நண்பர் செல்வக்குமார் வினையூக்கி (http://vinaiooki.blogspot.in/) அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன் பக்கத்தில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார்..
1. மோடி ஏன் பிரதமராக வேண்டும்?
2. மோடி ஏன் பிரதமராகக்கூடாது?
இது தான் அந்தக்கேள்விகள்.. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்களை வரிசையாக எழுதி எந்தப்பக்கம் அதிகமான பாயிண்டுகள் வருகின்றனவோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது நண்பரின் எண்ணமாக இருக்கலாம்.. சரி, நம் பங்குக்கு நாமும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லிப்பார்ப்போமே என்று எழுதிய ஒரு பதிவு தான் இது..
முதலில், மோடி ஏன் பிரதமராக வேண்டும்?
குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மிகச்சிறந்த அளவில் உயர்த்தும் நிர்வாகத்திறன் படைத்திருப்பவர் இன்றைய சூழலில் அவர் மட்டும் தான்.. மிகப்பெரிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருக்கும் தேசத்தில், இந்திய பொருளாதாரம் கஷ்டப்படும் போது, இந்திய மக்கள் தொகையில் 5% மட்டும் இருக்கும் குஜராத்திகள், நம் தேசத்தின் GDPக்கு 7% பங்களிக்கிறது. பஞ்சம் மிகுந்த பூமிகளில் ஒன்றான குஜராத் இன்று விவசாயத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆற்று நீர்ப்பாசனம் கிடையாது.. முழுவதும் கிணற்று நீர்ப்பாசனம் தான்.. காரணம்?

பொருளாதார வல்லுநர்களே இலவசத்தை கையில் எடுக்க துணியும் போது, தைரியமாக தன் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளைப்பார்த்துக்கேட்டார், “உங்களுக்கு நான் இலவச மின்சாரம் தருகிறேன்.. ஆனால் எப்போது கரெண்ட் வரும், எப்போது போகும் என்று எனக்கே தெரியாது.. ஆனால் மின்சாரத்திற்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிப்பேன். 24மணி நேரமும் மின்சாரம் இருக்கும். உங்களுக்கு இலவசம் வேண்டுமா? அல்லது மின்சாரம் வேண்டுமா?”. நாம் ஜெயிப்போமா இல்லையா என்று கவலைப்படாமல் இப்படி தைரியமாக கேட்டு, ஜெயிக்கவும் செய்தார். இன்று 24மணி நேர மின்சாரமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
உற்பத்தித்துறையில் இன்று இந்தியாவில் குஜராத் தான் முன்மாதிரி மாநிலம். வெளிநாட்டு முதலீடுகளை மிக அதிக அளவில் ஈர்த்துக்கொண்டிருப்பது அது தான். UNICEF சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றிருப்பதாக குஜராத்தை பாராட்டுகிறது. அதே போல் தொடக்கக்கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையும், தொடக்கக்கல்வி கொடுக்கும் பள்ளிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. இதை எல்லாம் மோடி என்கிற ஒருவர் மட்டும் செய்கிறார் என்று பொய் கூற விரும்பவில்லை. அவருக்கு பின் இருக்கும் IAS, IPS, போன்றவர்களின் திட்டமிடல் தான்.. ஆனால் அதே போல் மற்ற முதல்வர்களுக்கும் IAS, IPS ஆட்கள் இருக்கிறார்களே? அவர்களின் அறிவை எந்த முதல்வர் ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்?
அனைத்தையும் விட, ஒரு இந்துவாக, இந்த தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவனாக எனக்கு மோடி போன்ற என் சமூகத்துக்கு உதவும், கட்டாய மதமாற்றத்தை எதிர்க்கும், தீவிரவாதத்தை ஒடுக்கும் (சுவாமி நாராயண் கோவில் தீவிரவாத பிரச்சனைக்கு பிறகு அங்கே தீவிரவாதிகளால் வாலாட்ட முடியவில்லை), சிறுபான்மையினர் உரிமை என்னும் பெயரில் நடக்கும் மத துவேசங்களையும் அவர் எதிர்ப்பதும் ஒரு காரணம்.. ஆனால் இந்த நேரத்தில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றால், அவர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளின் தோற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அவர் கடந்த் தேர்தலை விட அதிக தொகுதிகளில், இஸ்லாமியர் அதிகம் வாழும் தொகுதிகளிலும் அதிகம் வென்றிருக்கிறார். உலகில் இருக்கும் எந்த நாட்டிலும், பெரும்பான்மை மக்களை இந்திய அரசியல்வாதிகள் போல் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை.. இந்தியாவில் இந்த அநீதி நடக்கிறது. அரசு கோப்புகளின் இந்துவாக இருந்து சலுகைகளை அனுபவிக்கும் ஒருவன், தனிப்பட்ட வாழ்வில் வேறொரு மதத்தை பின்பற்றி அரசுக்கும், தான் சார்ந்திருக்கும் மதத்துக்கும், உண்மையாக சலுகை கிடைக்க வேண்டியவனுக்கும் துரோகம் செய்கிறான். மோடி தன் பெரும்பான்மை சமூகத்துக்கு உண்மை செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
சரி இப்போது, மோடி ஏன் பிரதமராகக்கூடாது?
குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருப்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு தெரிந்திருக்கும் உண்மை, ‘யார் பிரதமராக வந்தாலும் நம் வாழ்க்கை ஒன்றும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை. நம் பொருளாதாரம் என்பது நம் பொருளாதார வல்லுநர்களை சார்ந்து இல்லை. தான் உழைத்தால் தான் தனக்கு சோறு’ என்று புரிந்து கொண்ட மக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இந்த சூழலில் மக்கள் யாரும் மோடியை பிரதமராக கனவு கண்டு கொண்டிருக்கவில்லை. In fact, அவர்களுக்கு மோடி வந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வருமோ என்னும் கவலை தான் இருக்கிறது.
சில மீடியா ஆட்களும் ஏதோ மோடி தான் இந்தியாவை காப்பாற்ற வந்த மோஸஸ் போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைக்கின்றன. உண்மை தான் அவர் ஆட்சியில் தான் குஜராத் பொருளாதார வளர்ச்சி பெற்றது. ஆனால், பெண்களின் சுகாதாரம், அரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைப்பேறின் போது நிகழும் மரணம், ஆண்-பெண் விகிதாச்சாரம் இது எல்லாமே அங்கு மிக மிக குறைவாக, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது. இது ஏன் என்று லேசாக யோசித்தால் ஒரு விசயம் நமக்கு புலனாகும்.. ஈசியாக புகழ்ச்சி கிடைக்கும் விசயங்கள், பணத்தை வைத்து காட்டும் ஜிகினா வேலைகள் தான். ஏழைகளை கண்டுகொள்ளாமல், நாட்டின் சுகாதாரத்தில், அக்கறை கொள்ளாமல் இருந்தால் இங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.. ஏனென்றால் எல்லா மாநிலமும் அப்படித்தான் இருக்கின்றன. அதனால் பொருளாதாரம், பள பள சாலைகள், வெளிநாட்டு முதலீடு என்று மீடியாக்களின் கேமராவை குளுகுளுவென்று வைத்திருந்தாலே போதும், ஈசியாக ‘நல்லவனாகி’ விடலாம் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை.

அது போக, ஒரு நாட்டின் தலைவனாக வருபவனுக்கு தன் குடிமக்களிடம் பேதம் இருக்க கூடாது.. ஒரு இஸ்லாமிய மன்னர் தாடி, மீசை வைத்திருக்கும் இந்துக்களுக்கு ”ஜிசியா” என்னும் அதிக வரி போட்டாராம்.. ஆனால் அவருடை ஆட்சியைத்தான் முகலாயர்களின் பொற்கால ஆட்சி என்கிறோம்.. அதே போல் தான், தன் குடிமக்களிடம் பேதம் பார்த்து, அவர்களை இம்சிக்கும், போலி என்கௌண்டர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர் பிரதமராக வந்தால் நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்னவாகும் என்கிற ஐயமும் இருக்கிறது. பெரும்பான்மையினர் வேண்டுமானால் சந்தோசமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம். மோடி குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்து விட்டதே என அவர் ஆதரவாளர்கள் கூறலாம். தான் அமைச்சராக இருந்தே ஒரே காரணத்துக்காக தனக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த ரயில் விபத்துக்காக பதவியை துறந்த அரசியல்வாதிகளை கண்டவர்கள் நாம். தான் முதல்வராக இருக்கும் ஒரு மாநிலத்தில் நடந்த கலவரத்தை அடக்காமல் அதை வேடிக்கை பார்த்த இவரை எப்படி நம்பி ஆட்சியை கொடுக்க முடியும்?
நாடாளுமன்றம் என்பது அனைத்து கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து நடக்கும் ஒரு அரசு நிர்வாக அலுவலகம். ஆனால் மோடியின் பெயரை பிரதம வேட்பாளராக சொன்னதுமே, பா.ஜ,க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துவிட்டன. ஒரு வேளை நாளை இவர் பிரதமரானால் இவரால் அவர்களோடு ஒத்துப்போக முடியுமா? அல்லது அவர்களால் இவரோடு ஒத்துப்போக முடியுமா? இவரை எதிர்த்த கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிலை என்னவாகும்? குறிப்பாக ஏற்கனவே பின் தங்கியிருக்கும் பிஹாரை நினைத்தால் மிக கவலையாக இருக்கிறது. மோடி ஒரு நிர்வாகியாக இருக்கலாம். ஆனால் துவேசம் இல்லாத, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற வஸ்துக்கள் எதுவும் அவரிடம் இருப்பதாகப்படவில்லை. நம் நாடு பொருளாதாரத்தில் மிக மெதுவாக கூட முன்னேறட்டும். ஆனால் மக்களின் சுகாதாரம் வாழ்வாதாரம் போன்றவற்றின் மேல் அக்கறையில்லாத, உயிர்களில் இந்து உயிர் இஸ்லாமிய உயிர் என்று பேதம் பார்க்கும் ஒருவரின் தயவில் அது வல்லரசானால், நாளை அந்த வல்லரசு நாட்டில் நல்ல குடிமகனுக்கு பஞ்சம் வந்துவிடும்.. வேண்டாம் எங்களுக்கு மோடி..
பின் குறிப்பு:
நீங்களும் ஒருவரை ஆதரிகக்வோ எதிர்க்கவோ செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து விட்டு அதன் சாதக பாதகங்களை எல்லா விதத்திலும் தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஒருவரை பிடித்திருந்தால் அவரின் negative விசயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அப்போது தான் அட்லீஸ்ட் ஒரு விவாதத்திலாவது நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க உதவியாக இருக்கும்..
