சலூன் கடை - கவிதை

Sunday, May 8, 2011

இருக்கும் தொல்லைகளில் பெரிய தொல்லை
ஞாயிற்றுக்கிழமையில் முடி வெட்ட செல்வது தான்..
விடுமுறை தினங்களில்
திரையரங்கிற்கு அடுத்த படியாக
கூட்டம் கூடி - காத்திருத்தலில்
நமக்கு எரிச்சலைத் தருவது
இந்த சலூன் கடைகள் தான்..

சிறு வயதில் இருந்து
'ஒரே அம்பட்டன் கிட்டத்தான்
மசிர குடுக்கணும்' என்பார் அப்பா..
அவருக்குத் தெரியாமல் சென்ற
திருமுருகன் சலூன் - எங்கள் ஊரின்
முதல் குளிரூட்டப்பட்ட ஆண்கள்
அழகு நிலையம்! - ஆம்
அது சலூன் இல்லை.

சுவரில் ஒட்டியிருந்த
கையில் மைக்கோடு
வெள்ளை ஆடை அணிந்த
கறுப்பு மைக்கெல் ஜாக்சனும்
காதிலிருந்து வாய்க்கு நீட்டப்பட்ட மைக்கோடு
கறுப்பு ஆடை அணிந்த
வெள்ளை மைக்கெல் ஜாக்சனும்
வேறு வேறு என்றே நினைப்பேன் அப்போது..

பெரும்பாலும் யார் என்றே தெரியாத
வேற்று மொழி நடிகர்களும்
நடிகைகளுமே சுவரில் - ஆனால் தெரிந்த
முகங்களை விட அழகாக..
அங்கு இருக்கும் இரண்டே தெரிந்த முகம்
சச்சினும் சலூன்காரனும்..
புசு புசுவென்று வெட்டாத (வெட்ட முடியாத)
முடியைக் கொண்ட சச்சினுக்கு
இந்த சுவரில் என்ன வேலை
என்றெல்லாம் யோசித்ததில்லை அப்போது..

தலையில் முடிவெட்டுபவர் தண்ணீரை
ஸ்ப்ரே பண்ணும் போது - மனதில்
ஒரு சின்ன சந்தோசம் அந்த
கொஞ்சமான குளிர்ந்த நீரின் கிளர்ச்சியில்..
'டேய் தண்ணி விடாதடா பிள்ளைக்கு
சளி பிடிச்சுரப்போகுது'
தடுத்துவிடுவார் அப்பா..
கோவம் வரும் அவர் மேல்
தண்ணீர் கிளர்ச்சியை நிப்பாட்டியதற்காக
மட்டும் இல்லை - முடிவெட்டுபவரை
'டேய்' என்று விளித்ததாலும்..

சைக்கிளில் வீடு வரும் போது
'ஏன்ப்பா அந்த அண்ணன
டேய் வாடா போடானு சொல்றிங்க?'
என்னிடம் கோபமாக 'என்னது அண்ணனா?'
பிடரியில் வலிக்குமாறு தட்டினார்.
'அவனலாம் அப்படித்தான் சொல்லணும்
என்ன புரிஞ்சதா?' என்பார்
அப்பாவிற்கு பயந்தா இல்லை
வயதில் மூத்தவரை மரியாதை
இல்லாமல் கூப்பிடுவதில்
இருக்கும் ஒரு குரூர சந்தோசமா
தெரியாது - நானும் அன்றில் இருந்து
'யோவ் ஒட்ட வெட்டிராத'
என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன்.

இன்று வரை அப்படித்தான்
இதோ இப்போது தாடியை
எடுக்கும் போது என்
மூக்கின் அருகில் இரண்டு
கன்னங்களிலும் விரல்களைப்
பதித்தவாறு அவனின்
உள்ளங்கை அதில் ஒருவித
அசிங்கமான பலரின்
புழுக்கம் கலந்த ஈர வாடை.
'யோவ் கைய எடுய்யா
ரொம்ப நாறுது' கையை தட்டிவிட்டேன்.

'தெரியாம தம்பி' என்றார்.
பக்கத்து இருக்கையில் ஒரு
கல்லூரி மாணவன் போன்றவன்.
அவனுக்கு முடி வெட்டும்
பள்ளி மாணவன் போன்றவன்.
"கைய தூக்குங்க அண்ணே
கம்மங்கூட்டில் முடி எடுக்கணும்" என்றான்.
'இருக்கட்டும் தம்பி
வீட்ல நானே எடுத்துக்கறேன்' என்று
சிரித்த முகத்தோடு கூறிச்சென்றான்.
அவமானத்தோடு நானும்
பொறாமையோடு
எனக்கு முடி வெட்டிய அண்ணனும்..

7 comments

  1. முதலில் மனசாட்சியோட எழுதியதற்கு என் வாழ்த்துக்கள் (உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தால்). நம் தந்தையர் காலம் வேறு, நம் காலம் வேறு ராம். ஒருமை விதங்களை பயன்படுத்தக் கூடாது என நம் குழந்தைகளுக்காவது அறிவுறுத்தலாம். இந்த பதிப்பு ஒரு நல்ல படிப்பினை

    ReplyDelete
  2. It is really super one.. :):)

    ReplyDelete
  3. nammil etthanai per ithai unarnthu nadakinranaro theriyavillai.. pinchu ullangkalil nanchai kalakkathan seikirarkal.itai pol innum ethanaiyo visayangkal....

    ReplyDelete
  4. உண்மையான வரிகள். நல்ல கல்வியின் மூலம் இதை அகற்றி விடலாம். இனி வரும் சந்ததியினருக்கு இதை உணர்த்துவோம்.

    ReplyDelete
  5. @paaul, Ranioye & பாலா : நன்றி.. கொஞ்சம் கொஞ்சமாக இந்தமாதிரியான மரியாதைக் குறைவு மறைந்து வருகிறது.. ஆனால் வேகமாக மறைய வேண்டும், மக்கள் உணர வேண்டும்

    ReplyDelete
  6. சக மனிதனை மதிக்கக் கற்றுத் தருவதே நேர்மையின் முதல் படி.
    ஹாட்ஸ் ஆப் ராமு!

    ReplyDelete
  7. @Balaji Saravana: Nandri nanba :)

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One