பொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே...

Friday, September 13, 2013

தொடர்ச்சியாக மழை பெய்து பகல் நேரத்திலும் சிலு சிலு காற்றும், லேசான தூரலும் இருக்கும் ஒரு நாளில் காட்டுப்பாதையில், அந்த குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டும், எப்போது எது வருமோ என்கிற பயத்திலும் ஒரு மலை மீது மூச்சு வாங்க ஏறிருக்கிறீர்களா? இன்று நான் ஏறினேன்..  நிச்சயமாக சொல்கிறேன், இது போன்ற அனுபவத்தை வாழ்வில் ஒரு முறையாவது எல்லோரும் பெற வேண்டும். இயற்கை, இயற்கை, எங்கும் இயற்கை மட்டும் தான். என் வாழ்வில் மிக உன்னதமான நாள்களில் இதுவும் ஒன்று.. அப்படி எங்க போனேன்னு கேக்குறீங்களா?

நான் வழக்கமாக என் டீலர்களை பார்க்க நார்த்தமலை வழியாக அன்னவாசல் செல்வேன் (சித்தன்னவாசல் பற்றிய பதிவுக்கு இங்கே தட்டவும்). அப்போதெல்லாம் நார்த்தாமலையின் மலை மீது அமைந்திருக்கும் ஒரு குடவரை கோயில் தூரத்தில்  என் கண்களுக்கு தெரியும்.. அதில் என்றாவது ஏறிவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தனிமையில் மலை ஏறுவது என்பது கேர்ள் ஃப்ரெண்டோடு சுற்றும் போது அவள் அப்பாவின் கண்களில் பட்டுவிடுவதைப்போல ரிஸ்க்கானது. ஏற்கனவே சித்தன்னவாசலில் தனியாக போய் அவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால், துணைக்கு யாராவது என் டேஸ்ட்டோடு ஒத்துப்போகும் ஆள் கிடைக்கும் வரை காத்திருக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஒரு நாள் டால்மியா கம்பெனி சேல்ஸ் ஆஃபிசரிடம் இந்த குகைக்கோயில் பற்றி பேசிய போது, “ஃப்ரீயா இருந்தா வாங்களேன் ஒரு நாள் போய்ட்டு வரலாம்” என்று சிம்பிளாக பிளான் போட்டு விட்டோம்.. ஆனால் நாங்கள் பிளான் போட்டு பல மாதம் ஆகியும் போக எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.. 

இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் எங்கள் சிமெண்ட் வியாபாரம், வார நாட்களின் மேட்னி ஷோ மாதிரி பல் இளித்துக்கொண்டிருந்தது. இன்று அதிகாலை 8மணிக்கு நான் அசந்து தூங்கிக்கொண்டிருந்த வேளையில் டால்மியா நண்பர் அழைத்தார்.. “தலைவரே இன்னைக்கும் பெருசா நமக்கு வேலை இருக்காதுனு நெனைக்குறேன், ஒரு ட்ரிப் போயிரலாமா குகைக்கோயிலுக்கு?”.. அடுத்த ஒரு மணி நேரத்தில் என் ரெண்டாவது தம்பியான Honda Shineஐ கிளப்பிக்கொண்டேன் அவரையும் ஏற்றிக்கொண்டு. 


புதுக்கோட்டையில் இருந்து 20வது கிலோ மீட்டரில் நார்த்தாமலை வரும்.. அங்கிருந்து மேற்கு திசையில் 3கி.மீ தார்ச்சாலையில் சென்றால் மலையின் அடிவாரத்தை ஒட்டி ஒரு மண் சாலை போகும்.. அது அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.. அதனால் தைரியமாக சர்வசாதாரணமாக பலரும் மரம் வெட்டிக்கொண்டிருந்தார்கள்!!!!!!!!!! நாங்கள் மலைக்கோயிலை சொல்லி எப்படி செல்வது என அடையாளம் கேட்டோம்.. ஒவ்வொருவரும் ஒரு வழியை சொன்னார்கள். அதில் ஒரு வழியை தேர்ந்தெடுத்து ஒரு வழியாக கோயிலுக்கு ஏறிச்செல்ல வேண்டிய அடிவாரத்தை அடைந்தோம்..


இது தான் மலையின் அடிவாரம்.. இங்கு என் பைக்கை நிறுத்திவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்..  ஒரு அழகான குளம் எங்கள் வழி வந்தது.. மலையில் வழிந்தோடும் மலை நீரெல்லாம் சேர்ந்து இயற்கையாய் அமையப்பெற்ற குளம் அது. அங்கிருந்து தான் நமது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பம் ஆகிறது.




அந்த குளத்தின் கரையில் இருந்து பார்த்தால் அந்த மலையின் உச்சியை தாண்டி பக்க வாட்டில் கோயிலின் கோபுரம் லேசாக தெரிந்தது. இவ்வளவு நேரமும் சமமாக சென்ற பாதை இப்போது கொஞ்சம் செங்குத்தாக செல்ல ஆரம்பித்தது.. 


லேசாக மழை வேறு தூர ஆரம்பித்தது. நம் டால்மியா நண்பர், “தலைவரே கொஞ்சம் டெரரா இருக்கும் போலையே? திரும்பிரலாமா?” என்றார்..  அவர் சொல்வதை காதிலேயே வாங்காதது போல் நான் கம்மென்று மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. ‘பரதேசி நம்மள கொல்லாம விட மாட்டான் இன்னைக்கு’ என என்னை சபித்துக்கொண்டே அவரும் என் பின்னால் வர ஆரம்பித்துவிட்டார்.. லேசான மழையில், மலை மீது எந்த பிடிப்பும் இல்லாமல், ஷூ காலோடு அந்த குளிரை ரசித்துக்கொண்டே ஏற ஆரம்பித்திருந்தோம்..


கோயிலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய இஸ்லாமிய பாணி கட்டிடம் ஒன்று இருந்தது. ஆச்சரியமாக அதனுள் பிள்ளையார் இருந்தார். கட்டிடத்தின் முன் ஒரு வேல் வேறு நட்டுவைக்கப்பட்டிருந்தது.. ‘பய புள்ளைக ராமர் கோயில் பாலிடிக்ஸ இங்க அல்ரெடி நடத்திக்காட்டிட்டாய்ங்க’ என நண்பர் கமெண்ட் அடித்தார். ஃபோட்டோவில் தெரிகிறாரே அவர் தான் நம்ம டால்மியா ஆஃபிசர்.. எங்க எப்ப பாத்தாலும் அவர்ட்ட சிமிண்ட் கேட்கலாம். தாராள மனசுக்காரரு, நெறையா சிமெண்ட் கொடுப்பாரு.. பேக் டு த பாயிண்ட், அந்த கட்டிடத்திற்கும் அதில் இருந்த பிள்ளையார் சிலைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.. அந்த ஊர் மக்களுக்கும் இந்த கட்டிடத்தை பற்றிய வரலாறு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது ஒரு இஸ்லாமிய பாணி கட்டிடம் தான். அதிலும் கூட நம்ம காதல் மன்னன்கள் அவர்களின் அன்புக்காதலி/அடுத்தவனின் பொண்டாட்டி பெயரை எல்லாம் கிறுக்கி வைத்திருந்தார்கள்.. வரலாற்றின் மதிப்பை உணராத எந்த சமூகமும் உருப்படாது என சபித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்..


கோயிலுக்கும் அந்த முஸ்லிம் கட்டிடத்திற்கும் இடையில் ஒரு பெரிய குழி இருந்தது. சில நாட்களாக பெய்த மழையும், எங்கிருந்தோ ஓடி வரும் சிறு ஊற்றும் அந்த குழியை நிறைத்திருந்தது. அந்தக்குழி எப்படியும் 10அடி ஆழமாவது இருக்கும். படி எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள் அதனுள் இறங்க.. எனக்கும் நண்பருக்கும் நீச்சல் தெரியாத ஒரே காரணத்தால் அந்த தண்ணீர் மாசுபடாமல் தப்பித்தது.. கொஞ்ச நேரம் அந்த தண்ணீரையும் இயற்கையாக அமைந்த அந்த ஸ்விமிங் பூலையும் ரசித்து விட்டு ரெண்டு எட்டு தான் வைத்திருப்போம், கோயிலில் கோபுரம் எங்களை எதிர்பார்ப்போடு எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது..



கோயிலை அருகில் பார்த்ததும் வேகமாக அதன் அருகினில் சென்றோம்.. கிட்டத்தட்ட நமது மகாபலிபுர பாணியில் கட்டப்பட்டிருந்த கோயில். சிவ பெருமானின் கோயில் அது. 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நம்மவர்களின் கட்டிட திறமையையும் கலை உணர்வையும் நமக்கு உணர்த்தும் விடைத்தாளாக அங்கே பரவிக்கிடந்திருந்தது அந்த கோயில்.. 

கோயிலுக்கு நேர் அதிரே மலையை குடைந்து இன்னொரு கோயிலையும் அமைத்திருந்தார்கள். அங்கு தான் பல சிற்பங்களும், கல் வேலைப்பாடுகளும், பழைய கால கல்வெட்டுக்களும் நிறைந்திருந்தன.








யானை தான் பெரும்பான்மையாக செதுக்கப்பட்டிருந்தது.. அடுத்தது யாழி இருந்தது. யானைகளுக்கு கீழ் இருக்கும் கற்கள் அவ்வளவு அழகாக வளைவாக, பாலிஷ் செயதது போல் செதுக்க்ப்பட்டிருந்தன.. அத்தனையும் லேசர் வைத்து வெட்டியது போல் அவ்வளவு கச்சிதம். படத்தில் கதவால் மூடியிருக்கிறார்களே அதற்குள் தான் எண்ணற்ற சிற்பங்கள் இருந்தன.. 





வரிசையாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்த இந்த சாமிகளின் பெயர்கள் எல்லாம் சத்தியமாக எனக்குத்தெரியாது.. அதை தெரிந்து கொள்ளும் ஆவலை விட, குகையின் கல்லில் இவ்வளவு கச்சிதமாக சிலைகளை வடித்த அந்த சிற்பியின் ஆற்றலைப்பற்றித்தான் வியந்துகொண்டிருந்தேன்.. சிற்பங்களை பாருங்கள்.. எவ்வளவு ஒழுங்கு! எவ்வளவு கச்சிதம்!! நிச்சயம் நம் எல்லாரையும் விட பெரிய அறிவாளிகள், பொறுமைசாலிகள், கச்சிதமாக கவனமாக வேலையை முடிக்கக்கூடியவர்கள் அந்தக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த இடத்தின் பக்கவாட்டில் இன்னொரு சிறிய சிவன் சன்னதி இருந்தது..





இதுவும் மலையை குடைந்து செதுக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் மிஸ்டர் நந்தி தான் சிவ பெருமானை ஃபேஸ் டூ ஃபேஸ் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் மெதுவாக நந்தியிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு அந்த கதவின் அருகில் போய் சிவ பெருமானை தரிசித்து விட்டு, அவரையும் ஃபோனில் க்ளிக்கிவிட்டோம்.. சாம்சங்காரன் செய்த அதிர்ஷ்டம், வெளி உலகுக்கு தெரியாத இடத்தில் இருக்கும் சிவ பெருமானை தன்னுள் படம் பிடித்துக்கொண்டான். சொல்ல முடியாது, முதன் முறையாக இந்த சிவபெருமான் என் ஃபோனில் தான் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம்.



இதெல்லாம் குகையை குடைந்து செதுக்கப்பட்டிருந்த கோயில்கள். இப்போது அவற்றிற்கு எதிரில் மலையின் மீது பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் மெயின் கோயிலை பார்க்கலாம். கீழே பாருங்கள்.. மகாபலிபுரம் போல் இருக்கிறதா அந்த கோயிலின் அமைப்பு?


கீழ் இருக்கும் படத்தின் கல்லால் செதுக்கப்ப்ட்டிருக்கும் நிலை வாசலை பாருங்கள்.. என்ன நேர்த்தியாக இருக்கிறது?  இப்போதெல்லாம் மரத்தில் கூட இந்த நேர்த்தியை நம்மால் கொண்டு வர முடியவில்லை.ஆனால் நம் மூதாதையர்கள் கல்லில் இதை உட்கார்ந்து மெனக்கெட்டு செதுக்கியிருக்கிறார்கள். 



அந்த கம்பி வலை கதவின் ஓட்டை வழியாக, கோயிலுக்குள் கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிவபெருமானை என் ஃபோன் வழியாக படம் எடுத்து ரிலீஸ் செய்து விட்டேன். உள்ளே கற்களால் எவ்வளவு அழகாக தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன பாருங்கள்.. இரண்டு நிலைகளை தாண்டி சிவ பெருமான் காட்சியளிக்கிறார்.



கிழே இருக்கும் படத்தின் பக்க வாட்டு சுவரில் பாருங்கள்.. சின்ன சின்ன பிசிறாக தண்ணீர்க்கறை போல் தெரிகிறதல்லவா? அது எல்லாமே ஓவியங்கள். சித்தன்னவாசலில் இருப்பது போன்ற இயற்கை மூலிகையால் வரையப்பட்டிருந்த ஓவியங்கள். சரியான கவனிப்பு இல்லாமல் எல்லாமே அழிந்து போய்விட்டன.. சிவன் இருக்கும் இந்த சன்னதியில் இரண்டு புறமும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் மட்டுமே இப்போது இருக்கின்றன.. அந்த ஓவியங்கள் மட்டும் அழியாமல் இருந்திருந்தால், சித்தன்னவாசலை விட இந்தக்கோவில் இன்று மிகப்பெரிய பெயரும், கவனிப்பும், புகழும், அதற்குரிய மரியாதையையும் பெற்றிருக்கும் என நிச்சயமாக சொல்லலாம்..


கீழே இன்னும் சில புகைப்படங்களை கொடுத்திருக்கிறேன் பாருங்கள் நம் முன்னோர்களின் கைவண்ணத்தை..





இந்த கோயிலுக்குள் இருக்கும் எந்த ஒரு சன்னிதியிலும் எந்த கடவுளின் சிலையும் இப்போது இல்லை. முஸ்லிம்களின் படையெடுப்பில் அவையெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். கோயிலில் இருக்கும் அனைத்து கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.. ஆனால் கோயிலின் பழைமை மாறாதவாறு லேசாக அங்கங்கே சிமெண்ட் பூசி ஒட்டவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லும், அதில் இருக்கும் உளியின் ஒவ்வொரு கோடும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளை நம்மிடம் சொல்ல மிகவும் துடிக்கின்றன.. ஆனால் அவை ஊமைகளாக இருக்கின்றனவா, அல்லது நாம் செவிடாக இருக்கிறோமா என்று தெரியவில்லை. அந்தக்கதைகள் நமக்கு புரிந்தும் புரியாமல் அரைகுறையாகவே இருக்கின்றன. முழுதாக சொல்லப்படாத ஒரு வெறுமையும், ஏதோ நம்மை விட்டு போய்விட்ட ஒரு ஏக்கமும் நிச்சயம் வரும் இந்த கோயிலையும் குகை சிற்பங்களையும் பார்க்கும் போது. மகாபலிபுரத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இந்தக்கோயில். எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் இருப்பதால் இன்னும் யார் பார்வைக்கும் அவ்வளவாக படாமல், தன் ரகசியங்களை பொத்து பாதுகாத்துக்கொண்டு, இயற்கையின் அமைதியுடன் குடும்பம் நடத்திகொண்டிருக்கிறது அந்த அழகான கோயில்.

இந்தக்கோயில் இன்னும் வெளி உலகத்துக்கு தெரியாததால் நேரும் பல நல்ல விசயங்களில் முக்கியமான ஒன்று, படித்த முட்டாள்களின் பார்வைக்கு இந்தக்கோயில் இன்னும் வரவில்லை. அதனால் எங்கும் “Ram loves Seetha", "I love Hanshika" என்று கோழைகளின் வசனங்களை இன்னும் யாரும் இங்கு கிறுக்க ஆரம்பிக்கவில்லை. இது போல் புதுக்கோட்டையை சுற்றி இன்னும் பல வரலாற்றுப்பொக்கிஷங்கள் கொட்டிக்கிடக்கின்றன.. நேரம் கிடைக்கும் போது நேரில் சென்று பார்த்து, உங்களுடன் பகிர்கிறேன்.. கீழே இருக்கும் ஃபோட்டோவில் இருக்கும் அந்த ம(பு)னிதரும் கூட வரலாற்று சிறப்பான ஆளாக வருங்காலத்தில் வந்தாலும் வரலாம், be careful.. 


35 comments

  1. மிகத் துல்லியமான படங்களும்
    அருமையான விளக்கமும்
    நேரில் பார்க்கிற உணர்வைத் தந்து போகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  2. நார்த்தாமலையின் மலை மீது அமைந்திருக்கும் ஒரு குடவரை கோயில் = அருமையான பதிவு. வாழ்த்துகள் ராம்குமார்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  3. ஒரு அகழ்வாராய்ச்சியே நடத்தீட்டீங்க.. கலக்கல் பதிவு. படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அகழ்வாராய்ச்சி நடத்துற அளவுக்கு நான் வொர்த் இல்ல நண்பா.. பொழுது போகாம போன இடம் அது.. அவ்வளவு தான்.. பெரிய சமூக அக்கறை எல்லாம் இல்லை..

      Delete
  4. கல்லும் சொல்லும் கதையை
    அருமையான பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.. உண்மையில் அந்த கற்கள் எந்த கதையையும் சொல்லவில்லை.. அனைத்தையும் தங்களுக்குள் மறைத்துக்கொண்டன :-(

      Delete
  5. எத்தனை அழகு இக்கோவில். பராமரிக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அடுத்த தமிழக பயணத்தின் போது இன்னும் இது போன்ற சில கோவில்களை உங்களோடு காண ஒரு ஆசை..... பார்க்கலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வாருங்கள் சார்.. புதுக்கோட்டை இது போல் பல வரலாற்று அதிசயங்களை தன்னுள் தாங்கி நிற்கிறது..

      Delete
  6. இது ஒரு சமணக் கோவில். பண்டைய தமிழர்களில் பெரும்பாலனவர்கள் சமணர்கள். அதனால் தான் இன்று இந்துகடவுள்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல தெய்வங்களை நீங்கள் அங்கு காண முடியவில்லை. மேலும் தகவல்களுக்கு மயிலை. வெங்கிடசாமி எழுதிய சமணமும் தமிழும் என்ற நூலை வாங்கி படியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அந்த புத்தகத்தை தேடிப்படிக்க முயல்கிறேன்.. உங்கள் கருத்துக்கு நன்றி அனானி சார்..

      Delete
  7. அன்பின் ராம் குமார் - நல்லதொரு பதிவு - படங்களூம் விளக்கங்களும் அருமை - நல்ல நாளாக மகிழ்ச்சியுடன் களிப்புடன் புகைப்படங்களும் எடுத்து தூள் கிளப்பி இருக்கிறீர்கள் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்தும் ஊக்கமும் தான் எனக்கு டானிக் சார்.. மிகவும் நன்றி அன்பின் சீனா சார்..

      Delete
  8. படங்களுடன் விளக்கம் மிகவும் அருமை... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு ட்ரிப் போட்ருவோமாண்ணே?

      Delete
  9. //எப்படி உபயோகிக்கனும்னு தெரியல.. அறிஞர்கள் யாராவது பதிவெழுதி உதவுங்கள்.. க்கு சிறந்த மாற்று என்று கூறுகிறார்கள்.. அப்படியா...? // அப்படிபோடு அருவாள.. சுதந்திர இந்தியா வோய் இது எங்கள் சொத்து..

    ஆமா பைக் பாதுகாப்பா இருந்ததா.. பாதுகாப்பு குறித்து எனக்கே பயம் வருது...

    // அந்த ஓவியங்கள் மட்டும் அழியாமல் இருந்திருந்தால்,// நானும் அவற்றை நீர்த் திவலைகள் என்று தான் நினைத்தேன்


    நண்பா விரைவில் புதுக் கோட்டை வருகிறேன்.. நிச்சயம் பார்த்தே ஆகா வேண்டிய இடம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வாங்க.. குறைந்தது ரெண்டு நாளாவது ப்ளான் போட்டால் தான் அனைத்தையும் திருப்தியாக பார்த்து ரசிக்க முடியும் நண்பா..

      Delete
  10. கோயிலின் ஓவ்வொரு பகுதியையும் அழகாக கூர்ந்து கவனித்து படத்துடன் சிறப்பாக பகிர்ந்து அந்த அழகிய இடத்திற்கு எங்களையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்! சிறப்பான பகிர்வு! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தலைப்பே ஒரு கவிதைபோல இருக்கு,

    ReplyDelete
  12. தலைப்பே ஒரு கவிதைபோல இருக்கு,

    ReplyDelete
    Replies
    1. ஓ இதுக்கு பேர் தான் கவிதையா?

      Delete
  13. உங்கள் எழுத்தும் புகைபடங்களும் அருமை.

    ReplyDelete
  14. தல விஷயம் நிறைய அடங்கி இருக்கு ...
    வரலாற்றை பாதுகாக்க தெரியாத சமூகம் முன்னேற வாய்ப்பே இல்லை , எத்தனை சத்தியமான வார்த்தை ... கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்று குறித்து வைத்திருக்கிற இடங்களில் இதுவும் ஒன்றாகி போனது தலைவா ... வழக்கம் போல எழுத்து பட்டாசு .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் நம்ம சீனுவ தூக்கி வண்டில போட்டுட்டு நீங்களும் வந்துருங்க.. பட்டைய கெளப்பிருவோம்..

      Delete
  15. கடசியா கண்னாடி போட்டு ஒரு அங்கிள் நிற்கிறாரே யாரு பாஸ் அது ...? உங்க பிரதரா ?

    ReplyDelete
    Replies
    1. அவர் கி.மு.27 நூற்றாண்ட்டில் வாழ்ந்த ஒரு பெரிய மகான்.. என் கண்களுக்கு மட்டும் காட்சி அளித்தார்.. அவரை கும்பிட்டு கண்ணத்தைல் போட்டுக்கொள்ளுங்கள்..

      Delete
  16. Arumaiyaana padhivu. Azhagana Samsung's clicks. Expecting more adventurous trips from Mr Ramkumar. Thanks for sharing with us Rathnavel Sir.

    ReplyDelete
    Replies
    1. Thank you Mr.Anony.. Surely I'll post about some more trips

      Delete
  17. நீங்கள் சொல்வது உண்மையே என் சொந்த ஊரான செஞ்சியில் உள்ள செஞ்சிகொட்டை என்னும் நினைவு சின்னம் இன்று மிக மோசமான நிலையில் உள்ளது அதற்கு காரணம் அது நினைவுச்சின்னம் என்று பலரும் அறிந்ததால் அங்கு காதலர்கள் என்கிற பெயரில் வரும் சில நபர்கள் தான்....

    ReplyDelete
  18. Nice and informative post.thanks!!

    ReplyDelete
  19. சுவையான நடை! அருமையான படங்கள்! இதுவரை அறியாத இடம்!
    தங்கள் பணி தொடர வாழ்து!

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One