பீட்சா - தைரியம் ஒடஞ்சு போச்சு பீஸ் பீஸா..

Sunday, October 21, 2012




உருவம், துருவ நட்சத்திரம், மைடியர் லிசா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சிறு வயதில் நாம் பார்த்த பேய்ப்படங்கள் நம்மை எப்படி பயமுறுத்தின என்று கொஞ்சம் கொசுவர்த்தி சுருளை கண் முன் சுற்றி ப்ளாஸ்பேக் விட்டுப்பாருங்கள். வெள்ளை உடையுடன் ஒரு உருவம், தலை முடி விரிந்து பறக்கும், ஊஊஊ என்னும் ஓநாயின் ஊளை, காற்று, கடைசியில் பேயை காமிக்கும் போது முகமெல்லாம் ஈரமான பவுடரை அப்பியிருப்பார்கள். கொஞ்சம் அறிவாளி இயக்குனர் அதில் சில கோடுகளை போட்டிருப்பார். இப்போது பார்த்தால் காமெடிப்படமாக இருக்கும் இவைகள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பேய்ப்படம். 



ஆனால் சமீபமாக வரும் “யாவரும் நலம்”, “ஈரம்” போன்ற படங்களை அறிவார்த்தமான பேய்ப்படங்கள் என்று சொல்லலாம். கொடூர மேக் அப் இல்லாமல், ஊஊஊ ஊஊ சவுண்ட் இல்லாமல், முக்கியமாக வெள்ளை புடவையில் பேயை காட்டாமல், காட்சிகள் மூலமும், இசையின் மூலமுமே  நம்மை பீதியடைய வைப்பது தான் இப்போதைய படங்களின் யுக்தி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் “பீட்சா”..



பீட்சா கடையில் டெலிவெரி பாயாக இருக்கும் விஜய சேதுபதியும், பேய்க்கதைகளில் ஆர்வம் இருக்கும் பேய் நாவல் எழுத நினைக்கும் ரம்யா நம்பீசனும் லிவிங் டுகெதர் ஜோடிகள். ஒரு இரவில் பீட்சா டெலிவரிக்கு போகும் போது பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறார் ஹீரோ. அங்கிருக்கும் பெண், அவளின் கணவன், குழந்தை என்று ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொருவர் கொல்லப்படும் போதும் ஹீரோ கொண்டு வரும் பீட்சாவில் ஒவ்வொரு பீஸ் காணாமல் போகிறது. பயந்து போன ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த மூன்று பேரும் ஏற்கனவே இறந்து போனவர்கள் என்று. அங்கிருந்து எப்படியோ தப்பிவிடுகிறார். ஆனால் அந்த மூன்று பேர் யார், அங்கிருந்த குழந்தைக்கும் பீட்சா ஓனரின் பேய் பிடித்திருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம், ரம்யா நம்பீசன் யார் என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழும் இடம் தான் உச்சம். க்ளமைக்ஸ் ட்விஸ்ட் செம..




விஜய் சேதுபதியின் நடிப்பு உண்மையான பயத்தையும், நாமும் அவரருகில் இருப்பது போன்றதொரு பதைபதைப்பையும் கொண்டுவருகிறது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ பார்த்ததில்லை என்றாலும், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருப்பார். கரெண்ட் இல்லாத பெரிய பங்களாவில் வெறும் டார்ச் லைட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர் படும் பாடு அருமை. ரம்யா நம்பீசன் - தமிழகம் கொஞ்ச வருடங்களாக மறந்திருக்கும் பப்ளி ஹீரோயின் ட்ரெண்ட் மீண்டும் இவர் மூலம் வந்தால் தேவலை. எல்லாமே வத்தலும் தொத்தலுமாக இருக்கின்றார்கள். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.





முதல் அரை மணி நேரம் ரொம்ப ரொம்ப நார்மலாக போகும் கதை, சேதுபதி தன் ஓனரின் மகளை பார்க்கும் காட்சியில் இருந்து சில்லிட வைக்கும் அழுத்தமான காட்சிகள் மூலம் பறக்க ஆரம்பிக்கிறது. இன்டர்வலுக்கு முந்தைய அரை மணி நேரமும், அடுத்த அரை மணி நேரமும் நம் மயிரெல்லாம் நட்டுக்கொள்ளும் அளவுக்கு டெரர் காட்சிகள் இருக்கின்றன. அந்த குழந்தை “அங்க இருக்கு” என்று கையை காட்டும் திசையில் சேதுபதி திரும்பிவிட்டு மீண்டும் அந்த குழந்தை பக்கம் திரும்பும் காட்சி, முதுகுத்தண்டை ஐஸ் ஊசியால் குத்துவது போல் இருந்தது. கொஞ்சமான பாத்திரங்கள் தான் என்றாலும் அனைத்துமே கதைக்கு தேவையான, தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கும் பாத்திரங்கள்.




வசனங்களும் வத வதவென்று இல்லாமல் சிம்பிளாக, சமயத்தில் நக்கலாக, சில நேரங்களில் மிரட்டலாக (கடைசியில் அந்த பாட்டி “நித்யா வந்து பீட்சா எடுத்துட்டு போ” என்று சொல்லும் வசனம்) இருக்கின்றன. “நான் எப்பையாவது கேர்லெஸ்ஸா இருந்திருக்கேனா?” என்று ஹீரோயினிடம் கோவப்படும் ஹீரோவை மெதுவாக பார்த்து “நான் ப்ரெக்னண்ட்டாக இருக்கேன்” என்று ஹீரோயின் சொல்லும் காட்சியும், “கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகும்” என்று ஹீரோ சொல்ல, நண்பன் “கல்யாணாத்துக்கு காரணமான கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்ரலாமா?” என்று கேட்பதும் சரியான நக்கல்கள்.



சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சில நேரங்களில் கொஞ்சம் தலைவலி கொடுப்பது போல் இருந்தாலும், அந்த பங்களா காட்சியில் ஃபோன் மணி அடிக்கும் போதும், குழந்தையின் அறைக்கு ஹீரோ செல்லும் போதும் ஏற்கனவே மனதிற்குள் இருக்கும் திக் திக்கை இன்னும் கூட்டிவிடுகிறது. சில சமயங்களில் காட்சியோடு சேர்த்து பார்ப்பவர்களையும் அலற செய்து விடுகிறது. பேய் படங்களில் கேமராமேனின் பங்கு மிக மிக முக்கியம். ‘யாவரும் நலம்’ல் பி.சி.ஸ்ரீராமின் காட்சிகள் படத்தின் பெரும் பலம். இதிலும் கேமரா காட்சிகள் நம்மை அந்த பங்களாவின் அறைகளுக்குள் இன்ச் பை இன்ச்சாக திகிலுடன் உடன் அழைத்து செல்கிறது. அந்த பங்களாவின் மேப்பை மனப்பாடமாக நாம் சொல்லும் அளவிற்கு பிரித்து மேய்கிறது கோபியின் கேமரா.




க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க ஒரு வேளை ‘குடைக்குள் மழை’ போல் இருக்குமோ என்று நினைக்க தோன்றினாலும் இயக்குனர் ஜெயித்திருப்பது அந்த ட்விஸ்ட்டில் தான். சரி அந்த ட்விஸ்டோடு விட்டாரா என்றால் அதற்கு அடுத்தும் கடைசி காட்சியில் டிவியில் ”தில்லு முள்ளு தில்லு முள்ளு” பாடலை காட்டி அடுத்த உச்சகட்ட ட்விஸ்ட்டையும் வைத்து படத்தை முடிக்கிறார்.




ஒரு முழுமையான திகில் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் உங்களுக்கு “பீட்சா” மூலம். படம் பார்த்துவிட்டு ரூமுக்கு போக கொஞ்சம் பயமாக இருந்ததால் ஊரை சுற்றி விட்டு நண்பர்களிடம் ஃபோனில் மொக்கை போட்டுவிட்டு கொஞ்சம் பயம் மறைந்தவுடன் தான் அறைக்கு திரும்பினேன். கதவை திறந்தேன். கட்டிலில் யாரோ தின்றது போக மீதி பாதி இருந்தது ஒரு பீட்சா.. கதவு மூடிக்கொண்டு என் வீட்டு டிவியில் தில்லு முள்ளு பாடல் ஓட ஆரம்பிக்கிறது..

19 comments

  1. படத்துக்கு போகலாமா வேணாமா..!?
    ஏற்கனவே எனக்கு பயந்த சுபாவம்.,

    ReplyDelete
    Replies
    1. பயத்துல கட்டிப்புடிச்சுக்க யாரையாவது கூட்டிட்டு போங்கண்ணே..

      Delete
  2. நான் இன்னைக்கு பார்த்துட்டு பயந்துட்டு விபூதி பூசிட்டு படுத்துருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் பயத்துல தான் இருக்கேன்.. தனியா வேற தூங்கணும்.. இதுல பவர் கட் வேற

      Delete
  3. அருமையான விமர்சனம் ...

    ReplyDelete
  4. ஓளிப்பதிவாளரின் பெயர் கோபி அமர்னாத், திருத்தி எழுதவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தவறை தக்க நேரத்தில் சொன்னதற்கு நன்றி திருத்திவிட்டேன் PRAsad

      Delete
  5. தனியா போலாமா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போகலாம்

      Delete
  6. மேய்கிறது ஜார்ஜ் வில்லியமின் கேமரா.///gopi nnu la ella vimarsanathulayum potturukkanga

    ReplyDelete
    Replies
    1. தவறை தக்க நேரத்தில் சொன்னதற்கு நன்றி திருத்திவிட்டேன் Shabi

      Delete
  7. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  8. எத்தனை முறை படம் பார்த்தீர்கள்? ஆனா அடுத்தவன படம் பார்க்க விடாமல் பயபடுரமாதிரி இப்படியொரு விமர்சனம்....

    ReplyDelete
  9. எத்தனை முறை படம் பார்த்தீர்கள்? ஆனா அடுத்தவன படம் பார்க்க விடாமல் பயபடுரமாதிரி இப்படியொரு விமர்சனம்....

    ReplyDelete
  10. திகில் படத்திற்கேற்ற திகிலான விமர்சனம்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One