என் காதல்(கள்)... - சிறுகதை..

Tuesday, January 25, 2011

"நீ அடம்பிச்ச மாரியே கடைசில ஹீரோ சான்ஸ் கிடைச்சுறிச்சி போல? ம்ம் கலக்கு கலக்கு" வாழ்த்துகிறானா, பொறாமையில் பொங்குகிறானா என்றே கண்டுபிடிக்க முடியாத மாதிரி ஒரு சிரிப்போடு சொன்னான் என் ரூம்மேட். அசிஸ்ட்டன்ட் டைரக்டர் ஆவர்த்து முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

'நீ கடைசி வரைக்கும் முயற்சி செஞ்சுகிட்டே தான்டா இருப்ப' என்று நினைத்துக்கொண்டே "என்ன பாஸு, உங்க help இல்லாம இதெல்லாம் என்னால முடிஞ்சிருக்குமா?" என்று கூறிக்கொண்டே வெளியில் எனக்காக காத்திருந்த கம்பெனி காரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் அந்த சிறிய மேன்சன் சந்து வழியாக. குனிந்து துவைத்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துக்கொண்டே சென்றேன். அவள் டக்கென்று என்னை பார்த்தாள். பதட்டத்தில் வேறு எங்கோ பார்வையை அவசரமாக திருப்ப  அங்கிருந்த போஸ்ட் கம்பத்தில் 'நொங்' என்று முட்டினேன். அவள் சிரித்துக்கொண்டே, "பாத்துப்போங்கண்ணே" என்றாள். மேலே இருந்து அந்த உதவி இயக்குனர் சிரித்தான், அன்கு அது தான் மிகுந்த கடுப்பாக இருந்தது.

அண்ணன்! 'நல்ல வேலை முதலிலேயே சொல்லிவிட்டாள்' வருங்கால தொல்லையில் இருந்து தப்பித்தாக எண்ணிக்கொண்டேன். அன்றே அவளும் இப்படி சொல்லியிருந்தால், நான் இன்று நிம்மதியாக இருந்திருப்பேன். நான் என்ன வேலை செய்கிறேன், வேலை செய்கிறேனா இல்லையா, நான் யார், என்னவாக இருக்கிறேன் இப்படி என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு நாள் என்னிடம் வந்து இதே சந்துக்குள் "உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" என்றாள். பக்கத்து வீட்டுப்பெண் தான் இவள். முதல் வருடம் கல்லூரி போய்க்கொண்டு இருக்கிறாள். 'இப்போது எதற்கு கூப்பிடுகிறாள் என்று புரியவில்லை. ஒரு வேளை நான் மாடியில் நின்று கொண்டு இவளை சைட் அடிப்பதை அந்த உதவி இயக்கம் சொல்லிருச்சான்னு தெரியல'.

"என்ன வி... ம்ம்ஹிரும்.. என்ன விஷயம்ங்க?" தொண்டை லேசாக அடைத்துக்கொண்டது. அங்கு ஆட்கள் வேறு யாரும் இல்லை. அதனால் இவள் வைதாலோ, இல்லை, செருப்பால் அடித்தாலோ கூட யாருக்கும் தெரியாது, இவளாக சொல்லும் வரை. 
கீழே குனிந்து அடைத்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடையை பார்த்துக்கொண்டே சொன்னாள், "எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. பாக்குறதுக்கு எங்க அப்பா மாரியே இருக்கீங்க. இது லவ்வான்னு எனக்கு தெரியல, ஆனா உங்க விருப்பம் தான் எனக்கு தேவ"

பாதகத்தி, ஒரே மூச்சில் சொல்லிவிட்டாள் மிக வேகமாக. எனக்கு தான் மூச்சு அடைத்துக்கொண்டது. "நான் அப்பறம் சொல்றேனே" என்று கூறி நகரப்பார்த்தேன். "உங்க செல் நம்பர் குடுங்க" என்று வாங்கிக்கொண்டாள். அன்று சாயந்தரமே அவள் காதல் எங்கள் காதல் ஆனது. தினமும் விடிந்தது முதல் மறுநாள் விடியும் வரை பேச்சு பேச்சு பேச்சு தான் போனில். உருப்படியாக ஏதும் கிடையாது. "எங்காவது வெளியே கூட்டிட்டு போங்களேன்" என்று பல முறை கேட்டிருக்கிறாள். நான் எதாவது சொல்லி சமாளித்து விடுவேன். இது வரை நான் வேளை இல்லாமல் வெட்டியாக இருப்பது அவளுக்கு தெரியாது. 

ஒரு நாள் கண்டிப்பாக படத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்று சாதித்து விட்டாள். நானும் வேறு வழி இல்லாமல், அவளை படத்திற்கு அழைத்து சென்றேன். படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது; ரசித்துப்பார்த்தேன். படம் முடிந்து வெளியில் வரும் போது அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு கேட்டாள், "இந்த படம் உங்களுக்கு பிடிச்சுருக்கா?'
"ஆமா. என்ன?"

"எனக்கு பிடிக்கல"

"நான் இந்த மாதிரி படம் தான் விரும்பி பாப்பேன்" - அனுபவித்து ரசனையோடு சொன்னேன்.

"இந்த மாதிரி படமா? நீங்க என்ன பண்றீங்க?" - பயம் கலந்த பொறுப்புணர்வோடு கேட்டாள்.

இத்தனை நாள் தோன்றாத கேள்வி இப்போது அவள் மனதில். "சினிமால ஹீரோவா நடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்" அவள் முகத்தை பார்க்காமல் சொன்னேன்.

"அப்பறம் செலவுக்கு எல்லாம் என்ன பண்றீங்க?" - என்னை கொபமேற்றிய முதல் கேள்வி அவளிடம் இருந்து வந்தது.

"இங்க பாரு, படத்துக்கு கூட்டிட்டு வர சொன்ன. வந்தேன்ல? செலவ பத்தி உனக்கு என்ன? நான் பாத்துக்கிறேன்" - வெறும் வார்த்தையாக வந்ததே தவிர அவள் கேட்டா கேள்விக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் பதில் என்னிடம் இல்லை.

"நெனச்சேன், நீங்க இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வரும் போதே நெனச்சேன் நீங்களும் அப்படி தான் இருப்பீங்கன்னு" - நடு ரோட்டில் அழ ஆரம்பித்துவிட்டாள். மெதுவாக நான் அவளை சமாதானப்படுத்தி அவள் வீட்டில் போய் சேர்த்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த முதல் மற்றும் கடைசி படம் அது தான். "கற்றது தமிழ்" தன் அது.

மறுநாள் முதல் அவளிடம் இருந்து போன் வரவில்லை. நான் போன் செய்தாலும் அட்டன்ட் செய்யவில்லை. "dont disturb me" என்று ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பினாள். அதற்கு நான் பதிலும் அனுப்பவில்லை, அவளை மீண்டும் அழைக்கவில்லை. அன்று தான் நான் முதல் முதலாக பெண்களின் கோழைத்தனத்தை உணர்தேன். இதிலேயே நான் சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது இல்லையா? நடிக்க அழைந்து கொண்டிருக்கும் போது ஒரு group dancer மீது காதல் வந்தது. அதுவும் இதே போல் அல்பாயுசில் முடிந்தது. காரணம் அவள் கூற்றுப்படி "நீ எனக்கு ஏதாவது கிப்ட் குடுத்துருக்கியா? ஒரே ஒரு புக் குடுத்த, அது என்னன்னு கூட எனக்குப்புரியல, சரியான சாம்பிரானியா இருக்க". முடிந்தது இவளின் சகாப்தமும். நான் பரிசளித்த புத்தகம் ஓஷோவின் "பெண்ணின் பெருமை" பாரதி பாஸ்கரின் தமிழ் மொழிபெயர்ப்பில்.

அதற்குப்பிறகும் இரண்டு காதல்கள், இரண்டுமே தங்கள் மூதாதையர்கள் போலவே அல்பாயுசில் என் மீதும் என் ரசனை மீதும் என் மனநிலை மீதும் பழி சுமத்தி சென்றன. என்னைப்பார்த்து பயந்தன, 'இவனால் இந்த உலகில் காலம் தள்ள முடியாது' என்று. அதை அக்கறை என்று அந்தப்பெண்கள் சொன்னாலும், எனக்கு அவர்கள் பயப்படுவதாகவே தோன்றியது 'இவனோடு சேர்ந்தால் நாமும் இந்த உலகில் நிம்மதியாக காலம் தள்ள முடியாது' என்று அவர்கள் பயப்படுவதாக. என் ரசனை ஒத்த பெண்கள் இவ்வுலகில் இருக்க முடியாதென்று தீர்மானித்தேன். பெண்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக்கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன். ஆனாலும் ஒருத்தி எனக்காக வருவாள் என்கிற நப்பாசை மட்டும் இருந்தது.  இரண்டு செகண்டில் என் பழைய காதல்கள் ஞாபகம் வந்து போயின.

போஸ்ட் கம்பத்தில் அடிபட்டது தான் வலித்தது, அழ வேண்டும் போல் இருந்தது. லேசாக கண்ணீர் வந்தது. யாராவது பார்த்தால் அவமானமாக இருக்குமே என்று மூளை சொல்லியது. மனம், இதற்காவது அழு என்று வற்புறுத்தியது. ஒரு அழுத்தமான நிம்மதியை உணர்ந்தேன். அழுத்தமான நிம்மதி! அது நிம்மதியா? இல்லை மனம் கனமாகவே இருக்கிறது. காருக்கு அருகில் வந்துவிட்டேன்.

பச்சை நிற போர்ட் பிகோ பாசம் பிடித்துப்போன பாறாங்கல் போல நின்றுகொண்டிருந்தது. டிரைவர் 'இவ்வளவு நேரமா?' என்பது போல் பார்த்தான். காரை முன்புறம் வழுயாக சுற்றி வந்து டிரைவர் பக்கவாட்டில் உள்ள கதவை திறக்கப்போனேன். "இது ப்ரொடியூசர் சீட்டு, பின்னாடி உக்காரு" என்றான். 'என்னங்கடா இது? ஒரு ஹீரோக்கு இவ்வளவு தான் மரியாதையா?' என்று நினைத்தவாறே பின் இருக்கையில் நுழைந்தேன். 'சரி தான் நம்ம ஊர்ல ரஜினி கமலையே அவன் இவன் என்று தானே பேசுவோம்' என்று ஊருக்குள்ளும் என் சினிமா கனவுக்குள்ளும் மூழ்கினேன்.

"இவனெல்லாம் என்னத்தையா நடிக்கப்போறான்?" என்ற குரல் அலை அலையாக காதில் விழுந்தது. குரலை கவனிக்க முனைந்த போது தான் நான் தூங்கிப்போயிருப்பதே எனக்கு புரிந்தது. கண் விழுத்துப்பார்த்தால் ஒருவர் கோபமாக நின்று கொண்டிருந்தார் காருக்கு வெளியில். நான் விழித்ததை பார்த்து, "டேய் மொத நாளே இப்டி வரியே, நீ எல்லாம் என்னத்த கிழிக்கப்போற? உன்ன ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாருஅந்த டைரக்டர் பன்னாடைய சொல்லணும்." எனக்கு முகம் எல்லாம் வெளிறிப்போனது. 'அய்யோ கோவத்தில் என்னை அனுப்பிவிடுவார்களோ' என்று பயந்தேன். "போடா போய் சீன் என்னனு கேளு" என்று அவர் என்னை மன்னித்து அனுப்பினார். மன்னித்திருப்பார் என்று நானாக எண்ணிக்கொண்டேன்.

யாரிடம் சீன் கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் பாட்டுக்க நடந்து கொண்டே இருந்தேன். அப்போது தான் ஒன்றை கவனித்தேன். காரில் இருந்து இறங்கியதில் இருந்து ஒருவன் என்னுடனேயே வந்துகொண்டிருந்தான். அவனிடம் கேட்கலாம் என்று எத்தனித்த போது, அவனே, "சார், சீன் சொல்லவா சார்?" என்றான்.. 'சாரா?' - எனக்கு ஒருத்தன் சிக்கி விட்டான். அவனை வளைத்துக்கொண்டேன் என் வலதுகைக்குள்.

"ஆமா, நீ யாருப்பா?" கொஞ்சம் சத்தமாக தெனாவட்டாக கேட்டேன்.

"நான் அசிஸ்ட்டன்ட் டைரக்ட்டரா இன்னைக்கு தான் சார் சேந்துருக்குறேன்"

"ஓ.. சரி சரி.. கார்ல என்ன ஒருத்தர் வஞ்சிட்டு போனாரே அவரு யாரு, ப்ரோடியூசரா?"

"அவரு மேனேஜர் சார், இங்க எல்லாமே அவர் கண்ட்ரோல் தான். ப்ரோடியூசரே அவர் சொல்றத தான் கேப்பாரு"

அவனோடு பேசிக்கொண்டே இரண்டு மாடி ஏறி ஷூட்டிங் நடக்கும் அந்த தளத்திற்குள் வந்தேன். "சரிப்பா, சீன சொல்லு" என்றேன்.

"சார் ஹீரோயினும் இருக்காங்க, ரெண்டுபேருக்கும் சேர்த்து சொல்லிரேனே?" - என்ன அவசரம் அவனுக்கோ?.

"ஒஹ் இது டூயட் சீனா? யாருப்பா ஹீரோயின்" - எதிர்பார்ப்பும் சந்தோசமும் மனதில் நிரம்பி கேட்டேன்.

"அந்தா, சிகப்புகலர் டிரஸ் போட்டு டைரக்டர் கிட்ட இருக்காங்களே அவங்க தான்" - அவன் கை நீட்டிய திசையில் பார்த்தேன். மனதில் இருந்த எதிர்பார்ப்பும் சந்தோசமும் முகத்தில் வலிந்தது.

"சார் போலாமா?" - அவன் அரட்டல் தொனியில் கேட்பது போல் இருந்தது. என் முகத்தில் ஏதும் தெரிந்திருக்குமோ அவனுக்கு?

ஹீரோயின் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தோம். அருகில் செல்ல செல்ல உணரப்படும் சமுத்திரத்தின் பிரம்மாண்டத்தைப்போல, அவளின் அழகு என்னை பயமுறுத்தியது. ஆம் பயமுறுத்தும் அழகு. ஆனால் கள்ளம் கபடமற்றது. ஷேக்ஸ்பியர் சொன்னது போல அவளது கண்கள் உண்மையிலேயே "wild eyes", இரண்டு கதவுகள் கொண்ட நீண்ட கூரை வீடு போன்ற கூரான மூக்கு,  ரத்தம் வடிகிறதோ என்று எண்ணத்தக்க செவ்விதழ்கள். இதற்கு கீழ் வர்ணிக்கலாம் என்றால் அந்த சிகப்பு ஆடை அவள் கழுத்தில் இருந்து பாதம் வரை தடை உத்தரவு போட்டது, வர்ணிப்பதற்கு.

"வாப்பா" கவனம் கலைத்தார் இயக்குனர், "இது தான் சீன்" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தார். குரலை மாற்றி ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சி பூர்வமாக நடித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்னும் தெரிவது போலும் தெரியவில்லை, என் மண்டையில் ஏறுவதுபோலும் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது, இந்த சீன் மாதிரியே எல்லா சீனும் இருந்தால் இந்தப்படம் கண்டிப்பாக வெளிவராது.

"சரி எல்லாம் படத்தோட ப்ரோமோக்கு உதவுமே? வரச்சொல்லு" - டைரக்டர் தன் வழக்கமான குரலில் பேசும் போது நினைவுக்கு வந்தேன். "இதான்பா சீன். பத்திரிகைல இருந்து வந்துருக்காங்க, அவங்க பேசிட்டு போனதும் ரிஹர்சல், ஓகே?" - பத்திரிகை, ரிஹர்சலா? எனது வயிற்றில், காலையில் குடித்த டீ காந்தியது, கொதித்துக்கொண்டு மேல் எழும்பியது. 

பத்திரிகைகாரன் கடைசி வரை அவளிடமே கேள்வி கேட்டான். நான் ஒரே ஒரு போடோவுக்கு மட்டும் போஸ் கொடுத்தேன். அவள் பேட்டிக்கு பேசும் போது அவளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொண்டேன். ஊர் விசாகப்பட்டினம், படிப்பது, பி.ஏ. ஆங்கிலம் முதல் வருடம், கல்லூரி அழகி என்ற பட்டம் (குடுக்கலாம் தப்பில்லை).. தமிழ் தெலுகு ஆங்கிலம் கலந்து கொச்சையாக பேட்டி கொடுத்தாள்.

டைரக்டர் நகர்ந்த போது அவளிடம் கேட்டேன், "நீங்க விசாகப்பட்டினத்துல எந்த காலேஜில் படிக்குறிங்க?"

"ஏன் சொன்னா தெரியப்போகுதா?" - இப்போது நல்ல தமிழில் பேசி என்னை நோஸ்கட் செய்தாள். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. ப்ரொடக்சன் மேனேஜர் முதல் யார் திட்டியும் வராத துக்கம் இவள் இப்படி கேட்டதும் வந்துவிட்டது.

அவளே தொடர்ந்தாள். "ஹலோ என்ன சோகமாகிட்டிங்க? எனக்கே அது என்ன காலேஜின்னு தெரியாதுங்க. எனக்கு ஊர் கோவைப்பக்கம் ஒரு கிராமம். நாயக்கர் பூணு, அதனால தெலுகு பேசுவேன். பேரும் அனாமிகா இல்ல, என் பேரு விஜயலட்சுமி.  டைரக்டர் தான், 'ஆந்திரா பொண்ணுன்னு சொல்லு யார் கேட்டாலும்'னு சொல்லிட்டார். அதான் அப்படி சொன்னேன். உங்கள கோபப்படுத்தியிருந்தா சாரி"

நான் "பரவாயில்லைங்க" என்று சொல்வதற்குள் கூப்பிட்டுவிட்டான், இந்த இங்குள்ள உதவி. இந்த உதவிகள், உதவி செய்கிறார்களோ இல்லையோ, நல்லா உயிரை வாங்குகிறார்கள். படத்தின் முதல் காட்சி, முதல் ஷாட், முதல் டேக். நானும் அவளும் கோவிலில் சாமி கும்பிடுவதாக. காலை 11 மணி முதல் மாலை 6.30 வரை எடுத்தார்கள் அந்த ஒரு காட்சியை. இன்றைய ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது. கிளம்பலாம் என்று காரை தேடினால், ஒன்றும் இல்லை. "எப்பா நாளைக்கெல்லாம் கார் வராது, சீக்கிரம் எப்படியாது வந்துரு. உனக்கும் தாம்மா" - காலையில் எறிந்து விழுந்த மேனேஜர் இப்போது அக்கறையுடனும் கண்டிப்புடனும் சொன்னார்.

அவர் 'உனக்கும் தாம்மா' என்று சொன்னா போது தான் அருகில் அவளும் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு கான்ட்ராஸ்ட்டாக பச்சை வண்ண துப்பட்ட அணிந்திருந்தாள். "இப்போ என்னங்க பண்ணலாம்?" - அவள். பயந்து போனது போல் இருந்தாள். 

"என்னங்க ஆச்சு?"

"காலைல கார் வந்தது, எங்க சித்தி வீட்டில் இருந்து வந்துட்டேன், இப்போ எப்படி போறதுன்னு தெரியல" கிட்டத்தட்ட அழுது விட்டாள்.

"நீங்க எங்கங்க போகணும்?"

"எங்க சித்தி வீட்டுக்கு" - டக்கென்று ஒரு நீர் உருண்டை அவள் கண்களில் இருந்து நேராக உதட்டருகில் விழுந்தது. சிறு குழந்தை போல் இருந்தாள்.

"அது எங்க இருக்கு?"

"சோழிங்கநல்லூர்"

"சரிவாங்க நான் கூட்டிட்டுப்போறேன்" பேருந்து, ரயில் பின்பு ஆட்டோ என்று மூன்று விதமான பயணம் மேற்கொண்டு சென்றோம். அவளிடம் பணம் இருந்ததால் எல்லாப்பயணமும் சுமூகமாக சென்றுகொண்டிருந்தது. பல விஷயங்கள் பேசினோம். அவள் சென்ற வருடம் தான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, படிக்க வசதி இல்லாமல் இப்போது நடிக்க வந்திருக்கிறாள். நடிப்பில் அவளுக்கு ஆசை இருந்தது. என்னைப்பற்றி கேட்டாள். என்னைப்பற்றி எனக்கு பிடித்ததைப்பற்றி, படங்கள், புத்தகங்கள் பற்றி பேசினேன். 

"ஒஹ் நீங்க ரொம்ப வாசிப்பீங்களா?" ஒரு விதமான நக்கல் தொனியில் கேட்டாள்.

'மீண்டும் அதே அவமானமா' என்று நினைத்து, "ஆமா" என்று சொல்லி வாயை மூடவில்லை, சிரிக்க ஆரம்பித்துவிட்டால், நான் ஏதோ ஜோக் சொன்னது போல.

"இப்போ ஏன் சிரிக்குற?" அவள் சிரிப்பை முழுதாக ரசிக்கும் பொறுமை இழந்து கேட்டேன்.

"இல்ல, வாசிக்கிறதுன்னா, ஒரு டபுள் மீனிங் கேட்டா வார்த்த, அதான் சிரிச்சேன்" நானும் சிரிக்க ஆரம்பித்தேன். "சரி என்ன மாறி படம் பாப்பிங்க?"

'நீ என்னிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து போவதற்கு காரணமாக சொல்லவேண்டிய அனைத்துப்படங்களையும் பார்ப்பேன்' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. "சேரன், மிஸ்கின், பாலா, செல்வராகவன், மகேந்திரன், பார்த்திபன் இவர்கள் படமும் இன்னும் சிலரின் ஒரு சில படங்களும்" என்றேன்.

"நீங்க சொன்னா எல்லாரு படமும் நல்ல இருக்கும்ல? அதுவும் தவமாய் தவமிரிந்தும், சித்திரம் பேசுதடி படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு?" - உணர்ந்து அனுபவித்து பேசினாள்.

என் மனதில் ஒரு ஆனந்தம். வாழ்வில் நான் கண்ட, என் ரசனைக்குட்பட்ட பெண் இவள் தான் என்று. "ஒஹ். நீ இந்த மாதிரி படம் தான் பாப்பியா?"

"எல்லா படமும் பாப்பேன். எனக்கு பிடிச்சுருக்கணும், புதுசா இருக்கணும், ரசிக்க வைக்கணும் அவ்ளோ தான்" - எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாள் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு இயல்பாக எளிமையாக! நான் அவளின் ரசிகனானேன். "இது தான் எங்க சித்தி வீடு".. அவள் சித்தி வீடு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று தெரிந்திருந்தால், நான் இவளை நடக்க வைத்தே அழைத்து வந்திருப்பேன். வீட்டிற்குள் நுழையும் முன் என்னிடம் திரும்பி, "ரொம்ப தேங்க்ஸ், ஆஆ, பாருங்க இவ்ளோ நேரம் பேசிருக்கோம், உங்க பேரைக்கூட சொல்லல நீங்க? உங்க பேர் என்ன?"

எனக்கு ஞாபகம் வரவில்லை. 'அய்யய்யோ, என் பேரு என்ன?'.. "என் பேர் முகுந்தன்" என்றேன் நீண்ட தவிப்புக்குப்பிறகு. "அட, "நிலா நிழல்"ல ஹீரோ பேரும் முகுந்தன் தான். ஓகே பை, நாளைக்கு பாக்கலாம்" வீட்டிற்குள் மறைந்தாள்.

'நிலா நிழல் முகுந்தனா? இவள் சுஜாதா வாசிப்பாளா? ஆச்சரியமாக இருந்தது. இவள் புத்தகம் படிக்க மாட்டாள் என்று நானாக முன்பு எண்ணிக்கொண்டதை நினைத்து சிரித்தேன். வீட்டிற்கு போக பிடிக்கவில்லை. மனம் சந்தோசமாக இருந்தது, அங்கு போனால் அந்த உதவி இருப்பான், ஈஈஈ னு இழிச்சுக்கிட்டு. அப்படியே OMR இல் இருந்து ECR செல்லும் சாலையில் நடந்தேன். எல்லாமே பிடித்தது எனக்கு. "கலைஞர் கருணாநிதி சாலை" என்று போட்டிருந்தது. எனக்கு அந்த கலைஞர் கருணாநிதியையும் பிடித்தது. 

தினமும் அவளை நான் அவள் சித்தி வீட்டில் விட்டு வருவது தொடர்ந்தது. எங்கள் படம் முடிவது போல் தெரியவில்லை. எனக்கும் இந்தப்படம் முடியவே வேண்டாம் என்று தோன்றியது. என்னை இது வரை இவள் எங்கும் அழைத்து செல்ல சொன்னதில்லை, அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை. அர்த்தமுள்ள இந்து மதம் கொடுத்தேன். "என்கிட்டே ஏற்கனவே ஒன்னு இருக்கு, இருந்தாலும் உனக்காக வச்சுக்கிறேன்" - இப்போதெல்லாம் அவள் என்னை மிக அன்னியோன்யமாக ஒருமையில் தான் அழைக்க ஆரம்பித்தாள். என் கண் முன் "நீ வேண்டாம்" என்று சொன்ன அந்த பெண்கள் வந்து போனார்கள். அந்தப்பெண்களின் ரசனை மீது எனக்கு வர வேண்டிய கோபம் மொத்த பெண் வர்கத்தின் மீதே வந்தது. இவர்களை எல்லாம் எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று மனதில் ஒரு லட்சியவெறி கொண்டேன். இவள் மேல் உள்ள காதலை விட அந்த வெறி எனக்கு பெரிதாக இருந்தது.

எங்கள் இருவரின் மனதிலும் காதல் இருந்தது இருவருக்கும் புரிந்தது. யார் முதலில் சொல்வது என்று தயக்கம். ஒரு நாள் அவளை அவள் சித்தி வீட்டிற்கு கூட்டி செல்லும் போது, என் கையை பிடித்துக்கொண்டாள்.  என் முகத்துள் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தாள். ஒன்றுமே நடக்காதது போல் நான் நடந்தேன். "நான் ஒன்னு சொல்லட்டுமா?" என் முகம் பார்த்து கேட்டாள்.

"என்ன சொல்லு" சாலையை நேராக பார்த்துக்கொண்டு நான்.

"நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? எனக்கு உங்கள பிடிச்சிருக்கு" இப்போது அவள் முகத்தை மெதுவாக பார்க்கிறேன். வெட்கத்தில் கீழே குனிந்தாள். ஒரு பெண் வெட்கப்படுவதை, ஏன் ஒரு பெண்ணையே இப்போது தான் பார்க்கிறேன்.

"என்கிட்டே அப்படி என்ன இருக்குன்னு என்ன பிடிக்குது உனக்கு?"

"தெரியல, ஆனா உங்கள பிடிக்கிறது, நீங்க தான் வேணும்னு மனசு சொல்லுது" - திடீரென்று மரியாதையாக பேசினாள். அங்கு அவள் நிற்க வில்லை, அவள் உருவில் என்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் சோக உருவம் தான் எனக்கு தெரிந்தது. அவர்கள் சோகமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. மேலும் அவர்களை வாழ்க்கை முழுதும் அழ வைக்க எண்ணினேன். 

அவள் சித்தி வீடு வந்துவிட்டது. "நான் வரேன்" என்று வேகமாக கிளம்ப நினைத்தேன்.

"ஏதாவது சொல்லிட்டு போங்க" ஏக்கமாக கேட்டாள்.

"நீ சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல விஜி. என்னால உன்ன வச்சு நல்ல வாழ முடியாது. அதே மாதிரி, நம்ம பழக்கம் காதலாக இருக்கும்னு நான் எதிர்பாக்கல. நீ தப்பா நெனச்சுகிட்டா ஐயாம் சாரி.." - அவள் முகத்தில் என்ன விதமான உணர்ச்சி வருகிறது என்று பார்த்தேன்.

ஒன்றுமே சொல்லாமல் ஒரு விரக்த்தியான சிரிப்போடு உள்ளே சென்றாள். என்னை வேண்டாம் என்று மறுத்த பெண் வர்கத்திற்கு, நான் இன்று வேண்டாம் என்று கூறி என் திமிரை காட்டி விட்டேன். மனதில் ஒரு ஆனந்தம். விஜி போன சோகம் இருந்தாலும் இந்த ஆனந்தம் பரமானந்தமாக இருக்கிறது. அதே OMR-ECR ரோடில் சென்றேன். கலைஞர் கருணாநிதி சாலை. எனக்கு இப்போது கருணாநிதியை ரொம்ப பிடித்தது.. 

மறுநாள் காலை விடிந்ததும் மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். அவள் போன் பண்ணினால், நான் அட்டன்ட் செய்ய வில்லை. 'dont disturb' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். எனக்கு இதெல்லாம் தவறு என்று தெரிந்தாலும் சந்தோசமாக இருந்தது. எனக்கு பிடிக்காத பெண் இனத்தை பழி வாங்கிய ஒரு திருப்தி என்று சொல்லலாம். அன்று முதல் நான் ஷூட்டிங் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தேன். ஒரு நாள் பொழுது போகாமல் செய்தித்தாள் எடுத்து வாசித்தேன். அந்த செய்தி என் கண்ணில் பட்டது. "சோழிங்கநல்லூரில் புதுமுக நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா?"

அந்த சேதியை படித்தவுடன் எனக்கு தோன்றியது, 'என்னை அன்று ஒருத்தி வேண்டாம் என்று சொன்னபோதே நான் இப்படி ரோசக்காரனாய் செத்துப்போயிருந்தால் இன்று இவள் செத்திருக்க மாட்டாள். என் காதல்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எல்லாமே என் ஈகோ தான். என்னிடம் ஈகோ இருந்தது காதல் இல்லை,  ஆனால் இதோ இவளது ரோசமான ஈகோவிலும் காதலே நிரம்பி வந்து என்னை மீண்டும் களவாடத்துடிக்கிறது. ரோசக்காரி நான் இல்லாமல் இருந்துவிடுவாள? மாட்டாள். இதோ என்னை களவாடிச்செல்கிறது அவளின் காதல். நான் மேலே பறக்கின்றேன். என் கண்கள் விட்டத்தைப்பார்த்து லேசாக மூடுகின்றன, கையில் குளிர்ச்சியை உணர்கிறேன், என் அறையில் ரத்த வாசனை..

4 comments

  1. தலைவா கலக்கிடீங்க 'நீ என்னிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து போவதற்கு காரணமாக சொல்லவேண்டிய அனைத்துப்படங்களையும் பார்ப்பேன்' class.

    ReplyDelete
  2. ram anna.....
    wow!!! brilliant! got no words! ur simply brilliant :)

    ReplyDelete
  3. @NayaAnvesha: thank u.. but may i know who is this?

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One