யானை - சிறுகதை

Monday, April 25, 2011

எத்தனை முறை பார்த்தாலும் எவ்வளவு தொலைவில் பார்த்தாலும் எப்போதுமே சலிக்காத விசயங்கள் உலகில் உண்டு.. கடல், ரயில், கவர்ச்சி, ஊழல். இந்த வரிசையில் யானையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நாம் பார்த்து அதிசயிக்கும் மிகப்பெரிய உயிரினம். மனிதனைப் புரிந்து கொண்ட மனிதனால் புரிந்துகொள்ளப்படாத உயிரினம்.

ராஜபாளையம் - பழைமையும் கட்டுப்பாடும் சமுதாயத்திற்குத் தேவையான சில நல்ல பிற்போக்குத்தனங்களும் வரைமுறைக்குட்ப்பட்டு வாழும் மக்களும் நிறைந்த ஊர் இது. அந்த ஊரை மிகப்பெரிய வியாபார மையமாக மாற்றிய, மறைந்த தொழிலதிபர் ஒருவரின் பிறந்தநாள். ஊர் மக்களே கலை நிகழ்ச்சி, கோயில் பூஜை, என்று முன்னின்று செய்யும் ஒரு சிறு திருவிழா.

மூன்று நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். கர்னாடக சங்கீதத்திற்கும், கிளாசிக்கல் நடனத்திற்கும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதை நீங்கள் காணலாம். கடைசி நாளில் கோயிலில் பூஜை நடக்கும். அப்போது ஒரு யானை வந்து நிற்கும். ஏன் வந்திருக்கிறோம்? எதற்கு நிற்கிறோம்? என்று தெரியாத பல மனிதர்களுடன் அதுவும் நிற்கும் தான் வந்திருக்கும் வேலை அறிந்து. 

எனக்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் பூஜைகளைக் காண்பதை விட அந்த யானையைக் காண்பதே போதுமானதாய் இருந்தது. என்னை விடக் கொஞ்சமே கொஞ்சம் கறுப்பு! தீயில் கருகிப்போன பெரிய காகிதம் போல் காது. நாயக்கர் மஹாலின் தூணை பெயர்த்துக்கொண்டு வந்து சொறுகியது போல நான்கு கால்கள். எதையும் உவமைக்கு அழைக்க முடியாத அதன் நீண்ட மூக்கு. வாய்க்கும் தும்பிக்கைக்கும் இடையில் ஒழுகிக்கொண்டிருக்கும் தந்தம். அதன் கரிய பெரிய உருவத்திற்கு finishing touch கொடுக்கும் அதன் வால், அதன் நுனியில் வெட்டுவதற்கு பாக்கி இருக்கும் 4,5 முடி. ஒரு அழகான பெண்ணை ரசிக்கும் அதே உணர்வோடும் ஆசையோடும் தேடுதலோடும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த யானையும் ஒரு பெண்ணைப்போல் என்னை சட்டை செய்யவே இல்லை!

அந்த யானை தன் இடப்பக்க பின்னங்காலை ஊனாமல் தூக்கி வைத்துக்கொண்டே நின்றது. ஒவ்வொரு முறையும் அதை ஊன்ற முயற்சி செய்து முடியாம்லே போனது. அதோ இப்போது கூட ஊன்றுவது போல் வந்து வெடுக்கென்று காலை தூக்கிக்கொண்டது, கவனித்தீர்களா? ஏதாவது வலியாயிருக்கும். உடல் எடை பிரச்சனையோ? அப்போது தான் அதன் மேல் அமர்ந்திருக்கும் பாகனைக் கண்டேன். அவன் மேல் புரியாத ஒரு கோபம் வந்தது. கால் வலியில் அவதிப்படும் யானை என்று கூட பார்க்காமல் அதன் மீதே ஏறி அமர்ந்திருக்கிறானே? அதிலும் தெனாவட்டாக அதன் கழுத்தைச் சுற்றி இருகியிருக்கும் கயிற்றில் இவன் கால்களை நுழைத்துக் கொண்டு, அங்குசத்தை செங்குத்தாக அதன் பின்னந்தலையில் வைத்துக்கொண்டு இருந்தான். 

நான் அவனையே முறைத்துக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டான். என் பார்வையை வேறு பக்கம் திருப்புவது போல் பாசாங்கினேன். சில நொடிகளில் மெதுவாக மீண்டும் யானையைப் பார்க்க திரும்பினேன். அவன் என்னையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்தவன் திடீர் என்று யானையில் இருந்து இறங்க ஆரம்பித்தான். 'யான நின்னா யாருனாலும் பாத்துக்கிட்டு தான் இருப்பாங்க. அப்போ மேல இருக்குற உங்க மேலயும் பார்வ படத்தான் செய்யும்' அவன் என்னை எதாவது கேட்டால் இதையே பதிலாக சொல்ல முடிவெடுத்தேன். இறங்கியவன் என் அருகில் வராமல் யானைக்கு அருகிலேயே நின்று கொண்டான். நல்ல வேளை என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியது சிறப்பு விருந்தினர்கள் வருவதைப் பார்த்து என்பது உள்ளே நுழைந்த இரண்டு பி.எம்.டபிள்யூ கார்களைப் பார்க்கும் போதே தெரிந்தது. அந்தப் பாகன் மிகவும் பவ்வியமாக நின்றான்.

சிறுவர்கள் அந்த யானையைத் தொடுவதும், அது அசையும் போது விலகி பயந்து ஓடுவதுமாக இருந்தனர். காரில் இருந்து இறங்கிய அந்தக் குடும்பத்தின் மூத்தவர் யானையை நெருங்கினார். பாகன் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை விரட்டினான். யானையில் தும்பிக்கையில் பூஜை செய்யப்பட்ட மாலை கொடுக்கப்பட்டது. பெரியவர் யானைக்கு அருகில் வந்து வணங்கி நின்றார். பாகன் யானையின் காலை லேசாகத் தட்டினான். அது உடனே அந்த மாலையைப் பெரியவரின் கழுத்தில் போட்டது. பெரியவர் யானையை ஒரு முறை கும்பிட்டு விட்டு சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் வரிசையாக யானையைக் கும்பிட்டனர். அந்தப் பெரியவரின் குடும்பக்குழந்தைகள் யானையைக் கண்டு துள்ளிக்கொண்டிருந்தனர். பாகனிடம் வந்து, "இது கடிக்குமா?" என்றது ஒரு இரண்டடி பட்டுப்பாவாடை. "அதுக்கு பல்லே இல்ல. கோவம் வந்தா மிதிச்சுரும்" என்றான் அவளை விடக் கொஞ்சம் பெரியவன். "இது நல்ல யான, ஒன்னும் பண்ணாது" என்றான் பாகன். 'யே அங்க என்ன செய்றிங்க? இங்க வாங்க" தாயாரின் குரல் கேட்டு அவரிடம் ஓடின குழந்தைகள். 

பெரியவர் வீட்டினர் வந்து பார்த்த யானை ஆதலால், இப்போது ஒவ்வொருவராக வந்து அந்த யானையை கும்பிட்டனர். பாகனால் முதலில் பத்தி விடப்பட்ட குழந்தைகள் மீண்டும் யானையை தொட்டு விளையாடினர். ஒவ்வொருவரும் யானையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர். குழந்தைகளைத் தவிர யாரும் அந்த யானையை யானையாகப் பார்க்கவில்லை. பாகன் முகத்தைப்பார்க்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. யானை தன் வாலையும் தும்பிக்கையையும் உடம்பில் அடித்துக்கொண்டே இருந்தது. இடமும் வலமும் அதன் பெரிய உடல் குலுங்கிகொண்டிருந்தது. அதன் உடம்பில் கட்டியிருந்த மணிகள் குலுங்குவதைக்கேட்கும் போது ஒரு சந்தோசமும் இனிமையும் வந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். பாகனும் தன் அங்குசத்தை யானையின் பார்வையில் படுமாறு வைத்து எங்கோ சென்றுவிட்டான். யானை இப்போது வரை தன் பின்னங்காலை ஊன்றவே இல்லை. அதன் வாலையும் பின் பகுதியையும் பார்க்கும் போது, ஒரு பெருச்சாலியை லென்ஸ் கொண்டு பார்ப்பது போல் இருந்தது. யானை தன் வலதுபுற முன்னக்காலின் நகத்தை ஒட்டியிருக்கும் தோலை தும்பிக்கையின் துணையுடன் இழுத்தது. ஒரு இழுப்புக்கும் இன்னொரு இழுப்புக்கும் சிறு இடைவெளி. அப்போது தான் கவனித்தேன். அதன் முன்னங்காலின் நகத்தில் காயம் பட்டு இன்னும் ஆராமல் இருந்தது. அந்தத் தோலை தான் யானை பிய்த்துக்கொண்டிருந்தது. இப்போது பாகன் வந்தான். யானை காலை நோண்டுவதைக் கண்டு, அவனும் அதற்கு உதவினான்.

அவன் மெதுவாக அந்தத் தோலை யானையின் உடம்பில் இருந்து பிய்த்துவிட்டான். யானை மண்டையை வேகமாக ஆட்டிக்காட்டியது. மீண்டும் பழையபடி தன் உடம்பை தும்பிக்கையாலும் வாலாலும் தட்டிக்கொண்டே இருந்தது. பூஜை முடிந்து எல்லோரும் வந்தனர். பெரியவர் குடும்பம் சென்றது. அவரை தொடர்ந்து, ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். இப்போது கோயிலில் நான், யானை, பாகன் உட்பட ஒரு சிலர் மட்டுமே.

பாகனும் கிளம்பத்தயாராகத்தான் இருந்தான். ஆனால் கிளம்பவில்லை. மெதுவாக அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். "அதான் பூஜ முடிஞ்சுபோச்சில்ல? இன்னும் கெளம்பாம இருக்கிங்க?"

"எங்க ஓனர் வந்து வாடகை வாங்குனதும் தான் போவோம்" என்றான் யானையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே.

"அப்போ இது உங்க யான இல்லயா?"

"எனக்கு சம்பாரிக்கவே என்னால முடியல. இதுல யானய வேற சொந்தமா வச்சுருக்கணுமாக்கும்?" ஒரு வித எரிச்சலுடன் சொன்னான். இப்போது யானையைத் தடவுவதையும் நிறுத்திக் கொண்டான்.

ஓனரை எதிர் பார்த்து கோயில் வாசலைப்பார்த்துக் கொண்டிருந்தான். கைலி கட்டிக்கொண்டு நீண்ட தாடியுடன் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். பார்த்தவுடன் தெரிந்து விடும் அவர் ஒரு இசுலாமியர் என்று. நேராக எங்களை நோக்கி வந்தார். "என்னடா முடிஞ்சதா?" என்றார் பாகனிடம்.

"அப்பதையே முடிஞ்சுரிச்சி. உங்களுக்கு தான் வெயிட்டிங்"

"சரி இரு. நான் கூலி வாங்கிட்டு வந்துறேன்", என்னைப்பார்த்து "ரமேஷ் உள்ள தான இருக்காரு?"

"ஆமா". அவர் சென்றவுடன் பாகனிடம் "இதுக்குலாம் எவ்வளாவுங்க கூலி?"

"தெரியாது. எவ்வளவு வந்தாலும் எனக்கும் யானைக்கும் அது சேராது. இவங்க குடுக்குறது பாயிக்கு பத்தாது. பாயி குடுக்குறது எனக்கும் யானைக்கும் காணாது"

"ஓ.. உங்களுக்கு பாய் சரியான காசு குடுக்க மாட்டாரா?"

"அவரும் என்னங்க செய்வாரு? பாவம்"

பாய் வந்தார். அவர் முகத்தில் ஒரு வித கடுகடுப்பு தெரிந்தது. "காலைல எத்தன் மணிக்கு வந்த?"

 "6மணிக்கு"

"பேசுனதுல பாதி காசு கூட தரல. 'அடுத்த திருவிழால பாத்துக்கலாம்'னு சொல்றாய்ங்க. இந்த நெலமேல போனா அடுத்த திருவிழாவுக்கு நம்ம 3பேருமே இருக்க மாட்டோம்"


பாகன் ஒன்றும் சொல்லாமல் யானையையும் முதலாளியையும் பார்த்தான். "இந்தா 40ரூவா. யானைக்கு இந்தா 200 ரூவா"

"முதலாளி நேத்துல இருந்து ரெண்டு பேருமே சரியா சாப்பிடல" தயங்கினான்.

"கோயிலு சாமி இருக்குற எடம், புண்ணியம், அது இதுன்னு நீ தான நேத்து சொன்ன? இப்ப அனுபவி." முதலாளி அவனை வையவில்லை, ஆற்றாமையில் தான் பேசினார். "ஒன்னு பண்ணு நாளைல இருந்து திரும்பவும் இத தெருவுக்குள்ள கூட்டிட்டு போயி யாவாரம் பாரு. கைச்செலவுக்காச்சும் காசு மிஞ்சும்"

"அது நல்லா இருக்காதுன்னு தான மொதலாளி இங்க வந்தோம்?" பிச்சை எடுக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னான்.

"நீயும் நானும் இந்த சனியனும் ஒழுங்கா தின்னு உசுரோட இருக்கணும்னா அதான் வழி. நீயே முடிவு பண்ணிக்கோ. ஒனக்கு விருப்பம் இல்லாட்டி, சொல்லிரு இத வித்துரலாம்" சொல்லிக்கொண்டே முதலாளி நடக்க ஆரம்பித்தார். பாகன் தொடர்ந்தான், அவன் பின் கடவுள் சாமி என்று சில நிமிடங்கள் முன்பு வரை கும்பிடப்பட்ட யானை என்னும் சனியன் தன் மணிச்சத்தத்தை ஒலிக்கவிட்டுக்கொண்டே நாளைய பிழைப்பை நோக்கி செல்கிறது.

10 comments

 1. அருமை அருமை... நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் நிறைய ஆர்வாத்தை தூண்டுவன கொட்டிக்கிடக்கின்றன என்பதற்கு ராமின் மற்றொரு சான்று. நுண்ணிய கவனிப்பை எடுத்துக் கூறும் எழுத்துக்களில் லயித்துப்போனேன்.. யானை யாரையும் கவனிக்க போவதில்லை எனினும், "அந்த யானையும் ஒரு பெண்ணைப்போல் என்னை சட்டை செய்யவே இல்லை!" என்று கூறி அசத்தி விட்டாய். நண்பா. ஆனாலும் நீ யானையையே ஏன் இவ்ளோ சைட் அடிச்சுருக்கக்கூடது.. பாவம் husband யானை, தெரிஞ்சு இருந்தா இந்த மாத்ரி இருக்கிற இடத்துக்கெல்லாம் போகாதுன்னு சொல்லிருக்கும்...

  ReplyDelete
 2. நல்ல பதிவு. திருவிழா யானையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. பாவம்.


  .

  ReplyDelete
 3. @paul: நன்றி பால்
  @Rathnavel: நன்றி சார்..

  ReplyDelete
 4. மக்கள் கூட்டம் நடுவில் மனிதர்களின் சுக துக்கங்களைக் கூட யாரும் கவனிக்கத்தா இந்த காலத்தில் ஒரு ஐந்துதரிவு ஜீவன் மேல் நீங்கள் கொண்ட பற்று மனதை நெகிழ வைத்தது... காதல் கொண்டவளை கடைக்கண் பார்வையால் ரசிபதைப் போல் இருந்தது உங்கள் வர்ணனை...... ரசித்தேன் சுவைத்தேன்..... அருமை இது பொருந்துமா தெரியவில்லை!!!

  ReplyDelete
 5. @Ranioye: மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு.. :-)

  ReplyDelete
 6. யானைன்னதும் ஓடோடி வந்தேன். துயர முடிவா இருக்கக்கூடாதே சாமின்னு திக்திக்ன்னு அடிக்கும் மனசோடு வாசிச்சேன்.

  நல்லவேளை யானைக்கு ஒன்னும் ஆகலைன்னு திருப்தி இருந்தாலும் எப்பேர்ப்பட்ட ஜீவனை மனுசன் எந்த நிலைக்கு ஆளாக்கி வச்சுருக்கான்னு நினைக்கும்போது மனசு கனத்துத்தான் போச்சு.

  அதனதன் இயல்பிலே உயிர்களை இயற்கையாக வளரவிடக்கூடாதா..........

  பாவம்...... எத்தனைநாள்தான் பசி பொறுக்கும்
  வாயில்லா ஜீவன் :(((((((((

  ReplyDelete
 7. @துளசி கோபால்: மனிதன், தான் உட்பட உலகின் அனைத்து வளங்களையும் (உயிருள்ள & உயிரற்ற) எந்த வித குற்றஉணர்ச்சியோ பயமோ இல்லாமல் தன் சுயநலத்துக்காக அழிப்பது மிகவும் வருந்தத்தக்கசெயல் தான்..

  ReplyDelete
 8. Kalakiteenga boss!!.. நல்ல மொழி ஆளுமை...

  ReplyDelete
 9. இரண்டடி பட்டுப்பாவாடை - nice!!!!!!!!!!!!

  ReplyDelete
 10. யானை என்னும் அந்த அழகிய ஜீவன் பிச்சை எடுக்கும் நிலமைக்கு மாறியது கேடுகெட்ட இந்த மனித சுயநலத்தில் ...
  மிக அருமை யான எளிய நடையில் ....ஒரு கதை ...
  (எதை எனக்கு தெரிந்தது )
  இன்னமும் தன் வழியை அடைத்து கொண்டு வாழும் மனிதனை சகித்து கொண்டு வாழும் யானையை எனாவென்று சொல்லுவது .
  வெறும் கதையாக பாராட்டிவிட்டு செல்லாமல் ... ஒரு ஜீவனின் ஜீவா போராட்டமாய் நினைக்க வேண்டும் ....
  யானையை யானையாக பார்க்கவேண்டும் ...
  கதயை கதையாக இல்லாமல் நல்ல செய்தியாக பார்த்தல் நமக்கு ஏதேனும் தெளிவு வரலாம் ///

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One