நான்கு மாதங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு சென்றேன். சென்னைக்கு நான் செல்வது அதுவே முதல் முறை. பேருந்தில் செல்லும் பொது பலவிதமான கனவுகளில் மூழ்கியிருந்தேன். என்ன செய்வதற்காக சென்னை செல்கிறேனோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொண்டே பேருந்தில் செல்கிறேன் (தெனாவட்டு, திருப்பாச்சி, தூள், போன்ற படங்களின் பாதிப்பு).
.
தாம்பரத்தில் இறங்கி விட்டேன். "நீ தாம்பரத்துல இறங்கி நிக்கும் போது உன் பஸ் கிட்ட பாரு, நான் நின்னுட்டு இருப்பேன் உனக்காக" என்று சொன்ன உயிர் நண்பன் அரைமணி நேரமாகியும் வரவில்லை. இந்த அரை மணி நேரத்தில் அவனுக்கு இருபத்தி ஏழு முறை மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே, அவன் டி .சி .எஸ் கம்பென்யில் வேலை செய்கிறான். 30,000 சம்பளம் என்று நினைக்கிறேன்.
.
ஒரு பெரிய கிராமத்தின் வாரச்சந்தை போல் அந்த ஊர் காலை ஏழு மணிக்கு காட்சி அளித்தது. மாட்டு வண்டிகளுக்கு பதில் ஷேர் ஆட்டோ, டிராக்டர் பேருந்துகளாக. போன் சிணுங்கியது. என் உயிர் நண்பன் தான் அழைக்கிறான்.
.
"டே, நீ அப்படியே அந்த ரயில்வே ஸ்டேஷன் வழியா பின் பக்கம் வந்தீனா, ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும். அங்க T51 பஸ் புடிச்சி சோழிங்கநல்லூர் டிக்கெட் எடுத்துரு டா. நான் பஸ் ஸ்டாப் வந்து உன்ன பாக்குறேன்."
.
"எனக்கு பாதை தெரியாது டா"
.
"டே நீ இப்போ மெட்ராஸ் வந்துட்ட. இதெல்லாம் எப்போ கத்துக்குறது?"
.
"இல்லடா உங்க ஏரியா எனக்கு தெரியாதே?"
.
"ஒரு டோல் கேட் வரும், அடுத்த ஸ்டாப் இறங்கு"
.
நான் அடுத்து என்ன சொல்கிறேன் என்பதை அறிய விரும்பாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
.
ஒரு வழியாக அங்கு இறங்கி, அவனை சந்தித்து அவன் அறைக்கு சென்றோம். குளித்து முடித்து விட்டு சாப்பிட சென்றோம். 120 ரூபாய் பில் வந்தது.
.
கடைக்கு வெளியில் வந்து சொன்னான், "டே இனிமேல் உன் காசுல நீ சாபிடு என் காசுல நான் சாபிடுறேன்"
.
எப்படி முடியும் என்னால்? கையில் இருப்பதோ வெறும் 1500 ரூபாய். இதை வைத்து இந்த ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அவனிடம் முடியாது என்றா சொல்ல முடியும்? "சரிடா" என்றேன்.
.
மறுநாள் வேலை தேடி நுங்கம்பாக்கம் சென்றேன். இரண்டு கம்பெனி மட்டுமே செல்ல முடிந்தது. சாதகமாக பதிலும் இல்லை அங்கு. ஆண்களும் பெண்களும் பைக் ல் ஒன்றாக கட்டிப்பிடித்து போகும் போது எரிச்சலாக வந்தது. மாலை எட்டு மணிக்கு அறைக்கு வந்தேன். இன்றைய செலவு மட்டும் 120 ரூபாய்.
.
"இங்கெல்லாம் டவுன் பஸ் ஓடாதா டா? டிக்கெட் எக்குதப்பா இருக்கு?"
.
"எல்லாமே டீலக்ஸ் பஸ் தான்"
.
இதே நிலைமையில் போனால் என்னால் ஒரு வாரம் கூட சென்னையில் தாக்கு பிடிக்க முடியாது என்று அறிந்தேன். ஆனால் வேலை இல்லாமல் மட்டும் ஊருக்கு திரும்பக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். தினமும் ஒரு வேளை தான் சாப்பிட்டேன். வண்டியில் செல்வோர்களிடம் லிப்ட் கேட்க கற்றுக்கொண்டேன்.
.
எவ்வளவு தான் சிக்கனமாக இருந்தாலும் என்னால் 15 நாட்களுக்கு மேல் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. கையில் இருந்த காசெல்லாம் கரைந்தது. திரும்பி செல்ல பணமும் இல்லை மனமும் இல்லை. யாரைப்பார்த்தாலும் எரிச்சலாக வந்தது எனக்கு. இந்த ஊரில் காசு இல்லாதவனால் பிழைக்க முடியாது, காசுக்கு மட்டுமே இங்கு மதிப்பு என்று புரிந்து கொண்டேன். நண்பன் என்னிடம் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. அறைக்கு வந்தவுடன் காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டான் என்றால் நான் தூங்கும் வரை பேசுவான். அப்படி யாருடன் பேசுகிறான் என்றே தெரியாது. ஒரு பெண் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். அந்த பெண்ணையும் பல நாட்கள் திட்டியுள்ளேன். 'நம்மட்ட ஒரு பொன்னும் பேச மாட்டேன்குது, இவன்ட காசு இருப்பதால் தான் வலியுரா. நம்மட்ட இருந்தா நம்மட்டையும் வலியுவா' என்று மனதுக்குள் பலவாராக நினைத்துக்கொண்டே தூங்கிவிடுவேன்.
.
'இது தேராத கேசு' என்று சென்னை என்னை ஏளனம் செய்வது போல் இருந்தது. கழுத்தில் யாராவது கம்ப்யூட்டர் கம்பெனி அட்டையை தொங்க விட்டிருந்தால் மனதிற்குள்ளேயே கெட்ட வார்த்தையில் வைவேன் 'இவர்களால் தான் இங்கு விலைவாசி ஏறி விட்டது, ஏழை பிழைக்க முடியவில்லை, கலாச்சாரம் கேட்டுவிட்டது என்று பலவாறாக'.
.
இனிமேலும் இங்கு இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலை வந்தவுடன் நண்பனிடம் 300 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
.
.
.
இப்போது இரண்டு வாரங்களுக்கு முன் எனக்கு சென்னையில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. மாதம் 18000 ரூபாய் சம்பளம். நேற்று தான் நண்பனின் அறைக்கு வந்தேன். நண்பன் என்னிடம் பல மணிநேரம் செலவழித்து பேசிக்கொண்டிருந்தான். டீலக்ஸ் பேருந்தில் சென்றேன். மதியம் அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டேன். ஆண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வண்டியில் பெண்கள் செல்வது அவர்களின் அந்தரங்க உரிமை என்று இப்போது நினைக்க ஆரம்பித்து விட்டேன். சென்னை இப்போது எனக்கு மிக அழகாக தெரிகிறது!
Arumai Ramu..
ReplyDeletesuper ramkumar.Antha ponnu athe mohanava illa ippo veraiya.nalla ezhuthura aana solla vantha karutha kadaisi rendu varila potathala ni solla vanthathu thavari "en chennai payanam" nu katha poyiruthu.Siru kathaikal konjam padikanam.Enga irunthalum mohana kooda santhosama iru.appurum madras ponathala un guru Dr.Mohana maranthuratha
ReplyDelete2 வருசத்துக்கு முன நான் இதே மாதிரி தான் feel பண்ணினேன்...அதெல்லாம் sweet memories
ReplyDeleteithellaam sakajam paas... pakirvukku nanri. vaalththukal
ReplyDeleteஎளிமையும் உண்மையுமான கதை. ஒவ்வொரு சென்னை வாசியும் முதலில் வேலை தேடும்போது எதிர்பார்ப்பு கலந்த கோபத்தோடும் பின்பு வேலை கிடைத்ததும், எவ்வளவு முயற்சி செய்தாலும் நண்பனிடும் எரிச்சல் வரும் மேதாவி ஆவது வாழ்க்கையின் எதார்த்தம். அதை விளக்கும் கதையின் நடை அருமை. வேலை கிடைத்த பின் மாறும் மனநிலையையும் முன்புள்ள மனநிலையோடு ஒப்பிட்டோ அல்லது இந்த மனமாற்றத்தின் பரிணாமத்தை குறிப்பிடாதது சற்று வளுக்கள்.. எனினும் நிதர்சன கதையின் இயல்புத்தன்மைக்கு என் பாராட்டுக்கள்..
ReplyDelete