"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் காட்ட முடியாமலும் மென்று முழுங்கி நான் நிவேதாவை பார்த்து கத்திக்கொண்டிருந்தேன்..
“நீங்களே என்ன வெறுத்து ஒதுக்கலாமாங்க? நான் என்னங்க பாவம் செஞ்சேன்? இதெல்லாமே தலைவிதிங்க.. என்ன தயவு செஞ்சி ஏத்துக்கோங்க” என்னை பார்த்து இரு கைகளையும் குவித்து அழுது ஏங்கிக்கொண்டிருந்தாள் அவள்..
எப்படி இவளால் மட்டும் இப்படி சுற்றி இருக்கும் மக்களை சட்டை செய்யாமல் அழ முடிகிறது என வியப்பு இருந்தாலும், என் கண்களில் மீண்டும் கோவத்தை கொண்டு வர முயற்சி செய்து சொன்னேன், “என்னது ஒன்ன ஏத்துக்கணுமா? எதுக்கு? இன்னொருக்க வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா?” என்று திக்கித்திணறி சொல்லிமுடிப்பதற்குள் அவள் சடாரெனெ என் சட்டையை கழுத்துக்குக் கீழாக ஒரு ரெண்டு இன்ச்சில் இறுகப்பற்றிக்கொண்டாள்.. அவள் கண்களில் வெறியும் கோவமும் ஆற்றாமையும் அவமானமும் ஒரு சேர இருந்தன. கிட்டத்தட்ட என் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தாள். சட்டையின் முதல் பட்டன் அவள் இழுத்து பிடித்த வேகத்தில் தெறித்து தரையில் விழுந்தது.
“என்ன வார்த்தைங்க சொல்லீட்டீங்க? நீங்களும் ஒரு மனுசனா? ச்சீ உங்கள நெனச்சா அருவெறுப்பா இருக்கு”. அவள் என் சட்டையை பிடித்து இப்படி கேள்வி கேட்பாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் அவளை பார்த்து திரு திரு வென முழித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் எதாவது சொல்ல மாட்டேனா என எதிர்பார்த்து அவள் அழுகையை நீட்டித்துக்கொண்டிருந்தாள். எனக்குத்தான் அவள் சட்டையை பிடித்தவுடன் என்ன பேசுவது என்றே மறந்துவிட்டது. பின்னால் இருந்து சத்தம் கேட்டது.. “என்னடீ நடிக்குற? போடீ வெளிய”..
அதை கேட்டவுடன் நானும் சுதாரித்துவிட்டு “என்னடீ நடிக்குற? போடீ வெளிய..” என நிவேதாவை பிடித்து தள்ளினேன்.. அந்தக்காட்சி முடிந்து ஸ்கிரீனை மூடினார்கள்.. ‘அப்பாடி’ என உணர்ந்தேன். ஸ்கிரீன் மூடியவுடன் எல்லோரும் என்னை கொன்றுவிடுவது போல் பார்த்தார்கள்..
“நாந்தான் சொன்னேன்ல, எனக்கு நடிக்கலாம் வராதுன்னு? நான் ஷார்ட் ஸ்டோரி ரைட்டிங்குக்கு தான் பேரு குடுத்தேன்.. நீங்க என்ன டிராமாலலாம் நடிக்க சொல்றீங்க?”
“ஆமாண்டா ஒத்த ஈவன்ட்ல மட்டும் பார்டிசிபேட் பண்ணுறதுக்கா இவ்ளோ தூரம் வந்திருக்க? மொத்தம் 57 ஈவண்ட்.. ஒரு காலேஜுக்கு முப்பதே பேரு தான்.. எப்படி சமாளிக்குறது? சும்மா ஒரு ரூம்ல ஒக்காந்து பேப்பர்ல கத எழுதுறது ஈசி.. இந்த மாதிரி ஸ்டேஜ்ல நடிக்குறது தான் கஷ்டம் மகனே.. உன் பேட்ச் தான நிவேதா, அவா எவ்வளவு அழகா நடிக்குறா? நீயும் நடிக்க வேண்டியது தான?” ஒரு சீனியர் எனக்கு அட்வைஸ் என்னும் பெயரில் இருக்கும் எங்கள் கல்லூரி பெண்கள் மத்தியில் என்னை வைத்து பஞ்சாயத்து பண்ணி அவன் கெத்தை காட்டிக்கொண்டிருந்தான்.
”அதுக்காக? ப்ராக்டீஸ் பண்ணும் போது அவா என் சட்டைய பிடிக்குற சீனே இல்ல.. திடீர்னு ஏன் பிடிச்சா?” நான் கேட்டுக்கொண்டே நிவேதாவை முறைத்தேன்.. அவள் கண்களாலேயே சாரி கேட்டாள்.. அவள் சாரி கேட்பது கூட ஒரு தேர்ந்த நடிப்பு போல் தான் இருந்தது.. என் சட்டையை பிடித்தாலும் நல்ல நடிகை தான் அவள்.. மேடைக்கு முன்னாடி இருக்கும் அத்தனை பேரையும் மறந்து ஒருவனின் மனைவியாகவே அந்த மேடையில் வாழ்ந்திருந்தாள்..
“டே அதான்டா டிராமா.. நடிக்கும் போதே ‘டக்’னு எதாவது ஸ்பார்க் தோனும்.. அத அப்படியே டயலாக்கா மாத்தி சொல்லணும்.. அதுக்கு ஏத்த மாதிரி அடுத்தவங்களும் டயலாக்க மாத்தி நடிக்கணும்.. ஒன்னப்போயி கூட்டிட்டு வந்தோம் பாரு.. நீயெல்லாம் பேப்பர்ல மார்ஜின் போட்டு கலர் கலரா டெகரேசன் பண்ணி கதை எழுத தான் லாயக்கு” சொல்லிவிட்டு ஹி ஹி ஹினு சிரிச்சான் அந்த சீனியர்.. யாராவது தனக்கு துணையாக சிரிக்கிறார்களா என்றும் பார்த்துக்கொண்டான்.. ஒரு பய சிரிக்கல.. எனக்கு அவன் சிரிச்சப்ப வந்த கோவம், ஒருத்தனும் அவனுக்கு சப்போர்ட்டா சிரிக்கலைன்னதும், கொஞ்சம் சந்தோசமாயிருச்சி..
தைரியத்தோடு, “ஆமாண்ணே.. பேப்பர்ல எழுதுறது ஈசின்னா நீங்களே அதையும் பண்ணிரலாம்ல? எதுக்கு அதுக்கு மட்டும் நானு? நா வேனா கெளம்புறேன்.. நீங்களே கதையும் எழுதிக்கோங்க” என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு வெடுக்கென நடையைக்கட்டினேன்.. எனக்கு தெரியும் அவர்கள் என்னை விட மாட்டார்கள் என்று..
“டேய் கண்ணா ப்ளீஸ்டா போகாத” என்று என்னை கொஞ்ச நேரம் முன்னாடி மட்டமா பேசுன சீனியர்ல இருந்து எல்லாரும் வந்தாங்க.. “ஏன்டா கோவப்படுற? சரி விடு, இனிமேல் டிராமாக்கு வேற யாரையாச்சும் பாத்துக்கிறோம்.. நீ கதைய மட்டும் எழுது.. போதுமா?” சீனியர் சிரித்துக்கொண்டே சொன்னார்.. சிரிப்பில் லேசான வஞ்சமும் பொறாமையும் இருந்தது.. சண்டையும் கோவமும் பொறாமையும் பாராட்டும் ஆறுதலும் ஊக்கமும் இல்லாத கல்லூரி போட்டிகள் உண்டா?
இப்ப நாங்க இருக்குறது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்.. யூத் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும் இளைஞர் திருவிழாவில்.. வருடத்தில் 3நாள்.. அவ்வளவு கொண்டாட்டமாக கனவு உலகம் போல் இருக்கும். கனவு உலகம் என்று சொல்வதை விட, சினிமாவில் காட்டும் கல்லூரி உலகம் போல் இருக்கும் அந்த மூன்று நாட்களும். ஆடல், பாடல், சண்டை, தோற்ற கல்லூரிகள் ஜெயித்த கல்லூரிகளை பார்த்து டவுன் டவுன் சொல்வது, வெறியோடு தங்கள் கல்லூரியை ஆதரிப்பது, போட்டியாளனுக்கு ஏதாவது அவசரமாக தேவை என்றால் ப்ரொஃபசரில் இருந்து சீனியர் வரை எல்லோரும் ஓடி ஓடி அவனுக்கு உதவுவது என்று அது ஒரு தனி அனுபவம்.. நிறைய கல்லூரி காதல்களுக்கு யூத் ஃபெஸ்டிவல் அச்சாணியாக இருக்கும் என்பது கொசுறு தகவல். ஆசிரியர்களுக்குள் இருக்கும் நல்ல மனிதனும், சீனியருக்குள் இருக்கும் நல்ல நண்பனும் அப்போது தான் நம் கண்களுக்கு தெரிவார்கள்.
ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண் விடுதலை, மனித நேயம் என தூர்தர்ஷத்தனமான தலைப்புகளை கொடுப்பார்கள்.. அந்த தலைப்பில் தான் ஒவ்வொரு கல்லூரியும் நாடகம், கட்டுரை, சிறுகதை, ஓவியம், இசை, நடனம் என தங்கள் திறமைகளை காட்ட வேண்டும். இந்த வருடம் எய்ட்ஸ் தான் தலைப்பு.. அப்படி எய்ட்ஸ் பற்றிய ஒரு டிராமாவில் தான் எய்ட்ஸ் வந்த என் மனைவியை நான் சந்தேகப்படுவது போன்ற காட்சி.. அதில் தான் ரிகர்சலில் இல்லாத காட்சியாக என் சட்டையை அவள் பிடித்து நான் டயலாக்கை மறந்து என அத்தனையும் அரங்கேறியது. நான் வழக்கமாக சிறுகதையில் மட்டும் தான் பங்கேற்பேன். வழக்கமாக என்றால் இது என் ரெண்டாவது வருடம்.. மேடை, ஃபோகஸ் லைட், முன்னாடி கும்பலாக இருந்து நாம் என்ன செய்கிறோம் என வெறித்து பார்க்கும் ஆடியன்ஸ் இதெல்லாம் தான் என்னை நாடகத்தை பார்த்து பயப்பட செய்தன. அதை விட அவர்கள் போடும் ரோஸ் பவுடர் மேக்-அப்பும் அந்த பஃப்பில் வரும் நாற்றமும்.. அதுவே ஒரு பேப்பர் பேனா என்றால், நான் என்ன செய்கிறேன் என யாரும் பார்க்க மாட்டார்கள். மேஜையில் படுத்துக்கொண்டே நான் எழுதுவேன் ஒன்னரை மணிநேரம். அது என் மனசாட்சிக்கும் பேனாவுக்கும் நடக்கும் கூடலில் கதைப்பிள்ளைகளை பேப்பரில் பெற்றுப்போடும் வித்தை. போன முறை நான் தான் சிறுகதையில் ஃபர்ஸ்ட்.. இந்த ஒரு வருட இடைவெளியில் கல்லூரிகளுக்குட்பட்ட, பல்கலைகளுக்குட்பட்ட, ரோட்டரி, லயன்ஸ் கிளப் என்று கிட்டத்தட்ட 13 பரிசுகள் வென்றுள்ளேன் சிறுகதையில். அதனால் எனக்கு தான் இந்த முறையும் சிறுகதையில் பரிசு கிடைக்கும் என நான் திமிராகவும், என் கல்லூரி ஆட்கள் நம்பிக்கையாகவும் இருந்தார்கள்.. என் கல்லூரியும் சும்மா கிடையாது, பல வருடங்களாக யூத் ஃபெஸ்டிவல் சேம்பியன் எங்கள் கல்லூரி.. எங்களை வெறித்தனமாக பழக்குவார்கள்.. கதை என்பதால் எனக்கு பிரச்சனை இல்லை.. நடனம், நாடகம் போன்றவர்கள் மிக பாவம்.. ராத்திரி பகலாக ரிகர்சல் பார்ப்பார்கள்.. ஒரு சில கல்லூரிகளுக்கு யூத் ஃபெஸ்டிவல் என்பது ப்ரெஸ்டிஜ் சமாச்சாரம்.. தாங்கள் எப்பாடு பட்டாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறியில் முதல்வரில் இருந்து மாணவன் வரை போராடுவார்கள். அப்படி ஒரு கல்லூரி தான் எங்களிது.
எப்படியோ நாடகத்தில் இருந்து தப்பித்த நிம்மதியில் நான் டான்ஸ் பிரோகிராம் பார்க்க மு.வ. அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கே விருதுநகரை சேர்ந்த பெண்கள் கல்லூரி இப்போது classical நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதில் முன் வரிசையில் ஒருத்தி வெள்ளைப்பட்டும், நீண்ட அடர்த்தியான பின்னப்படாத கூந்தலும், இடது மூக்கில் மின்னும் ஒரு சிறிய மூக்குத்தியும், தலையில் நெட்த்ஹிசுட்டியுமாக மஹாலட்சுமி போல, இல்ல இல்ல, அவ கையில தேசியக்கொடி இருக்கு.. சோ, அவா மகாலட்சுமி இல்ல, பாரத மாதா.. ச்சே, பாரத மாதா வேசம் போட்டிருந்ததால் அவள் அழகை ரசிப்பதை அப்படியே நிறுத்திக்கொண்டு, நடனத்தை மட்டும் சமத்தாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் காதருகே “அந்த பிகர் சூப்பரா இருக்கால்லடா?” என்றது கரகரப்பான ஒரு குரல். அந்த குரலில் இருந்த சிகரெட் நெடி ‘இது நமக்கு தெரிந்த குரல்’ தான் என மூளைக்கு அவசர செய்தி அனுப்பியது.
‘யார்ரா இது, நம்ம பாரத மாதாவ பிகர்னு சொல்றது?’னு திரும்பி பாத்தா தேவராஜன் சார்.. ”சார் அப்படிலாம் இல்ல சார்”.. இவர் தான் எங்கள்கல்லூரி யூத் ஃபெஸ்டிவல் டீமின் ஹெட்.. ஆங்கிலத் துறை விரிவுரையாளர். பார்க்க நம்மவர் கமல் மாதிரி இருப்பார்.. செயலிலும் தான். அவர் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு, என் HODயிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை இது போன்ற போட்டிகளுக்கு அழைத்து வந்து என்னை ஒரு வெற்றியாளனாக பார்ப்பதால்.. என் HODக்கு நான் செமெஸ்டரில் பாதி நாட்கள் வகுப்புக்கு வராமல் ODல் இப்படி ஊர் சுற்றுவதே பிடிக்காது..
“பெறகு எதுக்குடா அவள இப்டி வெறிச்சி பாத்துட்டு இருக்க? அந்த நீள முடி, மூக்குத்தி எல்லாம் டான்ஸ் முடிஞ்ச ஒடனே கழட்டி குடுத்துருவா.. ஒரிஜினல் இல்ல.. சோ, ரொம்ப வெரிச்சி பாக்காத” என்னை பார்த்து கண்ணடித்து சொன்னார்..
“இல்ல சார் சும்மா அவைங்க காலேஜ் டான்ஸ தான் பாத்தேன்..”
“இல்ல நீ அவளையும் நல்லா பாத்துக்கோ.. ஒனக்கு அவள தெரியணும்” சீரியஸான குரலில் பேசினார்..
“எதுக்கு சார்?”
”போன மாசம் நடந்த ரோடரி க்ளப் ஃபெஸ்டிவலுக்கு ஒங்க HOD ஒன்ன விட மாட்டேன்னு சொன்னான்ல,” அவர் என் HODஐ மரியாதை இல்லாமல் பேசுவது எனக்கு சந்தோசமாக இருந்தது, “டேய் நான் மட்டும் தான் அவன அப்டி பேசுவேன், நீயும் அதுக்காக அவன் இவன்னு பேசாத, பின்னிருவேன்” என் சிரிப்பை பார்த்திருப்பார் போல.. “நீ கூட அந்த ஃபெஸ்டிவலுக்கு அவனால வர முடியாம போயிருச்சே?”..
“ஆமா சார்.. என்ன அதுக்கு?”
“அப்ப அவங்க காலேஜ்ல இருந்து இந்த பொண்ணு தான் ஷார்ட் ஸ்டோரில வின் பண்ணுனா.. நம்ம காலேஜ் நீ இல்லாதனால பார்டிசிபேட் பண்ணல. அவா எழுதுன கதைய நான் கூட வாசிச்சி பாத்தேன்.. ப்ரிலியண்ட்.. ஃபர்ஸ்ட் இயர் தான் படிக்குறா, ஆனா என்னமா எழுதுறா? இப்ப கூட சிறுகதையும் எழுதுவான்னு தான் நெனைக்குறேன்.. கொஞ்சம் இப்பையே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிரு. ஒனக்கு டஃப் ஃபைட் தான்.. நம்ம காலேஜ் தான் எப்பயும் போல ஃபர்ஸ்ட் வாங்கணும் ஞாபகத்துல வச்சுக்கோ”
எனக்கு அவர் என் முன் இன்னொருத்தியை அதுவும் என் போட்டியாளரை புகழ்வது பிடிக்கவில்லை. என்னை விட ரெண்டு வயது சின்னப்பெண்ணை வைத்து என்னை பயமுறுத்துவதும் பிடிக்கவில்லை.. அவரிடம் கேட்டேன், “என்ன சார், பரத நாட்டியம் தான ஆடிக்கிட்டு இருக்கா? அவா எப்படி ஷார்ட் ஸ்டோரி எழுத வருவா?”
“எல்லாரும் ஒன்னைய மாதிரியே ஒரு ஈவன்ட்ல மட்டுமா பார்டிசிபேட் பண்ண வருவாய்ங்க? நீ மட்டும் இவா கிட்ட தோத்துட்ட அடுத்த வருசம் ஒன்ன வெறும் கதைக்கு மட்டும் இல்லாம, டிராமா டான்ஸ்னு எல்லாத்துலயும் சேத்து விட்ருவேன், பாத்துக்கோ.. அந்த பொண்ணு இன்னும் என்னென்ன ஈவன்ட்லலாம் வந்து பின்னப்போகுதோ!!”
‘என்னடா ஆளாளுக்கு பில்ட்-அப் குடுக்குறாய்ங்க, என எண்ணிக்கொண்டு நான் நடையைக்கட்டினேன்.. எனக்கு அவர் கொடுத்த பில்ட்-அப்பை விட, அடுத்த வருடம் ஒரு வேளை என்னை டான்ஸ் ஆட வைத்து விடுவார்களோ என்கிற பயம் தான் இருந்தது.. நாளை தான் சிறுகதை போட்டி.. தலைப்பு எப்படியும் எய்ட்ஸை வைத்து தான் இருக்கும் என்பதால், நான் இப்போதே அதற்கான முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் முடிவை எப்படி அமைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. இது வரை நான் இப்படி யோசித்ததில்லை. பேப்பரை கையில் வாங்கி பேனாவை திறந்துவுடன் தோன்றுவதை தான் எழுதுவேன்.. ஆனால் இப்போது நானே இப்படி முன்னக்குடி யோசிப்பது எனக்கே வித்தியாசமாக இருந்தது.. ‘ஒரு வேளை நாம் பயந்துவிட்டோமோ’ என்கிற எண்ணம் வந்தது. உடனே கதையை பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டேன்..
“வழக்கம் போல பேப்பர கைல வாங்கிட்டு அங்கனயே யோசிப்போம்.. அங்கனயே எழுதுவோம்.. அங்கனயே ஜெயிப்போம்.. அஞ்சாக்னா சும்மாவா? ஹா ஹா ஹா” சினிமா ஹீரோ செய்வது போல் கையை ஆட்டி டயலாக் பேச டரை பண்ணினேன்.. எல்லாம் காலையில் என் சட்டை பட்டனை பிய்த்த நாடகத்தின் எஃபக்ட்.. ‘அட நமக்கு கூட கொஞ்சம் நடிக்க வருதே என நினைத்துக்கொண்டே மு.வ.ஹால் படியில் இறங்கி மதியம் சாப்பாடு போடும் இடத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.. நம்ம கதையில ஹீரோவை நடிகனா காட்டலாமா? சினிமா நடிகனா, நாடக நடிகனா? சே சே, இப்ப எதுக்கு நான் கதைய பத்தி யோசிக்கிறேன்? ஒழுங்கா கேண்டினுக்கு மட்டும் போகணும் என் நினைத்து நடந்தேன்.
எல்லா ஆண்களும் பெண்களை கிண்டல் அடித்துக்கொண்டும், கை காட்டிக்கொண்டும் சுதந்திரமாக சந்தோசமாக சென்று கொண்டிருந்தார்கள்.. பெண்களும் அதை சிரித்துக்கொண்டே ரசித்துக்கொண்டிருந்தார்கள். சில பெண்களும் ஆண்களை சரி சமமாய் ஓட்டினார்கள். பேண்ட் சட்டை மட்டும் இல்லாமல் வேட்டி, ஜிப்பா, ஜீன்ஸ், கைலி, என ஆண்களும், விதமான வண்ணங்களில் சேலைகள், தினுசு தினுசான சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், என பெண்களும் தங்கள் ஆசைப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள், ப்ராக்டிகல், இன்டர்னல், செமினார் என அனைத்தையும் மறந்து. ஆனால் யாரும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இந்த மாதிரி விழா நேரங்களில் மட்டும் இல்லாமல், மற்ற நேரங்களிலும் கல்லூரிகள் இது போலவே இருந்துவிட்டால் வீணான பிரச்சனைகள், இழுத்துக்கொண்டு ஓடுவதெல்லாம் நடக்காது என நினைத்துக்கொண்டிருந்தேன். இதையும் கதையில் சேர்க்கலாமா என்னும் எண்ணம் தேவையில்லாமல் வந்தது. கொஞ்ச நேரமாகவே எனக்கு எப்போதும் சிறுகதை ஞாபகமாகவே இருக்கிறது. நான் அவளை நினைத்து பயப்படுகிறேனோ? என்னோடு நேரடியாக ஒரு முறை கூட மோதாதவளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? தெரியவில்லை. ஒரு வேளை தேவராஜன் சாரே அவளை பாராட்டியதாலா? இருக்கலாம்..
“எக்ஸ்க்யூஸ் மீ..” ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன். “ஐயம் கயல்... கயல்விழி..” கை நீட்டினாள்.. ஒரு பெண்ணே தானாக வந்து கை கொடுப்பதால், லேசான அதிர்ச்சியில் என் கையை மெதுவாக கொடுத்தேன்..
“நீங்க தான கண்ணன்?”
“ஆமா.. நீங்க?”
“அதான் சொன்னேனே, கயல்னு.. த்ரி வீ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குறேன்..”
“ஓ அப்படியா? சரி, என்ன எப்படி தெரியும்?” இந்த கேள்வி நான் அவளை கேட்கும் போது தான் என் மண்டைக்கு உரைத்தது, மேடையில் பரத நாட்டியம் ஆடிய என் எதிரி தான் இவள் என்று..
“இல்ல, நான் ஷார்ட் ஸ்டோரில பார்டிசிபேட் பண்றேன் எங்க காலேஜுக்காக.. எங்க மேம்ட்ட ஐடியா கேட்டேன் கதைக்கு.. உங்கள ரெஃபர் பண்ணாங்க” என்றாள்..
அவள் பேசுவதில் எதுவும் நக்கல் இருப்பதாக எனக்கு படவில்லை.. சீரியஸாக தான் கேட்டாள்.. “நீங்க தான் அல்ரெடி பரத நாட்டியம் எல்லாம் ஆடுனீங்களே? பெறகு எதுக்கு தேவயில்லாம கதயெல்லாம்?”
“சும்மா ஒரு ஆச தான்.. அட்லீஸ்ட் செகண்ட் ப்ரைசுக்காவது ட்ரை பண்ணலாம்ல?” அவள் இப்போதும் நக்கல் அடிப்பதாக எனக்கு தெரியவில்லை.
“கதை எழுதுறதெல்லாம் எனக்கு எப்படினு சொல்ல தெரில.. அது அப்படியே தன்னால வரணும்.. நம்மையும் மீறி ஏதோ ஒன்னு நமக்குள்ள புகுந்து நம்மள எழுத வைக்கும். நல்லா பேசுற எல்லாராலயும் நல்லா எழுதிற முடியாது” என அவளுக்கு கதை எழுதுவதை ஏதோ செயற்கைக்கோள் செய்வது போன்ற கஷ்டமான ஒன்றாக விளக்க எண்ணினேன்..
“ஓ இவ்ளோ விசயம் இருக்கா? நல்ல வேள, நீங்க ரோடரி க்ளப் ஃபெஸ்டிவல்ல பார்டிசிபேட் பண்ணல.. இல்லேனா நான் செகண்ட் தான் வாங்கிருப்பேன்”.. அவள் கூட நான் தான் ஜெயிப்பேன் என நம்புகிறாள் என நினைக்கும் போது தான் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் அவளையே பார்த்தேன்.. லேசாக சிரித்தேன்..
“என்ன சிரிக்குறீங்க?”
“இல்ல நீங்க பரதம் ஆடும் போது பாத்தேன், நீளமான முடி, மூக்குத்தி எல்லாம் போட்டிருந்தீங்க.. எங்க சார் அதெல்லாம் மேக்-அப்.. டான்ஸ் ஆடி முடிஞ்சதும் கழட்டிருவாங்கனு சொன்னாரு.. ஆனா நீங்க இன்னும் கழட்டாம அதையே போட்டுக்கிட்டு இருக்கீங்களே அதான் சிரிச்சேன்”..
“ஹலோ இது என் ஒரிஜினல் முடி தாங்க.. மூக்குத்தி எங்கப்பா காசு போட்டு வாங்கிக்கொடுத்த சொந்த மூக்குத்தி” பொய்க்கோபம் காட்டினாள்..
எனக்கு குட்டை கூந்தல் இருக்கும் பெண்களை மிக பிடிக்கும்.. நீளக்கூந்தல் பெண்கள் என்றால் மிக மிக பிடிக்கும்.. என் அம்மாவுக்கும் நீளக்கூந்தல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.. போதாக்குறைக்கு இவள் மூக்குத்தி வேறு போட்டிருந்தாள்.. கேட்கவா வேண்டும்? அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீல்ஸ் போடவில்லை, வலது கையில் சிம்பிளான வாட்ச், இடது கையில் இரண்டு சிறிய தங்க வளையல்கள், கழுத்தில் ஒரு சிறிய தங்க சங்கிலி, சங்கிலியின் டாலரில் என்ன இருந்தது என பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது, ட்ரெஸுக்கு மேட்ச்சான கலரில் கர்சீப்பும் கம்மலும்.. பெண்களிடம் தான் அழகு படுத்தும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் போல.. நான் குறுகுறுவென பார்ப்பதை கவனித்து விட்டாள் என நினைக்கிறேன்.. “சரி நான் வரேன்.. நாளைக்கு கதை எழுதும் போது மீட் பண்ணலாம்.. பை” என்று கூறி என் பதிலுக்கு காத்திராமல் வேகமாக சென்றுவிட்டாள்.. ஆண்கள் கொஞ்சம் உத்து பார்த்தாலே அங்கிருந்து விலகி செல்லும் பெண்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹ்ம் கல்லூரி காலத்தில் எந்த பெண்ணைத்தான் பிடிக்காமல் இருக்கும்?
மறுநாள் பல்கலையின் ஒரு வகுப்பறையில் காலை 10மணிக்கு சிறுகதைப்போட்டி துவங்கியது. என்னைப்பார்த்து சிநேகமாக சிரித்தாள். அந்த சிரிப்பில் வாழ்த்தும், ‘இவன் நம்மை ஜெயித்துவிடுவானா?’ என்கிற பயமும் கூட இருந்தன. நானும் அவளை பார்த்து சிரித்தேன்.. பேப்பரை கொடுத்தார்கள்.. தலைப்பை சொன்னார்கள்.. நான் சர சர வென எழுத ஆரம்பித்தேன்.. ஆரம்பிக்கும் முன் அவளை பார்த்தேன்.. பேனா நுனியை வாயில் வைத்துக்கொண்டு வாசல் பக்கம் வெறித்துக்கொண்டிருந்தாள்.. ‘இதெல்லாம் என்னத்த ஜெயிக்க போகுது? பேசாம பரத நாட்டியம், கோலப்போட்டி, சமையல் போட்டில மட்டும் இனிமேல் கலந்துக்கட்டும்’ என நினைத்துக்கொண்டு என் எழுத்தை தொடந்தேன்.
ஒன்னரை மணி நேர அவகாசம் உண்டு கதைக்கு.. அவள் ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள். நான் வெளியில் செல்லும் அவளை பார்த்தேன்.. வாசலை கடந்ததும் திரும்பி என்னை பார்த்து சிரித்து தன் பெருவிரலை உயர்த்திக்காட்டிச்சென்றாள்.. புது உத்வேகத்துடன் நான் இன்னும் வேகமாக எழுதினேன்.. ஒரு மணி நேரம் முப்பத்திரெண்டு நிமிடத்தில் என் கதையின் கடைசி வரையை முடித்துக்கொடுத்தேன். கை விரலகளுக்கு சொடுக்கு போட்டுக்கொண்டே வெளியில் வந்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள்.
“என்ன இங்கேயே நிக்குறீங்க?”
“இல்ல காலையில எங்க மேம் இங்க கொண்டு வந்து விட்டாங்க.. இப்ப அடுத்த ஈவண்டுக்கு போய்ட்டாங்கனு நெனைக்குறேன்.. எனக்கு எப்படி போறதுனு தெரில.. சரி வாங்க நான் உங்கள் மு.வ.ஹால்ல விட்டுறேன்.. அங்க தான் எல்லா காலேஜும் இருப்பாங்க”..
அவளோடு பேசிக்கொண்டு நடந்ததில் அவள் சொந்த ஊரே விருதுநகர் தான் என்றும், அவங்க அப்பா சொந்தமாக கமிஷன் வியாபாரம் பார்ப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.. அவளுக்கு நானோ டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஆசையாம். பிசிக்ஸ் பற்றி நிறைய பேசினாள். நானும் பிசிகஸ் தான் என்பதை அவளிடம் சொல்லவே இல்லை. ஏன்னா, எனக்கு பிசிக்ஸில் பிசிக்ஸ் என்னும் வார்த்தையை தவிர எதுவும் தெரியாது.. அவளுக்கென்று செல்ஃபோனோ, ஈமெயில் முகவரியோ கூட இல்லை. பேசிக்கொண்டே மு.வ.ஹாலுக்கு வந்துவிட்டோம்.. அவள் தன் மேமை பார்த்ததும் என்னை அறிமுகப்படுத்தினாள்..
“மேம் இவங்க தான் அஞ்சாக காலேஜ் கண்ணன்.. லாஸ்ட் டூ இயர்ஸா இவங்க தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்.. இன்னைக்கு என்னால அர மந்நேரத்துக்கு மேல கூட எழுத முடில... ஆனால் இவங்க ஒன்னரை மந்நேரம் எழுதுறாங்க. கண்டிப்பா இவங்களுக்கு தான் ப்ரைஸ் கிடைக்கும்” என்றாள் வெள்ளந்தியாக பொறாமையே இல்லாமல் என்னை பாராட்டிக்கொண்டு.. என்னை அவள் ஓவராக புகழ்வதை கண்ட அந்த மேம், ‘கொஞ்சம் கெளம்புறியா?’ என்பது போல் என்னை பார்த்தார்.. வேண்டா வெறுப்பாக விடைபெற்று வந்தேன்..
இன்று மாலையோடு எல்லாம் முடிந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.. அடுத்து இங்கு மாப்ளையாக மாம்ஸாக, நண்பனாக, தோழியாக காதலியாக இருந்த ஒவ்வொருவரும் பிரிந்து சென்றுவிட வேண்டியது தான்.. அடுத்த ஆண்டோ அல்லது இது போல் வேறு எங்காவதோ நடக்கும் போட்டிகளில் வேண்டுமானால் இனி பார்க்க முடியும். நாளை முதல் இந்த அனுபவங்கள் எல்லாம் ஒரு கனவு போல் மாறிவிடும். பெண்களிடம் பேசாமல், தோழர்களோடு அரட்டை அடிக்காமல், மரத்தடியில் படுத்துக்கிடக்காமல், நேரம் காலம் அறியாமல் இருந்தது போல் இல்லாமல், இனி வழக்கம் போல் டைம் டேபிள் போட்ட கல்லூரி வாழ்க்கைக்கு மீண்டும் போக வேண்டும். இந்த சந்தோசம் இன்னும் அரைநாளில் முடியப்போவதை நினைக்கும் போதே யாரைவாது கொண்டு வந்து அப்படியே காலத்தை இந்த நொடியோடு நிறுத்திவிடலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நான் மட்டும் அல்ல, பலரும் இப்படித்தான் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
மாலை கிளம்ப வேண்டுமே என சோகத்தில் இருந்த என்னை தேவராஜன் சார் அழைத்தாக கூறினார்கள் கல்லூரி நண்பர்கள்.. அவரிடம் சென்றேன். அவர் என்னை பல்கலையின் ஊழியர் குடியிருப்பினுள் கூட்டி சென்றார்.
அங்கே ஒரு வீட்டிற்குள் சென்றோம்.. எங்கள் கல்லூரி முதல்வர், யூத் ஃபெஸ்டிவலின் பொறுப்பு ஆசிரியர், போட்டிகளின் நடுவர்கள் சிலர் என அமர்ந்திருந்தார்கள். எங்கள் பிரின்சிபல் என்னை பார்த்துக்கேட்டார்..
“கதை எப்படி எழுதிருக்கே?” தலையை குனிந்து கொண்டு கண்களை மட்டும் மேல் உயர்த்தி பார்த்து என்னை குத்தலாக கேட்பது போல் இருந்தது.
“நல்லா எழுதிருக்கேன் சார்” லேசான தயக்கம் இருந்தாலும் தைரியமாக சொல்ல நினைத்தேன்..
என் கையில் சில பேப்பர்களை திணித்து ”இத படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லு”
நான் மெதுவாக அவற்றை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. மொத்தமே 6பக்கங்கள் தான்.. முதல் இரண்டு வரிகளில் சாதாரணமாக ஆரம்பித்த கதை அந்த ஆறாவது பக்கத்தில் மனதில் மிகப்பெரிய சுமையை ஏற்றிவிட்டு முடிந்தது. கண்களில் லேசாக கண்ணீர் வந்தாலும், கல்லூரி முதல்வருக்கு பயந்து அவை கண்களுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டன..
“கதை எப்படியிருக்கு?”
“சூப்பராருக்கு சார்”
“ஆமா இன்னொருத்தி எழுதுன கதைய நல்லாருக்குனு சொல்லி பாராட்டு.. வெளங்கிருவ..” என்னை ஏன் முதல்வர் வைகிறார் என தெரியவில்லை. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. “என்னடா மொறைக்குற?”
“ஒன்னுமில்ல சார்”
“அந்த த்ரி வீ காலேஜ் காரி எழுதுனத விட நல்லதா ஒரு கத ஒன்னால இப்ப ஒடனே எழுதித்தர முடியுமா?” என்னை பார்த்து நேராக கேட்டார் என் முதல்வர் எந்த தயக்கமும் இல்லாமல். த்ரீ வீ காலேஜ்.. எனக்கு அப்போது தான் புரிந்தது, இது கயல் எழுதிய கதை என்றும், அவள் இவ்வளவு சிறப்பாக எழுதுபவள் என்றும். என்னமாக எழுதியிருக்கிறாள்? நிச்சயம் என்னால் இதை விட சிறப்பாக எழுத முடியாது. நல்ல வேளை எனக்கு ரெண்டு வருடம் பிந்தி பிறந்திருக்கிறாள்.. இல்லையென்றால் என்னால் சிறுகதையில் ஜெயித்திருக்கவே முடியாது.. அவள் மேல் பொறாமையாக இருந்தாலும், இவ்வளவு நல்ல கதை எழுதியிருப்பதால் எனக்கு அவள் மேல் மதிப்பும் வந்திருந்தது.
“என்னடா எழுத முடியுமா முடியாதா? சாந்தரம் வரைக்கும் டைம் தரோம்.. யோசிச்சி நிதானமா எழுது” எனக்கு கட்டளையிட்டார் முதல்வர். போட்டி நடுவர்களை பார்த்து, “நல்ல வேள சார் எனக்கு மொதையே சொல்லிட்டீங்க.. இல்லேனா நாங்க தோத்திருப்போம் எங்க மானம் போயிருக்கும். அந்தக்கத அவ்ளோ நல்லாவா இருக்கு?”
“சார் நீங்க படிக்கலையா? பிரமாதமா இருக்கு?”
“ச்செய் கதை படிக்குறது, கட்டுரை எழுதுறது, பேச்சுப்போட்டில பேசுறதெல்லாம் நமக்கு பிடிக்காது சார்.. சரி அத விடுங்க, நான் இவன வச்சி இத விட நல்லா எழுதித்தாரேன்.. நமக்கு முடிச்சி குடுத்துருங்க” என்று என்னை பார்த்தார்.. “என்ன நீ இன்னும் எழுத ஆரம்பிக்கலையா?”
“சார்”
“என்னடா?”
“இல்ல, இத விட நல்லா எழுத முடியாது சார்.. கத ரொம்ப ரொம்ப நல்லாருக்கு சார்” நான் அவர் என்ன சொல்வாரோ என்கிற பயத்தில் பார்த்தேன்.. கல்லூரியில் இருந்து தூக்கி விடுவார்களோ? ’சே சே இதுக்காண்டிலாம் தூக்க மாட்டாங்க’ என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.
முதல்வர் தேவராஜ் சாரை பார்த்து, “யோவ் என்னய்யா டீம் வச்சிருக்க? சொந்தமாவும் எழுத மாட்டீங்க.. ஒன்ன குடுத்து அத விட நல்லா எழுத சொன்னா அதையும் பண்ண மாட்டீங்க? பெறகு எதுக்கு ஒங்களுக்கு இத்தன நாள் OD ப்ராக்டீஸ் எல்லாம்?”
தேவராஜ் சார் என்னை பார்த்து கண்களாயே ‘எழுது’ என கெஞ்சினார்.. நானும் பதிலுக்கு கண்களாலேயே ‘முடியாது’ என்றேன்..
பிரின்சிபல் என்னை மீண்டும் பார்த்தார். “ஒனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் வேணும்னா எழுதிக்குடு”..
“இல்ல சார், இதுக்கு மேல நல்லா எழுத முடியாது சார்.. இதுக்கு தான் சார் பர்ஸ்ட் ப்ரைஸ் குடுக்கணும்.. நான் எழுதுனதுக்கு என்ன கெடைக்குதோ அது போதும் சார்” சொல்லிவிட்டு தேவராஜ் சார் கையில் கயல்விழியின் பேப்பரை கொடுத்துவிட்டு அந்த அறையில் இருந்து வந்துவிட்டேன்.. கொஞ்ச நேரம் வெளியில் தேவராஜ் சார் வருகிறாரா என காத்திருந்தேன்.,. உள்ளே அவருக்கு செம டோஸ் விழுந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்பதால் கிளம்பிவிட்டேன்.. முதலில் கயலை பார்த்து கை கொடுத்து “நீ தான் வின்னர்” என சொல்ல வேண்டும்.. வேக வேகமாக மு.வ. ஹாலுக்கு நடந்தேன்.
மணி இப்போது மாலை 3.. இன்னும் ஒரு மணி நேரத்தில் பரிசளிப்பு விழா ஆரம்பமாகிவிடும். நான் கயலை தேடினேன். காணவில்லை. ஹாலுக்குள் நுழைந்தேன்.. அங்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் இடம் ஒதுக்கி சீட்டிங் அரேஞ்மெண்ட் செய்திருந்தார்கள். எங்கள் கல்லூரிக்கு பக்கவாட்டில் அவளின் த்ரீ வி கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவள் அங்கு தான் அமர்ந்திருந்தாள். நான் எங்கள் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து அவள் என்னை பார்க்கிறாளா என கவனித்துக்கொண்டிருந்தேன்.. அவள் கவனிக்கவில்லை.. தோழிகளோடு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கண்களில் படுமாறு இங்கும் அங்கும் நடந்து ஒரு வழியாக அவளை என்னை பார்க்க வைத்துவிட்டேன்.. ‘ஒரு நிமிடம் இங்க வா, உன்ட்ட பேசணும்’ என சைகை செய்தேன்.. அவள் தன் பிரின்சிபல் வந்திருப்பதாகவும் பேச முடியாது என்றும் பதில் சைகை செய்துவிட்டு போலி சோகம் காட்டினாள்.. நான் பதிலுக்கு சைகையிலேயே, ‘பரவாயில்ல நீ தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்’ என்றேன்.. அவள், ‘சும்மா டூப்பு விடாத’ என சைக்கை காட்டி வாயை கோணினாள்.. ‘அட சத்தியமா நீ தான் பர்ஸ்ட்’ என கையில் சத்தியம் செய்யும் முன், தேவராஜா சார் என்னை வந்து இழுத்துக்கொண்டு எங்கள் கல்லூரிக்கு போட்டிருக்கும் இடத்தில் அமர வைத்தார்..
“Function ஆரம்பிக்க போகுது, நடு ஹால்ல நின்னும் கடல போட்டுக்கிட்டு இருக்க?” என்று செல்லமாக கோவித்தார்.. என் மேல கோவமாக இருப்பார் என நினைத்தேன்.. ஆனால் ஆள் ஜாலியாகத்தான் இருந்தார்.
“சார் சாரி சார்.. நெஜமாவே அந்த பொண்ணு சூப்பரா எழுதிருந்தது சார். அதுக்கு தான் சார் ப்ரைஸ் கெடைக்கணும்”
“அதுக்காக பிரின்சிபல்ட்ட அபப்டித்தான் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவியா? நாளைக்கு காலேஜ்ல என்ன ஆட்டம் ஆடப்போறானோ?”
“நான் வந்ததுக்கு பெறகு என்ன ஆச்சி சார்? ஒரே சத்தமா கேட்டுச்சி.. ஒங்கள ரொம்ப வஞ்சாய்ங்களா?”
“எலேய் மரியாதையா பேசு ஒன்ன விட மூத்தவங்கள”
“சாரி சார்”..
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் பரிசளிப்பு விழா தொடங்கும் என அறிவிப்பு வந்தது. ஒவ்வொரு போட்டியாக பரிசை அறிவித்துக்கொண்டு வந்தார்கள். எங்கள் கல்லூரிக்கும் த்ரீ வி கல்லூரிக்கும் தான் பயங்கர போட்டி. பரதத்தில் அவர்கள் கல்லூரி தான் ஜெயித்தது. அவள் தான் பரிசை வாங்கினாள். அவர்கள் கல்லூரியும் எங்கள் கல்லூரியும் ஒவ்வொரு முறை பரிசு ஜெயிக்கும் போதும் மாற்றி மாற்றி போட்டி போட்டு கத்தினார்கள்.. வகுப்பு நேரங்களிலும் வளாகத்திலும் சுத்தமாக பிடிக்காத நம் கல்லூரிக்காக தான் இது போன்ற போட்டிகளில் உயிரை கொடுத்து ஜெயித்தும் கொடுக்கிறோம், கல்லூரிக்கு ஆதரவாகவும் கத்துகிறோம் என்பதே ஒரு நகைமுரணாக இருந்தது. ‘அதான் இது ஒன்னுல வாங்கிட்டாளே, சிறுகதை போட்டிலயாச்சும் நமக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்’ என நப்பாசையாக நினைத்துக்கொண்டேன். தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி என பரிசை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்ததாக சிறுகதைப்போட்டி.. நானும் கயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “நீ தான் பர்ஸ்ட், நீ தான் பர்ஸ்ட்” என சிரித்துக்கொண்டே சைகை காட்டினோம்.
“மூன்றாம் பரிசு திருமங்கலம் PKN கல்லூரி”... அவைங்க காலேஜ்ல இருந்து ஓவர் சவுண்டு.. ‘அடப்பாவிகளா மூனாவதுக்கேவா?’ என நினைத்துக்கொண்டேன்.
“இரண்டாம் பரிசு விருதுநகர் த்ரீ வி காலேஜ்” என்றதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.. நான் தேவராஜ் சாரை கேள்விப்பார்வை பார்த்தேன்.. கயல் பரிசு வாங்க போவதற்கும் என் பெயரை வாசிப்பதற்கும் இடையில் இருக்கும் நேரத்தில் தேவராஜ் சார் அதை சொன்னார்.
“நீ முடியாதுனு சொல்லிட்டு போயிட்டா நம்ம காலேஜ் தோத்துரும்னு நெனச்சியா? நீ எழுதி குடுத்திருந்தா 5000ரூபாயோட முடிஞ்சிருக்கும்.. இப்ப ஒவ்வொரு ஜட்ஜுக்கும் 10000 ரூபாய் செலவு.. அவ்வளவு சீக்கிரத்துல நம்ம காலேஜ தோக்க விட்ருவோமா?” என சிரித்தார்.. அவர் சிரிப்பு எனக்கு மிக அசிங்கமாய் கேவலமாய் இருந்தது.. “முதல் பரிசு அஞ்சாக்” என்று மேடையில் சொல்லி முடிக்கும் முன்னர் இங்கு எங்கள் கல்லூரி நண்பர்கள் “ஊஊஊஊஊஊஊஊ ஏஏஏஏஏஏ” என கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு தெரியாதே அது உண்மையான திறமைக்கு சமாதி கட்டிவிட்டு வந்த பரிசு என்று.. நான் மேடைக்கு மெல்ல நடந்து போனேன்.. எங்க பிரின்சிபல் யார் கிட்டயோ சொன்னாரு, “எங்க கண்ணன் இருக்குற வரைக்கும் சிறுகதை போட்டில எங்கள அடிக்க ஆளே கிடையாது” என..
மேடையில் பரிசை வாங்கிவிட்டு எங்கள் கல்லூரிக்கான இடத்தை நோக்கி வரும் போது, கயல் என்னை வழி மறித்து எனக்கு கை கொடுத்தாள். “நாந்தான் சொன்னேன்ல நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு? கங்கிராட்ஸ்”..
என் கையில் இருந்த பரிசை பார்க்கும் போது முந்தைய நாள் நாடகத்தில் நான் பேசிய வசனம் தேவையில்லாமல் ஞாபகம் வந்து போனது ”வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா?”...
அந்த கோப்பையை நான் தொலைத்தால் கூட தேவலை தான்.. ஆனால் அடுத்த ஆண்டு இதே யூத் ஃபெஸ்டிவலில் கயலை பார்த்து “இந்தா இது ஒனக்கு தான்”னு சொல்லி கொடுக்கணும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு யூத் ஃபெஸ்டிவல் போகும் போது கயல் அந்த டீமில் இல்லை.. கேட்ட போது, ஒரு பெண் சொன்னாள், “அவளுக்கு கதை சரியா எழுத வரலனு இந்த தடவ அவள எங்க காலேஜ் டீம்ல செலெக்ட் பண்ணலைங்க” என்று..
யூத் ஃபெஸ்டிவல் - நிஜமாகவே கல்லூரிகளின் ப்ரெஸ்டீஜ் விசயம் தான்..
hi அண்ணா..
ReplyDeleteமீண்டும் ஒரு நல்ல கதை..
இது கொஞ்சம் வித்யாசமாக யூத் ஃபெஸ்டிவல்ஐ மைய்ய மாக கொண்டு
எழுதியதும் அதிலும் அந்த க்லைமாக்ஸ் எதிர்பார்க்கவே இல்ல..
ரொம்ப நல்லா இருந்தது..
மிக்க நன்றி Mahesh.. நிஜத்திலும் யூத் ஃபெஸ்டிவலை ஒவ்வொரு காலேஜும் ப்ரெஸ்டீஜ் பிரச்சனையாக பார்ப்பதால் தான் அதில் ஊழல் பெருகி திறமைகள் மறைக்கப்பட்டு உண்மையான திறமைசாலிகள் வெளி வராமலேயே போகிறார்கள்..
Deleteஅடக்கடவுளே, இவ்வளவு ஆங்கிலம் கலந்திருக்கிறதே சம்பாஷணைகளில்! இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் நடிக்காமல் இருக்கும் நிமிடங்கள்தான் எவையென்று கேட்கத் தோன்றுகிறது, பதிலில்லாவிட்டாலும்.
ReplyDeleteவிபரங்களுடன் உணர்ச்சிகளை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.
மிகச்சரி Jeyamanthra சார்.. இன்றைய தமிழக சூழலில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது கடினம்.. ஆங்கிலமும் தமிழாகி விட்டது.. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசினால் ஒரு மாதிரி தான் பார்ப்பார்கள்.
Deleteஅஞ்சாக்கில் இப்படி எல்லாம் பணம் கொடுத்து பரிசுகள் வாங்கும் பழக்கம் எல்லாம் இல்லையே..... எப்படி இந்த கதையின் கரு, சும்மா ஒரு பேச்சுக்கா, அதுவும் பெண் பிள்ளைகளிடம் பேசவே விடமாட்டாகுலே பிறகு எப்படி கயல் எல்லாம் ஒன்னும் விளங்கல போங்க... எல்லாமே கற்பனை போலும்.......
ReplyDeleteஆனா கதை நல்லா வந்திருக்கிறது வாழ்த்துகள்.....
பனிமலர்
நீங்கள் அஞ்சாக்கில் எந்த வருட பேட்ச்சில் படித்தீர்கள்? யூத் ஃபெஸ்டிவலில் கலந்திருக்கிறீர்களா? நான் மூன்று வருடங்களும் யூத் ஃபெஸ்டிவலில் இருந்தேன்.. யூத் ஃபெஸ்டிவல் ஒரு தனி உலகம்.. அஞ்சாக் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் பனிமலர்.. உங்கள் கருத்துக்கு நன்றி..
DeleteNice story as always.
ReplyDeleteIs it a real story ?
நம்ம காலேஜ்ல இப்டியெல்லாம் நடந்ததா?
நம்ம பிரின்சிபால் ரொம்ப நேர்மாயனவராச்சே?? :D
ஹா ஹா.. நிஜத்தில் ஏதோ ஒரு காலேஜ் ஏதோ ஒரு திறமையானவருக்கு செய்த துரோகம் இது.. இதில் சொல்லியிருக்கும் விசயம் உண்மை..
Deleteதிரு ராம்குமார்
ReplyDeleteஉண்மையும் கற்பனை மெருகூட்டலும் கலந்து அருமையாய் எழுதி உள்ளீர்கள் இடையில் வேறு கவனம் கொள்ள இயலாவண்ணம் வாசகர்களை கவர்ந்து விடுகிறீர்கள்
உங்களுக்கு ஒரு அற்புதமான எதிர் காலம் எழுத்துலகில் இருக்கிறது
தொடர்ந்து எழுக
பத்திரிக்கை CUM facebook உலக நண்பர்கள் மூலம் பத்திரிக்கைகளை தொ டர்புகொள்ளலாமே
மிக்க நன்றி சார்.. பத்திரிகைகளை தொடர்பு கொள்ள கூச்சம் முக்கிய காரணம்.. இன்னொரு காரணம் நான் எழுதுவது வீட்டிற்கு தெரியாது.. அவர்களுக்கு தெரிந்தால் நிறைய விசயங்களை ஓபனாக எழுத முடியாது.. என்னை அந்த கதையோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள்.. குடும்பம் சம்பந்தமான கதைகள் என்றால் குடும்பத்தையே ஒப்பிட்டு பார்ப்பார்கள்.. அதனால் இந்த சின்ன வட்டம், என் நண்பர்களின், உங்களை போன்ற சான்றோர்களின் பாராட்டே போதும் :-)
Deletegreat Writingsssss mams Win The Race Soon!!1
ReplyDeletewhich race mams?
Deletegreat writings maams - win the race soon by kannan thiruonam
ReplyDeleteமாம்ஸ், நீங்க கமெண்ட்ல மாம்ஸ்னு சொல்லும் போதே அது நீங்கன்னு தெரிஞ்சு போச்சு.. இதுல உங்க பேர வேற போட்டு காட்டணுமா? என்ன மாம்ஸ்னு கூப்பிடுற ஒரே ஆள் நீங்க மட்டுந்தான்..
Deleteஎப்பா எவ்ளோ பெரிய கத... கதைய ஓபன் பண்ணினதும் எத்தனை வார்த்தைகள் எழுதி இருக்கீங்கன்னு தான் பார்த்தேன்... அடேயப்பா 3100 வார்த்தைகள் ( கண்ணு போட்டுட்டேன், சுத்தி போடுங்க )
ReplyDeleteஅதப் பார்த்ததும் எப்டி இவ்ளோ பெரிய கதைய எப்டி படிகிறத்துன்னு யோசிச்சேன், இருந்தாலும் எழுதி இருக்கது நீங்க.. எப்டி படிக்காம இருக்க முடியும்...
கதைய ஆரம்பிச்ச விதம், அதில இருந்து கதைக்குள்ள வந்து கதைய சொன்ன விதம், இப்டி எல்லா இடத்துலையும் உங்க கதை ஸ்கோர் பண்ணுது பாஸ்..
நம்மள மத்தவங்களுக்கு தெரியனும், நாம எழுதுறோம்னு தெரியனும், நம்ம எழுத்து பிடிக்கணும்... இல்ல சிறுகதை பிடிக்கணும்....உண்மைய சொன்னா நாம எழுதுறத படிக்கிறவங்க கம்மி.. இருந்தாலும் யாரையும் நம்பாம, நமக்கு நாமே ஒரு களம் அமைச்சிட்டு எழுதிட்டு இருக்கோம்.. இதுல சோர்வடஞ்சி எழுதினத நிப்பாட்டினது பல பேரு... ஆனா நீங்க கொஞ்சம் கூட அசராம எத பத்தியும் வருந்தாம 3000 வார்த்தைக்கு மேல எழுதினீங்க பாத்தீங்களா அது தான் உங்க முதல் வெற்றி
இவ்ளோ பெரிய கதைய படிச்சிட்டு இருக்கும் போது, என்னடா அதுக்குள்ள முடிஞ்சிட்டுன்னு யோசிக்க வைச்சீங்க அது தான் பெரிய வெற்றி...
ரொம்ப இயல்பான வார்த்தைகள், சிறுகதைய பத்தி சிறுகதைல சொன்ன விதம் எல்லாமே சூப்பர்
//அடேயப்பா 3100 வார்த்தைகள் ( கண்ணு போட்டுட்டேன், சுத்தி போடுங்க )// ஹி ஹி ஹி இத படிக்குற உங்களுக்கு தான் சுத்திப்போடணும்..
Delete//உண்மைய சொன்னா நாம எழுதுறத படிக்கிறவங்க கம்மி.. இருந்தாலும் யாரையும் நம்பாம, நமக்கு நாமே ஒரு களம் அமைச்சிட்டு எழுதிட்டு இருக்கோம்.. இதுல சோர்வடஞ்சி எழுதினத நிப்பாட்டினது பல பேரு... // உண்மை தான் நண்பா.. நான் இந்த விசயத்துல ‘தல’ அஜித்த தான் ஃபாலோ பண்ணுறேன்.. அவர் ஆரம்பத்துல இருந்து அப்படியே தான் இருக்கார் தன் கேரக்டரை மாற்றிக்கொள்ளாமல்.. ஆனால் ஆரம்பத்தில் திமிராக பேசுகிறார் என்று சொன்ன நாம் தான் இன்று அதே அஜித்தை ‘தைரியமான ஆள்’ ‘ஓபனாக பேசுகிறார்’ என்கிறோம்.. அது போல், நான் என் கதையின் ஸ்டைலை மாற்றப்போவதில்லை.. ஒரு நாள் நிச்சயம் இந்த மாதிரி பெரிய கதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.. (சைடு கேப்புல என்ன ‘தல’யோட கம்பேர் பண்ண வைக்குற மாதிரி பாயிண்ட் எடுத்து குடுத்ததுக்கு தேங்க்ஸ் நண்பா :P)
உங்கள் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக மிக நன்றி நண்பா :-)
கண்டிப்பா அவரு கூட கம்பேர் பண்ணினதுல தப்பு இல்ல நண்பா... எழுத்து மேல காதல் இருந்தா மட்டும் தான் இந்த அளவுக்கு ஆர்வம் இருக்கும்... நிச்சயமா நீங்க ஓடி அடைய வேண்டிய தூரம் அதிகம் நிற்காமல் ஓடுங்கள்.. சோர்வடைந்து நடக்க ஆரம்பித்து விடாதீர்கள்... :-)
Deleteஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டாய்ங்க..
Deleteமிக அருமை..நிஜமாக ஒரு யூத் பெஸ்டிவல் போய் கலந்து கொண்ட உணர்வை கதையில் கொடுத்து இருக்றீர்கள். சூப்பர்.
ReplyDeleteமிக்க நன்றி கிருத்திகாதரன் :-)
Deleteநம்முடன் அதிகமாக வம்பிழுக்கும் சீனியர்களும் நமக்கு நல்ல நண்பர்கள் ஆவதுண்டு...
ReplyDelete13 பரிசுகளுக்கு வாழ்த்துக்கள்...
ஒரு திறமைசாலியை (கயலை) இழந்த அந்த கோப்பை... தொலைக்க வேண்டிய கோப்பை மட்டும் அல்ல... மறக்க வேண்டிய (முடியாத) கோப்பை... நெகிழ்ச்சியான கதைக்கு (கதை தானே...?) பாராட்டுக்கள்...
ரொம்ப நன்றி அண்ணே.. இது கதை தான்.. ஆனால் கூறியிருக்கும் செய்தி நிஜம்..
Deleteஅது என்ன அப்படி ஒரு முடிவு நானும் அஞ்சாக்கில் தான் படித்து இருப்பேன் என்று. அஞ்சாக்கை பற்றி நன்றாக தெரியும் சும்மா நம்பிக்கை என்று எல்லாம் இல்லை.........
ReplyDeleteஅஞ்சாக்கின் பிம்பம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.. அந்த பிம்பம் அப்படியே இருக்க வாழ்த்துக்கள் :-)
Deleteயூத் பெஸ்டிவல் - கல்லூரியில் நேரடியாக கலந்துகொண்டு பார்த்து ரசித்த உணர்வைத் தந்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி அம்மா :-)
Deleteithu nijamana storya? AJ collegele ipdi ellam ippo nadakutha?
ReplyDeleteIt was a nice read!
ReplyDeleteI studied in SFR and I used to participate in all competitions and I always used to get prize in singing and oratorical.I know how seriously we practice for these events.I know the pain which we go through.I never heard about bribing in competions though.
ReplyDeleteDear Ms.Lucky, you are correct. You never heard about bribing. But i experienced it and I've seen it many years..
Delete