12வது காதலியும் சில நல்லவர்களும் - சிறுகதை

Thursday, July 5, 2012

"நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன்லடா பொட்டச்சி சகவாசம் வேணாம் பொட்டச்சி சகவாசம் வேணாம்னு, கேட்டியா நீயி?” - என் நண்பன் ராம் எரிந்து விழுந்தான். ஒரு லவ் ஃபெயிலியரிலேயே மொத்த பெண் இனத்தையும் எதிரி போல் பார்ப்பவன். கான்ஃபிடன்ட் இல்லாத பாய்.

“நான் என்னடா பண்ண? திடீர்னு கோச்சுக்கிட்டு ஃபோன ரெண்டு நாளா அமத்தி வச்சுட்டாடா. நம்பர கூட மாத்திருப்பாளோனு பயமா இருக்குடா” - நெஜம்மாவே இந்த காதலும் டி.ஆர். பட கிளமைமாக்ஸ் மாதிரி ஆகிருமோன்னு பயந்துக்கிட்டே பேசுனேன்..

”ரெண்டு நாளாவா? இப்ப வந்து சொல்ற? ஒனக்கு என் ஞாபகம் இப்போவாவது வந்ததே..”

“ஃபேஸ்புக் ஐடியும் இல்லடா”

“இதுக்காடா அவன் ஃபேஸ்புக் கண்டுபுடிச்சான்?” - ஆமா வேற எதுக்கு கண்டுபுடிச்சான்? இதுக்குத்தான? இந்த லூசுப்பய ராம் இப்படித்தான் எதையாவது ஒளரிக்கிட்டு இருப்பான்.

“என்னடா யோசிக்குற? இந்த பொட்டச்சிங்க எல்லாருமே இப்படித்தான்டா. பேசாமா எதாவது சந்தானம் ஜோக் பாத்துட்டு தூங்கிரு காலைல சரியாகிடும்” - இவன் சீரியஸா பேசுறானா இல்ல அவன மாதிரியே என் லவ்வும் புட்டுக்கிச்சின்னு சந்தோசத்துல பேசுறானானே தெரில..

“டேய் நான் என் லவ்வருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம பதட்டத்துல இருக்கேன், என்ன காமெடி பாக்க சொல்ற?”

“சரி நீ அவ நம்பர தேடி ரோடு ரோடா அல.. எனக்கு வேல இருக்கு நான் ஃபோன வைக்குறேன். ஆனா மறுபடியும் சொல்றேன் பொட்டச்சி சகவாசம் வேணாம்” - என் பதிலுக்கு கொஞ்சம் கூட காத்திராமல் வைத்துவிட்டான்.

சே என்ன உலகம் இது? அவனோட பெஸ்ட் ப்ரண்ட் நான்.. லவ் ஃபெயிலியர்னு சொல்றேன், கொஞ்சம் கூட ஆறுதல் சொல்லாம எடுத்தெறிஞ்சி பேசுறானே? சரி நம்ம தலைவிதி அவ்ளோ தான்” நொந்து கொண்டே அடுத்து யாருக்கு கால் செய்து பொலம்பலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

எம்.பி.ஏ.ல ஆறு மாசம் மட்டும் படிச்சிட்டு ஓடிப்போனானே, அவனுக்கு கால் பண்ணலாமா?
அடங்கோ நைட்டு பன்னெண்டு மணிக்கு வெயிட்டிங் கால் வருது.. ஹிம் சரி, இன்னும் கொஞ்ச நாள்ல அவனே நமக்கு கால் பண்ணுற காலம் வரும்னு மன்ச தேத்திக்கிட்டேன். நமக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான் எல்லா நண்பனும், ஞாபகம் வராய்ங்க.. காதல் எல்லாருக்கும் லைஃப்ல எத்தன தடவ வரும்னு தெரியாது.. ஆனா எனக்கு இது வரைக்கும் 12 தடவ வந்திருக்கு.. இந்த டசன் காதல்களிலும் நான் புரிந்து கொண்ட மிகப்பெரிய விசயம், காதல் செலவு வைக்கும் என்பதை மட்டும் தான். புரிந்து கொள்ளாத ஒரே விசயம் பொம்பளைகளுக்கு எப்போ கோவம் வரும் என்பதைத் தான்.
என் காதலி, ஆமா இப்போ இருக்குற 12வது காதலி தான்.. அவ பேரு, சரி விடுங்க பேரு எதுக்கு? கழுத நாளைக்கு இத அவ ப்ரண்ட் ப்ரொஃபைல் மூலமா படிச்சான்னா அதுக்கும் ஒரு சண்ட போடுவா. கடவுள் எதுக்கு ஆம்பளைகளுக்கு பொம்பளைய ஜோடி ஆக்குனான்? பேசாம பொம்பளைய பொம்பளை கூடவே ஜோடியாக்கியிருக்கலாம்.. ஆம்பளைங்களாவது நிம்மதியா இருந்திருப்பாய்ங்க..

அய்யோ இப்படி கண்டத ஒளற வச்சுட்டாளே?! எவனுக்காவது ஃபோன் போட்டு அணத்தனுமே? கல்லூரியின் கடைசி நாளுக்குப்பிறகு என்ன ஆனான்னே தெரியாத ஜானுக்கு ஃபோன் அடித்தேன்.

“கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்”னு பாட்டு பாடுது ஃபோன்ல.. சிரிப்பே கண்ணீராகும்டா சீக்கிரத்துல என்று சொல்லி மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன்..

“ஹல்லோ”

“ஜானா?”

“ஆமா நீங்க யாரு?”

“டேய் நான் தான்டா.....” வழக்கமான கல்லூரிக்கால மொக்கைகளையும் வேலை பழுவையும் பேசி மேனேஜரை சைக்கோ லூசு என்று வைதுவிட்டு மேட்டருக்கு பயலை மெதுவாக இழுத்து வந்தேன்.

“அப்பொறம், எப்ப கல்யாணம்?”

“ஏ அதுக்கெல்லாம் இன்னும் ரெண்டு வருசம் ஆகுமப்பா” அவன் பேச்சிலேயே வெக்கம் தெரிந்தது. பய வசம்ம்ம்ம்ம்மா ஒரு வலையில சிக்கி இருக்கான் போல, “ஒனக்கு எப்போடா?” எனக்கே பதில் கொக்கி போட்டான்.
கிடைத்துவிட்டான் ஒருவன் புலம்ப என்கிற தைரியத்தில் ஆரம்பித்தேன். “எனக்கெல்லாம் நடக்கவே நடக்காதுடா” இவ்வளவு நேரம் நார்மலா இருந்த என் குரல் இப்போது எனக்கே தெரியாமல் சோகம் ஆகிவிட்டதை உணர்ந்தேன். முகம், விக்ரமன் பட ஹீரோ கிளைமேக்ஸில் இருப்பது போல் தொங்கிப்போய் இருந்தது.

“டேய் மாப்ள என்னடா ஆச்சி? ஏன் சோகமா பேசுற?” திடீர் உரிமையுடன் பேசினான்.

“இல்லடா சீரியஸா(!) ஒருத்திய (!!!!) லவ் பண்ணுனேன். திடீர்னு சண்ட போட்டுட்டு போயிட்டாடா. பைத்தியம் பிடிக்குற மாரி இருக்கு”

“அடச்சே இத்துக்கு தான் இவ்ளோ பில்ட்-அப்பா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” ரொம்ப அசால்ட்டா சொன்னான்.

“டேய் என் லவ்வு ஒனக்கு பில்டப் மாதிரி தெரியுதாடா?”

"அதில்லடா இதுக்கெல்லாம் இவ்ளோ வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல”

“டேய் லவ்வுடா.. ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ஒருத்தி என்ட பேசிக்கிட்டு இருந்தா, ஆனா இப்போ அவ என்ன ஆனான்னே தெரில. ஒனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ் புரியல மாப்ள”

“நீ மேட்டர முடிச்சிட்டியா?”

“என்னதுரா” அதிர்ச்சியில் கேட்டேன்

“மேட்டர்.. மேட்டர்.. மேட்டர முடிச்சுட்டியான்னு கேட்டேன்” நான் காது கேக்காமல் திரும்ப கேக்குறேன்னு அவன் அழுத்தி சொல்றான். லூசுப்பய..

“டேய் இது லவ்வுடா”

“அதுவும் லவ்வு தான்.. டேய் மேட்டர் முடிச்சிரணும்டா.. அப்போ தான் இவளுக நம்ம கண்ட்ரோல்லயே இருப்பாளுக”

“ஓ, மேட்டர் முடிச்சிட்டா சண்டையே வராதாடா?” பன்னெண்டு முறை மிஸ் பண்ணிவிட்ட விரக்தியில் கேட்டேன்.

“சண்ட வரும்.. பேசாமலும் இருப்பாளுக.. கழட்டியும் விட்ருவாளுக”

“பெறகு எதுக்குடா மேட்டர முடிக்க சொல்ற”

“இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டடா. மேட்டர் முடிச்சுட்டா ஒனக்கு ‘சே இவ்ளோ தான் லவ்வா?’னு அதப்பத்தின உண்மை தெரிஞ்சிரும். அதுக்குப்பெறகு நீ லவ்வ ப்ரேக்டிக்கலா அப்ரோச் பண்ணுவ”

“டேய் அந்த பொண்ணோட வாழ்க்க?”

“எலேய் அவளுக்கும் சேத்து தான். மேட்டர் முடிச்சிட்டு பிரிஞ்சி போனவைங்க
தான் உருப்படியா இருக்காய்ங்க.. ஒன்ன மாதிரி முரளி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணுறவன் தான் கொல பண்றது, கல்யாணத்த நிறுத்துறது, தற்கொலை பண்ணுறதுன்னு திரியுறாய்ங்க. மேட்டர் முடிச்சுட்டா சந்தோசமா அவ கல்யாணத்துக்கே போயி அவ புது புருஷனுக்கு கை குலுக்கிட்டு வரலாம்”

“அந்தப்பொண்ணையே கல்யாணம் பண்ணக்கூடாதா மேட்டர் முடிச்சிட்டா?”

“அதான் மேட்டர் முடிச்சாச்சில்ல, பெறகு எதுக்கு அதே பொண்ணு?”

“டேய் காதலிச்சா அவளையே கல்யாணம் பண்ணணும்லடா?”

“எதுக்குடா கல்யாணம் பண்ணணும்? கல்யாணத்துக்கு பெறகு பண்ண வேண்டியதே காதலிக்கும் போதே பண்ணிட்டா எதுக்கு கல்யாணம் பண்ணணும்?”

எனக்கென்னமோ இவன் சொல்வது லேசாக சரி எனப்பட்டது. “நீ யாரையாவது லவ் பண்றியாடா?”

“ஆமா இப்போ ஒன்னு லைன்ல ஓடிக்கிட்டு இருக்கு” ஏதோ ஸ்டிடீ பூத்தில வரிசையில் நிற்பது போல் சொன்னான்.

“என்ன தான் நாம உருகி உருகி லவ் பண்ணுணாலும், வீட்ல மாப்ள பாக்க ஆரம்பிக்கும் போது நமக்கு டாட்டா காட்டிறாளுகளே?”

“டேய் திரும்ப மொத இருந்தா? ஒரே பிரச்சனைய வேற வேற மாதிரி கேட்டாலும் பதில் ஒன்னு தான்.. மேட்டர முடி, வருத்தம் இருக்காது” - தலைவலி ஜலதோசம் உடல்வலி அனைத்திற்கும் விக்ஸ் ஆக்‌ஷன் என்பது போல் எல்லாத்துக்கு மேட்டர் தான் ஒரே வழி என்று சொல்லிவிட்டான்.
மேட்டர் என்று நினைக்கும் போது சந்தோசம் வந்தாலும் லேசாக ஒரு பயமும் உள்ளே ஒளிந்துகொண்டிருந்தது. எனக்கு என் 12வது காதலி மேல் தான் கோவம் வந்தது. அவ மட்டும் சண்ட போடாம இருந்திருந்தா நான் இப்படி தப்பு தப்பா யோசிச்சிருப்பேனா?

இவளுக எதுக்கு சண்ட போடுறாளுகன்னே தெரிலையே? ஞாயமா பாத்தா வீட்ல அவளுக்கு வரன் பாக்க அவ சம்மதம் சொன்னதுக்கு நான் தான் அவ மேல கோவப்படணும்.. ஆனா அவ என் மேல கோச்சுக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம ரெண்டு நாளா இருக்கா, அதுவும் ஃபோன ஆஃப் பண்ணி வச்சுக்கிட்டு. சரி கடைசியா என் தம்பிக்கு கால் பண்ணி அவனோட ஐடியாவையும் கேக்கலாம்னு முடிவு செஞ்சேன்.

“அண்ணே யூரோ கப்பு இந்த தடவையும் ஸ்பெயின் தான் ஜெயிச்சாய்ங்க பாத்தியா?”

அந்த ஞாயித்துக்கெழம நைட்டு தான் அவ என் கூட சண்ட போட்டா.. “இல்லடா அது பாக்கலாம் நேரம் இல்ல”

“ஏன்ணே டல்லா பேசுற?”

“ஒனக்கே தெரியும்ல சகோதரர், நான் ஒருத்திய லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்ல?” கலகலப்பு படம் வந்தப்போ காமெடியா சகோதரர்னு கூப்பிட ஆரம்பிச்சி இப்போ அவன சீரியஸாவே அப்படித்தான் கூப்பிடுறேன்.

“யாருண்ணே? உன் ஸ்கூல்மேட்டா?”

“டேய்” என் மொத லவ்வர நானே மறந்துட்டேன். இவன் இன்னும் ஞாபகம் வச்சிருக்கான்.

“சாரி சாரி அந்த இந்திக்காரியா?”

“நீயும் நக்கல் பண்ற பாத்தியா அண்ணன?”

“ஆமா நீ தான் வருசத்துக்கு எட்டு பேர லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்ற.. அப்புறம் எனக்கு அது யாருன்னு தெரியும்?”

“இல்லடா இது இங்க நான் வேல செய்யுற எடத்துல”

“ஓ அப்படியா? சரி என்னாச்சி? சொல்லு சொல்லு” என் தம்பி கேக்கும் தொனியிலேயே தெரிந்தது நாளைக்கு அவன் நண்பர்கள் மத்தியில் நான் தான் காமெடி பீஸ் என்று.. இருந்தாலும் எனக்கு பொலம்ப ஆள் இல்லயே.. ஆரம்பித்தேன்.

“சகோதரர் இந்த பொண்ணுங்க எதுக்கு சண்ட போட்டுக்கிட்டே இருக்காங்க?”

“சண்ட போட்டாத்தானடா ஒன்ன மாதிரி பசங்க எல்லாம் அவள தாங்கிக்கிட்டே இருப்பிங்க?”

“அட ஆமா..  ஆனா தப்பு அவளுக மேல இருந்தாலும் நம்ம மேல தான் கோவப்படுறாளுக சகோதரர்.. கொடுமையா இருக்கு”

“சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துரா நீ மொத.. பொண்ணுங்க, சண்ட வர மாதிரி இருக்குற சமயத்துல அவங்களே மொத ஆரம்பிச்சுருவாங்க சண்டைய.. அப்போ தான் அவங்க மேல தப்பு இருந்தாலும் நாம் அவங்கள தாஜா பண்ண இறங்கி வருவோம்னு”

“இதெல்லாம் ஒங்களுக்கு எப்படி தெரியும் சகோதரர்?”

“சரி நான் ஃபோன வச்சிரட்டுமா?”

“டேய் டேய் டென்சன் ஆகாத.. சொல்லு”

“நீ அவளுகள செல்லம் கொஞ்சுற வரைக்கும் தாங்கிக்கிட்டு இருக்குற வரைக்கும் தான் உன்ட்ட பேசுவாளுக.. இல்லேன்னா வேற யாராவது நல்லா பேசுனா அவன் கூட”

“அப்போ உணமையான் காதல் எங்கேயுமே இல்லையா சகோதரர்?”

“டேய் ஒனக்கு எத்தன வயசாச்சி?”

“ஏன் சகோதரர்?”

“சொல்றா எத்தன வயசாச்சி?”

“29 ஆகுது”

“டேய் இந்த வயசுல நீ முரளி மாதிரி ஒன் சைடு லவ்வுக்கு அழுதுக்கிட்டு இருந்தின்னா என் வாழ்க்கை என்னடா ஆகும்”

“என் லவ்வுக்கு ஒங்க லைஃபுக்கும் என்ன சம்பந்தம் சகோதரர்?”

“டேய் நீ காலாகாலத்துல கல்யாணம் செஞ்சா தானடா என் லைன் க்ளியர் ஆகும்? எனக்கும் 26 வயசு ஆகுதுடா”

“ஓ அப்படி ஒன்னு இருக்கோ? சாரி சகோதரர்”

“ஆனா ஒன்னு சொல்றேன்டா.. நீ என்னைக்கு என்ன சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துறியோ அன்னைக்கு தான்டா ஒனக்கு ஃபிகர் செட் ஆகும். அது வரைக்கும் நீ அடுத்தவன் ஜோடியா சுத்துறத பாத்தே வயிறு எரிஞ்சு சாவடா”
சம்பந்தமே இல்லாமல் என் தம்பியும் கோவத்தில ஃபோனை வைத்துவிட்டான். வேறு வழியில்லாமல் திரும்பவும் அவனையே கூப்பிட்டேன்.

“என்னடா வேணும்?”

”உண்மையான லவ்வுக்கு இது தான் மரியாதையா சகோதரர்?”

“எதுடா உண்மையான லவ்வு? ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் செல்லம் அம்மு டார்லிங்னு கொஞ்சிக்கிடு இருப்பிங்க.. யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் நிச்சயம் ஆன ஒடனே அவங்கள பத்தி எல்லார்கிட்டயும் கொஞ்ச நாளைக்கு அசிங்க அசிங்கமா பேசி, வெக்கமே இல்லாம அவங்க கல்யாணத்துக்கே போயி சோத்த தின்னுட்டு அதே கல்யாணத்துல இன்னொரு ஃபிகர செட் செய்யுறதுக்கு பேர் தான் உண்மையான லவ்வா? அந்த வார்த்தையெல்லாம் சொல்றதுக்கே ஒனக்கு அருகத இல்ல.. பேசாமா ஓடிப்போயிரு”

“என்ன சகோதரர் இப்படி பேசுற?”

“இது தான்டா நெஜம். இங்க யாருக்கும் யாரும் நிரந்தரமா தேவை இல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இல்லேன்னா ஒரு குறிப்பிட்ட காரியம் முடியுற வரைக்கும் தான் தேவ. பெத்த அம்மா அப்பான்னாலும் அப்படித்தான். அந்த காரியம் முடிஞ்சதும், இல்லேன்னா முடியாதுன்னு தெரிஞ்சதும் யார் மூலமா அது முடியுமோ அவங்க கிட்ட போயிட வேண்டியது தான். இது ஒரு materialistic world அண்ணே. பாசத்துக்கெல்லாம் மதிப்பே கிடையாது.” - அவன் அண்ணே என்று சொல்லி பேசும் போதே தெரிந்தது அக்கறையாக seriousஆக பேசுகிறான் என்று. “நீயும் பாசத்துக்கும் லவ்வுக்கும் நெஜமாவே மதிப்பு கொடுத்திருந்தா, மொத ரெண்டு லவ் ஃபெயிலியர் ஆனாலும், அட்லீஸ்ட் உன்னோட மூனாவது லவ்வர எப்படியாவது கஷ்டப்பட்டாவது கல்யாணம் பண்ணிருப்ப, ஒரு வேள முடியலேன்னா ‘காதலே வேணாம்’னு முடிவு பண்ணிட்டு எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு வீட்ல பொண்ணு பாக்குற வரைக்கும் அமைதியா இருந்திருப்ப. ஒனக்கு பொண்ணுங்க கிட்ட பேசுறது ஒரு சொகமா, பெருமையா இருந்தது. அதனால ஒருத்தி போனா இன்னொருத்தின்னு நீ இருந்த. சரி விடு இனிமேல் சொல்லி ஒரு பிரேயோஜனமும் இல்ல. பேசாம கம்முனு இருந்தின்னா இன்னும் ஒரு வருசத்துல ஒனக்கு வீட்ல பாத்து............”

அவன் சொல்வதை அதற்கு மேல் கேட்கும் சூழ்நிலையில் நான் இல்லை.. ஏன்னா என் 11வது காதலி கிட்டத்தட்ட ரெண்டு மாதம் கழித்து என்னை அழைக்கிறாள். அதனால் சகோதரரை இப்போதைக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டேன். “என் லைஃப்ல எத்தனையோ பேர் வந்து போயிட்டாங்க, ஆனா உன் அளவுக்கு யாரும் பொறுமையா என் மேல கேர் எடுத்து அன்பா கவனிச்சுக்கல ரேவதி”

”ரேவதியா? அது யாரு?”

”அது அது வந்து இங்க பக்கத்துல.. ப்ரண்ட் டிவில வர நடிகைய பாத்து பேரு என்னன்னு கேட்டான் அத சொன்னேன்டா கண்ணு” - அய்யோ என் 11வது காதலி பேர் மறந்து போச்சே.. நான் என்ன பண்ண? சரி அடுத்த சண்டை வர வரைக்கும் சமாளிப்போம்.. “அப்புறம் செல்லம், ஏன்டா இத்தன நாளா என் கூட பேசல? நான் எப்படி ஏங்கிப்போயிட்டேன் தெரியுமா?..........................”

என் தம்பிய யாராவது பாத்திங்கன்னா தயவு செஞ்சி என்னப்பத்தி மட்டும் கேக்காதிங்க.. அப்புறம் பச்ச பச்சையா வசவு வாங்கினா நான் பொறுப்பு இல்ல..

2 comments

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One