ஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..

Saturday, February 23, 2013



பொதுவாக நான் தியேட்டரில் பார்க்க முடியாத படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. திருட்டு சிடியில் பார்க்கும் யாரும் ஒரு படத்தை பற்றி குறை கூற தகுதி இல்லை என்பது என் கருத்து. அதுவும் வேற்று மொழிப்படங்கள் என்றால், சுத்தம்.. நான் படித்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் “மை நேம் இஸ் ராம் குமார்” என்பதை தான் திக்காமல் இங்கிலீசில் பேச சொல்லிக்கொடுத்தது அந்த 12 வருடங்களில்.. அதற்கு மேல் யாராவது என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டால், “ஆஃபிஸ் கால்” என்று ஃபோனை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். பள்ளியில் சொல்லிக்கொடுத்த இங்கிலீஷ் தான் இந்த லட்சணம் என்றால், வெளி டியூசனில் படித்த ஹிந்தி அதை விட சுத்தம்.. ஒரு வயதான பாட்டி, மத்திய வயது வேட்டி கட்டிய பண்டிட், என் தூரத்து உறவினர் என்று நான் அவர்களிடம் ஹிந்தி படிக்க சென்று, என்னால் ஹிந்தியை வெறுத்து விட்டவர்கள் அவர்கள் எல்லாம்.. அந்த அளவுக்கு நான் ஒரு ஹிந்தி அறிஞன்.

அப்படிப்பட்ட நான் ஒரு காலத்தில் இருந்து ஹிந்திப்படங்களை விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தேன்.. ஆம், டேஷ் என்னும் அந்த கருமத்தில் விழுந்து தொலைத்ததால், ஹிந்தி படங்களிலும் விழ வேண்டியதாகி விட்டது.. இப்போது அந்த டேஷ் என்னை விட்டு போனாலும் ஹிந்தி படம் பார்க்கும் ஆர்வம் இன்னும் இருக்கிறது. காதல் கொடுத்த சென்ற சில நல்ல விசயங்களில் ஹிந்தி படமும் எனக்கு முக்கியமான ஒன்று. ஆரம்பத்தில் ஷாருக்கான் படங்கள் மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. சப் டைட்டில் உதவியுடன் தான்.  போகப்போக ஷாருக்கானையும் தாண்டி ஹிந்திப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது தான் "A Wednesday" என்னும் படம் பார்த்தேன். என்னை மிக கவர்ந்த படங்களில் ஒன்று. இதைத்தான் கமல் தமிழில் “உன்னைப்போல் ஒருவன்” என்று அழகாக எடுத்திருப்பார் தன் சிறிசில அதிகப்பிரங்கித்தனங்களையும் சேர்த்து. நீரஜ் பாண்டே என்னும் அந்த இயக்குனர் அந்த ஒரு படத்தின் மூலமே என் மனதில் நின்று விட்டார், ‘கற்றது தமிழ்’ ராம் போல..



கிட்டத்தட்ட நாலரை வருடங்கள் கழித்து நீரஜ் பாண்டே எடுத்திருக்கும் படம் தான் இந்த ஸ்பெசல்26.. இந்தப்படத்தை நான் பார்க்க இன்னொரு காரணம், அக்‌ஷய் குமார்.. நம் சிறுத்தையை இவர் இந்தியில் ரவுடி ரத்தோராக உறுமியிருப்பார்.. அந்த படத்தில் இருந்து எனக்கு இவரையும் பிடித்துவிட்டது. நல்ல ஜனரஞ்சக ஹீரோ.. ஒரு சீரியஸ் டைரக்டரும் ஜனரஞ்சக நடிகரும் இணையும் கொஞ்சம் ரிஸ்கான ஸ்பெசல் காம்பினேசனில் வெளி வந்திருக்கும் படம் தான் ஸ்பெசல் 26. இது 1987ல் பம்பாயில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாம்.


1987ல் பம்பாய் ஒபேரா ஓட்டல்.. 26 பேர் கொண்ட சி.பி.ஐ குழு ஒன்று ரைடுக்கு வருகிறது. சில கோடி கறுப்பு பணத்தை ரைடின் மூலம் அவர்கள் கண்டு பிடித்து எடுத்து செல்கின்றனர். ஆனால் அதன் பின் தான் தெரிகிறது அவர்கள் ஒரு டுபாக்கூர் சி.பி.ஐ என்று. பாதிக்கப்பட்டவர்கள் இந்த நொடி வரை புகார் செய்யவில்லை, அது கறுப்புப்பணம் என்பதால். ஆனால் போலீசாலும் இது வரை அந்த 26 பேரின் நிழலை கூட அறியமுடியவில்லை. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இது. மிகவும் அழகான கதைக்களம். சரி இந்த நிஜம் சினிமா பிம்பத்தில் எவ்வளவு அழகாக விழுந்திருக்கிறது என்று பார்க்கலாம்..


அக்‌ஷய் குமார் தலைமையில் ஒரு சிறு குழு நாட்டின் பல முக்கிய நகரங்களின் தங்களை சி.பி.ஐ என அறிமுக செய்து கொண்டு லட்சக்கணக்கில் பணங்களை ஆட்டையைப்போடுகிறது. பணத்தை பறிகொடுத்தவர்கள் ஒருவரும் புகார் செய்யாததால் இது வெளியில் தெரியவேயில்லை. மந்திரி ஒருவர் வீட்டிலேயே இவர்கள் கைவரிசையை காட்ட, போலீஸ் ஒரிஜினல் சி.பி.ஐ.ன் துணை கொண்டு இவர்களை மோப்பம் பிடிக்கிறது. கடைசியாக மும்பை நகைக்கடையில் பல்க்காக ஒரு அமௌண்ட்டை வழித்து எடுத்துக்கொண்டு தங்கள் திருட்டு ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என இவர்கள் நினைக்கும் போது போலீஸ் இவர்களின் ப்ளானை மொத்தமாக அறிந்துகொண்டு அனைத்து பக்கமும் அணை கட்டுகிறது. அதையும் மீறி பணத்தை கொள்ளையடித்து ஹாயாக ஷார்ஜாவில் அக்‌ஷய் குமார் &;கோ கிரிக்கெட் பார்ப்பதோடு படம் முடிகிறது. இதற்கும் அந்த ஒரிஜினல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள், “3idiotsக்கும் “five point someone”க்கும் இருக்கும் தொடர்பை எனக்கு சரியாக சொன்னால், அவர்களுக்கு மட்டும் விளக்கப்படும்.





படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, வேகம் வேகம் அப்படி ஒரு வேகம். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சண்டைக்காட்சி கூட கிடையாது, அட சேசிங்கும் கிடையாதுங்க. அதிலும் ஒரிஜினல் சி.பி.ஐ மனோஜ் பாஜ்பாய் அறிமுகமான பின் படம் அசுர வேகம். அக்‌ஷய் குமார் போன்ற மாஸ் நடிகர் கிடைத்தாலும், கதையில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் எடுத்திருப்பதற்காகவே நீரஜ் பாண்டேவிற்கு சபாஷ். அக்‌ஷய் குமாரின் முகத்தில் லேசான வயது முதிர்வு தெரிந்தாலும் அவரின் அசால்ட்டான நடிப்பு அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது. கல்கத்தா ரெய்டில் தாங்கள் செல்லும் இடத்தில் தங்களுக்கு முன் ஒரிஜினல் சிபிஐ ரெய்டு செய்துகொண்டிருப்பதை பார்த்து சமாளித்துக்கொண்டு வருவது, அடுத்து அவர்களையே ஆட்டையைப் போட்ட பணத்தை தூக்கி வர செய்வது என அக்‌ஷய்குமாரின் குறும்புகளும் உண்டு படத்தில்.

அனுபம் கேரும், அக்‌ஷய் குமாரும் ஆரம்ப காட்சியில் ரைடு முடிந்ததும் காரில் நக்கலாக பேசிக்கொள்வது காலரைக்கால் ஹிந்தி தெரிந்த எனக்கே சிரிப்பை கொடுத்தது. ஹிந்தி தெரிந்தவர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நினைக்கிறேன். அனுபம்கேர் - A Wednesdayவில் ப்ரகாஷ் ரத்தோடாக கம்பீரம் காட்டியவர் இந்த படத்தில் பி.கே.சர்மாவாக ஒரு அப்பாவி கொள்ளைக்காரனாக நம்மை சிரிக்க வைக்கிறார்.. அந்த ஓட்டல் ரூம் போலீஸ் என்கொயரி காட்சி ஒன்று போதும் இவரின் நடிப்பின் பிரமாண்ட்டத்தை காட்ட. மனுசன் வெளுத்து வாங்கிவிட்டார்.


மேலே இருக்கும் படத்தில் இருப்பவர் தான் மனோஜ் பாஜ்பாய்.. வாஜ்பாயிக்கு தூரத்து சொந்தமா என தெரியவில்லை. இந்த ஆளை நான் இந்த படத்தில் தான் முதல் முறையாக பார்க்கிறேன். மனுசன் பாக்குறதுக்கு அதுல் குல்கர்னி மாதிரி ஒல்லியா இருந்துக்கிட்டு என்ன ஒரு நடிப்பு?! ஒரிஜினல் சி.பி.ஐ, வாசிம்மாக வரும் இவர், கண்ணை சிமிட்டாமல் முறைத்து பார்த்துக்கொண்டே நடிப்பது நமக்கே கிலியாக இருக்கிறது. ஆரம்ப காட்சியில் பையனை தோளில் சுமந்து கொண்டு அவனை மகிழ்வித்துக்கொண்டே பள்ளிவேனில் ஏற்றி, “bye dad" என்று சொல்லும் மகனிடம் “அப்பு”னு சொல்லு அக்கறை காட்டுகிறார். அவனை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தால், வாசலில் “ஆஃபிஸ் ஃபோன்” என்று கையில் காட்லெஸ் ஃபோனோடு காத்திருக்கும் மனைவியிடம் ஃபோனை வாங்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே முறைப்பு, கோவம் & கண்டிப்பு என அத்தனையையும் ஒரே பார்வையில் காட்டிவிட்டு, “துப்பட்டா போடு” என அதட்டுகிறார். ஆபிஸ் ஃபோனை பேசி முடித்ததும் மனைவியிடம், “ஒன்னுமில்ல இதோ வந்துறேன்” என தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பி ஒருவனை துரத்திப்பிடித்து செவிட்டிலேயே ஒன்னு விடுகிறார். அதன் பின் கொள்ளை கும்பலை கண்டுபிடிக்கும் வரை படம் முழுவதும் முறைப்பும் விறைப்பும் தான். தன் மகனோடு இருக்கும் காட்சியிலும், கடைசி காட்சியிலும் தான் சிரிக்கிறார் மனுசன். மற்ற நேரங்களில் எல்லாம் அவ்வளவு ஆக்ரோசம் &; உஷ்ணம் இவர் பார்வையில்.

அந்த பார்வை தான் நம்மை கடைசி வரை, “புடிச்சிருவானோ?” என்கிற பயத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இவர் ஒவ்வொரு இடமாக நூல் பிடித்து செல்லும் இடம் அழகு. நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்போகிறார்கள் என தெரிந்ததும் அங்கு வந்து வேகமாக அவர்களை கூண்டோடு பிடிக்க ப்ளான் போடுகிறார். அப்போது நகைக்கடை ஓனர் பாவம் போல் அவரிடம் வந்து, “அதான் அவன் தான் திருட போறான்னு தெரியுதுல, அப்ப அவன இங்க வரதுக்கு முன்னாடியே பிடிக்கலாம்ல?” என்கிறார். நம்ம ஆள் அந்த நகைக்கடையை பார்த்து (முறைத்து), “ஐயா ராசா, திருடணும்னு நெனைக்குறதுக்கெல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாது, திருடுனாதான் அரெஸ்ட் பண்ண முடியும்” என்று சொல்லும் போது இந்த கோவ மூஞ்சுக்குள்ளயும் கொஞ்சம் நக்கல் இருப்பது தெரிகிறது. இவர் பாத்திரம் தான் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது என தாராளமாக சொல்லலாம்.

ஹீரோயினாக நம்ம காஜல் அகர்வால். எனக்கு இந்த பெண்ணை ஆரம்பத்தில் இருந்து தீபாவளிக்கு வந்த துப்பாக்கி வரை பிடிக்கவேயில்லை. ஆனால் இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். காரணம் அவர் உடுத்தியிருந்தது, அழகழகான 25 வருடங்களுக்கு முந்தைய மாடல் சேலை & சுடிதார்கள், நீளமான கம்மல்கள், சிறிய வட்டமான சிகப்பு ஸ்டிக்கர் பொட்டுகள். அது போக, இந்த படத்தில் இவருக்கு நீண்ட கூந்தல் வேறு. கேட்கவும் வேண்டுமா? நான் காலி.. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த பெரிய கண்கள் இந்தப்படத்தில் ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கின்றன. அக்‌ஷய்குமாருக்கு கண்களாலேயே செய்கை கொடுப்பது, ”உன் கூட இருக்கும் போது நான் நல்லவனா மாறிடணும்னு நெனைக்கிறேன்” என்று சொல்லும் நாயகனிடம், “அதான் என்ன விட்டுட்டு அடிக்கடி போயிறியா?” என்று கேட்டு நம்மையும் ஃபீலிங்க்ஸில் தள்ளி விடுவது என நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். கடைசி காட்சியில் எதோ ஒரு நம்பிக்கையில் நாயகனுக்காக ஏர்போட்டில் காத்திருக்கும் அந்த நொடிகள் அவரோடு சேர்ந்து நமக்கும் திக் திக் நிமிடங்கள் தான், நாயகன் வருவானா இல்லையா என..


ரெண்டேகால் மணி நேர படத்தில் கால் மணிநேரம் தான் சப்டைட்டில் வேலை செய்தது. மீதி நேரங்களில் என் காலரைக்கால் ஹிந்தி அறிவை வைத்து நானாக, இது தான் பேசியிருப்பார்கள் என கணித்த வகையில் பல வசனங்களும் அருமையாக இருந்தன. சில சாம்பிள்கள்..

1. ”உண்மையான அதிகாரம்/சக்தி நம்ம மனசுல தான் இருக்கு” - அனுபம் கேர் பேசும் இந்த வசனம் சீரியஸாக வருவதை விட காமெடியாக அக்‌ஷய் குமார் அவரை ஓட்டும் போது சூப்பராக இருக்கும்..

2. அக்‌ஷய்: உன் கூட இருக்கும் போது நல்லவனா இருக்கணும்னு நெனைக்குறேன்
காஜல்: அதான் அடிக்கடி என்ன விட்டுட்டு போயிறீங்களா?

3. அனுபம் கேர் : அஜ்ஜு (அக்‌ஷய்) அவன யாராலயும் பிடிக்க முடியாதுன்னு சொல்லுவான்.. நாளைக்கு நீங்க அவன பிடிக்கும் போது அவன் முகம் எப்படி இருக்கும்னு நெனச்சு பாத்தா எனக்கு சிரிப்பா வருது..

4. சி.பி.ஐ ஹெட் : நிறைய கட்சி ஆட்கள் கிட்ட இவங்க கைவரிச்சைய காட்டிருக்காங்க..
மனோஜ் பாஜ்பாய் : எந்த கட்சி அரசியல்வாதிங்கலாம் இவன்ட்ட மாட்டிருக்காங்க?
சிபிஐ ஹெட் : எந்த கட்சி அரசியல்வாதி மாட்டலனு கேளு.. எல்லா கட்சிலயும் கறுப்பு பணம் வச்சிருக்குறவன் தான இருக்கான்?

5. அக்‌ஷய் : நீ தமிழா?
இண்டர்வியூவிற்கு வந்தவன் : ஆமா சார்..
அக்‌ஷய் : சிபிஐ காத்து இல்லடா சுனாமி.. எவனா இருந்தாலும் அலேக்.. தட்ஸ் ஆல்.. தூக்கிடுவோம்..
தமிழன் : தலைவா நீங்க ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..

நம்புங்கள் ஒரு எழுத்து பிசகாமல் அப்படியே வரும் வசனம் இது. இந்த காட்சியில் அக்‌ஷய் பேசியிருக்கும் தமிழ் சிரிப்பை வரவழைத்தாலும் நல்ல ரசிக்கத்தகுந்த ஹீரோயிஸ காட்சி இது.. மூன்று பாஷைகளில் அக்‌ஷய் பேசும் இந்த காட்சி அக்‌ஷய் ரசிகர்களை விசில் அடிக்க வைத்திருக்கும், தலைவர் பணக்காரன் படத்தில் பேசியதை போல. 

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு விசயங்கள் இருக்கின்றன. முதலில் உடை. அனைவரும் 1980களின் மாடல் ஆடைகளை தான் அணிந்து வருகிறார்கள். அதிலும் காஜல் அகர்வால்.. போதும், ஏற்கனவே தேவைக்கு அதிகமாக புகழந்து விட்டேன்.. அடுத்தது கலை. அந்தக்காலத்து டப்பா வேன், அகலமான நூறு ரூபாய், வெறிச்சோடியிருக்கும் டில்லி, பம்பாயின் பெருஞ்சாலைகள், ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் வெஸ்பா, பஜாஜ் ஸ்கூட்டர்கள், அம்பாஸிடர், ப்ரீமியர் பத்மினி, மாருதி 800 போன்ற கற்கால வாகனங்கள் என ஒவ்வொன்றும் நம் கண் முன் 1987 கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு நொடி நாமும் 1987ல் இந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு பெர்ஃபெக்சன் உண்டு..


படத்தில் பின்னணிக்கு ஒன்று, பாடல்களுக்கு இரண்டு என்று மொத்தம் மூன்று இசையமைப்பாளர்கள். பாடல்கள் எல்லாம் மெலடி ரகம் என்றாலும் அழகாக கவிதை போல் எடுத்திருக்கிறார்கள். அக்‌ஷய் & காஜலின் காதல் வரலாற்றை சொல்லும் பாடலில், கீழே விழும் காஜலை அவர் தாங்கிப்பிடித்தவுடன் காதல் வருவது போல் காட்டியிருப்பதை தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்தின் வேகத்தையும் காட்சியின் எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. பின்னணி இசை கூட 1980களின் பாணி போல் தான் இருப்பது கதையோடு மிகவும் ஒன்றச்செய்து விடுகிறது.


1987ல் நடந்த உண்மை சம்பவத்திற்கும் இந்த படத்திற்கு இருக்கும் ஒரே சம்பந்தம் 26 என்னும் எண் மட்டும் தான். மற்றபடி இது ஒரு வழக்கமான, திருடன் போலீஸ் படம் தான். திருடன் ஹீரோவாக இருந்தாலும் அவனுக்கு எந்த ஞாயமும் கற்பிக்கப்படவில்லை, ஒரே ஒரு காட்சியில், “அவன் சிபிஐ வேலைக்கு போகணும்னு நெனச்சு இண்டர்வியூவில் கிடைக்காமல் போயிருச்சி. அவனுக்கு சிபிஐ ஆகணும்னு ஆச” என்கிறார் அனுபம் கேர்.. மற்றபடி அவரை ஞாயப்படுத்த எந்த காட்சியும் கிடையாது. "A Wednesday" போல் இதிலும் போலிசுக்கு எல்லாமும் தெரிந்தாலும் கடைசியில் கோட்டை விட்டுவிடுகிறார். 

மொத்தத்தில் A Wednesday போல் எந்த ஒரு முக்கிய பிரச்சனையை பேசா விட்டாலும், நீரஜ் பாண்டே, நல்ல ஒரு கமெர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். காட்சிகளில் அவரின் பெர்ஃபெக்சன், விறுவிறுப்பான திரைக்கதை என செமத்தியாக விளையாண்டிருக்கிறார். குத்துப்பாட்டு, கவர்ச்சி நடனம், 30,40 பேர் பறக்கும் சண்டை என எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்க வேண்டுமா? சப்டைட்டிலுடன் “Special 26” பாருங்கள்.. நான் மூன்றாவது முறை பார்க்கப்போகிறேன்..


தொடர்புள்ள இந்த பதிவுகளையும் நீங்கள் வாசிக்கலாம் & ரசிக்கலாம்..

தம்மாருகம் - ஒலகம் பேசாம அழிஞ்சே போயிருக்கலாம்..

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

 

18 comments

  1. விமர்சனத்தைப் பார்த்தால் 'தல'க்கு ஏற்ற கதை மாதிரி தெரியுது...!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ‘தல’ நடித்தால் சூப்பராக இருக்கும்.. இந்த படத்தை தமிழில் எடுக்க்வும் ரீ மேக் ரைட்ஸுக்கு பேரம் நடந்து வருவதாக சொன்னார்கள்.. நீங்களும் தல ரசிகரா அண்ணே?

      Delete
  2. அனுபம்கெர் குடும்ப காமடி பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ! ! வருஷம் தவறாமல் குழந்தை பெற்று, அடுத்த அசைன்மெண்ட்-க்கு கிளம்பும் போது வயிற்றில் இருக்கும் சிசுவையும் கவனித்துக் கொள்ள சொல்வாரே ! !

    ReplyDelete
    Replies
    1. சப் டைட்டில் இல்லாததால் எனக்கு அந்த காட்சி சரியாக புரியவில்லை.. ஆனால் தன் குடும்பத்தை அக்‌ஷயிடம் அறிமுகப்படுத்தும் போது, அக்‌ஷய் நக்கலாக “அவ்வளவு தானா?” என்பார்.. உடனே அனுபம் கேர், “எங்க காலத்துலலாம் டிவி இல்லப்பா, வேற என்ன செய்யுறது?” என்பார்.. இந்த காட்சி இப்போதும் ஞாபகம் இருக்கிறது

      Delete
  3. / டேஷ் என்னும் அந்த கருமத்தில்/ இந்த டாஷில் காதலை நிரப்பவா அல்லது வேறு ஏதேனும் ஒரு கருமத்தையும் சேர்த்து நிரப்பவா..

    த்ரீ இடியட்ஸ் படத்துக்குப் பின் உடனே பார்த்து விட வேண்டும் என்று நான் நினைக்கும் படம் special 26. ஆதிபகவனின் ஆரம்பக் காட்சி போலி சி.பி.யை ரெய்டில் இருந்து தான் தொடங்கும், எங்கே படம் அதே போல் இருந்து விடுமோ என்று நினைத்தேன், நல்ல வேலை அப்படி 'இல்லை...

    நல்ல விமர்சனம், விரைவில் பார்த்து விடுகிறேன், எங்கும் நடக்கவில்லை என்று நினைக்கிறன்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த டாஷில் காதலை நிரப்பவா அல்லது வேறு ஏதேனும் ஒரு கருமத்தையும் சேர்த்து நிரப்பவா.. // டேஷ் என்று சொன்னதே வாசிப்பவர் தன் கறபனைக்கு ஏற்றவாறு எதைவேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளத்தான்..
      //ஆதிபகவனின் ஆரம்பக் காட்சி போலி சி.பி.யை ரெய்டில் இருந்து தான் தொடங்கும், எங்கே படம் அதே போல் இருந்து விடுமோ என்று நினைத்தேன், நல்ல வேலை அப்படி 'இல்லை...// ஆதிபகவன் அவ்ளோ வொர்ஸ்ட்டா நண்பா?
      // எங்கும் நடக்கவில்லை என்று நினைக்கிறன். // என்ன நடக்கவில்லைனு நினைக்குறீங்க?

      Delete
  4. அருமை ராம்குமார்.
    பொதுவாக திரைப்படங்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் - அடடா, அட்டஹாசம்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நண்பர்களே,
    ராம்குமாரின் எழுத்து நடை அபாரம், படித்துப் பாருங்கள்.
    வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. நீங்கள் எனக்கு ஒரு வைட்டமின் டானிக், குளுகோஸ் மாதிரி.. உங்கள் கமெண்ட்டை பார்த்ததும் அடுத்த பதிவு எழுத இன்னும் ஆசை வருகிறது.. நன்றி சார், எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல..

      Delete
  5. Your articles seems to be copied from somewhere else......Good copy and pasting work....KEEP IT UP

    ReplyDelete
    Replies
    1. Excellent boss, really you are awesome.... Cho chweet..... I'm expecting some interesting words about this post and author...

      #யோவ் ராம்குமார்.. பதினோரு பேர் கொண்ட குழு இருபாயிங்க போல

      Delete
    2. திரு அனானி அவர்களே என் பதிவு எங்கிருந்து திருடப்பட்டது என்று சொன்னீர்கள் என்றால் இங்கு என்னை வாழ்த்துபவர்களையும் தூற்றுபவர்களையும் அங்கே அனுப்பி வைக்கிறேன்.. கொஞ்சம் எங்கிருந்து காப்பியடித்தது என்று அந்த சுட்டியை பகிருங்கள்.. இல்லையென்றால் உங்கள் கமெண்ட் அடுத்த 24 மணிநேரத்தில் தூக்கப்படும்..
      @சீனு : நண்பா இவைங்க 11 பேர் இல்ல, அத விட மோசமான ஸ்லீப்பர் செல்ஸ்னு நினைக்குறேன்.. பாப்போம் என்ன பண்ணுறாய்ங்கன்னு.. என் பதிவுகள் காப்பியடிக்கப்பட்டன என்று சொல்கிறாரே, அந்த லின்க் எல்லாம் வரல, கேவலமா ஒரு கேள்வி கேட்டுட்டு தான் விடுவேன் இந்த அனானிய..

      Delete
    3. 24 மணி நேரத்திற்கு பின்னும் பதில் சொல்லாத அனானிக்காக இந்த கேள்வி - உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? அதாவது நீங்கள் பெற்றெடுத்த குழந்தை..

      Delete
  6. படம் முன்னமே வந்துவிட்டதே. நான் படம் பார்த்தேன். ரொம்ப வருத்தமா இருக்கு தமிழ் படங்கள் இப்படி வரமாட்டேன்கிறதே தெளிவா நல்ல விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. ஆமா இந்த மாத ஆரம்பத்தில் வந்த படம்.. நான் மிக சமீபத்தில் தான் பார்த்தேன்.. //ரொம்ப வருத்தமா இருக்கு தமிழ் படங்கள் இப்படி வரமாட்டேன்கிறதே // ஹா ஹா நமக்கு இருக்கும் நம்பிக்கையும் ஆசையும் நம் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வரவில்லையே?

      Delete
  7. அனானி means அரவாணீ யா?.leave that idiots ramkumar. wonderful review

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்.. அரவாணிகளை இந்த மாதிரி அரைவேக்காடுகளோடு ஒப்பிட்டு அரவாணிகளை அசிங்கப்படுத்த வேண்டாம்...

      Delete
  8. அண்ணா!!இந்த விமர்சனத்தை சென்ற வருடம் திருப்பதி மலைமேல் ஏறிக்கொண்டிருக்கும்போது படித்து,சென்னை திரும்பியவுடன் இதன் ஒரிஜினல் கேசட்டை வாங்கி மிக மிக ஆர்வத்துடன் பார்த்தேன்.என்னை ஏமாற்றமால் இருமுறை தொடர்ந்து பார்க்கவைத்தது இந்த திரைப்படம்.ஒரு சிலரின் விமர்சனங்களில்,ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பார்கள்.நானும் ஆர்வத்துடன் சென்று மண்டை காய்ந்து வந்ததுன்டு.ஆனால் தங்கள் விமர்சனம்,மிகத்தரம்வாய்ந்ததாகவும் நடுநிலையாகவும் இருக்கிறது.அப்புறம் அந்த கோமாளி அனானியின் கமெண்டை பார்த்தாதும் காண்டான எனக்கு அதற்கு தங்கள் கேள்வியைப்பார்த்தும் சில்லென்று இருந்தது.மீண்டும் நீங்கள் அந்த டேஷ்-ல் விழுந்தாலும் எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த டேஷில் விழாமலும் இருக்க மாட்டேன்.. எழுதாமலும் இருக்க மாட்டேன் :P

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One