மழை நேர புலம்பல்கள்..

Friday, October 19, 2012     இந்த மழை தான் எவ்வளவு விசால மனதுடையது? சரியாக பெய்யவில்லை என்று நாம் வைதாலும், கோவித்துக்கொண்டு மறுமுறை வராமல் இருப்பதில்லை.. அதிகம் பெய்கிறதே என்று ஏசினாலும் பெய்வதை நிறுத்துவதில்லை. வில்லனால் துரத்தப்படும் கதாநாயகியை கடைசியில் கதாநாயகன் காப்பாற்றுவது போல், பஞ்சத்தால் நாம் துரத்தப்பட்டால், நம்மை காப்பாற்றும் கதாநாயகன் மழை தான். தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு செய்தாலும் காதலியை வெறுக்க முடியுமா? தாமதமாக வரும் காதலனை தான் மறுக்க முடியுமா? அதே போல் தான், தேவை இல்லாத நேரத்தில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் நாம் மழையை வெறுப்பதுமில்லை, மறுப்பதில்லை..
 
  
  

     இன்று நாம் ஒவ்வொரு பெயரில் அழைக்கும் ஏரி, குளம், கண்மாய், ஆறு, ஓடை, கால்வாய், வாய்க்கால், கடல், அருவி எல்லாவற்றுக்கும் ஒரே தாய் மழை தான். தன்னை பற்றி எத்தனை பாடல்கள் எழுதினாலும், எத்தனை கதைகளை சொன்னாலும் இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுத புதுப்புது வார்த்தைகளை கொடுக்கும் சக்தி மழைக்கு உண்டு. மழை மட்டும் தான் ஆச்சரியமா? வானத்தில் நிகழும் இடி மின்னலின் ஒலியும் ஒளியும் எத்தனை சிலிர்ப்பூட்டும் விசயங்கள்? ஒரு மின்னலில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு ஆண்டு தொடர்ந்து கரெண்ட் தரளாம் என்று சொன்னாலும், சிறு வயதில் “சாமி வீட்ல டியூப் லைட் சரியா எரியல, அதான்” என்று மின்னலுக்கு என் மொழியில் அப்பா கொடுத்த விளக்கம் தான் பிரமாண்டமாய் இருக்கிறது இன்றும் எனக்கு.

         


           ஆனால் இந்த மழை சில விசயங்களில் மிகவும் மோசமானது.. அடர்ந்த குளிர் காற்றில் யாரோ புகைக்கும் சிகரெட் மனம் நம் நாசியை தொடும் போது, தன் சாரலை நம் மீது தெளித்து, சிகரெட்டின் மேல் கூட காதல் கொள்ள செய்கிறது. வாழ்வில் நாம் மறந்து விட்ட மிக மிகிழ்ச்சியான சம்பவங்களும், மறக்க நினைக்கும் மிக துக்கமான நினைவுகளும் மழையின் வடிவில் மீண்டும் மனதை தட்டும். கஷ்டப்பட்டு மறக்க நினைக்கும் பல விசயங்களை முதலில் இருந்து தெளிவாக ஞாபகப்படுத்திவிட்டு, இரவு நேர தவளைகளுடன் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறது இந்த நல்ல மழை. நாமும் அன்று அழுததை இன்று நினைத்து சிரிப்போம், அன்று சிரித்ததை இன்று நினைத்து அழுவோம்.

        நாயகியை பார்க்காமல் அவளின் நினைவுகளுடனே வாழ்க்கையை நகர்த்தும் சினிமா காதலன் போல், ‘மழை கூட வேண்டாம். எங்கோ பெய்த மழையின் மண் வாசம் மட்டும் போதும், அந்த மனத்தோடே நாட்களை கடத்திவிட’ எண்ணும் நான் மழையின் நிஜக்காதலன். மழை பலருக்கு தண்ணீரை கொடுக்கும், சிலருக்கு விவசாயம் கொடுக்கும், ஆனால் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியை கொடுக்கும். நாள் முழுதும் சூடாக எரிந்து விழும் கணவனை, ஒரே ராத்திரியில் வசியம் செய்திடும் மனைவியை போல, வருடம் முழுதும் சூரியனால் வெந்துகொண்டிருக்கும் பூமியை தன் தூரல் விழுதுகளால் சட்டென குளிர்வித்துவிடுகிறது சாரல் மழை..

        பள்ளி காலங்களில் வரும் மழை தான் எவ்வளவு சுகமானவை? விருப்பப்பட்டு கடைசியாக மழையில் நனைந்தது எப்போது என்கிற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் ஒரே பதில், “பள்ளி காலம்” தான். வகுப்புக்குள் மழையின் போது வரும் ஒரு இருட்டும், அழுத்தமான அமைதியும், சளிப்பிடித்தவனின் குரல் போல மெது மெதுவாக ஆரம்பித்து வரும் மழையின் சத்தமும் நமக்கு பிடித்த ஆசிரியரின் வகுப்பில் தான் பெரும்பாலும் நடக்கும். அல்லது மழை வரும் போது பாடம் நடத்தும் ஆசிரியர் நமக்கு பிடித்துப்போய்விடுகிறாரோ? ’மழையால் இன்று பள்ளி விடுமுறை’  - பள்ளி அறிவிப்பு பலகை கூட நமக்கு சிநேகம் ஆகிவிடும் பரிட்சை அன்று வரும் காலை வேளை மழையால். தேச தலைவரின் பிறந்த நாள் போல், ஒரு பண்டிகை போல் விடுமுறை விட்டு மழையை கொண்டாடுவது பள்ளிகள் மட்டும் தான். மழையை பார்த்தாலே துள்ளி ஓடி நனையும் பால்யம், மழையை பார்த்தாலே அலறி ஓடி ஒளியும் “பொறுப்பான வாழ்க்கையை” ஏளனம் செய்கிறது.

        மழை வானத்தில் இருந்து மலையில் விழுந்து அருவியாகி, பள்ளத்தில் இறங்கி நதியாகி, சம்வெளியில் ஓடி ஓடையாகி, கடலில் கலந்த காலம் எல்லாம் புவியியல் புத்தகத்தில் மட்டும் தான். இன்று வானத்தில் இருந்து பெய்யும் மழை நேராக நம் தெரு சாக்கடையில் தான் கலக்கிறது. மனிதன் சென்று வரவே இடம் பத்தாத இந்த பூமியில் மழைக்கு இடம் கொடுப்பார் யாரோ? மழையில் குழந்தைகளை நனையவிடும் பெற்றோர்கள் கூட அரிதாகிவிட்டார்கள். குழந்தைகளும் கதவுக்கு பின் நின்றோ, கார் கண்ணாடிக்கு மறுபுறம் நின்றோ மழையை ஒரு கூண்டுக்குள் இருக்கும் மிருகம் போல பார்க்க பழகிக்கொண்டார்கள். ஊருக்கே பொதுவாக எல்லோருக்குமே சமமாக பெய்தாலும் மழை ஒரு அநாதை தான், சீண்டுவார் யாரும் இல்லாமல் அழுதுகொண்டே சாக்கடையில் ஓடுகிறது.

12 comments

 1. அருமையான பதிவு.
  வாழ்த்துகள் ராம்குமார்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி சார் :-)

   Delete
 2. மழையில் நனைந்த ஒரு அனுபவம். . . அந்த படங்கள் icing on the cake . . .

  ReplyDelete
 3. உங்களின் இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இணைப்பு:http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_15.html
  வாழ்த்துகள்!

  'சாமி வீட்ல டியுப் லைட் சரியா எரியல, அதான்' மின்னலுக்கு உங்கள் அப்பா கொடுத்த விளக்கம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. பாத்தேன் அம்மா.. என்னை ஒரு மாணிக்கமாக தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து விட்டேன்.. மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கும்.. :-)

   Delete
 4. மழையைப் பற்றிய அருமையான பதிவும் அதற்கு பொருத்தமான படங்களும் அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மழையை மிகமிக ரசிப்பவன் நான். ‘வீட்டில் இருக்கும் பொழுது தேவதை! சாலையில் செல்லும் போது ராட்சஷி! அவள் - மழை’ என்று ஒரு முகநூல் ஸ்டேட்டஸ் போட்டு நிறைய லைக் கிடைத்‌தது. (நல்ல‌வேளை.. வலையில கல்லால அடிக்க முடியாது. ஹி... ஹி...) இந்த உங்கள் மழைப் பதிவையும் மிக ரசித்தேன் ராம்குமார். இத்தனை நாள் படிக்கத் தவறிய உங்க பதிவை திடங்கொண்டு சீனு எடுத்துரைத்ததால படிச்சேன் இப்ப. மற்றவற்றையும் படிச்சுட்டு தவறாம கருத்திடறேன் நண்பா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார் :-) நண்பர் சீனு இன்று என்னை சம்திங் ஸ்பெசலாக உணர வைத்துவிட்டார்..

   Delete
 6. மழையைப் பற்றி சொல்மழை.. அருமை..பாராட்டுக்கள்..
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 7. வலைச்சரம் மூலம் வந்தேன்..
  நல்ல மழை....
  இனி குடையோடு வருகிறேன்..

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One