ஆறாம் வகுப்பில் இருந்தே "தமிழ் மூன்று வகைப்படும், அவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழாகும்" என்று மனப்பாடம் செய்ய வைத்தும் மண்டையில் கொட்டியும் எனக்கு தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் விவரம் தெரிய ஆரம்பித்தப்பிறகு இதனோடு சேர்த்து இன்னும் ஒரு தமிழ் இருப்பதாகவே எனக்குப்படுகிறது. அது தான் அறிக்கைத்தமிழ்.
இயல் தமிழுக்கும் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் இன்னார் தான் வழிகாட்டி என்றோ, இவர் தான் உருவாக்கியர் என்றோ கூறமுடியாது. ஆனால் இந்த அறிக்கைத்தமிழை உருவாக்கியவர், செயல்படுத்துபவர், உயிர்ப்போடு வைத்திருப்பவர், ஏகபோக உரிமை பெற்றவர் (வேறவேற ஆள் இல்லை, ஒருத்தர் தான்) நமது கலைஞர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் முதல்வர் (ஷெப்பா... முடியல, எத்தன பட்டம்?) கருணாநிதி.
முத்தமிழுக்கு இருக்கும் விளக்கம் போல இந்த நான்காவது தமிழுக்கும் விளக்கம் உள்ளது. இயல் தமிழின் இயல்பான நடையைக்கொண்டு நாடகத்தமிழ் பாணியில் கற்பனைக்கு எட்டாத விசயங்களை நாராசமாய் கூறுவது தான் இந்த அறிக்கைத்தமிழ் எனப்படுவது.
சரி, இந்த அறிக்கைத்தமிழ் எப்படி தோன்றியது?
அறிக்கைத்தமிழுக்கு முன்னோடி, மேடைத்தமிழ். இதை பிரபலப்படுத்தி, ஒரு பெரிய புரட்சியே செய்தவர் அறிஞர் அண்ணா. மேடைத்தமிழில் ஒன்றும் பெரிதாக ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது நாடகத்தமிழைப்போல் ஒரு நாடகமே. நடிகர்களுக்கு பதிலாக அரசியல்வாதிகள் நடிப்பார்கள். மேடை நாடகம் எப்படி கற்பனையோ, அதே போல் மேடைத்தமிழும் கற்பனை தான். என்ன ஒன்று நாடகத்தமிழை விட அதீத கற்பனையாக இருக்கும். ஆனால் எல்லாமே நீங்கள் நம்பும் படி இருக்கும். உண்மை என்று நம்பி அவர்களுக்கு ஓட்டு குத்தியவர்களை, அவர்கள் குனிய வைத்து குத்தினார்கள். அப்படிப்பட்ட கும்மாங்குத்துக்கு மிகச்சிறந்த உதாரணம், மேடையில் அறிஞர் அண்ணா, "எங்களுக்கு வாக்களித்தால் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்" என்று சீறினார் (பொடி போட்டு மூக்கைத்தான் சீறினார், மக்கள் தான் அந்த சீற்றத்தை வேறமாதிரி எடுத்துக்கொண்டார்கள்). கடைசியில் அந்த அலங்கார மேடைத்தமிழ் தேர்தலில் வென்றது. 'நமக்கெல்லாம் ஒரு படி அரிசி உண்டு' என்று நம்பிய மக்களுக்கு இன்னொரு மேடையில் அதற்கு பதில் கிடைத்தது.
"ஒரு பிடி நிச்சயம் ஒரு படி லட்சியம்"
இந்த மாதிரி எகனை மொகனையில் மேடையில் பேசி மக்களை ஏமாற்றி வந்ததே மேடைத்தமிழ் எனப்பட்டது.
அரசியில் கூட்டங்களுக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாக விடுத்து மக்களும் செய்தித்தாளுக்கு மாறினார்கள். அப்போது தான் மேடைத்தமிழும் அறிக்கைத்தமிழாக உருமாறியது. அண்ணாவின் பட்டறையில் சம்மட்டி அடிக்கேன்றே தேர்ந்தெடுத்து தயாரிக்கப்பட்ட கருணாநிதி தான் இதை சினிமா நடிகர் போஸ்டர் மாதிரி பேமஸ் ஆக்கினார். பேச்சாக மேடையில் இருந்த எகனை மோகனை எழுத்தாக செய்தித்தாளில் அறிக்கையாக வந்தது. அவர் எழுதும் அறிக்கைக்காகவே மக்கள் செய்தித்தாள் வாசித்தனர். அனல் கக்கும் வார்த்தைகளை அள்ளிவீசுவார் ஆளும் கட்சியின் மீது (13 வருட வனவாசத்தின் போது தானே வீறு கொண்டுப்பாயும் வேங்கையாக அறிக்கைப்போர் செய்தார்). ஆனாலும் அவரை வாசித்து விட்டு தேர்தல் என்று வரும் போது மக்கள் என்னமோ அவரை மறந்துவிடுவார்கள்.
அறிக்கைத்தமிழ் அவரை காப்பாற்றியதோ இல்லையோ, ஆண்டவன் எம்.ஜி.யாரின் மரணம் மூலம் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தான். அதற்குப்பிறகு ஒரு முறை மாற்றி ஒரு முறை என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்தார். இவருடைய அறிக்கைகள் இந்த காலகட்டத்தில் தான் தாறுமாறாக கடமையை செய்தன. ஆளும் கட்சியாக இருக்கும் போது எதிர் கட்சியை தூற்றும், எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் தலைவியை ஒரு மஞ்சள் பத்திரிகை அளவிற்கு கேவலமாக அசிங்கப்படுத்தும்.
சினிமாக்காரர்களைப்பற்றி அறிக்கை என்றால் "நானும் ஒரு சினிமாக்காரன். இவர்களோடு இருக்கும் போது தான் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது" என்பார்.
ஹரிஜன மக்களைப்பற்றி என்றால் முந்தைய பத்தியில் சினிமாக்காரன் என்று உள்ள இடத்தில் தாழ்த்தப்பட்டவன் என்று மாற்றி படிக்கவும். இது தான் இவரின் கொள்கை அறிக்கை எல்லாம்.
தமிழ் தமிழ் என்று உயிரை விடும் இவரின் அறிக்கைகள், கைக்கெட்டும் தூரத்தில் தமிழனின் உயிர் போகும் போது மும்முரமாக டில்லிக்கு தந்தி கொடுக்கும் (நாட்டுப்பணி முக்கியம் அல்லவா?)
ஆனால் 'கழகமே குடும்பம்' 'குடும்பமே கழகம்' என்று குழப்பிக்குழப்பி பேசி மந்திரிப்பதவிக்கு மட்டும் தள்ளாத வயதிலும் அவசரமாக டில்லி சென்று தேவைப்படும் துறையை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் உயிராக காட்டிக்கொளும் தமிழனுக்கு தந்தி மட்டும் தான்.
பிறர் ஆட்சியில் ஊழல் நடந்தால் "பாரீர் கொடுமையை, நாட்டின் சீரழிவை" என்று கட்டுரை நடையில் கவிதை ஒன்று வரும். அதே இவர் ஆட்சியில் நடந்தால் "தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் மந்திரியாக இருந்தால் இப்படி பாடு படுத்தலாமா?" என்று சாக்கடை மனம் வீசும்.
"ஒருவரால் இவ்வளவும் செய்ய முடியுமா?" என்று எழுதும் பேனா, மறுநாளே அதை மாற்றி எழுதும். வியாபாரப்போட்டி வந்தாள் சொந்தத்தையே தூக்கி எறியும், மந்திரியாக இருந்தாலும் மண்டியிட வேண்டும் தாத்தாவிடம். வியாபார பேரம் முடிந்த உடன் அறிக்கை வரும் "கண்கள் பணித்தது, இதயம் இனித்தது" என்று. (நாக்கில் தான் எனக்கெல்லாம் இனிக்கும் இவருக்கு மட்டும் இதயத்தில் தான் இனிக்கும். ஓவர் சுகராக இருக்குமோ? என்னே அறிக்கைத்தமிழின் மகிமை?!)
தேர்தலில் தோற்றால் மக்களை கேவலமாக சாடி அறிக்கை வரும். அதே ஜெயித்தால் "எங்கள் திட்டத்தின் வெற்றி" என்று அவர்களே அவர்களை பாராட்டி அறிக்கை வரும். அறிக்கைத்தமிழில் பகுத்தறிவும் ஒரு காமடி பீசாக வரும்.
"தூரத்தில் இருந்து பார்த்தாலும் மஞ்சள் வண்ணம் பளீர் என்று தெரியும்; அதனால் தான் நான் மஞ்சள் வண்ண துண்டு அணிகிறேன்" என்பதில் இருந்து தஞ்சை பெரியகோயிலின் புறவாசல் வழியாக வருவது வரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நொண்டி சாக்கு கண்டிப்பாக இருக்கும் இந்த அறிக்கைத்தமிழில்.
தீபாவளிக்கு வாழ்த்து வராது, அதுவே பகுத்தறிவுக்கு உட்பட்ட ஈஸ்டர் போன்ற திருவிழாவிற்கு வாழ்த்து வரும். மக்களும் மழுமட்டைகள் போல எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு எருமை மாடு போல் இருப்பார்கள். தேர்தலில் தோற்பீர்கள் என்று கருத்துக்கணிப்பு வந்ததும் இவர் விட்ட அறிக்கை தான் உலகப்புகழ் பெற்றது.
"2ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி இலவச நிலம், இலவச வேலை (ஓசில காசு வந்தா அது இலவச வேலை தானே?!)" என்று ஒரு வெயிட்டான அறிக்கை வந்தது. என் வயசுப்பசங்கள் எல்லாம் "girl friend இல்லாத இளைஞர்களுக்கு இலவச girl friend" என்று அறிக்கை வராதா என ஏங்கினோம். செயலில் மட்டுமே ஏமாற்றும் இவர் இந்த விஷயத்தில் எங்களை அறிக்கையிலே ஏமாற்றி விட்டார்.
'அவர்கள் டிவி கொடுப்பதே வியாபாரம் பெருகத்தான். எங்கே, டிவி கொடுப்பவர்களை கேபிள் கனெக்சனும் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்' என்று பிற கட்சிகள் சொன்னாலும் நாம் காதில் வாங்கவில்லை. ஆனால் நமது அறிக்கைத்தலைவர் அதற்கும் ஓர் அறிக்கை விட்டார். "பசு தான் கொடுக்க முடியும் அதைக்கட்ட கயிறுமா கொடுக்க முடியும்?" என்று ஆதம்சிமித்தே ஆஆவென்று வாய் பிளக்கும் படி பொருளாதாரக்கேள்வி கேட்டார் நமது தானைத்தலைவர். டிவி என்றதும் நாமும் ஈஈஈஈ என்று இளித்துக்கொண்டு குத்து குத்தென்று குத்தினோம். டிவி யும் கொடுத்தார்கள். பார்ப்பதற்கு கரண்ட் மட்டும் தான் இல்லை, மற்ற எல்லாமும் இருந்தது.
தேர்தலில் ஜெயித்தாலும் அறிக்கை மட்டும் குறைந்ததே இல்லை. கட்சியினரைப்பற்றி யாராவது உண்மையை எழுதினால், "என் குடுமபத்தைப்பற்றி ஏன் இப்படி எழுதுகிறார்கள்?" என்று அறிக்கையில் கண்ணீர் வடியும், சில சமயம் கோபமும் கொப்பளிக்கும். குடும்பம் முழுதும் கட்சியில் இருந்தால் அப்படித்தானே இருக்கும்?
சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு நாள் "என் பெயரில் இருக்கும் சொத்துக்கள்" என்று ஒரு அறிக்கை வரும். ஒரு அரசு அலுவலக பியூன் கூட அதை விட அதிக சொத்து வைத்திருப்பான். 'குடும்பத்துல இருக்குற எல்லாரு சொத்துக்கணக்கையும் காட்டுங்க" என்று யாரவது கேட்டால், ஒரு இரண்டு நாளைக்கு அறிக்கைக்கு லீவு வந்து விடும். மக்கள் ஓரளவு உஷார் ஆனால், அறிக்கை 1800 களுக்கு சென்று விடும் 'நான் ஒரு கீழ்ஜாதி, அதனால் தான் என்னை யாரும் மதிப்பது இல்ல, ....." அது இதுவென்று ஏதேதோ கிடக்கும் அந்த அறிக்கையில்.
இந்த அறிக்கைத்தமிழைப்பற்றி தெளிவாக தெரிந்தாலும் இன்னமும் தமிழன் காத்துக்கொண்டு தான் இருக்கிறான், இவரின் இந்த வருட தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள் வரும் என்று. சொரணை இருக்கும் தமிழன் என்றால், அவன் என்ன செய்வான் தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் வரும் தேர்தல் முடிவு வந்தவுடன் சொல்கிறேன்...
முத்தமிழுக்கு இருக்கும் விளக்கம் போல இந்த நான்காவது தமிழுக்கும் விளக்கம் உள்ளது. இயல் தமிழின் இயல்பான நடையைக்கொண்டு நாடகத்தமிழ் பாணியில் கற்பனைக்கு எட்டாத விசயங்களை நாராசமாய் கூறுவது தான் இந்த அறிக்கைத்தமிழ் எனப்படுவது.//// :) Arumai
ReplyDeleteநன்றி நண்பரே.. ஏன் அனானியாக வருகிறீர்கள்? இருந்தாலும் தங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி..
ReplyDelete