22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை...

Thursday, June 4, 2009

வாழ்க்கையில் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் உயிரற்ற பொருளை நினைத்து ஏங்கியிருப்போம். இரண்டு வயதில் பக்கத்து வீட்டு குழந்தையின் ரயில் பொம்மை, ஐந்து வயதில் பள்ளி நண்பனின் ரப்பர் வைத்த பென்சில், பத்து வயதில் சைக்கிள், பதினைந்து வயதில் அழகழகான ஆடைகள் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நாம் நினைத்து ஏங்கும் பொருட்கள் பல உண்டு. அவற்றில் சில கிடைத்தாலும், பல நம் கனவுகளில் மட்டுமே இருக்கும். எனக்கும் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆசை இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்தும் போயின. ஆனால் ஐந்து வயதில் இருந்து என்னை பொறாமைப்படவைத்த, ஏங்கவைத்த, அழ வைத்த, சில சமயங்களில் கூனிக்குறுக வைத்த பொருள் ஒன்று உண்டென்றால் அது தொலைகாட்சி பெட்டி தான்.
.
.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் "சந்திரகாந்தா" நாடகம் பார்ப்பதற்கு பக்கத்து வீடே கதி என்று இருப்பேன். மறுநாள் வகுப்பில் நண்பர்களோடு "டே நேத்து அந்த எகு பண்டிதர மாட்டிவிட்டுட்டான் டா" என்று கத பேசுவதில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. ஒரு வாரம் பார்க்க முடியாவிட்டாலும் எதையோ இழந்தது போன்று மனம் வருத்தப்படும்.
.
.
மகாபாரதம் ஒளிபரப்பான சமயம் நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன். அதை மனதில் வைத்து அவள் என்னை ஒரு முறை மகாபாரதம் பார்க்க அவள் வீட்டிற்குள் நுழையும் பொழுது "என் கூட சண்ட போட்டில, இனிமேல் எங்க வீட்டுக்கு டிவி பாக்க வராத" என்று அதட்டினாள். அதட்டினால் என்று சொல்வதை விட வீட்டில் இருந்து தள்ளி விட்டாள் என்று சொல்லலாம். அன்று அழுதுகொண்டே அவள் வீட்டில் இருந்து சென்ற நான் என் அம்மாவும் அவள் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் வீட்டிற்கு அதற்கு பின் செல்லவே இல்லை. சக்திமான் போடும் போது கூட நான் அவர்கள் வீட்டிற்கு சென்றது இல்லை. இதுவரை சக்திமான் தொடரை ஒரு முறை கூட நான் பார்த்ததும் இல்லை.
.
.
என் அப்பாவிடம் மட்டும் கிடைக்காது என்று தெரிந்தே டிவி வாங்க வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். "ஆமா இப்போ அது ஒன்னு தான் கொறச்சல் நமக்கு" என்று எங்கிருந்தாவது அம்மாவின் குரல் தவறாமல் கேட்கும். அம்மாவிற்கு ரேடியோ கேட்டுக்கொண்டே தீப்பெட்டி ஓட்டினால் பொழுது போய்விடும். எனக்கு அப்படி இல்லையே? "டிவி வாங்குனா அம்மாவ பாக்க விடக்ககூடாது" என்று தம்பியும் நானும் சேர்ந்து சத்தியம் செய்து கொண்டோம்.
.
.
இப்படியே என் பத்தாம் வகுப்பு வரை காலம் ஓடியது. என் சித்தி குடும்பத்துடன் எங்கள் ஊரில் வந்து குடியேறினார்கள். இதில் அதிகம் சந்தோசப்பட்டவன் நான் தான், ஏனென்றால் சித்தி வீட்டில் டிவி உண்டு, கலர் டிவி அதுவும் கேபிள் டிவி. வாராவாரம் சித்தி வீடே கதி என்று இருக்க ஆரம்பித்தேன். "உன் சித்தப்பாவே வியாபாரம் நொடிச்சு போயி தான் இங்க வந்துருக்காரு, நீ வேற வாராவாரம் போயி அவங்கள தொல்ல பண்ண வேண்டாம்" என்று அம்மா அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.
.
.
ஒரு இரண்டு வருடம் டிவி பார்க்கும் ஆசையை அடக்கிக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் பார்த்தா சேரன் ஆட்டோகிராப் படம் எடுத்துத்தொலைவார்? தியேட்டரில் படம் பார்த்த நாள் முதல் அந்த படத்திற்கு நான் அடிமை ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். அப்போது விஜய் டிவி இல் மெட்டுக்கள் புதுசு என்றொரு நிகழ்ச்சி மதியம் போடுவார்கள். அதில் ஆட்டோகிராப் பாடலும் தினமும் வரும் என்பதால் மார்ச், ஏப்ரல் மாத வெயில்களிலும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் அழுத்தி நண்பனின் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பேன். ஒரு கட்டத்தில் அவன் "டே நீ மதியம் சோறு சாப்புடற டயத்துல டிவி பாக்க வரது எங்க வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி இருக்கு டா" என்றான். அன்று விட்டவன் தான் நண்பர்கள் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை.
.
.
மூன்று வருடம் உள்ளூரில் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, அடுத்து இரண்டு வருடம் வெளியூரில் படிக்கும் போதும் சரி கல்லூரி வாழ்கையின் இன்பத்தில் டிவி இரண்டாம் பட்சம் ஆனது. ஆனாலும் பார்ப்பவர்கள் எல்லாம் "என் வீட்டில் டிவி இல்லையா?" என்று ஆச்சர்யமாகவும், நம்ப மறுப்பது போலவும் கேட்கும் போது டிவி இல்லாததை நான் ஒரு கொலைக்குற்றமாக கருதினேன்.
.
.
ஒரு வழியாக சென்ற வாரம் எங்கள் வீட்டில் டிவி வாங்கலாம் என்று முடிவெடுத்தோம். 7500 ருபாய் கொடுத்து LG Golden Eye TV வாங்கினோம். இந்த செய்தியை நண்பன் ஒருவனிடம் உடனடியாக கூறினேன். அவன் "டே அது பழைய மாடல் டா. அத வாங்குனதுக்கே நீ இவ்ளோ எபக்ட் உட்றியா?" என்று மூக்கறுத்தான். அவனுக்கு எங்கே தெரியும் இது எனது பல வருட ஆசை என்று?
.
.
நான் மூன்றாம் வகுப்பில் ஆசைப்பட்ட சைக்கிள் ஏழாம் வகுப்பில் கிடைத்தது. அதற்கு முன்பே ஐந்து வயதில் ஆசைப்பட்ட டிவி இப்போது 22 வயதில் கிடைத்துள்ளது. ஆசைப்பட்ட பொருள் தாமதமாக கிடைப்பதிலும் ஒரு சுகம் தான். என்ன, இப்பொழுது சந்திரகாந்தா கதையை பேச அந்த பழைய நண்பர்கள் இல்லை.. என்னை வீட்டை விட்டு அனுப்பிய அந்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் செயலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் தான் இருக்கிறது. அந்தப்பெண்ணும் எங்கள் வீட்டில் டிவி வாங்குவதற்கு ஒரு வகையில் உதவியிருக்கிறாள்.
.
.
அப்பா தினமும் இரவு எங்கள் அனுமதியுடன் கொஞ்ச நேரம் பழைய பாடல்கள் பார்ப்பார். என்ன டிவி வந்து என்ன பண்ண? அம்மாவிற்கு இப்போதும் ரேடியோ தான் உற்ற நண்பன். "போடா டிவி பாத்துகிட்டே தீப்பெட்டி ஒட்ட முடியல" என்று சாதாரணமாக சொல்கிறார். எப்படி இந்த அம்மாமார்களால் மட்டும் முடிகிறதோ?

6 comments

  1. கொப்புரான நல்லாருக்கு...! ம்ம் நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க...
    ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  3. "நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன்." சார் க்கு ரொம்ப experience அப்போவே சண்டை போட அரம்பிசிடீங்க...

    ReplyDelete
  4. >>> ராமு, நான் கூட வேலைக்கு சென்ற சில வருடங்கள் கழித்துதான் எங்கள் வீட்டில் கலர் டி.வி. வாங்கினோம். அந்த நினைவு வந்தது. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  5. அருமை ! அருமை ! என் விசயத்தில் நடந்தது கொஞ்சம் வேறு ! சின்ன வயதில் எங்கள் வீட்டில் ப்ளாக் அண்ட் வைட் டிவி தான் இருந்தது ! சக்திமான் போடப்பட்ட காலங்களில், கலரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று பக்கத்து வீட்டுக்கு சென்று பார்ப்பேன் ! நீங்கள் எழுதியது அழகான சிறுகதை போல இருக்கிறது ! அருமை ! எக்குவை பற்றிய விவாதங்கள் என் குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்தியது ! இருந்தாலும் சக்திமானின் கில்விசரை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள் !

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One