரு ட்ரெண்ட் திரையுலகில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கலாம். கல்யாணம் முடிந்து வாழ்க்கையின் இன்பத்தையே தொலைத்து நகைச்சுவை என்றால் என்னவென்றே தெரியாத சில மத்திய வயது ஆண்களுக்கு வேண்டுமானால் இந்த படம் பிடிக்கலாம்.. மற்றபடி ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை..

டிஸ்கி:
1. முப்பது ரூபாய் டிக்கெட்டை கொடுத்து எழுபது ரூபாய் வாங்கிய தியேட்டரை எதிர்த்து பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு போராட வேண்டும்.. தியேட்டருக்குள் பெருச்சாளி வேறு ஓடுகிறது..
2. பேசாம வசந்த மாளிகைக்கே போயிருக்கலாம்..



நீங்கள் இந்த விமர்சனங்களையும் ரசிக்கலாம்..

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல).. 

ஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

 

 

 

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One