எனக்கு வயசாவுது!?!

Friday, March 4, 2011

இப்போது சில நாட்களாகவே எனக்கு வயதாவதாகவே ஒரு ஃபீலிங். வேலைக்கு போனதும் பொறுப்பு வருதோ இல்லையோ, நமக்கு வயதாகிறது என்கிற எண்ணம் கண்டிப்பாக வரும். உடல் ஆரோக்கியம் மீது தேவை இல்லாமல் அக்கறை வருகிறது! அடிக்கடி புறத்தோற்றத்தை மாற்றும் ஆசையும் தயக்கமும் மாறி மாறி வருகின்றன. யாராவது, சார் என்றோ அண்ணா என்றோ அழைத்தாலோ கோபம் பயங்கரமாக வருகிறது, அழைத்தவர் என்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும்.

என்னை விட வயதில் மூத்த டீலர்கள் எல்லாம் என்னை "சார்" என்று விளிக்கும் போது "நம்மையும் இவர்களின் வயதான கூட்டத்தில் சேர்க்கப்பார்க்கிறர்களோ?" என்று மைல்டாக ஒரு டவுட் வரும். அந்த டவுட், என் தாத்தா வயதுடைய ஒருவர் ரோட்டில் எனக்கு பின்புறம் சைக்கிளில் வந்து "சார் வழிவிடுங்க" என்று சொன்ன போது கன்பார்ம் ஆகியது. அலுவலகத்திலும் என் பாஸ் முதல்கொண்டு என்னை அழைப்பது "சார்" என்று தான். இப்படி எல்லோரும் நம்மை சார் என்று அழைப்பதற்கு என்ன காரணம்? நிஜமாகவே வயதாகிறதா? அல்லது நம் தோற்றம் வயதானது போல் இருக்கிறதா? என்று மிகவும் வருத்தத்துடன் ஒரு ஆரய்ச்சியை துவக்கினேன்.

எப்படியானாலும் சரி, நான் ஒரு இளைஞன் என்பதை நிரூபிக்க என்னவேண்டுமானாலும் செய்ய தயாரானேன். முதலில் இந்த பார்மல் ஆடைகளை நிறுத்த வேண்டும். இதெல்லாம் வயதானவர்கள் போடுவது. வேலை நேரம் போக மற்ற நேரங்களின் கேசுவல்ஸ் தான் இனிமேல். மீசை வைப்பதெல்லாம் அங்கிள் ஆனவனுக்கு எழுதி கொடுத்தது. நாம யூத்து, அதனால மீசையை மழி. மீசையை மழிக்கும் நேரத்தில் தேவை இல்லாமல் கல்லூரி காலங்களில் மீசை வளரச்செய்ய நான் செய்த வீரபராக்கிரமங்கள் ஞாபகம் வந்து தன் பங்குக்கு வெறி ஏற்றின. மீசையை மழித்தாகி விட்டது.

வேறு இன்னும் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று அறிய கண்ணாடியைப்பார்த்தேன். இதுவே மிகவும் அட்டகாசமாக அழகாக இருந்தது. ஒரு சந்தோசம் மனதுக்குள் வந்தது. அடர் நீலக்கலரில், என் தம்பி 7ஆம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கு வாங்கிய டி-சர்ட்டை தேடிப்பிடித்து அணிந்துகொண்டேன். (இப்போது அவன் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன்). சாரு நிவேதிதா உபயத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஜாக்கி ஜட்டி தெரியுமாறு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கிளம்பினேன். இன்று இப்படி ஒரு யூத்தாக ஊர் சுற்றலாம் என்னும் நினைப்பில் ஆபிசில் லீவு சொல்லிவிட்டு பையை எடுத்து கிளம்பினேன். பையை அருகில் பார்த்ததும் மண்டையில் என் யூத் பிளானுக்கு இன்னுமொரு ஐடியா வந்தது. இந்தப்பையும் ஒரு காரணம் நம்மை வயோதிகனாக காட்ட. தூக்கி வீசினேன் அந்த சேல்ஸ் ரெப் பையை. 

பைக்கை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு தோல் பொருட்கள் கடைக்கு சென்று, "இருக்குறதுலயே நல்லா லேட்டஸ்ட்டா, யூத்து யூஸ் பண்ற மாதிரி ஒரு பேக் குடுங்க" என்றேன்.

கடைக்காரன், "உங்களுக்கா சார்?" என்றான். அவன் கேட்கும் தொனியில் எதுவும் நக்கல் இருக்கிறதா என்று பார்த்தேன். சீரியஸாகத்தான் கேட்டான். என்னை அவன் யூத் என்றே நம்பிவிட்டான். மனசுக்குள் ஒரு சந்தோசம். எல்லாம் இந்த மீசைய எடுத்த மகிமை. 

"ஆமா எனக்குத்தான்". பளார் என்று முகத்தில் அறையும் ரோஸ் கலரில் ஒரு பையை கொடுத்தான். பின்புறம் மாடு கட்டும் கயிறு அந்த பையில் இருந்தது. அந்தக்கயிறை தான் தோளில் மாட்ட வேண்டும் போல. எனக்கு அந்தப்பையும் அதன் கலரும் பிடிக்கவே இல்லை. கடைக்காரனை பார்த்தேன். "வேற ஏதாவது மாடல்ல இருக்கா?"

"இப்போலாம் உங்கள மாதிரி யூத்துங்க எல்லாம் இந்த மாடல்ல அதும் இந்த கலர்ல தான் பேக் வச்சுருக்கங்க"

எனக்கு அந்தப்பையை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதை விட அந்தக் கடைக்காரனையும். ரூ.495 கட்டி மீதி 5ரூபாய்க்கு காத்திருந்தேன். ஏதோ ஞாபகம் வந்தவனாய் அந்த மீதி காசை வாங்காமலே உதட்டில் ஒரு மென் சிரிப்போடு வந்தேன். மனம் நிறைந்து இருந்ததால் அந்த 5ரூபாய் பெரிதாக தெரியவில்லை. யூத்து என்றால் டிப்ஸ் வைப்பது தானே பேஷன்.. அதான்..

உள்ளே ஒன்னுமே இல்லாத பையை தோளில் மாட்டிக்கொண்டு பைக்கில் ஏறினேன். நான் போட்டிருக்கும் நீல நிற டி-சர்ட்டுக்கு இந்தப்பை ரொம்ப கேவலமான காம்பினேஷனாக இருந்தது. ஆனாலும் யூத் என்றால் இப்படித்தான் கான்ட்ராஸ்ட்டாகப் போட வேண்டும் என்று நான் ஏற்கனவே பல புத்தகங்களில் படித்து அறிந்து வைத்திருந்தேன். பைக்கில் செல்லும் போது அடிக்கடி பின்புறம் தொட்டுப்பார்த்துக்கொண்டேன், என் ஜாக்கி தெரிகிறானா என்று. வெளியில் தெரியாமல் போடுவதற்கா இவ்வளவு செலவழித்து ஒரு உள்ளாடை? இன்று தான் நானும் என் ஜாக்கியும் பிறவிப்பயன் எய்தினோம்.

ஊரில் பெண் பிள்ளைகள் அதிகமாக திரியும் எல்லா இடங்களுக்கும் போனேன். கோயிலில் இருந்து, ஸ்கூல், காலேஜ், மார்க்கட் என்று சகல இடங்களையும் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தேன். புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்றேன். அங்கு இருந்த டீ மாஸ்டருக்கு 30வயதாகி 30வருடம் இருக்கும். "என்ன சாப்புடுறிங்க தம்பி, டீயா காப்பியா?"

ஆஹா, அவர் என்னை தம்பி என்று அழைத்துவிட்டார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை நான் பின் தொடர்ந்து வரும் போது, இதே கடையில் தான் காஃபி குடிக்க வந்தேன். அப்போது இதே ஆள் என்னை "சார்" என்றார். இப்போது என்னை "தம்பி" என்கிறார். எல்லாம் மீசை எடுத்ததன் மகிமை. அது மட்டுமா? அந்த கடைக்காரன் நம்ம கலருக்கும் நம்ம ட்ரெஸ் கலருக்கும் ஏத்த மாதிரி சரியான பேக்க தான் குடுத்துருக்கான். அதான் அன்னைக்கு என்ன சார்னு சொன்ன பெருசு இன்னைக்கு தம்பினு சொல்லுது. 'நாம யூத்தா மாறுரதுக்கு ஒரு சரியான திட்டமிட்ட பாதையில தான் போறோம்'னு மனசுக்குள்ள ஒரு திருப்தி.

இன்னைக்கு இந்த திருப்தி போதும் என்கிற சந்தோசத்தில் வீடு திரும்பினேன். வழியில் இருக்கும் ஒரு இன்ஞ்சினியரிங் கல்லூரி வாசலில் இரண்டு மாணவர்கள் லிப்ட் கேட்டனர். எப்போதும் லிப்ட் கொடுத்தால் ஒருவரை மட்டும் ஏற்றும் நான் இன்று இருவரையும் ஏற்றினேன். எத்தன தடவ பாத்துருக்கேன் ரோட்ல? பசங்க எல்லாம் எப்பவுமே ட்ரிபிள்ஸ் தான பைக்ல? யூத்து... 

இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். முதலாமாண்டு மாணவர்கள் போல் தெரிந்தது. மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் "இவைங்க ஒரு வேள நம்மளையும் இவைங்க காலேஜ்லயே படிக்குற ஸ்டூடண்ட்டா நெனச்சுருப்பாய்ங்களோ? நெனச்சாலும் நெனச்சிருப்பாய்ங்க. ஏன்னா இன்னைக்கு நம்ம ட்ரெஸ்சிங்ல இருந்து எல்லாமே டோட்டலா ஒரு யூத்து மாதிரில இருக்கு?" என் மனம் எங்கோ மிதந்து கொண்டிருந்தது.

கனவில் மிதந்து கொண்டே நான் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் பைக்கை நிறுத்தினேன். இருவரும் இறங்கினார்கள்.  கோரஸாக சொன்னார்கள், "ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்".

பயபுள்ள கண்டுபிடிச்சுட்டானோ?!

17 comments

  1. வாவ் ! செம்மக் காமெடியா இருந்துச்சு பாஸ்! எல்லாம் ஓகே ! ஆனா பாடி லாங்குவேஜ் இம்ப்ரூவ் பண்ணனும் ! அதுல தான் பசங்க கண்டுபிடிக்கிராய்ங்க! அப்புறம் ஸ்பெக்ட்ரம் , பிரபாகரன்னு சீரியஸா பேசாம டாப்சி , எம்சின்னு பேசிப்பாருங்க ! ஒருவேளை ஏமாறலாம் !

    ReplyDelete
  2. கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்றேன் நண்பா

    ReplyDelete
  3. எனக்கு என்னவோ இந்த கதை உன் தமையன் வழி வீட்டிற்கு அறிய வைக்கும் முயற்சியோ என்றே தோன்றுகிறது. கதையில் உள்ள நல்ல நடையால் சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது.. முடிவு மட்டும் ஏதோ 1000 இல் ஒருவன் பட கிளைமாக்ஸ் போல் சீக்கிரம் வந்ததாக ஒரு சின்ன உணர்வு. எனினும் கதையின் நயத்தை துளி கூட குறைக்கவில்லை என்பது நிதர்சனம். வாழ்த்துக்கள். என் தாயாரும் உன் கதைகளை விரும்புவார் என நம்புகிறேன். ஒரு நாள் கொடுத்துத்தான் பார்ப்போமே .. அழகு.. மீண்டும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. எது எப்படியோ உங்கள் நகைச்சுவை எழுத்து நன்கு சிரிக்க வைத்து என்னை யூத்தாக்கி விட்டது

    ReplyDelete
  5. குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கு போட்டானாம்
    எடைக்கு போட்ட காச வாங்கி குடிச்சு போட்டானாம்...

    அந்த மாதிரி கதையால்ல இருக்கு?

    ReplyDelete
  6. கல்யாணம் ஆகிடுச்சா

    ReplyDelete
  7. @தங்கராசு நாகேந்திரன்: நன்றி.. நாமெல்லாம் எப்பவுமே யூத்து.............
    @டக்கால்டி: ராமராஜன் நடிச்ச படம் வில்லுப்பாட்டுகாரேன்.. அத பாத்துட்டு ஓடிப்போனான் எங்க வீட்டுக்காரேன்
    @எல் கே: இன்னும் இல்லைங்க.. அதான் மனசுக்கு ஒரே கவலையா இருக்கு

    ReplyDelete
  8. eni naan anna nu kupida matten .really funny ram ! nalla serichen jolly ya eruthuchu thanks !youth kalakunga ram!ennakey ennoda juniors velaiyanda athum annaiku naan velayatada mudiyathuna ennaku vayisu ana mathiri irukum !
    yyyyyyyyyyyyyyoooooooooooooouuuuuuuuuuuutttttttttttthhhhhhhhhhhhhhhhhhh!

    ReplyDelete
  9. @cool dhurga: naama eppavume youth than.. so dont worry..

    ReplyDelete
  10. இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்?

    ReplyDelete
  11. பதிவு சிரிப்பை வரவழைத்தது, நன்றாக இருந்தது என்று அர்த்தம்! :)

    ReplyDelete
  12. ஓ ரொம்ப நன்றி :-)

    ReplyDelete
  13. பிளேடை நான் வழி மொழிகிறேன் ;-)

    ReplyDelete
  14. ரொம்ப காமெடி..செம..நல்ல எழுத்து நடை..

    ReplyDelete
  15. அபின் ராம்குமார் - சிவாகாசிக்காரன் - நல்லாவே இருக்கு நடை - இரசிச்சேன் - நாந்தான் யூத்துன்னு நினைச்சேன் - என்ன விட யூத்தா இருக்கிங்களே ! பலேபலே ! சிவகாசில ஊர் சுத்தற வேல பாக்கற நீங்க என்னிக்கும் யூத்துதான் - கவலையே வேண்டாம் - வயசாகுதுன்னு எல்லாம் நினைக்காதீங்க - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா,... நகைச்சுவை உணர்வு இருக்கும் வரை எல்லாருமே யூத்து தான் சார்.. மிக்க நன்றி சார்..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One