பொய் சத்தியம்...

Thursday, January 6, 2011

எப்போதோ பெய்த மழையில் பதிந்த டிராக்டர் தடம் அப்படியே மாறாமல் கல் போன்று இருந்ததைப்பார்க்கும் போதே தெரிந்தது, இப்போது இந்த கிரௌண்ட்டில் சிறுவர்கள் யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று. இது உண்மையில் கிரௌண்ட் கிடையாது. ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு சாதாரண தீப்பெட்டி ஆலை - ஸ்டார் மேட்ச் தீப்பெட்டி பாக்டரி. ஞாயிற்றுக்கிழமையானால் நாங்கள் இங்கு தான் கிரிக்கெட் விளையாட வருவோம். நாங்கள் என்றால் ராஜா அண்ணே, குமார் அண்ணே, அன்பு, கணேஷ், சிவாத்தம்பி பின்பு நான்.

பாக்டரியை சுற்றி இரும்பு வேளியும், உயரமான இரும்பு கேட்டும் இருக்கும். எல்லோரும் கேட்டின் மீது ஏறி உள்ளே  போவார்கள். நான் மட்டும் மேலே ஏறுவதற்கு பயந்து கொண்டு, வேளிக்கம்பி வழியாக புகுந்து செல்வேன். சட்டை கிழிந்தால் ஆச்சி அடிப்பார்கள் என்ற பயம் இருந்தாலும், மேலே ஏறுவதை விட இந்த பயம் பெரியதாக தெரியவில்லை. உள்ளே தரை முழுவதும் புற்களாக இருக்கும். பல அடி தூரம் சென்ற பின் தான் கட்டிடமே ஆரம்பிக்கம். இந்த பூகோள அமைப்பு தான் அந்த இடத்தை எங்களின் ஓவல் மைதானமாக்கியது. சுவற்றில் கரிக்கட்டையால் மூன்று கோடுகள் செங்குத்தாக போட்டு, அதன் மேல் இரு சிறு கோடுகள் போட்டால் எங்கள் ஸ்டம்ப் தயார். இது பாட் செய்பவனின் ஸ்டம்ப். பௌலிங் போடுபவனுக்கு சில அடி தூரம் தள்ளி இருக்கும் அந்த வேப்ப மரம் தான் ஸ்டம்ப்.

எனக்கு கிரிக்கெட்டில் சுத்தமாக எதுவும் தெரியாது. வீட்டில் இருந்தால், 'கூரை கடையில தேங்காய் சில்லு வாங்கிட்டு வா', 'உப்பு வாங்கிட்டு வா' என்று ஆச்சி ஓயாமல் வேலை சொல்லுவார் என்று பயந்து இவர்களோடு ஐக்கியம் ஆகிவிட்டேன். அவர்களும் என்னை ஆள் கணக்குக்காக வைத்திருந்தார்கள். பந்து வாய்க்காலில் விழுந்தால் நான் தான் எடுக்க வேண்டும், நான் தான் கடைசி பேட்ஸ்மேன். எனக்கு பௌலிங் கொடுக்க மாட்டார்கள், கொடுக்க மாட்டார்கள் என்பதை விட, என் திறமை அவர்களை அப்படி செய்ய வைத்தது. 
டாஸ் எல்லாம் போடுவது கிடையாது. யாரையாவது குனிய சொல்லுவார்கள்; பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன். 
என் முதுகுக்குப்பின்னால் விரல்களை மடக்கி 'இது யாருக்கு?' - குமாரண்ணே..
"சிவாத்தம்பிக்கு" - நான்..
"இது?"
"எனக்கு"
இப்படியே வரிசையாக ஐந்து பேருக்கும் சொல்லி முடித்து நிமிர்ந்து பார்த்தால், "டே ராமு நீ தான்டா லாஸ்ட் பேட்டிங்" என்பார்கள். 
'ச்சே, இந்த தடவையும் நாம கரக்ட்டா சொல்லலையே' என்று என் விதியை நொந்து கொண்டு பீல்டிங் செய்ய ஆரம்பிப்பேன்.
ஒன் பிச் கேட்ச், ஆப் சைடு மட்டும் தான் ரன், பந்து சுவரை தாண்டி வெளியே விழுந்தால் பேட்ஸ்மேன் அவுட் போன்ற மிக கஷ்டமான விதிமுறைகள் எல்லாம் உண்டு. LBW மட்டும் கிடையாது. ஏனென்றால் எங்கள் யாருக்கும் அது என்னவென்றே தெரியாது.

பந்து சுவரை தாண்டி வெளியில் போனாலும், லெக் சைடு சென்றாலும், சாக்கடைக்குள் விழுந்தாலும் நான் தான் வேகமாக சென்று எடுத்து வரவேண்டும். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், 'பேசாம ஆச்சி சொல் பேச்சு கேட்டுக்கிட்டு கூரைக்கடைக்கு போயிருந்தா கூட இவ்வளோ அலைச்சல் இருந்துருக்காது. அடுத்த வாரம் எல்லாம் வெளாடவே வரக்கூடாது' என்று. ஆனால் மறுவாரம் ராஜாண்ணே வீட்டில் பொய் "அண்ணே மணி பத்தாகப்போகுது, வேமா வாங்கண்ணே ஸ்டார் மேட்ச்க்கு போவோம்' என்று அவர்களை இழுத்துச்செல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

"ஒனக்கு சூடு சொரணையே கெடையாது தம்பி, போனவாரம் தான, சாக்கடைக்குள்ளலாம் கையை விட சொல்லுறாங்க, நான் போகமாட்டேன்னு சொன்ன? இப்போ அவைங்கள விட நீ தான் மொத ஆளா கெளம்புற?" என்று அம்மா குறைபட்டுக்கொள்வார்.
அன்றும் வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தோம். குமார் அண்ணே தான் பேட்டிங். யார் பால் போட்டாலும் விளாசிடுவார் விளாசி. அன்று ஆரம்பம் முதலே அவர் தான் பேட் பிடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் என்னை கருவிக்கொண்டிருந்தார்கள், அவர் பெயரை நான் ஒன்றாம் இடத்திற்கு சொல்லியதால். சிவாத்தம்பி பால் போட்டுக்கொண்டிருந்தான். ராஜாண்ணே ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தார். கணேஷும் அன்புவும் போர் லைனுக்கு பக்கத்தில் இருந்தனர். நான் நடுவில், எதற்கும் சம்பந்தமே இல்லாமல், கிரௌண்டில் நுழைந்துவிட்ட ஒரு பார்வையாளனைப்போல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

'ச்சே குமாரண்ணே எவ்வளோ அழகா பாட்டிங் பண்றாங்க, நமக்கு மட்டும் ஏன் பாடிங் வர மாட்டேங்குது?' என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது தான் ராஜாண்ணே குரல் கேட்டது..

"டே ராமு அந்த பந்த புடிடா" - நாய் துரத்தும் போது 'காப்பாத்துங்க' என்று அபயக்குரல் எழுப்புவது போல் இருந்தது அவர் கத்தும் தொனி.

நான் தரையில் தேடிக்கொண்டிருந்தேன். சிவாத்தம்பி கத்தினான், "டே மயிரு உன் மண்டைக்கு மேல பாருடா"

'ஐயோ மண்டைக்கு மேலயா?' என்று பயந்து கொண்டே மேலே பார்த்தேன். ஆமாம் அந்த சிவப்பு நிற ரப்பர் பந்து, சினிமா கிராபிக்ஸில் துப்பாக்கியில் இருந்து வரும் குண்டு போல, என்னை நோக்கி அசுர வேகத்தில் வந்தது. 

"ஹி ஹி ஹி" குமாரண்ணே நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தார்.

"அவுட்சாட்" என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஆனந்தமாக ஓடிவந்தான் சிவாத்தம்பி. 

"டே, உனக்கு இத விட வேற கேவலம் தேவ இல்லடா. ராமு உன்ன கேட்ச் புடிச்சி அவுட் ஆக்கிருக்காண்டா. போ போ அந்த மூலைல பொய் உக்காரு" ராஜாண்ணே தன் பங்குக்கு குமார் அண்ணனை வெறுப்பேத்தினார்.

"எவம்டே அங்க? ஒருவாட்டி சொன்னா அறிவு வராதா? வாராவாரம் இதே ரோதனையா போச்சு" - பாக்டரி வாட்ச்மன் வைதுகொண்டே கையில் ஒரு குச்சியுடன் வந்தார்.

அன்றைய ஆட்டம் முடிந்தது. அவர் கையில் சிக்காமல் ஒரு வழியாக தப்பித்து ஓடி எங்கள் தெருவிற்குள் வந்தோம். தெரு இன்று கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது. ஆண்களும் பெண்களும் தங்கள் வீட்டிற்கு வெளியிலும் ராஜாண்ணே வீட்டை சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாண்ணே வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்டது.

ராஜாண்ணே அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். ஒரு சனிகிழமை காலையில் எங்கள் கிரிக்கெட் டீம் காலைக்கடனை கழிக்க புறப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் யாரும் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை. நாங்கள் எல்லோரும் ராஜாண்ணேனும் விளையாட வர வேண்டும் என எண்ணினோம்.

"நாளைக்கு வெளாட போவுமாடா?" ராஜாண்ணனே கேட்டார். எல்லோருக்கும் சந்தோசம். 
"ஹ்ம்ம் இப்போ ராமுவும் நல்ல பிளேயர் ஆகிட்டான்" என்று குமாரண்ணே சொன்னார்.

"எப்போரிந்து?" - ராஜாண்ணே..

"அன்னைக்கு என்ன கேட்ச் புடிச்சான்ல? அப்பொல இருந்து!" - எனக்குப்பெருமையாக இருந்தது.

"ஆமா, அது கைக்கு வந்த கேட்ச்சு, பச்ச புள்ள கூட புடிச்சுரும் அத" என்று அடஹி மிக சாதாரணமாக சொன்னார் ராஜாண்ணே.
"அதெல்லாம் இல்லண்ணே. அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சு தெரியுமா? ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன்" - என் வாழ்நாள் சாதனையைப்போல் அதை விளக்க முயற்சித்தேன்.

"அது உனக்கு உயரமாடா? நெஞ்சு உயரத்துக்கு கூட வரல"

"பொய் சொல்லாதீங்கண்ணே. பிடிச்ச எனக்கு தான் தெரியும் அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சுன்னு"

"டே பந்து வருதுன்னு உனக்கு சொன்னவனே நான் தான். எனக்கே சொல்றியா நீயி?"

"அண்ணே சத்தியமா சொல்றேண்ணே, பந்து அவ்ளோ உயரம் வந்துருக்கும்" என்று பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் உயரத்தை சுட்டிக்காட்டி சொன்னேன்.

"நானும் சத்தியமா தான்டா சொல்றேன், அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சி. ஏதோ ஒரு கேட்ச் புடிச்சாலும் புடிச்ச, இந்தளவுக்கு ஆடுறியே டா"

அவரின் இந்த பேச்சு எனக்கு மிகுந்த கோபம் ஊட்டியது. "எங்க என் கைல, உங்க படிப்பு மேல சத்தியம் பண்ணுங்க, அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சுன்னு?" கையை ராஜா அண்ணனை நோக்கி நீட்டினேன்.

"ஆமாடா, சத்தியமா அப்டி தான் வந்துச்சு" - அசால்ட்டாக சத்தியம் செய்து விட்டார் கொஞ்சமும் யோசிக்காமல், கொஞ்சமும் பயம் இல்லாமல்.

"நானும் சத்தியமா சொல்றேன் அது இந்த மரம் அளவுக்கு உயரமா வந்துச்சி." என் கையில் நானே சத்தியம் செய்து கொண்டு அதை காற்றில் ஊதி விட்டேன். எனக்கு நன்றாகத்தெரியும் அது உயரமாகத்தான் வந்தது. அப்படியே ராஜா அண்ணனையும் எச்சரித்தேன், "அண்ணே பொய் சத்தியம் செஞ்சா பெயில் ஆகிருவாங்கண்ணே"..

"அப்டியா? அப்ப போய் ஒழுங்கா படி. இல்லாட்டி பெயில் ஆகிருவ" என்று நக்கலாக சொல்லி சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு நான் ஒரு கேட்ச்யும் பிடிக்கவில்லை. முழுஆண்டுத்தேர்வு நெருங்கியதால் நாங்களும் அவ்வளவாக விளையாட செல்லவில்லை. பரீட்சை நெருங்க நெருங்க எனக்கு பயம் மிகவும் அதிகரித்தது. 'ஒரு வேளை பந்து உயரம் கம்மியாக தான் வந்திருக்குமோ?'. ஆனாலும் அது மிக உயரத்தில் இருந்து வந்ததாகவே எனக்கு ஞாபகம். ஒரு வேளை முதல் கேட்ச் என்பதால் அப்படியா? உயரமாக வந்தது என்று முழுதாக நம்பிய நான் இப்போது குழப்பத்தில் இருந்தேன்; உண்மையிலேயே அது உயர்மாகத்தன் வந்ததா என்று..

ராஜா அண்ணே எப்போதும் போல் அமைதியாக படித்துக்கொண்டிருந்தார். பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமானது. பழையபடி எல்லோரும் மீண்டும் விளையாட ஆரம்பித்தோம். ஒரு நாள் காலை விளையாட போகும் போது, "டே ரிசல்ட் போட்டுட்டாங்கலாம்டா" என்று சிவாத்தம்பி சொன்னான். எனக்கு மிகவும் பீதியாகிவிட்டது. என்னைப்போன்று சுமாராகப்படிக்கும் பலருக்கும் தெரியும் ரிசல்ட் வரும் வரை விடுமறை நாள் எவ்வளவு கொடூரமாகவும் ராட்சசத்தனமாகவும் இருக்கும் என்று.

நான் ரிசல்ட் பார்க்கவே செல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிவாத்தம்பி வந்து சொன்னான் "டே ராமு நம்ம செட்ல ராஜா அண்ணன தவிர எல்லாரும் பாசுடா" என்று.

என் மனதில் அந்த சத்தியம் ஞாபகம் வந்தது. 'அப்போ நாம உயரத்துல வந்த பந்தத்தான் கேட்ச் பிடிச்சுருக்கோம்" என்று நினைத்துக்கொண்டேன். அதற்குப்பின் ராஜா அண்ணன் படிக்கவும் போக வில்லை, விளையாடவும் வர வில்லை. பெயிலாகிப்போனதால் நாங்கள் விளையாடச்செல்லும் அதே ஸ்டார் மேட்ச் பாக்டரியில் அவர் வேலைக்கு சென்று விட்டார். "அன்னைக்கு பொய் சத்தியம் பண்ணுனனாலதான் நீங்க பெயில் ஆகிட்டீங்க" என்று அவரிடம் என்னால் இப்போது வரை சொல்ல முடியவில்லை..

7 comments

  1. பாவம் ராஜா அண்ணன்...இருந்தாலும் அவரு பொய் சத்தியம் பண்ணது தப்புதான் ராம்.

    ReplyDelete
  2. அப்படி பாத்தா ஒவ்வொருத்தனும் என்னெனவோ பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கான்.
    ஆனா ஒரு சின்ன பொய் சத்தியத்துக்காக அவரு பெயில் ஆனது தான் எனக்கு புடிக்கல..

    ReplyDelete
  3. anna, neenga sonnadhu romba correct; maththavangala kashtappaduthittu, seiyakkoodaatha thavarugalaiyellam semjittu iruppavan yellam nalla than irukkan...cha yenna niyaamo idhu....:(((
    ippo Raja anna yeppadi irukkanga?

    ReplyDelete
  4. LBW மட்டும் கிடையாது. ஏனென்றால் எங்கள் யாருக்கும் அது என்னவென்றே தெரியாது.

    So true....
    Ram...An important attribute of a good writer is the ability to write a thing which is common to everybody and nobody shares the common thing with their friends while they converse with them....

    You have that ability... Keep writing...

    ReplyDelete
  5. @Abi: raja anna va? yaru adhu? this is just a story Abi..
    @Arul anna: thanks and sure anna..

    ReplyDelete
  6. Dei Siva thambi naa illa la ???

    ReplyDelete
  7. //Dei Siva thambi naa illa la ??? //
    neenga yendha siva?

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One