பேரை சொல்லவா?

Wednesday, April 22, 2009

"ஏங்க இந்த ஊரு ரொம்ப அழகாவும் அமைதியாவும் இருக்குல்ல?" ஜன்னலில் திரையை மாட்டிக்கொண்டே கேட்டாள் என் மனைவி மோகனா.
.
"ஆமாம்" என்று சந்தோசமாக தலையாட்டினேன்.கல்யாணம் ஆகி மூன்றே மாதங்களில் இப்படி பெயரே தெரியாத ஒரு வடஇந்திய ஊருக்கு, புது மனைவியோடு மாற்றலானால் யாருக்குத்தான் இருக்காது சந்தோஷம்? தனிமையில் இந்த ஊரில் மூன்று பகலும் இரண்டு இரவும் அவளுடன் கழித்த கிறக்கமும் சேர்ந்து கொண்டதால் மனைவிசொல் மந்திரமாகவே பட்டது எனக்கு. நாளை வெள்ளிக்கிழமை; வேலையில் சேரவேண்டிய நாள். அடுத்து சனி, ஞாயிறு. மீண்டும் அதே கிறக்கம் வந்துவிடும் எனக்கு.
.
"நாளைக்கு ஆபீஸ் கிளம்பணும், இல்லையா? அதனால நேத்து மாதிரி இல்லாம இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்குங்க"
.
"இல்ல. நான் லேட்டா தூங்குனாலும் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேன்" குறும்பாக சொன்னேன்.
.
"அப்போ இன்னைக்கு ராத்திரியுமா?" சலிப்பாக சொல்வது போல் நடித்தாள். "உங்களுக்கு வேற நெனப்பே இருக்காதா?"
.
"எதுக்கு இருக்கணும்? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வேற நெனப்பு எனக்கெதுக்கு?"
.
"ஐயோ ராமா....""என்ன, கூப்பிட்டியா?"
.
"ராமானா நீங்க ஒரு ஆள் தானா? நான் அந்த கடவுள கூப்பிட்டேன். ஆபீஸ்ல எப்படி தான் தனியா இருக்கீங்களோ?" .
"வேணும்னா ஆபிஸுக்கும் வந்துடேன். அங்க எனக்கு தனி கேபின் தான்"
.
"சீ.. நெனப்ப பாரு"
.
"எல்லாம் நல்ல நெனப்பு தான்" என்று கூறிக்கொண்டே அவளை அணைத்தேன் மெதுவாக. இனிமையாக கழிந்தது இரவு.
.
மறுநாள் வேலைக்கு கிளம்புகிறேன். ஷூவை துடைத்து கொண்டே,"பாஷை தெரியாத ஊரு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். புது மனுசங்க. கொஞ்சம் பாத்து பழகு"
.
"இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணும். நீங்க தான் வெளிய போய் நாலு பேர்கிட்ட பழகப்போறீங்க. நான் வீட்ல தான இருக்கப்போறேன்?"
.
வருத்தமுடன், "இல்லமா, நம்ம ஊர்லனா வீட்ல அம்மா இருப்பாங்க துணைக்கு. இங்க புது ஊர்ல உன்ன தனியா விட்டுட்டு...."
.
"காட்டுக்கா போகப்போறீங்க? இந்தா இருக்குற ஆபிஸுக்கு போயிட்டு சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துரப்போறீங்க. இதுக்கு இவ்வளவு பில்ட்டப்பா?" வெளியில் பயப்படாதது போல் காட்டிக்கொண்டாலும் மோகனாவுக்கும் உள்ளூர பயம் இருந்தது.
.
கணவன் சென்றதும் கதவை தாழிட்டு கொண்டாள். காலை மணி பத்திலிருந்து மாலை ஆறு ஆகும் வரை எங்கள் இருவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுக்கு மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொண்டோம். உலக கடிகாரத்தின் முள்ளை யாரையாவது வைத்து வேகமாக தள்ளலாமா என்று யோசித்தேன். நல்லவேளை, அதற்குள் மணி ஆறு அடித்தது. விரைந்தேன் வீட்டுக்கு. காலிங் பெல் அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" உள்ளிருந்து ஹிந்தி குரல். மோகனா தான். அவள் ஹிந்தி பேசுவதை கேட்க எனக்கு சிரிப்பாக வந்தது. மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" சத்தமாக கேட்டாள். அவள் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தது.இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்தேன். இப்போது பலமாக கதவை தட்ட ஆரம்பித்து விட்டேன். பயத்தில் அவள் நடுங்க ஆரம்பித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது என் மொபைல் போனுக்கு அவள் கால் செய்கிறாள். 'கண்கள் இரண்டால்...' ரிங்டோன் பலமாக கேட்டது.ஜன்னல் திறக்கப்படும் சத்தம் கேட்டது. கொடிக்காப்பழம் போன்ற இரண்டு கண்கள் லேசாக திறந்த ஜன்னல் வழியாக என்னை பார்த்தன. அந்த கண்களுக்கு 'இவன் நமக்கு பரிச்சயமானவன்' என்று தெரிந்திருக்க வேண்டும். கதவை திறந்தாள்.
.
"உங்களுக்கு எதுல விளையாடுறதுன்னே தெரியாதா?" கோபமாக கேட்டாள்.
.
"ரொம்ப பயந்துட்டியா செல்லம்?"
.
"அப்பறம் பயப்படாம என்ன செய்யுறதாம்?"
.
"சாரி.. சாரி.. ஆமா, ஹிந்தியெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?"
.
"சொல்லவே மறந்துட்டேன்ல?! நாம இந்த ஊருக்கு வாரோம்னு தெரிஞ்ச உடனே எங்க அப்பா இந்த புக் வாங்கி கொடுத்தார்". முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள்.
.
"ஏன்டி, புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஒரு அப்பா கொடுக்குற சீதனமாடி இது?"
.
"அம்பது பவுனும் போட்டு தானடா அனுப்புனாரு?"
.
"அடிங்க.. யாரப்பாத்து டான்னு சொல்ற?"
.
"டி போட்டு பேசாதிங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்? இனிமேல் டி போட்டு பேசுனா, பதிலுக்கு நானும் டா போட்டு பேசுவேன்!"
.
"சரி, சரி, ரொம்ப பேசாத. வீட்டுக்கு என்னென்ன சாமான்லாம் வாங்கனும்னு ஒரு லிஸ்ட் போட்டு வை. நாளைக்கு போய் வாங்கலாம்".
.
.
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங் முடிய இரவு பத்து மணி ஆகிவிட்டது! வீட்டுக்கு வந்து சேர மணி பதினொன்று. இவளுடன் இனி சேர்ந்து கடைக்கு போவதில்லை என்று நாற்பத்தி ஒன்றாவது முறையாக சபதம் போடுகிறேன்.
.
கதவை திறக்கும் போது சொன்னாள், "ஏங்க பால் வாங்க மறந்துட்டேன். இங்க பக்கத்துல எங்கயாவது..."
.
"உங்க அப்பாவா இந்த ஊர்ல பால்பண்ணை நடத்துறாரு எப்போனாலும் வாங்குறதுக்கு? அதெல்லாம் நாளைக்கு காலைல பாத்துக்கலாம். தூக்கம் வருது எனக்கு". என்னை பார்த்து முறைத்து கொண்டே தூங்க சென்றாள்.
.
மறுநாள் காலை."ஏங்க மணி எழாகிடுச்சு. போய் பால் வாங்கிட்டு வாங்க. இன்னைக்கு ஞாயித்து கிழம, அப்படியே கறியும் வாங்கிட்டு வந்துடுங்க"
.
"எல்லாம் அப்பறம் பாக்கலாம். தூங்க விடு மனுஷன"
.
"இப்போ எந்திரிக்கிறீங்களா, இல்ல மூஞ்சில தண்ணி ஊத்தவா?" சொல்லிக்கொண்டே இரண்டு சொட்டு நீரை என் முகத்தில் தெளித்தாள்.
.
"ராட்சஸி, இப்படி என்னை கொடுமைப்படுத்துறியே?" கோபமாக இருப்பது போல் நடித்தேன். மனதுக்குள் 'இந்த பெண்கள் மட்டும் இரவு எவ்வளவு தாமதமாக தூங்கினாலும், காலையில் அலாரம் வைத்தது போல் எழுகிறார்களே?' என்று வியந்தேன். மெதுவாக கண் விழித்து மோகனாவை பார்த்தேன்.
.
இன்று மோகனா மிக அழகாக தெரிந்தாள். காரணம் நான் வாங்கி தந்த வெள்ளை சுடிதார். திருமணத்திற்கு பின் இன்று தான் அவள் முதல் முறையாக சுடிதார் அணிகிறாள். அதுவும் இந்த வெள்ளை சுடிதாரில் பாலுடை அணிந்த பளிங்கு போல் இருந்தாள்.என் கையில் கூடையை திணித்து, "போய் வேகமா வாங்கிட்டு வாங்க. சமையல் செய்யணும்", டீச்சர் போல் கண்டிப்பு காட்டினாள்.
.
வேண்டாவெறுப்பாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். கேட்டை திறந்து நடக்கும் போது "பைக்ல போகலயா?", வாசலில் நின்று கொண்டு மோகனா கேட்டாள்.
.
"வேண்டாம், இது அப்படியே வாக்கிங் போன மாதிரியும் இருக்கும்".
.
"சரி சரி வேகமா வாங்க"தெருவை தாண்டி நடந்த நான், ஊரில் ஒரு விதமான மயான அமைதி இன்று நிலவுவதை உணர்ந்தேன். ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. தெரு முக்கில் எப்போதும் திறந்திருக்கும் பீடா கடை கூட இன்று மூடப்பட்டிருந்தது. 'சரி பஜார் வரை சென்று பார்க்கலாம்' என்று நேராக நடந்தேன்.பஜாருக்கு செல்லும் வழியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு வழியாக பஜாரை அடைந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே இங்கும் கடைகள் அனைத்தும் பூட்டியே இருந்தன. டிசம்பர் மாத பனி அமைதியாக பெய்துகொண்டிருந்தது. இந்த பனியும் மயான அமைதியும் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறி தான் என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
.
மோகனாவிற்கு போன் செய்ய எண்ணி பாக்கெட்டில் கை விட்டு செல் போன் எடுத்தேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. தூரத்தில் ஒரு கசாப்பு கடையில் பெரிய ஆடு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால் கடையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அந்த கடையை நோக்கி நடந்தேன். பக்கத்தில் செல்ல செல்ல அங்கு தொங்குவது ஆடில்லை என்பது தெரிந்தது. கடையை நெருங்கிப்போய் பார்த்தேன். அங்கே தொங்கியது தோல் உரிக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு மனித உடல்! என் உடலில் தீக்குழம்பு ஓடுவது போல் மிரண்டேன்.
.
கையில் இருந்த செல் போனை தற்செயலாக பார்த்தேன். என்னுடைய ஸ்க்ரீன்சேவர் "Dec. 6" என்று காட்டியது! "இன்னைக்கு டிசம்பர் ஆறா?" மெதுவாக முணுமுணுத்தேன். வடநாட்டில் டிசம்பர் ஆறில் கலவரம் மிகுந்து இருக்கும் என்று நாளிதழ்களில் படித்தது எனக்கு தேவையில்லாமல் இப்போது ஞாபகம் வந்தது. திடீர் என்று சத்தம் கேட்டது. ஒரு கும்பல் கத்திக்கொண்டே ஓடி வருவது போன்ற சப்தம். பயத்தில் தொண்டை அடைத்து கொண்டு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன எனக்கு. அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேடினேன். ஒரு கடையில் போடப்பட்டிருந்த மரப்பெட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தேன் மனதில் பயத்தோடு.
.
ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபனை பதினைந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி வந்தது. கும்பலில் சிலர் காவி டர்பன் அணிந்திருந்தனர், சிலர் நெற்றியில் திலகம் இட்டிருந்தனர். துரத்தப்படும் வாலிபன் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். அவனை ஒரு மூலையில் வைத்து இருவர் பிடித்து கொண்டனர். அவன் திமிறினான், கெஞ்சினான், கதறினான். மரண பயத்தின் முகவரி தெரிந்தன அவன் முகத்தில். அந்த கும்பலின் கண்களிலோ கொலை வெறி. கும்பலில், நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முரட்டு ஆள், அந்த முஸ்லிம் இளைஞன் மீது பெட்ரோல் ஊற்றினான்.
.
பின் அவனிடம் கசாப்பு கடையில் தொங்கும் பிணத்தை காட்டி "இவரை கொன்று எங்களிடம் சவால் விட்டீர்களே, அந்த சவாலுக்கு பதில் சொல்லும் விதமாக இன்னும் சிறிது நேரத்தில் நீ இருப்பாய்" என்று ஹிந்தியில் கூறிக்கொண்டே குரூரமாக தீயை பொருத்தி போட்டான். அந்த இளைஞன் மரண ஓலமிட்டான்.
.
உறைந்து போன நான் இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டே, "நான் பத்திரமாய் வீடு போய் சேர வேண்டும் கடவுளே" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். என் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது. அந்த கொலைவெறி பிடித்த கும்பல் மெதுவாக கலைந்து செல்கிறது.
.
"நாம் க்யா ஹே?" என்ற குரல் என் பின்னால் கேட்டது. திரும்பி பார்த்தேன். அந்த கும்பலில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். அவன் கண்களில் மீண்டும் கொலை வெறி தெரிந்தது. கண் முன் மரணதேவன் நிற்பது போல் இருந்தது.மீண்டும் கேட்டான், "நான் க்யா ஹே?"
.
ஏற்கனவே உலர்ந்து போன நாக்கு குளறியது. திக்கி திணறி சொன்னேன், "ராம்".
.
கேட்டவனின் முகத்தில் இருந்த குரூரம் மறைந்து புன்னகை லேசாக தெரிந்தது. "ராம்?" என்றான் ஆச்சரியமாக. என் தோளில் கை போட்டு ஹிந்தியில் கேட்டான், "இன்று எதற்கு வெளியில் வந்தாய்?"
.
"இந்த அளவிற்கு கலவரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை" இன்னும் பயம் தெளியாமல் பதில் சொன்னேன்.
.
"ரொம்ப பயந்துடியா?"
.
"நான் சினிமாவில் மட்டும் தாங்க கொலையெல்லாம் பாத்துருக்கேன்", நான் ஒரு அப்பராணி என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இப்படி சொன்னேன்.
.
அவன் சிரித்துக்கொண்டே, "இது கொலை இல்லையப்பா, வதம்! நம்ம இனத்த அழிக்க நினைக்குற மிருகங்கள வதம் பண்றோம்".
.
இப்போது இன்னும் ஒரு வாலிபனை இழுத்து வந்திருந்தார்கள் அங்கே. என்னிடம் கேட்டது போலவே "நாம் க்யா ஹே?" என்றான். பல முறை கேட்டும் அந்த இளைஞன் பதில் சொல்லாததால் அவனுடைய கால்சட்டையை அவிழ்த்தனர். எதையோ கண்டுபிடித்தது போல, சற்று நேரத்து முன் நடந்த குரூரத்தை மீண்டும் ஒரு முறை நடத்தினர்.
.
கடமையை முடித்துக்கொண்டு, "நாம் ஒரு முறை இவர்கள் மசூதியை இடித்ததற்கு இவர்கள் எத்தனை முறை நம் மக்களை குண்டு போட்டு அழிப்பார்கள்?" என்று மீண்டும் அவன் பக்கம் உள்ள ஞாயங்களை என்னிடம் சொன்னான்.
.
"நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்"
.
"ஏன்? நம் கடமையை பார்க்க வரவில்லையா?"
.
"என் மனைவி தனியாக இருக்கிறாள்" என்று சொல்ல நினைத்தேன். "எனக்கு பயமாக இருக்கிறது"
.
சிரித்து கொண்டே முகத்தை தீர்க்கமாக வைத்துக்கொண்டு, "நான் எதற்காக பயப்பட வேண்டும்? இது நம் தேசம். நீ யாருக்கும் பயப்படாதே. சென்று வா"
.
ஒன்றும் பேசாமல் வேகமாக நடக்க ஆரம்பித்த என்னை மீண்டும் ஒரு முறை அழைத்து, "யாரவது உன்னிடம் பெயர் கேட்டாள் யோசித்து பதில் சொல்". எச்சரித்தான்.'
.
சரி' என்று மண்டையாட்டி விட்டு வீடு நோக்கி விரைந்தேன். அப்போது இன்னொரு தெருவில் நான் ஏற்கனவே கண்டு கேட்ட வசனங்கள் மீண்டும் ஒரு முறை என் முன் உரையாடப்பட்டன. பெயர் மட்டும் வேறாக இருந்தது.
.
"நாம் க்யா ஹே?" மூர்க்கமான குரல்.
.
"கிஷோர்" பயத்தின் முகவரி. எரித்து விட்டார்கள். இந்த கும்பலில் பலரும் தாடியுடன் இருந்தார்கள். எரிந்து கொண்டிருப்பவன் நெற்றியில் திலகம் இருந்தது.
.
'எப்படியாவது வீட்டுக்கு போய்விட வேண்டும்'. யார் கண்ணிலும் படாமல் வேகமாக ஓடினேன். என்னுடைய இரண்டு கால்களையும் பயம் என்னும் கருவி செலுத்தியது. ஒரு வழியாக என் வீடு இருக்கும் தெருவை அடைந்தேன். சிறுது நேரத்திற்கு முன் நான் பார்த்த தெருவா இது என்று சந்தேகப்படும் படியாக இருந்தது தெரு. ரத்தக்கறைகள், பிணங்கள், தீ ஜ்வாலைகள், என்று அழிவின் அடையாளமாய் இருந்தது. சிறிது தூரத்தில், 'நங் நங்' என்று சத்தம் கேட்டது.சத்தம் வந்த திசையில் பார்த்தேன்.
.
சிறுது நேரத்திற்கு முன் என்னிடம் பேசிக்கொண்டிருந்த காவி டர்பன் அணிந்திருந்தவனும், அவனுடன் சிலரும் என் வீட்டுக்கதவை கடப்பாரையால் பெயர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் என் வண்டி எரிந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள்ளிருந்து மோகனாவின் அலறல் சத்தம் கேட்டது. "அய்யோ மோகனா...." வீட்டை நோக்கி வேகமாக ஓடினேன்.


அப்போது என் பின் மண்டையில் ஏதோ ஒன்று பலமாக தாக்கியது. "அம்மா" கீழே சரிந்தேன்.

கீழே விழுந்தாலும் என் கண்கள் சுற்றி நடப்பவற்றை கண்காணித்தன. கண்களை தவிர வேறு பாகங்கள் அசைய மறுத்தன என் உடம்பில். என்னை சுற்றி ஒரு கும்பல் நிற்பதை உணர்கிறேன். சிலர் தாடியோடு, சிலர் கையில், தடியோடு.
.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டுக்கதவை பெயர்ப்பவன் என்னைப்பார்த்து உதவுவான் என்று நினைத்தேன். ஒரே ரத்தம் அல்லவா? ஆனால் அவன் இங்கு நடப்பதை கண்டும் காணாதது போலிருந்தான். எதிரிகளை வதம் செய்யாமல் என் வீட்டின் கதவை பலமாக உடைக்க ஆரம்பித்தான். மோகனாவின் அலறல் சத்தம் கூடியது.
.
"மோகனா எப்படியாவது தப்பித்துவிடு" கண்களின் ஓரம் நீர் கசிகிறது.
.
என் முகத்தில் தடியால் ஒரு அடி விழுந்தது. மீண்டும் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
என் பாகெட்டில் மொபைல் போன் சிணுங்கியது. அது மோகனா தான். என்ன செய்ய முடியும் என்னால்? வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு விட்டது. இப்போது மோகனாவின் அலறல் கெஞ்சுவதாய் இருந்தது.
.
சிணுங்கும் போனை எடுத்து எரிந்து, என் வயிற்றில் ஓங்கி எத்தினான். வலிக்கவில்லை எனக்கு.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டு ஜன்னலில் சிறிது நேரத்திற்கு முன் மோகனா அணிந்திருந்த வெள்ளை சுடிதார் கிழிந்து தொங்குகிறது. இப்போது அவளின் அலறல் அழுகையாக மாறியது. இந்த ஊரையே உதவிக்கு அழைப்பது போல் கெஞ்சியது.
.
கன்னத்தில் அறைந்து கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
வீட்டில் அதிகரித்த அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. உள்ளிருந்த ஆண்கள் வெளியேறினர். என் வீட்டில் அழுக்கான அமைதி உண்டானது. அந்த அமைதியை மோகனாவின் விம்மல் சத்தம் வலிக்க செய்தது.
.
என் வீட்டில் இருந்து வெளியேறி வருபவர்களை கண்டுகொள்ளாதது போல், கடைசியாய் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
சற்று நேரத்துக்கு முன் 'பெயரை கேட்டால் யோசித்து சொல்' என்று சொன்னவன் தன் கும்பலோடு என் மனைவியை தின்றுவிட்டு தன் பான்டை சரி செய்து கொண்டு, இதோ என்னை தாண்டி ஒன்றும் நடக்காதது போல் செல்கிறான்.
.
உயிரில் மிச்சம் உள்ள அனைத்து சக்திகளையும் சேர்த்து அலறினேன், "தேவடியா பசங்களா".
.
அமைதியாய் என் கண்கள் இப்போது மூடுகின்றன, சுற்றி உள்ள ரத்த கரைகளை மறைத்து. இவ்வளவையும் பார்க்க சகிக்காமல் மறைந்திருந்த சூரியன், இப்போது மெல்ல ஒளி பரப்புகிறது!!!
அந்த ஒளி இந்த சமூகத்தின் அசிங்கங்களை அம்மனமாக காட்டியது...

1 comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One