என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..
சமீபத்தில் நம் உலக நாயகன் கமலஹாசன் ஆந்திர மீடியா ஒன்றிற்கு ஒரு பேட்டி கொடுத்தார்.. பொதுவாகவே அறிவாளியான அவர், மீடியா என்றால் தன்னை இன்னும் கொஞ்சம் அறிவாளியாக காட்ட முனைவார்.. அந்த எண்ணத்தில் தான் அந்தக் கருத்தை உதிர்த்திருப்பார் என எண்ணுகிறேன்.. “சிப்பிக்குள் முத்து" படத்தைக் காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் "Forrest Gump". சொல்லப்போனால் நாம் தான் ஹாலிவுட்காரர்கள் மீது கேஸ் போடணும்..". அட அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.. ஹாலிவுட் படங்கள் தான் இங்கிருந்து காப்பியடிக்கின்ற என்றும் கொழுத்தி போட்டிருக்கிறார்..
Forrest Gump 1986ல் அதே பெயரில் வந்த ஆங்கில நாவலைத் தழுவி 1994ல் எடுக்கப்பட்ட படம். நம் ‘சிப்பிக்குள் முத்து’ ரிலீஸ் ஆனது 1986ல் தான். அதனால் Forrest Gump நிஜமாகவே ‘சிப்பிக்குள் முத்து’வின் காப்பியாக என்பதில் அடிப்படை சந்தேகம் வருகிறது. சரி நம் உலக நாயகரின் திருப்திக்காக அதைக் காப்பி என்றே வைத்துக்கொள்வோமே.. நம் ஆள் என்ன சும்மாவா?
கருந்தேள் அவர்கள் 2010லேயே கமலின் காப்பிக் கதைகளைப் பற்றி எழுதி, பல கண்மூடி கமல் ரசிகர்களின் கண்களைத் திறந்த இந்தப் பதிவைப் படியுங்கள், நம் உலக நாயகரின் லட்சணம் தெரியும்..
ஐயா உள்ளூரின் உலக நாயகரே, நீங்க ஆசைப்பட்ட மாதிரியே, ஹாலிவுட்காரன் மேல நல்லா கேஸ் போடுங்கய்யா.. ஆனா என்ன, உங்களால ஒரு கேஸ் தான் போட முடியும்.. பதிலுக்கு அவன் உங்க மேல ஒன்பது கேஸ் போடுவான். அம்புட்டு படத்தை நீங்கள் ஆட்டையைப் போட்டிருக்கிறீர்கள் அவர்களிடம் இருந்து.. அதையெல்லாம் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு கேஸ் போடுங்கள். நீங்கள் பாட்டுக்க அவசரத்தில் வாயை விட்டுவிட்டு அப்புறம், "வெளிநாட்டுக்கு ஓடுறத தவிர எனக்கு வேற வழியே இல்ல"ன்னு அழுது சீன் போட்டுலாம் எஸ்கேப் ஆக முடியாது பாத்துக்கோங்க..
_________________________________________________________________________
சரி இப்ப அடுத்த மேட்டர்..
நம் தமிழ்சினிமாவில் பாகவதர் காலத்தில் இருந்தே, ஹீரோ என்றால் இவர் தான், ஹீரோயின் என்றால் இவர் தான், அப்பா வேஷம், அண்ணன் வேஷம், அம்மா வேஷம், வில்லன் வேஷம், காமெடியன் வேஷம் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ”இவர் தான்” என்று அளவெடுத்துத் தைத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட நடிகர் பட்டாளம் இருக்கும்.. அதில் மிக முக்கியமானது தங்கை பாத்திரம்.. 'பாசமலர்’ ராதாவையோ, ’முள்ளும் மலரும்’ வள்ளியையோ, ’திருப்பாச்சி’ கற்பகத்தையோ நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? ஆனாலும் சாவித்திரி, ஷோபா, மல்லிகா மூவரும் கதாநாயகிகள்.. அந்தப் படங்களில் மட்டும் அவர்கள் தங்கையாக நடித்தார்கள். ஆனால், தங்கைப் பாத்திரத்திற்கென்று பிரத்தியேக நடிகைகள் இருந்தது 80களில் தான்..
அந்தக் காலகட்டம் தங்கைப் பாத்திரங்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.. தங்கை பாத்திரத்திற்கென்றே பல நடிகைகள் இருந்தார்கள். ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ல் பாக்யராஜின் தங்கையாக வருபவர், ‘வைதேகி காத்திருந்தாள்”ல் ராதாரவியின் தங்கை, ‘அரேங்கேற்ற வேலை”யில் பிரபுவிடம் இருந்து வேலையைப் பறிக்க நினைக்கும் அந்தப் பெண் இந்த மூவரும் தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் அக்மார்க் தங்கைகள்.. மூன்று பேர் நடிக்கும் படங்களிலும் பாசமும், செண்டிமெண்டும் கொட்டு கொட்டென்று கொட்டும்..
அந்தப் பாத்திரத்தின் சிறப்பா, அவர்களின் நடிப்பா அல்லது அவர்களின் குடும்பப்பாங்கான உருவ அமைப்பா எதுவென்று தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று, பிற நடிகைகளைப் போல் அவர்களைக் கவர்ச்சிக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதைத் தடுக்கும்.. 80களில் வந்த பெரும்பான்மையான மீடியம் பட்ஜெட் தமிழ்ப்படங்களில் இவர்கள் மூவர் தான் தங்கை வேடத்தில் கலக்கியிருப்பார்கள். ஹீரோவுக்கு தங்கை இல்லாத படங்கள் வருவதும் அரிதிலும் அரிது. கிட்டத்தட்ட 90களின் ஆரம்பம் வரை பல படங்களில் அருமையான தங்கைப் பாத்திரங்கள் வந்தன.. மாநகரக் காவலில் கூட கேப்டனின் தங்கை பாத்திரம் அருமையாக இருக்கும்.. ஆனால் 2000த்திற்குப் பின் இதில் ஒரு தொய்வு விழுந்தது.
2000திற்குப் பின் வந்த ஹீரோக்கள் எல்லாம் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக, அல்லது அண்ணனோ அக்காவோ இருக்கும் கடைக்குட்டியாகவே பெரும்பாலும் காட்டப்பட்டார்கள். தங்கைப் பாத்திரம் என்றால் பள்ளி செல்லும் சிறுகுழந்தையைத் தான் தங்கை எனக் காட்டுவார்கள். எல்லாம், ‘நம் ஹீரோ ரொம்ப யூத்து’ என காட்டும் டெக்னிக் தான்.. வயது வந்த தங்கை இருந்தால், அண்ணனைப் பொறுப்பானவனாகக் காட்ட வேண்டுமே? நம் ஹீரோக்கள் தான் உருப்படாமல் டாஸ்மாக்கே கதி என்றல்லவா கிடக்கிறார்கள்? அதனால் தான் சமீபத்தில் வந்த அனேகன் வரை பள்ளிப் பெண்கள் தான் ஹீரோவின் தங்கையாக இருப்பார்கள்.. திருப்பாச்சி மட்டும் ஒரே ஆறுதல். 80களின் தங்கையை மீண்டும் 2005ல் கண் முன் கொண்டு வந்தப் படம் அது. மல்லிகா அப்படியே ஒரு தங்கையாக தொடர்ந்திருக்கலாம் அந்தப் படத்திற்குப் பிறகு.. ஆனால், ‘குண்டக்க மண்டக்க’ என்னும் மொக்கைப் படத்திற்குப் பிறகு, ஏனோ அவரும் நடிக்கவில்லை, நாமும் நல்ல தங்கையை இழந்துவிட்டோம்.. அதற்குப் பின் தமிழ் சினிமா உருப்படியாகத் தங்கை பாத்திரங்களையோ, தங்கை பாத்திர நடிகைகளையோ கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்..
நம் வாத்தியார் பாலகணேஷ் சார், இதைப் பற்றிப் பேசும் போது இன்னொரு கருத்தையும் சொன்னார். நல்ல நண்பர்கள் பாத்திரமும் இப்போதெல்லாம் இல்லையென்று. ஒரு காலத்தில் நிழல்கள் ரவி, சரத்பாபு என்று களைகட்டியிருந்தது நண்பர்கள் வேஷமும்.. அதுவும் சரத்பாபு ரஜினி, கமலுக்கு சமமான நண்பராகப் பட்டையைக் கிளப்பினார்.. 2000களின் ஆரம்பத்தில் கூட கரணும் ஸ்ரீமனும் நம் ஹீரோக்களுக்கு நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.. ஆனால் இப்போது அந்த வேலையை சந்தானும், சூரியும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஹீரோவோடு சரிக்கு சமமாக டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக்கொண்டு.. அந்த பாத்திரமும் கேனைத்தனமாகத் தான் இருக்கும்.. சினிமாவில் இப்போதெல்லாம் நண்பன் என்றால் கேனையன் என்று அர்த்தமாகிவிட்டது அவர்கள் இருவரால்..
எப்பா தமிழ் சினிமா டைரக்டர்ஸ், நீங்க நண்பர்களை என்னமும் செய்யுங்க.. ஆனா சீக்கிரம் ஒரு நல்ல தங்கை பாத்திரத்தைப் படையுங்கப்பா.. என்னைப் போன்று கண் கலங்கி, மூக்கி ஒழுகிப் படம் பார்க்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்..
இவண்:
தசாவதானி அண்ணன் விஜய.டி.ராஜேந்தரின் அன்பு விழுதுகள்...
ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு...! - சசிக்குமாரை மறந்துட்டீங்களே...?
ReplyDeleteசொல்லணும்னா அந்தக்கால பாலாஜியில் இருந்து சொல்லலாம்ணே..
Delete