நம் பேப்பர்காரர்களுக்கும் டிவிக்காரர்களுக்கும் எப்போதும் பக்கத்தை நிரப்ப, நேரத்தை கடத்த ஏதாவது ஒன்று கிடைத்துவிடுகிறது. தேர்தல், தேர்தல் முடிந்தால் டெங்கு, அது முடிந்தால் ஜாதி கலவரம், பின் கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ண டைம் கொடுக்காமல் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்முறைகள், அதுபோக ஆல்-டைம் அட்டெண்டஸ் கொடுப்பதற்கு இருக்கிறது நமது மின்சார பிரச்சனை. ஆனால் அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இதைப்பற்றி எல்லாம் செய்தியும் விவாதமும் போடுவது பக்கத்தை நிரப்பவும், தங்கள் சர்குலேஷனை கூட்டுவதற்காகவும் தானே அன்றி ஒருவருக்கும் சமுதாய அக்கறையோ கவலையோ இல்லை. அவர்கள் தரும் ஒவ்வொரு செய்திகளிலும் கூட, “இன்னும் அடுத்து எங்கே இது மாதிரி நடக்கும்” என்கிற எதிர்பார்ப்பும் அசிங்கமான தேடலும் தான் இருக்கின்றன. பொறுப்போடு யாரும் அணுகுவதில்லை. சரி, பத்திரிகை தொலைக்காட்சியை குற்றம் சொல்ல நான் இந்த பதிவை எழுத வரவில்லை. அவர்கள் வியாபாரிகள், அப்படித்தான் இருப்பார்கள்.
நாம், ஒரு குடிமகனாக, நம் வீட்டில் நம்முடன் பிறந்திருக்கும் சகோதரிகளுக்காக, நம் காதலிக்காக, அம்மாவுக்காக, மனைவிக்காக என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்கு தெரிந்த பாமர வழியில் சொல்லலாம் என்றிருக்கிறேன். கண்டிப்பாக உங்களுடைய வழியில் உங்களுக்கு தெரியும் தீர்வுகளையும், என்னுடைய கருத்துக்கு இருக்கும் எதிர்கருத்தையும் பதியுங்கள். எங்கோ டில்லியிலோ புதுவையிலோ நடப்பது அது அல்ல இது, நாம் வீட்டில் இல்லாத போது நமக்கு தெரியாமல், நம் உறவினரோ அல்லது நண்பர் மூலமாகவோ நம் வீட்டு குழந்தைகளுக்கு கூட நடக்கலாம், நடக்கிறது. இது தான் இன்றைய கலாச்சார சூழல்.
ஒரு சின்ன கணக்கெடுப்பை பார்த்துவிட்டு கட்டுரைக்குள்ளே செல்லலாம். 70% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலின வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திற்கு ஒரு வன்புணர்வு நடக்கிறது, 16நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பாலியல் வன்முறையோ அத்துமீறலோ நடக்கிறது, ஒவ்வொரு 12 நிமிடத்திலும் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். இதெல்லாம் வீட்டிற்கு வெளியில் தான் நடக்கிறது, அதனால் தான் பெண்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம், வேலைக்கு செல்ல வேண்டாம் என சொல்கிறோம் என பேசுபவர்கள் கொஞ்சம் பொறுக்கவும்.
வரதட்சணை கொடுமையால் 78நிமிடங்களுக்கு ஒரு சாவு நடக்கிறது, 45%மணமான பெண்கள் அடித்து உதைக்கப்படுகிறார்கள், அப்படி அடித்து உதைக்கப்படுபவர்களில் 75% பெண்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள், 55% பெண்கள் அடியும் உதையும் திருமண வாழ்வில் நடக்கும் சாதாரண விசயம் தான் என்று நம்புகிறார்கள், 77% ஆண்கள் மனைவி தாங்கள் சொல்வதை கேட்காத போது தங்கள் ஆண்மையே கேலிப்பொருளாக ஆக்கப்படுவதாக நினைக்கிறார்கள். பெண்களை தெய்வம் என்று போற்றும் நாம் தான் தெய்வத்தை கருவறைக்குள் அடைத்து வைப்பதை போல் பெண்களையும் வீட்டிற்குள் இருக்க சொல்கிறோம். அப்போது தான் வெளியில் இருக்கும் ஆபத்து அவர்களை அணுகாதாம். வீட்டிலேயே இவ்வளவு கஷ்டங்களுக்கு ஆட்படும் அவளுக்கு வெளியில் வேறு தனி வன்முறை வேண்டுமா? இது தான் நம் குடும்ப வாழ்க்கையின் நம் கலாச்சாரத்தின் லட்சணம்.
இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் ஏதோ ஒரு வித தைரியத்தில் வீட்டில் யாரும் யாரும் இல்லாத போது சில பெண்கள் சொன்னதாக இருக்கும். இன்னும் சொல்லாமல் பயந்து போய், பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்களை எல்லாம் சேர்த்தால் நாம் எளிதாக நூற்றுக்கு நூறை எட்டி விடலாம். படிப்பில் மட்டும் அல்ல, நம்மிடம் அடிபட்டு மிதிபட்டு காலத்தை கழிப்பதிலும் பெண்கள் என்றுமே முன்னோடி தான். இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி இன்னொரு ஆணின் பால் அன்பு
வைத்திருக்கிறார் என்பதையே பொறுத்துக்கொள்ளாத ஆண்கள் தான் ’முதல்
மரியாதை’சிவாஜி காதலை கை தட்டி ரசிக்கிறார்கள்.
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து உறவினர்கள் வந்து குசலம் விசாரித்து “ச்சோச்சோச்சோ, பொம்பள புள்ளையா பொறந்திருச்சா?” என்று சொல்லும் போதே டைட்டில் கார்டு போட்டு ஆரம்பித்துவிடுகிறது பெண்களின் மீது நாம் செலுத்தும் வன்முறை. அவள் வளரும் போது உறவினர்கள் என்னும் பெயரில் வரும் காமுகர்களில் இருந்து, பள்ளியில் ஆசிரியர்கள், உடன் வேலை செய்பவன் என்று தெரிந்தவர்களும், சாலையில் செல்லும் போதும், பேருந்திலும், மின்சார ரயிலிலும் நசுங்கும் போது தெரியாதவனும் அவளை ஒவ்வொரு விதத்திலும் இம்சிக்கிறான். பொறுபான ஆண்கள் இதற்கு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? பெண் மோசமாக ஆடை உடுத்துகிறாள், அவள் இரவில் தனியாக வருகிறாள், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? என்பது போன்ற சூப்பரான கருத்தாழமிக்க கேள்விகள்.
இப்போது இவ்வளவு வக்கனையாக பேசும் நானும் ஒன்றும் யோக்கியன் இல்லை. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் கலாச்சாரம் என்னும் பெயரில் நான் எழுதிய கட்டுரையை படித்து பாருங்கள், நான் எப்படி இருந்திருப்பேன் என்று புரியும். நானும் பெண்களை மட்டுமே இது போன்ற வன்முறைகளுக்கு குற்றம் சொன்னவன் தான். ‘ஆண் என்றுமே பெண்ணை விட ஒசத்தி தான்’ என்று என் அம்மா, சகோதரி, தோழி என்று எல்லோரிடமும் திமிராக பேசியவன் தான். தோழி ஒருவர் 2012ன் முடிவின் ஒரு அர்த்த ராத்திரியில் தன் தூக்கத்தையும் என் தூக்கத்தையும் கெடுத்து ’ஆண்கள் தங்களை அறியாமலே இது போன்ற பெண்ணடிமைத்தனத்தை சார்ந்து வளர்க்கப்பட்டுவிட்டனர்’ என்பதை தெளிவாக புரிய வைத்தார்.
உண்மை தானே? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், ஆணாகிய நாம் வளர்ந்த பின் நண்பர்களோடு எங்கும் போகலாம், எப்போதும் வரலாம், இரவு சினிமாவுக்கு செல்லலாம், ஓட்டலில் தனியாக சென்று உண்ணலாம். ஆனால் இதையே ஒரு பெண் செய்தால்? நம் அம்மாவே அவளை, “ச்சே என்ன பொம்பள இவ?” என்று ஏசுவார். இது தான் இன்றைய சூழல். நான் ஒரு ஆடை எடுக்க வேண்டுமானால் அது எனக்கு பிடித்திருக்கிறதா, என் நண்பர்களுக்கு பிடித்திருக்கிறதா என்று பார்த்தால் போதும். ஆனால் ஒரு பெண்? அவள் ஊரில் இருக்கும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணை உறுத்தாத அளவுக்கு அவள் ஆடை உடுத்த வேண்டுமாம், சொல்கிறார்கள் நம் புரட்சியாளர்கள்.
ஒரு ஆணுக்கு கவர்ச்சியாக ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை பார்த்தால் உணர்ச்சி பொங்குகிறதாம் அதனால் அவளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறானாம். ஆனால் நான் பார்த்த வரை கேள்விப்பட்ட வரை எவனும் கவர்ச்சியாக (கவர்ச்சிக்கு அளவுகோல் என்ன?) ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை நோண்டியதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் செல்லும் பெண்களை தான் தொந்தரவு செய்கிறான். பெண் என்றால் அவனை பொறுத்தவரை கறிக்கடையில் தொங்கும் ஒரு மாமிச துண்டு, அவ்வளவு தான். ஒரு துண்டு கறிக்காக காத்திருக்கும் வெறி நாயும், ஒரு அல்ப வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆணும் ஒன்று தான்.
இது போன்ற குரூரங்கள் நடக்காமல் இருக்க நம் அறிவாளிகள் சொல்லும் தீர்வுகளை பாருங்கள், ‘பெண்கள் இரவில் வெளியில் நடமாடக்கூடாது”, ”இறுக்கமான அங்கங்கள் வெளிப்படுத்தும் ஆடை அணியக்கூடாது” என்பது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்கிறார்கள். அதாவது, உங்கள் வீட்டில் கொசு இருந்தால் நீங்கள் வீட்டிற்கே செல்லக்கூடாது என்பது தான் இவர்களின் தீர்வு. வசதியாக சிறு மாணவிகளும், வீட்டில் இருக்கும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆட்படுவதை பற்றி இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். திறந்தால், தாங்கள் மறைக்க முயலும் ஆண்களின் லட்சணம் தெரிந்துவிடுமே?
பாலியல் வன்முறைகளுக்கு முழு முதல் காரணம் ஆண்கள் தான். தில்லியிலும், பாண்டியிலும், இன்னும் செய்தியில் சொல்லப்படாத இண்டு இடுக்குகளிலும் நடக்கும் வன்முறை யாரோ ஒரு சில ஆண்களுக்கும் சில பாவப்பட்ட பெண்களுக்கும் இடைப்பட்டவை அல்ல. அவை நம் வளர்ப்புமுறை நம்மிடம் கேட்கும் கேள்விகள். கொஞ்சம் யோசியுங்கள், எந்த பெண்ணை ஒரு சில வயதுக்கு பிறகு ஆண்களிடம் சகஜமாக பேச அனுமதித்துள்ளோம்? இன்னும் சில பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால், அபராதம், அபாலஜி, என்று அல்பத்தனமாய் நடந்துகொள்கிறார்கள். கேட்டால் கல்லூரியின் ஒழுக்கத்திற்காக செய்கிறார்களாம். அவர்கள் செய்வது ஒரு தற்காலிக தீர்வு. அழுத்தி மூடி மூடி வைத்தால் எங்கோ ஒரு பக்கம் திடீர் வெடிப்பு வரும் என்பது இயற்கை. தடுத்தால், ‘ஏன்?” என கேள்வி கேட்கும் வயது. வகுப்பில் ஆசிரியர் முன் ஒழுக்கமாக நடிக்கத்தான் இந்த மாதிரி ஒழுக்கமான பாடசாலைகள் கற்றுத்தருகின்றன. வெளியில், கூட்டத்திலோ இருட்டிலோ, அவன் அந்த அழுத்தத்தையெல்லாம் அசிங்கமாக பெண்களிடம் காட்டத்தான் செய்வான்.
பாலியல் வன்முறை குற்றங்கள் குறைய வேண்டுமானால் முதலில் பள்ளிகளும் கல்லூரிகளும் அதை விட முக்கியமாக வீடுகளும் மாற வேண்டும். கெட்ட வார்த்தைகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தி இருக்கும் சமூகத்தில், வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசும் போது தானாகவே பெண்களை பற்றி மட்டமான எண்ணம் தான் வரும். “பொம்பள பிள்ள அடக்க ஒடுக்கமா இரு”, “இப்படியே ஒரு வேல செய்யாம இரு, நாளைக்கு வரப்போறவன் இடிப்பான்” என்று அன்றாடம் வீட்டில் பேசும் வார்த்தைகள் தான் இவை. ஆனால் வீட்டில் அவளுடைய தம்பிக்கோ அண்ணனுக்கோ இதை கேட்கும் போதே, பெண் என்பவள் தனக்கு கீழ் தான், தனக்கு சேவகம் செய்யத்தான் என்கிற எண்ணம் வந்துவிடும். பெற்றோர் பிள்ளைகளை பேதம் இல்லாமல் வளர்க்க வேண்டும். ஒழுக்கம் என்பதை ஆண்களுக்கும் போதிக்க வேண்டும். ஒரு பெண் என்பவள் தன்னை போல் ஒரு மனித ஜென்மம் என்பதை புரிய வைக்க வேண்டும். எந்த ஒரு மாற்றம் என்றாலும் அது தன்னிடம் இருந்தும் தன் வீட்டில் இருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். அது போல் தான் இதுவும். ஒரு பெண்ணை மதிக்க, அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள, அவளிடம் எப்படி பழக வேண்டும் என சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்நியரோ, உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களை நம் குழந்தைகளோடு தனியாக இருக்க அனுமதிக்கவே கூடாது. பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும், தவறான தொடுதல்கள் இருந்தால் நம்மிடம் உடனே சொல்லச்சொல்லி.
அடுத்ததாக பள்ளி. பள்ளி நிர்வாகங்கள் முதலில் ஆண் பெண் என பிரிக்காமல் அனைவரையும் மாணவர்கள் என்று மட்டும் பார்த்தால் தான், விடலைக்காதல், ஆசிட் ஊற்றுவது, வீட்டிற்கு அசிங்கமாக மொட்டைக்கடிதாசி போடுவது, ஃபோனில் டார்ச்சர் பண்ணுவது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும். ஆண் பெண்ணை சகஜமாக பாலின வித்தியாசம் பார்க்காமல் வளர்க்க வேண்டும். இன்றைய சீர்கெட்ட சமுதாய சூழலில் இது கொஞ்சம் கடினம் தான் என்றாலும், வேறு வழி இல்லை. இதை செய்தால் தான் ஊர் உருப்படும். கல்விக்கூடங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், “மாணவன் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமா? அல்லது நல்லவனாக இருக்க வேண்டுமா?”. ஒருவனை நல்லவனாக உருவாக்குங்கள், அவனுக்குள் இருக்கும் மிருகத்தை குச்சியால் காயப்படுத்திக்கொண்டே இருக்காமல் அதை அவனிடம் இருந்து அகற்றுங்கள்.
வீட்டிலும் பள்ளியிலும் ஆண் பெண் உறவு சரியாக இருந்தால் தான் சமூகத்தில் பாலியல் வன்முறைகள் மறையும். அதற்கு முதலில் இப்போதிருக்கும் சினிமாவை குழந்தைகள் பார்க்காமல் இருக்க வேண்டும்.. ஏனென்றால் சினிமாக்காரர்களை ”இப்படி எடுக்காதே, சமுதாயம் நாசமாகிறது” என்று சொன்னால் அவர்கள் ஒவ்வொரு பத்திரிகையாக, ஒவ்வொரு டிவி சேனலாக வந்து அளந்துவிட்டுக்கொண்டிருப்பார்கள். சில நடிகைகளே இப்படி பேசுவது தான் கொடூர காமெடி. இதில் “சென்ஸார் தான் இருக்கிறதே?” என லாஜிக்காக கேள்வி வேறு. அவர்கள், தாங்கள் கறுப்பு நிற ஸீ த்ரூ சேலை அணிந்து மழையில் நனைந்து ஆடியதை, கேமரா தங்கள் வளைவுகளை அளவெடுத்ததை, ஹீரோ ஆம்லெட், பம்பரம் விட்டதை என எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே கோழிக்கறி கடையில் ரெக்கை விரித்து தொங்க விடப்பட்டிருக்கும் சதைகள் தான் என சித்தரிப்பதில் நம் சினிமாவிற்கு தான் அதிக பங்கு. சினிமாக்காரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஒழுங்காக படம் எடுக்க வேண்டும். அல்லது, தன் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என நினைக்கும் பெற்றோர் குழந்தைகளை படம் பார்க்காமல் தடுக்க வேண்டும். சுய ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் வர வேண்டும். அது வளர்ப்பினால் தான் முடியும். ஒரு பெண்ணை தவறாக பார்க்கும் போது எந்த இடத்தில் தன் குடும்பத்தினரை நினைத்துப்பார்த்தால் தெரியும், நாம் எவ்வளவு அசிங்கமான காரியம் செய்கிறோம் என்று.
என்னை பொறுத்தவரை இது தான் தீர்வு. நான் சொல்லும் தீர்வெல்லாம் உடனே நடக்க சாத்தியமில்லை. இன்னும் குறைந்தது பத்தாண்டுகள் ஆகும். வீட்டில் பெற்றவர்கள் முதலில் குழந்தை வளர்ப்பு பற்றி புரிந்துகொள்ள வேண்டும். சுயஒழுக்கத்தை, ஆண் பெண் சமம் என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும், கல்லூரி காலம் முழுதும் அவர்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சினிமா, அதை விடுங்கள், நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்பதை சினிமாக்காரர்கள் தீர்மானிக்காத அளவுக்கு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு வராது.
இனியும் இது ஆணின் தவறு பெண்ணின் தவறு, என்று மாற்றி மாற்றி குற்றம் சொல்லாமல், இனி தவறு நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து நம் வளர்ப்பு முறைகளில் வீட்டிலும், வெளியிலும் மாற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் பாலியல் வன்முறை என்பது முற்றிலும் குறைந்து விடும் என்பது தான் என் கருத்து. நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டங்களில் இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களை இடுங்கள்.
பெண்கள் மீது வன்முறை பற்றிய, விரிவான, சரியான தீர்வுகள் அடங்கிய பதிவு. இவைகளுக்கெல்லாம் காரணம் யார்? நாம் தான், நமது வளர்ப்பு, நாம் பெண்களை எப்படி மதிக்கிறோம் - எனது அருமை ராம்குமார் எழுதியிருக்கிறார். நண்பர்களே, படித்து உங்களது கருத்துக்களையும் பதியுங்கள்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். ராம்குமார், உங்கள் கருத்துக்களுக்கும், உங்கள் சிந்தனைகளுக்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இளைய சமுதாயத்தை வாழ்த்துகிறேன்.
ரொம்ப நன்றி சார்.. சிலரை சந்திக்கும் போது, அவர்கள் பொது வாழ்க்கையில் மிகவும் தீவிரமாக உண்மையாக இருக்கும் போது, நாம் சும்மா கதைகள் மட்டும் எழுதி ஒரு பிரயோஜனமும் இல்லை, இனி அட்லீஸ்ட் பத்திகளாவது எழுத வேண்டும் என ஆரம்பித்திருப்பது தான் இது. இனி கதைகள் மட்டும் அல்ல, கட்டுரைகளும் வரும் :-)
Deleteஉண்மையான பதிவு. மாற்றம் வீட்டில் தான் துவங்க வேண்டும் முதலில். விழாவின் தாக்கம்? :)
ReplyDeleteவிழாவின் தாக்கம் என்னை கட்டுரைகள் எழுத வைத்தது தான்.. இந்த கட்டுரையின் தாக்கம் தோழி ஒருவரோடு உரையாடியதில் உதித்தது..
Delete"வெடிப்புற பேசு ! " ---- என்று புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதி சொன்னான் . ஆனால் வெடி செய்யும் ஊரிலிருந்து இப்படியொரு கந்தக குண்டா ? நல்லது , நல்ல பகிர்வு ..வாழ்த்துக்கள் ....எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் வரவேற்கவேண்டிய அம்சங்கள் நிறைய .......நிறைய... செய்திகளை ....பதிவு செய்து இருகிறீர்கள்! நிச்சயமாக உங்கள் பகிர்வை பாதுகாப்போம் . எல்லா குற்றங்களுக்கும் சமுதாயம் தான் காரணம் என்பதை நானும் ஏற்கிறேன் . ஆனால் எல்லாம் சொன்ன நீங்கள் ஆட்சியாளர்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே ? சமூகம் மூலம் சரிசெய்ய முடியாததை சட்டத்தால் ...சட்ட பாதுகாப்பினால் செய்யமுடியாதா ? இது இன்று நடக்காமல் போகலாம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட உங்களைப்போல நல்லவர்கள் வந்தால் ஏன் முடியாது ? எல்லாம் சட்டத்தால் முடியும் என்பதல்ல ...சட்டத்தை தவிர்த்து ஒரு நிரந்தர தீர்வை இந்த சமூகம் எட்ட முடியுமா ? ஆகவே சட்டமும் ..சட்டத்தை நிறைவேற்றும் அமைப்புகளும் தன் பங்கிற்கான கடமையை செய்ய வேண்டும் ! நீதிமன்றங்களும் ,சட்டமன்றங்களும் ஜனநாயகத்தின் தூண்கலல்லவா ? இன்று அது ஆட்டம் கண்டு இருக்கலாம் அதுவே நிரந்தரமல்ல .......நிச்சயம் ஜனநாயகத்தின் தூண்கள் சரிசெய்யப்படும் . இல்லையேல் மக்கள் இந்த அமைப்பை மாற்றி அமைப்பார்கள் ! ...அதுவரை நீங்களும் நானும் அதை நோக்கி நகர்த்துவதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம் ! நன்றி
ReplyDeleteமிகவும் நன்றி அண்ணே உங்கள் கருத்திற்கு.. சட்டம் போட்டு தான் நமக்கு தனிமனித ஒழுக்கம் வர வேண்டுமா? தவறு செய்தால் தண்டிக்கத்தான் சட்டம்.. தவறு செய்யாமல் தடுப்பதற்கு தேவை தனி மனித ஒழுக்கம் மட்டுமே.. இது என் கருத்து.. இப்போதும் எல்லா பாலியல் வன்முறைகளுக்கும் சட்டங்கள் உள்ளன.. ஆனால்??????
Deletei dont think law can change something. self control is the key
Deleteya exactly.. self control should be taught and it must be like a part of life
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றிகள்,வழ்க்காமாக எல்லாரும் சொல்லும் காரணங்கள் சொல்லிதப்பித்துக்கொள்ளாமல்பொண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு பொண்களையே குத்தம் சொல்லும் சமுகததில் உங்கள் பதிவு அருமை.
ReplyDeleteநன்றி பெயர் தெரியாத நண்பரே.. என்னை வாழ்த்தும் நீங்கள் உங்கள் பெயரையும் கூறினால் சந்தோஷப்படுவேன்
Deleteபாலியல் கொடுமைகளுக்கு தீர்வு என்பது எந்த காலத்திலும் கிடைக்க வில்லை என்றே பொதுவாய் தெரிகிறது தோழரே!!
ReplyDeleteஆணாதிக்கம், குடும்ப பிரச்சனைகளையும் மீறி ஒரு பெண் தன் கற்பை காப்பற்றிக்கொள்ள பெரும் போர் செய்ய வேண்டி இருக்கிறாள். அதும் நமது தலைமுறைகளோ ஆண், பெண் பேதமில்லாமல் குழம்பிப் போய் சீரழிந்துகொண்டு தான் இருக்கிறார்கள்..
ஊடகங்கள், ஆட்சியாளர்கள், குடும்பம், சமூகம் என்று அனைத்து விசயங்களையும் சரியாக அலாசி இருக்கின்றீர்,,,
நல்ல பகிர்வு,, தொடருங்கள்..
நன்றி தொழிற்களம் குழு :-) //ஆணாதிக்கம், குடும்ப பிரச்சனைகளையும் மீறி ஒரு பெண் தன் கற்பை காப்பற்றிக்கொள்ள பெரும் போர் செய்ய வேண்டி இருக்கிறாள்// ஆண்களை ஒழுங்காக வளர்த்தால் அந்த போர் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்
DeleteThe best ever I have read in the blogs. Best wishes!
ReplyDeleteRamesh, Dubai
மிகவும் நன்றி திரு.ரமேஷ் :-)
Deleteசிறப்பான பகிர்வு...எந்த ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவது குடும்பம்தான்
ReplyDeleteஉண்மை தாங்க.. ஒருவனின் வாழ்வில் முதல் 7வருடங்கள் நடப்பது தான் அவனின் நடத்தையை வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று சொல்கிறார்கள்.. பள்ளியும் வீடும் சரியாக இருந்தால் எல்லாமே சரியாகிவிடும்
DeleteFirst 7 years, realised it recently, after a bad experience happened to someone
Deleteog. take care..
Deletetotally right.. to add - sex education must be included in the curriculum.. lot of people doesnt knew what is that about.. at the right point of time it must be introduced in the schools.. what else the govt is there for.. no one can cleanse cinema industry.. thats a total junk.. parents must start teaching the children when they start speaking bad words.. bad words are the starting point for all the bad habits..
ReplyDelete//bad words are the starting point for all the bad habits..// இருக்கலாம்.. ஆனால் கெட்ட வார்த்தை பேசுபவனும் கெட்டவனாக இருப்பானா என தெரியவில்லை.. எனக்கு தெரிந்த ஒருவன் இருக்கிறான்.. மயிரு, புடுங்கி என சொல்ல கூட தயங்குவான்.. ஆனால் எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்தவன் அவன்..
Deleteஅருமையான பதிவு. மிக தெளிவாகவும் நம் சமுதாயத்தின் பாலின பேத பொது புத்தி ஒவ்வொரு விஷயத்திலும் வெளிப்படுவதை மிக அருமையாக சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து இதுபோன்ற சமூக நோக்கு மிக்க கட்டுரைகளின் ஆரம்பம் இது. தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் ராம்குமார்.
ReplyDeleteநன்றிங்க.. கண்டிப்பாக கதைகள் தாண்டியும் இது போல் எழுத முயல்கிறேன் :-)
Deleteஅருமையான பதிவு... ஆனால் எப்போது ஆண்கள் புரிந்து கொள்ள போகிறார்கள். சொல்லி சொல்லி அலுத்துவிட்டது..
ReplyDeleteஇப்போது இருக்கும் ஆண்கள் இதையெல்லாம் புரிந்துகொள்வதும், அவர்களை புரிந்துகொள்ள வைப்பதும் மிக மிக கடினம்.. குழந்தைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தான் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தாவது இது போன்ற பிரச்சனைகள் தீரும்
Deleteமிகவும் அருமையான, அவசியமான கட்டுரை!
ReplyDeleteமிக்க நன்றி Karthik Somalinga
Deleteஎதேச்சையாக படிக்க நேர்ந்தது. மிகவும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் பாலியல் பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். தீர்வையும் முன்வைத்திருக்கிறீர்கள். மிகச் சரியான அலசல், சரியான தீர்வு. மாற்றம் என்பதை குடும்பங்களில் தொடங்கி பள்ளிக்கூடங்களில் வளர்க்கப்பட வேண்டும் என்பதை 100% ஒத்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் இதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
ReplyDeleteஎன் பதிவில் பன்னிக்குட்டி ராம்சாமி பின்னூட்டம் போட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி :-) முதலில் உங்களுக்கு நன்றி... //அடுத்த தலைமுறையாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் இதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.//ஆம் இதை நாம் தான் நம் குழந்தைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் :-)
Deleteராம்.. உங்கள் எழுத்துக்களுக்கு நான் விசிறியாகிவிட்டேன்.. அதுவும் இந்த கட்டுரை மிக அருமை... சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போனவற்றை உங்கள் எழுத்துக்கள் அருமையாக சொல்லியிருக்கிறது..
ReplyDeleteஉங்கள் பழைய கட்டுரையையும் படித்தேன்..
என்ன ஒரு மாற்றம்... அந்த தோழிக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்.. இந்த ப்ளாக்கோடு நிறுத்திவிடாமல் இன்னும் நிறைய பேருக்கு இந்த கட்டுரை அடைய வழி வகை செய்யுங்கள்.. நன்றி..
அனானி..:-)
அனானி, நான் தான் உங்கள் கமெண்ட்டுகளுக்கு இப்போது ரசிகனாகிவிட்டேன்.. நன்றி.. கண்டிப்பாக என்னால் முயன்ற வரை முயற்சிக்கிறேன் :-)
Delete