அலுவல் விசயமாக பெங்களூருக்கும் ஆந்திராவின் "red corridor" என்று மைய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுள் ஒன்றான அனந்தபூருக்கும் (ரத்த சரித்திரம் படம் நிஜத்தில் நடந்தது இந்த மாவட்டத்தில் தான்) 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தேன்.. நல்ல சாப்பாடு, நல்ல குளிர், புது நண்பர்கள் என்று ஆனந்தமாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக எந்த புதுப்படமும் பார்க்காததால் சபரிமலைக்கு மாலை போட்ட குடிகாரன் போல் ஒரு மாதிரியாக இருந்தது.. பெங்களூரில் காலை 9மணிக்கு ஆரம்பிக்கும் மீட்டிங் மாலை 6 மணிக்கு மேல் தான் முடியும். 6மணிக்கு மேல் அந்த குளிரில் படம் பார்க்க வெளியில் செல்ல தைரியம் இல்லை. குளிரை விட அதிகம் பயமுறுத்தியவர்கள் கன்னட ஹீரோக்கள் தான். நானெல்லாம் அங்கு ஹீரோவாக போனால் சீக்கிரமே பன்ச் டயலாக், 100 பேர் பறக்கும் ஃபைட், அப்புறம் சி.எம் என வேகமாக முன்னேறிவிடலாம். இப்போது இருக்கும் ஹீரோக்கள் அவ்வளவு மொக்கை.. கன்னட நண்பர்கள் கூட தங்கள் ஹீரோக்களை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். பெங்களூரு பேரு தான் பெத்த பேரு, படம் ஒன்னும் தேராது என்று மூன்று நாள் கம்முனு கம்பெனி கொடுத்த ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இருந்துவிட்டு ஆந்திரம் புறப்பட்டோம், அங்கிருக்கும் எங்கள் கம்பெனியின் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் ஃபேக்டரியை காண..
எங்களது ஃபேக்டரி இருப்பது ஆந்திராவின் நக்ஸல்கள் அதிகம் காணப்படும் அனந்தபூர் மாவட்டத்தில். அனந்தபூர் கர்னூல் மாவட்ட எல்லையில் ஒரு சிறிய மலையின் மீது இருக்கிறது அந்த பெரிய ஃபேக்டரி.. மதியமே ஃபேக்டரியை பார்த்து முடித்துவிட்டோம். இரவு 11மணிக்கு தான் சென்னைக்கு ரயில். எல்லோரும் என்ன செய்யலாம் என்று விவாதித்த போது, “பேசாம எதாவது தெலுங்கு படத்துக்கு போலாம்யா, பொழுதாவது போகும்.. கலர் கலரா இருக்கும்”னு நான் தான் பிட்ட போட்டேன்.. ஒடனே எல்லாரும் ஓக்கே சொல்லி கிளம்பிட்டாய்ங்க. ஆனால் தெலுங்கு படமா அல்லது வேறு படமா என்பதை ஊருக்குள் சென்று முடிவு செய்யலாம் என்றார்கள். எங்கள் ஃபேக்டரிக்கு அருகில் இருக்கும் ஊர் தாடிபத்ரி. தாடிபத்ரி என்னும் அந்த ஊர் நம் தமிழ் சினிமாவில் ஆந்திரா என்றால் எப்படி
செட் போட்டு காட்டுவார்களோ அதே போல் இருந்தது. நீண்ட சிமிண்ட் சாலைகள்,
அதன் இருபக்கமும் சின்ன சின்ன கடைகள், கொஞ்சம் வீடுகள், சம்பந்தமே இல்லாமல்
சாலை நடுவே ரவுண்டானாகள், ஒன்றிரண்டு ராஜசேகர ரெட்டி சிலைகள், கடப்பா
கல்லில் தான் பாதி கடைகள் கட்டப்பட்டிருந்தன.. சிமிண்ட்டோ செங்கலோ எதுவும்
இல்லை. கிடைத்த வேஸ்ட் கடப்பா கல்லை வரிசையாக அடுக்கி ஒருவர் வீடே
கட்டியிருந்தார். அப்படி ஒரு ஊரில் மொத்தம் நாலு தியேட்டர். அவ்வளவு சின்ன ஊரில் கூட நான்கு தியேட்டர் இருப்பது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆந்திராவில் மக்களுக்கு சினிமா மேல் இருக்கும் மோகம் தான் தியேட்டர்களை இன்னும் மண்டபமாகவோ அரிசி மில்களாகவோ மாற்றாமல் இருக்கிறது.
ஆனால் நாங்கள் அங்கு இருந்த தேதி டிசம்பர் 20. மறுநாள் உலகம் அழிந்துவிடுமோ என்று என் மேதாவித்தனத்தின் மீதும் ஒரு சிறு பய விரிசல் இருந்தது. வீட்டிற்கு போய் விடலாம் என்று தயக்கம் இருந்தாலும், ஆந்திரம் வரை வந்து ஒரு தெலுங்கு படம் பார்க்கவில்லையென்றால் எப்படி? எனவும் யோசித்து, உலகம் அழிந்தாலும் பரவாயில்லை, படம் பார்த்துவிடலாம் என்று முடிவாகிவிட்டது. ஒரு தியேட்டரில் தலாஷ் இந்தி படம். நாங்கள் எல்லோரும் தமிழர்கள், சுட்டு போட்டாலும் இந்தி வராது. இன்னொரு தியேட்டரில் ரானா டகுபதியும் நயந்தாராவும் நடித்த ஆக்ஷன் படம் என்பது போஸ்டர் மூலம் தெரிந்தது. நம்ம பயலுக அந்த படத்தை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிருந்தாய்ங்க. மற்றொன்றில் பழைய நடிகை சிவரஞ்சினியின் கணவர் ஸ்ரீகாந்த நடித்த படம். போஸ்டரிலேயே இது மொக்கை படம் என்று தெலுங்கில் எழுதியிருப்பது போல் இருந்தது. நாலாவது தியேட்டரில் நாகர்ஜுனா நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கையில் சூலாயுதம் எல்லாம் தூக்கிக்கொண்டு கொடூரமாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அந்த படத்துக்கு தான் போக வேண்டும் என தீர்மானம் செய்து கொண்டேன். காரணம் - அனுஷ்கா..
என் கூட வந்த பயலுகளும் அனுஷ்கா என்றவுடன் நயந்தாரா படத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு, அந்த நாகர்ஜுனா படம் ஓடும் தியேட்டரை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படத்திற்கு பெயர் கூட தெரியாது. தியேட்டருக்கான வழியை சாலையில் போகும் சிலரிடம் போஸ்டரை காமித்து கேட்டோம். எங்களோடு ஒரு தமிழ்நாட்டு ரெட்டி பையன் இருந்ததால் அப்படி இப்படி தெலுங்கை சமாளித்து தியேட்டரை அடைந்து விட்டோம். 6.15க்கு தான் டிக்கெட் கொடுப்பார்கள். நாங்கள் தியேட்டரை அடைந்த போது மணி 5.30. தியேட்டருக்கு வெளியே, ஆம் அதே தான், ஒரு பானிபூரி கடை. ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டே அந்த கடைக்காரனிடம் கேட்டோம், “மூவி நேம்?”
அவன் தெலுங்கில் ஏதோ சொல்லி எங்களை ”ஏன்டா பேண்ட் சட்டையெல்லாம் போட்டு பந்தாவா வரிங்க, எழுத படிக்க தெரியாதாடா?” என்று கேட்பது போல் ஒரு மாதிரி பார்த்தான். நான் ரெட்டி நண்பனை பார்த்து, “யோவ் ஒனக்கு தெரிஞ்ச தெலுங்குல கேளுய்யா” என்றேன்.
“இல்லைங்க அவங்க தெலுங்கு வேற எங்க தெலுங்கு வேற, நான் எதாவது தப்பா பேசிற போறேன்” என்று கழண்டுவிட்டான். நான் மீண்டும் பானிபூரிகாரனை பார்த்து, “ப்ளீஸ்”, தியேட்டரை காட்டி “மூவி நேம்?” என்று கேட்டு கேள்வி கேட்பது போல் கையசைத்தேன்.
“தமாருகம்” என்றான். என்னோடு இருந்த இன்னொரு பச்சை தமிழன் “என்ன மிருகம்ங்க?” என்றான்.
”தம்மாருகம்” என்று சொல்லி பானிபூரிக்காரன் சாப்பிட்ட பிளேட்டுகளை கழுவப்போய் விட்டான்.
ஒலகம் அழியப்போகும் போது இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பாஷை தெரியாத ஊர்ல படம் பாக்கணுமா என்ற சிறிய சிந்தனை வந்தாலும் போஸ்டரில் இருந்த அனுஷ்கா அதையெல்லாம் மறக்கடித்து விட்டாள். எங்களோடு பானிபூரி சாப்பிட்ட ஒரு தெலுங்கன் கேட்டான், “தமிழியன்?”
“யா யா” ரெட்டி வேகமாக வந்தான். “நீ மூடு” என்பது போல அவனை முறைத்துவிட்டு, “யா, ஹவ் இஸ் திஸ் மூவி?” என்றேன்.
“வெரி குட். ஐ வாச்சிங் த்ரீ டைம்” என்று பெருமையாக சொன்னான். நல்ல படம் தான் செலெக்ட் பண்ணிருக்கோம், ஹிட்டு படம் தான் போல என்று தைரியமாக நண்பர்களுடன் தியேட்டருக்குள் சென்றோம். அந்த தியேட்டரை பார்க்கும் போது எனக்கு ஆண் பாவம், சுப்ரமணியபுரம் படங்களில் வரும் தியேட்டர் தான் ஞாபகம் வந்தது.. 1968ல் யாரோ ஒரு அமைச்சர் திறந்து வைத்ததை கல்வெட்டில் பதித்திருந்தார்கள். வெளியே வளைவான மாடம், கவர்ச்சியான பெண் சிலை, அருகில் மான் சிலை, வெளியில் இருந்து உள்ளே அவரை அனைத்தும் கடப்பா கல் தளம். சில 100நாள் ஷீல்டுகளில் பவன்கல்யாணும், சிரஞ்சீவியும், வெங்கடேஷும், ஜூனியர் என்.டி.ஆரும் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த தியேட்டரில் கூட இத்தனை படங்கள் 100நாட்கள் ஓடியிருப்பது ஆச்சரியம் தான். அடுத்து தான் நம் பட போஸ்டர் இருந்தது.
நான் இதையே உத்து பார்த்துக்கொண்டிருந்தேன் ’என்னங்கடா இது மாடு கார் கூட சண்ட போடுது!’னு.. படத்தை மூனாவது முறை பார்க்க வந்திருக்கும் பானிபூரி கடை நண்பர் பின்னால் வந்து மெதுவாக சொன்னார் “சூப்பர் கிராபிக்ஸு, சூப்பர் பைட்டூ” என்று. நான் அவரிடம், “மூவி ஹிட்டா?” என்றேன். சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டார். ’டேய் பதில சொல்லிட்டு போடா’ என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர் மேஜையை விரித்து, பட்டாணி, வறுத்த கடலை என கடை போட ஆரம்பித்துவிட்டார். பானிபூரியை விட கொஞ்சம் பொறுத்திருந்து கடலை சாப்பிட்டிருக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். என் ரெட்டி நண்பன் வந்து சொன்னான், “ஏங்க படம் சூப்பர் ஹிட்டாம். கிராஃபிக்ஸ் எல்லாம் தாறுமாறாம். செம ஆக்ஷன் படமாம்”.. “எப்படி தெரியும் உங்களுக்கு?” என்றேன். “அங்க ரெண்டு பேரு தெலுங்குல பேசிக்கிட்டு இருந்தாய்ங்க, அத கேட்டுட்டு தான் சொல்றேன்”. அவன் ரெட்டி என்கிற ஒரே காரணத்துக்காக அவன் தெலுங்கு பற்றி சொன்னதை பதில் கேள்வி கேட்க முடியாமல் நம்பும் நிலையில் இருந்தோம் நானும் இன்னொரு நண்பரும். பிளாக்கில் விற்பது போல் ஒரு ஆள் அறையின் வாசலில் சைக்கிள் டோக்கன் கொடுப்பது போல் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். 30ரூபாய் தான் டிக்கெட் விலை. டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்தோம்.
தியேட்டரினுள் ஒரே ஒரு டியூப் லைட். அவ்வளவு தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் செகன்ட் க்ளாஸ் எல்லாம் கிடையாது. சேர் டிக்கெட், மேஜை டிக்கெட் அவ்வளவு தான். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம். சுவர், தரை என எங்கும் பான்பராக்கால் சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. எனக்கு அந்த தியேட்டர் நம் ஊர் பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகளை ஞாபகப்படுத்தின. சரி என்ன பண்ணுறது? 11மணி வரைக்கும் பொழுது போகணுமே என்று மனதை தேற்றிக்கொண்டேன். சரி படம் ஆரம்பிப்பதற்குள் டாய்லெட் போய் வரலாம் என்று வெளியில் வந்து டிக்கெட் கிழிப்பவரிடம் ”டாய்லெட்” என்றேன். அவர் கை காட்டிய திசையில் சென்றேன். தெலுங்கில் என்னமோ எழுதியிருந்தது. உள்ளே போகும் முன் குலதெய்வத்தை வேண்டி விட்டு அவரையும் திரும்பி பார்த்தேன். நான் உள்ளே நுழைய போவதை பார்த்த அவர் கத்திக்கொண்டே வந்தார். அருகில் வந்ததும் “கேர்ள்ஸ் டாய்லெட்” என்று சொல்லி தெலுங்கில் என்னென்னமோ கத்தினார். நான் அவர் கத்தி முடித்ததும், குரலை தாழ்த்தி “பாய்ஸ் டாய்லெட்?” என்று பாவம் போல கேட்டேன். பெண்கள் கழிப்பறையின் பின் பக்கம் நீண்டிருக்கும் வெட்டவெளியை காட்டி “ஃபுல் பாய்ஸ் டாய்லெட். நோ கோ கேர்ள்ஸ் டாய்லெட்” என்றார். அனுஷ்காவை பார்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அந்த அவமானத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டேன். உச்சா போய்விட்டு தியேட்டருக்குள் நுழைந்தேன்.
படம் ஆரம்பித்தார்கள். ஒரே ஒரு டியூப் லைட்டையும் அணைத்துவிட்டார்கள். அருகில் சிறு மஞ்சள் வெளிச்சம். என் பக்கத்து சீட்க்காரன் பத்த வைத்த பீடி தான் அது. “இது வேறையா?” என்பது போல் மூக்கை பொத்திக்கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அரக்கர் குலத்தில் தப்பி பிழைத்த ஒரே ஒரு அரக்கன் மட்டும் இந்த உலகத்தையே அடக்கி ஆள சக்தி கேட்டு சிவபெருமானை நோக்கி தவம் இருப்பது போல காட்டினார்கள். பரவாயில்லையே தெலுங்கு படம் நமக்கு கூட ஓரளவுக்கு புரியுதே? என்று வியந்துகொண்டே கதையில் அமிழ்ந்தேன்.
ஒரு குழந்தை எல்லா நல்ல நேரமும் கூடிய சந்தர்ப்பத்தில் கடவுளின் அனுக்கிரகத்தில் பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் அதைத்தான் ஹீரோ என நினைப்பீர்கள். ஆனால் டைரக்டர் அங்கு தான் டுவிஸ்ட் வைத்திருக்கிறார். அது ஒரு பெண் குழந்தை. அடுத்து காசியில் ஒருவரை பற்றி அவர் குடும்பமே பெருமையாக பேசுகிறது. “அவன் சிவ சேவைக்காகவே பிறந்தவன்” என்பது போல் பீலா விட்டுக்கொண்டிருக்கும் போதே அவர் கங்கை நதியில் இருந்து வெளிவருகிறார். அப்போதும் ஹீரோ தான் வருவார் என்று எதிர்பார்த்தீர்களானால், அங்கேயும் டைரக்டர் டுவிஸ்ட் வைத்திருப்பார். அது ஹீரோ சிறு வயதில் நடப்பது. அதனால் ஒரு சிறுவன் தான் வருகிறான். அந்த சிறுவன் காசியில் பூஜை முடிந்து வரும் போது, அவனால் தான் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த அந்த அரக்கன் ஹீரோவை குடும்பத்தோடு சிறுத்தை வேடமிட்டு கொல்ல வருகிறான். ஹீரோவின் குடும்பமே காலி. தங்கை படுத்த படுக்கையாகி உடம்பு செயலிழந்து விடுகிறார். சின்ன வயது ஹீரோ சிவ பெருமானை நோக்கி டூ விடுகிறார், ’என் குடும்பத்தை நாசமாக்கிய உன்னை நான் இனிமேல் கும்பிட மாட்டேன்’. அய்யயோ மதம் கிதம் மாறப்போறானோன்னு பாத்தா அதுவும் இல்ல. டைரக்டர் இங்க ஒரு டுவிஸ்ட் வைக்கிறார். அடுத்து ஒரு ஊரில் தேர் இழுக்கிறார்கள். தேர் நகரவேயில்லை. எல்லோரும் கவலையாக இருக்கும் போது, ஒரு கார் ஸ்பீடாக வந்து நிற்கிறது. வந்துட்டார்யா ஹீரோ இனிமேல் தேர் எப்படி பறக்குதுன்னு பாரு என்று நினைக்கும் போதே, அடுத்த டுவிஸ்ட். அந்த காரில் இருந்து இறங்குவது அனுஷ்கா செல்லம். அது நடந்து வரும் போது மங்களகரமா ஒரு மியூசிக். அந்த புள்ள வந்து கைய வச்சதும் தேர் தன்னால மூவ் ஆகுது. சிவபெருமானே அனுஷ்கா வந்து கைய வச்சா தான் மூவ் ஆகுறாருன்னு டைரக்டர் இந்த சீன் மூலமா சொல்லிறாரு.. சிவபெருமானே அப்படின்னா நாமெல்லாம் எம்மாத்திரம்?
அடுத்து நம்ம மாமா, அதாம்ப்பா அனுஷ்காவின் அப்பா கோயிலுக்கு சில லட்சம் டொனேஷன் குடுக்குறாரு. அத சில குரூப்பு பைக்ல வேமா வந்து ஆட்டைய போட்டுட்டு போயிறாய்ங்க. அவைங்கள தொறத்தி போலீஸ் வேற வருது. நாமெல்லாம் நினைப்போம் அந்த திருட்டுப்பயலுகள பிடிச்சி அடிச்சி தொவைச்சி போலீஸ் கிட்ட ஒப்படைக்க நம்ம ஹீரோ வருவாருன்னு. திருடனுங்க வண்டி கிராம கோயில்ல இருந்து திடீர்னு ஹார்பர்ல போயி கன்னாபின்னானு சுத்துது. இப்ப தான் கார்டூன் நெட்வொர்க்ல கார் வீலீங் ஆகுற மாதிரி வீலிங் பண்ணிட்டு அவரு வராரு. எவரா? இவ்வளவு நேரமா விசில் அடிக்க யாருக்காக காத்திருந்தோமோ அவரு. நம்ம “கிங்” நாகர்ஜுனா தான் அவரு. அடிக்குறாரு, துவைக்குறாரு பட் பணத்த மட்டும் போலீஸ் கிட்ட கொடுக்காம அவரு ஆட்டைய போட்டுட்டு போயிடுறாரு. அப்போ டைரக்டர் சொல்றதெல்லாம் வச்சி பாக்கும் போது “நாகர்ஜுனா ஒரு திருடனா?” என்கிற கேள்வி மனதில் எழும். ஆனால் அவர் தான் திருடுற பணத்த தான் மட்டும் திங்காம தன் தங்கை மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரிக்கும் டொனேஷன் குடுக்குறாரு. அங்கு ஒரு லேடி டாக்டர் ஹீரோ தங்க்ச்சி மேல ரொம்ப பாசமா இருக்காங்க.. ஆங் கரெக்ட்டா சொல்லிட்டீங்களே அவங்க தான் நம்ம அனுஷ்கா.
ஹீரோவும் அனுஷ்காவும் லவ்வுறாங்க. ஆனா நம்ம அரக்கன் அனுஷ்காவ கல்யாணம் பண்ணி ஒரு நல்ல நாள்ல அவங்கள பலி குடுத்தா தான் இந்த உலகத்தையே ஆள முடியும். சிவபெருமானே வில்லன் கிட்ட ஒரு வரம் குடுத்து மாட்டிக்கிட்டு நம்ம ஹீரோ கிட்ட தஞ்சம் புகுந்துக்கிறாரு. அப்புறம் கதை கன்னாபின்னான்னு போகுது. எப்படியோ ஹீரோ சிவ பெருமானை காப்பாற்றி பழையபடி ஆத்திகனா மாறி அனுஷ்காவையும் காப்பாற்றி வில்லனையும் வீடியோ கேம்ல வர மாதிரி விளையாண்டு போட்டு தள்ளிறாரு. என்னது நம்மளயா? நம்மள இண்டெர்வல் வரதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே கொன்னுருவாய்ங்க. மிச்சம் மீதி ஒட்டியிருக்குற உசுரு அனுஷ்காவ பாக்குறதுக்காக மட்டுமே லேசான லப்டப்போடு துடித்துக்கொண்டிருந்தது . சிவபெருமான் வேடத்தில் பிரகாஷ்ராஜ் சுத்தமாக பொருந்தவில்லை. ஏதோ சின்ன பிள்ளை மாறுவேட போட்டியில் மேடையில் போவது போல் சொர்க்க லோகத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு நடந்துவருகிறார் உயிருக்கு போராடும் ஹீரோவை காப்பாற்ற. அவர் மெதுவாக ஆடி அசைந்து வந்து ஹீரோவை காப்பாற்றுவதற்குள் ரயில் ஹீரோ மேல் ஏறி டில்லிக்கே போயிருக்கும். பட் லார்டு சிவா, எப்படியோ ட்ரெயின கொஞ்ச நேர நிப்பாட்டி, நம்ம தமிழ்ப்படம் சிவா மாதிரி காப்பாத்திறாரு. படம் பார்க்கும் நமக்கு இருக்கும் பதைபதைப்பு கூட சிவ பெருமானுக்கு இல்லை.
இப்படி ஒரு பொத்தலான கதையை எல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் படம் முடிந்தவுடன் சூப்பராக இருக்கு என்று சொன்னவனை தான் தேடிக்கொண்டு இருந்தேன். பரதேசிப்பய.. கிராஃபிக்ஸ் வேறு சூப்பர் என்றான். இதையெல்லாம் விட்லாச்சாரியா கிராஃபிக்ஸே இல்லாமல் காட்டிவிட்டார். கிராஃபிக்ஸ் நன்றாக இருந்த இடம் என்றால் நந்தி ஹீரோவை காப்பாற்றும் காட்சி தான். ஆனால் அதிலும் மிகப்பெரிய லாஜிக் பொத்தல் இருப்பதால் அந்த காட்சியும் எடுபடவில்லை. அவ்வளவு பவர்ஃபுல்லான வில்லன் ஏன் க்ளைமேக்ஸ் வரை காத்திருக்க வேண்டும்? தன்னிடம் இவ்வளாவு சக்தி இருந்து, கடைசியில் ஹீரொயினை வசியம் செய்யும் வில்லன் எதற்கு முதலில் அவளின் முறைப்பையன் ரூபத்தில் வர வேண்டும்? இந்த படத்திற்கு எதற்கு ஒரு ஹீரோ? முதலில் இப்படி ஒரு படம் எதற்கு எடுத்தார்கள்? இதில் என்ன இருக்கிறது? கமர்ஷியல் படம் என்றாலும் ரசிக்கும் விதத்தில் எடுக்க வேண்டாமா? இப்படியே உங்கள் மனதை கேள்விகள் போட்டு துளைக்கும். உங்கள் மனசாட்சி “போயும் போயும் இந்த படத்துக்காடா வந்த?” என காறித்துப்பும். பிரமானந்தம் மாதிரி பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு தான் நானும் தியேட்டரில் இருந்து வெளியில் வந்தேன். 21ம் தேதி உலகம் அழிந்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு கவலை வந்திருக்காது. உலக அழிவே பரவாயில்லை என நினைக்க வைத்த படம் இது. “சேய் நாளைக்கு ஒலகம் அழிஞ்சா தேவல” என்று சபித்துவிட்டு தான் தியேட்டரை விட்டு கிளம்பினேன்.
உடன் வந்த ரெட்டி சொன்னான், “பரவாயில்ல, நான் கூட கடைசில ஹீரோ செத்துருவானோனு நெனச்சேன், ஆனா கரெக்ட்டா வில்லன கொன்னுட்டான்ல?” என்று.. எனக்கு அவனை ஆந்திராவிலேயே தொலைத்துவிட்டு வந்துவிடலாமா என்று இருந்தது. இரவு ஒரு ரோட்டுக்கடையில் சாப்பிட்ட போது (அந்த ஊரில் ஓட்டல் இல்லை) அந்த கடை பையனிடம் கேட்டேன், “தம்மாருகம் குட் மூவியா?” என்று. அவன் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு சொன்னான், “சூப்பர் மூவி, குட் கிராபிக்ஸு” என்று. ஓ ஊர்ல எல்லாருமே இப்படித்தானா? ஆந்திர மக்கள் இப்படி படங்களை ரசிப்பதால் தான் அங்கிருக்கும் ஆட்கள் இப்படி மோசமான படங்களை கொடுக்கிறார்களா? அல்லது “நம்ம ஆட்கள் இப்படி தான்யா படம் எடுப்பாய்ங்க, எழவ பாத்து தொலைப்போம்” என்று மக்கள் அவர்கள் எடுக்கும் மொக்கை படங்களை ரசிக்க பழகிக்கொண்டார்களா? தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு போல் அங்கு திருட்டு விசிடியால் சினிமாவிற்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை. அதனால் தான் தைரியமாக ஒரே கதையில் வருடம் முழுதும் படம் எடுத்து தள்ளுகின்றனர். புதுசாக எதுவும் முயற்சி செய்வதில்லை. இரவில் நான் சாப்பிட்ட காரமான “egg fried rice” கூட செமித்து விட்டது, ஆனால் இந்த படம் பார்த்த அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கிறது..
அருமை ராம்குமார்.
ReplyDeleteமிகவும் ரசனையான பதிவு
ReplyDeleteநன்றி ஐயா
DeleteSuper nanba... :) naan andhrala paatha padam 'arjun' adula hero thallu vandila thangachiya vachi iluthuttu oduvaaru... Avara 50sumola chase panna try panuvanga .. but mudiyadu... Ipdi super power human elaam andhrala fhaan irukaanga.... Jai chenni keshava.. ( balakrishna train comedy) ;)
ReplyDeleteஹா ஹா.. அந்த மக்களுக்கு தான் சினிமா என்பது நிஜமான பொழுதுபோக்காக இருக்கிறது..
Deleteஇதன் ட்ரெயிலரை யூ ட்யூப்பில் பார்த்தபோதே மண்டை காய்ந்தது. எனக்கு தெரிந்து இந்த உன்னத காவியத்தை கண்டவர் கேபிள் சங்கர் மட்டுமே. அதற்குப்பின் நீங்கள்.
ReplyDeleteபதிவைப்படித்து வாய்விட்டு சிரித்தேன். :)
ஹா ஹா இரவு 11மணிக்கு அந்த ஊரில் பொழுதை போக்குவதை விட பேசாமல் தியேட்டருக்கு போகலாம் என்றால் அங்கு ஒரு கும்மாங்குத்து.. என் செய்வேன் நான்?
Deleteரொம்ப நல்ல பதிவு.. நல்ல ரசனையா உங்களுக்கு...
ReplyDeleteஅந்த ஊர் மக்களோட பழக்கமே ரொம்ப வித்தியாசமாதான் இருக்கும், நீங்க சொன்ன மாதிரி அந்த ஊர்ல எல்லாமே கடப்பா கல்தான், பெரிய வீடுகள்லகூட அதுதான் போட்ருப்பாங்க, அந்த ஊர் க்ளைமேட்க்கு அதுதான் லாயக்கு, தமிழ் சினிமால காட்ற மாதிரி அந்த ஊர்ல அம்மி'லாம் கிடையாது, பெரிய உருண்ட கல்லுலதான் எல்லாம் இடிச்சிகுவாங்க, அடுப்படில ஓரமா ஒரு சின்ன குழி இருக்கும், அது தான் ஆட்டுக்கல்,
வேர்க்குதேன்னு பச்ச தண்ணில குளிச்சீங்க ஒடம்பு பொத்து போகும், எங்க போனாலும் ஒண்ணு பப்பு பப்பு இல்ல செப்பு செப்பு,,, பரோட்டா பையன்கூட அழகா ஹிந்தி பேசுவான்,,, சமோசா'க்கு சைட் டிஷ் பச்சமொளகாய எண்ணெய்'ல வறுத்து குடுத்ததும் மிரண்டுட்டேன், மனைவி புருஷன நீ வா போன்னுன்னுதான் பேசுவாங்க, மரியாதையா பேசுனா அன்யோன்யம் இல்லையாம்,,,
... ஆனா இதையெல்லாம் தாண்டி பழகுணா ரொம்ப பாசமான மக்கள், நல்ல ஊர் ( ஏன்னா நா அங்க இருந்த 6 மாசத்ல 2 மாசமாவது ஸ்ட்ரைக்'லையே போயிருக்கும்,, அய்.. ஜாலி ஆபிஸ் போக வேண்டாம்...)
எனக்கு அந்த ஊர் புருஷன் பொண்டாட்டி கல்ச்சர் பிடிச்சிருக்கு..
Delete