நடிகர்கள் ஏன் போராட வேண்டும்???

Friday, March 15, 2013

உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்து இன்று (14/03/2013) அங்கு வந்து அமர்ந்திருந்த ஃபோட்டாவை ஃபேஸ்புக்கில் பலரும் போட்டு “இந்த அக்கறை மற்றவர்களுக்கு ஏன் வரவில்லை”, “நீ தான்டா தமிழன்” என்று என்னென்னமோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட மனிதனாக ஒரு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சிம்புவுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் நடிகன் என்கிற ஒரே காரணத்தால் நாம் ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களை என்ன பாடு படுத்துகிறோம் என எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒருவரை போராட வேண்டும் என நிர்பந்திக்க நாம் யார்? அப்படியே போராட வேண்டும் என்றாலும் இன்றைய சினிமா நடிகர்கள் அந்த போராட்டத்தை எந்த அளவில் சுயநலம் இல்லாமல் செய்வார்கள்? சரி கொஞ்சம் தெளிவாக ஆரம்பம் முதல் அலசலாம், வாருங்கள்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது நம் தமிழ் நடிகர் நடிகைகள் (சிவாஜி, சாவித்திரி போன்றவர்கள்) தாங்களாக முன் வந்து நாடகம் போட்டு அந்த பணத்தை போர் நிவாரண நிதிக்கு கொடுத்தார்கள். இதை யாரும் குறையோ குற்றமோ சொல்ல முடியாது. அதே போல் இதை யாரும் பெரிதாக சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ள வில்லை. அன்று எல்லாமே பொதுநலமாக பார்க்கப்பட்டது. ஒற்றுமையாக நாடகம் போட்டார்கள். இன்று அப்படி ஒரு சூழலை நம்மால் நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு மக்கள் பிரச்சனைக்கு எல்லா நடிகர்களும் விளம்பரம் தேடாமல் ஒற்றுமையாக பேசுவார்களா? இந்த இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தான் எத்தனை நடிகர்கள் எத்தனை விதமாய் பேசினார்கள்?


நடிகர் விஜய் முதலில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாய் ஒரு மீட்டிங் போடுவதாக செய்தி வந்தது ஒரு சில ஆண்டுகளுக்கு முன். சில அரசியல் நிர்பந்தங்களால் அது ‘தமிழக மீனவர்களுக்கு ஆதரவான’ கூட்டமாக மாறியது. அந்த மேடையில் இவர் ஏதாவது உருப்படியாக அல்லது அரசின் கவனம் ஈர்க்கும் விதமாக பேசுவார் என்று பார்த்தால், மேடையில் தோன்றி, “இலங்கை கடற்படைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்” என வீராவேசமாய் ”நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்னும் கருத்தாழமிக்க பாடலை பாடினார். மொத்த நாகையும் அதிர்ந்தது. விசிலடிச்சான் குஞ்சுகள் புலங்காகிதம் அடைந்தன தங்கள் இளைய தளபதியின் துணிச்சலை நினைத்து. இது போன்ற புகழ் பெற்ற நடிகர்கள் இந்த மாதிரி தான் மக்கள் பிரச்சனைகளுக்கு போராட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அவர்களால் கை தட்டலை மீறி எதையும் யோசிக்க முடியாது.

அடுத்தது என் தலைவர் ரஜினி. நாட்டில் ஒவ்வொரு முறை ஏதாவது பொது பிரச்சனை, நீர் பிரச்சனை என்று வரும் போது எனக்கு முதல் கவலை தலைவரை நினைத்து தான். எவனாவது இவரைப் பற்றி தப்பாய் பேசி விடுவானோ என்பதை விட இவர் எங்காவது வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் வருத்தமாக இருக்கும். கர்நாடகத்திற்கு எதிராக மொத்த நடிகர் சங்கமும் நெய்வேலியில் மின்சாரத்தை நிறுத்துவோம் என புறப்பட்டு சென்றது. அங்கே பாரதிராஜா, நெஞ்சு புடைக்க கண்களில் அனல் கக்கி ரஜினிக்கு சவால் விட்டார் “எங்கள் நாட்டில் பிழைத்து விட்டு எங்களுக்காக குரல் கொடுக்க மாட்டாயா?” என்று கோவம் கொப்பளிக்க ரஜினியை கேட்டார்.  மேடையில் கத்திக்கொண்டே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை அநாயசமாக குடித்து விட்டு மீண்டும் ரஜினிக்கு சவால் விட்டார், “எங்கள் திண்ணையில் படுக்க இடம் கேட்டு வந்த நீ இன்று எங்கள் வீட்டையே அபகரிக்க நினைப்பாயா?” என்று கர்ஜித்தார். இந்த நேரத்தில் இந்த கிராமத்து இயக்குனர் இயக்கிய ‘கொடி பறக்குது’ என்னும் படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. நெய்வேலியில் இவர் பேசிய போது பயங்கரமான கைதட்டல்கள்..
.
தலைவர் ஒன்றுமே பதில் கூற வில்லை. ரெண்டொரு நாட்களில் தன் பங்குக்கு தன் கெத்தை காட்ட, சென்னையில் ஒரு உண்ணாவிரத போராட்டம் இருந்தார். மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல்வரிடம் ஒரு லெட்டரை கொடுத்து கடமையை முடித்துக்கொண்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், காவிரி பிர்ச்சனை என்பது ரஜினியின் அந்த உண்ணாவிரதத்தினால், அவரின் இமேஜை கொஞ்சம் பெருக்கியது.  அவ்வளவு தான். எங்கு பார்த்தாலும் ரஜினியின் உண்ணாவிரதம் தான் செய்தி. எல்லோரும் காவிரியை மறந்துவிட்டார்கள்.. போராட்டத்தின் தாக்க, அதன் கருத்து எல்லோருக்கும் மறந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ரஜினி ரஜினி தான்.. அதே போல், அதற்கு முன் தேசிய நதி நீர் இணைப்புக்கு தான் கொடுப்பதாய் சொன்ன ஒரு கோடி என்ன ஆனது என்பது தலைவருக்கு மட்டுமே வெளிச்சம். அவர் அந்த ஒரு கோடி பற்றி சொன்னதும் அவரது இமேஜ் தான் கூடியதே தவிர இன்று வரை அந்த ஒரு கொடி என்ன ஆனது என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொரு முறை காவிரி பிரச்சனை வரும் போதும் நாம் முதலில் அரசின் பதிலை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ ரஜினியை வம்புக்கு இழுக்கிறோம்.
.
ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். ரஜினி என்பவர் பிறப்பால் ஒரு மராட்டியர். கர்நாடகத்தில் பிறந்து ஒரு கண்டக்ட்ராக இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகராக பிழைக்கவந்தவர். அவர் ஒன்னும் கர்நாடக முதல்வர் இல்லை. எதற்கெடுத்தாலும் காவிரிக்கு அவரை குரல் கொடுக்க சொல்ல. அவர் மேல் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு ‘குசேலன்’ படத்தை வெளியிடும் பொருட்டு கர்நாடக அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் என்பது. 100கோடி ரூபாய் வியாபாரத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு இந்த விசயத்தில் ரஜினியை குற்றம் சொல்லலாம்..
  
அடுத்ததாக மிக சமீபத்தில் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடிய சேவை வரி பிரச்சனை. தங்களுக்கும், தங்கள் வருமானத்திற்கும் ஒரு பாதிப்பு என்று வரும் போது அவர்கள் என்ன ஒற்றுமையாக போராடினார்கள் என ஊர் உலகமே பார்த்தது. மற்ற போராட்டங்களில் தனித்தனியாக போராடி தங்கள் பலத்தை யாருக்கோ காட்ட நினைக்கும் அவர்கள் இதில் தனியாக போராடவில்லை. ஏன்? ஏனென்றால் அவர்கள் தனியாக கெத்து காட்டுவதற்காக போராடியிருந்தால் ஒவ்வொரு ரசிகனுமே கேள்வி கேட்டிருப்பான். “அதான் சம்பாத்திக்குறாய்ங்கல்ல, வரி கட்டுறதுக்கு என்னவாம்?” என்று மூகத்தில் அடிப்பது போல். மொத்தமாக போராட்டம் இருந்த போதே பலரும் நடிகர்களைப் பார்த்து கேட்ட கேள்வி தான் அது. ஏதாவது ஒரு பெரிய நடிகர் சேவை வரியை எதிர்த்து தனியாக உண்ணாவிரதமோ மாநாடோ போட்டிருந்தால் அங்கு ஒரு ஈ காக்கா நின்று விசிலடித்திருக்காது. நடிகர்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் அதை நாம் கிசுகிசுவாகவோ, அல்லது ஒரு பொழுதுபோக்காகவோ பேசி சென்று விடுகிறோம்.. ஆனால் நமக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது, அது காவிரியோ, பெரியாறோ அல்லது ஈழமோ, அப்போது மட்டும் அந்த பொழுதுபோக்கு ஆசாமிகள் நமக்கு ஆதரவாக வர வேண்டும் என நினைக்கிறோம்.
சரி, ஒரு நடிகன் நமக்காக ஏன் போராட வேண்டும் என கேட்டால் பலரும் சொல்லும் ஒரே பதில், “அதான் நாம குடுக்குற காசுல கோடி கோடியா சம்பாதிக்கிறான்ல?” என்பதாகவே வருகிறது பெரும்பாலும். நாம் அதிகபட்சமாக கொடுக்கும் 100ரூபாய்க்காக அவன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? நடிகனின் தொழில் நடிப்பு. நடிப்பும் சினிமாவும் நமக்கான பொழுதுபோக்கு விசயங்களில் ஒன்று. அவர்களை நாம் பொழுதுபோக்கு என்னும் வளையத்தை தாண்டி வர சொல்லுவது நமக்கு தான் ஆபத்து. ஒரு நடிகனிடம் நாம் ஏன் நடிப்பை தவிர பிற விசயங்களை எதிர்பார்க்கிறோம்? நமக்கு சேவை செய்யவே தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கும் அரசியல்வாதியை கேள்வி கேட்க துப்பில்லாத நாம், நமக்கு சேவை செய்வதற்காக மட்டுமே தேர்வு எழுதி அரசு வேலையில் இருக்கும் அதிகாரிகளை கேள்வி கேட்க வக்கில்லாத நாம், ஒரு நடிகனை எப்படி கேள்வி கேட்கலாம்?
.
நாம் கொடுக்கும் காசில் சம்பாதித்தவன் என்கிற முறையில் கேளி கேட்பதானால், நாம் காலையில் எழுந்து பல் தேய்ப்பதில் ஆரம்பித்து இரவு தூங்கும் போது கொசு விரட்ட போடும் குட் நைட் வரை ஒவ்வொரு கம்பெனியும் நாம் கொடுக்கும் காசில் சம்பாதித்து வளர்ந்தவை தான். ”நான் தினமும் பல் தேய்ப்பதால் இன்று பெரியதாக வளர்ந்திருக்கும் கோல்கேட் கம்பெனி காவிரி பிரச்சனைக்கு போராட வேண்டும்” என்றோ, “நான் சின்ன வயசுல இருந்தே பேட்டா செருப்பு தான் போடுவேன். இலங்கை பிரச்சனைக்கு பேட்டா கம்பெனி முதலாளி குரல் கொடுக்க வேண்டும்” என்போமோ? “நான் ரிலையன்ஸ் ஃபோன் தான் யூஸ் பண்ணுறேன். அதனால அம்பானி இனிமேல் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு நான் சார்ந்த தமிழ் நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும்”னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவோமா? இல்லையே? அவ்வளவு ஏன்? நாம் நாள் முழுக்க உழைப்பதால் தான் நம் முதலாளி கோடீஸ்வரராக இருக்கிறார். அவரிடம் போய் யாராவது ஒருவர் கேட்க வேண்டியது தானே, “முதலாளி நான் உழைக்குறனால தான் நீங்க இன்னைக்கு இவ்வளவு பெரிய முதலாளியா இருக்கிங்க. அதனால எனக்கு ஆதரவா நீங்க போராடணும்”னு அவர் கிட்ட சொன்னா எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே ஒரு மாதிரி இருக்கிறதே, பின் ஏன் நடிகர்களை மட்டும் இப்படி மிக எளிதாக மரியாதை இல்லாமல் பேசிவிடுகிறோம்? அதிலும் அசிங்கமாக அவர்கள் சார்ந்த ஜாதி இனத்தை எல்லாம் அசிங்கமாக குறிப்பிடுகிறோம்.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர், நான் மேலே சொன்ன காரணங்களை எல்லாம் ஒத்துக்கொண்டார். ஆனால் கடைசியில் அவர் கேட்ட கேள்வி மிக சரியானதாக நடிகர்களை பொளேர் என்று அறைவதாக இருந்தது. “அதெல்லாம் சரி, அவன் சம்பாதிக்கிறான், அவன் ஒரு நடிகன் மட்டும் தான். அவன போராட சொல்லுற உரிமை நமக்கு இல்ல. ஆனா பின்ன எதுக்கு சினிமால, ‘நான் அப்படி, நான் அத செஞ்சிருவேன், இத கிழிச்சிருவேன்’னு பன்ச் டயலாக் பேசணும்?” என கேட்டார் அந்த நண்பர். ஆனால் கொஞ்சம் யோசித்தால் இதற்கான ஆரம்பமும் நாம் தான் என்பது தெளிவாகும். ஒரு நடிகன் திரையில் பேசுவதை படம் முடிந்ததோடு மறக்காமல், அந்த நடிகனின் பிம்பத்தை அப்படியே நம்புகிறோம். படம் முடிந்த பின்பும் அவனுடைய சூப்பர் பவர்களோடு வந்து பன்ச் டயலாக் பேசி தீவிரவாதிகளை அழித்து, லஞ்சத்தை ஒழித்து நாட்டையே திருத்தும் பராக்கிரமங்களை நாம் நிஜ வாழ்விலும் நடக்கும் என அப்பாவித்தனமாக நம்புகிறோம். சினிமாவை நாம் சினிமாவாக பார்க்காததன் விளைவு இது. நம் அறிவிலித்தனத்தை நடிகன் பயன்படுத்திக்கொள்கிறான். நாம் அது தெரியாமல் அவனை ’அரசியலுக்கு வா தலைவா’, ’போராட்டத்தில் குதி’ என கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் ‘சக்திமான் வந்து என்னை காப்பாற்றுவார்’ என நம்பி உயிரை விட்ட குழந்தைகளுக்கும், பன்ச் டயலாக் பேசும் நடிகர் அரசியலுக்கு வந்து நம்மை காப்பாற்றுவார் என நினைக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லை.

ஒரு நடிகனை போராட சொல்லி இவ்வளவு பேசுகிறோமே? நாம் என்றாவது ஒரு நாள் இறங்கி போராடுகிறோமா? அட்லீஸ்ட் போராட்டம் செய்ய நாம் ஒரு சிறு முயற்சியாவது செய்திருக்கிறோமா? குடும்பம், மேனேஜர், வீட்டு லோன், சம்பளம், சீட்டு பணம் என்று எல்லாமே ஞாபகம் வந்து நம் போராட்டத்தை அலுவலக டீ பிரேக் அளவிலோ அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அளவிலோ  நிறுத்திவிடுகிறது. ஆனால் கோடிக்கணக்கான பணம் புழங்கும் வியாபாரத்தில் இருக்கும் நடிகனை மட்டும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து போராட சொல்லுவோம். இது என்ன ஞாயம்? அவனுக்கு மட்டும் குடும்பம் இல்லையா? அவன் போராட்டத்திற்கு வந்தால் அன்று அந்த தயாரிப்பாளருக்கு எத்தனை கோடி இழப்பாகும்? அந்த போராட்டத்தினால் அவனது வியாபாரமே அழிந்து போகலாம். அவனது கரியரே அஸ்தமிக்கலாம்.

சரி இவர்கள் கூறுவது போல் ஒரு நடிகர் வந்து குரல் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா? நடிகர் ஒரு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதெல்லாம் உண்மையா? நாம் நடிகர்களை கூட்டம் கூட்டமாய் போய் வேடிக்கை வேண்டுமானால் பார்ப்போம்.. ஆனால் அவர் சொல்வதையெல்லாம் கேட்போம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு போய் விட்ட கதை. ஒரு நடிகர் என்பவர் கூட்டத்தை இழுக்கும் கவர்ச்சி சக்தி. உங்கள் ஆஸ்தான நடிகர் உண்ணாவிரத மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் அவர்களின் உண்ணாவிரத பந்தலுக்கு வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், என்னவெல்லாம் நடக்கும்? மொத்த மீடியாவும் அங்கு குவியும். திடீரென்று அந்த போராட்டத்தை பற்றியும் அந்த நடிகர் பற்றியும் எல்லோரும் பேசுவார்கள். எல்லோர் கவனமும் அந்த போராட்டத்தின் மீது இருந்து கொஞ்ச கொஞ்சமாக நடிகரின் பக்கம் திரும்பம். நடிகருக்கு ஒரு மாஸ் இமேஜ் கிடைக்கும். அந்த நடிகர் கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் இருந்து கிளம்பியதும் மொத்த மீடியாவும் அங்கிருந்து கிளம்பிவிடும். அந்த போராட்ட களத்தில் அதன் பின் அப்பாவி உணர்வாளர்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.  அந்த போராட்டத்தின் வீரியம் குறைந்து மறுநாளில் இருந்து அந்த நடிகரின் பேட்டி, புரட்சிகர கருத்து என பத்திரிகைகளும் டிவிகளும் நிரம்பி வழியும். அவர் மறுநாளில் இருந்து ஷூட்டிங்க் பிஸியில் மூழ்கிவிடுவார். நாம் அந்த போராட்டத்தையே மறந்து நம் வேலையில் இறங்கிவிடுவோம். ஆனால் உண்மைய எண்ணத்தோடு போராடியவர்கள்? அவர்களும் அவர்களின் எண்ணமும் தான் பாவம்!!


இதே அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எந்த நடிகரும் வரவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், இது நிச்சயமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மாணவராக, ஒவ்வொரு கல்லூரியாக, பின் ஒவ்வொரு தனி மனிதனுக்குமாக கண்டிப்பாக பரவும். நிதானமாக அதே நேரத்தின் மிக உறுதியுடன் பரவும்.  எல்லோருக்கும் போராட எண்ணம் வரும். அல்லது அதை பற்றி நல்ல விதமாக பேசும் எண்ணம் வரும். இதோ இன்று சிம்பு வருவதற்கு முன்பு வரை எப்படி மாணவர்களின் உண்ணாவிரதம் தமிழகம் முழுதும் இத்தனை மாணவர்களை இணைத்தது? ஒரு நடிகர் வந்தால் தடபுடலாக அந்த விசயம் கவனம் பெறுமே தவிர அதற்கு பின் அதன் தாக்கம் நிச்சயமாக குறைந்துவிடும். அதே போல் ஒரு நடிகன் வந்தால் ஒரு போராட்டமோ, ஒரு பொது விசயமோ வெற்றி பெறும் என்பதும் கற்பனையே. 2011 தேர்தலில் வடிவேலுவின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் கருணாநிதி ஜெயலலிதாவிற்கு கூட வந்திருக்குமா என தெரியவில்லை. அவ்வளவு கூட்டம். ஆனால் அந்த கூட்டத்தினால் ஏதாவது பிரயோஜனம் இருந்ததா? எல்லாம் நடிகனை பார்க்க வந்த கூட்டமே அன்றி வேறில்லை. மக்கள் நடிகனை வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள். அவன் போராடினால் தாங்களும் போராட மாட்டார்கள். சர்க்கஸ் புலி, கோயில் யானை, தெருவிற்குள் வரும் திடீர் குரங்கு போல் தான் நடிகர்கள் ஆதரவு தரும் போராட்டமும். கூட்டம் கூடும், கை தட்டல் இருக்கும், பொழுது போகும்... ஆனால் அதனால் பிரயோஜனம் எதுவும் இருக்காது.
.
இந்த உலகில் எல்லோரும் சுயநலவாதிகள் தான். நாம இறங்கி போராடாதவரை யாரையும் கை காட்டும் உரிமை நமக்கு இல்லை. அதே போல் ஒருவனை போராட சொல்லும் உரிமையோ தகுதியோ நமக்கு இல்லை. தனி மனித சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் பலரும் கூட நடிகர்களை பொது விசயங்களுக்கு குரல் கொடுக்க அழைக்கிறார்கள். குரல் கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். நடிகர்கள் தனி மனிதர்கள் இல்லையா? தாங்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லையா? கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருக்கு வைத்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் தங்களை இது போன்ற விழாக்களுக்கு வரச்சொல்லி மிரட்டுவதாக சொன்னார். கிட்டத்தட்ட அதே போன்ற மிரட்டல்களை தான் இன்று நாம் போராட்டங்களின் வாயிலாக நடிகர்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறோம்.. இதுவும் ஒரு வன்முறை தான்.
.
முடிவாக நான் சொல்ல வருவது, நடிகர்களை மட்டும் இல்லை, யாரையும் ’போராட வா, எனக்காக குரல் கொடு’ என கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை.  ஒரு நடிகன் எதாவது போராட்டத்திற்கோ பொது விசயத்திற்கோ குரல் கொடுத்தால் அந்த நேரத்தில் அந்த விசயத்தின் வீரியமும் முக்கியத்துவமும் முற்றிலும் குறைந்து மொத்த கவனமும் நடிகரின் பக்கம் செல்லும். இதெல்லாம் தேவையா? சாதாரண குடிமகனான நாம் தான் நமக்காக போராட வேண்டும். நமக்கு வேலை செய்ய இருக்கும் அரசு அதிகாரியையும் அரசியல்வாதியையும் தான் கேள்வி கேட்க வேண்டும். நமக்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக இருக்கும் நடிகர்களை நம்மை இயக்கும் ஆட்களாக மாற்ற நினைத்தால், அது அவர்களுக்கும் நரி நமக்கும் சரி மிகப்பெரிய ஆபத்து தான். நடிகர்கள் எதாவது பொது விசயத்திற்கோ போராட்டத்திற்கோ குரல் கொடுத்தால் நாம் ஒதுங்கி செல்ல வேண்டும். அவன் வேலை நடிப்பது மட்டும் தான்.. அதை மட்டும் அவன் தெளிவாக பார்த்தால் போதும் என்கிற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமக்கு ஒரு அநீதி என்றால் களத்தில் இறங்கி போராட மக்களாகிய நாமும் தயாராக இருக்க வேண்டும். உடுக்கை இழந்தவனுக்கு அவனின் சொந்த கை தான் உதவும். ஆனால் இப்போது நாம் போகும் நிலையை பார்த்தால் உடுக்கை இழந்தாலும் நடிகன் தான் அவன் கையை கொண்டு நம் அம்மணத்தை மறைக்க வர வேண்டும் என்று கூட குரல் கொடுப்பார்கள் சில சமூக ஆர்வலர்கள்.. புரிந்து நடப்போம்..

31 comments

  1. எதிர்பார்ப்பு இல்லாத லட்சியத்தை கொண்ட ஒருவனின் போராட்டமே உண்மையாக இருக்கும்
    எனக்கு தெரிந்து எந்த நடிகரும் இதுவரை அப்படி இருந்ததாக தெரியவில்லை
    வியாபாரிகளிடம் உண்மையை எதிர்பார்க்காதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை அண்ணே.. எல்லா போராட்டத்திலும் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.. அதிலும் நடிகர்களை என்றுமே நம்பக்கூடாது... போராட்டத்திற்கு அவர்கள் வந்தால் விளம்பரம் கிடைக்கும்,. ஆனால் அந்த விளம்பரம் முழு போராட்டத்தையும் அமுக்கிவிடும் வல்லமை கொண்டது

      Delete
  2. எதிர்ப்பார்ப்பு இல்லாத தலைவரோ, தொண்டரோ, நடிகரோ, சாமான்ய மக்களோ கூட இல்லை என சொல்லலாம். வியாபாரிகளிடம் உண்மையை எதிர்பார்க்காதீர்கள் உண்மை. நேர்மையை?

    அருமையான பதிவு ராம்குமார். சுடச் சுட ஒரு அருமையான பதிவு. ஏற்கனவே சிறிய பதிப்பகவோ கம்மேண்டாகவோ இந்த கருத்தைப் படித்ததாக ஒரு ஞாபகம். நடிகன் ஒரு நடிகன் மட்டுமே பார்த்தால் நல்லது. அவர்களை கடவுளுக்கு நிகராக போற்றுவதும், பாலபிஷேகம் செய்யவதும் அனாவசியம். போராட்டம் செய்ய துணிந்த மாணவர்கள் இந்த கட் அவுட் கலாசாரம், பாலபிஷேகம் போன்றவற்றை ஒழித்து அது ஏழைகளுக்கு கிடைக்க கூட போராடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் நிச்சயமான உண்மை.. அவர்கள் வியாபாரிகள். பணம் மட்டும் அல்ல, அவர்கள் பெயர் புகழுக்கும் அடிமை. அப்படிப்பட்டவர்களை ஏன் நாம் போராட அழைத்து நம் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும்? //ஏற்கனவே சிறிய பதிப்பகவோ கம்மேண்டாகவோ இந்த கருத்தைப் படித்ததாக ஒரு ஞாபகம். // ஆம் நான் இந்த கருத்தை அடிக்கடி பல முறை சொல்லியிருக்கிறேன் ஃபேஸ்புக்கில்.. ரஜினி பற்றிய எனது கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன்.. இப்போது தான் முழு நீள பதிவாக போடுகிறேன்.. உங்கள் கருத்துக்கு நன்றி :)

      Delete
    2. அதற்க்கு முதல் நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லும் பழக்கத்தை விட்டொழித்த பின் அறிவுரை செய்ய தொடங்குங்கள்

      Delete
    3. நான் இங்கு யாருக்கும் அறிவுரை செய்யவில்லை. என் கருத்தை தான் கூறியிருக்கிறேன்.. ரஜினியை எனக்கு பிடிக்கும்.. சினிமாவில் என் ஆஸ்தான நாயகன் அவர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.. ஆனால் நான் அவரிடம் சினிமாவை தாண்டி எதையும் எதிர்பார்த்தது இல்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் விசிலடிச்சான் குஞ்சு இல்லை நான். ரஜினியை நான் தலைவர் என்று விளிப்பதால் என்ன பிரச்சனை உங்களுக்கு?

      Delete
  3. அந்தக்காலத்தில் நடிகர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை ஏன் இந்தக்காலத்தில் இல்லை? அனைவரும் கோஷ்டி வாரியாகப் பிரிந்து இருப்பதால்தான்... தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது ஒன்றாகப் போராடுபவர்கள் பொதுப் பிரச்சனைக்கு ஏன் வரமாட்டேன்கிறார்கள்? அவசியம் பகிரப்பட வேண்டிய பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. அவர்களுக்கு பணம் மட்டும் முக்கியம் இல்லை. அதோடு புகழும் பெயரும் முக்கியம். அதனால் தான் அவர்கள் தங்களுக்கு சம்பந்தமில்லாத எதையாவது செய்ய வருகிறார்கள். நாமும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களை வர வேண்டும் என நிர்பந்திக்கிறோம்.. அவரவர் வேலையை எல்லோரும் ஒழுங்காக பார்த்தாலே போதும் என்பது தான் என் கருத்து.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்கூல் பையன்.. இன்னைக்கு நைட்டு பரதேசி பாக்க போறீங்களா?

      Delete
  4. தெளிவா எழுதி இருக்கீங்க, சினிமா, அது பொழுது போக்கு, நடிப்பவர்களை அந்தப் படம் முடிந்ததோடு அப்படியே விட்டுவிட வேண்டும். அது "நடிப்பு"!

    நீங்கள் சொன்னது எல்லாம் சரி தான், ஆனால், ரஜினியும் நடிகர் தானே அவரை ஏன் தலைவர் தலைவா என்றெல்லாம் சொல்கிறீர்கள்?

    அப்படிச் சொல்லாதீர்கள் என்று சொல்ல, எனக்கு உரிமை இல்லை தான். ஆனாலும், தோன்றியது, கேட்டுவிட்டேன்.

    சினிமா நடிகர்கள் தெய்வம், அவர்கள் தாம் உயர்ந்தவர்கள் இப்படி சினிமா பைத்தியம் பிடித்தே இன்று பல இளைஞர்கள் வீணாகிறார்கள். நடிகர் பெயரைச் சொல்லி வகுப்பில் சண்டை இடும் மாணவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

    இந்த மனநிலை மாற வேண்டும்.

    நல்ல அவசியமான பதிவு.

    நன்றி.... :)

    ReplyDelete
    Replies
    1. //அப்படிச் சொல்லாதீர்கள் என்று சொல்ல, எனக்கு உரிமை இல்லை தான். ஆனாலும், தோன்றியது, கேட்டுவிட்டேன்.// உண்மை தான் கண்மணி. நான் முன்பொரு முறையே உங்களிடம் சொன்னதாய் ஞாபகம். அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி எங்கள் குடும்ப உறுப்பினர் போல்.. அதனால், ‘ரஜினி மாமா’, ‘தலைவர்’ என்று சொல்லியே பழகி விட்டது. மற்றபடி அவர் மேல் கண்மூடித்தனமாக, அவர் செய்வதையெல்லாம் சரி என சொல்லும் ஆள் இல்லை நான்.. இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி. அப்படி கூறாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் முயல்கிறேன் :-)
      //நடிகர் பெயரைச் சொல்லி வகுப்பில் சண்டை இடும் மாணவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.// ஹா ஹா இது இப்போது வரை நான் செய்வது தான்.. நமக்கு பிடித்த அரசியல் கட்சி, கிரிக்கெட் வீரருக்காக பேசுவது போன்றது தான் இது. ஆனால் ஒரு நடிகனை நடிப்பு என்கிற வட்டத்துக்குள் மட்டும் வைத்து அந்த விவாதம் இருக்கும் வரை பிரச்சனை இல்லை.. அதுவே அவரின் சொந்த விசயம், அரசியல் என்று நாம் பேசும் போது தப்பாகிவிடுகிறது..
      உங்கள் கருத்துக்கு நன்றி கண்மணி..

      Delete
  5. /// சினிமாவை நாம் சினிமாவாக பார்க்காததன் விளைவு இது ///

    இது ஒன்றே போதும்...

    ReplyDelete
    Replies
    1. ’ஏன்டா இந்த ஒத்த வரிக்காக இவ்ளோ பெருசா எழுதி என் கழுத்த அறுக்குற?’ன்னு கேக்குறீங்களா அண்ணே?

      Delete
  6. நடிகர்களிடமிருந்து அரசியல்வியாதிகளை தேடுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டுதானிருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நடிகர்கள் தங்கள் தொழிலை முதலில் உருப்படியாக பார்த்துக்கொள்ளட்டும்.. அதன் பின் அரசியல் பற்றி பேசலாம்.. மக்களும் ஒரு படம் வெற்றி அடைந்தவுடன் அவனை ‘முதல்வரே’, ‘விடி வெள்ளியே’னு பேசுறத நிறுத்தணும்..

      Delete
  7. "குசேலன்’ படத்தை வெளியிடும் பொருட்டு கர்நாடக அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் என்பது. 100கோடி ரூபாய் வியாபாரத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு இந்த விசயத்தில் ரஜினியை குற்றம் சொல்லலாம்.."

    என்னது குசேலன் 100கோடி வியாபாரமா ??? உங்கள் நகைச்சுவை மெய் சிலிர்க்க வைக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. குசேலன் படம் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு எவ்வளவு தொகைக்கு விநியோக உரிமை கொடுக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? டிவி ரைட்ஸ் கணக்கு தெரியுமா? ஒரு படம் என்பது வெற்றியா தோல்வியா என்பதை தான் நாம் பார்க்கிறோம்.. ஆனால் தியேட்டருக்கு வரும் முன்பே அதன் வியாபாரம் முடிந்து விடுகிறது.. கொஞ்சம் நான் சொல்ல வருவதை புரிந்து கொண்டு பேசுங்கள் அனானி..

      Delete
  8. " ரஜினியும் நடிகர் தானே அவரை ஏன் தலைவர் தலைவா என்றெல்லாம் சொல்கிறீர்கள்?"

    ராம் குமார் இதுக்கு பெயர் தான் சொந்த பணத்தில் சூனியம் வைத்து கொள்வது என்று

    ReplyDelete
    Replies
    1. ரஜினியை தலைவர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? I mean, அவரை நான் எதுவும் அரசியல் செய்ய கூப்பிட்டேனா? அல்லது வந்து போராட சொல்லி அறைகூவல் விடுகிறேனா? மக்கள் திலகம், நடிகர் திலகம், பவர் ஸ்டார் போல் தலைவர் என்பது நான் ரஜினிக்கு கொடுத்திருக்கும் பட்டம்.. அவ்வளவு தான்..

      Delete
  9. ஒரு நடிகனை போராட சொல்லி இவ்வளவு பேசுகிறோமே? நாம் என்றாவது ஒரு நாள் இறங்கி போராடுகிறோமா? அட்லீஸ்ட் போராட்டம் செய்ய நாம் ஒரு சிறு முயற்சியாவது செய்திருக்கிறோமா? குடும்பம், மேனேஜர், வீட்டு லோன், சம்பளம், சீட்டு பணம் என்று எல்லாமே ஞாபகம் வந்து நம் போராட்டத்தை அலுவலக டீ பிரேக் அளவிலோ அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அளவிலோ நிறுத்திவிடுகிறது. ஆனால் கோடிக்கணக்கான பணம் புழங்கும் வியாபாரத்தில் இருக்கும் நடிகனை மட்டும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து போராட சொல்லுவோம். இது என்ன ஞாயம்? /////////////////// இதும் சரியாய் தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இங்கு நிதர்சனத்தை பேசினால், practical விசயங்களை பேசினால் யாருக்கும் பிடிக்காது.. நடிகனை போராட வேண்டும் என அழைப்பவர்கள் கூட அந்த நடிகனின் சினிமா பிம்பத்துக்கு அடிமையானவர்களோ என எனக்கு கொஞ்சம் டவுட்டாக இருக்கிறது...

      Delete
  10. நடிகர்கள் ஏன்...? போராடக்கூடாது அவர்களும் இந்த சமூகத்தின் பிரஜைகள்தானே....! அஜித்,ரஜினி போன்ற சில நடிகர்களை வேண்டா வெறுப்பாக கலந்து கொள்பவர்களை போராட்டத்தில் வலுக்கட்டாயமாக இழுப்பதுதான் தவறு...!முகத்தில் கடுப்புடன் இலங்கைப் போரட்டத்தில் கலந்து கொண்ட அஜித்தை அழைத்ததை விட உணர்வுடன் கலந்து கொண்ட குரூப் டான்சர், லைட் பாய்கள் மேல்...!

    ReplyDelete
    Replies
    1. //நடிகர்கள் ஏன்...? போராடக்கூடாது அவர்களும் இந்த சமூகத்தின் பிரஜைகள்தானே....!// அது அவர்கள் விருப்பம் அண்ணே.. நானும் நீங்களும் கூடத்தான் சமூக பிரஜை. வாங்களேன் நாளை முதல் தெருவில் போய் போராடலாம்..
      //முகத்தில் கடுப்புடன் இலங்கைப் போரட்டத்தில் கலந்து கொண்ட அஜித்தை அழைத்ததை விட// அவரையும் அழைக்கவில்லை. வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போதும் அஜித் சொல்வது இதை தான், “ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள், எங்களை அரசியலுக்கு இழுக்காதீர்கள்” என்று.. இப்படி இன்று ஓபனாக பேசுபவர் யார்? என்னை கேட்டால் ஈழத்துக்கு ஆதராக மீட்டிங் என்று கூறி பின் அரசியல் நிர்பந்தங்களுக்காக அதை ‘மீனவர்களுக்கு ஆதரவான போராட்டம்’ என மாற்றி, மேடையில் சினிமா பாடல் பாடி இலங்கையை மிரட்டிய நடிகரை விட அஜித் பல மடங்கு மேல்.. தனக்கு தெரியாததை, தனக்கு வராததை, தனக்கு பிடிக்காததை வெறும் பாப்புலாரிட்டிக்காக செய்யாத மனிதர் அவர்..

      Delete
    2. நான் போராட்ட களத்தில்தான் இருக்கின்றேன்...!

      வீடு சுரேஸ்குமார்

      Delete
    3. வாழ்த்துக்கள் அண்ணே :-)

      Delete
  11. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது நம் தமிழ் நடிகர் நடிகைகள் (சிவாஜி, சாவித்திரி போன்றவர்கள்) தாங்களாக முன் வந்து நாடகம் போட்டு அந்த பணத்தை போர் நிவாரண நிதிக்கு கொடுத்தார்கள். இதை யாரும் குறையோ குற்றமோ சொல்ல முடியாது. அதே போல் இதை யாரும் பெரிதாக சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ள வில்லை. அன்று எல்லாமே பொதுநலமாக பார்க்கப்பட்டது. ஒற்றுமையாக நாடகம் போட்டார்கள். இன்று அப்படி ஒரு சூழலை நம்மால் நினைத்துப்பார்க்க முடியுமா?

    அருமை ராம்குமார். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நடிகர்களுக்காக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். முன்பு நாட்டுக்காக ஒன்று பட்டு எழுந்தார்கள். இன்று ஒரு பிரச்னையை நமநமத்து போக வைக்க, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கவனத்தைத் திருப்ப, அன்றைய தலைப்புச் செய்தியில் வர தலைகாட்டுகிறார்கள். வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. //நடிகர்களுக்காக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். // நேரம் விரயம் தான்.. ஆனால் இவர்கள் ஃபேஸ்புக்கிலும் வலையுலகிலும் நடிகர்களை பற்றி தரக்குறைவாக பேசுவதை பார்க்கும் போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது.. ஒரு நடிகனை பற்றி தரக்குறைவாக பேச இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஒரு நடிகன் ஏன் இவர்களுக்காக போராட வேண்டும்? இவர்களின் சினிமா போதையின் மறைமுக வெளிப்பாடு தான் நடிகர்களை போராட வற்புறுத்துவது.. நடிகர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் சொந்த பிரச்சனைகள் இருக்குமே? அந்த இடத்தில் இருந்து எழுதியது தான் இது..

      Delete
  12. உண்மைதான் ................இதில் செருப்பால் அடிப்பது போன்று உள்ளது அவர்கள் வருமான வரிக்கு ஒற்றுமையாக போராடியதுதான் .................மட்டற்ற இடங்களில் தனி தனியாக ...........
    உண்மைதானே..... நாம் எப்போது இதுபோன்ற கேவலமான எதிர்பார்ப்பை நிறுத்த போகிறோம் ....

    ReplyDelete
    Replies
    1. யாரும் தங்கள் எதிர்பார்ப்பை நிறுத்த மாட்டார்கள். நடிகனை இன்னும் இந்த உலகம் ஒரு பொம்மை போல், ஆனால் அதீத சக்தி கொண்ட பொம்மை போல் தான் நினைத்துக்கொண்டிருக்கிறது. அந்த பொம்மையால் ஒன்றும் நடக்காது என்று தெரிந்தும் வீண் ஜம்பத்திற்காக அந்த பொம்மையை பாடாய் படுத்துகிறார்கள்..

      Delete
  13. //சர்க்கஸ் புலி, கோயில் யானை, தெருவிற்குள் வரும் திடீர் குரங்கு போல் தான் நடிகர்கள் ஆதரவு தரும் போராட்டமும். கூட்டம் கூடும், கை தட்டல் இருக்கும், பொழுது போகும்... ஆனால் அதனால் பிரயோஜனம் எதுவும் இருக்காது.
    .// முழுவதுமாக இந்தக் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் நண்பா

    சினிமா நடிகர்கள் மேல் நமக்கு இருக்கும் தாக்கம் ஒரே நாளில் வந்ததும் இல்லை, ஒரே நாளில் போய்விடப் போவதும் இல்லை...

    சினிமா ஹீரோக்கள் என்னும் பிம்பத்தை மாயையை நாம் நிஜம் போல் உணரத் தொடங்கி விட்டோம், சமயங்களில் கடவுள் போல், அதனால் வரும் பிரச்சனைகள் தான் இவை மொத்தமும்...

    யாரையும் போராட வா என்று அழைக்கும் உரிமை நமக்கு இல்லை என்று பொதுவாக சொல்லிவிட முடியாது...
    //யாரையும்//என்ற வார்த்தை நமக்கு முன் பின் தெரியாத அளவில் மட்டுமே நமக்கு உரிமை கிடையாது....
    அவசியமான போராட்டங்களுக்கு வர தயங்கும் நண்பர்களை உரிமையோடு அழைக்கலாம்....

    அதுபோல் சினிமா நடிகர்கள் வந்தால் போராட்டத் தீ பரவும் என்று நம் மக்கள் எதிர்பார்கிறார்கள், ஆனால் அவர்கள் வந்தால் சூடு குறையத் தான் செய்கிறதே தவிர பரவுவதில்லை....

    சமீபத்தில் நடந்த முல்லை பெரியாறு பிரச்னை எந்த சினிமா நடிகர்கள் ஆதரவும் இன்றி மக்கள் போராட்டத்தால் வெற்றிகரமாக நடைபெற்ற உண்டு....

    உரிமைகளைப் கேட்டு பெற அனைவரும் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும், குறிப்பிட விரும்புவது ஒன்று தான், தங்கள் அடையாளங்களைத் துறந்து மக்களுடன் மக்களாக போராடா வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. //தங்கள் அடையாளங்களைத் துறந்து மக்களுடன் மக்களாக போராடா வேண்டும்.. // ஹ்ம் இப்படி சொல்லிப்பாருங்கள்.. ஒருவரும் போராட வர மாட்டார்கள்.. சரி, அதெப்படி அவர்கள் தங்கள் அடையாளங்களை துறந்துவிட்டு வர முடியும்? நடிகர்களை அழைக்கவே தேவையில்லை நண்பா..

      Delete
  14. சமையல் காரன் காக போய் சாப்பிட முடியாது...

    நமக்கு படித்தால்

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One