ஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின் (சோப், பவுடர், செண்ட், தேங்காய் எண்ணெய், cosmetics போன்றவை) மிகப்பெரிய சந்தை.. வருடத்திற்கு 45,000கோடி ரூபாய் புலங்கும் வர்த்தகம் இது.. அந்த 45,000கோடியும் நம் அழகை மேம்படுத்த, இருக்கும் அழகை பத்திரப்படுத்த நாம் செலவழிக்கும் பணம்.. அதாவது ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக கிட்டத்தட்ட நானூறு ரூபாய் வருடத்திற்கு செலவு செய்கிறான்/ள் தன் மேனிப்பராமரிப்பை மெருகூட்ட.. இதில் தலைமுடி சம்பந்தமான பொருட்களின் சந்தை மட்டும் கிட்டத்தட்ட 30%, அதாவது 13,500கோடி ரூபாய்.. இந்த personal care productsன் சந்தை ஆண்டு தோறும் குறைந்தது 15% என்கிற அளவில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுகிறது.. சரி வாங்க மேட்டருக்கு வருவோம்..
கொஞ்ச நாளாவே எனக்கு தலை முடி மிகவும் கொட்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில் என அனைவரும் எனக்கு முடி கொட்டுவதை வைத்து ஆளாளுக்கு அட்வைஸ், எனக்கு பெண் கிடைப்பதை பற்றிய அவர்களது கவலை என என்னென்னமோ செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் என் தலையை நான் கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கு ஒன்றும் சொட்டை மண்டையாக தெரியவில்லை. அதனால் நானும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் முடி வெட்ட செல்லும் போது முடி வெட்டும் ஆள் சொன்னார், ‘தம்பி முடி ஒட்ட வெட்டுனா உங்க சொட்ட தெரியும்.. ஒட்ட வெட்டவா?’ என்றார். ஒரு மூன்றாவது மனிதர் சொல்லும் போது தான் நாம் எதையும் நம்பிவிடுவோமே? அவர் சொன்னதை நம்பி ஒரு மாதம், ஆலிவ் எண்ணெய், கருவேப்பிலை எண்ணெய் என அனைத்தையும் என் மண்டையில் கொட்டி முடி நன்றாக வளர்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையில், இந்த மாதம் மீண்டும் முடி வெட்ட சென்றேன். இந்த மாதமும் அதே டயலாக்கை மாடுலேசன் மாறாமல் அழகாக சொன்னார். எனக்கு கடுப்பாகி விட்டது. இதுக்கு என்னதான் வழி என்று கொஞ்சம் நஞ்சம் இருக்கும் முடியும் கொட்டும் அளவிற்கு தலையை பிய்த்து தேடிய போது தான் டிவியில் அந்த விளம்பரத்தை பார்த்தேன்..
முடி கொட்டுவதை நிறுத்தி வழுக்கையில் முடி முளைக்க வைப்பதாகவும், கிட்டத்தட்ட ஒன்னரை லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாகவும் சொன்னார்கள். சரி அங்கு போய் கேட்கலாம் என நினைத்து திருச்சி தில்லை நகரில் இருக்கும் VCare clinicக்கிற்கு சென்றேன். Clinic முழுவது ஏ.சி. போடப்பட்டிருந்தது. அப்பாயின்மெண்ட் இல்லாமல் பார்க்க முடியாது என திரும்ப அனுப்பிவிட்டார்கள்.. ’முதல்வர பாக்க போறதுக்கு தானடா அப்பாயின்மெண்ட்டு? முடி கொட்டுறதுக்கு கூடயா அப்பாயின்மெண்ட்டு?’ என நொந்து கொண்டு மறு வாரத்தில் ஒரு நாளில் அப்பாயின்மெண்ட் வாங்கினேன். மறுவாரம் அங்கு கிளம்பும் முன் அவர்களுக்கு ஃபோன் அடித்து என் அப்பாயின்மெண்டை உறுதி செய்து கொண்டு, எவ்வளவு செலவாகும் என கேட்டேன்.. "Consulting fee 300ரூவா ஆகும் சார், அப்புறம் testingக்கு 500ரூவா ஆகும்” என்றாள் ஒரு கீச்சுக்குரல் பெண். அவள் குரலிலேயே தெரிந்தது அவள் ஒல்லியாக குட்டையாக சுமாராக இருப்பாள் என. ’சரி, தலை முடி வளருறதுக்கு ஒரு 800ரூவா செலவழிச்சா பரவாயில்ல’ என நினைத்துக்கொண்டு நான் மீண்டும் VCareக்கு சென்றேன்.
உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் அப்பாயின்மெண்ட் இருக்கா என்றார்கள். பெயரை சொல்லி உறுதிபடுத்திக்கொண்ட பின், "Consulting fees 300ரூவா தாங்க சார்” என்றாள் receptionல் இருந்தவள்.
“நான் தான் இன்னும் consultingக்கு போகவே இல்லையே?”
“நீங்க amount குடுத்தா தான் சார் consultingக்கே போக முடியும்”
சரி டியூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க போல.. கன்சல்டிங் அவ்வளவு சூப்பரா இருக்கும் போல, அதான் மொதையே காசு வாங்கிறாங்க என நம்பி 300ரூபாயை கொடுத்தேன்.. கொடுத்துவிட்டு, “Testingக்குரிய 500ரூவாயும் இப்பயே குடுத்திரவா?” என்றேன்.. “இல்ல சார் அது consulting முடிஞ்சதுக்கு அப்புறம் தான்”.. ‘ச்சே எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள்!’ என வியந்து விட்டேன். எனக்கு முன் அங்கு ஒரு 7,8 பேர் காத்திருந்தார்கள் தலை முடியை அடர்த்தியாக்க, நீளமாக்க, சொட்டையை முளைக்கவைக்க என்று.. அதில் என்னை கவனித்த ஒரு சிலர் என்னை மிகவும் பாவம் போல் பார்த்தார்கள். நான் அவர்களை சட்டை செய்யாமல் காத்திருக்க ஆரம்பித்தேன்.
நான் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.. எல்லோரும் ஒரு வெள்ளை நிற கோட் அணிந்து கொண்டு ஒரு விஞ்ஞானி போல் பரபரப்பாக இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் நீளமாகவோ அடர்த்தியாகவோ முடி இல்லை. ’ஹிம் நம்ம முடிய முளைக்க வைக்க ஆராய்ச்சி செஞ்சி செஞ்சி இவங்க முடி கொட்டிருச்சி போல’ என அவர்களுக்காக லேசாக உச் கொட்ட நினைத்த போது என்னை consulting அறைக்கு வரச்சொல்லி அழைத்தார்கள்.
Consulting அறைக்குள் நுழைந்தேன். அவரும் வெள்ளை கோட் போட்டிருந்தார். அங்கு நடந்த உரையாடலை கவனியுங்கள்..
“சொல்லுங்க சார் என்ன problem?"
”நான் சேல்ஸ் வேலைல இருக்கேன், ஹெல்மெட் போட்டு தான் எப்பயும் பைக் ஓட்டுவேன், நைட்டு லேட்டா தான் படுப்பேன். எனக்கு இதனாலலாம் தான் முடி கொட்டுதுனு நெனைக்குறேன்.. கொஞ்சம் இத சரி பண்ணுறதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க”
நான் சொன்னதை எல்லாம் ஒரு சிறு பேப்பரில் எழுதிக்கொண்டார். பின் அவரே, “நீங்க சேல்ஸ் வேலைல இருக்கீங்க, எப்பயுமே ஹெல்மெட் வேற போட்டுருக்கீங்க.. ஹ்ம்(மண்டையை ஆட்டுகிறார்)... நைட்டு வேற ரொம்ப லேட்டா தூங்குறீங்களே சார்? இதனால தான் சார் ஒங்களுக்கு முடி கொட்டுது”
“அத தான சார் நானும் சொன்னேன்”
“ஆமா.. அதத்தான் நானும் சொல்றேன்” சீரியசா பேசுறானா இல்ல போதையில இருக்கானானே தெரியல, ”ஒங்களுக்கு முடி கொட்டுறத நிறுத்தணும்னா ரெண்டு டெஸ்ட் பண்ணனும். ஒன்னு ஒங்களோட hairஅ சென்னைக்கு testக்கு அனுப்புறது. இன்னொன்னு உங்க hair strengthஅ பாக்குறது. அத பண்ணிட்டு வந்துருங்க”
“சரி சார், consulting எப்ப பண்ணுறது?”
“அதான் முடிஞ்சிருச்சே? இனிமேல் நீங்க டெஸ்ட் எடுத்ததுக்கு பிறகு ட்ரீட்மெண்ட் பத்தி பேசலாம்”..
இவ்வளவு தான அவர் செய்தது. நான் சொன்னதை அப்படியே என்னிடம் திரும்ப சொல்லிவிட்டு, சில பல test எடுக்க சொன்னார். அதற்கு பெயர் consulting. கன்சல்டிங் அறையில் இருந்து வெளியே வந்ததும் முடியின் எண்ணிக்கையை பார்க்க 500ரூபாயும், சென்னைக்கு என் முடியை அனுப்பி அதில் இருக்கும் வேதியியல் விசயங்களை பார்க்க 2000ரூபாயும் ஆகும் என்றார்கள்..
”என்னது 2000ரூவாயா?” எனக்கு பதறிவிட்டது. “ஃபோன்ல கேக்கும் போது testக்கு 500ரூவா தான சொன்னீங்க?”
“ஆமா சார், but consultingல உங்களுக்கு இன்னொரு testம் சேத்து எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்பத்தான் சார் கரெக்ட்டா உங்களுக்கு முடி முளைக்க வைக்க முடியும். ரெண்டும் சேத்து 2500 ரூவா ஆகும் சார்”.
“என்ட்ட காசு இல்லையே.. பக்கத்துல ATM இருக்கா?”
“பரவாயில்ல ஒங்க டெபிட் கார்டு குடுங்க சார்.. எங்கட்ட மிஷின் இருக்கு”. டெபி கார்டை கொடுத்து, அவர்கள் அதை ஒரு தேய் தேய்த்தவுடன் முடியை ஆராய்ச்சி செய்யும் அறைக்கு சென்றேன். அங்கு என் முடியை லேசாக வெட்டி எடுத்தான் ஒருவன். அதை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டுவிட்டு என் பெயரை கேட்டு அதில் எழுதிக்கொண்டான். அடுத்து என் தலையில் ஒரு சிறு பகுதியில் முடியை மொத்தமாக நீக்கி விட்டு, அங்கு ஒரு ஸ்பெசல் கேமரா மூலம் படம் பிடித்தான். அவ்வளவு தான், மீண்டும் கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார்கள்.
மீண்டும் consulting அறைக்கு அனுப்பினார்கள். முதலில் என்னை consult செய்த அதே ஆள் தான் இப்போதும். “உங்க hair count டெஸ்ட் வந்துருச்சி” என்று அவன் கையில் இருந்த ஒரு ஜெராக்ஸ் காப்பியை காட்டினான். அதை வைத்துக்கொண்டு, என்னிடம் புரியாத பல ஆங்கில மருத்துவ வார்த்தைகளை கூறிக்கொண்டே அதை அந்த ரிப்போர்ட்டில் கிறுக்கினான். என்னை நிமிர்ந்தே பார்க்காமல், என் வேலை, ஹெல்மெட் போடுவது, அதிக நேரம் விழ்த்திருப்பது என நான் முதலில் சொன்ன அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சொன்னான். அவன் என்னை பார்க்காமல் குனிந்து கொண்டே பேசுவதால் எனக்கு அவர் பேசும் எதன் மீதும் நம்பிக்கை வரவில்லை.
பின் ஒரு வெள்ளை பேப்பரிலும் எதை எதையோ கிறுக்கினான். அதெல்லாம் எதாவது மருந்தாக இருக்கும் என நான் நினைத்தேன். இதையும் கூட அவன் என் முகத்தை நேருக்கு நேர் பார்த்தே பேசவில்லை. சமைந்த பெண் தலை குனிந்து இருப்பதை போல அந்த பேப்பரை பார்த்துக்கொண்டே பேசினான். ஹ்ம் சொல்ல மறந்துவிட்டேனே, என் மண்டையை விட அவன் மண்டையில் முடி கம்மியாகத்தான் இருந்தது.. ஒரு வழியாக பேசி முடித்துவிட்டு அந்த பேப்பர்களை என் கையில் கொடுத்தான்.
”இதுல இருக்கிற மருந்த எங்க வாங்கணும் சார்?” என்றேன் அவர் கிறுக்கியதை காட்டி.
“அய்யோ சார் இப்பத்தான் ஒங்க ஒரு டெஸ்ட் ரிப்போர்ட்டே வந்திருக்கு. நான் ஒங்களுக்கு கன்சல்டிங் தான் பண்ணுனேன். ஒங்களுக்கு என்ன ட்ரீட்மெண்ட் பண்ணனும்னு சென்னையில இருந்து இன்னொரு ரிப்போர்ட் வந்தா தான் சொல்ல முடியும்”
“கன்சல்டிங்ல இருந்து என்ன சார் தெரியுது? எனக்கு எப்படி முடி முளைக்க வைக்கிறது?”
அவனிடம் கேள்வி கேட்டது என் தப்பு தான் என்பதை அவன் அடுத்த போட்ட குண்டில் தான் புரிந்து கொண்டேன். மீண்டும் பழைய படி என் கையில் இருந்த பேப்பரை பிடுங்கிக்கொண்டு அதில் கிறுக்க ஆரம்பித்துவிட்டான், தலையை குனிந்து கொண்டு. கடைசியாக ஒன்று சொன்னான்.
“எங்கட்ட ஒரு kit இருக்கு. நாலு மாசத்துக்கு தேவையான எல்லாம் இருக்கும். அத நீங்க 4மாசம் யூஸ் பண்ணுனாலே முடி முளைக்க ஆரம்பிச்சிரும்”
“சென்னை ரிப்போர்ட் வாரதுக்கு முன்னாடியே அந்த kitஅ யூஸ் பண்ணிரலாமா சார்?”
“இப்பயே வாங்கிட்டீங்கன்னா நல்லது. ஏன்னா சென்னை ரிப்போர்ட் வந்தா mostly அதுலயும் அப்படித்தான் இருக்கும்”
’அப்புறம் ஏன்டா அந்த டெஸ்ட்டு, தேவையில்லாம 2000ஓவாய்க்கு?’ என எனக்கு மிகவும் கடுப்பாகிவிட்டேன். கோவத்தை அடக்கிக்கொண்டு “சரி சார் நான் ஆரம்பத்துலயே எனக்கு முடி கொட்டுதுனு சொல்லிட்டேன். மொதையே இந்த kit பத்தி சொல்லாம எதுக்கு நெறையா டெஸ்ட் எல்லாம் எடுக்க சொன்னீங்க?”
“எங்களுக்குன்னு formalities இருக்கே சார். டெஸ்ட் & ரிப்போர்ட் இல்லாம நாங்க எதுவும் பண்ண மாட்டோம்” என்றான்.
“சரி சார் அந்த kit எவ்வளவு ஆகும்” என ஒரு பெருமூச்சோடு கேட்டேன். எப்படியும் இன்னொரு 2000ரூபாய் காலி என நினைத்துக்கொண்டு.
“சார் அது ஜஸ்ட் 25,000ரூவா தான் சார்.. நாலு மாசத்துக்கு வரும்.. நீங்க அது வாங்குனாலும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ consulting வந்து டெஸ்ட் எல்லாம் எடுத்துக்கணும்”
“அப்ப மொத்தமா 50000ரூவா ஆயிருமா சார்?”
“ஆமா சார்.. நாலே மாசம் தான், உங்க தலை பூரா முடியா ஆகிரும். என்ன அந்த kit இப்ப எடுத்து தர சொல்லவா?”
“இல்ல மொத சென்னை ரிப்போர்ட் வரட்டும், அடுத்து பாத்துக்கலாம்” என்று கூறி நான் அந்த கொள்ளை கும்பலிடம் இருந்து ஒரு வழியாக தப்பி வந்தேன்.. ”டேய் ராம்குமாரு இப்படி 50000 ரூவா செலவழிச்சி ஒனக்கு முடி வளரணும்னு அவசியம் இல்லடா.. இப்ப கொட்டுற ரேஞ்சுல கொட்டுனா கூட ஒனக்கு இன்னும் 3வருசம் ஆகும் தலை சொட்டையாக.. அதுக்குள்ள கல்யாணம் மட்டும் பண்ணிரு” என எனக்கு நானே அட்வைஸ் செய்துகொண்டே அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். இப்போது எனக்கு பின் வந்து காத்திருக்கும் ஆட்களை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருந்தது அவர்களை நினைத்து.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு எத்தனை clinic என்று. எங்கும் முறையான பில்லோ, முறையான prescription அட்டையோ, முறையான reportஓ எதுவுமே கிடையாது. எனக்கு வெறும் வெள்ளைப்பேபரில் எழுதிக்கொடுத்தார்கள். இந்த டெஸ்ட் கருமாந்திரம் எல்லாம் சும்மா.. அவர்களின் முழுமுதல் கடமை உங்கள் தலையில் 50000ரூபாய்க்கு மிளகாய் அரைப்பது தான்.. நான்கு மாதம் கழித்து முடி முளைக்கா விட்டாலும் உங்களால் என்ன செய்து விட முடியும்? மிஞ்சி மிஞ்சி போனால் சண்டை போடுவீர்களா? “எங்க R&Dல பேசுறோம்.. Productல எதாவது தப்பு இருக்கலாம்” என சிம்பிளாக பேசி தப்பிவிடுவார்கள். இந்த டெஸ்ட், கன்சல்டிங் எல்லாமே கண் துடைப்பு.. அந்த 25000 பொருட்களை விற்க இந்த மாதிரி ஜிகினா வேலை. நான் அந்த 25000 பொருளை வாங்கவில்லை என்றாலும், என்னால் அவர்களுக்கு 3000ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு நாளைக்கு திருச்சியில் மட்டும் 50 பேருக்கு அப்பாயின்மெண்ட். அனைவருக்கும் குறைந்து 3000ரூபாய் காலி. அப்போ ஒரு நாளைக்கு திருச்சியில் மட்டும் ஒன்னரை லட்ச ரூபாய் திருச்சியில் மட்டும். அவர்களின் மொத்த கிளைகள் என்ன? அதில் வசூலாகும் பணம் எவ்வளவு? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இது எதற்கு பில் தர மாட்டார்கள் என்பது இங்கு இன்னொரு முக்கிய அம்சம்.
எனக்கு என்ன மிகப்பெரிய கடுப்பு என்றால், நான் செலவழித்த 3000ரூபாய்க்கு, எனக்கு ஒரு தேங்காய் எண்ணெய் டப்பா கூட கொடுக்கவில்லை. Consulting என்னும் பெயரில் அங்கு யாருக்கும் consulting நடப்பதேயில்லை. அந்த 25000ரூபாய் பெருமானமுள்ள பொருளை நம் தலையில் கட்ட அவர்கள் நடத்தும் நாடகம் தான் cosnulting. அவர்கள் யாரும் முறையான படிப்பு படித்தவர்களா என்றும் தெரியாது. வரும் ஆட்களிடம் எப்படி பேச வேண்டும், என்ன மாதிரி கேள்வி கேட்க வேண்டும் என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. Vcare நடத்தும் பயிற்சிப்பள்ளிகளில் படித்தவர்களாக இருக்கலாம். வேறு எங்கும் உருப்படியான வேலை கிடைக்காததால் இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்
அதே போல் அங்கு வருபவர்கள் யாரும் அதி ஏழைகளோ பெரிய இடத்து ஆட்களோ இல்லை. இவ்வளவு காசு செலவழித்து ஏழை எவனும் முடி வளர்க்க நினைக்க மாட்டான். பணக்காரனுக்கு காசு பிரச்சனை இல்லை என்றாலும் அவனுக்கு முடியும் பிரச்சனை இல்லை. காசு இருப்பவனுக்கு முடி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? இங்கு வரும் பலரும் மத்திய தர ஆட்கள் தான். அதாவது கையில் இருக்கும் காசை எல்லாம் வருங்காலத்திற்கு சேமித்து விட்டு, இன்றைய பிழைப்பை பயந்து பயந்து நடத்தும், புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் நடுத்தர சமுதாயம் தான் இவர்களில் இலக்கு. ‘நம்மிடம் காசு தான் இல்லை, அட்லீஸ்ட் அழகை வைத்தாவது ஒரு நல்ல பையன்/பெண் கிடைக்க மாட்டானா/ளா?’ என ஃபேர்&லவ்லி காலத்தில் இருந்து நம்மை ஏமாற்ற ஒவ்வொருவரும் செய்யும் ட்ரிக்கின் அடுத்த நிலை தான் தான் இந்த ’சொட்டையில் முடி வளர வைக்கும்’ டெக்னிக்.
எப்படி கருத்த முகத்தை ஒரு க்ரீமால் வெளுப்பாக்க முடியாதோ, அதே போல் தலையிலிருந்த கொட்டும் முடியை மீண்டும் முளைக்க வைக்க முடியாது. ஆனாலும் இது போன்ற கொள்ளைக்கார கும்பல்கள் நம்மை ஏமாற்ற அனைத்தையும் செய்கின்றன. நான் முதலில் சொன்ன சில statisticsக்கிற்கு இப்போது அர்த்தம் புரிகிறதா? நம் இந்திய பொருளாதாரத்தில் மக்களின் வாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறது. அவர்கள் புற அழகை உயர்த்திக்காட்டும் personal care productsக்கிற்கு இப்போது அதிகம் செலவழிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் எதுவும் கிடையாது. பின் சோப்பு, அடுத்து பவுடர், அடுத்து ஷாம்பு என்று கொஞ்சம் கொஞ்சமாய் இது மாதிரியான பொருட்களை பயன்படுத்திய நாம் இப்போது மேனியையையும் கூந்தலையும் பராமரிக்க இப்போது எவ்வளவு பொருட்கள்?
Fair & lovelyக்காரன் இப்போது போடும் விளம்பரத்தை பார்த்தால், அவனே ‘நான் இத்தனை நாள் ஏமாற்றினேன், என் பொருள் ஒரு டம்மியாக இருந்தது. இப்போது தான் மிகவும் பொலிவு கொடுக்கும் பொருளோடு வந்திருக்கிறேன்’ என்பது போல் சொல்கிறான். நாமும் அதை இளித்துக்கொண்டு வாங்குகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முக அழகு க்ரீம்களுக்கு இருந்த அதே மவுசு, இல்லை அதை விட அதிகமான மவுசு சொட்டையில் முடி முளைக்க வைக்கும் பொருட்களுக்கு இப்போது இருக்கின்றன. விளம்பரங்களும் அவ்வளவு வருகின்றன அமேசான் காடு என்கிறான், ”நயந்தாரா மாதிரி முடி கேக்குறாடா என் ஆளு” என்கிறான் ஒரு பள்ளிக்கூட அரை டவுசர் ஒரு விளம்பரத்தில், மிஸ்டு கால் கொடுத்தால் நாங்களே பதிலுக்கு அழைக்கிறோம் என்கிறான் ஒருவன், தலை முடி போனால் confidentயே போய்விடுகிறது என்கிறான் இன்னொருவன்.
கொஞ்சம் கவனியுங்கள். இந்த மாதிரி ஷாம்பு, சோப்பு, தலைமுடிக்கான பொருட்கள், முக அழகு பொருட்கள் அனைத்தும் அந்த காலத்தில் இருந்து சொல்லி வருவது, அவர்களின் பொருட்களை பயன்படுத்தினால் நம் தன்னம்பிக்கை வளருமாம். அதாவது தன்னம்பிக்கை = அழகு. தன்னம்பிக்கை என்பது நீண்ட கூந்தலிலோ, வெள்ளை கலரிலோ இல்லை என்பதை நாம் தான் உணர வேண்டும். சொட்டைத்தலையும், கட்டை கூந்தலும், கருப்பு வண்ணமும், நமக்கு இயற்கையாய் அமையப்பட்டது தான். அதை நம்மால் எப்படி மாற்ற முடியும்? சமீபத்தில் எதிலோ படித்தேன். ”Fair & lovelyக்காரன் அவன் விளம்பரத்தை ஆப்பிரிக்கனிடம் போட்டு காட்டட்டும். ஆப்பிரிக்க பெண் அதை பயன்படுத்தி சிகப்பாகிக்காட்டட்டும், நான் நம்புகிறேன்” என்று ஒருவர் சொல்லியிருந்தார். ஆம், அவர் சொல்வதை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், உண்மை தானே? முறையாக பார்த்தால் இது போன்ற பொருட்களை நம்மை விட ஆப்பிரிக்கர்கள் தான் அதிகம் பயன்படுத்த வேண்டும். ஆனால் இல்லையே? நமக்கு நாம் காலம் காலமாய் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறையால் அமையப்பெற்றதை, வெறும் க்ரீமாலோ, எண்ணெயாலோ எப்படி மாற்றிவிட முடியும்? அதை என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா?
இது போன்ற கும்பல்கள் என்ன தைரியத்தில் நம்மை ஏமாற்றுகிறார்கள்? நான் 3000ரூபாயோடு தப்பித்தேன். ஆனால் எத்தனை பேர் அங்கு ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் மேலும் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் அங்கு வரும் பாதி பேருக்கும் மேல் உண்மையாகவே எதுவும் பிரச்சனை இருப்பதாக எனக்கு படவில்லை, நான் உட்பட. ஆனாலும் முடி கொட்டுகிறதே என பயந்து செல்லும் ஆட்களை பார்த்து, இவனிடம் எவ்வளவு பிடுங்கலாம் என பல்ஸ் பார்த்து ஆட்டையைப்போடுகிறார்கள். பலான வைத்திய சாலை நடத்தும் சித்த மருத்துவர்கள் வாரம் ஒரு ஊரில் ஏதாவது லாட்ஜில் ரூம் போட்டு ட்ரீட்மெண்ட் எடுப்பது போல், இவர்கள், ஊரின் மத்தியில் ஒரு பெரிய இடத்தில் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையை பிடித்து, வெள்ளை கோட் அணிந்த ஆட்களை ஏதோ நாசா விஞ்ஞானி போல் உலாவ விட்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்.
நாம் இந்தியர்கள் புற அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதால் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் புலங்கும் வியாபாரமாக இதை மாற்றி வைத்திருக்கிறார்கள் பிழைக்க தெரிந்தவர்கள். தலை சொட்டையானால் என்ன? வினோத் காம்ளி, பாஸ்கி, சோ மாதிரி நாமும் ஸ்டைலாக மொட்டை போட்டுக்கொள்வோம். அட அவ்வளவு ஏன், ஆனானப்பட்ட நம்ம சூப்பர் ஸ்டாரே சொட்டைத்தலையோடு தைரியமாக வரும் போது சிவகாசிக்காரன், சேலத்துக்காரன், திருச்சிக்காரனுக்கெல்லாம் என்ன? நாம் ஒன்றும் கவரிமான் பரம்பரை இல்லை, மயிர் நீத்த பின், டக்கென்று ஃபீல் பண்ணி உயிரையும் நீப்பதற்கு.
ரமணா படம் ஹாஸ்பிட்டல் சீன்ல வர்ற மாதிரி ரிப்போர்ட்ட வச்சி ரொம்ப பேசுவானுங்க அதுல சில கத்துக்குட்டிகள் தல ஆட்டிக்கிட்டு இருக்குங்க... ஆனாலும் இதுக்கு 3 ஆயிரம் ரூபா கொஞ்சம் ஒவர் தானுங்க மிஸ்டர் சிவகாசி... :(
ReplyDeleteஎன்ன பண்ணுறது? சம்பளம் வாங்கிய சில நாளில் அம்புட்டும் காலியானா எவ்வளவு கடுப்பா இருக்கும்?
Deleteஇப்படி ஏமாந்து போய்ட்டு பொலம்பறீங்களே, மொதல்லயே எங்கிட்ட வந்திருக்கப்படாதா? இதுல பாதி காசுல நான் உங்களுக்கு கன்சல்ட்டிங் பண்ணியிருப்பனே?
ReplyDeleteஇப்பவும் ஒண்ணும் குடி முழுகிப்போகல. எப்ப வேணும்னாலும் எங்கிட்ட கன்சல்டிங்க்குக்கு வரலாம். 150 ரூபாய் மட்டுமே!
வணக்கம் ஐயா.
Deleteஇனி கடவுளே கூப்பிட்டாலும் இது போன்ற கன்சல்ட்டிங்கிற்கு செல்வதில்லை என முடிவு செய்துவிட்டேன் ஐயா :-)
Deleteமுதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன் . இனி தொடர்வேன்
ReplyDeleteநன்றி சார் திரு கரந்தை ஜெயக்குமார், இப்போது தான் உங்கள் தஞ்சை கோவில் பற்றிய அற்புதமான கட்டுரை படித்து எனது பக்கத்தில் பகிர்ந்தேன்.
Deleteராம்குமார் பற்றி, அவரை தொடர்ந்து படித்து பாருங்கள். அற்புதமான இளைஞர், அருமையான சிந்தனையாளர், எனது முகநூல் நண்பர் & பாச மகன். நான் அடிக்கடி தொலைபேசியிலாவது பேசிவிடுவேன் இவருடன். ஒரு அற்புதமான எழுத்தாளர் உருவாகிறார்.
நன்றி & வாழ்த்துகள்.
மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார் :-)
Deleteஉங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி @Rathnavel Natarajan சார் :-) உங்கள் ஆசிர்வாதம் தான் என்னை எழுத வைக்கிறது..
நான் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.. எல்லோரும் ஒரு வெள்ளை நிற கோட் அணிந்து கொண்டு ஒரு விஞ்ஞானி போல் பரபரப்பாக இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் நீளமாகவோ அடர்த்தியாகவோ முடி இல்லை. = வினோத் காம்ளி, பாஸ்கி, சோ மாதிரி நாமும் ஸ்டைலாக மொட்டை போட்டுக்கொள்வோம். அட அவ்வளவு ஏன், ஆனானப்பட்ட நம்ம சூப்பர் ஸ்டாரே சொட்டைத்தலையோடு தைரியமாக வரும் போது சிவகாசிக்காரன், சேலத்துக்காரன், திருச்சிக்காரனுக்கெல்லாம் என்ன? நாம் ஒன்றும் கவரிமான் பரம்பரை இல்லை, மயிர் நீத்த பின், டக்கென்று ஃபீல் பண்ணி உயிரையும் நீப்பதற்கு. = அருமையான பதிவு ராம்குமார். இது தான் கார்பொரேட் கொள்ளை. எனது மூத்த மகன் விஜயவேல் இப்போது trimmer வைத்து வாரத்திற்கு ஒரு முறை மழுங்க சிரைத்து (மொட்டையடித்து) கொள்கிறார்ன். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் ராம்குமார்.
ReplyDeleteநானும் இன்னும் 4,5 வருடத்தில் மொட்டை மண்டையும், french beardமாக தான் இருப்பேன் சார்...
Deleteநாம் இந்தியர்கள் புற அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதால் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் புலங்கும் வியாபாரமாக இதை மாற்றி வைத்திருக்கிறார்கள் பிழைக்க தெரிந்தவர்கள்
ReplyDeleteகூந்தல் அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
ஆனா அப்படியெல்லாம் இருந்தால் தான் பெண்களே அவர்களை ஒதுக்குகிறார்களே...
Deleteஅய்யா பதில் சொல்லுற பெரியவரே,
ReplyDeleteஉங்க முடியை கருமையாக்க எம்மிடம் அருமையான மூலிகை வைத்தியம் இருக்கு. Consulting ரூ.100 தான் ஆகும். வாரியளா?
மாயன், உனக்குள்ள முழிச்சி இருக்குற அதே மிருகம் தான் எனக்குள்ள கொரட்ட விட்டு தூங்கிட்டு இருக்கு.. அத தட்டி எழுப்பிறாத..
Delete//சமைந்த பெண் தலை குனிந்து இருப்பதை போல அந்த பேப்பரை பார்த்துக்கொண்டே பேசினான்.//
ReplyDeleteஹஹஹா..
கோவையில "ஆவிச்சித்தர்ன்னு" ஒருத்தர் இருக்காராம்.. அவரு பேசியே முடி முளைக்கவோ, இழக்கவோ வச்சுருவாராம். அவர் ஒவ்வொரு அமாவாசையன்று மட்டுமே கன்சல்ட் பண்ணுவார். அவருக்கு கன்சல்டிங் fee வெறும் ரூ.99 ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி மட்டுமே..
ReplyDeleteஎனக்கு கன்சல்டிங் வேணாம் பாஸ்.. என்ட்ட காசு இல்ல பாஸ்.. என்ன ஆள விடுங்க...
DeleteContact details please
Deleteமேலும் மாட்டிக் கொள்ளாமல் இருந்தீர்களே...!
ReplyDeleteஆமாண்ணே மயிரிழை மயிரிழைனு சொல்லுவாங்களே, கண்டிப்பா, மயிருக்காக போன நானு, மயிரிழைல தப்பிச்சேன்..
Deleteஅவள் குரலிலேயே தெரிந்தது அவள் ஒல்லியாக குட்டையாக சுமாராக இருப்பாள் என.//
ReplyDeleteகுரலிலே அங்கலட்சனங்களை அலசுகுறீர்களே ,நீங்களே ஒரு கிளினிக் ஆரம்பித்தால் என்ன?
ஹா ஹா... அதெல்லாம் கடவுள் கொடுத்த கிஃப்ட்...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete100% உண்மையான பதிவு . நண்பர்கள் கண்டிப்பாக படிக்கவும். இந்தியர்களை ராகம் ரகமாக ஏமாற்றும் போலி கார்பரேட் கம்பனிகள் . வெறும் தேங்காய் எண்ணை மட்டும் போதும் நம் தலைக்கும் உடம்புக்கும். அதுவும் எந்த பிராண்டும் தேவை இல்லை. நாம் பொருட்களை விட பிராண்ட்க்கு அதிகம் செலவழிக்கிறோம். ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த ப்ராண்ட்டும் இல்லை. உலகமயமாக்கலில் உள்ளே புகுந்த இந்த பிராண்ட் கொள்ளை எங்கே போய் முடியுமோ.
ReplyDeleteஆமா அதே தான்.. பவுடரும், சோப்பும் மட்டும் இருந்த போது கூட இவ்வளவு பிரச்சனை இல்லை.. இப்போது பாருங்கள், எத்தனை பொருட்கள்?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்க ஏமாந்தது 3000 ஆயிரம் .நான் ஏமாந்தது 12000 ஆயிரம்ங்க .நான்தான் பெரிய ஆளு .இதெ மாதிரி அப்பாயின்மெண்ட் வாங்கி தான் ஏமாந்தேன் .பெட்ரோல் விலை அதிகமாகிட்டே இருக்கேனு hho கிட்
ReplyDeleteபொருத்தினா மைலேஜ் அதிகமா கிடைக்கும்னு net ல தேடினேன் .saynofuel.காம் .ல கரைட்டா புடிச்சேன் .போன் பண்ணாம போனேன் .அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க நு சொல்லிவிட்டார் .3 மாதத்திற்கு பிறகு பணத்தோட போனேன் usa technology type கிட் டை காரில் மாட்டி விட்டார் .ஏகப்பட்ட பெட்ரோல் மிச்சம் ஆகும்னு நினைச்சேன் .என்னுடைய நேரம் அது ஓட்டை கிட்டா ஆகிவிட்டது .ஒரு லிட்டர் பெட்ரோல் கூட மிச்சம் ஆகலை .இந்த அழகில் என்னுடைய நண்பர்களுக்கும் ரெகமண்ட் வேற பண்ணினேன் ரெம்ப கேவலமா போய்விட்டது .வேடிக்கை பார்த்த வொர்க் ஷாப் நண்பன் பார்த்துட்டு இது டிங்கர் பேஸ்டல் செய்தது நு சொல்ல காசு போன பரவா இலைன்னு ஓபன் பண்ணிட்டேன் .உள்ளே வெறும் 1000 ரூபாய் பொருள் தான் இருந்தது . usa டெக்னாலஜி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது .ஒரு மெயில் அனுப்பினேன் .10 நாளா பதில் வரலை .நம்ம காசு கரிய போச்சுன்னு முடிவு பண்ணிட்டேன். .saynofuel.com
சம்பத்த பட்ட அணைத்து website ளையும் என் பதிவை போட்டேன் .கோபமாகி www.cylex.in/company/ultramiles-10916618.html எனக்கு பதிலடி கொடுத்தார் .
loose bolt நு என்னை சொன்னாரு 1000 ருபாய் பொருளை 12000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினா என்னன்னு சொல்ல www.cylex.in/company/ultramiles-10916618.html இதுல போய் பாருங்க .
( www.cylex.in/company/ultramiles-10916618.html )
பாஸ் நீங்க என்ன விட பெரிய.................. சரி விடுங்க, ஏற்கனவே மனக்கஷ்டத்துல இருப்பிங்க, இதுல நான் வேற..
Deleteஆணி புடுங்கிற வேலையும்ஒன்னு இந்த மசுரு வளர்க்கிற வேலையும்ஒன்னு
ReplyDeleteஎனக்கு முகம் நிறையகழுவவேண்டியவன். அதாவது சொட்டை புல் சொட்டை
ஹா ஹா.. வருங்காலத்துல நானும் அபப்டித்தான்.. :P
Deleteமுடி நரைச்சா அஜித் ஸ்டைல் , முடி கொட்டினா ரஜினி ஸ்டைல் என நினைத்து கொள்ள வேண்டியதுதான் .
ReplyDeleteThat is the spirit.. :-)
Deleteட்ரீட் மென்ட்டுக்கு வந்தது டெஸ்டோடு போச்சி விடுங்க தல .. சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு ... முடி போச்சின்னா என்ன ? ஆனால் இந்திய மக்கள் (இதில் மொழி இனம் பேதமில்லை என்று நம்புகிறேன்) தான் புற அழகை எழிலூட்டுவதில் சிரத்தை எடுத்து இது போன்ற கொள்ளையர்களிடம் சிக்கி கொள்கிறார்கள்! என்னைக்கும் சிந்திக்கிறது ? என்னைக்கு மாறுவது ?
ReplyDeleteவெக்கத்த விட்டு சொல்லணும்னா நான் இப்பக்கூட 1000ரூ.க்கு Ervamatin வாங்கி தேய்ச்சுட்டு தான் இருக்கேன்..
Delete:) நல்ல வேல நான் இப்டி எதும் வாங்குனது இல்ல இது வரைக்கும்! ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க! இத படிச்சவங்க அடுத்து இந்த விகேர் பக்கம் தல வைக்க மாட்டாங்க! (ஒரு கம்பெனிக்கு இப்டி லாஸ் ஆக்கி விட்டுடிங்களே? :) )
ReplyDeleteஇந்த மாதிரி எண்ணை தேய்கிறது எல்லாம் முழுசா பயன் தரும்னு சொல்ல முடியாது. சில நேரம் உங்களுக்கு அவங்க தர ட்ரீட்மெண்ட் ஒத்துக்கலனா, உள்ளதும் கொட்டிடும்!
நான் பையோடெக் படிக்கிறேன்ல, நெறைய மருந்து, தெரபி, ட்ரீட்மெண்ட் இது எல்லாம் கண்டுபிடிக்கிறது, ஆராய்ச்சி பண்றது தான படிப்பே! ஆனா, நான் மருந்து மாத்திர சாப்பிட்றதே இல்ல!
காரணம் எனக்கு மருந்து சாப்டா உள்ள அடுத்து அது என்ன ஆகும்னு எல்லாம் தெரியும், வேதியல் ரீதியா! எல்லா மருந்துலயும் கண்டிப்பா சைட் எஃபெக்ட் இருக்கும்னு எல்லாருக்குமே தெரிஞ்சது தான!
மருந்து மாத்திர இது எல்லாம் வேற வழியே இல்ல, இது ரொம்ப மோசமான பயங்கர நோய்னு வரும்போது சாப்டா போதும்! சும்மா முடி கொட்டுது, பல்லு வலிக்குது, காய்ச்சல், தல வலினு சாதாரண விசயதுக்கு எல்லாம் சாப்ட தேவை இல்ல. அப்டி சாப்டவும் கூடாது!
ஒரு நாலு அஞ்சு வருஷம் சின்ன தலவலி காய்ச்சலுக்கெல்லாம் மாத்ர சாப்டாம இருந்தா, அடுத்து அடிக்கடி ஒடம்பு சரி இல்லாம போகாது. நம்ம எதிர்ப்பு சக்தியே நல்லா இருக்கும். மாத்ர சாப்டு சாப்டு பழகிட்டா, அடுத்து மாத்ர சாப்டா மட்டும் தான் காய்ச்சல் போகும்னு ஆகிடும், நம்ம எதிர்ப்பு சக்திக்கு வலு இல்லாம போய்டும்!
நானே ரொம்ப நீளமா கமெண்ட் எழுதிட்டனோ? :)
நல்ல பதிவு! சிரிச்சேன் நெறைய எடத்துல! :) நன்றி!
மருந்து விசயத்தில் நானும் உங்கள மாதிரி தான்.. கடந்த 9வருடங்களில் எதுவும் மருந்து சாப்பிட்டதில்லை.. அதுவா வந்தா, அதுவா போயிரும்னு விட்ருவேன்.. ஆனால் இந்த தலைமுடி விசயத்தில் கொஞ்சம் சறுக்கிவிட்டேன்.. எல்லாம் விதி.. சரி விடுங்கள்..
Delete//நானே ரொம்ப நீளமா கமெண்ட் எழுதிட்டனோ? :) // அய்யோ என் பிரச்சனை உங்களுக்கு ஒட்டிருச்சி போல.. :-(
உங்க பதிவைப் படித்ததும் சிரிப்பு தான் வந்தது. சில டிப்ஸ் கொடுக்கிறேன். முதலில் தலைக்கு மட்டும் ஆர்.ஓ செய்யப்பட தண்ணீரில் குளிக்கவும். டீ, காபி தவிர்க்கவும். அதற்குப் பதிலாக க்ரீன் டீ குறைந்தது 4-5 முறை குடிக்கவும். இந்த டிப்சுக்கு பீஸ் எதுவும் வேண்டாம். இரண்டு மாதத்தில் வித்தியாசம் தெரியும், நிச்சயமாக. தலைக்கு குழந்தைகள் ஷாம்பூ மட்டும் உபயோகிக்கவும்.
ReplyDeleteGreen tea bags should be dipped into boiled water without milk. You may add honey if you want but plain green tea is better
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் அறிவுரைக்கு.. //உங்க பதிவைப் படித்ததும் சிரிப்பு தான் வந்தது// நீங்க மட்டும் இல்ல, இந்த ஊரே கை கொட்டி சிரிக்குது :(
Deleteஇன்று அழகியல் என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் இயற்கையாகவே நமக்கு கிடைக்க வேண்டிய அழகியலை அரசாங்கம் கெடுத்துவிட்டு பின்னர் செயற்கையாய் அதனைப் பெற கார்ப்பிரேட் நிறுவனங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. நமது தலை முடி, சருமம், தோற்றம் முதலானவை அழகாக முக்கியம் தேவைப்படுபவை உணவு, நீர், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைகளே. ஆனால் இவை அனைத்தையும் இலவசமாக இயற்கை வழங்கிய போதும், அவற்றை நமக்கு அளிக்கத் தவறியது இந்த அரசாங்கமும், சமூகமே. உணவு உற்பத்தியை செயற்கை ஆக்கினோம், அதில் பூச்சிக் கொல்லி மருந்துக்களைத் தெளித்தோம், பின்னர் அவற்றை பதப்படுத்தினோம், விலை உயர்த்தினோம், அவை நமது தட்டுக்களுக்கு வந்து சேரவே படாது பாடு படுத்தினோம். பின்னர் அவற்றை பெறும் விலையை நிர்ணயித்தோம், உயர்த்தினோம், அதனால் அதிகம் உழைக்க வேண்டியதானது. அதன் மூலம் வாழ்க்கை முறை, நேரங்கள், ஓய்வுகள் எல்லாம் போனது. கெமிக்கல்கள் கலந்து சோப்பு, சாம்பு, பவுடர் என எல்லா நிறுவனங்களுக்கும் அனுமதிக் கொடுத்தோம். அதை வாங்கி உடம்பு, தலை எங்கும் பூசிக் கொண்டோம். அழகு கூடுவதாய் விளம்பரங்கள் கூறியது கேட்டு ஏமாந்து போனோம். இருந்த கொஞ்ச நஞ்ச அழகும் போனது. இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேகரிக்கத் தவறினோம். கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் என பாமரக் காலத்தில் ஆண்ட அரசர்மார் கட்டியதைக் கூட மூடி கல்லூரிகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டினோம். மீண்டும் வேளாண் நிலங்களை அழித்தோம். மீண்டும் மீண்டும் நமது வாழ்க்கை முறை கடுமையாக்கிக் கொண்டோம். பணத்தால் அனைத்தையும் அளந்தோம். எளிமையாக கிடைக்கக் கூடிய உணவு, நீர், காற்று முதல் மின்சாரம், உடை, உறையுள் அனைத்தையும் கடுமையாக்கிக் கொண்டோம். தலையில் இருந்த முடிகள் கொழிந்தன, சருமங்கள் கெட்டன, உள்ளம் வாடியது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, புற்று நோய் என எல்லாமும் வந்து சேர்ந்தன. கூட அவற்றை தடுக்கும் மருந்துகளும் வந்தன, வந்து கொண்டே உள்ளன.
ReplyDeleteஇருப்பதைக் கெடுத்துவிட்டு அதனைத் தடுக்க புதிய வழிகளைத் தேடும் பிற்போக்குவாதிகளாகவே மானிட சமூகம் உருவெடுத்து வந்துள்ளது. என்னத்த சொல்ல.. !
இதனால் முதலாளித்துவ நிறுவனங்கள் கண்டதையும் விற்று நம் பாக்கெட்டை காலியாக்குகின்றன. :(
மிகவும் உண்மை.. இதில் பெரும்பான்மையான தவறுகள் நம்மால் நடந்தவை தான்.. அரசாங்கத்தை குறை கூறுவது மிகவும் தவறு..
Deleteநல்ல விழிப்புணர்வுப் பதிவு
ReplyDeleteசொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
இதைப் படித்தவர்கள் நிச்சயம் முடிகுறித்த
தேவையற்ற கவலையும் கொள்ளமாட்டார்கள்
பணத்தையும் இழக்கமாட்டார்கள்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார் :-)
Deletetha.ma 5
ReplyDeleteவிஜய் டிவி சூப்பர் சிங்கர்ல இரண்டாம் பரிசா ஒரு கிலோ தங்கம் இந்த டுபாக்கூர் கம்பேனிதான் குடுக்க போகுது!
ReplyDeleteஆமா ஒவ்வொருத்தன்ட்டயும் ட்ரீட்மெண்ட் கொடுக்காம, பில்லே இல்லாம சர்வ சாதாரணமா, குறைந்தது 5000ரூபாய் கொள்ளை அடித்தால் ஒரு கிலோ என்ன, ஒரு டன் கிலோ கூட கொடுக்கலாம்.. திருட்டு ரஸ்கல்ஸ்...
Deletesuper..I am also faced these too...
ReplyDeletesuper..I am also faced these too...
ReplyDeleteமிகவும் தேவையான அவசியமான பதிவு இது. என் வட்டத்தில் பகிர்ந்துள்ளேன். நன்றி.
ReplyDeleteரொம்ப நன்றி சார் :-)
Deleteபாடம் கத்துக்க 300 ருவ..:)))
ReplyDeleteSHARED IN g+
முதலில், மிகப்பெரிய வாழ்த்து உங்களுக்கு ராம்குமார். அருமையான எழுத்து, நகைச்சுவை எள்ளல், சூப்பர்..எனக்கு இருக்கிற ஓரே வருத்தம் , நீங்க இன்னும் 50,000 செல்வளித்து, இன்னும் மிகப்பெரிய அனுபவகட்டுரையை நீங்கள் எழுதவில்லை என்பதே..மீண்டும், ஒரு அனுபவகட்டுரையை எழூதுவீர்கள் என்ற நம்பிக்கையொடு..
ReplyDeleteஅடப்பாவமே நீங்க காமெடி பண்ணி சிரிக்கிறதுக்காக நான் 50,000 ஓவாய எவன் வாயிலையோ போட முடியுமா?
Deleteஉண்மை நிகழ்வு. என் வீட்டுக்கு எதிரில் இருக்கும் மருந்து கடையில் இது போன்ற பொருள் விற்கிறது. கடைக்காரரின் மகனுக்கு (கல்யானம் ஆகி குழந்தை பெற்றவர்) கொஞ்சம் முடி கம்மி. எனவே அவர் உபயோகித்து பார்க்கலாம் என உபயோகித்து, சுத்தமாக எல்லா முடியும் கொட்டி சொட்டை தலையாகி விட்டார். அவர் கம்பெனிகாரரிடம் சண்டை போட்டு அவரது பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார். இப்போது சொட்டை தலையுடன் திருகிறார்.
ReplyDeleteNext Coming is Diet Plan, Fat Burner...Keep Ready for it... ;)
ReplyDeleteYa our people are strong enough to bear anything..
Deletesir
ReplyDeletekindly write one page about hairandfair.com
which is telling about silicon technology,hair weaving,hair bonding etc.
how it is cheating us
I dont know abt it sir.. Let me know abt it and if possible i'll write an article.. :-)
Deleteஅண்ணா!!எனக்குத்தெரிந்த வரை முடி உதிர்வதைத்தான் தடுக்க இயலுமே தவிர,இழந்த முடியை மீட்டெடுக்க இயலாது!இதை அறியாத பலர் இந்த மாதிரி பகல் கொள்ளையரிடம் சென்று ஏமாறுகிறார்கள்.ஆனால் நீங்கள் இதுகுறித்து எழுதிய கட்டுரையை பாராட்டியே ஆகவேண்டும்.நம்மில் பலருக்கு சொட்டை என்று எப்போது தெரியவரும் என்றால் நம்மைவிட அதிகமாக முடியை இழந்து கொண்டிருப்பவர்கள் கூறும்போது தான்.அதுவரை நமக்கு சொட்டை என்ற உணர்வே இருக்காது.அவர்கள் சொல்லியபின் தானாக நாமும் அதை ஏற்றுக்கொண்டு என்ன செய்வதென்று புலம்பியே உண்மையாலும் சொட்டை ஆகிவிடுவோம்.இதில் என்னைப்போன்றோர் மிகவும் பாவம்.சிறுவயதில் இருந்தே பெருநெற்றி(இந்தி நடிகர் சயிப் அலிகான் மண்டை போல்) இருக்கும்.அவர்களையும் சொட்டை எனக்கூறி,அஸ்வினியில் ஸ்டார்ட் ஆகி இந்துலேகாவைத்தாண்டி எர்வாமேட்டினுக்கு சென்று கடைசியில் இந்த மாதிரியான கிளிக்கில் தஞ்சம் அடைந்து,உண்மையாலுமே சொட்டையாகி விடுவார்கள். இந்த எர்வாமேட்டின் கம்பெனி காரன் ஆரம்பத்தில் சொட்டையான பகுதியில் முடியை வளரவைக்க எர்வாமேட்டின் என்று விளம்பரம் செய்தான்.ஆனால் இப்போது முடி இழப்பைத்தடுக்க,அடர்ந்த முடி வளர-னு விளம்பரம் பண்றான்.ஏனென்றால் இன்னும் எந்த விஞ்ஞானியாலும் சொட்டை தலையில் முடி வளர வைக்கும் மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கு ஒரே தீர்வு மண்டையில் முடி நட்டுக்கொள்ளும் ட்ரீட்மென்ட் தானாம்.அதாவது இறந்த ஒருவரின் மண்டையிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்ட முடிகளை நம் மண்டையில் நட்டுக்கொள்வதாகும்.இதற்கு இந்திய மதிப்பில் ஒரு முடி நட 2 ரூ செலவாம்.
ReplyDelete//இதற்கு இந்திய மதிப்பில் ஒரு முடி நட 2 ரூ செலவாம்.// அப்ப நான் அடுத்து அந்த ட்ரீட்மெண்ட் தான் எடுக்கணும் :P
Deleteஅண்ணா!!!எதுக்குணா ரிஸ்க்கு!!ஆண்டவன் குடுத்த முடியே போதும்னா!!நம்ம முடிய நட்ரத விட்டு மரத்த நடலாம்னா!!!
ReplyDeletegod made few perfect heads and the others he covered them
ReplyDeleteஇப்போது தான் இது குறித்து தேடிக்கொண்டிருந்தேன் நல்ல வேளை தங்களது கட்டுரை படித்தேன் உஷாராகிவிட்டேன் மிகவும் நன்றி சகோதரா.......
ReplyDeleteஎனக்கு வயது கம்மி தான். ஆனால் எனக்கு லேசாக முடி உதிர்கிறது .இதை எப்படி தடுப்பது??? மீண்டும் வளருமா??
ReplyDeleteSuper sir..the way u explain is nice...sema..i like tis very very much
ReplyDeleteஎனக்கு 22 வயசு தான் ஆவுது ...இப்பவே 70% காலி ஆய்ருச்சு......இதுவர எந்த டிரீட்மென்டும் எடுக்கல,இப்படியே விடவும் முடியல
ReplyDeleteஎன்னதான் பன்றது
முடி 100% சரியாகுற மாதிரி ஒரு டிரிட்மெண்ட் இல்லையே......90% இருந்தாலும் பரவாயில😃...அருமையான பதிவு
ReplyDelete