ஒரு இயக்குனர், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் தன் பெயர் கொண்ட முத்திரையை குத்தி தைரியமாக வெளியிடும் கெத்து யாருக்காவது இருக்கிறதா? தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி.. 2001ல் இருந்து இதுவரை 9 படங்கள் இயக்கியுள்ளர். ஒரு படம் கூட சோடை போனதில்லை. நமக்கு தெரிந்த மாதிரி சொல்ல வேண்டுமானால், சிபிராஜ் அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர்1, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, கார்த்தி கர்ஜித்த சிறுத்தை, ராமநாராயணன் வெளியிட்ட மாவீரன் போன்றவை இவர் தெலுங்கில் இயக்கிய படங்கள். ஜூனியர் என்.டி.ஆருக்கு இருக்கும் மாஸும் இமேஜும் இவர் படங்களால் தான் வந்தது. அனைத்து படங்களும் பால்கனியில் அமைதியாக படம் பார்ப்பவனில் இருந்து 10ரூ தரை டிக்கெட்டில் விசில் அடிப்பவன் வரை திருப்திபடுத்தும் விதமாக கொடுப்பது தான் இவர் ஸ்பெஷல். இன்று இவர் இயக்கத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வந்திருக்கும் நான் ஈ படம் பார்த்தேன். விக்ரமார்குடு (தெலுங்கு சிறுத்தை) பார்த்த போது என்னை கவர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக இருந்த ராஜமௌலி இன்று முதல் என் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.
தின்பண்டங்கள் மீது ஈ அமர்ந்திருந்தால் நீங்கள் அதை விரட்டக்கூட இனி யோசிப்பீர்கள். “அய்யோ பாவம்” விட்ரலாம் என்று உங்கள் பெண் தோழி சொல்லுவார். வெறும் ஈயாக மட்டும் நீங்கள் அதை இனி பார்க்க மாட்டீர்கள் “நான் ஈ” பார்த்துவிட்டால். சாதாரண முக்கோண காதல் கதை தான். பணக்கார வில்லன், அப்பாவி ஹீரோ, அழகான ஹீரோயின். அதில் மறுபிறவி, ஈ என்று தனது முத்திரையை இன்னும் அழுத்தமான மையினால் திரையில் பதித்திருக்கிறார் ராஜமௌலி.
காதலனிடம் தன் காதலை காதலி வெளிப்படுத்தும் போது அவன் வில்லனால் கொல்லப்படுகிறான். செத்தவன் ’ஈ’யாக பிறந்து காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றி, வில்லனைக் கொன்று, நம்மையும் சந்தோசப்பட வைக்கிறான் கடைசி ஃப்ரேம் வரை. படத்தின் பல காட்சிகள் இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட உங்களை யோசிக்க விடாமல், “அய்யோ நானி எப்படியாவது தப்பிச்சிரு, எப்படியாவது வில்ல கொன்னுரு” என்று உங்களை அறியாமல் நீங்களே வேண்டுவீர்கள்.
இண்டெர்வெல் ஆக்ஸீடண்ட் காட்சி ஹீரோயிசத்தின் உச்சம் என்றால், அதற்கு அடுத்து “நான் தான் நானி, மறுபடியும் பொறந்திருக்கேன்” என்று ஈ ஹீரோயினிடம் சொல்லும் காட்சியில், எந்தக் கொம்பனுக்கும் புல்லரிக்கும். ஈ உடற்பயிற்சி செய்வது, மாஸ்க் மாட்டிக்கொள்வது, விஷமருந்து தாக்கி உயிர் பிழைப்பது என்று செண்டிமெண்ட்டும் ஃபேண்டசியும் சரி விகிதத்தில் கலந்து ஜெட் வேகத்தில் 101% கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நானி (படம் பேரு இல்ல, ஹீரோ பேரு) முதல் கொஞ்ச நிமிடங்களே வந்தாலும், ‘மௌன ராகம்’ கார்த்திக் மாதிரி மனதில் ஒட்டிக்கொள்கிறார். சமந்தாவிற்கு டப்பிங் பேசிய பெண் மெனகெட்ட அளவுக்கு கூட சமந்தா நடிப்பில் மெனக்கெடவில்லை. அழகு மட்டும் போதாது அம்மணி. சுதீப் - கதையின் நாயகன் இவர் தான். கொடூரமான வில்லனாக, ஈக்கு பயந்து ஒவ்வொரு விசயத்திலும் சொதப்புவது ஆகட்டும், கடைசியில் சமந்தாவிடம் குண்டூசியை வைத்துக்கொண்டு மிரட்டுவது ஆகட்டும், ஆள் மிரட்டி எடுத்துவிட்டார். அடுத்து அந்த ஈ.. யாருப்பா ஒரு சின்ன இத்துனூண்டு ஈக்கு இவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்தது? கொஞ்சம் அசந்தாலும் கார்டூன் போலவோ, விட்லாச்சார்யா படம் போலவோ ஆகிவிடக்கூடிய கதையில், இந்த ஈ நம்மை ஒரு ஆக்ஷன் ஹீரோ போல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.
இரண்டு காட்சிகள் மட்டுமே வந்தாலும் சந்தானம் கிச்சி கிச்சி மூட்டுகிறார். சாம்பிளுக்கு,
திருட வந்த இடத்தில் அவர் அசிஸ்டண்ட் ஃபோன் அடித்து, “இந்த தெருவுல 4ம் நம்பர் வீடு பூட்டியிருக்கு அங்க ஆளே இல்ல. அங்க திருடவா?”
“மூதேவி, அது என் வீடுடா”. படம் முடிந்து விட்டது என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். அதற்கு பின் அலப்பறையான சந்தானம் காமெடியும், ஈயின் ”ஜிந்தா ஜிந்தா”, “எல்ல புகழும் ஒருவன் ஒருவனுக்கே” டான்ஸும் கண்டிப்பா பாருங்கள்.
மூன்று பாடல்கள். மூன்றுமே அருமை. பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. கே.கே. செந்தில்குமாரும் (கேமரா), கீரவானியும் (இசை) ராஜமௌலிக்கு மிகுந்த பக்க பலமாக இருந்திருக்கிறார்கள். ’என்னப்பா இது மறுஜென்மம், ஈ, அது இதுன்னு? லாஜிக்கே இருக்காது போலயே!’ என்றும்,’ஒரு ஈயால் மனிதனை பலி வாங்க முடியுமா?’ என்றும் கேள்வி எழுகிறவர்கள் தியேட்டருக்கு தைரியமாக வரலாம். முதல் அரை மணி நேரம் முடிந்ததும் நீங்களே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வீர்கள் “கண்டிப்பா அந்த ஈ வில்லன கொல்லணும்” என்று. அதான் ராஜமௌலி.. வாங்க ரெண்டேகால் மணி நேரம் கவலை மறந்து என்ஜாய் பண்ணலாம். இனிமேல் வெட்டியா இருக்கும் போது எவனாவது நம்மள, “என்ன ஈ ஓட்டுறியா?”னு கேட்டா, சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க, “இல்ல, என் ஃப்ரண்ட் கூட விளையாடிக்கிட்டு இருக்கேன்”னு..
Nice Review. Thanks for Sharing boss.
ReplyDeletegood review
ReplyDeleteNice review machi. The way u have gone with the review keeps the reader engaging. Like the movie ur review also scores BIG :) vazthukal and do use this talent to achieve bigger things
ReplyDelete