கலர்க்காதல்...

Monday, December 17, 2012

கடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு என்ன வேணும் மகளே?”னு கேட்டார்னா, செவுட்டுல ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்க புடுங்குற மாதிரி வஞ்சிட்டு, “என் புள்ளையவாச்சும் வெள்ளையா படைச்சித்தொல” என்று கேட்பேன்.. என் குடும்பத்தில், நான் ஃபோட்டோவில் பார்த்தா என் தாத்தாவின் தாத்தா தொடங்கி என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தம்பி, அக்கா, நான் என எல்லாருமே அப்படி ஒரு கலரு.. படிக்கும் போது பிள்ளைகளுக்கு பொட்டு அழிந்துவிட்டால், என்னை தான் லேசாக விரலால் தொட்டு பொட்டு வைத்து கிண்டல் செய்வார்கள். ஆம்பள பயலுக கருப்பா இருந்து யாராவது அவன, “டே கருவாப்பயலே”னு கூப்பிட்டா அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லி அவர்களை கிண்டலடித்து சிரித்துக்கொண்டே சென்று விடுவான். ஆனா பொட்டச்சியா பொறந்து தொலச்சிட்டேனே?!

வெவரம் தெரியும் வரை எனக்கு கருப்பு செவப்பு பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது, பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு இருந்தவ கிட்ட என்னமோ பேசிக்கொண்டிருந்தேன். ”ஏ கருப்பி அங்க என்னடீ கதையடிக்குற?” முகம் பார்க்கும் கண்ணாடி சைஸில் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த தீபா டீச்சர் என் மேல் சாப்பீஸை வீசி எறிந்து கேட்டாள். அன்று முதல் என் பெயர் ‘கருப்பி’ ஆகிவிட்டது. புது வகுப்பிற்கு செல்லும் போது டீச்சர் ஒவ்வொருத்தரையா எந்திரிச்சி நின்னு அவங்க பேர சொல்ல சொல்லும் போது, நான் எந்திரிச்ச ஒடனே மொத்த வகுப்பும் என் பேர “கருப்பி” என்று உச்சரிக்கும். டீச்சர் மொதக்கொண்டு எல்லாரும் சிரித்து விடுவார்கள். நானும் அவர்களோடு கஷ்டப்பட்டு சிரிப்பேன். ஆனால் மழையில் நிரம்பிய தொட்டி போல் கண்ணீர் இரண்டு கண்களையும் நிரப்பியிருக்கும். 

நாளடைவில் என் பெயரை யாராவது கேட்டால் கூட, கருப்பி என்று சொல்லத்தான் வாய் வரும். பின் ஒரு சில நொடிகள் சுதாரித்து, “சுந்தரி” என்பேன். என்னை கருப்பி என்று அழைக்காத ஒரே இடம் என் வீடு தான். ஏனென்றால் என் வீட்டில் ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சும் கருப்பு.. யார் அதிக கருப்பு என்று எங்களுக்குள்ளேயே விளையாட்டாக போட்டி வைத்துக்கொள்வோம். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே ஒரு வித கூச்சம், பயம் எல்லாம் தொற்றிக்கொள்ளும். சில சமயங்களில் என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் போது நினைப்பேன், ‘நமக்கு என்ன குறைச்சல்?’ சரியான உயரம், சீரான தேவையான வளமான வளைவுகள், இடுப்பை தாண்டியும் நீண்டிருக்கும் முடி, உருண்டையான கண்கள், ஆந்திர மூக்கு, வரிசையாக அமைந்திருக்கும் பற்கள், கொஞ்சமே பூசியது போன்ற உடல்வாகு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே பின்னிருந்து அம்மாவின் குரல் ஒலிக்கும், “நீ அழகாத்தான்டீ இருக்க, ஆனா கருப்பாவும் இருக்கியே?”

எனக்கு பல நாட்களாக புரியாத விசயம் இது தான். கருப்பாக இருப்பவர்கள் அழகாக இருக்க மாட்டார்களா? அல்லது அழகாக இருப்பவர்கள் கருப்பாக இருந்தால் அவர்களை அழகு என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்னிடமும் சிலர், “நீ கருப்பா இருந்தாலும் கலையா இருக்க” என்பார்கள். அவர்கள் சொல்வதன் அர்த்தம், “நீ கலையா இருந்தாலும் கருப்பு தான்டீ”.. எனக்கு புரியவேயில்லை. நானும் கருப்பாக அழகாக யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப்பார்த்தேன். சினிமாவில் கூட சில கருப்பான நாயகிகள் ஜெயித்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் கருப்பு என்றே நம்ப முடியாத அந்த நாயகிகளும் சினிமாவில் சிகப்பாக மேக்-அப் போட்டு தான் ஜெயித்திருக்கிறார்கள். என் கண்ணுக்கு கருப்பாக அழகாக தெரிந்த பல பெண்களையும் என் வீட்டில் கூட யாரும் அழகு என்று ஒத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கும் சிவப்பு தான் அழகு.

“கருப்பி” “கருவாச்சி” என்கிற காரணப்பெயரோடே பள்ளி படிப்பை தாண்டி இப்போது மூன்று ஆண்டுகளாக இதோ இந்த தீப்பெட்டி ஆபிஸீல் தான் வேலை பார்க்கிறேன். கணக்கு வழக்கு பார்த்துக்கொள்ளும் வேலை. யாராவது என் வேலை சம்பந்தமாக ஆபிஸிற்கு வந்து என்னை விசாரித்தால் உடன் பணிபுரிவோர் என்னை அடையாளம் சொல்வது, “அந்தா கருப்பா ஒரு பொண்ணு ஃபேனுக்கு கீழ ஒக்காந்திருக்குல, அது தான்” என்று என் அடையாளமாகவே ஆகிப்போனது கருப்பு கலர். பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து சென்ற மாதம் வரை என் வாழ்வில் 4 காதல்கள் வந்துபோயிருக்கின்றன. எட்டாம் வகுப்பில் வந்த முதல் காதல் தான் நான் வெளிப்படுத்திய கடைசி காதல். “ஒம் மொகறைய கண்ணாடி பாத்திருக்கியா?” என்று விழுந்து விழுந்து சிரித்தான் என் காதலை சொன்னதும் அவன். ஒரு ஆணிடம் இருந்து இந்த அளவு வெளிப்படையாக அசிங்கப்பட விரும்பாததால் என் வாழ்வில் வந்த பிற காதல்கள் அனைத்தும் நான் விழித்துக்கொண்டே காணும் கலைந்து போன கனவுகளாக என்னுள்ளேயே தோன்றி என்னுள்ளேயே புதைந்து போயின..

’புள்ளைக்கு இருவது வயசு ஆகிருச்சி, எப்ப கல்யாணம் பண்ணுறது?’ என்று சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், என் வீட்டில் இருப்பவர்கள் என்று பலரும் பேசி ஒரு வழியாக எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். மனதிற்குள் குறுகுறுப்பான பயமா சந்தோசமா என்று சொல்ல முடியாத ஒரு எண்ணம் ஏற்பட்டது கல்யாண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து. ஆனால் அந்த குறுகுறுப்பு கொஞ்ச கொஞ்சமாய் சந்தோசத்தை குறைத்து முழு பயமாய் ஒரு பெரிய பய பாறாங்கல்லாய என் மனதில் உருண்டு கொண்டே இருந்தது, வந்த மாப்பிள்ளைமார்கள் எல்லாம் என்னை நிராகரித்ததால். காரணம் சொல்லவும் வேண்டுமா? ஒரே காரணம். என் தன்னம்பிக்கையை குறைக்கும், என் மீது எனக்கே வெறுப்பை ஏற்படுத்தும் அந்த ஒரே காரணம்.

இப்போதெல்லாம் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பும் பயமும் தான் மனதை ஆக்கிரமிக்கிறது. டிவியில் வரும் முகத்தை சிவப்பாக்கும் கிரீம்கள் நெருங்கிய தோழிகள் ஆயின. பவுடரை பங்குனிப்பொங்கலுக்கு சுவரில் வெள்ளையடிப்பது போல் பூச ஆரம்பித்தேன். இப்படி கண்டதையும் பூசும் போது எனக்கே என் முகம் அடையாளம் தெரியாமல் பிடிக்காமல் போனாலும், லேசாக சிவப்பாக தெரிந்தது. ஆனால் அந்த சிவப்பு எல்லாம் அரை மணி நேரம் கூட இருப்பதில்லை. முகத்தில் எதுவுமே பூசாமல் இருந்த போது இருந்த நிம்மதி இப்போது இல்லை. அடிக்கடி கைப்பையில் வைத்திருக்கும் கண்ணாடியை பார்த்துக்கொள்கிறேன், பவுடரை அப்பிக்கொள்கிறேன், ஒரு நாளைக்கு 4,5 முறை கிரீம் தடவுகிறேன். கருப்பாக இருக்கும் என் அம்மாவுக்கு என் அப்பா கிடைத்திருப்பது போல் எனக்கு யாராவது கிடைப்பார்கள் என்று காத்திருக்கவெல்லாம் எனக்கு பொறுமையோ நம்பிக்கையோ இல்லை. உடன் வேலை செய்யும் என் போன்ற சில கருப்பிகள் சொல்வதுபடி பியூட்டி பார்லருக்கு போவதற்கு என்னிடம் காசும் இல்லை, வெக்கமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் ‘நாம் அழகாய்த்தானே இருக்கிறோம்’ என்று கண்ணாடியை பார்த்து நினைத்த நான் இப்போதெல்லாம், ‘நான் ஏன் இவ்வளவு கருப்பாக அசிங்கமாக இருக்கிறேன்?’ என்று எண்ண ஆரம்பித்துவிட்டேன். அப்போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது.

என் தாத்தாவின் வழியில் என் தூரத்து உறவினர் ஒருவர் என்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்வதாக தகவல் வந்தது. ”பொண்ணு பாத்துட்டு போயி மூனு மாசம் கழிச்சி சொல்லிவுடுறாய்ங்க பாரு” என்று அம்மா குறைபட்டுக்கொண்டார். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க வந்தார்களா என்று எனக்கு சந்தேகமாகவே இருந்தது. இதுவரை வந்த இருபத்தி சொச்சம் பேரில் யாரை தான் ஞாபகம் வைத்துக்கொள்வது? ஆனாலும் மனதில் ஒரு சந்தோசம், கருப்பாக இருந்தாலும் கல்யாணம் ஆகப்போகிறதே என்று. இனிமேல் கருப்பு என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நினைத்து பல நாட்கள் கழித்து அன்று தான் நிம்மதியாக தூங்க போனேன், இன்னும் சில நாட்களில் என் நிம்மதி மொத்தமாக படுகுழியில் விழப்போகிறது என்பதை அறியாமல்.

என் அக்கா கல்யாணத்திற்கு என் அப்பா ஊரில் இருந்த பாதி பேரிடம் வட்டியை பற்றிய கவலையே இல்லாமல் வட்டிக்கு வாங்கியிருந்தார். திருப்பி கொடுப்பவன் தானே வட்டியை பற்றி கவலைப்பட வேண்டும்? ’வட்டிக்குலாம் கவலப்பட ஆரம்பிச்சா, தெனப்படி பொழப்பு நடக்காது. நாண்டுக்கிட்டு தான் சாகணும்” - இது அப்பாவின் வட்டியிஸம் தத்துவம். அதனால் என் கல்யாணத்திற்காக, தெரியாதவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசி கடன் வாங்க ஆரம்பித்தார். சில இடங்களில் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு எல்லாம் பிச்சை எடுத்ததை நானே பார்த்தேன். 

ஒரு வழியாக காசை தேற்றி, அம்மாவிடம் தப்பித்தவறி இன்னமும் ஒட்டியிருக்கும் கம்மல், மூக்குத்தியை அழித்து செய்து எனக்கு ஐந்து பவுன் போட்டு, ரெண்டாயிரம் ரூபாய்க்கு சத்திரம் பிடித்து, என் முதலாளியின் விசிடிங் கார்டு அளவுக்கு பத்திரிக்கை அடித்து, மொய் வைக்க கூட வக்கில்லாத சொந்தக்காரர்களை மறக்காமல் அழைத்து, பந்திக்கு வெளியில் காத்திருக்கும் நாய்கள் மட்டுமல்லாமல் சில சொந்தக்காரர்கள் கூட உணவு இல்லாமல், வாயில் வாழ்த்தி வாய்க்குள் சபித்துவிட்டு சென்றிருந்தார்கள். கல்யாணம் இனிதே முடிந்தது. முதலிரவு. விளக்கை அணைத்துவிட்டால் கருப்பென்ன? சிகப்பென்ன?

அந்த முதலிரவு தான் என் புருஷன் என்னை எந்த வித மனக்காயமும் ஏற்படாமல் தொட்ட முதல் இரவு. அதற்கு அடுத்த நாட்களில் எல்லாம் கத்துவது, பாத்திரங்கள் பறப்பது, அடி, உதை என்று படிப்படியாக, ஒரு புருஷனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்தார் அவர். “என் வாழ்க்கையிலேயே நான் கூறு கெட்டத்தனமா பண்ணுன ஒரே வெசயம் ஒன்ன கல்யாணம் பண்ணுனது தான்டீ. இப்படி ஒரு கருத்த முண்டைய கல்யாணம் பண்ணி வச்சி என் வாழ்க்கைய பாழாக்கிட்டாய்ங்க” - ஒரு நாளில் இதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள் வேறு வேறு மாதிரி வருவதுண்டு அவரிடம். ஆனால் உடல் சூட்டை தணிக்கும் போது மட்டும் கருப்பு வெளுப்பெல்லாம் தெரியாதே? வெறும் மிருகத்தனமான இயந்திரத்தனமான கூடல். தன் சூடு தணிந்தவுடன் பேசாமல் எழுந்து போய்விடும் அக்கறையான கணவன். எனக்கு அவன் என்னுள் சாக்கடையை பாய்ச்சியது போல் இருக்கும். ”நான் கருப்புன்னு மொதையே தெரியும்ல? அப்புறம் ஏன் என்ன கல்யாணம் செஞ்சீங்க?” என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன். மறுமுறை அப்படி கேட்கவே அஞ்சும் அளவுக்கு அடி விழுந்தது.

என் கலர் பிடிக்காது. அதனால் என்னை பிடிக்காது, என் சமையல் பிடிக்காது, நான் உள்ளாடை அணிந்திருந்தால் பிடிக்காது, நன்றாக ஆடை உடுத்தியிருந்தாலும் பிடிக்கவே பிடிக்காது, என் வீட்டிலிருந்து யாராவது வந்திருந்தால் அவர்கள் முன்பே என் கண்ணத்தில் அவர் விரல் தடம் பதியும். அவர் கால்கள் தரையில் பதிந்து நடந்ததை விட என் இடுப்பில் பதிந்ததே அதிகம். கல்யாணம் ஆன இந்த 7 மாதத்தில் இது வரை நான் என் வீட்டிற்கு சென்றதே இல்லை. இந்த நிலையில் நரகத்திற்கு போனால் கூட சொர்க்கமாக இருக்கும் எனக்கு. கல்யாணம் ஆன புதிதில் நான் கொண்டு வந்திருந்த பவுடரும், சிவப்பழகு கிரீமும் இன்னமும் புதிதாக மூடி திறக்காமல் இருக்கின்றன. என்னை இது வரை எங்கேயும் அழைத்து சென்றதில்லை. “ஒன்ன வெளில கூட்டிட்டு போயி ‘இந்த கருவாச்சி தான் எம் பொண்டாட்டி’னு ஊருக்கு காமிக்கவா?” என்று நக்கல் வேறு. தனிக்குடித்தனம் என்பதால் என் வயதான மாமியாராலும் இங்கு நடப்பதை அறிந்து கொண்டு தன் மகனை தட்டிக்கேட்க இயலாது. நானும் அவரிடம் எதையும் சொன்னதில்லை. அவர் நம்பிக்கை தன் பையன் நன்றாக குடும்பம் நடத்துகிறான் என்று. அதைக்கெடுக்க எனக்கும் விருப்பமில்லை. வயிற்றில் மிதி விழுந்த நாட்களில் கூட மிருகத்தனமான படுக்கை தான். படுக்கையில் உருண்டதும் கிளம்பி வெளியில் போய்விடுவது. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கருணை அக்கறை எதுவுமே கிடையாது. என் உடம்பிற்குள் அசிங்கத்தை ஏற்றிவிட்டு போவதாகவே ஒவ்வொரு முறையும் அருவெறுப்பாக இருக்கும்.

ஒரு பெண்ணாக அதுவும் கருப்பாக பிறந்து கல்யாணம் வரை ஊரே கேலி கிண்டல் பேசும் போது பெரிதாக வருத்தப்படுவது எல்லாம் பெரிய விசயமே இல்லை. கல்யாணத்திற்கு பின் புருஷன் என்னும் அந்த ஒருவன் நம்மை ஒரு உயிர் உள்ள பொருளாக கூட மதிக்காமல் இருப்பது தான் வெளியே சொல்ல முடியாத பெரிய கொடுமை. சைக்கிளை தினமும் அக்கறையாக சுத்தமாக துடைக்கும் அவருக்கு என் மேல் அதில் துளி பங்கு கூட அக்கறை கிடையாது என்று நினைக்கும் போது அழுகை முட்டிக்கொண்டு வரும். ஆனால் அழ முடியாது. கண்ணீரும் வராது. ஒரு நாளைக்கு ஒரு முறை அழுதால் தானே கண்ணீர் வரும். நாள் முழுதும் அழுதால்? நான் அவரிடம் கேட்க நினைப்பதெல்லாம், ’என்னோடு படுக்கையில் உருளும் போதெல்லாம் நான் கருப்பு என்பது தெரியவில்லையா?’

அவர் வேலைக்கு போயிருந்த ஒரு நாளில் என்னை பார்க்க வந்திருந்த அம்மாவிடம் சொன்னேன், “கொஞ்ச நாளா தல சுத்தி மயக்கம் வர மாதிரியே இருக்குமா”

“குளிச்சி எத்தன நாள்டீ ஆகுது?”

“தெரிலம்மா.. ரொம்ப நாள் ஆகுதுன்னு நெனைக்குறேன்”

அவர் வருவதற்குள் அவசர அவசரமாக ஒரு டாக்டரிடம் அழைத்து போய் உறுதிபடுத்திக்கொண்டார். ஆம் அவர் என்றோ பாய்ச்சிய சாக்கடை இப்போது புழுவைத்திருக்கிறது. ஆனாலும் புழு என்று என்னால் அதை விட்டுவிட முடியவில்லையே.. சாக்கடையில் உருவானாலும் அது என் உயிர் கொண்டு வளரும் புழு அல்லவா? அவர் வரும் வரை என் அம்மா காத்திருந்தார். அவர் என் அம்மாவையும் என்னையும் முறைத்துக்கொண்டே வந்தார். என் கண்ணம் அவர் கொடுக்கவிருக்கும் அறைக்காக தயாரானது.

“மாப்ள, சுந்தரி வயித்துப்புள்ளையா இருக்கா”

“அதுக்கு உங்க மவளுக்கு ஏழு மாசம் ஆகிருக்கு? அவ அவ வந்த ஒரே மாசத்துல வயித்த தள்ளிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிராளுக. இந்த கருத்த முண்டைக்கு இத்தன நாள் ஆகிருக்கு”

“என்ன பண்ணுறது மாப்ள? கடவுள் மனசு வைக்கணும்ல?”

“இப்ப என்ன செய்யணும் நானு? அவளலாம் அனுப்ப முடியாது. நான் பாத்துக்கிறேன். எட்டாவது மாசத்துலயோ ஒம்பதாவது மாசத்துலயோ கூட்டிட்டு போங்க. இப்பையே கூட்டிட்டு போணும்னா ஒங்க வீட்லயே இருந்திரட்டும்”. அவர் இப்படி சொன்னதும், அம்மா சரி என்று சொல்லி என்னை கூட்டி போய் விட மாட்டாளா என ஏங்கினேன்.

“இல்ல மாப்ள ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, நல்லா சப்புட்டு உடம்ப தேத்தணும்னு டாக்டரு சொல்லிருக்காரு”

“ஒங்க மவள நா ஒன்னும் கொன்னுற மாட்டேன். போறீங்களா?”. என்னை பார்த்து “ஏ இங்க என்னடீ வேடிக்க? உள்ள போடீ”. நான் அமைதியாக உள்ளே போனேன். என் அம்மா என்னை நினைத்து மிகவும் கலங்கியிருக்க வேண்டும். அவர் அழ ஆரம்பித்திருந்தார் நான் வீட்டின் உள்ளே செல்லும் போது. என் கஷ்டத்தை விட எனக்காக அம்மா கஷ்டப்படுவது தான் எனக்கு வருத்தம் தருவதாக இருந்தது. 

“புடிச்சி செஞ்சாலும் புடிக்காம செஞ்சாலும் புள்ள பொறக்கும் போல?” நக்கலாக கேட்டு என் அருகில் வந்தார் அவர். வழக்கம் போல மிருக்கத்தனமான அணைப்பு. அணைப்பு என்பதை விட மூச்சுத்திணற வைக்கும் இறுக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

“ஏங்க நான் உண்டாயிருக்கேங்க”

“அதுக்கு? ஒனக்கு சூடம் ஏத்தி கொண்டாடனுமா?”

“இல்லைங்க இனிமேல் கொஞ்சம் பாத்து பந்துஸ்தா இருக்கணுங்க”

“அதெல்லாம் எனக்கு தெரியும்டீ” சொல்லிக்கொண்டே மிருகம் சதையை கடித்து குதற ஆரம்பித்தது. தன் பசி தீர்ந்ததும் வழக்கம் போல சூடான ரெத்தத்தோடு சதையை அநாதையாக விட்டு போய்விட்டது.


எப்படா எட்டாவது மாதம் வரும், அம்மா என்னை அழைத்து செல்வார் என்று காத்திருந்தேன். வாழ்க்கை என்பது எவ்வளவு கொடூரம் என்பது உங்களை யாராவது சிரிக்க சொல்லி அடிக்கும் போது தான் தெரியும். என் புருஷன் எட்டாவது மாதத்தில் கூட என்னை விட்டிருக்க மாட்டார், மிருகத்தனத்துக்கு நடுவில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டதால் அந்த இடைஞ்சலை இரண்டு மாதங்களில் இறக்கி வைத்துவிட்டு வர தான் என்னை அனுப்பியிருந்தார்.

நிஜமாகவே நான் வீட்டில் இருந்த நாட்கள் தான் நான் மறந்து போன சந்தோஷங்களை எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்திய நாட்கள். இப்போது நான் சொன்ன முதல் வரியை படித்துப்பாருங்கள். கருப்பாக பிறந்து என் குழந்தை என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது என்பது தான் என் வேண்டுதல், விருப்பம் எல்லாம். எல்லோரையும் விட அழகான கண், கண்ணம், கூந்தல், மூக்கு, உதடு, மனசு பெற்றிருந்தாலும் நீங்கள் நிறத்தில் மற்றவரை விட கம்மியாக இருந்தால், உங்கள் நல்ல விசயங்கள், அழகு என எல்லாவற்றையுமே அசிங்கமாக பார்க்கும் இந்த உலகில் என் பிள்ளை சிகப்பாக பிறக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? கூனோ குருடோ ஆனால் சிகப்பாய் பிறந்து விட வேண்டும் அவனோ அவளோ. கிண்டல், கேலி, காதல் மறுப்பு, கல்யாண சோகம் என என் வாழ்வின் எல்லா மோசமான நிகழ்வுக்கும் இந்த நிறம் தானே காரணம்? என் பிள்ளைக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம் என தான் வேண்டுகிறேன். சிகப்பாக பிறந்தால் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். என் பிள்ளை தைரியமாக வளருவாள்/ன். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது யார் என்ன சொல்வார்களோ என கூனிக்குறுக வேண்டிய அவசியம் இருக்காது. அவன்/ள் அழகை போற்றும், மரியாதை கொடுக்கும் மனித ஜென்மமாய் மதிக்கும் கணவனோ மனைவியோ அமைவார்கள். யார் என்னை என்ன சமாதானம் செய்ய நினைத்தாலும் எனக்கு கருத்த பிள்ளை வேண்டாம். என் பிள்ளை சிவப்பாக பிறக்க வேண்டும்.

ஒரு மாசம் நல்ல சாப்பாடு, நிம்மதியான உறக்கம், சில நேரங்களில் திடுக் என்ற முழிப்பு, ஒரு சில கெட்ட கனவுகள், பக்கத்து வீட்டு கதைகளை ஒருவர் அறியாமல் இன்னொருவரிடம் குசுகுசுவென்று பேசுவது என்று கழிந்தது ஒரு மாசம். நான் பயத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தது.

“அம்மா” லேசான முனகலுடன் கீழே அமர்ந்துவிட்டேன். அப்பா வேகவேகமாக ஓடி ஒரு ஆட்டோவை பிடித்து அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அம்மாவுடன் அனுப்பி வைத்தார்.வலி என்னை அரை மயக்கத்தில் தள்ளியது.

“பேபி சரியான பொஷிசனில் இல்லை, சிஷேரியன் தான் பண்ணனும்”

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’ - நான் அரை மயக்கத்தில் அந்த வலியிலும் நினைத்துக்கொண்டிருந்தேன். நினைத்துக்கொண்டிருந்தேனா புலம்பிக்கொண்டிருந்தேனா என சரியாக தெரியவில்லை.

“எங்க கிட்ட அவ்வளவு காசு இல்லம்மா.. ” அம்மா அழுதுகொண்டிருப்பது அந்த மயக்கத்திலும் என் காதில் விழுந்தது.

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’

“எப்படியாவது அரேஞ்ச் பண்ணுங்கம்மா.. சீக்கிரம் ஆபரேசன் பண்ணனும்”

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’

”அய்யோ நான் என்ன பண்ணுறது? சரிம்மா நான் காசு எப்படியாவது பொரட்டிட்டு வாரேன். என் மகள பாத்துக்கோங்கமா” அப்பாவை தேடி அம்மா கிளம்புகிறாள் என்று நினைக்கிறேன். ஹ்ம் அவளுக்கு வேறு யாரை தெரியும்?

‘என் பிள்ள செகப்பா பொறக்கணும்’ - என்னை எதிலோ படுக்க வைத்து எங்கோ தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். ஒரு அரை இருட்டான அறை.

டாக்டர் என் காலை விரித்த நிலையில் நீட்டி உட்கார வைத்து என் பிடரியை பிடித்து தரையை நோக்கி அழுத்தி குனிய வைத்து என் முதுகில் தன் விரல்களால் எதையோ தேடினார். என்னால் முடியவில்லை. மூச்சு முட்ட ஆரம்பித்தது. ”அம்மா” சில நாட்களாக நான் மறந்திருந்த அழுகை மீண்டும் வந்தது. ஆனால் அழக்கூட முடியாத அளவுக்கு மூச்சு முட்டியது. டாக்டரின் விரல்கள் என் முதுகில் இருந்து விலகின. சில நொடிகளில் திடீரென என் நடுமுதுகில் யாரோ நன்கு காய்ச்சிய கத்தியை சொருகியது போன்ற வேதனை. துடிக்க கூட விடாமல் தன் முதுகை வளைந்த நிலையிலேயே என் பிடரியை அழுத்திய நிலையிலேயே வைத்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என் இடுப்பில் இருந்து கீழே பாதம் வரை மரத்துப்போக ஆரம்பித்தது. ஆனால் முதுகில் அந்த ஊசி குத்திய இடம் மட்டும் வின் வின் என தெரித்தது.

சில கத்திகள், ஒன்றிரண்டு கோடுகள், கொஞ்சம் ரத்தம்.. இரு கை கொண்டு டாக்டர் எதையோ வெளியில் எடுத்தார்கள். அதை பார்க்குமுன் கண் மூடிக்கொண்டது.

சில நேரத்தில் கண் விழித்தேன். இது வேறு அறை. கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. அருகில் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. முனகலா அழுகையா என தெரியவில்லை. மெதுவாக அந்த அறையின் வெளிச்சத்தை கண் உணர்ந்துகொண்டு நன்றாக கண்களை திறந்து பார்த்தேன். என் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள். இருவர் முகமும் அழுது வீங்கிப்போயிருந்தன. ஆனால் நான் கேட்ட விசும்பல் அவர்களுடையது அல்ல. நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் தரையில் உட்கார்ந்து கட்டிலில் நெற்றியை வைத்து என் வீட்டுக்காரர் அழுது கொண்டிருந்தார். என்ன ஏதுவென்று தெரியாமல் அம்மாவை பார்த்தேன்.

“ஒம்பிள்ள பொறக்கும் போதே செத்து பொறந்துருச்சிமா” என்று அழ ஆரம்பித்துவிட்டார். என் வீட்டுக்காரர் பெருங்குரலெடுத்து மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். 

என் கற்பனைகள் ஆசைகள் கனவுகள் எல்லாமே இதோ என் கட்டிலில் தலை சாய்த்து அழுதுகொண்டிருக்கும் இந்த ஆளால் தான் இப்படி மண்ணாகிவிட்டது என எண்ணி எனக்கும் அழுகை வந்தது. அழுகையை ஆரம்பித்துக்கொண்டே கேட்டேன், “என் பிள்ளை எங்கம்மா?”

அம்மா தலையை ஆட்டிக்கொண்டே வெளியில் சென்றார். சில நிமிடங்களில் நர்ஸ் என் குழந்தையை எடுத்து வந்தார். ’இந்த பாவ உலகு உனக்கு ஏற்றதல்ல’ என்று கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு கடவுள் தன்னிடமே மீண்டும் எடுத்துக்கொண்ட அந்த பெண் சிசு இதோ என் முன் பிண்டமாய், கருப்பு நிறத்தில்!!!

என் அழுகை நின்று விட்டது. கட்டிலில் தலை புதைத்து அழும் என் கணவனை பார்த்தேன். “அய்யோ என் புள்ள போயிருச்சே.. நான் என்ன செய்வேன்?” என்று கதறுகிறார்.

‘இப்போது கருப்பாக இருந்தாலும் இது உன் பிள்ளையா? உன் உயிரா? நான் கருப்பாக இருந்தாலும் என் அம்மா அப்பாவுக்கு நானும் அப்படித்தானே? உன் பிள்ளைக்கு ஒன்று என்றவுடன் உனக்கு வலிப்பது போல் தானே அன்று அவர்களுக்கு வலித்திருக்கும்? இன்று கருப்பா சிவப்பா என்று பார்க்காமல் உன் பிள்ளைக்காக அழுகிறாயே அன்று என் மேல் சிறு அக்கறை எடுத்திருந்தால், இன்று நீ இந்த பிள்ளையை சந்தோசமாக கொஞ்சியிருப்பாயே?’ என்றெல்லாம் கேட்டு அந்த ஆளை நான் இன்னும் வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. நடுங்கிக்கொண்டிருக்கும் என் விரல்களை மெதுவாக அவர் தலையில் வைத்து முடியை கோதிவிட்டு தலை தடவுகிறேன். என் கைகளை பற்றிக்கொண்டு மீண்டும் அழுகிறார்.

எனக்கு கண்களில் கண்ணீர் என்றாலும் உதட்டில் சிறு புன்னகை.. ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்கொண்டு வாழ்வது வரை ஒரு வித கூச்ச உணர்வுடன் தாழ்வு மனப்பாண்மையுடன் வாழ்ந்து, “இதை விட சாகுவதே சிறந்தது” என்கிற எண்ணம் ஏற்பட்டு தினம் தினம் செத்து பிழைப்பதற்கு பதில், என் மகள் பிறக்கும் போதே செத்திருப்பது அவளுக்கும் எனக்கும் கடவுள் கொடுத்திருக்கும் வரம் தான்.. 

என் கணவர் என்னை கட்டிக்கொண்டு அழுகிறார். முதல் முறையாக ஒரு மனிதனின் ஸ்பரிசத்தை உணர்கிறேன் நான். விருப்பப்பட்டு அவரை முதல் முறையாக நானும் கட்டி அணைக்கிறேன் பேரானந்தத்தோடு..

35 comments

 1. மனதை தொட்ட கருத்துள்ள கதை

  ReplyDelete
 2. பலரின் மன குமுறல் ! அருமை !

  ReplyDelete
 3. மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க ..பாராட்டுக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.Kalidoss Murugaiya :-)

   Delete
 4. excellent ..superb...cant explain my feelings completly.

  ReplyDelete
 5. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. பிச்சிபுடுவேன்....பிச்சி..! நேதாஜியா....? ஜோதிஜிய்யா...!ராம்கொமாரு!

   Delete
 6. அருமை. மனதை தொட்ட கதை!

  ---
  www.sudarvizhi.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுடர்விழி.. உங்கள் வலைதளத்தையும் படிக்கிறேன்

   Delete
 7. மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி jakeeersulekha :-)

   Delete
 8. @வீடு சுரேஸ் குமார் : அண்ணே எனக்கு கொஞ்சம் தேச பக்தி ஜாஸ்தி.. அதான்.. ஹி ஹி ஹி..
  மிக்க நன்றி ஜோதிஜி அண்ணே..

  ReplyDelete
 9. அருமை.
  வாழ்த்துகள் ராம்குமார்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இந்தக்கதையை நான் எழுதிய அன்றே படித்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.. வாழ்த்துக்களுக்கு நன்றி சார் :-)

   Delete
 10. மிருகத்த கொன்னு ஒம் புருசன மனுசனா மாத்துன சண்டையில வீரமரணம் அடைஞ்ச ஒம்மவள தெய்வமா ஏத்துக்கிட்டு இன்னொரு புள்ளய பெத்துக்கா.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கான வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சி சேக்காளி.. 2013 ஆகஸ்ட்ல தேதி குடுத்திருக்காரு டாக்டரு..

   Delete
 11. இந்த அளவுக்கு ஒரு கொடுமை நடக்கக்கூடும் என்று என்னால் நம்ப இயலவில்லை.
  கதை தானே என்று ஆறுதல் எனக்கே சொல்லிக்கொண்டேன்.

  வலைச்சரம் வழியே வந்தேன்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. கதை என்று மனசை தேற்ற வேண்டுமானால் சொல்லிக்கொள்லலாம்.. கொடுமைகள் வெளியில் தெரியாமல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.. அப்படி வெளியில் தெரியாத ஒரு வீட்டுக்குள் நான் எட்டிப்பார்த்து எழுதியது இது

   Delete
 12. வணக்கம் ராம் குமார் அவர்களே....என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை....அத்தனை அருமையான பதிவு இது.....உங்கள் பதிவுக்கு முதல் முறை...இத்தனை நாள் படிக்காமல் வீட்டு விட்டோம் என்று மனம் வருதபடுகிறது .......வாழ்த்துக்கள் ராம் குமார்

  ReplyDelete
  Replies
  1. அதான் இப்ப படிக்க ஆரம்பிச்சுட்டீங்களே? இனி வருத்தம் வேண்டாம்.. சந்தோஷமாக படியுங்கள்.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி SENTHIL KUMAR சார் :-)

   Delete
 13. எங்கோ சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறதை ,ஒரு பெண்ணின் மன உணர்வுகளை ஒரு ஆண் மகன் கண்முன் நடப்பது போல் இவ்வளவு இயல்பாக காட்டியமை குறித்து வாழ்த்துக்கள் ...என் முக நூல் பக்கத்தில் பகிர்வதில் உங்களுக்கு மறுப்பு இருக்காது எனக் கருதி பகிர்கிறேன் நன்றி....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. தாராளமாக பதியலாம் :-) அது எனக்கு தான் பெருமை..

   Delete

 14. செதுக்கீ..யிருக்கீங்க பாஸ்......

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி கிரேக்க பெண்ணே :-)

   Delete
 15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

  வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்

  ReplyDelete
 16. மனதைப் பிசைந்த கதை..இப்படி நடந்துகொண்டுதானே இருக்கிறது...

  ReplyDelete
 17. இன்று உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது! இங்கு சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_18.html அறிமுகம் செய்தவர் ரூபக் ராம். மிக அருமையான கதை! கண்கலங்க வைத்துவிட்டது. நன்றி!

  ReplyDelete
 18. அன்பு தோழா! வணக்கம்.
  சமூகத்தில் இன்னும் பல இடங்களில் பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டிருப்பது குறித்து நாம் அனைவரும் வெட்கப் பட வேண்டும். கட்டுரை மிக பிரமாதம்.

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One