”அய்யோ
அப்பறம் என்ன ஆச்சு சார்?” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து
என் டீலரிடம் கேட்டேன்..
”டாக்டர்
’அவ்ளோ தான் பொழைக்க வைக்கவே முடியாது’னு சொல்லி எங்க கண்ணு முன்னாடியே ஊசி போட்டு
கொன்னுட்டாரு சார் எங்க ஜிம்மிய” என்று சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தார் நான் நிஜமாகவே
வருத்தப்படுகிறேனா என தெரிந்து கொள்ள.. நானும் மிகவும் கஷ்டப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் போது என் பாட்டி மரணித்ததாக டீச்சரிடம் பொய் சொன்னபோது எப்படி முகத்தை வைத்திருந்தேனோ
அப்படியே இப்போதும் வைத்திருந்தேன். “என் பொண்ணு தான் சார் ரொம்ப அழுதுட்டா” என்றார்..
இந்த முறை வருத்தத்தோடு நான் ஒன்றிரெண்டு ‘உச்’களையும் சேர்த்துக்கொண்டேன்.. லவ்வருக்கு
உடம்புக்கு முடியலேன்னா கூட கண்டுக்காம இருந்திரலாம், ஆனா டீலர் வீட்டு நாய்க்கு ஏதாவது
ஒன்னுன்னா எப்படி விட முடியும்? அதான் அந்த ஒரு சில ’உச்’கள். ஆனால் என் தீபாவளி ஜீன்ஸை
கிழித்த சனியன் செத்ததில் உள்ளுக்குள் எனக்கு லேசான மகிழ்ச்சி தான் எனக்கு.
”சார்
ஒரு payment பாக்கி இருக்கு.. இன்னைக்கு ஆர்டர் வேற குடுக்கணும்….” என சங்கடத்துடன்
இழுத்தேன்.. அவர் வெடுக்கென என்னை நிமிர்ந்து பார்த்து, “பாத்தீங்கல்ல, நாங்க எவ்ளோ
வருத்தத்துல இருக்கோன்னு? இப்ப வந்து காசு லோடுனு பேசிட்டு இருக்கீங்க? போங்க சார்
போயிட்டு நாளைக்கு வாங்க”னு கத்த ஆரம்பிச்சிட்டார்.. ’ஆமா இல்லாட்டி மட்டும் நீ காசு
கட்டி ஆர்டர் குடுத்து தள்ளிருவ’ என்று என்றோ உப்பு போட்டு சாப்பிட்ட சோறு ரோசமாக கேட்க
தூண்டினாலும், ’சேல்ஸ் வேலை’ என்னும் சொரணை கெட்ட ஊசி என்னுள் செலுத்தப்பட்டிருப்பதால்
அமைதியாக வெளியில் வந்தேன்.. இன்று இந்த ஆள் வீட்டு நாய்க்காக என்னை வைகிறான். ஒரு
நாய்க்கு இருக்கும் மரியாதை கூட MBA முடித்திருக்கும் எனக்கு இல்லையே? ஆமா, நாயெல்லாம் MBA முடிச்ச மாதிரி வீட்டு ஷோபால ஹாயா இருக்கும்
போது என்ன மாதிரி MBA முடிச்ச பயலுக எல்லாம் நாய் மாதிரி தான் சுத்தணும். ச்செய் என்று
கருவிக்கொண்டே கிக்கரை அழுத்தி அடுத்த ஊருக்கு வண்டியை கிளப்பினேன்..
சேல்ஸ்
வேலையின் நல்ல விசயம் நீங்கள் வேலைக்கு போகாமல் ரூமிலேயே ஓப்பி அடிக்கலாம்.. இந்த
9மணி finger print சமாச்சாரம் எல்லாம் கிடையவே கிடையாது. கெட்ட விசயம், மரியாதையே இருக்காது
உங்களுக்கு. ஒரு சினிமா நடிகையை நேரில் பார்த்தால் எப்படி வழிவோம்? ஆனால் அவளையே மற்ற
நேரங்களில் அசால்ட்டாக ‘தேவடியா, ஐட்டம்’ என்போமே அது போல் தான் ஒரு சேல்ஸ் மேனும்..
நேரில் பார்க்கும் போது டீ, காப்பி, பஜ்ஜி, சமோசா என்று புது மாப்பிள்ளை போல் நம்மை
மதிப்பார்கள். அதுவே நாம் அங்கிருந்து நகர்ந்துவிட்டால் ங்கோத்தா ங்கொம்மா என்பார்கள்.
இதெல்லாம் தெரிந்தாலும் அவர்களிடம் நம் கோபத்தை காட்ட முடியாது. எப்போதும் ஈஈஈஈஈ என
சாலையோரம் திரியும் வடநாட்டு பைத்தியம் போல் முகத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்..
சேல்ஸ்
வேலையின் கோபத்தை வீட்டில் காட்டலாம் என்றாலும் என்னால் முடியாது. ஏனென்றால் நான் அப்பா
அம்மாவிடம் இருந்து பலமைல் தூரம் தள்ளி பிழைக்க வந்த கன்னிகழியாத பேச்சிலர். கேர்ள்
ஃப்ரெண்டும் கிடையாது. வீட்டிலும் பொண்ணு பாப்பேனானு அடம் பிடிக்குறாய்ங்க. அதனால்
என் கோபத்தை எல்லாம், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பெண்கள், பைக் சர்வீஸ் ஆட்கள், செல்ஃபோனில்
நச்சரிக்கும் இன்சூரன்ஸ் ஆட்கள் போன்ற சாத்வீக ஆட்களிடம் தான் காட்டுவேன். அவர்கள்
தான் எருமைக்கு அடுத்தபடியாக பொறுமைசாலிகளாக உலகில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். வண்டியை
கிளப்பிய கொஞ்ச நேரத்திலேயே ஃபோன் மணி அடித்தது.
ஆஹா
எவனோ ஆர்டர் குடுக்க கூப்டுறான் என எடுத்துப்பார்த்தால் கஸ்டமர் கேர் நம்பர். சரி நம்ம
டென்சனுக்கு இவிய்ங்க தான் டைம் பாஸ் என நினைத்து ஃபோனை அட்டெண்ட் செய்து காதுக்கும்
தோளுக்கும் இடையில் சொறுகிக்கொண்டு ஃபோன் கீழே விழாமல் இருக்க தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டே
பைக்கை செலுத்த ஆரம்பித்தேன்..
“சார்
நான் ஐசிஐசிஐ பேங்கல இருந்து பேசுறேன் சார். ராம்குமார் சார் இருக்காங்களா?” ஒரு ஆண்
குரல் அடிமைத்தனமாய் கேட்டது.
ஆஹா
இவ்ளோ சாரா? கேக்கவே எனக்கு சுகம்ம்ம்ம்மா இருந்துச்சி. ஆனாலும் ஆண் குரல் என்பதில்
ஒரு ஏமாற்றம் தான். பெண்ணாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குரலில் கடுகடுப்பை
சேர்த்துக்கொண்டேன். ஆமா, இந்த மாதிரி கால்ஸ் வரும் போது நாம் பிஸியாக இருப்பது போல்
கடுகடுவென பேசுவது தானே fashion? அதுவும் போக இவன் எனக்கென்றே இப்போது சிக்கியிருக்கும்
அடிமை, கெத்து காட்டாட்டி எப்படி? “ஆமா நான் தான் பேசுறேன், என்ன விசயம் சீக்கிரம்
சொல்லுங்க” என்றேன் எனக்கு முன் சென்ற ஒரு டிராக்டரை சைடு வாங்கிக்கொண்டே..
”சார்
நீங்க நம்ம பேங்க் டெபிட் கார்டு யூஸ் பண்ணுறீங்கல்ல சார்? அதுல இப்ப ஃபாரின்ல
75000ரூவா வரைக்கும் ஸ்வைப் பண்ணிக்கிற facility பண்ணிருக்கோம் சார் உங்களுக்கு”
இந்த
சார் என்கிற வார்த்தை தான் எவ்வளவு கிழுகிழுப்பானது? “அப்டியா? ஆனா நேத்து தான் ஒரு
300 ரூவாய்க்கு நான் சாமான் வாங்குனேன். கார்ட ஸ்வைப் பண்ணேன், ஒன்னுமே முடியலையே?
நானே இது சம்பந்தமா உங்க கஸ்டமர் கேர்ட்ட பேசலாம்னு தான் இருந்தேன். I don’t know
what you people are doing there” கஸ்டமர் கேர் ஆட்களை பயமுறுத்த இங்கிலீஷ் ஒரு உற்ற
நண்பன்.
”சிரமத்திற்கு
மன்னிக்கணும் சார். ஒரு நிமிஷம் லைன்லயே இருங்க சார், நான் என்னனு செக் பண்ணிட்டு சொல்றேன்
சார்”. இவன் சார் சார்னு ஒவ்வொரு முறையும் கூப்பிடுவது என்னை ஒவ்வொரு முறையும் சிம்மாசனத்தில்
அமர வைப்பது போல் இருந்தது. போனவன் ஒரு நிமிடத்திற்கு முன்பே லைனில் வந்தான். கடுப்பு,
வெறுப்பு, ஆக்ரோஷம், கோபம் இதையெல்லாம் அடக்கிக்கொண்டு அவன் பேசுவது அவன் குரலிலேயே
தெரிந்தது, “சார் ஜீரோ பேலன்ஸ் வச்சிருந்தா
ஒரு ரூவாய்க்கு கூட ஸ்வைப் பண்ண முடியாது சார்” என்றான்.
“தெரியுதுல
அப்புறம் எதுக்குயா எனக்கு கால் பண்ணுறீங்க? லோக்கல்லயே ஒர்ருவாய்க்கு வழி இல்லையாம்..
இந்த லட்சணத்துல எழுவத்தஞ்சாயிரம் ரூவா அதும் ஃபாரின்ல போயி பண்ணுவாய்ங்களா? வேணும்னா
ஒங்க ஓனர என் அக்கவுண்ட்ல பணம் போட்டுவுட சொல்லு செலவு பண்ணுறோம். வந்துட்டாய்ங்க காலங்காத்தால
ஃபாரின்னு யூரின்னு” அவன் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை துண்டித்துவிட்டு, தோளுக்கும்
காதுக்கும் நடுவில் இருந்த ஃபோனை எடுத்து சட்டை பைக்குள் போட்டேன். ஃபோனை இப்படி தலைக்கும்
தோளுக்கும் இடையில் வைத்து பேசுவது ஒரு வித கிக் தான். மத்திய வயது ஆண்கள் எல்லாம்
பொறாமையோடு பார்ப்பார்கள்.. நாம் இன்னும் யூத் என்று காட்டிக்கொள்ள அது ஒரு தைரியமான வழி..
மனம் கொஞ்சம் லேசான மாதிரி இருந்தது. இந்த மாதிரி தினமும்
மூனு ஃபோன் வந்தா நம்ம டென்சன்ல இருந்து கொஞ்சம் ரிலீஃப் ஆகிக்கலாம் என நினைத்துக்கொண்டே
வண்டியை அழுத்தினேன்..
என்ன
தான் இருந்தாலும் அவன் நம்மள ஜீரோ பேலன்ஸ்னு சொல்லிருக்க கூடாது. இன்னைக்கு சம்பளம்
போட்ருவாய்ங்க. அப்றம் நம்ம அக்கவுண்டும் 40000ரூவா அக்கவுண்ட் தான? அதெல்லாம் யோசிக்க
மாட்டாய்ங்க. சம்பளம் வந்ததும் என்னென்ன செலவு செய்ய வேண்டும் நாளை, யார் யாருக்கு
கடனை திரும்ப செலுத்த வேண்டும் என யோசித்துக்கொண்டே சென்றேன். ச்சே மாசத்துல நாலு ஒன்னாம்
தேதி வந்தா எபப்டி இருக்கும்? சில நிமிடங்களில் மீண்டும் ஒரு ஃபோன். இதுவும் கஸ்டமர்
கேரில் இருந்து தான். இன்னைக்கு ஆர்டர் வராது வெறும் கஸ்டமர் கேர் ஆட்களோடு டைம் பாஸ்
பண்ணியாச்சும் பொழுதை கழிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அந்தகாலையும் அட்டெண்ட் செய்து
காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தலையை சாய்த்துக்கொண்டேன். ஒரு அழகான பெண்ணின்
குரல். குரலை வைத்தே ஒரு பெண் அழகானவளா இல்லையா என்று கண்டுபிடிக்கும் கலை பற்றிய புத்தகம்
ஒன்று உள்ளது. அதை பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது அவள் பேசியதை பற்றி.
”சார்
நான் ஐசிஐசிஐ இன்சூரன்ஸ்ல இருந்து பேசுறேன் சார். உங்கட்ட பேசலாமா சார்?” ஒரு வித பதட்டத்தில்
பேசினாள் அவள்.
“இப்ப
பேசிட்டு தான இருக்கீங்க? அப்புறம் என்ன பேசட்டுமான்னு கேள்வி?” லேசாக நழுவிய என் செல்ஃபோனை
மீண்டும் காதுக்கு அருகில் சொருகிக்கொண்டேன்..
“ஹா
ஹா ஆமா சார். சார் நீங்க வேற இன்சூரன்ஸ் எதுவும் போட்ருக்கீங்களா சார்?”
“ஆமா
போட்ருக்கேன்”
“சார்
நீங்க போட்டிருக்குற இன்சூரன்ஸ் எல்லாம் பழைய மாடல் சார். இப்ப புதுசா நம்ம ஐசிஐசிஐல
இருந்து ஒரு மாடல் போட்ருக்கோம் சார். உங்கட்ட அத பத்தி பேசலாமா சார்?”
ஒரு
பெண் நம்மிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டால் பேசாமல் இருக்க முடியுமா? “இப்பலாம் இன்சூரன்ஸுக்கும்
மாடல் வந்துருச்சா?”
”ஹா
ஹா ஆமா சார்” ஒவ்வொரு வாக்கியமும் ஆரம்பிக்கும் முன் அவள் ஒரு ‘ஹா ஹா’ சேர்த்துக்கொண்டாள்.
அவள் அழகுக்கு அது மேலும் அழகு சேர்த்தது. “சார் நீங்க இப்ப என்ன வேல பாக்குறீங்கன்னு
தெரிஞ்சுக்கலாமா சார்?”
“நான்
ஒரு லீடிங் சிமெண்ட் கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜரா இருக்கேன்” சேல்ஸ் ரெப் என்று
சொல்வதில் ஏனோ ஒரு தயக்கம் எனக்கு. அதுவும் போக அவளுக்கு என்ன தெரியவா போகிறது?
“சார்
சேல்ஸ் ஜாப்னா நீங்க நெறையா பைக்ல சுத்துற மாதிரி இருக்கும்ல சார்?” அவள் கேட்கும்
கேள்விகள் எல்லாம் ஒன்னாம் வகுப்பு பிள்ளையிடம் டீச்சர் என்கொயரி செய்வது போல் இருந்தது.
“ஆமா
இப்ப கூட பைக்ல போய்ட்டே தான் பேசிட்டு இருக்கேன், சொல்லுங்க”
“ஹா
ஹா சரி சார்.. சார் உங்களுக்கு மேரேஜ் ஆயிருச்சா சார்?”
“நீங்க
நாடாரா?”
“இல்லையே
ஏன் சார்?”
“இல்ல
நாடாரா இருந்தா உங்களையே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு பாத்தேன்”
“சார்!!!!!!!!!!!!!”
அவள் லேசாக பயந்துவிட்டாள் போல
“ஆமா
வேல, கல்யாணம்னுலாம் பொண்ணு பாக்குறவங்க தான் கேப்பாங்க.. அதான் சொன்னேன்”
“சார்
அதுக்கு கேக்கல சார். உங்களுக்கு வேற, கல்யாணமே ஆகல.. சேல்ஸ் வேலையில வேற இருக்கீங்க.
டெய்லி பைக்ல வேற போணும்னு சொல்றீங்க. இப்ப பைக்ல போகும் போது திடீர்னு உங்களுக்கு
accident ஆயி ஏதாவது ஆயிருச்சின்னா உங்க அப்பா அம்மாவ யார் சார் காப்பாத்துவா?” ஏதோ
முப்பதாம் தேதி சம்பளம் போடலேன்னா யார்ட்ட சார் கடன் வாங்குறதுங்கிற மாதிரி அசால்ட்டா
கேட்டா. எனக்கு தான் அவ அப்படி கேட்டதும் ‘பக்’குனு ஆயிருச்சி.
“ஹலோ
என்னங்க இது கேள்வி?” பதட்டத்தில் ஃபோனை நழுவ விட்டுவிட்டேன்.. அது சாலையில் விழுந்து
தெரித்தது. செம கடுப்பில் வண்டியை நிறுத்திவிட்டு கை வேறு கால் வேறாக சிதறிக்கிடந்த
போனை ஒன்றாக்கிவிட்டு அவளுக்கு கால் பண்ணலாம் என கோபத்தில் நம்பரை எடுத்தேன். அதற்குள்
அவளே மீண்டும் அழைத்தாள்.
“சார்
ரொம்ப ரொம்ப ஸாரி சார் அப்படி கேட்டதுக்கு. ப்ளீஸ் சார். நான் வேலைக்கு புதுசு சார்.
இன்னைக்கு தான் கஸ்டமர்ட்ட பேச ஆரம்பிக்கீறேன் சார். நீங்க தான் ஃபர்ஸ்ட் சார். நீங்க
ஃபோன கட் பண்ணதும் எனக்கு ஒரு மாதிரி வருத்தமா ஆயிருச்சி சார் ஸாரி சார். தயவு செஞ்சி
கம்ப்ளைண்ட் மட்டும் பண்ணிறாதீங்க சார்” அபப்டியே அழ ஆரம்பித்துவிட்டாள்.
என்னங்கடா
இது ரோதனையா போச்சி என எண்ணிக்கொண்டே, “இங்க பாருங்க வேலைக்கு புதுசுனா கஸ்டமர்ட்ட
எப்படி பேசணும்னு ட்ரெயினிங் எடுத்துட்டு வந்து பேசுங்க, புரியுதா?”
“சார்,
ஒழுங்கா அக்கவுண்ட்ல பேலன்ஸ் மெயிண்டைன் பண்ணாத கஸ்டமர்ட்ட மொத பேசி ட்ரெயினிங் எடுக்க
சொல்லிருக்காங்க.. அதான் சார் உங்களுக்கு கால் பண்ணேன்”. முதலில் என்னை சாகடிக்க நினைத்தவள்
இப்போது அவள் கம்பெனியுடன் சேர்ந்து என்னை பிச்சைக்காரனாகவும் ஆக்கிவிட்டாள்.
“ஓ
ஒங்க பேங்க்ல பேலன்ஸ் கம்மியா வச்சிருக்கிறவன் எல்லாம் செத்துப்போயிரணுமா?” வழக்கம்
போல ஃபோனை தோளில் முட்டுக்கொடுத்து சொறுகிக்கொண்டு மீண்டும் பைக்கை ஓட்ட ஆரம்பித்தேன்.
“சார்
அப்படி இல்ல சார். இப்ப பாருங்க சார் நான் கரெக்ட்டா சொல்றேன். எங்க பேங்க்ல புது இன்சூரன்ஸ்
ஸ்கீம் போட்டிருக்கோம் சார். அதுல உங்க அக்கவுண்ட்ல இருந்து டைரக்ட்டா வருசத்துக்கு
பத்தாயிரம் ரூவா பிடிச்சிருவோம் சார். மொத்தம் ஆறு வருசம் சார். நீங்க திடீர்னு செத்துட்டா
உங்களுக்கு 2லச்ச ரூவா கெடைக்கும் சார். ஆக்ஸிடெண்ட் ஆயிட்டா கூட பாதி அமௌண்ட் வாங்கிரலாம்
சார்” – ஏதோ சாவதையும் ஆக்ஸிடெண்ட்டாகி ரோட்டில் விழுந்து கிடப்பதையும் ஒரு பம்பர்
லாட்டரி விழுவது போல் சொல்லிக்கொண்டிருந்தாள் – “ஒரு வேள நீங்க சாகல, உங்களுக்கு ஆக்ஸிடெண்ட்டும்
ஆகலேன்னா நாங்களே ஆறு வருசத்துக்கு அப்புறம் உங்களுக்கு ரெண்டு லச்ச ரூவா குடுத்துருவோம்
சார்..”
எனக்கு
அவள் குரல் பிடித்திருந்தாலும் அவள் பேசுவதை கேட்க முடியவில்லை. வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்
ஒருவனிடம் ’உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிட்டா?’, ‘நீ செத்துப்போயிட்டா?’ என்று கேட்பது எவ்வளவு
வெறுப்பு ஏற்படுத்தும் என்பது அவளுக்கு தெரியுமா என்ன? “சரிங்க நான் ஏற்கனவே இன்சூரன்ஸ்
எல்லாம் போட்ருக்கேன், எனக்கு உங்க இன்சூரன்ஸ் வேண்டாம்”
“சார்
ப்ளீஸ் சார் இது சூப்பர் ஸ்கீம் சார். நீங்க ஆறு வருசம் மொத்தமா அறுபதாயிரம் கட்டணும்னு
கூட அவசியமே இல்ல சார். மொத வருசம் கட்டிட்டு திடீர்னு செத்துப்போயிட்டா கூட……………”
“அடியே,
திரும்ப திரும்ப ஏன்டீ அதையே சொல்லித்தொலையுற?”
“என்ன
சார் திட்டுறீங்க?”
“அப்றம்
என்னடீ? எப்ப பாத்தாலும் சாகுறதையே பேசுற?”
“சார்
அதான் சொல்லிட்டேனே சார், நான் புதுசுன்னு. எனக்கு மத்தவங்க மாதிரி பேச வராது சார்.”
“அதுக்காக?
மொத பேச கத்துக்கிட்டு பேசு. வேற எவன்ட்டயும் இப்டி பேசிறாத. தேடி வந்து ஒதப்பான் உன்னைய.
எனக்கு நெறையா வேல இருக்கு நான் ஃபோன வைக்கிறேன்” டக்கென்று ஃபோனை எடுத்து பாக்கெட்டில்
போட்டுவிட்டேன்.
கொஞ்ச
நேரத்தில் ஒரு மெசேஜ் டோன் கேட்டது, அவங்க கஸ்டமர் கேர் பெண் எப்படி பேசினாள் என கேட்டு.
‘வெளக்கமாத்து கொண்டையாட்டம் பேசுனா’னு ரிப்ளை அனுப்பலாம்னு பாத்தா அந்த ஆப்சன் இல்ல.
மேசேஜில் கவனம் செலுத்தியதால் சாலையை கவனிக்க தவறிவிட்டேன். பைக் அப்படியே கிராஸாக
சாலையில் வலப்பக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஃபோனை மீண்டும் பாக்கெட்டிற்குள்
போட்டுவிட்டு சாலையை பார்க்கும் போது எனக்கு எதிரே மரண வேகத்தில் ஒரு இன்னோவா கார்
ஹார்ன் அடித்துக்கொண்டே முன்னேறி வந்தது. என் வண்டியை நிறுத்தவோ திருப்பவோ கண்டிப்பாக
முடியாது என தெரிந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் வேகமாக ஆக்சிலேட்டரை மட்டும்
கொடுத்து வண்டியை அது சென்ற திசையிலேயே செலுத்தினேன். எப்படியும் இன்னைக்கு நான் காலி
தான் என நினைத்துக்கொண்டேன். எனக்கு மிக மிக அருகில் என் கால்களை ஒட்டியவாறு இடித்துவிடும்
அளவில் வந்து லேசாக விலகியது அந்த இன்னோவா. என் வண்டி சாலையின் வலது பக்கம் சாலையை
ஒட்டி இருக்கும் மணல் பகுதியில் இறங்கியது.
இதயம்
மிக மிக வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கை கால்களில் நடுக்கம் தொற்றிக்கொண்டது. கண்கள்
லேசாக மங்கலாக தெரிய ஆரம்பித்தன. முகமும் உடலும் குப்பென வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
தொண்டை வறண்டு போய்விட்டது. என்ன நடந்தது, எப்படி தப்பித்தேன் என மனது ஒரு முறை யோசிப்பதற்குள்
மீண்டும் ஃபோன் அடித்தது. அவள் தான்.
“சார்
பேசிட்டு இருக்கும்போதே ஏன் சார் போன வச்சீங்க? கஸ்டமர் கேர் எஸ்.எம்.எஸ்.க்கு கூட
ரிப்ளை அனுப்பாம இருக்கீங்க?” என்னை அரட்டும் தொனியில் கேட்டாள்.
“இங்க
பாரு உன் வாய் முகூர்த்தத்தால இப்ப தான் ஒரு ஆக்சிடெண்ட்ல இருந்து தப்பிச்சிருக்கேன்.
திரும்ப என்ன டென்சன் ஆக்காத, உன் மேல செம கடுப்புல இருக்கேன்” ஆக்சிடெண்ட் ஆன பதட்டத்தில்
நாக்கும் குறலியது, ச்சீ குலறியது.
“சார்
ப்ளீஸ் சார் உங்க ஒரு ஆளுக்கு மட்டும் போடுங்க சார். நீங்க போட்டிங்கன்னா எனக்கு ஒரு 500ரூவா இன்செண்டிவ் வரும்
சார்”
“ஏங்க
உங்க இன்செண்டிவ் கதையெல்லாம் சொல்லியா ஆள் பிடிப்பீங்க?”
“அப்புறம்
எப்படி சார் பேசுறது?”
”எப்படியும்
பேச வேண்டாம் ஆள விடு” இத்தனை நாளாக என்னிடம் பேசிய கஸ்டமர் கேர் ஆட்கள் எல்லாம் தெய்வமாக
தெரிந்தார்கள் என் கண்களுக்கு. இந்த சனியனை எங்கிருந்து பிடித்தார்கள் என எனக்கு தெரியவில்லை.
“சார்
ப்ளீஸ் சார் எனக்காக சார். நீங்க தான் சார் எனக்கு உதவி பண்ணணும் சார். ப்ளீஸ் சார்..”
இவள்
என்னை விடவே மாட்டாள் என நம்புகிறேன். வேறு வழியில்லை. இன்சூரன்ஸ் எடுக்கிறேன் என்று
சொல்லிவிட்டு இப்போதைக்கு சமாளிக்க வேண்டும். பின் இவளின் கஸ்டமர் கேர் நம்பரை பிளாக்
லிஸ்டில் சேர்த்து விட முடிவெடுத்தேன். “என்னம்மா பண்ணணும் உனக்காக?”
“எனக்காக
ஒரே ஒரு பாலிஸி எடுத்துக்கோங்க சார்”
“சரி
ஒரு பாலிஸி எடுத்துக்கிறேன்”
“ரொம்ப
நன்றி சார். உங்க அக்கவுண்ட்ல இருந்து பத்தாயிரம் ரூவா டெபிட் பண்ணிக்கிறோம் சார்”
அவள் குரலில் ஒரு வித சந்தோசம் தெரிந்தது.
“ஹலோ
என் அக்கவுண்ட்ல இப்ப பணம் இருக்காது. நான் செக் அனுப்புறேன்” மிக தெனாவட்டாக தைரியமாக
சொன்னேன். அக்கவுண்டில் பணம் இல்லாதது கூட ஒரு வகையில் நல்லது தான் போல.
“சார்
இப்பத்தான் உங்க அக்கவுண்ட்ல நாப்பதாயிரம் கிரெடிட் ஆயிருக்கு. அதுல இருந்து பாலிஸிக்கு
பணத்த transfer பண்ணிட்டேன் சார். ரொம்ப ரொம்ப நன்றி சார். அடுத்த வருசம் இன்னொரு பத்தாயிரம்
கட்டும் போதும் கால் பண்ணுறேன் சார். இந்த நாள் இனிய நாளா அமைய ஐசிஐசிஐ இன்சூரன்ஸ்ல
இருந்து வாழ்த்துக்கள்” என் பதிலுக்கு எதிர்பாராமல் துண்டித்துவிட்டாள்.
அடிப்பாவி,
பேசிட்டு இருக்கும் போதே காச ஆட்டயப்போட்டுட்டாளே? சம்பளக்காசுல பத்தாயிரம் கோவிந்தாவா?
ரொம்ப விரக்தியாகிவிட்டேன் நான். ஒரு நன்கு பேசத்தெரிந்த ஆள் மூலம் பணம் போயிருந்தாலும்
பரவாயில்லை. இப்படி ஒரு மக்கு பெண்ணால் போயிருச்சே? என்னை நானே நொந்துகொண்டே வண்டியை
ஸ்டார்ட் செய்தேன்.
எப்படி
அந்த பாத்தாயிரத்தை ஈடு கட்டுவது என்கிற நினைப்பில் மூழ்கிக்கொண்டிருந்தேன். ஃப்ரெண்ட்
எவனிடமாவது அட்வைஸ் கேட்கலாம் என்றால் என்னை கிண்டல் அடிச்சே கொன்றுவாய்ங்க. என்ன பண்ணுறது?
ஃபோனை தோளுக்கும் காதுக்கும் மத்தியில் வைத்து திரும்ப அவளுக்கே கால் பண்ணுனேன். அவளே
எடுத்தாள்.. “ஹலோ நான் தான் ராம்குமார் பேசுறேன்”
“எந்த
ராம்குமார்”
“இப்பத்தான்
என்ட்ட இருந்து பத்தாயிரம் ரூவா ஆட்டயப்போட்டியே அந்த ராம்குமார்”
“சார்
சொல்லுங்க சார். இன்னொரு பாலிஸி போடப்போறீங்களா சார்?”
“என்னது
இன்னொன்னா? அம்மா தாயே எனக்கு காசு வேணும்மா.. தயவு செஞ்சி அந்த பணத்த திரும்ப கிரெடிட்
பண்ணிரு.”
“சார்
அந்தப்பணம் வேஸ்ட் ஆகாது சார். சீக்கிரமாவே உங்களுக்கு சொழையா 2லச்ச ரூவாய் வரும் சார்.
எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சார். கவலையே படாதீங்க. கண்டிப்பா உங்களுக்கு ரெண்டு
லட்ச ரூவா கெடைக்கும், நம்புங்க சார்.” என்று சொல்லி மீண்டும் ஃபோனை துண்டித்துவிட்டாள்.
நான்
காதில் இருந்து ஃபோனை எடுத்து மீண்டும் அவளை அழைக்க அவள் நம்பரை கோபத்தில் ஃபோனில்
வேகமாக அழுத்திக்கொண்டே அந்த சாலையின் வளைவில் ஆக்சிலேட்டரை முழுதாக திருக்கிக்கொண்டு
வண்டியை திருப்பினேன். எதிரே என்னை நோக்கி ரெண்டு லச்ச ரூபாய் வேகமாக வந்துகொண்டிருந்தது
ஒரு டிப்பர் லாரி வடிவில்…
அது சரி....!
ReplyDeleteஅவரு முக்கி முக்கி இவ்வளவு பெரிய பதிவு போட்டா நாலே லெட்டர்ல பின்னூட்டம் போட்டா எப்படி பாஸ்.. கொஞ்சம் தாராளமா எழுதுங்களேன்!!
Deleteஎழுத்தாளர் சீனுவுக்கு நீங்க குரு தானே? உண்மைய சொல்லுங்க.. இம்புட்டு நீநீநீநீநீளளளளளளமாவா எழுதறது.. நாக்கு தள்ளிடுச்சு பா படிச்சு முடிக்கறதுக்குள்ள..
ReplyDeleteஹா ஹா ஹா ஆவி பாஸ்.. சுவாரசியத்துல எனக்கு கதையோட நீளம் தெரியல :-))))))
Deleteஇல்ல சீனு தான் என் குரு.. எல்லா புகழும் அவருக்கே...
Deleteஎதார்த்தத்துக்காக சேர்க்கப்பட்டிருந்தாலும் அந்த கடும் சொற்களை கொஞ்சம் நாகரீகமா வெளியிடுவது நல்லது..
ReplyDeleteஹலோ நானும் புத்தக திருவிழா டைம்ல ஒரு பிரபல எழுத்தாளர் ஆகிரலாம்னு ட்ரை பண்ணா விட மாட்டீங்க போலயே...
Deleteகண்டிப்பா உங்களுக்கு ரெண்டு லட்ச ரூவா கெடைக்கும், நம்புங்க சார்.”
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஆரம்பம் முதல் முடிவு வரை கதை நன்றாக உள்ளது... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எம்பூட்டு பெரிய கதை! நிறையப் பேத்துக்கு கஸ்டமர் கேரால நொந்த அனுபவம் இருக்கும்கறதால ரொம்ப ரசிக்கப்படுற கதைன்னும் சொல்லலாம். கதையப் படிச்சதுலருந்து ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். //ஃபோனை இப்படி தலைக்கும் தோளுக்கும் இடையில் வைத்து பேசுவது ஒரு வித கிக் தான். மத்திய வயது ஆண்கள் எல்லாம் பொறாமையோடு பார்ப்பார்கள்.. நாம் இன்னும் யூத் என்று காட்டிக்கொள்ள அது ஒரு தைரியமான வழி..//ன்னு எழுதியிருக்கீங்க... ஆக, நீங்க யூத்னு காட்டிக்கத்தான் ட்ரை பண்றீங்க... யூத் இல்லன்னு தெரியுது.... ஹி... ஹி... ஹி... (என்னை மாதிரி!)
ReplyDeleteநீங்க கொஞ்சம் பெரிய யூத்.. நான் சின்ன யூத் சார்.. :-)
Delete// ச்சே மாசத்துல நாலு ஒன்னாம் தேதி வந்தா எபப்டி இருக்கும்?//
ReplyDeleteஅதான் 1,11,21,31 ம்னு இருகில்லையா? எல்லாம் ஒன்னாம் தேதிதான் பாருங்க மாசத்துல 4 1ந்தேதி.
செம காமெடி நல்லா சிரிச்சி ரொம்ப நாளாச்சு நன்றி சிவகாசிக்காரன்
ReplyDeleteகதையாகவே இருக்கட்டும்..!
ReplyDeleteசெம கதை
ReplyDelete//கன்னிகழியாத பேச்சிலர். கேர்ள் ஃப்ரெண்டும் கிடையாது. // சைட்ல இப்படியொரு பிட்டு வேறயா.. நீங்க நடத்துங்க சார்வாள்
ReplyDelete//ஒரு பம்பர் லாட்டரி விழுவது போல் சொல்லிக்கொண்டிருந்தாள்// ஹா ஹா ஹா
சுவாரசியமான கதை.. உண்மையிலேயே பத்தாயிரம் கோவிந்தா என்றால் உங்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.. கற்பனை என்றால் ஆழ்ந்த வாழ்த்துக்கள்..
எது எப்படியோ வண்டி ஓட்டும் போது தலைய ஒரு பக்கமா சாச்சி மொபைல் பேசிட்டே வண்டி ஓட்ட வேண்டாம்...
இது வெறும் கதை தான் நண்பா.. என் பெர்சனலோடு ஒப்பிட வேண்டாம்.. :-)
Deleteகதை தொடக்கம் முதல் முடிவு வரை, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். இப்போது இன்சூரன்ஸ்காரர்கள், எமனின் பிரச்சார பீரங்கிகள் ஆகிவிட்டார்கள்.
ReplyDeleteSemma sir....unga language.im unga karpanaithiranum super sir...but over bad words....
ReplyDeleteசரிங்க... இனிமேல் திருத்திக்கிறேன் என்னைய...
Deleteபத்தாயிரம் தானே... இங்கு பல லட்சங்கள் ஏமாந்த ஆட்கள் இருக்கிறார்கள்... தானாக எதிரே எது வந்தாலும் "சென்றவர்களும்" இருக்கிறார்கள்...
ReplyDeleteஇனி கதையாக இருக்கட்டும்...
அதென்ன டிப்பர் லாரி ,பாடியை அள்ளிட்டுப் போக வசதியாய் இருக்குமென்றா ?
ReplyDeleteத ம 3
கதை தான், பெர்சனல் எதுவும் இல்லன்னு சொல்லிட்டீங்க, இருந்தாலும்......
ReplyDeleteகன்னி கழியாத ஆம்பளைன்னு நம்பறேன், கேர்ள் பிரெண்ட் இல்லாதவர்னு சொன்னா நம்பமாட்டேன்....
சரி இப்படியே பில்ட்-அப் பண்ணி விடுங்க...
Deleteநீநீ......ண்ட கதை!
ReplyDeleteசில சமயங்களில் இவர்கள் தொல்லை அதிகம் தான்!
ராம், உங்களுடைய இந்த கதையின் நடையை கூர்ந்து கவனிக்கையில் எனக்கு நீங்கள் சேத்தன் பகத் உம் சுஜாதாவும் கலந்த கலவையாக தெரிகிறீர்கள்.
ReplyDeleteநான் பல இடங்களில் சிறிது விட்டேன் . சிந்திக்கவும் வைத்தீர் நண்பரே..
வாங்க...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு
வலைச்சர தள இணைப்பு : கற்றுக்கொடுக்கும் பதிவர்கள்
நன்றி அண்ணே.. இதோ பார்க்கிறேன்
Deleteபெரிய கதையாவே தோணல ராம் ....அட்டகாசம் .சுவராஸ்யமான போக்கில் பெருசு ,சிறுசு என்றெல்லாம் தோணவே இல்ல தொடர்ந்து கதை சொல்லுங்க ..
ReplyDeleteநன்றிண்ணே :)
Delete