வைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா?

Monday, April 20, 2009

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை கூறிவிட்டு நான்காவதாக விருதுநகர் தொகுதிக்கு பெயர் அறிவிக்கும் முன் ஒரு சிறிய இடைவெளி விட்டார் வைகோ இதழில் தவழும் புன்னகையுடன். அப்போது அரங்கத்தில் பலத்த விசில் மற்றும் கைதட்டல் சத்தம். அந்த சத்தம் அவர் தனது பெயரை அறிவித்த சில நிமிடங்கள் வரை தொடர்ந்தது. இது கானல் நீரா? முன் போல் இப்போதும் அவருக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா? அவரால் ஜெயிக்க முடியுமா என்று ஒரு சிறிய பார்வை...
.
.
இப்போதைய விருதுநகர் தொகுதி சென்ற தேர்தலில் சிவகாசி தொகுதியாக இருந்த போது வைகோ இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சென்ற முறை அவர் நிற்காத போதும் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்று ஒரு புதியவரை அறிமுகப்படுத்திய போது மக்கள் அவரையும் ஜெயிக்க வைத்தனர். கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் வைகோ சிவகாசி தொகுதியை தனது கோட்டையாக வைத்திருக்கிறார். இதற்கு பல விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டாலும், முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.
.
.
1. அவர் சார்ந்துள்ள நாயக்கர் சமுதாய மக்கள் இந்த தொகுதியில் அதிகம். மற்றும் அவருக்கு இந்த தொகுதி மக்களிடம் உள்ள பரிட்சயம்.
.
2. அவர் தொகுதிக்கு செய்துள்ள பல நல்ல செயல்கள் (சிவகாசிக்கு அகல ரயில் பாதை வர செய்தது முதல், தீப்பெட்டி தொழிற்சாலையை இயந்திரமயமாக்காமல் தடுத்தது வரை பலவற்றை சொல்லலாம்).
.
.
ஆனால் இப்போது தொகுதி மறுவரையறைக்கு பின் அவருக்கு அதே செல்வாக்கு உள்ளதா? இப்போதைய விருதுநகர் தொகுதியில் புதிதாக திருமங்கலமும் திருப்பரங்குன்றமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதியில் இப்போது முக்குலத்தோர் கை ஓங்கியுள்ளது. இந்த ஊர்களில் அஞ்சாநெஞ்சரின் செல்வாக்கும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் முன்பு போல் அவரால் எளிதாக வெற்றிபெற முடியுமா? பல தொகுதிகளிலும் ஜாதியை வைத்தே வேட்பாளர்களின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகுதியையும் அந்த கண்ணோட்டத்தில் அலசலாம்.
.
.
இந்த தொகுதியில் முதலாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன். இவர் புகழ் பெற்ற மபாய் கன்சல்டன்சி என்ற கம்பெனியின் தலைவர். சிவகாசி அருகில் உள்ள விளாம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் நாடார் சமூகத்தை சார்ந்தவர். இவர் சார்ந்துள்ள கட்சியும் சமூகமும் இவருக்கு ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தாலும், இவர் வழக்கமான தேமுதிக வேட்பாளரை போல் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் வேலையைத்தான் செய்வார். இது வைகோவிற்கு விழும் ஓட்டுக்களை தான் பாதிக்கும். தேமுதிகவுக்கு நாயக்கர் சமூக மக்கள் ஓட்டும் விழுவதால் இதுவும் வைகோவை பாதிக்கும்.
.
.
நடுநிலையாளர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் ஓட்டுக்களையும் தேமுதிக பிரிக்கிறது. இதற்கு பேசாமல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
.
.
அடுத்ததாக வருபவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தர வடிவேல். இவரை யார் என்றே தொகுதியில் உள்ள பலருக்கும் (கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட) தெரியாது. முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளதால் இவரை தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்த போதே சிவகாசியில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதமும், ஒரு கோஷ்டி உண்ணும்விரதமும் இருந்து காமெடி பண்ணினர். காங்கிரஸின் ஓட்டு வங்கியான நாடார் சமூக மக்கள் இந்த முறை இவருக்கு ஓட்டளிப்பார்களா என்பது சந்தேகமே. முதலில் காங்கிரஸ் காரர்களே ஓட்டளிப்பார்களா என்று கேட்க வேண்டும். திமுக கூட்டணி என்று எண்ணி யாராவது ஓட்டளித்தால் உண்டு. ஆனால் இந்த கூட்டணியின் பிரச்சாரத்தை அடுத்து வேட்பாளரின் செல்வாக்கு கூடலாம். தேமுதிகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுகிறதோ அவ்வளவு வாய்ப்பு உள்ளது இவர் ஜெயிப்பதற்கு.
.
.
இந்த இருவரையும் வைத்து பார்க்கும் போது, கொஞ்சம் உழைத்தால் வைகோ இந்த தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால் இப்போது புதிதாக ஒரு புது தலைவலி வந்துள்ளது நமது நவரச நாயகன் கார்த்திக் ரூபத்தில்!
.
.
இவரும் விருதுநகர் தொகுதியில் நிற்கபோவதாக ஒரு தகவல் வருகிறது. ஏற்கனவே வைகோவிற்கு விழும் நாடார் சமூக மற்றும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாண்டியராஜன் பிரிக்கிறார். இந்த நிலையில் கார்த்திக் நின்றால் அதிமுகவின் ஓட்டு வங்கியான முக்குலத்தோரின் ஓட்டுக்களும் பிரியும் நிலை வரும். கார்த்திக்கிற்கு சமூக மக்களிடம் இப்போது முன்பு மாதிரி மரியாதை இல்லை என்றாலும், 18 முதல் 30 வயது வரை உள்ள முக்குலத்து இளைஞர்கள் இப்போதும் இவர் பின்னால் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவிற்கு விழ வேண்டிய முக்குலத்து ஓட்டுக்களிலும் கணிசமான அளவு பிரிந்து இவருக்கு விழும். என்னதான் காமெடி பீஸாக இவர் இருந்தாலும் இவரை சீரியஸாக மதித்து ஓட்டுப்போட இன்னும் இந்த தொகுதியில் ஆள் இருக்கிறார்கள்.
.
.
சிவகாசி, விருதுநகர், சாத்தூர் தொகுதியில் பாண்டியராஜன் மிகுந்த போட்டிகொடுப்பார். அருப்புகோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சுந்தர வடிவேலும், கார்த்திக்கும் வைகோவை வெற்றியிலிருந்து கொஞ்சம் தூரமாகவே தள்ளிவைப்பர் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வைகோவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் போட்டியாளர்கள் யாருக்கும் தெளிவான காரணங்கள் இல்லை, எல்.ஜி, செஞ்சி போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினாலும் தொகுதி மக்கள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிகொண்டதாக தெரியவில்லை. இவர் மேல் எப்போதும் மக்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. இருந்தாலும் இந்த ஜாதி மற்றும் பணபல அரசியலில் வைகோ ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும், ஆனால் முடியாத காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது....

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One