இன்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்த நாளாம். எங்கள் ஊர் பக்கம் எங்கு திரும்பினாலும் ப்ளக்ஸ் போர்டுகள் தான். அந்த ப்ளக்ஸ்களில் காமராஜர் உப்புக்கு சப்பானியாக மேலே ஒரு ஓரத்தில் ஒரு வளையத்திற்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார், கீழே வரிசையாக நாடார் குல விடிவெள்ளிகள் (அதான் எங்க ஊர் பயபுள்ளைக, ஸ்கூல் பசங்க கூட இதுல இருக்கிறது தான் மிகவும் அபாயகரமான விஷயம்), நடுவில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நமது நாடார் குல நாயகன், சின்ன காமராஜர் சரத்குமார் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார்.
என்னோட டவுட்டெல்லாம் யாருய்யா இந்த சரத்குமாரு? எதுக்கு அவரையும் காமராஜரையும் இணைத்து இப்படி அட்டூழியம் செய்கிறார்கள் என்பது தான். சிறு வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது சக மாணவன் ஒருவன் சொன்னான், "யே சரத்து எங்க சொந்தக்காரு, தெரியும்ல? எனக்கு அதான் அவரப்புடிக்கும்" என்றான். 'பார்ரா இவனுக்கெல்லாம் ஒரு நடிகன் சொந்தக்காரரா இருக்கான். சே நமக்கு யாரும் இல்லையே? போன வாரம் கூட 'ரஜினி நமக்கு சொந்தக்காரன் எல்லாம் இல்ல. இனிமேல் ரஜினி மாமான்னு சொன்ன வாயில சூடு வச்சுருவேன் ரஸ்கல்' என்று அம்மா வஞ்சதை நினைத்துக்கொண்டேன். அப்போது அருகில் உள்ளவன் என்னிடம் கேட்டான். "நீங்க நாடாராடா?" என்று. "தெரிலடா" என்றேன். "நீ நாடாருன்னா சரத்து ஒனக்கும் சொந்தம் தான்டா" என்றான். 4ம் வகுப்புப் பையனின் பேச்சு இது.
'சாந்தரம் வீட்டுக்குப்போனவுடனே அம்மாகிட்ட..... வேணாம் வேணாம் அப்பா வந்ததும் கேப்போம், அம்மா அடிப்பாங்க' என்று முடிவு செய்துகொண்டேன். சாந்தரம் வெளியில் அப்பா சைக்கிள் நிறுத்தும் ஓசை கேட்டது. வேகமாக வெளியில் சென்று அவர் வாங்கி வந்திருந்த பக்கோடா பொட்டலத்தை பிரித்துக்கொண்டே அப்பாவுக்கு கேட்காதவாறு மெதுவாகக் கேட்டேன், "அப்பா நாமா நாடாரா?"
"அத ஏன்டா கண்ணு இவ்ளோ மெதுவா பயந்துக்கிட்டே கேக்குற? தைரியமா சத்தமா கேக்கணும்" இவர் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை, அதான் இவ்ளோ தைரியம். இதே நான் சொல்லிருந்தா இந்நேரம் என் முதுகு வீங்கியிருக்கும். "நாமெல்லாம் நாடார் தான்டா" என்றார்.
அம்மாவுக்கு கேட்டுவிட்டது. "என்னது நாடாரா? பிள்ளைய கெடுத்து குட்டிசுவராக்குறதே நீங்க தான். டேய் இனிமேல் அப்பாகிட்ட போயி நாடாரு, ரஜினின்னு எதாவது கேட்ட தொடையில புடிங்கி வச்சுருவேன். ஹோம் வொர்க் நோட்ட எடு" அம்மாவின் கண்கள் பயமுருத்தின.
நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு மெதுவாக அப்பாவை எழுப்பினேன். "என்னப்பா கண்ணு?"
"யெப்பா சரத்து நமக்கு சொந்தக்காரனாப்பா?"
"இல்லடா கண்ணு யாரு அப்டி சொன்னது?"
"என் கிளாஸ்காரன் சொன்னியான்ப்பா. நம்ம நாடாரு தான? சரத்து நாடாரு எல்லாருக்கும் சொந்தக்காரன்னு அவன் தாம்ப்பா சொன்னியான்"
"இந்தா யே எந்திரி" அப்பா அம்மாவை எழுப்பிவிட்டார். போச்சி இன்னைக்கு நைட்டு அடி தான் என்று முடிவு செய்துவிட்டேன். அம்மா எழுந்தார். "மொத, நாளைக்கு பிள்ளைய ஸ்கூல்ல விடும் போது டீச்சர் கிட்ட சொல்லி வேற எடத்துல ஒக்கார சொல்லு"
"எதுக்குங்க?"
"எவனோ இவேன்கிட்ட சரத்குமாரு நாடாரு, நம்ம சொந்தக்காரன் தான்னு சொல்லிருக்கான். நாலாப்பு படிக்குறவன் பேசுற பேச்சாடீ இது? இந்த வயசுலயே சினிமாக்காரன ஜாதிய வச்சு பிரிக்குறாய்ங்க? நான் சொன்னத மொத செய்யி" என்னைப்பார்த்துச் சொன்னார் "கண்ணு, கண்ட கண்டவன எல்லாம் சொந்தக்காரன்னு சொல்லக்கூடாதுடா' என்று சொல்லி என்னைத் தூக்கி சுவரில் தொங்கும் காமராஜரின் படத்திற்கு அருகில் கொண்டு சென்று "இவரு தான் நம்ம சொந்தக்காரரு, ஒனக்கு தாத்தா, சேரியா?" என்றார்.
எனக்கு அந்த வயசான ஆளைப்பிடிக்கவில்லை அப்போது. இப்போது விவரம் தெரிந்தவுடன் காமராஜரைப் பிடிக்கிறது, ஆனால் அப்பா அன்று சொன்னதும் தவறு என்றே படுகிறது. காமராஜர் வேறு ஜாதியாய் இருந்திருந்தால் என் அப்பாவிற்கு இந்த அளவிற்குப் பிடித்திருக்காது. நடிகனை ஜாதி வைத்து பிரிக்கக்கூடாது என்றவர் காமராஜரை மட்டும் அப்படி பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் என் அப்பா அளவிற்குக் கூட யோசிக்காத பல அரைவேக்காடுகள் படித்தும் விவரம் தெரிந்தும் இந்த மாதிரி நடிகர்களை ஜாதிவாரியாகப் பிரித்துக்கொண்டு தேவையில்லாமல் பேனர் கட் அவுட் என்று வைத்து உயிரை வாங்குகிறார்கள். இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு பதிவு. இந்த சரத்குமார் தனது ஆரம்ப கால சினிமா வாழக்கையில் ஜாதியை காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சேர்ந்ததும் தனக்கும் கட்சியில் நடிகன் என்கிற ஒரு நிலையைத் தாண்டிய அந்தஸ்து கிடைப்பதற்காக தன் ஜாதியை காட்ட ஆரம்பித்தார்.
அப்போது அந்த இன மக்களும் இவருக்கு கொஞ்சம் ஆதரவாக இருந்தனர். ஆனால் நக்மாவுடன் சுற்றிக்கொண்டும் தன் மனைவியை விவாகரத்து செய்த போதும் இவரை "எங்க ஆள்" என்று சொல்லிக்கொள்ள பலரும் கூச்சப்பட்டது உண்மை. பின்னர் தான் இவர் தி.மு.க.விற்கு வந்து தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதும் ஒன்றும் நாடார்கள் இவருக்குப் பெரிதாக ஒன்றும் ஆதரவளித்துவிடவில்லை. நாடார்களின் செல்வாக்கு மிகுந்த நெல்லையிலே தான் இவர் தோற்றார். அப்போதும் கூட இவருக்குப் புரியவில்லை ஜாதியில் பெரும்புள்ளியாக இருப்பது மட்டுமே அந்தக் குறிப்பிட்ட ஜாதிக்குத் தன்னை தலைவனாக்கப் போதுமானது இல்லை என்பது. இவரை தங்கள் ஜாதி என்று தான் கூறிக்கொண்டார்களே தவிர தங்கள் தலைவன் என்று யாரும் கூறிக்கொள்ளவில்லை.
அவர்களுக்கும் தெரியும், இந்த ஆளை தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் தன்னை அடுத்த காமராஜராக நினைத்துக்கொண்டு விடுவார் என்பது. ஏற்கனவே சென்ற வருட இறுதியில் சிவகாசியில் நடந்த நாடார் சங்க நூற்றாண்டு விழாவில் இவர் பேச்சுக்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கிறது இப்போது வரை மக்களிடம். எந்தத் தலைவனும் தன்னை தானே தலைவன் என்று சொல்லிக்கொண்டது இல்லை. மக்கள் தான் தலைவர்களை அடையாளம் கண்டு தலைவன் ஆக்குகிறார்கள். ஆனால் இந்த ஆள், ஒரு சமுதாயத்தில் அந்த சமுதாயத்திற்காக இப்போது வரை பாடுபடும் மூத்தோர்களும் நல்ல தலைவனை எதிர் பார்த்து நிற்கும் மக்களும் நின்று கொண்டிருக்கும் ஒரு மேடையில், அந்த நிகழ்ச்சிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிக்கூட போடாமல் சொகுசாக 10நிமிடங்கள் மட்டும் வந்து மேடை ஏறி "நான் தான் உங்கள் தலைவன்" என்று சொன்னால் அதை உடனே நம்பி கைதட்ட மக்கள் ஒன்னும் எம்.ஜி.ஆர் காலத்தில் இல்லையே?!
இவர் இப்போது கூட தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் நாடார் வாக்கு வங்கியை மட்டும் நம்பி நின்றிருந்தால் வழக்கம் போல இன்னொரு தோல்வி தான் மிஞ்சியிருக்கும். மக்களை இவர்கள் இன்னும் இளிச்சவாயர்களாக நினைத்துக்கொண்டு, தான் சார்ந்த ஜாதியை எதாவது ஒரு பெரிய கட்சியில் அடையாளமாகக் காட்டி எதாவது ஒரு பதவியை அடைந்துவிடுகிறார்கள். இவர்களுடைய விசிட்டிங் கார்டை அன்றோடு மறந்துவிடுகிறார்கள்.
இப்போது வரை எனக்கு உண்மையிலேயே இவரது பிறந்த நாள் ஜூலை 14ல் தானா என்று ஒரு சந்தேகம் உண்டு. தன் ஜாதி மக்கள் உயிரையே வைத்திருக்கும் மறைந்து போன ஒரு தலைவரின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளை தன் பிறந்த நாளாக அறிவித்துக்கொண்டால் இவருக்கு அது மக்கள் மத்தியில் தலைவன் என்று கூறிக்கொள்ள சென்ட்டிமெண்ட்டாக உதவும் என்கிற நோக்கோடு கூட இருக்கலாம் அல்லவா?
ஆனால் நாடாரின மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஓரளவிற்கு விவரமானவர்கள் தான். இதை உணர்ந்ததால் தான் சரத்குமாருக்குத் தனியாக நிற்கும் தைரியம் இல்லை. இப்போதும் கூட விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை சரத்குமாருக்கு கணிசமான அளவில் ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாருக்கும் திரையில் காணும் நடிகனை நேரில் காண்கிறோம் என்கிற ஆசை மட்டும் தான் உண்டே தவிர தலைவனாக்கும் ஆசையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் காமராஜரோடு இணைத்து இந்த ஆளை வைத்து போஸ்டர் ப்ளக்ஸ் வைப்பது தான் அசிங்கமாக உள்ளது.
மற்ற இன மக்களும் இப்போது இப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். திரையில் கனவுத்தொழிற்சாலையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் தங்கள் பங்குக்கு இருக்கிறான் என்கிற சந்தோசம் அவர்களுக்குப் போதும். அவனே தலைவனாக நினைக்கும் போது தான் மக்களும் தங்கள் பவரை காட்டுகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது மட்டுமே தலைவனாகத் தகுதி இல்லை என்பதையும் மக்களும் உணர்ந்துள்ளனர்.
ஆனாலும் ஜாதி என்பது அனைத்தில் இருந்தும் தூக்கி எரியப்பட வேண்டும். ஒரு நடிகன் என்பவன் அவனுடைய நடிப்பாலும், தலைவன் என்பவன் நீதி தவராத நடுநிலையான தலைமையாலுமே நம்மைக் கவர வேண்டுமே ஒழிய ஜாதி மூலமாகவோ மதம் மூலமாகவோ கவர நினைத்தால் அது அவனின் முட்டாள் தனம் என்பதையே கார்த்திக்கும் சரத்குமாரும் இன்றைய தேதி வரை நமக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சரி முதலில் சொன்ன அந்த ஸ்கூல் மேட்டரை சொல்லி முடிக்கிறேன். மறுநாள் பள்ளி சென்ற போது வேறு இடம் மாறி உட்கார்ந்து கொண்டேன். அந்தப் பையன் ரீசஸ் பீரியடில் வந்து கேட்டான், "என்னடா நீங்க நாடாரா?"
"ஆமா"
"அப்ப சரத்து ஒனக்கும் சொந்தம் தான்"
"இல்ல எனக்கு காமராஜர் மட்டும் தான் சொந்தம்" வேகமாகத் திரும்பி ஓடினேன் ஒன்றுக்கு அடிக்க..
அருமையான பதிவு.
ReplyDeleteஅருமை ராம்குமார்.
வாழ்த்துக்கள்.
நன்றி சார்.. :-)
ReplyDeleteநல்லா எழுதிருக்கீங்க ராம்குமார்.
ReplyDeleteநன்றி Alice :-)
ReplyDeletesuper
ReplyDeleteSuper pathivu nanbarae. Thanx and go on.Super pathivu nanbarae. Thanx and go on.
ReplyDeleteநன்றி ரா.அசோக் & மாசிலா
ReplyDeleteVery good Point Mr.Ramu.....Nalla Enna ootangal....SundararajanA from Sharjah
ReplyDeleteComedy unakku nalla varuthu Ram . . .// இவர் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை, அதான் இவ்ளோ தைரியம். இதே நான் சொல்லிருந்தா இந்நேரம் என் முதுகு வீங்கியிருக்கும்.// I really laughed out loud . . .
ReplyDeleteஅண்ணா உங்க மூளையைக் கொஞ்சம் கடன் கொடுக்க முடியுமா ?!! நல்ல பதிவு அண்ணா...இது எல்லா இடத்திலும், எல்லா சமூகத்திலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது....இப்போதெல்லாம் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் தீரன் சின்னமலையின் சிலையும் பேனர்களும் பார்க்கலாம்...இதுவரை அவரைப் பெரிதளவில் கண்டுகொள்ளதவர்கள் இப்போது கண்டுகொள்வதன் காரணம், நாடார்களுக்கு காமராஜர் போல், தேவர்களுக்கு முத்துராமலிங்கம் போல், நமக்கும் ஒரு தலைவர் வேண்டும் என்று.....ஏன் திடீர்னு இந்த இன உணர்வுன்னு தெரியல.....ஆனால் அரசியல் வாதிகள் மட்டும் நீங்க சொல்வது போல் நினைப்பதில்லை....அந்த வகையில் கொங்குநாட்டவர் ரொம்ப வேக்யானம் ....அவங்களையே அவங்க நம்பமாட்டாங்க ...!!
ReplyDeleteSuper da :)The same story in my house too...
ReplyDeletejathiya olikka nee enna panna mudiyum nu nenaikira?
ஜாதிய ஒழிக்கவே முடியாது.. பிற ஜாதிக்காரர்களையும் மதித்து வாழந்தாலே போதும்..
ReplyDeleteபாஸ்....சந்தடி சாக்கில் காமராஜரை ஜாதிக்காகத்தான் நேசிக்கிறார்கள், அதுவும் தவறுதான் என்று சொல்லி இருக்கிறீர்கள். இதை ப்பற்றி தனியாக விவாதிக்கலாம்.
ReplyDeleteஇந்த போக்கு சிவாஜி, முத்துராமன் காலத்தில் தொடங்கி விசால் வரை பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது.
ஆனாலும் சரத்தை காமராஜருடன் ஒப்பிடுவது ஓவர் தான்..
I Like You
ReplyDeleteRam,You 've hot very good humor sense.Keep it up.I enjoyed reading the story.
ReplyDeleteஇல்ல எனக்கு காமராஜர் மட்டும் தான் சொந்தம்" வேகமாகத் திரும்பி ஓடினேன் ............super boss
ReplyDeletepjpakshadha@gmail.com
ReplyDeleteநல்லா சொன்னிங்க.
ReplyDelete