என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..
நண்பர்கள் எல்லாம் என்னை அடிக்கடி கிண்டலடிக்கும் விசயம் ஒன்று உண்டு. எந்தப் பொருள் என்றாலும் அதைப் பொத்திப்பொத்திப் பாதுகாப்பேன். ட்ரிம்மர், ஏர்டெல் டோங்கில், ஷூ, என் கண்ணாடி என அனைத்தும் வாங்கி எத்தனை நாளானாலும், எவ்வளவு பழசானாலும் அது வாங்கும் போது கொடுத்த டப்பாவிலோ, அட்டைப்பெட்டியிலோ தான் இன்று வரை இருக்கும் அன்றாடம் அதன் வேலை முடிந்ததும்.. வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும், என் லேப்டாப் கீபோர்டை, அதோடு சேர்த்துக் கொடுத்தத் துணியால் தான் இன்று வரை மூடுகிறேன். நண்பர்கள் கிண்டலடிப்பதற்கான காரணம் புரிந்ததா?
ஒரு அட்டைப்பெட்டியைக் கூட தூக்கி வீசாதக் கஞ்சன் என்பார்கள் சிலர். சிலர் பயந்தாங்கொல்லி என்பார்கள்.. சிலர் selfish என்பார்கள். ஆனால் எனக்கு ஏன் இப்படியிருக்கிறேன் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. ஒரு வேளை சிறு வயதில் ஒவ்வொரு பொருளும் வாங்க, நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்றும் என் அடிமனதில் இருப்பதால், ஒவ்வொரு பொருளையும் ஏதோ கொஹினூர் வைரம் போல் வைத்திருக்கிறேனோ என்னவோ.. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் போது ஒரு சம்பவம் தவறாமல் என் நினைவில் வரும் எப்போதும்.. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்..
மேலே, கீழே என்று இரு பக்கமும் திறப்பது மாதிரி இரண்டடுக்கு பென்சில் டப்பாவை அப்பாவிடம் ஆறாங்கிளாசில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அது என் கைகளில் வரும் போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.. சிண்ட்ரெல்லா கதை அழகான ஸ்டிக்கராக மேலும் கீழும் ஒட்டப்பட்டிருந்தது அந்த பால் நிற பென்சில் டப்பாவில்.. “இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொல்லி சரோஜினி ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தார் அப்பா.. அப்பாவுக்கு எந்த சாமான் வாங்க வேண்டுமென்றாலும் சரோஜினி ஸ்டோர் தான்.. “அங்கதாம்ப்பா நயமா வச்சிருப்பாய்ங்க சரக்கெல்லாம்” என்பார்..
பல வருடம் ஆசைப்பட்டுக் கிடைத்ததால், மேஜையில் வைத்தால் அடி தேய்ந்து சிண்ட்ரெல்லா படம் உறிந்து விடுமோ என்கிற பயத்தால் அதை அழுக்காக விடாமல், டப்பாவில் மை சிந்த விடாமல், தெரியாமல் பேனாவில் இருந்து மை சிந்திவிட்டால் கூட அதை உடனே தண்ணீரால் கழுவி என்று ஏதோ ஹைதராபாத் நிஜாம் கால பொக்கிஷம் போல் பார்த்துக்கொண்டேன்.. அரையாண்டுத் தேர்வு நெருங்கும் போது தான் அவன் அதைப் பார்த்தான்.. அவன் என்பதே போதும். பெயர் எல்லாம் வேண்டாம். வசதி படைத்த ஒரு அவன்.. அவ்வளவு தான். மாலை பள்ளி விட்டதும்,
“டேய் புது டப்பாவாடா?”
“இல்லடா ஸ்கூல் ஆரம்பிக்கும் போதே வாங்கிட்டேன்”
“எங்க டப்பாலாம் பழசா இருக்கு? ஒனக்கு மட்டும் புதுசா?” என்று என்னிடம் பேசிக்கொண்டே என் சிண்ட்ரெல்லா டப்பாவை சடார் என்று எடுத்துக்கொண்டு ஓடினான். நான் அவன் பின்னாலேயே ஓடினேன். அவன் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. ஸ்கூல் கிரவுண்டில் என் டப்பாவை அதனுள் இருக்கும் பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் என அனைத்துடனும் தூக்கி வீசினான்.. அது பறந்த திசையை நோக்கி அவனும் ஓடினான்.. சுற்றிக்கொண்டே கீழே விழுந்து நான்கைந்து முறை தரையில் உருண்டது. அப்போதும் திருப்தியடையாத அவன் அதை எத்திக்கொண்டே ஓடினான்.அவன் காலும் செம்மண் புழுதியும் தான் தெரிந்ததே தவிர என் டப்பா தெரியவேயில்லை.. ’ஹே ராம்’ படத்தில் கமல் கண் முன்னே ராணி முகர்ஜியைக் கெடுப்பார்களே, அப்படி இருந்தது எனக்கு..
“டேய் நில்லுறா நில்லுறா” என்று கத்திக்கொண்டே சென்ற நான் ஒரு அளவிற்கு மேல் ஓட முடியாமல் நின்று விட்டேன்.. நின்றே இடத்தில் இருந்தே கத்தினேன், “ப்ளீஸ்டா என் டப்பாவ குடுத்துரு.. ப்ளீஸ்”.. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.. கொஞ்ச நேரம் கழித்து என் முன் ஒரு குரூர சிரிப்புடன் வந்து நின்றான். “போ ஒன் டப்பா அந்தா கோல் போஸ்ட் கிட்ட கெடக்கு. எடுத்துக்கோ. இனிமேல் புது டப்பாலாம் கொண்டு வரக்கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
எனக்குப் பெரிய அழுகையோ அவன் மீது கோபமோ வரவில்லை. நான் வளர்ந்த சூழல் அப்படி. ’நம்மை விட வசதியில் உயர்ந்தவர்களிடம் கோபத்தைக் காட்டக்கூடாது. அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு, மோதாமல் ஒதுங்கி விடுவது தான் நமக்கு நல்லது’ என்று போதிக்கப்பட்டிருந்தது.. அவன் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு என் டப்பாவை நோக்கி ஓடினேன். அதன் வெள்ளை நிறம் முழுவதும் சிராய்ப்புகள், அந்த சிராய்ப்புகளில் எல்லாம் செம்மண் துகள், சிண்ட்ரெல்லா கதை முழுவதும் புள்ளி புள்ளியாக செம்மண் படிந்து அசிங்கமாக ஆகிவிட்டது.. ஆனால், நல்ல வேளை அப்போதும் பிய்ந்து போகாமல் தான் இருந்தது இருந்தது என் டப்பா. அப்பா ”இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொன்னது ஞாபகம் வந்த போது தான் என்னையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் வந்தன.. ப்ளஸ்டூ வரை அப்பா சொன்ன மாதிரி அதை “பந்துஸ்தாக”த்தான் வைத்திருந்தேன் என்பது வேறு கதை..
சமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா?” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்? சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்தில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம்??? ஏனோ இந்த சம்பவம் இன்றும் ஞாபகம் வந்தது, உடனே பதிவேற்றி விட்டேன்..
_______________________________________________________________________
ஃபிப்ரவரி27, 2008 - என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் திருவிழாவில் நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை முதல் பரிசை வென்றது.. அன்று தான் சுஜாதா இறந்து போனார்.. “இவன் கதைக்கெல்லாம் ப்ரைஸ் கொடுக்குற ஒலகத்துல நான் இருந்து பிரயோஜனமே இல்ல”ன்னு தலைவர் முடிவு பண்ணிருக்கலாம்.. என்னால் அந்த வெற்றியைக் கொண்டாடவெல்லாம் முடியவில்லை. சுஜாதாவின் தீவிர ரசிகனான எனக்கு முதல் பரிசை விட, ‘நாம் வாழ்நாளில் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்’ என துடித்துக்கொண்டிருந்த ஆளை இனி பார்க்க முடியாதே என்கிற ஏக்கம் தான் அதிகமாக இருந்தது..
ஒரு தலைமுறையையே வாசிப்புக்கு அடிமைப்படுத்தியவர், வாசிப்பு என்பது ஏதோ மேல்தட்டு சங்கதி என்பதை மாற்றி, அனைவருக்கும் கல்வி திட்டத்தை இலக்கியத்தில் புகுத்தியவர், இன்னொரு முக்கியமான விசயம், எல்லோரையும் ‘நாமும் எழுதிப்பார்க்கலாமே’ என்று முயற்சி செய்யும் அளவுக்கு தைரியத்தைக் கொடுத்தப் புரட்சியாளர் அவர்.. அப்படிப்பட்டவரின் வெறியனான என்னை, தன் பக்கமும் கொஞ்சம் இழுத்தவர் தான் ஜெயகாந்தன்..
பள்ளிக் காலத்திலேயே சுஜாதா அறிமுகம் என்றால், ஜெயகாந்தன் எனக்குக் கல்லூரியில் என் ஆங்கிலப்பேராசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.. அவரது “குருபீடம்” சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துப் படிக்க வைத்தார்.. ’நல்லாருக்கு சார்’ என்றேன் அடுத்த நாள்.. உடனே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கொடுத்தார்.. அதில் இருந்து ஜெயகாந்தனும் என் ஃபேவரைட் ஆனார்.. அவரின் பல நாவல்களைப் பற்றி, அதன் பாத்திரப்படைப்பைப் பற்றி, அவர் கையாண்டிருக்கும் மனித உறவுகள் பற்றி, மனித மனத்தின் எண்ணங்களைப் பற்றி நானும் பேராசியரியரும் அடிக்கடி விவாதித்துக்கொண்டிருப்போம்.. ’நம்மை விட 20வயது சின்னப்பய தானே?’ என்று நினைக்காமல் என்னிடம் போட்டிபோட்டு விவாதம் செய்து, ஜெயகாந்தனின் பல கருத்துக்களை எனக்கு விளக்கிய அவர் மூலம் தான் ஜெயகாந்தன் இன்னும் அருகில் நெருங்கி வந்தார்..
மனித மனங்களை இந்த அளவுக்கு உள்ளே சென்று ஒருவன் அலச முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தன அவரது ஒவ்வொரு நாவலும்.. எல்லோருக்கும் சி.நே.சி.ம. பிடித்திருந்தால், எனக்கு மட்டும் என்னமோ அவரின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தான் மிகப்பிடித்திருந்தது.. பத்திரிகையாளன் மேல் அந்த நடிகை காட்டும் எதையும் எதிர்பாராத அந்த அன்பு உண்மையில் மிகப் புதியது.. அப்படி ஒரு பெண்ணைத் தான் ஒவ்வொரு ஆணும் தேடுவான். மிகவும் பக்குவமாக, அன்பை மட்டும் கொடுப்பவளாக, எதையும் எதிர்பார்க்கதவளாக, ஏன் அன்பைக் கூட பதிலுக்கு எதிர்பார்க்காதவளாக வரும் அவளது பாத்திரம் மிகத்தெளிவாக இருக்கும். “இது idealஆன அன்பு.. இப்படி ஒரு அன்பு சாத்தியமே இல்லை..” என்று முன்னுரையில் கூறிவிட்டுத் தான் கதையையே ஆரம்பித்திருப்பார்.. அதைப் படமாகக் கூட எடுத்தார்கள் நடிகை லட்சுமையை நாயகியாக்கி.. இன்று எடுத்தால் என் சாய்ஸ் அனுஷ்கா தான்..
சென்ற வாரம் தான் ஜெயகாந்தனின் ’சக்கரம் நிற்பதில்லை’ சிறுகதைத் தொகுப்பை முடித்திருந்தேன்.. படித்து முடித்ததும், ‘எழுத்துலகில் சுஜாதா ரஜினி என்றால், ஜெயகாந்தன் கமல்’ என லட்சத்தி சொச்சமாவது முறையாக நினைத்துக்கொண்டேன்.. இன்று தான் அவரின் முதல் நாவலான ’வாழ்க்கை அழைக்கிறது’ கதையைப் படிக்க எடுத்தேன்.. வெறும் முன்னுரையோடு நிறுத்துவிட்டு, மிச்சத்தை இரவில் படிக்கலாம் என நினைத்திருக்கும் போது தான் அந்தச் செய்தி வந்தது, ஜெயகாந்தன் இறந்துவிட்டார்..
”வாழ்நாளில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும்” என நான் வைத்திருந்த லிஸ்டில் இருந்த இன்னொருவரும் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார்.. நமக்குப் பிடித்தவர்களின் இறப்புச்செய்தி முதலில் நம்பமுடியாததாகவே இருக்கிறது.. பின் ’இது பொய்யாகிப்போகாதோ?’ என்கிற நப்பாசை தொற்றிக்கொள்கிறது.. ’இல்லை இது உண்மை’ என்கிற நிஜத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஜெயகாந்தனின் அந்தச் செருக்கு, கர்வம், திமிர், திறமை, சமூக அக்கறை, கம்பீரம் எல்லாம் அவருக்கு முன்னும் பின்னும் எந்த எழுத்தாளனுக்கும் கிடையாது.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சகட்டுமேனிக்கு அனைத்து அரசியல்வாதிகளையும் - தான் மதிப்பு வைத்திருந்த கம்யூனிசத் தலைவர்களைக் கூட விட்டுவைக்காமல் - கிழித்துத் தொங்கவிட்ட தைரியசாலி.. அவர் கதைகளில் இருக்கும் மனவியலுக்கு சரி நிகராக இருக்கும் அவரது முன்னுரை.. அவரை மறைமுகமாகக் கிண்டலடித்த ஆனந்த விகடனை நேரடியாகக் கிண்டல் அடித்து, கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு சிறுகதை எழுதி, அதை அவர்களுக்கே அனுப்பி வைத்தார்.. அவர்களும் அதை அழகாக அச்சிலேற்றினார்கள். அந்த அளவுக்கு ஜெயகாந்தன் என்பவரின் எழுத்துக்கு மதிப்பும் பயமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்..
சுஜாதா, ஜெயகாந்தன் மாதிரியான எழுத்தாளர்கள் இனி கிடைப்பார்களா என்பது தெரியாது.. உலகில் பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் வருவது தான் என்றாலும், சிலர் இறந்தாலும் நம்மோடு இருப்பது போலவே இருக்கும்.. அந்த வகையில் அவர்கள் இருவரும் என்றுமே இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்..
பென்சில் டப்பா சம்பவம், மனசை கலக்கிருச்சு. நானும் பொருட்களைப் பத்திரமா வச்சுக்குவேன். நம்ம வீட்டுலே 41 வருசப் பாத்திரங்கள்கூட தினப்படி பயன்படுத்தியும் கொஞ்சம் புதுசாத்தான் தெரியும்.
ReplyDeleteநம் அக்கறை அவர்களுக்கு கஞ்சப்பிசினாறித்தனமாகத் தெரிகிறது.. :(
Delete///சமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா?” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்? சாரிடா” என்றான்///
ReplyDeleteஞாபகம் இருக்குன்னு சொன்னா நீங்க மீண்டும் அந்த பாக்ஸை புதுசா வாங்கி கொடுங்க என்று அடம்பிடிப்பீங்க என்று நினைத்து சொல்லி இருப்பான்
ஹா ஹா.. ஞாபகம் இருக்குன்னு சொல்லிருந்தா பீலிங்ஸ்ல மொக்கை தான் போட்டிருப்பேன் :P
Deleteசந்தேகம் உங்க வீட்டுல குப்பை தொட்டியே இருக்காதோ? ஹீ.ஹீ சும்மாதான் கேட்டேன்
ReplyDeleteஇருக்கு.. ஆனா அதில் குப்பைகள் தான் இருக்கும்.. வீணானவை இருக்காது..
Deleteநன்று.!
ReplyDeleteநன்றி :)
Deleteநேற்று இரவுமுழுவதும் ஜெயகாந்தன் இறந்த செய்தியை நம்பவே இல்லை . காலையில் எழுந்ததும் உண்மை எனத்தெரிந்தும் என்னால் ஏற்றக்கொள்ளவே முடியவில்லை . என்னுடைய பேவரைட்டும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்பதே ! அவர் படைத்த யுகசக்தி சிறுகதைதான் எனக்குஅவர்மேல் பைத்தியம் ஏற்பட காரணமான ஒரு சிறுகதை . தமிழ் இலக்கிய உலகத்தில் மீண்டும் ஒரு பேரிழப்பு .... :-(
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை குருபீடம் தான்..
Deleteசொல்லப்பட்ட போதனை சரி தான்... உண்மையும் கூட...
ReplyDeleteபடைப்புகள் என்றும் வாழும்...
உண்மை தான் அண்ணே.. அந்தப் படைப்புகள் வழி அவர்களும் வாழ்வார்கள் :)
Deleteஜெயகாந்தன் என்றும் வாழ்வார்.
ReplyDeleteதமிழ் மணம் 2
கண்டிப்பாக.. (y)
Delete