சோடாபுட்டி...

Thursday, March 7, 2013

ஒங்கப்பா ஒங்கள அடிப்பாரா? இல்ல எதுக்கு கேக்குறேன்னா எங்க க்ளாஸ்லலாம் யாரையும் அவைங்க அப்பாலாம் அடிக்காமாட்டாங்களாம். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதெப்படி அப்பா அடிக்காம இருப்பாரு? இன்னைக்கு கூட க்ளாஸ்ல கடைசி பென்ச்ல ஒக்காந்திருப்பானே போன வருசம் பெயிலான மாணிக்கவேலு, அவன்ட்ட கேட்டேன். “அந்தாளா? சின்ன புள்ளேல தான் அடிச்சாரு.. போன வருசம் நான் பெயிலானப்ப கூட கம்முனு போயிட்டாரு.. எங்கம்மா தான் அழுதுச்சி. எதுக்கு கேக்குற?”ன்னான்.. அவன்ட்ட நான் எதுக்குன்னு சொல்லல.. ஆனா அவன் சொன்னத கேட்டு எனக்கு எங்கப்பா மேல ரொம்ப கோவம் வந்திருச்சி . பெயிலானவன கூட அவங்கப்பா அடிச்சதில்ல. ஆனா எங்கப்பா?

போன வாரம் நானு ரிமோட்டுல டிவிய மாத்திக்கிட்டே இருந்தேன். பின்னாடி இருந்து வந்து ”உருப்படியா ஒன்ன வச்சு பாக்க மாட்டியா?”னு மண்டையில நங்குனு கொட்டிட்டாரு. இன்னைக்கு வரைக்கும் நடு மண்ட வீங்கிப்போயி இருக்கு.. வலிக்காம தொட்டுப்பாருங்க.. ம் இங்க தான் லேசா மேடு மாதிரி இருக்கா? அதான் அவரு கொட்டுனது.. என்னமா வீங்கிருக்கு பாத்தீங்களா?

அதுக்கு முன்னாடி ஞாயித்துக்கெழம எங்க தெரு பயலுகளோட தெருவுல கிரிக்கெட் வெளாண்டுக்கிட்டு இருந்தேன். பந்து வாய்க்கால்ல வுழுந்திருச்சி. நான் அத எடுக்கும் போது பாத்துட்டாரு. “டேய் குமாரு”னு கத்திக்கிட்டே வந்து கன்னத்துல ஓங்கி ஒரு அற விட்டாரு.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பாத்து, “ஓடுங்கடா அவராரு வீட்டுக்கு”னு அரட்ட ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. ஆனா நான் அழுகல. எட்டாங்கிளாஸ் வரைக்கும் அழுகுவேன் அவரு அடிச்சா. இப்ப ஒம்பதாவது வந்ததுல இருந்து என்னனே தெரில, அழுக வர மாதிரி இருக்கு ஆனா நான் அழுக மாட்றேன். ஸ்கூல்ல வாத்தியாரு அடிச்சாலும் அழுகை வாரது இல்ல இப்பலாம். எனக்கு என்ன கோவம்னா தெருவுல எல்லாரும் தான வெளாடுறோம்? எல்லாரு வீட்டுலேயும் தெரியும் நாங்க வெளாண்டா வாய்க்கால்ல பந்து வுழும்னு. அவங்க வீட்டுலலாம் யாரும் அடிக்க மாட்றாங்க. ஆனா எங்கப்பா மட்டும் எதுக்கு அடிக்குறாருனு தான் எனக்கு புரியல.

ஒரு நாளு சாந்தரம் ஸ்கூல்ல இருந்து வந்து மூஞ்ச கழுவிக்கிட்டு இருந்தேன். கையில வாட்சு கட்டுனமானைக்கே கழுவிக்கிட்டு இருந்தேன். “குமாரு வாட்ச்ச கழட்டி வச்சுட்டு மூஞ்ச கழுவு”னு சொன்னாரு. நான் “எப்பா இது வாட்டர் ரெஸிஸ்டண்ட் வாட்சுப்பா, ஒன்னும் ஆகாது”னு தண்ணிக்குள்ள கைய விட்டேன். சோப்ப எடுத்து மூஞ்சில தேய்க்கும் போது என் முதுகுல ஒரு அடி குடுத்தாரு பாருங்க, என்னால கொஞ்ச நேரம் மூச்சே விட முடியல.. வாயி தொறந்து கெடக்கு, அழுக முடியல, வாய மூடவும் முடியல, பேச்சும் வரல.  “சொல்லிக்கிட்டே இருக்கேன், கேக்குறானா பாரு ரஸ்கல்”னு சொல்லிக்கிட்டு அவரு பாட்டுக்க போயிட்டாரு. இப்படி என்ன எதுக்கெடுத்தாலும் அடிக்குறனால மனசுக்குள்ளயே கெட்ட வார்த்தையில கூட ஒன்ரெண்டு தடவ அவர வஞ்சிருக்கேன். கெட்ட வார்த்தை கூட நான் அவர்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்.ஆனா தெனமும் காலையில என்ன அவரு தான் எழுப்பிவிடுவாரு.. அப்பலாம் நல்லாத்தான் இருப்பாரு. நான் எந்திரிக்காம பொறண்டு பொறண்டு படுத்தேன்னா என் முதுகுல செல்லமா தட்டி அப்படியே தூக்கிட்டு போயி பாத்ரூம் கிட்ட எறக்கி விட்ருவாரு. திடீர்னு ஒரு நாள் எங்கேயாச்சும் படத்துக்கு, ஓட்டலுக்கு கூட்டிட்டு போவாரு. ரஜினி படம் வந்தா நான் கேக்கவே தேவயில்ல. அவரே ரெண்டு தடவ கூட்டிட்டு போயிருவாரு. ஆனா அவருக்கு எப்ப கோவம் வரும்னு தான் சொல்லவே முடியாது. திடீர்னு வரும். இப்படித்தான் ஒரு நாள் வீட்டுல எல்லாரும் மத்தியானம் டிவில படம் பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்னு என் முதுகுல சப்பு சப்புனு அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. “எத்தன தடவ சொல்லிருக்கேன் என் கண்ணாடிய போடாதன்னு?”னு சொல்லிட்டு அவர் பாட்டுக்க படம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு. படம் பாத்துக்கிட்டே சொன்னாரு, “இன்னொரு ஆளு கண்ணாடிய போட்டா கண்ணு கெட்டுப்பொயிரும்னு எத்தன தடவ சொல்றது? குருட்டுப்பயலா ஆகப்போறியா? எல்லா பயலும் ஒன்ன சோடாபுட்டினு கூப்டணுமா?”. என்ன பாத்து மொறச்சாரு. நான் கம்முனு அவரையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

 ஆனா ரொம்ப கோவம் வந்துச்சுனா எத எடுத்து அடிப்பாருன்னு சொல்ல முடியாது. போன மாசம் சயின்ஸ்ல ஜஸ்ட் பாஸ் தான் எடுத்திருந்தேன். ரேன்க் கார்ட்ட பாத்த ஒடனே சைக்கிள் டியூப்ப எடுத்து அடிக்க வந்துட்டாரு.. எங்கம்மா தான் என்ன காப்பாத்துனாங்க. இல்லேனா என்ன ரவ ரவையா உரிச்சிருப்பாரு அன்னைக்கே. ஆனா அடுத்த நாளு அவரு தான் என்ன வழக்கம் போல எழுப்பிவிட்டாரு. எனக்கு இதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாக்கு எம்மேல கோவம் வந்தா நானா போயி பேசுற வரைக்கும் எங்கூட பேச மாட்டாங்க. ஆனா எங்கப்பா கோவப்பட்டு அடிச்சாலும் திரும்ப அவரே வந்து எங்கிட்ட பேசுவாரு. அப்படி பேசும் போது முந்துன நாளு அவர மனசுக்குள்ள கெட்ட வார்த்த சொல்லி வஞ்சது வருத்தமா இருக்கும். ஆனா திரும்ப அவரு அடிக்கும் போது நானும் கெட்ட வார்த்தைய சொல்லி மனசுக்குள்ள அவர வஞ்சிருவேன்.

வேல விசயமா எங்க அப்பா அடிக்கடி வெளியூருக்கு போயிருவாரு. போனாருன்னா வாரதுக்கு எப்படியும் 10, 15 நாள் ஆகும். என் வாழ்க்கையோட ரொம்ப சந்தோசமான நாள்லாம் அப்பத்தான். ரெண்டு காரணம். ஒன்னு எங்கப்பா வீட்ல இருக்க மாட்டாரு, ரெண்டாவது வரும் போது எதாவது வெளாட்டு சாமான் வாங்கிட்டு வருவாரு. எங்க தெருவுல எவன் கிட்டயும் அது மாதிரி வெளாட்டு சாமான் இருக்காது. இந்த 15 நாளும் நான் என்ன சேட்ட செஞ்சாலும் எங்கம்மா “இரு ஒங்கப்பா வரட்டும், சொல்லி நல்லா கைய கால ஒடைக்க சொல்றேன்”னு சொன்னாலும் எங்க அப்பாக்கிட்ட என்ன சொல்லிக்குடுக்க மாட்டாங்க. எங்கம்மாவ மாதிரி ஏன் எங்கப்பா இருக்க மாட்றாருனு அடிக்கடி எனக்கு சந்தேகம் வரும். அந்த 15 நாளும் ஸ்கூலுக்கும் சந்தோசமா போவேன்.

அப்படி எங்கப்பா ஊருக்கு போயிருந்த ஒரு நாள்ல, வாத்தியாரு க்ளாஸ்ல கணக்கு நடத்திக்கிட்டு இருந்தாரு. எங்க க்ளாஸ்ல நான் எப்பயுமே கடைசிக்கு முந்தின பென்ச்ல தான் இருப்பேன். போர்ட பாத்துலாம் எழுத மாட்டேன். போர்ட பாத்தா என்னால வேமா எழுத முடியாது. அதனால பக்கத்துல ஒக்காந்திருக்கிறவன் கிட்ட கத பேசிக்கிட்டே அவன் நோட்ட பாத்து தான் எழுதுவேன். போர்ட பாத்து எழுதுனா பேசுற விசயம் மறந்து போயிரும். அதனாலயும் நான் போர்ட பாக்கவே மாட்டேன்.


 “டேய் ’தீனா’ படம் பாத்திட்டியாடா?” நான் அவன் முகத்தப் பாத்துக்கேட்டேன்.

”இன்னும் பாக்கலடா. நீ பாத்துட்டியா?” அவன் என்ன பாக்காம போர்ட பாத்துக்கிட்டே சொன்னியான்.

“நானும் பாக்கலடா எங்கப்பா ரஜினி படத்துக்கு மட்டும் தான் கூட்டிட்டு போவாருன்னு சொல்லிருக்கேன்ல? படத்த தேட்டர்ல இருந்து தூக்குன பிறகு கேபிள் டிவில போடுவாய்ங்கல, அப்பத்தான் பாக்கணும்”..

“எங்க தெரு பயலுக ரெண்டு பேரு பாத்துட்டாய்ங்களான்டா. படம் சூப்பரா இருக்காம். படத்த பாத்துட்டு அஜித்த வேற தல தலனு சொல்றாய்ங்கடா...”

“தலயா? அப்டினா என்னடா?”

“தெரிலடா.. லைலாவும் சூப்பரா இருக்காளாம்” அவன் இதை சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி வெக்கமா இருந்துச்சி. ஒரு நடிகைய பத்தி முன்னாடிலாம் இப்டி நாங்க பேசுனதே கெடையாது. இப்ப கொஞ்ச நாளா படத்துல, வெளம்பரத்துல, நாடகத்துல வர நடிகைய பத்திலாம் அவா அழகா இருக்காளா இல்லையானு ரொம்ப ஆர்வமா சண்ட போட்டு பேசுறோம்.

“அப்டியாடா? சரி அஜித்த எதுக்கு தலனு சொல்றாய்ங்கடா ஒங்க தெருக்காறய்ங்க?”னு நான் மீண்டும் கேட்டு முடிக்குறதுக்குள்ள தன் தலைல ஏதோ ஒன்னு சுர்ருனு வலிக்குற மாதிரி வேமா வந்து பட்டுச்சி. நான் டக்குனு நிமிந்து பாத்தேன், போர்டு கிட்ட நின்னு எங்க வாத்தியார் என்ன மொறச்சி பாத்துக்கிட்டு இருந்தாரு. அவர் தான் சாப்பீஸ தூக்கி எறிஞ்சிருக்காரு.

 ”என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” எப்பையுமே எங்க வாத்தியார் இப்படித்தான் எல்லாரையும் மரியாதையா பேசுவாரு. ஆள் பாக்குறதுக்கு நல்லா வாட்ட சாட்டமா இருப்பாரு. ஆனா மேக்ஸ் வாத்தியாருக்கேனு இருக்குற லேசான வழுக்க, ஒரு பக்கம் நீட்டமாவும் இன்னொரு பக்கம் கம்மியாவும் இருக்குற மீச, முழுக்கை சட்ட போட்டு ஒரு கைய மடிச்சு விட்டுட்டு இன்னொரு கைய அப்டியே தொங்க விட்டுறதுனு கொஞ்ச குணம் இவருக்கும் உண்டு. யாரையும் அடிக்க மாட்டாரு. ஆனா இவரு வஞ்சாலே பயமா இருக்கும். எரும, பன்னினு மட்டும் அடிக்கடி சொல்லுவாரு.

“ஒன்னுமில்ல சார்”

“ஒன்னுமில்லாமத்தான் அவங்கிட்ட கதையடிச்சுக்கிட்டு இருக்கியா பன்னி? என்னனு சொன்னா நாங்களும் கேப்போம்ல? நான் சொல்றத விட நீ சொல்றது நல்லா இருந்தா மத்த பயலுகளுக்கும் பொழுது போகும்ல?”

“இல்ல சார் ஒரு டவுட்டு தான் சார் கேட்டேன் இந்த sumல” இப்படி சொன்னா என்ன நல்லவன்னு நெனச்சு, ‘சரி இனிமேல் பேசக்கூடாது’ன்னு விட்டுருவாருன்னு தான் சொன்னேன். ஆனா எந்த மேக்ஸ் வாத்தியாரு நாம் நெனைக்குற மாதிரி நடந்துருக்காரு?

“சம்பளம் கவர்மெண்டு எனக்கு குடுக்குதா? இல்ல ஒன் ஃப்ரெண்டுக்கு குடுக்குதா? என்ட்ட கேளு உன் சந்தேகத்த”

நான் கம்முனு நின்னுக்கிட்டு இருந்தேன். “என்னய்யா பராக்கு பாத்துக்கிட்டு நிக்குற? என்ன சந்தேகம் கேளு?”

“இல்ல சார் இப்ப புரிஞ்சிருச்சி எனக்கு. இவன் கரெக்ட்டா சொல்லிக்குடுத்துட்டான்”னு நான் தீனா பத்தி பேசிக்கிட்டு இருந்தவன கைய காட்டுனேன்.

அவன் பயந்து போயிட்டான் நான் கைய காட்டுனத பாத்து. மெதுவா என்ட்ட கெஞ்சுற மாதிரி, ‘டேய் டேய் ப்ளீஸ்ரா என்ன எதுவும் மாட்டி விட்றாதரா’ன்னான்.

“ஓ அந்த எரும ஒனக்கு சொல்லிக்குடுத்துருச்சா? சரி, அப்ப இந்த sumல அடுத்த ஸ்டெப் என்னனு சொல்லு” அவரோட தொப்பைய ஸ்டாண்ட் மாதிரி நெனச்சி அதுல கைய கட்டிக்கிட்டு என்ன பாத்து கேட்டாரு.

“சார் இப்ப எழுதுன கடைசி ஸ்டெப் வரைக்கும் தான் சார் புரிஞ்சிருக்கு. அடுத்த ஸ்டெப் நீங்க நடத்துன ஒடனே புரிஞ்சுக்கிறேன் சார்.” தப்பிக்குறதுக்காக அறிவாளித்தனமா பேசிக்கிறதா நெனச்சு அவர்கிட்ட கொஞ்ச கொஞ்சமா மாட்டிக்கிட்டு இருக்கேன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது..

“ம் நீ சொல்றதும் கரெக்ட்டு தான். சரி, இந்த ஸ்டெப் வரைக்கும் ஒனக்கு என்ன புரிஞ்சிருக்குனு சொல்லு பாப்போம்”

“.....”

“சரி அட்லீஸ்ட் இந்த கணக்குல போர்டுல என்ன இருக்கோ அதையாவது வாசிய்யா”

நான் போர்டை பாத்தேன்.. கறுப்பு சொவருல வெள்ள வெள்ள திட்டா இருக்குற மாதிரி தான் தெரிஞ்சது.. “சார் எனக்கு போர்டுல என்ன இருக்குனே தெரில சார்”

”அப்புறம் எப்படி எரும ஒனக்கு கணக்கு மட்டும் புரியுது?”

“சார் அதான் சார், இவன் நோட்ட பாத்து எழுதுறேன்ல சார், அந்நியாரமே இவன்ட்ட கேட்டுக்கிடுவேன் சார், அப்படியே புரிஞ்சிரும் சார்.”

“ஒரு பொய்ய மறைக்க எத்தன பொய் சொல்லுவய்யா? பேசலேங்குற, கண்ணு தெரியலேங்குற, கணக்கு புரியுதுங்குற.. நான் எதத்தான் நம்புறது?”

எனக்கு அவர் இப்படி கேட்டவொடனே என்ன சொல்றதுனு தெரியல. நான் பக்கத்துல இருந்தவன் கிட்ட கத பேசுனேன். எனக்கு அவர் போர்டுல எழுதுறது என்னனு கூட தெரியாது. ஆனா நான் கண்ணு தெரியலனு சொன்னது உண்ம தான். “சார் சத்தியமா சார், எனக்கு போர்டுல இருக்குறது தெரில சார்”

“என்னய்யா சொல்ற? நெஜமாத்தான் சொல்றியா?” அவரு நான் பக்கத்துல இருந்தவன் கூட பேசுனது, எனக்கு கணக்கு புரியாதத எல்லாம் மறந்துட்டு இதப்பத்தி கேக்குறது எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்துச்சி, ‘நல்ல வேள தப்பிச்சோம்’னு.

“ஆமா சார் நெஜமாவே தெரில”..

நான் அப்படி சொன்னவொடனே போர்டுல என்னமோ எழுதுனாரு. “இத வாசி”

கறுப்பு போர்டுல வெள்ளையா ஒரு கோடு கிறுக்குன மாதிரி இருந்துச்சி.  “தெரில சார்”

“கொஞ்சம் முன்னாடி வந்து வாசிச்சுப்பாரு”

ரெண்டு பெஞ்ச் தள்ளி முன்னாடி வந்தேன். இப்ப அந்த கோடு கோடு மாதிரி இல்லாம ஏதோ எழுதிருக்குற மாதிரி இருந்துச்சி. “இப்பையும் தெரில சார்”

“இன்னும் கிட்டத்துல வந்து வாசி”ன்னாரு..

கிட்டத்தட்ட போர்டுக்கு பக்கத்துல போயி நின்னு, “சுரேஷ் குமா...” படிக்கிறப்பவே புரிஞ்சிருச்சி அது என் பேருன்னு.. “எம்பேரு சார்”னேன் அவர பயந்துக்கிட்டே பாத்து.

"நெஜமாவே தெரியலையாய்யா?” அவர் கிட்ட மொத இருந்த கோவம் இப்ப இல்ல..

“ஆமா சார்.. சத்தியமா தெரில” எனக்கும் புரிஞ்சிருச்சி, என் கண்ணுல என்னமோ பிரச்சனைனு..

“நாளைக்கு ஸ்கூலுக்கு வரும் போது ஒங்கம்மாவ கூட்டிட்டு வாய்யா”

“சார் சார் வேண்டாம் சார். ப்ளீஸ் சார்”

“ஒன்ன கோள் மூட்டுறதுக்கு இல்லய்யா.. அவங்களுக்கு உனக்கு இப்படி ஒரு பிரச்சன இருக்கிறது தெரியணும்ல?”

நான் எவ்வளவு கெஞ்சியும் அவரு, வீட்ல இருந்து ஆள் வரணும்னு சொல்லிட்டாரு. நான் எங்கம்மா கிட்ட அத அடுத்த நாள் காலையில ஸ்கூலுக்கு போறப்ப தான் சொன்னேன்.

“ம்மா எங்க சாரு உங்கள ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு”

இத கேட்டவுடனே எங்கம்மாக்கு கொஞ்சம் பயமாகிருச்சி.. “நீ என்னடா பண்ணுனா? எதுலயும் பெயில் கியில் ஆயிட்டியா?”

“இல்லம்மா எனக்கு போர்டுல எழுதுறது தெரில.. அதான் உங்கட்ட அது விசயமா பேசணும்னு சொன்னாரு”

“என்னடா சொல்ற? கண்ணு தெரியலையா? இத ஏன்டா நேத்து சாந்தரமே சொல்லல?”

“நீங்க பாட்டுக்க நைட்டு அப்பா ஃபோன் போடும் போது அவர் கிட்ட சொல்லிட்டீங்கன்னா? அதான் சொல்லல..” நான் இத ரொம்ப சாதாரணமாத்தான் சொன்னேன்.. ஆனா எங்கம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க..

“டிவி பாக்காத டிவி பாக்காதனு சொன்னேன்ல, கேட்டாத்தான? பிள்ளையானது பெத்தவங்க சொல்றத கேக்கணும்.. இப்படி ஆட்டம் போட்டா என்ன செய்றது? தெனமும் தெரு பயலுக கூட சேந்து ஆடுனா கண்ணு மட்டுமா கெட்டுப்போகும்?....” இப்படி நிறையா சம்பந்தமே இல்லாம பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க..

ஒரு வழியா எங்கம்மா பொலம்பி முடிச்ச பெறகு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனேன்.. அங்க வாத்தியார் என்ன சீக்கிரமா ஒரு கண் டாக்டர் கிட்ட காட்டி செக் பண்ண சொன்னார்.


கண் ஆஸ்பத்திரில எனக்கு செக் பண்ணிட்டு ”பவர் மைனஸ் ஒன்னர இருக்கு, கண்ணாடி கண்டிப்பா போடணும்”னு சொல்லிட்டாங்க.. எங்க அம்மாவுக்கு ஒரே வருத்தம் பிள்ள இப்படி கண்ணு தெரியாம கண்ணாடி போட்டிருச்சேன்னு.. அம்மா அழுகுறது ஒரு பக்கம் வருத்தம்னா, எங்க அப்பா என்ன சொல்லப்போறாரோன்னு நெனச்சு வர பயம் தான் நெறையா இருந்துச்சி.. ஏன்னா இன்னும் ரெண்டு நாள்ல அவரு ஊருக்கு திரும்ப வந்துருவாரு.

மறுநாள் ஸ்கூலுக்கு கண்ணாடி மாட்டிட்டு போனேன்.. எங்க தாத்தா, அப்பாவோட கண்ணாடியெல்லாம் போட்டு அழகு பாத்திருக்கேன்.. கண்ணாடி போட்டா மொகம் அழகா தெரியும்னு நம்பிக்கிட்டு இருந்தேன். ஆனா நான் கண்ணாடி போட்டு ஸ்கூலுக்கு போகும் போது தான் கண்ணாடி போடுறது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது.. எல்லாரும், “டேய் கண்ணாடி, டேய் சோடாபுட்டி”னு கூப்புட ஆரம்பிச்சாய்ங்க.. கண்ணாடி போட்ட பெறகு நம்மளப் பாத்து “அண்ணே”னு பயப்படுற சின்னப்பயலுக கூட “கண்ணாடி”னு நக்கலா கூப்பிடுவாய்ங்க.. இன்னைக்கு ஒரு நாள்லயே ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல இருந்து, கூட படிக்குறவன்ல இருந்து, தமிழ் வாத்தியார், ஸ்கூலுக்கு வெளிய கொய்யாப்பழம் விக்குற அண்ணாச்சினு நெறையா பேரு என்ன “டேய் சோடாபுட்டி”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க..

எனக்கு இது ரொம்ப அசிங்கமா இருந்துச்சி.. சின்ன வயசுல இருந்து கண்ணாடி போடணும்னு ஆசப்பட்டேன்.. ஆனா இப்ப அத போட்டவொடனே எல்லாரும் இப்படி கிண்டல் அடிக்குறத பாத்து ஏன்டா கண்ணாடி போட்டிருக்கோம்னு நெனச்சி ரொம்ப வருத்தமாகிருச்சி.. அதுலயும் கண்ணாடி போட்டதுல இருந்து யாரோ என் தலைய பிடிச்சி அமுக்குற மாதிரி இருக்கு.. தல வேற வலிக்குது.. பக்கத்துல கிளாஸ்ல ஒருத்தன் கண்ணாடி போட்டிருப்பான்.. அவன் கிட்ட கேட்டதுக்கு, “டேய் மொத ரெண்டு மூனு நாள் அப்படித்தான்டா இருக்கும்.. அடுத்து போகப்போக பழகிரும்டா”ன்னான்.. எனக்கு கண்ணாடி போடவே பிடிக்கல.. ஆனா கண்ணாடி போடலேனா எதுவுமே தெரியல.. கண்ணாடி போட்டு என்ன கண்ணாடில பாத்தா எனக்கே அசிங்கமா இருந்துச்சி.. கண்ணாடி போட்டா என்ன எனக்கே பிடிக்கல..

ரெண்டு நாளா எல்லாரும் என்ன ‘சோடாபுட்டி சோடாபுட்டி’னு சொல்லியே கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.. எனக்கு ரொம்ப அழுகையா இருக்கு. யார் கிட்டயும் சரியா பேச முடியல.. எல்லாரும் என்னோட கண்ணாடியவே உத்து பாக்குற மாதிரி, என்னப்பாத்து சிரிக்குற மாதிரி இருக்கு... ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல.. தெருவுலயும் எல்லாரும் என்ன “டேய் கண்ணாடி”னு தான் கூப்பிடுறாய்ங்க.. ஆனா எனக்கு இன்னைக்கு அதெல்லாம் விட ஒரு பெரிய பயம் இருந்துச்சி.. ஏன்னா இன்னைக்கு தான் எங்கப்பா ஊர்ல இருந்து திரும்பி வர நாள்.. எப்படியும் பகல்லயே வந்திருப்பாரு.. நான் சாந்தரம் வீட்டுக்கு போறப்ப தூங்கிக்கிடோ, இல்ல டீ குடிச்சிக்கிடோ இருப்பாரு.. வெளாட்டுக்கு அவர் கண்ணாடிய அன்னைக்கு எடுத்து போட்டதுக்கே என்ன அடி பின்னிட்டாரு. இன்னைக்கு என்ன பண்ணப்போறாருன்னு தெரியல..

சாந்தரம் வீட்டுக்கு போனேன்.. மெதுவா சைக்கிள நிப்பாட்டிட்டு வீட்டுக்குள்ள நொழஞ்சேன்.. கண்ணாடிய மொதையே கழட்டி பைக்குள்ள வச்சிக்கிட்டேன்.. எங்கப்பா ஒக்காந்து டிவி பாத்துக்கிட்டு இருந்தாரு. அம்மா பக்கத்துல இருந்தாங்க.

“என்னடா கண்ண கெடுத்துக்கிட்டு கண்ணாடி போட ஆரம்பிச்சுட்டியாமே?” அவர் என்ன மொறச்சி பாத்து கேக்கும் போதே எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி..

“சரி விடுங்க, புஸ்தகத்த கிட்டத்துல வச்சி படிச்சனால தான் அப்படி ஆகிருச்ச்சாம், டாக்டரு சொன்னாரு” இந்த மாதிரி பொய் சொல்லி காப்பாத்துறனால தான் எங்கம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. “நீ போயி மூஞ்ச கழுவிட்டு படிக்க ஒக்காருப்பா”.. நான் மெதுவா அவங்கள தாண்டி போனேன்..

“டேய் நில்லுறா..” எங்கப்பா தான்.. நான் அப்படியே மெதுவா திரும்பி அவர பாத்தேன்..

“எங்கடா கண்ணாடி?”

“பைக்குள்ள இருக்குப்பா”

“பைக்குள்ள வச்சிருக்கிறதுக்காடா ஒனக்கு கண்ணாடி வாங்கி குடுத்திருக்கு? எடுத்து மாட்றா”

“இல்ல வேண்டாம்ப்பா.. ஸ்கூலுக்கு போகும் போது மாட்டிக்கிறேன்” என் கொரல் ஒரு மாதிரி கட்டியா அடைக்குற மாதிரி இருந்திச்சி.. எங்கப்பா கிட்ட இவ்வளவு பயம் எனக்கு வந்ததே இல்ல.. அவர் முன்னாடி கண்ணாடிய எடுத்து போடுற தைரியம் எனக்கு இல்ல.. எடுத்து போட்ட ஒடனே அவரு இன்னும் கோவம் வந்து ரெண்டு அடியோட விடாம, சைக்கிள் டியூப்ப எடுத்து வெளாசிருவாரோன்னு பயமா இருந்துச்சி..

“டேய் அழகு பாக்குறதுக்கா வாங்கி குடுத்திருக்கு? தொடந்து போட்டாத்தான்டா சரியாவும்.. எடுத்து மாட்டு”.

“இல்ல இருக்கட்டும்ப்பா” ரெண்டு கண்லயும் கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சி..

“என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ மாடேங்குற?”னு சொல்லிக்கிட்டே சேர்ல இருந்து எந்திரிச்சிட்டாரு.. நான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன் அவர் கையில அந்த சைக்கிள் டியூப் கெடைக்க கூடாதுன்னு.. என் பக்கத்துல வந்தாரு.. “கண்ணாடி எங்க? எடு” என்ன பாத்து கைய நீட்டுனாரு.. தோள்ல மாட்டிருந்த பைய கீழ எறக்கி உள்ள இருந்து பயந்துக்கிட்டே கண்ணாடிய எடுத்து அவர் கிட்ட குடுத்தேன்..

“ம் மாட்டு இப்ப” இவ்வளவு பக்கத்துல நின்னுக்கிட்டு அவர் சொல்றத நான் செய்யலேனா என்ன ஆகும்னு தெரியும்.. அதனால ஒன்னுமே சொல்லாம கண்னாடிய மாட்டுனேன்..

என்ன கொஞ்ச நேரம் கம்முனு பாத்தாரு.. எனக்கு என்ன ஆகப்போகுதோன்னு பக்கு பக்குனு இருந்துச்சி.. என் கன்னமும் அறை வாங்குறதுக்கும் ரெடியா இருந்திச்சி.. எப்பனாலும் எனக்கு அடி வுழலாம்னு இருந்த நேரத்துல எங்க அம்மா பக்கம் வெடுக்குனு திரும்பி சொன்னாரு, “ஏன்டீ இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல ஃப்ரேமா வாங்கிருக்க கூடாது? நான் வார வரைக்கும் ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணிருக்கலாம்ல? சரி அடுத்து பாத்துக்கிடலாம்.. ஆனா எம்புள்ள கண்ணாடி போட்ட பெறகு இன்னும் அழகா பணக்கார வீட்டுப்பய மாதிரி இருக்கியான். டேய் கண்ணாடி ஒனக்கு சூப்பரா இருக்குடா” சிரிச்சுக்கிடே என் கன்னத்த தட்டிக்கொடுத்தாரு..

எனக்கு ஒரு மாதிரி சப்புனு ஆகிருச்சி.. ஆனா என்னனு தெரில, பயங்கர அழுக வந்துருச்சி.. “எப்பா”னு கத்திகிட்டே அவர் இடுப்ப கட்டி புடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டேன்... “என்னடா? ஏன் அழுகுற? டேய் அழுகாதரா..” என் கைய அவரு இடுப்புல இருந்து எடுக்க பாத்தாரு.. முடியல.. நான் ரொம்ப டைட்டா பிடிச்சி அழுதுக்கிட்டே இருக்கேன்...

அன்னைக்கு மட்டும் இல்ல, அதுக்கு பெறகு என்னைக்குமே அவர் என்ன அடிச்சது இல்ல.. ஆனாலும் கண்ணாடி போட்டதுக்காக அவரு என்ன அடிக்காதது இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு கொறையாவே இருக்கு...


நீங்கள் இந்த கதைகளையும் படிக்கலாம்..
சும்மா இருங்கப்பா...
டைம் மிஷின்..
கலர்க்காதல்..
முத்துச்செல்வி..

32 comments

 1. ரொம்ப்ப்ப்ப்ப்பெரிய்ய்ய்ய கதை. ஆனா நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றி சார் :-)

   Delete
 2. நல்லாருக்கு. கடைசில அழுகயே வந்துருச்சு...

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஸ்கூல பையன்ல அதான் அழுதுட்டீங்க. டோண்ட் வொரி..

   Delete
 3. அப்பனா அவன்...? என்று நினைக்க வைத்து...

  பையனின் மனநிலையிலிருந்து எழுதியது அருமை...

  இருக்கும் (போது) அருமை எப்போதும் பலருக்கும் தெரிவதில்லை... புரிந்து கொள்வதில்லை...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் அண்ணே.. நாம யாரையுமே புரிஞ்சுக்கிறது இல்ல.. வாழ்வில் சில பிரிவுகள் தான் சில உறவுகளை நமக்குப் புரிய வைக்குறது.. ஆனால் பிரிந்த பின் புரிந்து என்ன பிரயோஜனம்?
   உங்க வாழ்த்துக்கு நன்றிண்ணே :-)

   Delete
  2. கதை அருமை. வாழ்த்துக்கள் ராம்குமார். எங்கப்பா கிட்ட நான் ஒரே ஒரு முறை தான் அடி வாங்கிருக்கேன். ரெண்டாவது முறை (ஈர்க்குச்சியால்) அடிக்க வந்தப்போ தாத்தாவின் கைத்தடியை எடுத்துக்கொண்டு திருப்பி அடிக்க போனது நினைவிருக்கிறது. அவர் கோவமெல்லாம் போயி பக பகன்னு சிரிக்க ஆரமிச்சிட்டார்.. அடி வாங்குறதை விட அது ரொம்ப இன்சல்ட்டிங்கா போச்சு.. உங்கள் கதையை படிக்கும்போது சின வயசெல்லாம் நினைவுக்கு வருது. அப்பாவின் அன்றைய மனநிலையை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
   -பாரதி.

   Delete
 4. கதை அருமை. வாழ்த்துக்கள் ராம்குமார். எங்கப்பா கிட்ட நான் ஒரே ஒரு முறை தான் அடி வாங்கிருக்கேன். ரெண்டாவது முறை (ஈர்க்குச்சியால்) அடிக்க வந்தப்போ தாத்தாவின் கைத்தடியை எடுத்துக்கொண்டு திருப்பி அடிக்க போனது நினைவிருக்கிறது. அவர் கோவமெல்லாம் போயி பக பகன்னு சிரிக்க ஆரமிச்சிட்டார்.. அடி வாங்குறதை விட அது ரொம்ப இன்சல்ட்டிங்கா போச்சு.. உங்கள் கதையை படிக்கும்போது சின வயசெல்லாம் நினைவுக்கு வருது. அப்பாவின் அன்றைய மனநிலையை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
  -பாரதி.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா.. இது வரைக்கும் எங்கப்பா எனக்கு விவரம் தெரிஞ்சு என்ன அடிச்சதே இல்ல.. “டேய்” ஒரு குரலும் ஒரு முறைப்புமே போதும் என்னை அவர் கட்டுக்குள் கொண்டு வர,.. //அவர் கோவமெல்லாம் போயி பக பகன்னு சிரிக்க ஆரமிச்சிட்டார்.. அடி வாங்குறதை விட அது ரொம்ப இன்சல்ட்டிங்கா போச்சு..// இது மாதிரி எனக்கும் நிறைய நடந்திருக்கு.. ரொம்ப நன்றிங்க.. :-)

   Delete
  2. அடி வாங்குற அளவுக்கு குறும்பு பண்ணாம நல்ல பையனா இருந்திருக்கீங்கன்னு நினைக்குறேன். எனக்கு நாக்குல சனி. முதல் முறை அடி வாங்கினது கூட வாத்தியார் வேலையை நக்கலடிச்சதுக்கு தான். ஆனா இப்ப அதே வாத்தியார் வேலை தான் என் குறிக்கோளாக இருக்கிறது.

   Delete
  3. //நல்ல பையனா இருந்திருக்கீங்கன்னு நினைக்குறேன்.// எங்க வீட்ல இத பாத்தா என்ன நடக்கும்னு நெனைக்கவே பயமா இருக்கு.. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
   //இப்ப அதே வாத்தியார் வேலை தான் என் குறிக்கோளாக இருக்கிறது. // வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்ளுங்கள்..

   Delete
  4. என்ன.. விஜய் பட வசனமெல்லாம் பேசுறீங்க? அதென்னவோ உண்மை தான்.. எல்லாமே ஒரு சுழற்சியில் தான் இயங்குகிறது..

   Delete
  5. அந்த சுழற்சிக்கு காரணம் நம்மை மீறிய ஒரு சக்தி தான்..

   Delete
 5. அருமையான கதை! தந்தை மகன் உறவை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி திரு சுரேஷ்.. :-)

   Delete
 6. பையனின் பார்வையில் பயணிக்கும் பள்ளிகூட பருவ வாழ்க்கை சித்திரம் ..அருமை தொடர்ந்து எழுதுக

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.. :-)

   Delete
 7. அந்த அனுபவம் கொஞ்சம் த்ரில்தான்,, கண்ணாடியை நாம் ஏற்றுக் கொள்ள முரண்டு பிடிப்பதும் வேறு வழியின்றி அணிவதும் ..

  அருமையான சித்தரிப்பு

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ரிஷபன்.. நான் கண்ணாடி போடும் முன்பு வரை கண்ணாடி போட ரொம்ப ஆசைப்பட்டேன்.. கண்ணாடி போடுவதை ஸ்டைல் என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால் கண்ணாடி போட்ட முதல் சில நாட்கள் என் தன்னம்பிக்கையை மொத்தமாக சிதைத்துவிட்டது.. ஆனால் இப்போது எனக்கு என்னை கண்ணாடி போட்டு பார்த்தால் தான் பிடிக்கிறது..

   Delete
 8. Replies
  1. ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே :-)

   Delete
 9. அருமை ராம்குமார்.
  சிறுவர், சிறுமிகளுக்கு கண் குறைபாடு உள்ளது தெரிவதற்கே நாளாகும். என்னுடன் 8 படித்த மாணவி ஒருவருக்கும் இந்த தூரப்பார்வை குறைபாடு இருந்தது. 10 படிக்கும் போது ஒரு மாணவருக்கும் இந்த குறைபாடு இருந்தது. பள்ளியில் தான் அந்த குறைபாடை கண்டுபிடித்து வீட்டுக்கு சொல்லிவிட்டு கண்ணாடி போட ஏற்பாடு செய்தார்கள்.
  நீங்கள் எழுதியிருக்கும் நடை அற்புதம், சிவகாசிக்கே உரித்தான வார்த்தைகள் (slang or colloquial) என்று சொல்லலாம். 6வது வகுப்பு பையன் அழுது கொண்டே சொல்வது போல் கண்ணுக்குள் தெரிகிறது.
  உங்கள் எழுத்து நடையை நினைத்து மிக மிக பெருமைப்படுகிறேன். எனது பக்கத்தில் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். மகிழ்ச்சி & வாழ்த்துகள் ராம்குமார். Ram Kumar.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. ஒவ்வொரு பதிவிலும் வரும் உங்கள் வாழ்த்துக்களும், ஊக்கமும் தான் எனது அடுத்த படைப்புகளுக்கான உரங்கள்..

   Delete
  2. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. ஒவ்வொரு பதிவிலும் வரும் உங்கள் வாழ்த்துக்களும், ஊக்கமும் தான் எனது அடுத்த படைப்புகளுக்கான உரங்கள்..

   Delete
 10. // பயங்கர அழுக வந்துருச்சி.. “எப்பா”னு கத்திகிட்டே அவர் இடுப்ப கட்டி புடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டேன்..// ச்ச இத படிக்கும் பொது செம பீல் நண்பா...

  உங்களோட மத்த கதை படிக்கும் போது ரொம்ப பெரிய கதையா தெரியும்... பேட் இது அப்டி தெரியல.. ஒரு வேள உங்க கதையா படிச்சு பழகிருசோ....

  ரொம்ப நல்ல கதை நண்பா....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா எழுதும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.. ’ரொம்ப சிறுசா எழுதிட்டோமோ’னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. ரொம்ப நன்றி நண்பா..

   Delete
 11. கையில கிடைக்கிறது வச்சு....அடிப்பாரு...இந்தமாதிரி சில இடங்களில் 10,12 வயசு ஞாபகம் வந்துடுச்சு...வித விதமான அடி வாங்கியிருக்கேன்...ஆனா கடைசியில் உண்மையில் அழுதிட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி Rathinavel Pandian Rajendran :-) சூர்ய வம்சத்துல ஒரு வசனம் வரும்.. ”உளி படுறத வலினு நெனைக்குற எந்த கல்லும் செலையாக முடியாது.. ஏர் உழுறத வலினு நெனைக்குற எந்த நெலமும் வெளச்சல் குடுக்க முடியாது.. அதே மாதிரி தான் அப்பா திட்டுறத தப்புனு நெனைக்குற எந்த பிள்ளையும் உருப்பட முடியாது”னு... என்ன அருமையான ஆழமான எதார்த்தமான வசனம்?

   Delete
 12. குமாரு அழும்போதுலாம் அழுகையும், சிரிக்கும்போதுலாம் சிரிப்பும் வந்துச்சு...

  ReplyDelete
  Replies
  1. ஏன்னா நம்ம எல்லாருக்குள்ளயும் குமாரு இருந்திருக்கான் ஒரு காலத்துல.. நன்றி பொதிகைச் செல்வன்..

   Delete
 13. அருமை ! உண்மையிலேயே மனதைத் தொட்டது.. எதுக்கு அந்த அப்பாவுக்கு அத்தனை கோபம்,உயிர் போற அளவுக்கு அடி வெளுக்கரார் அதற்கான காரணம் சொல்லலை, ஓரளவு புத்தி உள்ளவங்க தானாவே புரிஞ்சுக்கணும் போலருக்கு. :-)
  கடைசி வரிகள் மிகவும் நெகிழ்ச்சியானவை ...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி Kalatmika.. //ஓரளவு புத்தி உள்ளவங்க தானாவே புரிஞ்சுக்கணும் போலருக்கு. :-) // அய்யோ அப்படியெல்லாம் இல்லை.. ஒரு சில வீடுகளில் அப்பாக்கள் காரணமே இல்லாமல் அடிப்பார்கள் தங்கள் பிள்ளைகளை.. இது தான் காரணம் என்று எதுவும் கிடையாது..

   Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One