புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... - சிறுகதை

Friday, April 19, 2013

கையில புது வாட்ச்ச மாட்டிட்டு, ‘நான் கன்னி கழியாமத்தான் இருக்கேன்’ என தன் வாசனையால் ஊருக்கு சேதி சொல்லும் புது சட்டையை அணிந்து கொண்டு, முகம் பூரா சந்தோசத்தோட எங்கேயோ கிளம்பிட்டு இருக்கானே, அவன் தான் நம்ம விஸ்வநாதன். பய அவ்வளவு சந்தோசத்தோட எங்க கெளம்புறான்னு தான கேக்குறீங்க? பொண்ணு பாக்க.. என்னது யாருக்கா? அட அவனுக்கு தாங்க.. வயசு தான் 37 ஆகுது.. ஆனா இன்னும் யூத்து தான்.. இது வரைக்கும் 47 பொண்ணுங்கள பாத்துட்டான்.. இப்ப 48வது.. 

இவனுக்கு இது வரை பார்த்த நாற்பத்தி ஏழும் ஏன் பிடிக்காமல் போயின என்பது அவனுக்கும் அவன் குல தெய்வம் குன்று மலை சாஸ்தாவிற்கு மட்டுமே வெளிச்சம். மணல் கயிறு எஸ்.வீ.சேகர் அளவுக்கு இல்லையென்றாலும் இவனுக்கும் ஒரு சில கண்டிசன்கள் உண்டு..

1. பொண்ணுக்கு நீளமா கூந்தல் இருக்கணும்..
2. பொண்ணு UG டிகிரி மட்டுந்தான் படிச்சிருக்கணும்.. அதுவும் ஏதாவது லோக்கல் கல்லூரியில் தான் படித்திருக்கணும்.. யுனிவர்சிட்டியிலோ ஹாஸ்டலிலோ தங்கி படித்திருந்தால், இமிடியேட் ரிஜெக்டட் தான்..
3. வேலைக்கு போகக்கூடாது.. அப்படியே வேலைக்கு தான் போவேன் என்று அடம்பிடித்தால் டீச்சர் வேலைக்கு மட்டும் போகலாம்.. இந்த டீச்சர் வேலைக்காக தனது ரெண்டாவது கண்டிசனின் முதல் பாயிண்டில் UG டிகிரி+B.Ed என்று amendment செய்யப்பட்டது..
4. அவளுக்கு சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.. விளையாட்டை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஏனென்றால் இவனுக்கு விளையாட்டு பற்றி சுத்தமாக தெரியாது..
5. ஃபேஸ்புக் ப்ரொஃபைல் இருக்கலாம்.. ஆனால் உண்மையான படம் அதில் இருக்க கூடாது.. ஏதாவது கார்டூன், அனிமேட்டட் தேவதை, பூப்போட்ட கோலம் என்று தான் ப்ரொஃபைல் படம் இருக்க வேண்டும்.
6. ஒரு வேளை பெண்ணை பிடித்து கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டால் கல்யாணத்திற்கு அவளின் பள்ளி, கல்லூரி தோழர்கள் ஒருத்தனும் வரக்கூடாது..

இந்த கண்டிசன்களில் ஒன்று குறைந்தாலும் பெண்ணின் பெற்றோரில் இருந்து அவர்கள் வீட்டு வேலைக்காரி, ஒரு மூலையில் கம்மென்று படுத்திருக்கும் நாய், துடைக்காமல் இருக்கும் பைக், உப்பு கம்மியாக போட்ட வாழைக்காய் பஜ்ஜி, தண்ணீர் அதிகம் கலந்த டீ வரை அனைத்தையும் பிரித்து மேய்ந்து ஏளனம் செய்துவிட்டு கிளம்பிவிடுவான். இவன் ஏரியாவில் இவனால் ரிஜெக்ட் செய்யப்படாத பெண்களே இல்லை. இவன் வந்தாலே தெருவில் ஒவ்வொருவரும் கரித்துக்கொட்டி தங்கள் வீட்டு கதவை மூடிக்கொள்வார்கள். ஒரு பெண்ணை வேண்டாம் என சொல்வதை ஒரு கெத்தாக நினைத்துக்கொண்டிருப்பான் போல.. ஆனாலும் அவன் மூளைக்கு லேசாக இப்போது தான் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. தன் அனைத்து கண்டிசனுக்கும் ஒத்து வரும் பெண்ணாக இவன் தேடித்தேடி, திருப்தியில்லாமல் 25 பெண்களை ரிஜக்ட் செய்யும் போது தான் புரிந்தது தன் கண்டிசன்களின் லட்சணம் பற்றியும் தான் செய்யும் அட்டூழியங்கள் பற்றியும்.. இனியும் பெண் கிடைக்க வேண்டுமானால்  தன்னுடைய கண்டிசன்கள் ஒவ்வொன்றையாக தியாகம் செய்யதால் தான் முடியும் என நினைத்து அந்த கடினமான முடிவை எடுத்தான்.

ஆம் தன் கண்டிசன் அனைத்தையும் விஸ்வநாதன் நீக்கிக்கொண்டான். ஆனாலும் அவனால் நீள கூந்தல் கண்டிசனை மட்டும் தியாகம் செய்யவே முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. தன் மண்டை கிளார் அடிக்க ஆரம்பித்தவுடன் அந்த கண்டிசனையும் வேறு வழியில்லாமல் தியாகம் செய்து விட்டான். இப்படி தியாகம் செய்து தியாகம் செய்து இன்று அவன் தலையில் முடி, முகத்தில் பொலிவு, வயதில் இளமை என்றும் எல்லாமே தியாகமானாலும், 37வயசிலும் முழு மூச்சோடு பெண் தேடுகிறான். கண்டிசன் இருந்த போது  வயது இருந்தது.. இப்போது கண்டிசன் இல்லை.. வயதும் இல்லை.. அது போக இவன் ஏற்கனவே பெண் பார்த்த வீடுகளின் கணக்கு கிட்டத்தட்ட அரை சதத்தை நெருங்குவதால் ஊரில் இவனை பற்றி, கல்யாண வயதில் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பலருக்கும் தெரிந்திருந்தது.. தரகரிடமே ’அந்த தெக்குத்தெரு விஸ்வநாதன் பய ஜாதகம்னா வேண்டாம்’ என இவனை பார்க்காமலே ஒதுக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தான் என்றால் பய என்ன மாதிரி அட்ராசிட்டி பண்ணிருப்பான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..



 இவன் ஒவ்வொரு காரணமாக சொல்லி பெண்களை மறுத்த காரணம் போய், இன்று பெண்கள் இவனை ஒவ்வொரு காரணம் சொல்லி மறுக்கிறார்கள்.. அந்த காரணங்களை எல்லாம் கேட்டால் நமக்கே சிரிப்பாக வரும், இதையெல்லாம் சொல்லி மறுப்பார்களா என்று.. ஒரு பெண், ‘மாப்ளை ரொம்ப வெள்ளையா இருக்காரு’னு சொல்லி மறுத்திருக்கு.. எனக்கு அந்த பெண்ணை பார்த்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல ஆசை.. நான் முதல்வரனால் பீச்சில் அவளுக்கு ஒரு சிலை வைக்கவும் என் டைரியில் குறித்துக்கொண்டேன். என்னை பல முறை கறுப்பு என கிண்டல் செய்தவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்த அந்த பெண் தான் மங்கையர் குல திலகம். இவனுக்கு ஒழுங்காக இன் பண்ணி பெல்ட் மாட்ட தெரியாது.. அதை கூட காரணமாக சொல்லி கழட்டி விட்டனர் சில பெண்கள். ‘மாப்ள எந்த ஸ்போர்ட்ஸ்லயும் இல்ல’.. ‘மாப்ள பல சரக்கு கடை வ்ச்சிருக்காரு’.. ‘மாப்ள ஒரு மாரி மொறச்சி பாக்குறாரு, பார்வையே சரியில்ல’.. ‘மாப்ள மூக்க கொடஞ்சுக்கிட்டே இருக்காரு, அறுவெறுப்பா இருக்கு’.. ‘மாப்ள சிரிச்சா பயமா இருக்கு’.. இதெல்லாம் அவனை மறுத்த பெண்கள் சொன்ன காரணம்.. 

இவன் இப்படி ஒவ்வொருத்தியும் தன்னை ரிஜெக்ட் செய்தவுடன் என்னிடம் தான் புலம்புவான்.. “டேய் மாப்ள, இந்த பொம்பளைங்கலாம் இப்ப என்னமா கண்டிசன் போடுறாளுகடா? நானும் ஒரு காலத்துல கண்டிசன் போட்டவன் தான்.. இப்ப எப்படி அமைதியா இருக்கேன்? நான் கண்டிசன் போட்டா தாங்க மாட்டாளுகடா இவளுக.. கண்டிசன் போட்ட என் கதி தான் இவளுகளுக்கும் கூடிய சீக்கிரம் வரும் மாப்ள.. நீ வேனா பாரேன்” என் புலம்பிக்கொண்டிருப்பான்.. சரி சரி இப்ப 48வது பொண்ண பாக்க போறான்.. அபசகுணமா பழைய விசய்ங்கள பத்தி எதுக்கு பேசிக்கிட்டு? பயலுக்கு இப்பயாவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்...


ரெண்டு நாள் கழிந்தன..

”டேய் மாப்ள இன்னைக்கு ஒரு பொண்ணோட பயோடேட்டா வந்துச்சிடா.. சூப்பர் பொண்ணுடா” ஃபோனில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். குரல் மட்டுமே கேட்டாலும், அங்கு அவன் வீட்டில் வாய் முழுக்க பல்லாக இளித்துக்கொண்டே பேசுவது இங்கு என் ஃபோனில் தெரிந்தது. சிரிக்கலாம் அதுக்காக ஒரு மனுசன் இவ்வளவு கேவலமாவா சிரிப்பான்? ஏதோ வரன் ஃபோட்டோவை பார்த்து வழிந்துகொண்டிருக்கிறான். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் விடாமல் முயற்சி செய்கிற இவனை பற்றி எங்கள் கல்லூரியில் ஒரு கேஸ் ஸ்டடி வைக்கலாமா என்று கூட பல முறை யோசித்திருக்கிறேன்.

“டேய் பொண்ணு பாத்தத பெருமையா சொல்லி சந்தோசப்படுற வயசாடா ஒனக்கு? இந்நியாரம் உனக்கு ரெண்டு பிள்ளைக பொறந்து ஒன்னு ஒன்ட்ட ரேங்க் கார்டுல கையெழுத்து போட சொல்லியும், இன்னொன்னு கொல்லைக்கு போயிட்டு கழுவி விட சொல்லியும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குற வயசுடா. இன்னும் ஏதோ சின்னப்பய மாதிரி வெக்கமே இல்லாம பொண்ணு பாத்ததுக்கு வெக்கப்பட்டுக்கிட்டு இருக்க?” சமீபத்தில் கல்யாணம் ஆன திமிரில் கல்யாணம் ஆகாத என் உயிரை, என் நண்பனை, என் மாப்ளையை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன்.. ஆனால் தேவை இல்லாமல் அவன் ரெண்டு நாட்களுக்கு முன் பெண் பார்க்க போனதை பற்றி கேட்கவில்லை.. கேட்கும் அவசியமும் இல்லை.. எல்லாம் தெரிந்தது தானே? இவன் வருகிறான் என்று தெரிந்ததும் பெண் வீட்டில் எல்லோரும் ஊரை காலி செய்து ஓடியிருப்பார்கள்..

“டேய் ஒங்க மாமனாரு பாவம், ஏதோ வெசாரிக்காம ஒனக்கு பொண்ணு குடுத்துட்டான்.. நாங்கலாம் நாலாபக்கமும் வெசாரிச்சி கல்யாணம் பண்ணுவோன்டா”

“டேய் ஆனா ஒலகத்துல இத்தன வயசு ஆகியும் கல்யாணமே ஆகாம கல்யாணத்த பத்தி ஃபீல் பண்ணி இவ்ளோ பில்ட்-அப் குடுக்குற ஒரே ஆள் நீ தான்டா.. சரி, அந்த கருமம் பிடிச்ச புது காமெடி கதைய சொல்லித்தொல.. கேக்கலேனா விட மாட்டில?” எனக்கு ஒவ்வொரு முறையும் இவன் பெண் பார்க்கும் கதையை கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.. ஒரு பெண்ணை நேரில் பார்க்கும் வரை பயலுக்கு மிகவும் பிடிக்கும்.. வானத்துக்கும் பூமிக்கும் குத்திப்பான்.. பெண்ணை நேரில் பார்த்தவுடன் ஒன்று இவனுக்கு பிடிக்காது அல்லது அந்த பெண்ணுக்கு பிடிக்காது.. அது என்னமோ தெரியவில்லை, இவனை விட சுமாராக இருக்கும் எங்கள் வயதொத்த பலரும் கல்யாணம் ஆகி அவர்களின் பிள்ளைகள் இரவில் படுக்கையில் ஒன்னுக்கு போகாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். ஆனால் இவன் இன்னும் பெண் பார்க்கும் லெவலில் தான் இருக்கிறான். ம், என் கணிப்பு சரியென்றால் இவன் சென்சுரி கூட அடிப்பான்.

”ஹ்ம் நீ கேக்க மாட்டேன்னு சொன்னா மட்டும் நான் விட்ருவேனா?” தனக்கு மட்டும் புரிந்த அறிவியல் பாடத்தை நமக்கு புரிந்து விடாதோ என்கிற நப்பாசையில் அதீத ஆர்வத்தோடு ஆசிரியர் வகுப்பில் நடத்துவாரே அது போன்ற ஆவலில் என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.. “பொண்ணு நம்ம மதுரைக்காரி தான் மாப்ள.. அமெரிக்கால  ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில இருக்கா போல. மாசம் 4லட்ச ரூவா சம்பளமான்டா”..

ஆரம்பத்தில் அவன் வாயெல்லாம் பல்லாக இருந்ததற்காக காரணம் புரிந்தது - 4லட்சம். “சரி மாப்ள, பொண்ணு பாக்க எப்டிருக்கு?”

“டேய் அப்படியே லஷ்மி மேனன் மாரி இருக்காடா.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலான்டா வாழ்க்க பூரா”.. 

’பெறகு ஏன்டா கல்யாணம் பண்ணுற? பேசாம ஃபோட்டவையே பாத்து இளிச்சுக்கிட்டு இரு’னு சொல்ல நினைத்தேன்.. ஆனால் என் உயிர் நண்பன் என்பதால் அவன் தன்மானத்தை நானே அழிக்க விரும்பவில்லை. “டேய் போன மாசம் பாத்த பொண்ணு காஜல் அகர்வால் மாதிரி இருக்குனு சொன்னியேடா?”

“காஜல் அகர்வால் எல்லாம் ஒரு மூஞ்சியாடா? லக்‌ஷ்மி மேனன் தான்டா பாக்குறதுக்கு குடும்ப பொண்ணு மாரி இருப்பா”..

“சரி அதுக்கு முன்னாடி பாத்த பொண்ண அனுஷ்கா மாதிரினு சொன்னது?”

“டேய் அனுஷ்கா ரொம்ப ஒசரன்டா.. நமக்கு செட் ஆவாது”

மீண்டும் என் மனதில் ஒரு மைண்ட் வாய்ஸ் வந்தது, ‘பெறகு என்ன மயித்துக்குடா அன்னைக்கு பொண்ணு அனுஷ்கா மாரி, பொண்ணு அனுஷ்கா மாரினு ஊரு பூரா வழிஞ்ச?னு’ கேக்கலாம்னு நெனச்சேன்.. சரி பயலோட நல்ல மூட கெடுக்க வேணாமேனு மறுபடியும் மன்னிச்சுட்டு, “டேய் ஒனக்கு இன்னைக்கு எந்த ஹீரோயின் டாப்ல இருக்காளோ அவள மாதிரி பொண்ணுங்க கண்ணுக்கு தெரியுது.. நல்ல விசயம் தான்.. ஆனா மீனா காலத்துல இருந்து இதே மாதிரி இருக்க கூடாதுடா.. சீக்கிரம் கல்யாணத்த முடிச்சி தொலடா”

“மாப்ள இந்த தடவ மேரேஜ் கன்ஃபார்ம்.. லக்‌ஷ்மி மேனன எனக்கு பிடிச்சிருச்சி.. அவளுக்கும் என்ன பிடிச்சிருச்சி.. நெக்ஸ்ட் மேரேஜ் தான்.. ஒனக்கு ட்ரீட் தான்...”

அவன் சீரியஸா பேசுறானா காமெடியா பேசுறானா என்றே புரியவில்லை.. “டேய் புரிஞ்சு தான் பேசுறியா?”

“ஏன் மாப்ள?”

“அந்த புள்ள எங்க வேல பாக்குது?”

“அமெரிக்காலடா.. கல்யாணத்துக்கு பெறகு நானும் ஷொய்ய்ய்ய்ய்ங்... அமெரிக்காவுக்கு.. ஃப்ளைட்ல” - மீண்டும் வாயெல்லாம் பல்..

“எவ்வளவு சம்பளம்?”

“நாலு லட்சன்டா.. மாசம் சொளையா நாலு லட்சம்”  உள்நாக்கு தெரியும் அளவுக்கு பெருமை சிரிப்பு வேறு...

“சரி இப்ப சொல்லுங்க, சார் நீங்க என்ன வேல பாக்குறீங்க? எவ்வளவு சம்பளம்?”

“நா நா நா இங்க வந்து எங்க அப்பா கூட துணைக்கு எங்க கடையில... சரி இப்ப எதுக்கு இத கேக்குற?” நான் கேட்ட கேள்வியை அவன் மனசாட்சி அவனிடம் இது வரை கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.. இப்படி இருப்பதால் தான் இவனுக்கு எந்த பெண்ணும் செட் ஆவதில்லை என அவதானிக்கிறேன்.. 

“இல்ல, சார் கல்யாணம் ஆன ஒடனே அமெரிக்காவுக்கு போறீங்களே அங்க போயி என்ன பண்ணுவிங்க? ஒங்க அப்பா அங்க ஒரு பல சரக்கு கட வச்சி குடுப்பாரா?”

“டேய் ஏன்டா கிறுக்குப்பய மாரி கேள்வி கேக்குற? பொண்டாட்டி நாலு லட்சம் சம்பாதிக்கும் போது எந்த புருசனாவது வேலைக்கு போவானா? நான் நல்லா அமெரிக்காவ சுத்தி பாப்பேன்டா”.. 

இவன் தெரிந்து தான் பேசுகிறானா இல்லை தெரியாமல் உளறுகிறானா என புரியவில்லை.. ”டேய் விஸ்வரூபம் படம் பாத்தியா?”

“ஆமா.. சூப்பர் படம்.. நீ கூட கேவலமா இருக்குனு சொல்லி எல்லார்ட்டயும் வாங்கி கட்டுனியே?”

“ஆமா நான் வாங்கி கட்டுனேன்.. நீ அவள கட்டிட்டு வாங்கப்போற..”

“புரியுற மாதிரி சொல்லு மாப்ள..”

“அந்த படத்துல ஹீரோயின் தான் வேல பாப்பா.. கமல், வீட்ல அவளுக்கு சிக்கன் சமைச்சி கொடுப்பாரு.. அவா அங்க தீபக்னு ஒருத்தங்கூட மஜா பண்ணவும் புருசன கழட்டி விடவும் ட்ரை பண்ணுவா.. ஞாபகம் இருக்கா?” - ஒக்கா மக்க, என் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சமைக்கவே தெரியாது, இவனுக்கு 4லட்சம் சம்பாதிக்குற பொண்டாட்டியா? மனதிற்குள் லேசான பொறாமை.. நான் செய்வது தவறு என்றாலும் ‘ஆமா எத்தனையோ பொண்ணுங்க இவனுக்கு செட் ஆகல.. அதோட இதுவும் செட் ஆகாம போனா என்ன?’ என மனதை தேற்றிக்கொண்டேன்..

“டேய் மாப்ள என்னடா சொல்ற?”

“இன்னும் முடிக்கலடா.. முழுசா கேளு.. அதுல கமல் பேரு விஸ்வநாத்,.. ஒம்பேரு விஸ்வநாதன்.. பேரு கூட ஒரே மாதிரி இருக்கு பாரு..  நீ வீட்ல ஒக்காந்து ‘உனை காணாமல் நானிங்கு நானில்லையே’னு உருகி பாடிக்கிட்டு இருப்ப.. அவ எதாவது ஒரு வக்கீல் கிட்ட ஒன்ன டைவர்ஸ் பண்ண பேசிக்கிட்டு இருப்பா.. தேவையா ஒனக்கு ஃபாரின் பொண்ணு? நம்ம ஊர்லயே எவ்வளவு அழகான பண்பான அடக்க ஒடுக்கமான பொண்ணுங்க இருக்காங்க?”

“அப்படினு சொல்றியாடா?” - என் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுதுனு நெனைக்கிறேன்..

“ஆமாடா”

“நீ சொல்றதும் சரி தான்.. இவா கூட பாக்க லக்‌ஷ்மி மேனேன மாரி இல்லடா.. பூஜா குமார் மாரி தான் இருந்தா.. இப்பத்தான் முகம் சரியா ஞாபகம் வருது..” அவன் குரலில் லேசான கவலை தெரிந்தது.

அய்யய்யோ திரும்ப நடிகைய பத்தி ஆரம்பிச்சுட்டான்.. “சரி விடு மாப்ள.. ஒனக்குனு கண்டிப்பா ஒரு பொண்ணு எங்கேயாவது பொறந்திருப்பாடா.. கவலைய விடு”...

அவனிடம் இருந்து பதிலே இல்லை.. நான் ரெண்டு முறை ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு ஃபோனை வைத்துவிட்டேன்... மனசு லேசாக உறுத்தியது.. நான் கம்மென்று இருந்திருந்தால் கூட அமெரிக்காவிற்கு போகும் வாய்ப்பு அவனுக்கு வந்திருக்கலாம்.. சரி இப்ப என்ன குடி முழுகி போயிருச்சி? நம்ம ஃப்ரெண்டு நம்ம கூடயே இருக்கட்டும் என நினைத்து என தினப்படி வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.. எப்படியும் தான் 50வது பொண்ணை பார்க்க போகும் போது என்னை கண்டிப்பாக அழைப்பான் என தெரியும்.. அப்போது எப்படியாவது அவனுக்கு அந்த 50வது பெண்ணை மணமுடிக்க வேண்டும் என சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டேன்.. 

பல நாட்களாக அவனிடம் இருந்து பதிலே வரவில்லை.. சில மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் தினப்படி அலுவல்களில் பிஸியாக இருந்தேன்.. ஒரு நாள் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பும் போது தான் அந்த போஸ்டரை கவனித்தேன்.. ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம ஊர் சாமியார் ஆசிர்வாதம் கொடுத்துக்கிட்டு இருக்காரு.. அந்த சாமியாரை சுற்றி அழகழகான நிறைய இளம் பெண்கள் இருந்தார்கள்.. அந்த சாமியாரை சில மைக்ரோ செகண்டுகள் மட்டுமே பார்த்த என் கண்கள் திடீரென்று விரிந்தன.. 

”டேய் விஸ்வநாதா” என்று கத்தினேன்.. அந்த சாமியார் 49 பெண்களால் கழட்டிவிடப்பட்ட என் உயிர்த்தோழன் விஸ்வநாதன். வாழ்வில் ஒரே ஒரு பெண்ணை கூட கல்யாணம் செய்யவே முக்கிக்கொண்டு இருந்த விஸ்வநாதன் இன்று ஒரு பெரிய சாமியாராக தன் ஆன்மீக ஆராய்ச்சியில் இத்தனை பெண்களுடன் சிறப்பாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பெருமையுடன் பார்த்து நினைத்துக்கொண்டேன், “அன்னைக்கு நாம அந்த அமெரிக்காக்காரிய வேண்டான்னு சொன்னனால தான் இன்னைக்கு இவனுக்கு இப்படி ஒரு வாழ்வு” என்று... என் நண்பன் ஒரு சாமியார் என நினைக்கவே ’ஹ்ம் இவனுக்கு வந்த வாழ்வு!’ என சிலிர்ப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் என் மனைவி, “ஏங்க விஸ்வநாதானந்தா ஒரு சாமியார் வந்திருக்காராம்.. அவர் கிட்ட ஆன்மிக பயிற்சிக்கு போலாமா? நிறைய அற்புதங்கள் எல்லாம் செய்யுறாராம்” என கேட்ட நொடியில் என் சிலிர்ப்பெல்லாம் மொத்தமாக கலைந்து, “அவன பேசமா அந்த 4லட்ச சம்பளக்காரி கூட சேத்து வச்சிருக்கலாமோ” என சீரியஸாக புலம்பிக்கொண்டிருந்தேன்.. என்னை கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் தர்மபத்தினி விஸ்நாதானந்தா ஆன்மிக இல்லத்தில் சேர நெட்டில் அப்ளிகேசன் பாரமை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்...

22 comments

  1. அருமையான கதை..ரொம்ப நல்லா இருக்கு..க்ளைமாக்ஸ் சூபர்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிருத்திகாதரன் :-)

      Delete
  2. அடடா.... இன்னுமொரு சாமியார் உருவாக காரணமாகிட்டாரே கதையின் நாயகன்! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு சாமியார் வந்தால் நமக்கு தான் நல்லா பொழுது போகுமே? சாமியார்கள் வாழ்க..

      Delete
  3. ஹா ஹா ஹா கதையின் முடிவு வரிகளை மிக மிக ரசித்தேன்... நண்பன் சாமியார் ஆனதை எண்ணி சிலிர்த்தேன் என்ற வரி ஹா ஹா ஹா நிச்சயம் இந்த நாட்களில் நமக்கும் அது தான் தோன்றுகிறது....

    பிரண்ட் எங்க நல்லா செட்டில் ஆயிருவானொன்னு மனசு சொல்றதும், ரொம்ப நல்லா ஆனதுக்கு அப்புறம் அவன் நல்லாவே இருந்த்ருகலாம்ன்னு நினைக்கதும் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே... வெளியில் பெரிய நல்லவன் மாதிரி நடித்தாலும் எல்லோர் மனதிலும் பொறாமை இருக்குமே? இந்த மாதிரி சின்ன சின்ன அல்பத்தனங்கள் இல்லையென்றால் அவன் என்ன மனிதன்?

      Delete
  4. க்ளைமாக்ஸ் செம தல

    ReplyDelete
  5. 37 வயதில் 47 பொண்ணுங்களை "பார்"த்தவன் சாமியார் ஆகலைனா எப்படி...? கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. சும்மா பாத்துக்கிட்டே இருந்தனால தான் அவன் சாமியார் ஆகிட்டான்.. அதாவது அவசரப்படுறவனுக்கு கடவுள் ஒரே ஒரு மாம்பழத்த குடுக்குறாரு.. காத்திருக்கிறவனுக்கு ஒரு மாந்தோப்பையே கொடுக்குறாரு..

      Delete
  6. அப்ப ஊர்ல எல்லா சாமியாரும் இப்படித்தான் உருவாகுறானுங்களா..அருமையான பதிவு கலக்கறீங்க ராம்குமார்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. எல்லா ரவுடிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்குற மாதிரி எல்லா சாமியாருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு.. நன்றிங்க :-)

      Delete
  7. //ஒரு பெண், ‘மாப்ளை ரொம்ப வெள்ளையா இருக்காரு’னு சொல்லி மறுத்திருக்கு.. எனக்கு அந்த பெண்ணை பார்த்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல ஆசை.. நான் முதல்வரனால் பீச்சில் அவளுக்கு ஒரு சிலை வைக்கவும் என் டைரியில் குறித்துக்கொண்டேன். என்னை பல முறை கறுப்பு என கிண்டல் செய்தவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்த அந்த பெண் தான் மங்கையர் குல திலகம்.//
    ஹா ஹா ....சரியாகச் சொன்னீர் நண்பரே. காலம் மாறிப்போச்சு. இப்போது எல்லாம் பெண்கள் லேசாக கருப்பாக இருக்கும் ஆடவர்களையே விரும்புகின்றனர்.

    நானும் சாமியார் ஆக வழி இருந்தால் சொல்லுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. //இப்போது எல்லாம் பெண்கள் லேசாக கருப்பாக இருக்கும் ஆடவர்களையே விரும்புகின்றனர்.// அப்ப, கறுப்பா இருக்குறனால எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குனு சொல்றீங்க? தேங்க்ஸ்..
      நீங்க சாமியார் ஆகணும்னா ரொம்ப சிம்பிள் வழி ஒன்னு இருக்கு.. 40 வயசு வரைக்கும் கல்யாணமே பண்ணாதீங்க.. டைரக்ட்டா சாமியார் ஆகிரலாம்

      Delete
    2. ஹா ஹா . எனக்கு தெரிந்த பெண்களின் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தல், நிச்சயம் பிரகாசம் தான்.
      40 வரை எதற்கு. இப்பவே ஆனா சீக்கரம் settle ஆகலாம்.

      Delete
    3. //எனக்கு தெரிந்த பெண்களின் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தல்// பெண்கள் என பன்மையில் சொல்லும் போதே நீங்கள் பாதி சாமியார் தான்.. வாழ்த்துக்கள் சாமி.. என்ன உங்க சீடனா ஏத்துக்கோங்க...

      Delete
  8. செம காமெடி ராம்குமார்.. அதிலும் மாப்பிளை வெள்ளைன்னு நிராகரித்த பெண்ணும் ஆசிரியர் வேலைக்காக B.ed அப்படின்னு அமெண்ட்மண்ட் கொண்டு வரதும் - மானிட்டர் முன்ன உக்காந்து தனியா சிரிப்பதன் பின் விளைவுகள் உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன்
    - பாரதி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க.. ரொம்ப ஃபீலிங்க்ஸ் கதையா எழுதி எனக்கே ஒரு மாதிரி ஆகிருச்சி.. அதான் ஒரு காமெடி கதை ரிலாக்ஸுக்காக.. அடுத்து வெகு விரைவில் பழையபடி ஒரு ஃபீலிங்க்ஸ் கதை.. கர்ச்சீப்போடு ரெடியாக இருங்கள்...

      Delete
  9. சூப்பர் முடிவு அண்ணா

    ReplyDelete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/Bladepedia-In-Valaicharam-03.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  11. good story. very nice. keep it up

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One