நண்பர் இளவரசன் (Don Ashok) அருமையாக எழுதியிருந்த ”மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!” என்னும் பதிவைப் படிக்கும் என் சின்ன வயது மின்வெட்டு ஞாபகங்களும் வந்துவிட்டன.. அவர் அனுமதியுடன் அந்த பதிவிற்கு பார்ட்2 அல்லது என் பாணியில் ஒரு ரீ-ரைட் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..
அப்போதெல்லாம் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது மட்டும் தான் கரெண்ட் போகும். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டும், வெயிலும் வாட்டி எடுக்கும். முழுப்பரிட்சை விடுமுறையில் நாங்கள் (தெரு நண்பர்கள்) சின்ன சின்ன அச்சாபிஸ், கட்டிங் ஆபிஸ், தாள் பிரிக்க என்று எதாவது வேலைக்கு செல்வோம். அந்தக்காசில் தான் அடுத்த வருடத்திற்கு ஆகும் புத்தகச்செலவு சுமையில் பாதியை குறைக்க முடியும் அப்பாவுக்கு. சில ‘ஓனர்’கள் ‘மே’ கடைசியில் சம்பளத்திற்கு பதிலாக நோட்டு புத்தகங்களே வாங்கி கொடுத்து விடுவார்கள். சரி, சிவகாசி கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம், இப்போது அந்த மின்வெட்டு அனுபவங்களை பேசலாம்.
மின்வெட்டு பெரும்பாலும் மதிய நேரங்களில் தான் இருக்கும்.. 1-3, அல்லது 2-4 மணிக்கு தான் கரெண்ட் போகும். அப்போது தான் எங்களுக்கு மதிய உணவு இடைவேளை விடுவார் கட்டர்/ப்ரிண்டர் (இவர்கள் அச்சாபிஸில் மேனேஜர் கேடர் என்று வைத்துக்கொள்ளுங்கள்). சாப்பிட தெருவிற்குள் நுழைவோம். 6அடி அகலம் தான் எங்கள் தெரு. இரு பக்கத்திலும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து கெட்டு (தீப்பெட்டி, மத்தாப்பு பெட்டி) ஒட்டிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நடந்த விசயம் எல்லா வீட்டிற்கும் தெரியும் நேரம் அது தான். கரெண்ட் இருக்கும் போது பெரும்பாலும் டிவி இருக்கும் வீட்டிற்குள் எல்லா பெண்களும் அமர்ந்து கெட்டு ஒட்டிக்கொண்டு அமைதியாக நாடகத்தை பார்த்து விளம்பர இடைவேளையில் நாடக விமர்சனத்தை செய்வார்கள்.
மதிய நேரங்களில் பிள்ளைகள் வேலையில் இருந்து வருவதை பார்த்ததும் தங்கள் கதைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வீட்டிற்குள் வருவார்கள். ஆண்கள் காலையிலேயே சோறு எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்கோ அச்சாபிஸுக்கோ போய் விடுவார்கள். என் ஆச்சிக்கு மதியம் கரெண்ட் போனாலே மிகவும் கோவம் வந்துவிடும். அப்போது நம் மந்திரா பேடி குடும்பப்பாங்காக நடித்த ஹிந்தி டப்பிங் “சாந்தி” என்னும் சீரியல் மிகப்பிரபலம். மதியம் ரெண்டு மணிக்கு போடுவார்கள். சரியாக டைட்டில் கார்டு போடும் போது கரெண்ட் போய் விடும். ‘இனி இரண்டு மாதங்கள் அந்த நாடகம் பார்க்க முடியாதே’ என்கிற கடுப்பில் இருப்பார்.
சாப்பிட்டு விட்டு கரெண்ட் வந்தவுடன் வேலைக்கு போனால் போதும் என்பதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் நேத்து நைட்டு அப்பா அம்மா போட்ட சண்டை, பரிட்சை ரிசல்ட் என்பது பற்றியே எங்கள் பேச்சு இருக்கும். பரிட்சை ரிசல்ட் பற்றி பேசும் போது எல்லாருக்குமே கண்ணில் ஒரு பீதி இருக்கும். “பெயில் ஆயிட்டேன்னா இந்த கம்பெனிலேயே வேலைக்கு சேந்துரலாம்னு இருக்கேன்”னு என்று வருங்காலத்திற்கும் சேர்த்து யோசித்துக்கொண்டிருப்போம்.
4மணிக்கு வர வேண்டிய கரெண்ட் சில சமயங்களில் 3.30க்கே வந்துவிட்டால் “யுக்” என்னும் சுதந்திர போராட்ட நாடகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு வேலைக்கு திரும்பிவிடுவோம். நாங்கள் வேலைக்கு புறப்பட்டவுடன் பெண்கள் மீண்டும் கெட்டு ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்திரம் 6 அல்லது 7 மணிக்கு வேலை முடிந்துவிடும். சில நேரங்களில் அவசர வேலை இருந்தால், நைட்டு வேலை பார்க்க விருப்பப்படுபவர்களை இருக்க சொல்வார்கள். அதற்கு தனியாக் O.T கிடைக்கும். நாங்க யாரும் இருக்க மாட்டோம்.. ஏழு மணிக்கே கிளம்பி வீட்டிற்கு வந்துவிடுவோம். அப்போது தான் 8 மணிக்கு கரெண்ட் போகும் போது நிறைய விளையாட முடியும் என்பதற்காக..
மாலை வீட்டுக்கு வரும் போதும் பெண்கள் தெருவில் ஒட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். தங்கள் கணவன்மார்களும் அப்பாமார்களும் வர வர ஒவ்வொரு பெண்ணாக தங்கள் வீட்டிற்குள் செல்வார். தினமும் ஃபேக்டரி வேலை முடிந்து வரும் என் தாத்தா எங்கள் வீட்டில் இருக்கு அரிக்கேன் லைட்டை அழகாக துடைத்துக்கொண்டிருப்பார். ’இத இப்படி கஷ்டப்பட்டு தொடைக்குறதுக்கு, பேசாம மெழுகுவர்த்தி வாங்கிராம்’னு நினைத்தாலும் பயந்துகொண்டு அவரிடம் சொல்ல மாட்டேன். எப்படா கரெண்ட் போகும் என்று 8மணி வரை காத்துக்கொண்டிருப்பேன். அதற்கு முன் வெளியே போனால் தாத்தாவின் குரல் வரும் “எங்கடா ஆட்டம் போட ஓடுற? ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியலயா?” என்று. இப்போது மணி 8..
கரெண்ட் கட் ஆகும். உடனே தெருவெங்கும் ஓஓஓவென சத்தம் கேட்கும் எல்லா வீட்டிலும் இருந்து. “கரெண்டுக்காரன் போயிட்டான் கரெண்டுக்காரன் போயிட்டான்” என்று கத்திக்கொண்டே ஒவ்வொரு வீட்டில் இருக்கும் சிறுவர்களும் வெளியில் குடு குடுவென ஓடி வருவொம்.. பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கட்டிலை தெருவில் போட்டுக்கொண்டு கையில் ஒரு விசிறியையும் எடுத்து வீசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். எங்களுக்குள் இன்று என்ன விளையாடலாம் என்று விவாதம் வரும். எங்கள் ஃபேவரைட் விளையாட்டுக்கள், ஒளிந்து பிடித்து, பாட்டுக்கு பாட்டு, கழுதைப்பட்டம். கழுதைப்பட்டத்தில் தான் அறிவுக்கு வேலை இருக்கும். சுற்றி அமர்ந்து கொண்டு ஒரு படத்தின் முதல் எழுத்தை ஒருவர் சொல்ல வேண்டும். அடுத்த அடுத்த ஆட்கள் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் படத்தை எல்லாம் மனதில் ஓட விட்டு அந்த படத்தின் பெயர் தன்னோடு முடியாமல் இருக்குமாறு பார்த்து ஒவ்வொரு எழுத்தாக சொல்ல வேண்டும். ஒருவர் ‘கா’ எனறு ஆரம்பித்தால் ரெண்டாவது ஆள் ‘த’ என சொல்கிறார். இப்போது நான்காவதாக இருப்பவனுக்கு லேசாக பீதியாகி விடும். மூன்றாமவன் “ல” என சொல்லிவிட்டால் தான் ‘ன்’ என சொல்லி படப்பெயர் தன்னோடு முடிந்து விடும். அப்படி முடிந்துவிட்டால், கழுதைப்பட்டத்தில் தனக்கு “க” என்னும் பட்டம் கிடைக்கும். அதனால் அவன் எப்படி தப்பிப்பது என யோசிக்க வேண்டும். மூன்றாமவன் “ல” என சொன்னாலும் நான்காவதாக இருப்பவன் “ன்” என சொல்லி ’தொடரும்’ என சொல்லி விட்டால் அந்தப்படத்தின் பெயரில் இன்னும் மிச்சம் இருக்கிறது என அர்த்தம். நான்காவது ஆள் தப்பித்தான். ஆனால் அந்த வட்டத்தில் இருக்கும் எவனோடாவது படப்பெயர் முடியும். அவனுக்கு “க” எனும் பட்டம் கிடைக்கும். இப்படியே “க”, “ழு” என்று ஒவ்வொரு எழுத்தாக கூடிக்கொண்டே போகும். யார் முதலில் “கழுதைப்பட்ட”த்தை முழுதாக பெறுகிறாரோ அவர் மற்ற எல்லோரையும் கழுதை போல் சுமந்து கொண்டு தெருவில் செல்ல வேண்டும். என்ன ஒரு அற்புதமான விளையாட்டு?!
விளையாடி களைப்படைந்ததும் எல்லோரும் சாப்பிட தயாராவோம். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தும் நேற்று எரிந்து மிச்சமான மெழுகுவர்த்தியும் வட்டிலில் சோறும் எடுத்து வருவோம். பெரும்பாலும் இரவு யார் வீட்டிலும் குழம்போ பொறிக்கறியோ கிடையாது. வெறும் பாலும், தெரு முக்கில் இருக்கும் தள்ளுவண்டியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பக்கோடாவும் தான். நாங்கள் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்கும் போது வீட்டு பெரியவர்கள் தங்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள். கரெண்ட் கட்டுக்கு காரணமான முதல்வரில் இருந்து தெரு கவுன்சிலர் வரை எல்லாருக்கும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை விழும். அந்த அமைதியான இரவுக்கும் வெள்ளந்தியான பேச்சுக்கும் எங்கோ தூரத்தில் ஓடும் அச்சாபிஸ் ஜெனரேட்டர் தான் பின்னணி இசை.
ஜெனரேட்டர் என்பது EBக்காரர்கள் கரெண்ட்டை தங்கள் ஆபிஸில் இருந்து வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக கண்டுபிடித்திருக்கும் இயந்திரம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று மணி பத்தை நெருங்கும். மணியும் பத்தாகிவிடும். போகும் போது சரியாக எட்டு மணிக்கு போகும் கரெண்ட் வரும் போது கொஞ்சம் முன்னப்பின்ன தான் வரும். 10மணிக்கு மேலும் கரெண்ட் வரவில்லை என்றால் மிகவும் அச்சலாத்தியாகிவிடும். எல்லோரும் தூக்க கலக்கத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவோம். விளையாடவும் பிடிக்காது. பத்தே காலுக்கு கரெண்ட் வரும். ஓஓஓ வென்று மீண்டும் தெருவெங்கும் சத்தம் வரும். “கரெண்டுக்காரன் வந்துட்டான், கரெண்ட்டுக்காரன் வந்துட்டான்” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் ஓடிச்சென்று படுத்துவிடுவோம். மீண்டும் அடுத்த நாள் அதே அச்சாபீஸ், கட்டிங் ஆபிஸ் என்று வேலைக்கு போய், அதே உணவு இடைவேளை, இரவு அதே கரெண்டுக்காரன் போயிட்டான், வந்துட்டான் கத்தல்கள் என்று இருந்தாலும் வாழ்க்கை என்றுமே போரடித்ததில்லை. விளையாடும் போது சண்டை வந்தாலும் மறுநாள் விளையாட்டு எங்களை ஒன்று சேர்த்துவிடும்.
பள்ளி ஆரம்பிக்கும் வரை இப்படியே தான் தினப்படி வாழ்க்கை. பள்ளி ஆரம்பித்தவுடன் கரெண்ட் கட் என்பது வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து இருந்தாலும் ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரு காரணமாகவே இருந்து வந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக பவர் கட் எங்களையும், நாங்கள் ஒற்றுமையான விளையாட்டுக்களையும் மறந்து டிவிக்குள் தஞ்சம் புகுந்திருந்தோம். சக்திமானும், மாயாவி மாரீசனும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் விளையாட்டுக்களை எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
எங்கள் வீட்டுப்பெண்களும் தெருவில் அமர்ந்து கெட்டு ஒட்டுவதை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு காரணங்கள் - டிவி, வாகனப்பெருக்கல். வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருந்தது மாறி, ஆளுக்கொரு சைக்கிள் வீட்டிற்கொரு வண்டி என மாறியது. அதனால் காலை நீட்டி சாவகாசமாக கதை பேசிக்கொண்டு தெருவில் அவர்களால் இருக்க முடியவில்லை. வீட்டிற்குள் கெட்டு ஒட்டும் போது பேச்சுத்துணைக்கு டிவி வந்துவிட்டது. மங்கை என்று ஒருவள் வந்தாள். இன்று வரை வீட்டுப்பெண்களுக்கு அவளைப் போல் மெகா சீரியல் நாயகிகள் தான் பேச்சுத்துணை.
இப்போது மீண்டும் சில வருடங்களாய் மின்வெட்டுக்கு நம் மீது பாசம் வந்திருக்கிறது. ஆனால் நம்மால் அதை சட்டை செய்யக்கூட முடியவில்லை. நேரமும் இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்? அன்பு என்றால் என்ன? சகமனிதரிடம் பழகுதல், எல்லோரும் ஒன்றாக உணவருந்துதல், பேசி களிப்புறுதல் என்று எல்லாவற்றையும் மறந்து இன்வெர்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலும் டிவியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் உருப்படியாய் ஒன்றும் இல்லாவிட்டாலும் ரிமோட்டில் வேகமாய சேனலை மாற்றிக்கொண்டு..
சுகமான நினைவுகள்! நானும் பின்னோக்கி சென்று ரசித்தேன்! அருமை!
ReplyDeleteஅருமை ராம்குமார். அற்புதமான எழுத்தாற்றல்.
ReplyDeleteசிவகாசி தெருவுக்குள் இருப்பதைப் போன்று உணர்ந்தேன். எங்கள் நமக்கா வீடு இருப்பது தெற்குத் தெரு. பழைய நினைவு - பால் சோறு, பக்கோடா (அப்போது ஒரு பொட்டலம் ஒரு அணா) வந்து விட்டது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
ReplyDeleteவாவ் ....நைஸ் ராம் அண்ணா ..!!....
உங்கள் எழுத்துக்கள் அப்படியே ..என்னை கண்முன்னே ...(பழைய நினைவுகளை காண்பிக்கிறது )..நன்றி ...
மிக்க நன்றி Rathnavel சார் & Chandran.. நாம் மகிழ்ச்சியாக இருந்த காலத்தகட்டத்தை நினைத்து பார்த்தால் அதில் நம் பால்யம் தான் அதிகமாக வந்து போகும்.. யார் மீதும் வஞ்சம் இல்லாத ஒற்றுமையோடு இருந்தது அந்த நாட்களில் தான்
ReplyDeleteExcellent write up...!
ReplyDeleteமலரும் நினைவுகள்
ReplyDeleteநன்றி பன்னிக்குட்டி ராம்சாமி & Kathir Rath..
ReplyDeleteVery fine friend.The words from regional language >munna pinna <
ReplyDeleteand pakoda and milk rice during night. I enjoyed from RHODE
ISLAND ,USA.feeling that Iwere in our area SIVAKASI,VIRUDHUNAGAR ,RAJAPALAYAM .
with thanks .DK.(D.Karuppasamy.)
nice nice ram kumar nanum sivakasi than
ReplyDelete@Karuppasamy Duraichamy Nadar : மிக்க நன்றி சார்..
ReplyDelete@Ramkumar Kumar : எந்த ஏரியா பாஸ்?
மிக அருமை தொடருங்கள்
ReplyDelete