சாலை பயணமா? சாவை நோக்கிய பயணமா?

Wednesday, February 6, 2013

நம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா? போர் மரணமா? எதுவும் நோய்களா? இல்லை. ஒரு கணக்கெடுப்பையே பார்ப்போமே.. நம் நாட்டில் வருடத்திற்கு சராசரியாக 1000 பேர் மலேரியாவால் இறக்கிறார்கள், 2000 பேர் எய்ட்ஸால் மரணமடைகிறார்கள், 45000 பேரை டி.பி. மேலே கொண்டு செல்கிறது. ஆனால் வருடத்தில் கிட்டத்தட்ட 200000 (ரெண்டு லட்சம்) பேரை சாலை விபத்துக்கள் மூலம் நாம் இழந்துவருகிறோம். ஆம், உயிர் கொல்லும் நோயை விட, குண்டு போட்டு அழிக்கும் எதிரியை விட, நம் உயிரை நம் கவனமின்மையால் நாமே இழந்து கொண்டிருப்பது தான் இங்கு அதிகமாக நகக்கிறது. உங்களுக்கு தெரியுமா, தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் தான் அதிகம் சாலை விபத்துகள் பதிவாகின்றன!!




சாலை பாதுகாப்பு பற்றியும், இன்றைய அவசர அவசரமான வாழ்வில் நடந்து வரும் விபத்துகளைப் பற்றியும் ஏற்கனவே பலரும் பல விதங்களில் சொல்லியிருந்தாலும், கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நான் கேள்விப்பட்ட நான்கு விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட மூன்று சாவுகளும், கண் முன்னே தலை பிளந்து சாலையில் உயிரை வழிய விட்ட ஒரு மரணமும், வாழ்வில் பாதி காலத்தை சாலையில் பைக்கிலேயே கழிப்பதாலும் இதை இப்போது எழுதலாம் என நினைக்கிறேன்.. எனக்கும் ஒரு வித பயமும் பொறுப்பும் சாலையில் செல்லும் போது இருக்க வேண்டுமல்லவா? அதான் இந்த பதிவு..


கிராமங்களில் சாலைகளில் நான் பாம்புகளையும் அணில்களையும் சில நேரங்களில் பறவைகளையும் சாலையில் நைந்து போய் பார்த்திருக்கிறேன் (போன வாரம் ஒரு வயல்வெளி ஓரத்தில் ஒரு ஆமையை ஒரு லாரிக்காரன் கொன்றான்). ”ச்சே பாவம்” என்கிற அந்த ஒரு நொடி பச்சாதாபத்தோடு இதெல்லாம் கடந்துவிடும். ஆனால் மனிதர்கள் சாலையில், குப்புற விழுந்து, நன்றாக இன் பண்ணிய சட்டை, அழகான செருப்பு, கையில் வாட்ச், சுருள் சுருளான முடியை படிய வாரியிருக்கும் தலை, அதில் இருந்து வழிந்து வட்டமாக தரையை நனைத்திருக்கும் ரெத்தம் என கிடக்கும் போது, அந்த ஒரு நொடி பச்சாதாபம் நிச்சயம் பயமாக மாறும். இன்று இவன், இதே கதி நாளைக்கு எனக்கு வராது என என்ன நிச்சயம்? இவன் வீட்டில் இந்த செய்தியை எப்படி கேட்பார்கள்? அவர்கள் இவன் வருவான் என காத்துக்கொண்டிருப்பார்களே? என அவனை தாண்டி அவன் குடும்பத்தை பற்றி யோசிக்கும் போது, அந்த இறப்பு நம்மை இன்னும் பயமுறுத்தும்.



இவ்வளவு விபத்துக்களுக்கும் மரணங்களுக்கும் யார் காரணம்? லாரியா, பஸ்ஸா, காரா, ஆட்டோவா, பைக்கா? ஒன்றும் அறியாத இவைகளை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்? இவைகளை இயக்கும் கைகளும் கால்களும் மனங்களும் தான் விபத்துக்களுக்கு காரணம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நம் மீது தவறே இல்லாத சூழலில் எதிர்பாராமல் நமக்கு நடக்கும் ஒரு அதிர்ச்சி தான் விபத்து. ஆனால் சாலை விபத்தை பாருங்கள், அது விபத்தா? நம் மீது தவறு இருந்தால் அதை விபத்து என சொல்ல முடியாது. ஏனென்றால் இங்கு நாம் சாலை விபத்து என சொல்வதில் எல்லா தவறுமே நம் மீது தான். நம்மில் எத்தனை பேர் வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போடுகிறோம்? எத்தனை பேர் செல்ஃபோன் பேசிக்கொண்டே, எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம்? குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எத்தனை பேர்? எத்தனை பேர் சாலை விதிகளை மதிக்கிறோம்? இது எதையுமே செய்யாமல் நடப்பதை விபத்து என்று எப்படி கூற முடியும்? வேண்டுமானால் தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவில் ஏற்படும் மரணம் என்று சொல்லலாம். 


சாலையில் நாம் வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது ஐந்தறிவுள்ள ஒரு நாய் குறுக்கே வந்தாலே நமக்கு எவ்வளவு கோவம் வருகிறது? ஆனால் அதே நாம், வேறொருவர் வரும் போது மட்டும் ஏன் கொஞ்சம் கூட பொறுமையே இல்லாமல் குறுக்கே பாய்வது, பின் அவர் வேகமாக வருவது தெரிந்ததும், முன்னால் போவதா பின்னால் வந்துவிடுவதா என நடு ரோட்டில் குழம்புவது என நாமும் பயந்து வண்டியில் வரும் அவரையும் பீதிக்குள்ளாக்க வேண்டும்? சாலையை கடக்கும் போது கொஞ்சம் பொறுமையாக இருந்தால் தான் என்ன ஆகிவிடப்போகிறது? நமக்கே நாம் எந்தப்பக்கம் போகப்போகிறோம் என அந்த மைக்ரோ செகண்டில் குழப்பம் வரும் போது, எதிரில் வண்டியில் வருபவர்க்கு அதெல்லாம் தெரியுமா? அதனால் முதலில் சாலை பயணத்தில் பொறுமை வேண்டும்.



வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டில், மக்களின் வசதிக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பை நம் அரசாங்கத்தால் செய்து கொடுக்கமுடியவில்லை. கடந்த 10,15 ஆண்டுகளில் டூவீலர் மற்றும் கார்கள் எந்த அளவுக்கு சாலையை ஆக்கிரமித்துள்ளன என பாருங்கள். கரெண்ட்டைப்போல, கேஸ் அடுப்பை போல அத்தியாவசியமாகி, வீட்டிற்கு கண்டிப்பாக இரண்டு டூவீலர்கள் உள்ளன. ஆனால் சாலைகள்? நான்கு வழிச்சாலைகள் தவிர அனைத்துமே அன்று இருந்த அதே அளவில், ரெண்டு பக்கமும் இன்னும் சில அடிகள் அதிக ஆக்கிரமிப்போடு இருக்கின்றன. அதாவது, குறைந்த அகலமுள்ள சாலைகளில் அதிக வண்டியை ஓட்ட வேண்டும். இப்படி இருக்கும் சூழலில் விபத்துக்கான வாய்ப்புகள் கண்டிப்பாக அதிகரிக்கும். 



நான்கு வழிச்சாலைகள் பெரிதாக இருப்பதால் விபத்து நேர்வதில்லை என சொல்லிவிட முடியாது. நான்கு வழிச்சாலைகளில் இருக்கும் சர்வீஸ் ரோடுகளில் விபத்துக்கள் மிக சகஜம். அதே போல் சாலை ஓரங்களில் இருக்கும் கிராமத்தினர் சாலை விதியை மதிக்காமல், ஒரு கி.மீ சுற்றி வர சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு தவறான பாதையில் வருவதும் விபத்துக்குக்காரணம். அதே போல் அதிக வேகத்தில் வரும், சிறிய ரக கார்களில் அடிக்கடி டயர் வெடித்து, உயிர் இழப்புகள் அதிகமாக நடக்கின்றன. நான் கேள்விப்பட்ட வரையில் மாருதியில் தான் டயர் வெடிப்புகள் அதிகம் நிகழ்கின்றன. அதே போல் அரசு பேருந்துகள் மிகவும் அலட்சியமாகவும், தனியார் பேருந்துகள் அதிக வேகத்திலும், லாரிகள் உயிர் கொல்லும் வேகத்துடனும் தான் சாலையில் செல்கின்றன.




சாதாரணமாக பைக்கில் செல்லும் போது சாலையில் நம்மை ஒருவர் முந்தும் போது தெரிந்தோ தெரியாமலோ நம் மனதிற்குள் அவரை மீண்டும் முந்திச்செல்ல வேண்டும் எனும் உத்வேகம் வரும். இதை கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் என்றாலும், எப்பாடுபட்டாவது இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். சம்பந்தமே இல்லாத ஒருவரோடு, மானசீகமாக ரேஸ் செய்வது உயிரையே வாங்கிவிடும். அவர் நம் அருகில் வந்து வண்டியை லேசாக உலட்டினால் என்ன ஆகும்? இந்த மாதிரி இன்ஸ்டன்ட் ரேஸில் உங்களை கீழே தள்ளும் எண்ணம் கூட அவருக்கு வரலாம், அல்லது எதிரில் வரும் பஸ் லாரியில் கூட உங்களை சிக்க வைக்கலாம். அவருக்கு நீங்கள் யாரோ ஒருவர். உங்களுக்கு என்ன ஆனாலும் அவருக்கு கவலை கிடையாது. இதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், ஸ்பீல்பெர்க்கின் “டூயல்” (Duel) என்னும் படம் பாருங்கள். மிரண்டு போவீர்கள், சாலை பயணத்தில் முகம் தெரியாத ஆளால் இவ்வளவு ஆபத்துக்கள் வருமா என்று.



அடுத்தது நம் மினி பஸ் & ஷேர் ஆட்டோ ஆட்கள். இவர்களை கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்லக்காரணம், இன்று மினி பஸ் ஓட்டும் பெரும்பாலான டிரைவர்கள் 20வயதிற்கு உட்பட்டவர்களே.. பேருந்து வசதியே இல்லாத மிகச்சிறிய, மிகவும் தொலைவில் உள்ள கிராமங்களை இணைக்கவே மினிபஸ்கள் அப்போதைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஆனால் எனக்கு தெரிந்து இன்று எந்த சிறு ஊரிலும் மினி பஸ் என்பது இல்லை. ஓடும் மினி பஸ்கள் அனைத்தும் நகரங்களின் அவுட்டர் ஏரியாக்களை மட்டுமே கவர் செய்கின்றன. அதிலும் நகர சாலைகளில் அந்த சிறுவர்கள் ஓட்டும் வேகத்தை பார்க்கும் போது, எமன் நம்மை நோக்கி எருமையை விடுத்து, மினிபஸ்ஸில் வருவது போல் இருக்கும். எங்கள் ஊரில் மாதத்திற்கு ஒரு உயிரை மினிபஸ் எடுத்துவிடும். அதே போல் இந்த ஷேர் ஆட்டோக்கள். பெண்ணின் மனத்தில் இருப்பதை தான் யாராலும் சொல்ல முடியாது என்பார்கள். என்னைக்கேட்டால் இந்த ஷேர் ஆட்டோக்கள் எப்போது எந்தப்பக்கம் திரும்பும் என்பதை தான் யாரும் சொல்ல முடியாது. ரைட், லெஃப்ட், செண்டர் என கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஓவர்டேக் செய்து நம் பீபியை எகிற வைப்பதில் ஷேர் ஆட்டோ என்றுமே முதல் இடம் தான். அதுவும் ஒரு ஆட்டோவில் எப்படி ஒரு ஊரையே ஏற்றுகிறார்கள் என்பதும் பெரிய புதிர் தான்.





பெரும்பாலும் விபத்துக்களில் உயிர் இழப்பது இருசக்கர வாகன ஓட்டிகளும், ஷேர் ஆட்டோவில் செல்பவர்களும் தான். விபத்தை தடுக்க வேண்டுமானால் மக்கள் ஒழுங்காக ஒழுக்கமாக சாலையில் செல்ல வேண்டும். அதற்கு, லைசன்ஸ் எடுப்பதற்கான முறைகளை இன்னும் கடினமாக்க வேண்டும். லைசன்ஸ் எடுக்கும் ஒவ்வொருவரும் சாலை விதி சம்பந்தமான பாடத்தில் எழுத்துத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறிருக்க வேண்டும் என்பதை சட்டம் ஆக்கலாம். இது ஏற்கனவே மேம்போக்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றாலும், முறையாக செய்வதன் மூலம், மக்களுக்கு சாலை விதிகளின் அவசியத்தை உணர வைக்கலாம். நெடுஞ்சாலைகளில் அரசும், ஒவ்வொரு ஊரிலும் முக்கிய சாலைகளில் அந்தந்த நகராட்சியோ, மாநகராட்சியோ கேமராக்கள் பொருத்தி 24மணி நேரமும் சாலை போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். சாலை விதையை மீறும், அதி வேகத்தில் செல்லும், இன்ன பிற தவறுகள் செய்யும் வண்டியின் அட்ரஸிற்கு 24மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்த சொல்லி ஓலை அனுப்பலாம். மூன்று முறைக்கு மேல் அபராதம் என்றால் லைசன்ஸை நீக்கிவிடலாம். ஒருவர் தன் வாழ்வில் ஒரு முறை தான் லைசன்ஸ் எடுக்க முடியும் என்னும் சட்டம் கொண்டு வரலாம்.

என்ன தான் அரசு சட்டம் போட்டாலும், மக்களுக்கு தெளிவு வேண்டும். சாலையில் நாம் மட்டும் செல்லவில்லை. எமனின் டீலர்களான குடிகாரனும், அரைலூசுகளும், ரேஸ்பைத்தியங்களும், சர்க்கஸ் காரர்களும் கார், பைக், பஸ், லாரி என விதவிதமான வாகனங்களில் நமக்கு எதிரிலோ, முன்னோ பின்னோ வருவார்கள். நாம் என்ன தான் இண்டிகேட்டர் போட்டு, ஹார்ன் அடித்து மெதுவாக போனாலும், சாலையில் நம் உயிர் காப்பதற்கான பொறுப்பில் சரி பங்கு அவர்களிடமும் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் சரியாக செய்வார்களா என தெரியாது. ஒரு வேளை அவர்கள் தவறினாலும் நாம் தப்பிக்க நான்கு விசயங்களை செய்ய வேண்டும். அடுத்த தெருவிற்கு செல்வதானால் கூட நல்ல ஹெல்மெட்டை எப்போதும் அணிந்து வண்டி ஓட்டுங்கள், செல்ஃபோனோ எஸ்.எம்.எஸ்ஸோ எப்போதும் வேண்டாம், குடித்துவிட்டு வண்டியை தொடாதீர்கள், எப்போதும் நல்ல கண்டிசனின் வண்டி இருக்கட்டும். இந்த நான்கையும் சரியாக பின்பற்றினாலே, எதாவது அசம்பாவிதம் நடந்தால் கூட, அட்லீஸ்ட் உயிராவது மிஞ்சும். அதே போல் வண்டிக்கு மட்டும் அல்ல, வண்டி ஓட்டும் நமக்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். எவனோ செய்யும் தவறினால் நம் உயிர் போனாலும், குடும்பமாவது கொஞ்சம் கஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம்.



பாதசாரிகள் கொஞ்சம் பொறுமையாக சாலையை கடக்கவும். சாலையில் செல்லும் போது உங்கள் காது உங்கள் வசம் இருக்கட்டும். நடந்து செல்லும் உங்களுக்கு சாலையை கடக்க அவசரம் என்றால், அதை விட அவசரத்தில் தான் ஒருவர் வண்டியில் வருவார். ஹார்ன் அடித்தால் ஒதுங்குங்கள், வேகமாக சாலையை கடக்கிறேன் பேர்வழி என்று ஓடாதீர்கள். எப்போதும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஏனென்றால் உங்கள் காலை உங்களால் நினைத்த் நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். உங்கள் தண்டுவடம் உடனே செய்தி அனுப்பி காலை ஓடவோ நிற்கவோ செய்துவிடும். ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டுமானால் தண்டுவடம் மூளைக்கு செய்தி அனுப்பி, மூலை அவரின் காலுக்கு கட்டளையிட்டு கால் பிரேக்கை அழுத்த வேண்டும். அவர் இவ்வளவையும் செய்வதற்குள் உங்களை இடித்துவிடலாம். அதனால் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.



இந்தக்கட்டுரையில் நான் சொல்ல வந்தவை எல்லாம் உங்கள் மனதில் ஏறியதா, இல்லையா என்று எனக்கு தெரியாது. இந்த கடைசி வரிகளை மட்டும் எப்போதும் மனதில் கொண்டிருங்கள், அது போதும். சாலையில் செல்லும் போது மிக மிக கவனமாக பொறுமையாக நிதானமாக இருங்கள். நீங்கள் செய்யும் தவறு உங்களை மட்டும் அல்ல, எங்கோ ஒரு மூலையில் தன் குடும்பத்திற்கு அனைத்துமாக இருக்கும் இன்னொருவரையும் பாதிக்கலாம். அவரை எதிர்பார்த்து அவரது அம்மாவோ, மனைவியோ, ஸ்கூல் ஃபீஸ் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கையில் குழந்தைகளோ காத்துக்கொண்டிருப்பார்கள்.

22 comments

  1. ஒவ்வொரு வருடமும் 'ரெகார்ட் ப்ரேகிங் சேல்ஸ் ' என்று இரு சக்கர வாகனங்களின் கம்பெனிகள் முழங்கும்போதும் கண்ணெதிரே இந்த ஆபத்து தான் தோன்றுகிறது. அரசு சாலைகளை பராமரிக்கிறது (சிரிக்காதீர்கள்). சாலைகளில் எவ்வளவு வாகனங்கள் போகும்வரை சாலைக்கு பாதிப்பு வராது என்பதை அரசு எளிதில் தெரிந்து கொள்ளமுடியும். வாகனங்களுக்கு அனுமதி கொடுப்பதும் அரசுதான். அரசு இது பிரச்சனை என்று நினைத்தால் எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஏன் செய்வதில்லை? கம்பெனிகள் கொடுக்கும் பணமா? இல்லை பணக்காரர்கள் தவிர மற்றவர்கள் தானே சாவார்கள். அதனாலென்ன என்ற எண்ணமா ?
    அதிக வாகனங்கள் வளர்ச்சியை காட்டுகிறது என்ற எண்ணமே காரணம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிக வாகனங்கள் என்பது, அந்த நிறுவனங்கள் மூலம் வரும் வரி, வண்டியை வாங்கும் போது நாம் கட்டும் வரி, ஒவ்வொரு முறை தண்டத்துக்கு போடும் பெட்ரோல், விலை ஏறினாலும் பொத்திக்கொண்டு பெட்ரோல் போட்டுக்கொண்டு தானே இருக்கிறோம்? அரசுக்கு காசு தான் வேண்டும்.. குடிமக்கள் குடிகாரன் ஆனாலும் சரி, குடிமுழுகிப்போனாலும் சரி, காசே பிரதானம் என இருக்கும் அரசாங்கத்தில் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.. நம் பாதுகாப்பு நம் கையில் என உணர்ந்து இருந்துகொள்ள வேண்டியது தான்.. உங்கள் கருத்துக்கு நன்றி bandhu :-)

      Delete
  2. சாலை விதையை மீறும், அதி வேகத்தில் செல்லும், இன்ன பிற தவறுகள் செய்யும் வண்டியின் அட்ரஸிற்கு 24மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்த சொல்லி ஓலை அனுப்பலாம். மூன்று முறைக்கு மேல் அபராதம் என்றால் லைசன்ஸை நீக்கிவிடலாம். ஒருவர் தன் வாழ்வில் ஒரு முறை தான் லைசன்ஸ் எடுக்க முடியும் என்னும் சட்டம் கொண்டு வரலாம்.

    அருமையான பயனுள்ள பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி & வாழ்த்துகள் ராம்குமார்.Ram Kumar
    ஆக்கிரமிப்புகளை சீரமைக்க வேண்டும். நடப்பதற்கு பாதைகள் இல்லை, டெலிபோன் போஸ்ட், மின்கம்பங்கள், சிறுசிறு சாலை கோவில்கள், சிலைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
    இனிய நண்பர்களே, படித்துப் பாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். இந்த நல்ல பதிவை நீங்களும் பகிர்ந்து அனைவரையும் படிக்கச் செய்யுங்கள். நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. அரசாங்கம் எப்போது இதையெல்லாம் செய்யும்? அவர்களுக்கு தான் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக்கொண்டு ஊழல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறதே? நாம் பாதுகாப்பாக இருப்போம்.. முடிந்தவரை பிறருக்கும் சாலை விதிகளை பின்பற்ற சொல்லிக்கொடுப்போம்

      Delete
  3. Un vaalkai un kaiyil ....fact nanba

    ReplyDelete
    Replies
    1. தலைவர் கரெக்ட்டா தான் சொல்லிருக்கார் நண்பா

      Delete
  4. நல்ல பதிவு ராம் குமார். சாலையில் பாதுகாப்புடன் நடந்து கொள்வது ஒவ்வொரு மனிதனின் கடமையும்... சாலை விதிகளை மதித்து நடந்துகொண்டால் எத்தனையோ விபத்துகளைத் தவிர்க்க முடியும். ஒவ்வொருவ்ருக்கும் தன்னைப் பற்றிய எண்ணமே அதிகம் - நான் முன்னே விரைவாக செல்ல வேண்டும், அடுத்தவன் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற எண்ணமும் மாற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //நான் முன்னே விரைவாக செல்ல வேண்டும், அடுத்தவன் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற எண்ணமும் மாற வேண்டும். // இப்படிநினைக்கும் ஒருவர், மற்றவரும் இதே நினைப்பை தான் மனதில் வைத்திருப்பார் என தெரிந்துகொள்ள வேண்டும்.. இவ்வளவு வாகன நெரிசல்களில் நாமும் வேகமாக போனால், மொத்தமாக போய் விட வேண்டியது தான்.. வேகமாக செல்வதற்கு பதில், வீட்டில் இருந்து சீக்கிரம் கிளம்பி பொறுமையாக செல்லலாம்

      Delete
  5. குழந்தைகளின் வித்தைகளை ரசிக்கும் பெற்றோர்களை என்ன செய்வது...?

    'குடி'மகனான குடும்பத்தலைவரை என்ன செய்வது...?

    மனித நேயம் , தனிமனித ஒழுக்கம், மனிதாபிமானம்,...,..., இன்னும் பலவற்றை சுயநலம், பணபலம் முழுங்கி விடுகிறது....

    சமூகத்தில் எடுக்க வேண்டிய 'களை'கள் பல உள்ளன... 'களை'கள் அல்ல... வேர்கள்...

    சமூகம் = முதலில் நம் மனம்...

    ReplyDelete
    Replies
    1. //சமூகம் = முதலில் நம் மனம்.// உண்மை அண்ணே.. இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை விரும்புகிறோமோ, அதை நம்மிடம் இருந்து முதலில் ஆரம்பிக்க வேண்டும்.. சாலை பாதுகாப்பு என சொல்லாமல், உயிர் பாதுகாப்பு என இதை அழைத்தால் இன்னும் பொறுத்தமாக இருக்கும் :-)

      Delete
  6. கட்டுரையின் முடிவு மட்டுமே போதும், அதை மட்டும் ஒருவர் நினைவில் கொண்டால் போதும். நல்ல அவசியமான கட்டுரை.

    இறுதி வரிகள் மனதில் நிற்கும், இதைப் படிக்கும் யாருக்கும். அது உறுதி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்மணி.. நம் உயிர் மீது முதலில் நமக்கு அக்கறை வேண்டும்..

      Delete
  7. மிக அருமையான பதிவு நண்பரே ...

    ReplyDelete
  8. இந்த பதிவு நான் மொதல்லையே படிச்சிட்டேன்.. இவ்வளவும் படித்தாலும் தனக்கே நடந்தாலும் கண்டுகொள்ளாமல் வண்டி ஒட்டுரவங்களை என்ன செய்யுறதுன்னு தான் எனக்கு புரியலை. முதலில் சிறுவர்களுக்கு பைக் வாங்கி குடுக்குறதை பெற்றோர் நிப்பாட்டனும். தானே சம்பாதிக்கும் வரை யாருக்கும் சொந்த வாகனம் அவசியமில்லை என்பது என் கருத்து.
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. //தானே சம்பாதிக்கும் வரை யாருக்கும் சொந்த வாகனம் அவசியமில்லை என்பது என் கருத்து.// நல்ல கருத்து இதை ஃபாலோ பண்ணினால் கூட பாதி விபத்துக்கள் நின்றுவிடும்.. நில உச்சவரம்பு சட்டம் மாதிரி வாகன உச்ச வரம்பு சட்டமும் வர வேண்டும்..

      Delete
    2. எங்கப்பா அதை வலுக்கட்டாயமாக பின்பற்றினார் என்பதே இதை நான் நினைவில் வைத்திருக்க மிக முக்கிய காரணம். சைக்கிள் வாங்கவே ஐந்து வருடம் காசு சேர்க்க வேண்டி இருந்தது. அப்போது கடுப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தாலும் அது எனக்குள் எவ்வளவு சுய மரியாதையை வளர்த்திருக்கிறது என்பது இப்போது கண்கூடாக தெரிகிறது. இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு கேட்டதெல்லாம் உடனடியாக கிடைத்து விடுவதால் உழைப்பின் அருமையும் சுய மரியாதையின் வாசனையும் குறைவாகவே கிடைக்கிறது. வாகனம் ஓட்டுவது முதல் பிறர் வலி அறிய முற்படாதது வரை அலட்சிய போக்குக்கு இது ஒரு மிக முக்கிய காரணி.

      Delete
    3. நல்ல பழக்கம்.. இந்தக்காலத்தில் செல்லம் குடுக்குறேன் பேர்வழி என்று பிள்ளைகளை தான் பெற்றவர்கள் நாசமாக்குகிறார்கள்..

      Delete
  9. நம்ம ஊரு நியூசயும் அப்பப்போ போடு பா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா என் சிறுகதைகள் பெரும்பாலும் நம் ஊர் கலாச்சாரத்தை சொல்பவை தான்..

      Delete
  10. அரசு பைக்குகள், டூவீலர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம், சாலையில் இவ்வளவு பைக்குகள் ஓடுவதை பார்க்கும் போது, அதுவும் தாறுமாறாக கிடைக்கும் இடைவெளிகளுக்குள் எல்லாம் புகுந்து புகுந்து செல்லும் பைக்குகளை பார்க்கும் போதும் பெரிய வாகன ஓட்டிகளை நினைத்துதான் பரிதாபமாக இருக்கிறது. முன்னால் செல்லும் வண்டியை பார்ப்பதா இல்லை ஓரத்தில் இருந்து நடுநடுவே வந்து போகும் பைக்குகளை கவனிப்பதா?

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One