கள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..

Sunday, January 6, 2013


இளைய தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கே கண்ணில் விரலை விட்டு ஆட்டம் காட்டி, “துப்பாக்கி ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் எங்கள் படத்தையும் ரிலீஸ் செய்வோம்” என்று தைரியமாக அறிக்கை விட்டவர்களின் படம். இவ்வளவு தூரம் சவால் விடுபவனிடம் கண்டிப்பாக சரக்கும் இல்லாமலா போகும்? என்கிற நப்பாசையில் நான் தியேட்டரை மிதித்தேன். அது போக இது எங்கள் ஊரை சுற்றியிருக்கும் கிராமங்களில் படமாக்கப்பட்ட படம். ”பூ” மாதிரி தரமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு. எங்கள் ஊரில் முன்னணி தொழிலதிபர் இருவருக்கும் இந்த படத்தில் பங்கு இருப்பதாக சொன்னார்கள். இது எல்லாம் படம் பார்க்க தூண்டின. இன்று மாலை காட்சிக்கு வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்துக்கு சென்றேன்.


சிவகாசி அருகில் இருக்கும் ஒரு கிராம பள்ளி (மேனிலை பள்ளி என்கிறார்கள், மொத்தமே 3ஆசிரியர்கள், 40 மாணவர்கள் தான் இருந்தார்கள்), அங்கிருக்கும் ஐந்து தறுதலைகள், ஒரு P.T வாத்தியார் இவர்களுக்குள் நடக்கும் சண்டை, இது தான் முதல் பாதி. இந்த ஐந்து தறுதலைகளும் ஆசிரியர் மேல் பொய்ப்புகார் கொடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வைப்பது, ஆசிரியரின் பெண்ணை நடு ரோட்டில் வம்புக்கிழுத்து “நாங்க பஞ்ச பாண்டவரு, எங்களுக்கு நீ பாஞ்சாலியா இரு” என்பது போல் இதிகாச கருத்துள்ள வசனம் பேசுவது, கையில் துப்பாக்கியோடு பள்ளிக்கு வருவது என்று யதார்த்த சினிமாவின் கதைநாயர்களாக வாழ்ந்துள்ளனர்.  இப்படி கருமம் பிடித்த மாதிரி கதை செல்கிறது. இது போன்ற பள்ளி மாணவர்கள் உலகில் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடும் போது இவர்கள் ஐவரையும் முறையே, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித்தோடு கம்பேர் செய்து எழுத்து போடுகிறார்கள். அதாவது விஜய்யின் பேரை மட்டும் சொல்லாமல் அசிங்கப்படுத்துகிறார்களாம். 


இடைவேளையில் பி.டி வாத்தியாரின் பெண்ணையும் இந்த தறுதலைகளையும் ஒரு முகமூடி கும்பல் கடத்தி செல்கிறது. சரி, செகண்ட் ஆஃப்ல எதாவது சொல்லுவாய்ங்கன்னு பாத்தா ஒரு சொத்த காரணம். ஒரு முக்கிய கள்ள துப்பாக்கிய இந்த தறுதலைகள் சென்னை டூர் வந்த போது அந்த கும்பலிடம் இருந்து தூக்கி சென்றுவிட்டதாம். இவர்களை கண்டுபிடித்து மீண்டும் துப்பாக்கியை வாங்க அந்த கும்பல் வருகிறது. கடைசியில் வில்லனை அழித்து தறுதலைகள் தப்பிக்கின்றன. பி.டி. யின் மகள் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள்.. பி.டி. பைத்தியம் ஆகிறார், நாம் நம் குடும்பத்திற்கு இது போன்ற படங்களில் இருந்து தப்பிக்க ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கிறோம்.. இவ்வளவு தான் படம்.


ஒரு படம் என்பது அந்த திரையில் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை பார்க்க வைக்க வேண்டும். அல்லது “இப்படியும் நடக்குமா?” என்று வாய் பிளந்து சீட் நுனியில் அமர வைக்க வேண்டும். நமக்கும் அந்த திரைக்கும் இருக்கும் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றி முடிவாகும். ஆனால் படத்தின் ’ஆ...ரம்பம்’ முதல் கடைசி வரை, “எப்படா முடிச்சி தொலைவீங்க?” என்று எரிச்சல் பட வைத்த ஒரே படம் இது தான் எனக்கு. குடுத்த காசு வீணாகிவிடக்கூடதே என்று கடைசி வரை அமைதியாக பார்த்தேன். இல்லையென்றால் அரை மணி நேரம் கூட உட்கார்ந்திருக்க மாட்டேன். ஜாலியான பள்ளி மாணவர்களை காட்டுகிறேன் பேர்வழி என்று, குண்டர் சட்டத்தில் கைதாக வேண்டிய ரவுடிகளை ஹீரோவாக காட்டியிருப்பதிலேயே படத்தின் தோல்வி முடிவாகிவிட்டது. படத்தில் ஓரளவு உருப்படியாக நடித்திருப்பவர் பி.டி. வாத்தியார் தான்.
சம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஏன் ஹீரோயினை கொல்கிறார்கள்? பி.டி. ஏன் லூசாகிறது? ஒரு கள்ளத்துப்பாக்கிக்கு எதுக்குய்யா இவ்வளவு கஷ்டப்படணும்? என எதையுமே தெளிவாக சொல்லாமல் ஒரு லாங் ஷாட்டில் "A Film by லோகியாஸ்” என்று முடிக்கிறார்கள். அந்த லோகியாஸ் மட்டும் கையில் கிடைத்தால்??????????????? காஞ்சிபுரம், சென்னை, என்று கதை எங்கெங்கோ நடப்பதாக காட்டினாலும் இடங்கள் எல்லாம் சிவகாசியை சுற்றியே இருக்கின்றன. க்ளைமேக்ஸ் ஃபைட் (அதை நீங்கள் பார்த்து ஃபைட் என்று ஒத்துக்கொண்டால்) சென்னையில் நடக்கவேண்டியது, ஆனால் சிவகாசியில் இருக்கும் ஏதோ ஒரு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரியில் நடக்கிறது. பின்னணி இசை காதில் டமாரம், கேமரா - பேரரசு படம் மாதிரி ஸ்வைங் ஸ்வைங் என்று சுற்றி வருகிறது, ஒரு சில சேஸிங் காட்சிகளை தவிர மஹா மட்டம். பாடல்கள் என்று என்னவோ வருகிறது. கிராமத்து பள்ளி மாணவர்கள் சென்னை சாலைகளில் கார் ஓட்டுகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள். நீங்கள் பொறுமையாக உயிரோடு இருந்தால் இரண்டாம் பாதியில் இந்த ஆச்சரியமான காட்சிகளை பார்க்கலாம்.


இயக்குனரையோ நடிகர்களையோ நடிகையையோ பாராட்டும் இடம் என்று எதுவும் இல்லை. ஒரு வில்லன் இருக்கிறான், அவன் சில வருடங்கள் முன்பு பசுபதியும் தனுஷும் ‘ஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்திக்கொண்டிருந்தார்களே அதே போல் சவுண்ட் மட்டும் விடுகிறான். வில்லன் குரூப்பில் யார் மெயின் வில்லன் யார் சைடு வில்லன் என்பது க்ளைமேக்ஸ் வரை குழப்பமாக இருக்கிறது. யார்யாரோ வருகிறார்கள், பேசுகிறார்கள், போகிறார்கள். க்ளைமேக்ஸில் ஹீரோயின் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்விருவரிடமும் வந்து “கன்னத்துல குத்துங்க கன்னத்துல குத்துங்க’ என்று அழும் போது நமக்கு வரும் கடுப்பில் கத்தியை எடுத்து எல்லோரையும் ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கும்.
இங்கு நான் போட்டிருக்கும் இந்த ஸ்டில்களில் இருக்கும் தரம் கூட இந்த படத்தில் இல்லை. விஜய்யின் துப்பாக்கியை வைத்து தங்கள் படத்துக்கு நன்றாக விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எங்கள் ஊர் முதலாளியின் சப்போர்ட் வேறு. ஒரு நல்ல தொழிலதிபருக்கு ஏன் இது போன்ற வேண்டாத வேலை? படம் மொக்கையாக இருந்ததை கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் படம் சம்பந்தப்பட்ட எவனோ தியேட்டருக்கு சில அல்லக்கைகளை கூட்டி வந்து, சம்பந்தமே இல்லாமல் கை தட்ட வைத்ததும், சவுண்ட் விட வைத்ததும், விசில் அடிக்க வைத்ததும் தான் என்னை பயங்கர டென்சன் ஆக்கியது.. இனிமேல் எவனாவது எங்க ஊரு பக்கம் படம் எடுக்க வந்தீங்க, மவனே பிடிச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்ருவேன்..

10 comments

 1. இவனுங்க ஓவரா ஆடும்போதே நினைச்சன் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா என்னா ஆட்டம்? இதில் “உலக நாயகனின் ஆசியுடன்”னு போஸ்டரில் பந்தாவாக ஒரு கேப்ஸன் வேறு.. ரேஸ்கல்ஸ்..

   Delete
 2. இந்த படத்தின் டிரைலரிலே விஜய் யை கேவலபடுத்த வேண்டி போடாமல் விட்டுருப்பர்கள்.. திருத்தங்கல் ஊர்க்காரர் தான் இந்த படத்தை எடுத்ததாக என் நண்பன் சொன்னனான்...இந்த படத்தை வெளிவிட்டதே பெரிய விஷயம்..

  ReplyDelete
  Replies
  1. //இந்த படத்தை வெளிவிட்டதே பெரிய விஷயம்..// நாம் இந்த கருமத்தை பார்ப்பதை விட பெரிய விசயம் எதுவும் இல்லை

   Delete
 3. கள்ள துப்பாக்கி இல்ல நொள்ள துப்பாக்கி..!

  ReplyDelete
  Replies
  1. நம்மை நொந்து நூடுல்ஸ் ஆக வைக்கும் துப்பாக்கி

   Delete
 4. அடப்பாவிகளா, என்னமோ ஜேம்ஸ் காமரூன் ரேஞ்சுக்கு என் படத்த காப்பி அடுச்சுடானு கூவோ கூவுனு கூவினிங்கலெ உங்க பவுசு அவ்ளோதானா?.
  ஏன் நண்பா நீங்க மட்டும் மொக்க படமா தேடி பொய் பாகுரிங்க?

  ReplyDelete
  Replies
  1. //ஏன் நண்பா நீங்க மட்டும் மொக்க படமா தேடி பொய் பாகுரிங்க?// ஹலோ பாஸ் தம்மாருகம் மொக்க படம் என்றாலும், என் அனுஷ்கா செல்லம் நடித்திருப்பதால், அதை மொக்க படம் என்று சொல்ல மாட்டேன்..

   Delete
 5. இதாண்டா விமர்சனம் ;))))))))))))))))))))))))))

  -
  ஐந்து தறுதலைகளும் ஆசிரியர் மேல் பொய்ப்புகார் கொடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வைப்பது, ஆசிரியரின் பெண்ணை நடு ரோட்டில் வம்புக்கிழுத்து “நாங்க பஞ்ச பாண்டவரு, எங்களுக்கு நீ பாஞ்சாலியா இரு” என்பது போல் இதிகாச கருத்துள்ள வசனம் பேசுவது, கையில் துப்பாக்கியோடு பள்ளிக்கு வருவது என்று யதார்த்த சினிமாவின் கதைநாயர்களாக வாழ்ந்துள்ளனர்.////  ReplyDelete
  Replies
  1. சின்னப்பயல் அவர்களே படத்தை பாருங்கள், இதை விட பல உன்னத கருத்துக்கள் உங்களுக்கு கிடைக்கலாம் :P

   Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One