சென்ற பதிவில் மோகனா என்ற பெயரை பயன்படுத்தியதற்கு நண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அப்படி பெயர் உள்ள ஒரு பெண் எங்கள் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு மாதமாக அறியப்பட்டதால்.
என் அம்மா என்னை வயிற்றில் சுமந்த போது, பெண் குழந்தை தான் தனக்கு பிறக்கும் என்ற நம்பிக்கையில் மோகனா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் செய்த புண்ணியம் என்னை அவர்களுக்கு பிறக்க செய்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததில் என் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அவர் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ராம் குமார் என்ற பெயர் வைக்க நினைத்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அவர் சிவாஜியின் தீவிரமான ரசிகர். தன்னை சிவாஜியாக நினைத்து தனக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அவர் தலைவரின் முதல் குழந்தையின் பெயரை வைக்க நினைத்திருந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'முன்னூறு ரூபாய் கட்டினால் தான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும்' என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அந்த முன்னூறு ரூபாய்க்கு அவர் மூன்று நாள் எங்கெங்கோ அலைந்து யார்யார் காலையோ பிடித்து எப்படியோ கட்டிவிட்டார். உற்ற நண்பர்கள் நெருங்கிய சொந்தங்கள் கூட எங்களுக்கு உதவாத சமயம் அது. இப்போதும் நான் பிறந்த தருணத்தை வீட்டில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கஷ்டத்தில் அவர் 'ஆமா பொறக்கும் போதே அப்பன காசுக்காக நாயா அலையவுட்டுருக்கு, இது சிவாஜி பையனோட பேர வேற வைக்கனமாக்கும்?' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் இப்படியெல்லாம் விபரீதமாக யோசிக்காமல் எனக்கு இந்த அழகான பெயரை வைத்தார்.
சிவாஜி மேல் இவ்வளவு பைத்தியமாக என் அப்பா இருப்பதற்கு காரணம் எங்கள் பகுதி மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாதது தான். சினிமா தான் ஒரே பொழுதுபோக்கு. வார கடைசிகளில் தீப்பெட்டி ஒட்டிய காசில் பெண்களும் வாரநாட்களில் பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சகத்தில் கிடைத்த பணத்தில் ஆண்கள் ரெண்டாம் ஆட்டமும் தவறாமல் சினிமா பார்த்த காலம் அது. சினிமா கதாப்பாத்திரங்களும், நட்ச்சத்திரங்களும் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் தங்கியிருந்தனர்.
நான் பிறந்த ஐந்து வருடங்களில் தம்பி பிறந்தான். அவனுக்கு பிரபு என்று பெயர் வைக்க விரும்பினார் அப்பா. 'குஷ்பு மாதிரி யார் கூடையாவது ஓடிப்போய்விடுவான்' என்று என் அம்மா பயந்ததால் அவனுக்கு வேறு பெயர் வைத்தார்கள்.
இதனால் நான் சொல்ல வருவது யாதெனில் மோகனா என்ற பெயர் எனக்கு இப்போது பழக்கமானதல்ல. இது இருபத்திமூன்று வருட பழக்கம். கதையில் அந்த பெயரை மாற்ற மாட்டேன்.
பின் குறிப்பு:
அந்த கதை என் மனதில் வேறு மாதிரி ஆரம்பித்தது. எழுதி முடித்து பார்த்த போது 'ஹே ராம்' போல இருந்தது. இனி இது போன்ற தவறு நிகழாது.
வித்தியாசமான பதிவு... நல்லா எழுதி இருக்கீங்க.
ReplyDelete