மன்னிக்கவும்... இது ஆனந்த தாண்டவம் விமர்சனம் அல்ல!!!

Monday, April 13, 2009


தலைவர் சுஜாதாவின் அருமையான நாவல் படமாக வருகிறதே, என்ற சந்தோஷத்தில் திரையரங்கு சென்ற என் ஆசையில் காந்தி கிருஷ்ணா வாடகைக்கு லாரி பிடித்து மண்ணள்ளி கொட்டிவிட்டார்! 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போதும் நேற்று எழுதியதைப்போல் புதிதாக (அதனால் தான் உன்னை நினைத்து, உன்னாலே உன்னாலே என்று காப்பி அடிக்க முடிகிறது இப்பவும்) இருப்பதே இந்த கதையின் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு கதையை இப்படி சிறுகுழந்தை பேண்டு உலப்பியதைப்போல சொதப்பிவிட்டார்கள். இந்த படத்தில் ஒரு வசனம் வரும். "வண்ணத்துப்பூச்சி பிடிச்சுட்டு அழகா வாழ்ந்த அந்த பொண்ண இப்படி சாகடிச்சுடாங்களே?" என்று. அதே நிலைமை தான் இந்த கதைக்கு, இன்று. அமைதியாய் பலர் நினைவுகளில் கனத்த ஞாபகங்களோடு இருந்த இந்த கதையை கற்பழித்து விட்டார்கள்.
.
.
நாவலில் உயிரோடு நம் கண்முன்னே நடமாடிய ரகுவும், ரத்னாவும், ராடும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிய ஜடங்களாய் வந்துபோயிருக்கிறார்கள்! தமன்னா பரவாயில்லை. கோவிந்தராஜாக வரும் கிட்டி மட்டுமே சிறப்பாக செய்திருக்கிறார். ரத்னா கதாப்பாத்திரத்துக்கு ருக்மிணி பொருந்தவே இல்லை. யாராவது புதுமுகத்தை போட்டிருக்கலாம் (எனக்கு நாவல் வாசிக்கும் போது அல்வா நடிகை கஸ்தூரி தான் ஞாபகம் வந்தார்). அவரை பார்க்கும் போதெல்லாம் "சார் பையன் சார்" என்று அவர் பொம்மலாட்டத்தில் சொன்ன வசனம் தான் ஞாபகம் வந்தது.
.
.
சுஜாதா, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்கேற்ற ஞாயங்கள் சொல்லியிருப்பார். படத்தில் ஒன்றும் இல்லை. நாவலில் மதுமிதாவின் பாத்திரம் மிகத்தெளிவாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால் தானும் குழம்பி படம் பார்ப்பவர்களையும் குழம்ப வைத்திருக்கிறார் காந்தி கிருஷ்ணா. நாவல் வாசிக்காமல் படம் பார்ப்பவர்கள் கதி அதோகதி தான். சினிமாவுக்காக பல விஷயங்களை மாற்றியும் புதிதாகவும் இணைத்துள்ளார்கள். அதில் ஜெயந்தி பாத்திரம் ஓரளவு சரியாக படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சகமாணவனாக வரும் கிருஷ்ணா பாத்திரம் எதற்கு? தேவையில்லாமல் நம்மை டென்ஷன் தான் படுத்துகிறார். அமெரிக்க கலாச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிழி கிழியென்று கிழித்திருப்பார் சுஜாதா. அதையும் படத்தில் மேம்போக்காக செய்திருக்கிறார்கள்.
.
.
படத்தொகுப்பு செய்தவர் ஏதாவது சலூனில் முடிவெட்ட பழகிக்கொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி ஒட்டாமல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கரும் ஏதோ 'சம்பளம் வாங்கினோமே' என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்திருக்கிறார். அடுத்த யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசு என்று அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷும் தன் பங்குக்கு சொதப்பி இருக்கிறார். "பூவினை திறந்து கொண்டு" பாடல் மட்டும் பரவாயில்லை. பின்னணி இசை சுத்த மோசம். ஒரு படத்தில் கோழி பிடிப்பவனையும், திருடனையும், அதுபோல் பலரையும் பிடித்து வந்து சத்யராஜ் கிரிக்கெட் விளையாடுவார். இங்கும் அப்படித்தான் காந்தி கிருஷ்ணா விளையாடியிருக்கிறார். விளையாடலாம், தப்பில்லை. அதை உங்கள் சொந்த கதையில் செய்யுங்கள் திரு. காந்தி கிருஷ்ணா அவர்களே. எங்கள் சுஜாதாவின் கதையை இப்படி நாசமாக்கதீர்கள்.
.
.
இவ்வளவு கடுப்பில் இருக்கும் போது, காந்தி கிருஷ்ணா மேலும் கடுப்பேற்றும் விதமாக ரேடியோ மிர்ச்சியிலும், zee தமிழிலும் வந்து "சுஜாதா மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால் மிகவும் சந்தோசப்படுவார்" என்கிறார். இதற்கு மேல் அந்த கலைஞனை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது.
.
.
திரு. காந்தி கிருஷ்ணாவுக்கு ஒரு வேண்டுகோள், மற்றும் ஒரு எச்சரிக்கை.

வேண்டுகோள் - இனி உங்கள் சொந்த கதைகளை மட்டும் படமாக எடுங்கள்.
.
எச்சரிக்கை - சுஜாதா கதைகளை இனி தொடக்கூட செய்யாதீர்கள்.
.
.
சென்ற பதிவில் காந்தி கிருஷ்ணாவுக்கு திறமை இருக்கிறது என்று கூறியிருந்தேன். இப்போது அதை வாபஸ் வாங்கலாமா என்று பரிசீலித்து வருகிறேன்!

2 comments

  1. Hey nice da. Probaly you should send this to Mr.Gandhi Krishna.Hey sivakasi 50 gone waste da

    ReplyDelete
  2. Till date the worst film i saw ever was "university",but this movie changed it all and has taken the first spot.......i wated 60 though...

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One