2G ஸ்பெக்ட்ரம் - ஒரு சாதாரண குடிமகனாக என் பார்வையில்..

Monday, July 9, 2012

எப்போ எந்த பத்திரிகை, செய்தித்தாள், டி.வி திருப்பினாலும் ரெண்டு, மூனு வருசமா ஒரு செய்தி தவறாமல் எதாவது ஒரு பக்கத்தில் இடம் பெற்றுவிடும்.. அது தான் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்.. 1.76லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்புன்னு ஒருத்தர் கத்துறாரு.. நாட்டின் மேல் மட்ட தலைமையில் இருந்து அமைச்சரின் நண்பர்கள் வரை 30,000கோடி ஊழல் செய்யப்பட்டதுன்னு டிவியில குதிக்குறாங்க.. இது ஒரு சாதாரண, அடுத்த நாள் சோறுக்கு இன்னைக்கு நாய் மாதிரி வேல செய்யுற ஒரு குடிமகனுக்கு எந்த அளவுக்கு முக்கியம், அவன் வாழ்க்கையில எந்த அளவுக்கு பாதிப்பை கொண்டு வந்திருக்குன்னு சும்மா எனக்கு தெரிஞ்ச வடிவத்துல நான் சொல்றேன்.. மாற்றுக்கருத்துக்கள் தாராளமாக வரவேற்கப்ப்டுகின்றன..


”அலைக்கற்றைகளை குறைந்த விலைக்கு தங்களுக்குப் பிடித்தமான கம்பெனிகளுக்கு விற்றுவிட்டார்கள். அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்கவில்லை. அதனால் அரசுக்கு 1.76லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி குறைந்த விலைக்கு விற்றதற்கு அவர்கள் 30000கோடி ரூபாய் வரை பணம் லஞ்சமாக வாங்கியிருக்கலாம்” என்பது தான் குற்றச்சாட்டு..

சரி, அவர்கள் சொல்வது போலவே ஒரு வேளை ராசா, அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று, நமது அரசாங்கத்திற்கு 1.76லட்சம் கோடி வருவாயைப் பெற்றுத்தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அந்தப்பணம் ஊழலின் காற்றே படாமல் மக்கள் சேவைகளுக்காக செலவிடப்பட்டிருக்குமா? அந்தப் பணத்தில் இன்னொரு காமென்வெல்த் விளையாட்டு, இன்னொரு ஆதர்ஷ் கட்டிடம் கட்ட ஆரம்பித்திருப்பார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் ரோடும் மேம்பாலங்களும் கட்டுவார்கள். கட்டிவிட்டு சும்மா இருப்பார்களா? மக்களுக்காக கட்டிய ரோடுக்கு மக்களிடமே காசு வாங்குவார்கள். அல்ரெடி ரோடு டாக்ஸ், இன்கம் டாக்ஸ்னு கட்டிட்டு, இந்த ரோட்டுல போறதுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்ஸ் வேற கட்டணும் நாம.. இல்லேன்னா ம.பி., உ.பி. போன்ற வட மாநில முன்னேற்றத்துக்கு ‘ஒதுக்குவார்கள்’.. அது என்னவென்றே தெரியவில்லை, நேரு காலத்தில் இருந்து இந்த உ.பி, ம.பி, பிகார் போன்ற மாநிலங்களுக்குத் தான் நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதி எல்லாம் எங்கே ஒதுங்குகிறது என்றே தெரியவில்லை.. அதுவும் இல்லையென்றால் ராணுவத்துக்கு அந்தப்பணம் போகும். அங்கே மட்டும் என்ன ஒழுங்காகவா பயன்படும்? சின்னப்புள்ள மாதிரி “மிஸ் மிஸ் அவன் வயச நோட்டுல தப்பா எழுதிருக்கான் மிஸ்”னு சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க.. பக்கத்து நாடெல்லாம் ராணுவத்த எப்பவுமே தயார் நிலையில வச்சிருந்தா, நம்ம பசங்க ஒவ்வொரு பட்ஜெட்டுலயும் இவ்வளவு பணம் ஒதுக்கியும், இன்னும் ’துப்பாக்கிக்கு குண்டு இல்ல, டைம் பாம்புக்கு எலெக்ட்ரிக் வாட்ச் கெடைக்கல’ன்னு அடுத்தவன் மேல பழி போட்டே காலத்த ஓட்டிக்கிட்டு இருப்பாய்ங்க.

ஆனால் நாட்டின் வருமானத்தை குறைத்த ராசாவின் செயல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் எனக்குப்படுகிறது. தெரிந்த கம்பெனியோ, தெரியாத கம்பெனியோ, லஞ்சம் வாங்கிவிட்டு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார்களோ இல்லையோ, அது பிரச்சனை இல்லை. அவர்கள் அப்படி செய்ததால் நிறைய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் அடி எடுத்துவைத்தன.. ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன் போன்ற ஜாம்பவான்கள் 'கர்டெல்' (cartel) என்னும் முறைப்படி தங்களுக்குள் கூடிப்பேசி மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தது நிற்க ஆரம்பித்தது. பல கம்பெனிகள் உள்ளே நுழைந்ததால் போட்டியின் காரணமாக மக்களால் குறைந்த விலைக்கு தொலைத்தொடர்பு சேவையைப்பெற முடிந்தது. 4,5 வருடங்களுக்கு முன் ஒரு செகண்டுக்கு ஒரு பைசா, ஏர்டெல் to ஏர்டெல் 10பைசா, டோகோமோ to any mobile 10hrs ஃப்ரீ போன்ற ஸ்கீம்களை நாம் எதிர்பார்த்திருக்க முடியுமா?

செல்ஃபோன் என்னும் ஆடம்பரப்பொருள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் பொருளாதார மேதை, புது பொருளாதார கொள்கை கொடுத்து கார், பைக், ஏ.சி, கேஸ் போன்ற பல ஆடம்பரப்பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் லிஸ்டில் கொண்டுவரும்படி கொள்கை அமைத்தார். முட்டாள் மக்களும் அனைத்தையும் வாங்கினர். ஆனால் மெதுவாக பெட்ரோல், கேஸ் போன்றவையின் விலையைக்கூட்டி, முதலாளிகளுக்கு சேவகம் செய்து மக்களின் வயிற்றில் அடித்தனர். ஏன்? பெட்ரோல் கேஸ் நிறுவனங்கள் இங்கே மிகவும் குறைவு. இருக்கும் முதலாளிகள் புதிதாக யாரையும் உள்ளே வரவிடுவதில்லை. அதனால் இஷ்டத்துக்கு கொள்ளை லாபம் வைக்கலாம். போதா குறைக்கு அரசும் வரி போட்டு நம் கழுத்தை நெறிக்கும். இவர்கள் சொல்வது போல், அதிக விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியிருந்தால், இன்று தொலைத்தொடர்புத் துறையில் இத்தனை நிறுவனங்கள் வந்திருக்காது. நமக்கும் விலை மலிவாக செல்ஃபோன் சேவை கிடைத்திருக்காது. 

நம் அரசியல்வாதிகளின் ஆசை, நாட்டு கஜானாவில் பணம் இருக்க வேண்டும். கஜானாவை மக்களிடம் கொள்ளையடித்தாவது நிரப்ப வேண்டும். சேவை நிறுவங்களின் மூலம் கூட லாபம் பார்க்க நினைக்கும் அரசு தான் நம்மளுடையது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் நல்வாழ்வை முதல் குறிக்கோளாக கொண்டிருப்பதே நல்ல அரசாங்கமாகும். ஆனால் இங்கே கிட்டத்தட்ட அரசும் ஒரு முதலாளியைப்போல, வியாபாரியைப்போலத் தான் நடந்து கொள்கிறது 2G விஷயத்தில். மக்கள் குறைவான விலையில் நல்ல சேவையைப்பெறுகின்றனரே என்கிற சந்தோசம் இல்லாமல், அரசுக்கு வருமானம் போய் விட்டதே என்கிற கவலை தான் அவர்களுக்கு. அரசுக்கு வருமானம் வந்தால் மக்கள் தான் அதனால் பயன்படப்போகிறார்கள். இப்போது தான் மக்களே நேரடியாக பயன்பெற்றுவிட்டார்களே, இன்னும் ஏன் 2G, 2G என்று கூப்பாடு போட வேண்டும்?

அடுத்த குற்றச்சாட்டு, கிட்டத்தட்ட 30000கோடி ரூபாய் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்று. இந்தியா போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் லஞ்சத்துக்கு என்று சில ரூபாய்களை தினமும் ஒதுக்கி வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில், லஞ்சத்தைப் பெரிய குற்றம் போல் பேசுவது லூசுத்தனமாக உள்ளது. லைசென்ஸ் எடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும், ஹெல்மெட் போட்டு சாலையில் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பு இல்லாமலும், கையில் 100ரூபாய் இருந்தால் எந்த சட்டத்தையும் விதியையும் மீறலாம் என்கிற எண்ணத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் உரம் போட்டு வளர்க்கும் மக்கள் தான் தினமும் சாலையில் சென்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. மக்களே லஞ்சத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, அரசியல்வாதி ஊழல் செய்வதை எல்லாம் இங்கு யாரும் இப்போது பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சின்ன பொறாமை வேண்டுமானால் இருக்கலாம், “இவன் மொகறகட்டைக்கும் இத்தன கோடி காசா?” என்று. மத்தபடி மக்களுக்கு நாட்டின் மீது அக்கரையோ, ஊழல் நடந்துவிட்டதே என்கிற கொந்தளிப்போ கிடையாது. கறை படிந்த மக்கள் வாழும் தேசத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகப்பேசுவதே மகா முட்டாள் தனம்..

மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ராசா அன்றைய அதிகமான மார்க்கெட் விலையிலேயே, விற்றிருந்தால், கண்டிப்பாக இந்நேரம், உங்களால் இரவு முழுக்க உங்கள் காதலியிடமும், ஊரை விட்டு பிரிந்து வந்து வீட்டு ஞாபகத்தில் அம்மாவிடமும், ஆடி மாச பிரிவில் வாடி ஃபோனே கதி என்று புது மனைவியிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க முடியாது.
அதே போல அந்த 1.76லட்சம் கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைத்திருந்தாலும் இந்த அரசு நம் நலனுக்கும் எதுவும் செய்திருக்காது. அதனால் மக்களே நம் கையில் idea இல்லேன்னா MTS, அதுவும் இல்லேன்னா uninor, இதுவும் பிடிக்கலேன்னா videocon என்று பல ஸ்கீம்களின் பல ஃபோன்கள் இருக்கின்றன.. கம்மியான விலையில் நாம் செல்ஃபோன் சேவைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த 1.76லட்சம் கோடி வருமான இழப்பு நம் முதலாளித்துவ அரசுக்குத்தான். மக்களாகிய நமக்கு இதனால் ஒரு குறையும் வந்துவிடவில்லை.

10 comments

  1. ஆரூர்.மு.அஜ்மல்கான் ஜபருல்லாஹ்July 10, 2012 at 2:38 AM

    அருமையாக இருக்கிறது உங்களது இந்த 2ஜி பற்றிய பொதுப் பார்வை...

    //மக்களே லஞ்சத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, அரசியல்வாதி ஊழல் செய்வதை எல்லாம் இங்கு யாரும் இப்போது பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சின்ன பொறாமை வேண்டுமானால் இருக்கலாம், “இவன் மொகறகட்டைக்கும் இத்தன கோடி காசா?” என்று. மத்தபடி மக்களுக்கு நாட்டின் மீது அக்கரையோ, ஊழல் நடந்துவிட்டதே என்கிற கொந்தளிப்போ கிடையாது. கறை படிந்த மக்கள் வாழும் தேசத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகப்பேசுவதே மகா முட்டாள் தனம்..// # எனது கருத்தும் இதுவே...

    //மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ராசா அன்றைய அதிகமான மார்க்கெட் விலையிலேயே, விற்றிருந்தால், கண்டிப்பாக இந்நேரம், உங்களால் இரவு முழுக்க உங்கள் காதலியிடமும், ஊரை விட்டு பிரிந்து வந்து வீட்டு ஞாபகத்தில் அம்மாவிடமும், ஆடி மாச பிரிவில் வாடி ஃபோனே கதி என்று புது மனைவியிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க முடியாது.// # உச்சம்...

    //அதே போல அந்த 1.76லட்சம் கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைத்திருந்தாலும் இந்த அரசு நம் நலனுக்கும் எதுவும் செய்திருக்காது. அதனால் மக்களே நம் கையில் idea இல்லேன்னா MTS, அதுவும் இல்லேன்னா uninor, இதுவும் பிடிக்கலேன்னா videocon என்று பல ஸ்கீம்களின் பல ஃபோன்கள் இருக்கின்றன.. கம்மியான விலையில் நாம் செல்ஃபோன் சேவைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த 1.76லட்சம் கோடி வருமான இழப்பு நம் முதலாளித்துவ அரசுக்குத்தான். மக்களாகிய நமக்கு இதனால் ஒரு குறையும் வந்துவிடவில்லை.//

    # இதையே தான் நானும் சொல்கிறேன். ஆனால், நம் மக்கள், அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே, அதன் காரணகர்த்தாவை குறை சொல்லி, திட்டி தீர்த்துக்கொண்டே இருப்பார்கள்... இது, அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு... எதையும் புரிந்துகொள்ள முயற்சிக்காத தன்மை...

    ReplyDelete
  2. உண்மை புரிதலுடன் , ஒரு நடுநிலையான பதிவு, வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. உண்மைதான்! செல்போன் சேவை எளிமைப்படுத்தப்பட்டதுதான்! ஆனால் ஊழலை நியாயப்படுத்தினால் எப்படி? சாக்கடைகள் நிறைய இருந்தால் அதிலே குளித்துக் கொண்டிருக்க முடியுமா?

    ReplyDelete
  4. நியாயமான கருத்துக்கள். அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நமக்கு கிடைத்த பலனை விட திமுக, காங்கிரஸ் பெற்றது அதிகம்.

    ReplyDelete
  7. சரிங்க.... குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்து நமக்கெல்லாம் நன்மை செஞ்சிருக்காரு ராசா. லஞ்சமா கொடுத்த 30000 கோடியும் இவர் வாங்கிக்காம அரசாங்கத்துக்கு வரும்படி செஞ்சிருந்தா அதில ஒரு 15000 கோடியாவது மக்களுக்கு பயன்பட்டிருக்குமே? ஓஹோ...அதுதான் மக்களே லஞ்சப்பணத்தோட திரியறாங்களேன்னு சொல்லிட்டீங்க இல்ல? நான் வேற மடத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிறேன்.

    ஆனா ஒண்னுங்க. ரொம்ப வித்தியாசமா சிந்திக்காதீங்க. ஏற்கனவே ராசா போன்ற அறிவாளிங்களையே இந்த நாடு தாங்கிக்க முடியாம தவிக்குது.

    ReplyDelete
  8. GOOD NEWS FORRRRRRRRRRRRRRR........PUBLIC

    ReplyDelete
  9. அது சரி....ராசா பூசிக்கொண்ட கரியை வழித்து எடுத்ததோடு இல்லாமல், பொது மக்கள் மேல் அதை மிக லாவகமாக பூசி விட்டுருக்கிறீர்கள்......பொது மக்களுக்கு இவ்வளவு சேவை செய்துள்ள ராசாவுக்கு மக்களிடம் இருந்தே 30000 கோடி வாங்கி கொடுக்கலாம் போல இருக்கே.....அட ராமா!!! இனி அலைக்கற்றை ஊழல் இல்லை..."அலைக்கற்றை சேவை"....

    ReplyDelete
  10. மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ராசா அன்றைய அதிகமான மார்க்கெட் விலையிலேயே, விற்றிருந்தால், கண்டிப்பாக இந்நேரம், உங்களால் இரவு முழுக்க உங்கள் காதலியிடமும், ஊரை விட்டு பிரிந்து வந்து வீட்டு ஞாபகத்தில் அம்மாவிடமும், ஆடி மாச பிரிவில் வாடி ஃபோனே கதி என்று புது மனைவியிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க முடியாது.////

    தவறுங்க.. மக்களின் பயன்பாடு அதிகமனதே விலை குறைந்ததுக்கு காரணம்...நான் சிங்கை வந்த போது 10 டாலருக்கு இந்தியாவுக்கு 32 நிமிடமே பேசமுடியும்..ஆனால் இப்போ 10 டாலருக்கு 10 மணி நேரம் பேசலாம் ..இதுவும் ராசாவின் வேலையோ...:)))

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One