சிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..

Thursday, September 27, 2012

’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’ - கடந்த ஒரு மாதமாக நாளிதழ்களின் எதாவது ஒரு பக்கத்தில் இது போன்ற ஒரு செய்தி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.. சிவகாசி வெடி விபத்துக்கு பின் மீடியாவில் இருந்து ஃபேஸ்புக் குரூப் வரை அனைவரும் அவரவருக்கு தெரிந்த எங்கிருந்தோ அறிந்த பல விசயங்களை எழுதித்தள்ளுவது வாடிக்கையாகிவிட்டது. அதில் பலவும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவையாகவும், உண்மையை எடுத்துரைப்பதாய் இல்லாமலும் இருப்பதால், சிவகாசிக்காரன் என்கிற உரிமையிலும், என் தகப்பனார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார் என்கிற தகுதியோடும் இங்கிருக்கும் உண்மையை சொல்கிறேன்.. 



இங்கு யாரும் வேண்டுமென்றே உயிர் போக வேண்டும் என்று வேலை செய்வதுமில்லை, ஃபயர் ஆபிஸ் கட்டி ஆட்களை வேலைக்கு அமர்த்துவதுமில்லை. சிவகாசி என்றால் அச்சு, தீப்பெட்டி, வெடி தொழில் தான் என்று எங்கள் தலையில் எழுதி வைத்து படைத்துவிட்டான் ஆண்டவன். இங்கிருக்கும் எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஒருவர் இது சம்பந்தப்பட்ட ஆலையில் வேலை செய்துகொண்டிருப்போம். ‘எத்தன நாள் தான்டா கூலிக்கு மாரடிக்குறது?’ என்று எண்ணும் சிலர் தாங்கள் பிறந்ததில் பார்த்து வளர்ந்த அந்த தொழிலில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

அச்சுத்தொழில் என்றால் மிசின் வாங்க வேண்டும், முடிந்தால் ரெஜிஸ்ட்ரேசன் செய்து டின் நம்பர் பெற வேண்டும் என்று மட்டும் தெரியும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை என்றால் லைசன்ஸ் வாங்கி இடம் கட்டினால் போதும் தொழிலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம். அதிலும் பலர் ஏற்கனவே லைசன்ஸ் பெற்றிருக்கும் ஃபேக்டரியை லீசுக்கு எடுத்து தொழில் செய்வர் (இது சட்டப்படி தவறு). தொழிலை முறையாக கற்றுக்கொண்டோ, அல்லது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்வதற்கு இங்கு யாரும் அய்ய நாடார், சண்முக நாடார் பரம்பரை இல்லை. உங்கள் ஊரில் உங்களுக்கு எலெக்ட்ரிக் கடை, செல்ஃபோன் கடை, மளிகை கடை வைக்கும் ஆசை இருப்பது போல் எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு பட்டாசு ஆலை ஆரம்பிக்கும் ஆசை இருக்கும்.




இந்தியாவின் 75% அச்சு தேவைகளை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒரே ஒரு அச்சுத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரி தான் இருக்கிறது. 80% தீப்பெட்டி தேவையையும், 90% பட்டாசு தேவையையும் பூர்த்தி செய்யும் சிவகாசியில் அது சம்பந்தமான படிப்பையோ அறிவுரையோ வழங்கோ ஒரு கல்லூரியோ அரசு மையமோ கிடையாது என்பது வேதனையான விசயம். இவ்வளவு சிறு தொழில் மிக்க ஊரில், மக்களுக்கு விழிப்புணர்வும் சிறு தொழில் முனைவோர்க்கு அறிவுரையோ சொல்லும் அளவுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லையென்றால், தொழில் தொடங்க நினைப்பவன் நீங்கள் ஆரம்பிக்கும் வரை காத்திருப்பானா? அவனுக்கு அடுத்த வேளை சோறு வேண்டும். லைசன்ஸ் பெற்று (சாதா வெடிகள் செய்யும் கலெக்டர் லைசன்ஸ் மட்டுமே இங்கு நான் குறிப்பிடுவது, வானவெடிகளுக்கு நாக்பூரில் இருந்து லைசன்ஸ் பெற வேண்டும். இங்கு ஒரு சில ஃபேக்டரிகளில் மட்டுமே அந்த நாக்பூர் லைசன்ஸ் உள்ளது), ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத காட்டில் இடம் வாங்கி கட்டிடம் கட்டிவிட்டு தொழிலை தொடங்கி விடுவான் அவன்.

தொழில் தொடங்க எந்த விதமான உதவியோ வழிகாட்டுதலோ கொடுக்காத நம் அரசு அவன் தொழிலை ஆரம்பித்தவுடன் மிக வேகமாக வந்துவிடும், அதிகாரிகளின் மூலம். வரும் அதிகாரியாவது சரியானவனாக இருப்பானா என்றால் கிடையாது. “நாளைக்கு உன் ஃபேக்டரிக்கு செக்கிங் வாரோம்” என்று முன்னக்கூடி சொல்லி வைத்துவிட்டு வரும் ‘நல்ல’அதிகாரிகள் அவர்கள். மறுநாள் அவர்கள் வரும் போது பெரும்பாலும் ஃபேக்டரிக்கு லீவு விடப்பட்டிருக்கும், இல்லையென்றால் மேம்போக்காக பார்த்துவிட்டு போய் விடுவார் நல்ல அதிகாரி. அவருக்கு செக்கிங் வந்த அன்றோ அல்லது மாதமொரு முறையோ கவனிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி ‘நல்ல’ அதிகாரியாய் இருப்பார்கள்.

இன்னும் சில ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்கள் இருக்கிறார்கள். முன்னறிவிப்பு இல்லாமல் ஃபேக்டரிக்கு வரும் அவர்களாவது சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என நீங்கள் நினைத்தால் உங்களை போல் பச்சை மண்ணும் யாருமே இருக்க முடியாது. வேகமாக ஃபேக்டரிக்குள் வரும் அவர்கள் வானவெடிகளுக்கான லைசன்ஸ் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். பெரும்பாலும் அது இருக்காது. “அண்ணாச்சி என்ன நீங்க லைசன்ஸே இல்லாம ஃபேன்ஸி ஐட்டம் தயாரிக்குறீங்க?” என்பார் முகத்தை கொஞ்சம் முறைப்பாக வைத்துக்கொண்டு. அடுத்து  குடவுனில் பார்ப்பார். “அண்ணாச்சி உங்க குடவுன் அளவுக்கு இவ்ளோ ஸ்டாக் வைக்க கூடாதுல?” என்று நம்மிடம் அடுத்த கேள்வி கேட்பார். “யார கேட்டு இவ்ளோ பேர அளவுக்கு அதிகமா வேலைக்கு வச்சிங்க?”, “வெடியெல்லாம் ஏன் இப்படி பாதுகாப்பு இல்லாம வெளியில வச்சிருக்கிங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போவார். கடைசியில் “உங்க மேல கேஸ் போட்டு லைசன்ஸ் கேன்சல் ஆகுற அளவுக்கு மோசமா இருக்குண்ணாச்சி உங்க ஃபேக்டரி” என்று முடிப்பார். நம்ம ஆள் ’போச்சி அவ்வளவு தான் நம்ம லைசன்ஸ்’ என்கிற பயத்தோடு, “சார் சாரி இனிமேல் எல்லாம் சரி பண்ணிறேன் சார்” என்பார்.. நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசருக்கு சாரி சொன்னால் தான் பிடிக்காதே?!

”என்ன அண்ணாச்சி, இவ்ளோ பிரச்சனைய வச்சுக்கிட்டு அசால்ட்டா சாரினு சொல்றீங்க? இது எவ்வளவு மோசமான விசயம் தெரியுமா? கண்டிப்பா லைசன்ஸ் கேன்சல் ஆகிரும்” என்பார். இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அதோடு கிளம்பியிருக்க வேண்டும். அந்த மோசமான ஃபேக்டரியின் லைசன்ஸை கேன்சல் செய்திருக்க வேண்டும். அப்படி ஓரிருவருக்கு கேன்சல் செய்திருந்தால் இந்நேரம் எல்லா முதலாளிகளும் ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அந்த நல்ல ஆபிசர் மாதிரி 2000, 5000ரூபாயோடு கிளம்புபவர் இல்லையே? ஸ்ட்ரிக்ட்டா டியூட்டி பாக்குறதுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கே? பல்க்கா முதலாளிகளிடம் கறந்து விட்டு, “சரி சரி நான் பாத்துக்குறேன், இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க, என்ன?” என்று வார்னிங் செய்வது போல் வருங்கால உயிர்பலிக்கு தேதி குறித்துக்கொடுப்பார்.. 




அடுத்த முக்கியமான விசயம் இங்கு வீடுகளிலேயே நடக்கும் பட்டாசு உறப்த்தி. ஆலைகளில் ஏற்படும் விபத்து அங்கிருப்பவர்களை மட்டும் கொல்லும். ஆனால் வீட்டில் பட்டாசு உற்பத்தியின் போது விபத்து ஏற்பட்டால், அந்த குடுயிருப்பு பகுதியே முழுவதுமாக அழிந்து போய்விடும். ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரியும் இது வரை வாய் திறந்ததாகவோ, ஃபைன் போட்டதாகவோ, அட்லீஸ்ட் லஞ்சம் வாங்கியதாகவோ கூட தகவல் இல்லை. ஏன்? ஏன்னா அந்த மாதிரி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் எல்லோரும் சேரிப்பகுதிகளில் ஒன்றாக வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீது எந்த அரசோ அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டு, அட்வான்ஸை திரும்ப கேட்டால், “என் முதலாளி என்னை ஜாதியை சொல்லி வைகிறான்” என்று புகார் செய்யும் இவர்கள் மேல் யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

கடந்த ஞாயிறன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பட்டாசு விபத்துக்கு இரங்கல் செய்வது போல் ஒரு கூட்டம் போட்டிருந்தார் சிவகாசியில்.  ஊரில் இருக்கும் பல முதலாளிகளிடம் அந்த கூட்டத்திற்காக பணமும் வசூலிக்கப்பட்டது. பணம் கொடுக்கும் போது பல சிறு முதலாளிகளும் கட்சியினரிடம் “உங்க தலைவர, கவர்மெண்ட் ஆபிஸர பத்தி பேச சொல்லுப்பா, அவங்க முறையா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்” என்று கூறியிருக்கின்றனர். கட்சியினரும் “என்ன மொதலாளி? அதுக்குத்தானே இந்த கூட்டமே? எங்க தலைவர பாருங்க, நாளைக்கு எப்படி பேசுறாருன்னு.. சும்மா எல்லாரையும் கிழிச்சு எடுத்துருவாரு”னு சொல்லிட்டு போனவங்க தான்.. ஞாயிறு மீட்டிங்கில் கிருஷ்ணசாமி பேசுகிறார், “பணவெறி பிடித்த முதலாளிகளால் தான் விபத்துகள் நடக்கின்றன” என்று. தன் மக்களுக்கு அவர் அறிவுரை சொல்லியிருக்கலாமே, “நீங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாமல் வெடி உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள்” என்று? சொன்னால் ஓட்டு கிடைக்காதே?!

நான் முதலில் சொன்னது போல் விபத்து நடக்கவேண்டுமென்று யாரும் தொழில் தொடங்குவதில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் தொழில் பற்றிய பாதுகாப்பு முறைகளும் சொல்லிக்கொடுக்க அரசு ஒரு அடியும் எடுத்து வைக்காத போது, தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவன் எங்கு டியூசன் போய் கற்றுக்கொள்வான் இதையெல்லாம்? கிருஷ்ணசாமி போன்று விளம்பரத்துக்கு ஊருக்கு வரும் அரசியல்வாதிகளாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுவார்கள் என்றால், அவர்களும் தொழிலாளி முதலாளி என்று சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் என்று கூவுகிறது. சிவகாசியிலும் மற்ற ஊர்களில் இருப்பதை போல டீக்கடையிலும், சிறு அச்சகங்களிலும், ஹோட்டல்களிலும் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் முறை எங்கிருந்தாலும் அதை போக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வகையில் பட்டாசு ஆலைகளில் 95% குழந்தை தொழிலாளர்கள் கிடையாது.. அதற்கு காரணம் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று முதலாளிகள் உணர்ந்து கொண்டதால். இந்த மாதிரி மற்ற விசயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சென்ற வார விகடனில் காளீஸ்வரி ஃபயர் வொர்க்ஸ் குரூப் முதலாளி திரு.A.P.செல்வராஜ் அவர்கள் சொன்னது தான் நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல வசதியான மருத்துவமனைக்கு அரசின் நிதித்துறை அனுமதி மறுத்துள்ளது, தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் பட்டாசு தொழில் பற்றிய சட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சரியான Institute வேண்டும் போன்ற நல்ல தகவல்களை சொல்லியிருந்தார். மற்றபடி அந்த கட்டுரையில் அவர்கள் போட்ட படங்களும் குறிப்பிட்ட செய்திகளும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தன.. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அரசின் மீது யாரும் குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே எல்லோரும் முதலாளி என்றும், குழந்தை தொழிலாளர் என்றும் மேம்போக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். 

எல்லா பிரச்சனைகளுக்கும் முதலாளிகளே காரணம் அல்ல. கவனக்குறைவான தொழிலாளர்களும் காரணம். அவர்களுக்கு தாங்கள் சார்ந்த வேலையில் சிறு தவறு கூட என்ன மாதிரி விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும். மற்றபடி ஏற்படும் எல்லா விபத்துக்களுக்கும் அரசின் மெத்தனமும், எங்கள் மக்கள் மீது அக்கறை இல்லாததும் தான் காரணம். எங்கள் ஊர் விபத்தில்லாத அமைதியான, பட்டாசுத்தொழில் பாதுகாப்பான சந்தோசத்தை கொடுக்கும் தொழிலாக அமையும் - அரசும் அதிகார்களும் தங்கள் கடமையை சரியாக செய்தால். சிறந்த பட்டாசு துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களை கொண்டு இங்கு முகாம் ஆரம்பிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி சம்பந்தப்பட்ட கல்வியும் வர வேண்டும். லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும். ஜாதியை மீறிய கண்டிப்பு வேண்டும் கடமையில். தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் கண்டும் காணாமல் இருக்க கூடாது. ஃபேன்ஸி வெடிகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதை சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 





ஒரு சின்ன வேண்டுகோள். ஏதோ பெரிய புரட்சியாளன் போல் “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன்” என்கிற உறுதிமொழியெல்லாம் எடுக்க வேண்டாம். பட்டாசு விபத்தால் எங்கள் உயிர் ஒரு நொடியில் போகும் என்றால், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும். அவ்வளவு அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், மரங்களை அழிக்கும் பேப்பரையும், இயற்கையை பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களையும் நிறுத்துங்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிக்கொடுத்தால், முறையான பயிற்சி கொடுத்தால், சட்டங்களை சரியாக அதிகாரிகள் பின்பற்றினால் வருடம் முழுதும் எங்கள் மனதில் சிரிப்பும், தீபாவளியன்று உங்கள் மனதில் சிரிப்பும் என்றும் இருக்கும்..

தான் உயிரை பணயம் வைத்து தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிந்து போவதை பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் எங்கள் ஃபயர்வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்..

16 comments

  1. அருமையான, எல்லோரும் ஆழ்ந்து படிக்க வேண்டிய அவசியமான பதிவு. வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
  2. பட்டாசு தொழிலை பற்றி நல்ல விளக்கம் , அரசு கவனிக்குமா

    ReplyDelete
  3. unmai nanba .ungal sorkal atthanaiyum unmai.the govt SHOULD BE IN SUCH A WAY TO UPLIFT THE INDUSTRY OF ANY TYPE.BUT NO GOVT., WOULD DO IT.GOD ONLY SAVE OUR COUNTRY.

    BY DK.(D.Karuppasamy.)

    ReplyDelete
  4. Yes Sir.. We give it to God's hands.. Lets see..

    ReplyDelete
  5. உரத்த சிந்தனை ராம்குமார்...
    //இங்கு யாரும் வேண்டுமென்றே உயிர் போக வேண்டும் என்று வேலை செய்வதுமில்லை,//
    வயிற்றுப்பிழைப்பிற்கு தான் வேலை செய்கிறார்கள் என்று அறிவோம்.
    தங்கள் வீட்டை சேர்ந்த ஒருவன் தீ விபத்தில் பலியாகும் போது பட்டாசு தொழில் மீது நிச்சயம் வெறுப்பு வரும் தானே!.இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உங்கள் ஊர்க்காரர்கள் கூட ஏதோ வயிற்று பிழைப்பிற்கு ஒரு தொழில் என்று தான் செய்கிறார்களே அன்றி மனம் விரும்பி செய்வதில்லை என்று நினைக்கிறேன்.
    உங்கள் ஊரில் இருக்கும் நபர்கள் பட்டாசு ஆலையை சிறு வயது முதல் பார்க்கும் காரணத்தால் அவர்கள கனவும் பட்டாசு ஆலை ஆரம்பிக்க் வேண்டும் என்று இருப்பது இயற்கை தான்.ஆலைகள் பாதுகாப்பு மிகுந்ததாக இருத்தல் நலம்.

    தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று புரட்சிக்காரன் போல்
    http://vijayandurai.blogspot.com/2012/11/deepavali2.html
    இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன் வாசிக்க தவறாதீர்கள்.உங்கள் கட்டுரை என்னை மாற்று கோணத்தில் சிந்திக்க வைத்தது நன்றி!

    ReplyDelete
  6. சுற்று சூழலை பாதுக்காக்க பட்டாசை தவிற்போம் என்ற கோட்பாட்டில் எனக்கும் நம்பிக்கை குறைவுதான் ,இருந்தாலும் பட்டாசுக்கு அதிகம் செலவு செய்வது என்பது முட்டாள் தனம் தான் என்று எனக்கு படுகிறது.

    ReplyDelete
  7. பட்டாசுக்கு அதிகம் செல்வு செய்வது முட்டாள் தனம் என்று நம்மால் எப்படி கூற முடியும்? அது ஒவ்வொருவரின் விருப்பம் சார்.. உங்கள் கட்டுரையை வாசித்து விட்டு சொல்கிறேன் :-)

    ReplyDelete
  8. i accept all your points. well said. that too about govt officers and govt. sila kotpadukalai kadai pidipathil muthalalikalukkum prachanaigal ullathu. oru pattasu alaikul thepattiyo, kaipaesiyo, thee patra kudiya entha porulum kondu sella kudathu. itharkuritha satta vivarangal eluthu vadivilum, chitirangalagavum anaithu factory vasalilum irukkum. athu mattum illamal vovvoru varudamum urpathiyay arambikkum podhu tholilalikalidam ithai patri eduthuraipar. konja nal mattumae tholilalargal athai kadai pidipar. athan pin maranthu viduvar. ithathu mattum illamal arasanga vithi muraigal anaithayum saryaga kadai pidithalum athigarikalidam prechanai varugirathu. checking varum athigarikal pattasu alaigalai patri therinthu kondu vara vaendum. anal varupavargalukkum athai patri ondrum theriyathu. pattasu tholilsalaigalil nadakkum anaithu thavarukalukkum muthalaligalum, tholilalargalum, athigarikalum, arasangamum anaivarum karanum. ithil orutharai mattum korai sollavum mudiyathu..........................

    ReplyDelete
    Replies
    1. எல்லார் மீதும் தப்பு இருந்தாலும் ஒருவர் திருந்தினால் மற்ற எல்லோரும் தன்னால் திருந்திவிடுவர், அதனால் தான் அந்த ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொன்னேன் :)

      Delete
  9. /// இங்கு வீடுகளிலேயே நடக்கும் பட்டாசு உறப்த்தி. ஆலைகளில் ஏற்படும் விபத்து அங்கிருப்பவர்களை மட்டும் கொல்லும். ஆனால் வீட்டில் பட்டாசு உற்பத்தியின் போது விபத்து ஏற்பட்டால், அந்த குடுயிருப்பு பகுதியே முழுவதுமாக அழிந்து போய்விடும். ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரியும் இது வரை வாய் திறந்ததாகவோ, ஃபைன் போட்டதாகவோ, அட்லீஸ்ட் லஞ்சம் வாங்கியதாகவோ கூட தகவல் இல்லை. ஏன்? ஏன்னா அந்த மாதிரி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் எல்லோரும் சேரிப்பகுதிகளில் ஒன்றாக வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீது எந்த அரசோ அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டு, அட்வான்ஸை திரும்ப கேட்டால், “என் முதலாளி என்னை ஜாதியை சொல்லி வைகிறான்” என்று புகார் செய்யும் இவர்கள் மேல் யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.///இந்த கருத்தில் மாறுபடுகிறேன்,நானும் சிவகாசி தான் எனது ஊரிலும் பட்டாசு தொழில் தான் நடக்குது,கடந்த 10 வருடங்களாக வீட்டில் பட்டாசு செய்ய முடியாத நிலை என்பதே உண்மை, அதே போல் அங்கு ஒரு முதலாளியின் உதவி இல்லாமல் வீட்டில் பட்டாசு செய்ய முடியாது ,சிவகாசி பகுதியில் பட்டாசு தொழில் என்பது நாடார் இன மக்களால் நடத்த படுவது,அவர்கள் மட்டுமே முதலாளி,அவர்கள் உதவி இல்லாமல் திருட்டுத்தனமாக செய்ய முடியாது,நாடார் இன மக்களின் ஆலைகளில் திருட்டு தனமாக இரவு நேரங்களில் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா ?அதனால் எவளவு உயிர் இழப்பு என்பது தெரிமா ? முதலாளிகளின் பணத்தாசை ,தொழிலாளிகளின் வறுமை மட்டுமே காரணம்,இப்பொழுது பெரும் நாடார் இன முதலாளிகள் சிறிய ஆலைகளை முடக்குவது தெர்யுமா ?தெரிய வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த வேற்று சாதி மக்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்வார்கள்,பணத்திற்காக ஏழைகளின் உயிர் பலிஇடப்படுவதை .

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பாக இருக்க சொன்னால் ஜாதி பிரச்சனைகளை கிளப்புகிறீர்கள்.. ரொம்ப நல்லது.. நானும் அப்படியே பேசுகிறேன்.. சிவகாசியில் இருக்கும் மொத்த ஃபேக்டரிகளில் எத்தனை சதவிகிதம் நாடார் வசம் இருக்கிறது என்று தெரியுமா? சரி, விபத்து நடக்கும் ஃபேக்டரிகளில் எத்தனை ஃபேக்டரிகள் பாரம்பரியமாக நடந்து வரும் நாடார் ஃபேக்டரிகள்? மொத்த சதவிகித நாடார் ஃபேக்டரிகள் & கடந்த 5 வருடங்களில் விபத்து நடந்தவைகளில் நாடார் ஃபேக்டரிகளின் சதவிகிதம் என ஒப்பிட்டுப்பாருங்கள்...
      //,கடந்த 10 வருடங்களாக வீட்டில் பட்டாசு செய்ய முடியாத நிலை என்பதே உண்மை, அதே போல் அங்கு ஒரு முதலாளியின் உதவி இல்லாமல் வீட்டில் பட்டாசு செய்ய முடியாது //
      உங்களுக்கு எத்தனை வீடுகளை காட்ட வேண்டும்? முதலாளியின் உதவிக்காக உயிரை பணயம் வைப்பார்களா? என்ன இது கொடுமை?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நான் ஜாதி பிரட்சனை எழுப்பவில்லை,அது எனக்கு தேவையும் இல்லை,நீங்கள் தான் ஒரு சில மக்கள் பணத்திற்காக அரசாங்கத்தை எதிர்த்து வேலை செய்வதாக சொல்றீங்க,நீங்கள் குறிப்பிட்டு ஒரு ஜாதியை சொன்னதால் நானும் சொல்ல வேண்டியதாயிற்று,உங்களின் கூற்று படி மற்ற ஜாதி மக்கள் அனைவரும் திருட்டு தொழில் செய்வதில்லை என்று உறுதிய சொல்ல முடியுமா ?

      சிவகாசியில் இருக்கும் மொத்த ஃபேக்டரிகளில் எத்தனை சதவிகிதம் நாடார் வசம் இருக்கிறது என்று தெரியுமா?///80 % நாடார் இன மக்களின் பாக்டரி தான் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?,

      மொத்த சதவிகித நாடார் ஃபேக்டரிகள் & கடந்த 5 வருடங்களில் விபத்து நடந்தவைகளில் நாடார் ஃபேக்டரிகளின் சதவிகிதம் ///50% மேல்,இல்லை என்று சொல்ல முடியுமா ?

      உங்களுக்கு எத்தனை வீடுகளை காட்ட வேண்டும்?//நீங்க ஜாதி கணக்கு சொல்றீங்களா இல்ல திருட்டு தனமாக வேலை செய்பவர்களை சொல்றீங்களா ?நீங்க எத்தனை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் திருட்டுத்தனமாக வேலை செய்பதை காட்டுறீங்களோ அதை விட அதிகமாக உங்களின் கூற்று படி உயர் ஜாதி மக்களும் திருட்டு தனமாக வேலை செய்பதை என்னால் காட்ட முடியும்,

      முதலாளியின் உதவிக்காக உயிரை பணயம் வைப்பார்களா? ///ஏழை மக்கள் யாருக்கும் உதவி செய்யும் நிலையில் இல்லை ,அவர்கள் செய்ய முடிந்தது உடல் உழைப்பு மட்டுமே,அதற்கு காரணம் நீங்க சொன்னதுதான் //ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு///அட்வான்ஸ் கொடுத்த முதலாளி இரவு வேலைக்கு வந்து தான் ஆகா வேண்டும் என்று சொல்லும் பொழுது முடியாது என்று சொல்ல, ஏழை தொழிலாளி என்ன செய்வான் ?

      விபத்து நடக்கும் ஃபேக்டரிகளில் எத்தனை ஃபேக்டரிகள் பாரம்பரியமாக நடந்து வரும் நாடார் ஃபேக்டரிகள்?/// இந்த பாக்டரியில் விபத்து நடக்க வில்லை என்று உங்களால் உறுதிய சொல்ல முடியுமா ?

      10 வருடங்களுக்கு முன் திருட்டு பட்டாசு எப்படி விற்பனை செய்யப்பட்டது என்று தெரியுமா ?அதற்கு யாரெல்லாம் உடந்தை,பாரம்பரிய கம்பனிகள் என்னவெல்லாம் செய்தது என்று தெரியுமா ?

      என்னுடைய இறுதி கூற்று மனிதனின் பணத்தாசை மற்றும் வறுமைக்கு முன் ஜாதி என்பது இல்லை என்பதே,நீங்க கூறியது போல் குறிப்பிட்ட ஒரு மக்கள் மட்டும் தவறு செய்ய வில்லை,நீங்க குறிபிட்டு ஒரு மக்களை குறை கூறியதால் நானும் பதில் எழுத வேண்டியாதகிற்று.

      Delete
    4. நானும் குறிப்பிட்டு ஒரே ஒரு ஜாதி தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்லவில்லை.. ஒரு இடத்தில் நடக்கும் தவறை சொன்னால், “இங்கு பார் இவனெல்லாம் தவறு செய்கிறான், அங்கு பார் அவனெல்லாம் தவறு செய்கிறான்” என்கிறீர்கள்.. நான் யார் செய்யும் தவறுக்கும் வக்காலத்து வாங்கவில்லை.. நீங்கள் சொன்ன பதில் அனைத்தும் தவறு.. 80% ஃபேக்டரிகள் நாடார் கைகளில் எல்லாம் இல்லை.. எத்தனை நாள் இப்படியே ஏமாற்றப்போகிறீர்கள்? ஆம் திருட்டுத்தனமாக தயாரிப்பதை ஊக்குவிப்பவர்கள் நாடார்களாக இருக்கலாம்.. ஏன் நடவடிக்கை இல்லை என்று தான் கேட்கிறேன் பாஸ்...

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One