Civic, Level, Malayalam, Deed, Radar, Madam, Ramu Kumar - இந்த வார்த்தைகளில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது, தெரிகிறதா? ஆம், இவைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி வாசித்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.. ஒலிப்பு முறையும் மாறாது அர்த்தமும் மாறாது.. இப்படியான வார்த்தைகளை ஆங்கிலத்தில் palindrome என்பார்கள்.. Palindomeற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்..
Plaindrome - இந்த வார்த்தை பதினொன்றாம் வகுப்பில் தான் எனக்கு பரிச்சயம் ஆனது.. முன் ஜென்மத்தில் நான் செய்த வினையால் பதினொன்றாம் வகுப்பில் என்னை கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்த்து விட்டார்கள்.. கம்ப்யூட்டர் வாத்தியார், ஆள் பாக்குறதுக்கு நம்ம ‘அபூர்வ சகோதரர்கள்’ குட்டை கமலை விட ரெண்டு இன்ச் வளத்தியா இருப்பாப்ல.. அந்த கம்ப்யூட்டர் வாத்தியாருக்கு நாங்கள் வைத்த பெயர் ‘அப்பு’.. அவர் தான் C, Java என்று எங்களை மிரட்டினார்.. பாதி போர்டுல இருந்து தான் எழுதுவார் ப்ரோக்கிராம் கோடிங் எல்லாம்.. ஒன்றுமே புரியாது... if i = 0, i++ என்று என்னென்னமோ கிடந்து என் தலையை பிய்த்துக்கொண்டிருக்கும்.. பிசிக்ஸும், கெமிஸ்ட்ரியும், ட்ரிக்னாமெட்ரியும் கூட ஏதாவது மனப்பாடம் செய்துவிடலாம், ஆனால் இந்த ரெண்டுக்கு ரெண்டு சைஸ்ல இருக்குற டப்பா கம்யூட்டர தான் ஒன்னுமே பண்ண முடியல.. இப்ப மேட்டர் அதுவல்ல..
ஒரு நாள் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் சொல்லிக்கொடுக்கும் போது, "write a program to find the given word is a palindrome" என்றார்.. அத்தனை நாள் ப்ரோகிரம் என்றால் முதல் ஆளாக முடித்துவிடும் பயலுகள் கூட திருதிருவென முழித்தார்கள்.. “சார் பாலின்ராம்னா என்னது சார்?”.. அப்போது தான் அவர் விளக்கினார் பாலிண்ட்ரோம் என்பதையும் அதற்கான அர்த்தத்தையும்.. சொல்லிவிட்டு வழக்கம் போல கிடுகிடுவென அதற்கான ப்ரோகிராம் கோடிங்கை எழுத ஆரம்பித்துவிட்டார் பாதி போர்டில் இருந்து.. எனக்கு அந்த ப்ரோகிராம் மண்டையிலேயே ஏறாவிட்டாலும் palindrome என்கிற வார்த்தையும் அதன் அற்புதமான தன்மையும் பிடித்துவிட்டது..
ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப்பார்ப்பேன்.. புதிது புதிதாக எழுதிப்பார்ப்பேன், ஏதாவது வார்த்தை கிடைக்கிறதா என்று.. அப்படி ஒரு நல்ல நாளில் தான் என் பெயரில் "U" என்னும் ஒரு எழுத்தை சேர்த்தால் என் பெயரும் பாலிண்ட்ரோம் தான் என கண்டுபிடித்தேன்.. Ram Kumar என்பதை Ramu Kumar என்று மாற்றினால் என் பெயரும் ஒரு பாலிண்ட்ரோம் தான்.. ’ஆகா நம்ம பேர் கூட ஒரு விஐபி பேர் தான்டா’ என பெருமையாகிவிட்டது எனக்கு..
மேலே இருக்கும் படத்தில் அம்மாம் பெரிய வாக்கியமே பாலிண்ட்ரோமாக அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியம் தான்.. தமிழிலும் பாலிண்ட்ரோம்கள் உண்டு.. விகடகவி, காக்கா, தாத்தா என்பவை எல்லாம் தமிழ் பாலிண்ட்ரோமிற்கு உதாரணங்கள்.. பாலிண்ட்ரோமில் வார்த்தைகள் மட்டும் இல்லை வாக்கியங்கள் கூட இருக்கின்றன..
"Was it a car or a cat I saw?"
"Race fast, save car"
"Never odd or even"
"Madam, I'm Adam"
இதெல்லாம் palindrome ஆக இருக்கும் வாக்கியங்கள், தொடர்கள்.. தமிழிலும் அது போல் சில தொடர்கள் இருக்கின்றன..
“மோரு போருமோ?”
“தேரு வருதே”
“மாடு ஓடுமா?”
ஆனால் இதையும் தாண்டி சிறப்பாக ஏதாவது சிக்குமா என நெட்டில் உலாவிக்கொண்டிருந்த போது தான் ஒரு அற்புதம் கையில் சிக்கியது.. நம் பக்தி இலக்கியத்திலேயே கூட அப்படி ஒரு பாடல் இயற்றியிருக்கிறார்கள் என்பது தான் அது.. பன்னிரு திருமுறைகளில் மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகத்தில் திருஞானசம்பந்தர் அப்படி ஒரு பாடலை இயற்றியிருக்கிறார்.. இது தான் அந்தப்பாடல்..
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
இந்தப்பாடலை வாசித்து முடிக்கும் போது எனக்கு கிறுகிறுவென வந்துவிட்டது.. அந்தக்காலத்திலேயே நம் மக்கள் என்ன மாதிரி யோசித்து இறைவனை நினைத்து எப்படியெல்லாம் பாடல் இயற்றியிருக்கிறார்கள் பாருங்கள்.. சத்தியமாக இந்தப்பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது.. முதலில் இந்த பாடலை மனப்பாடம் செய்துவிட்டு பின் அர்த்தத்தை தேடலாம் என்றிருக்கிறேன்.. அதற்கு முன் அர்த்தம் தெரிந்தவர்கள் யாராவது சொன்னால், ஒரு மிகப்பெரிய பிரபலத்துடன், சிற்றுண்டியோ, சாப்பாடோ, டின்னரோ, அட்லீஸ்ட் டீயோ குடிக்கலாம்.. என்ன ரெடியா?
PALINDROME - சில சுவாரசியம்....எங்கள் அருமை Ram Kumar இன் அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். இந்த பாடலுக்கான சரியான அர்த்தத்தை முதலில் எனக்கோ, அல்லது ராம்குமாரிடமோ தெரிவித்தால் ஒரு அற்புதமான புத்தகம் பரிசாக அளிக்கிறேன். ராம்குமாருக்கு வாழ்த்துகள்; தமிழ் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteமிக்க நன்றி சார் :-)
DeletePalindrome - தமிழில் மாலை மாற்று என்று பெயர்.
ReplyDeleteசிற்றுயிர்களாகிய நாங்கள் கடவுள் அல்லர், சிவபெருமானாகிய நீ மட்டுமே எங்களுக்கு கடவுள என்பது பொருள்...
மாலை மாற்றுப் பதிகத்தின் முழுப்பாடலுக்கான பொருள் இங்கே ::----
http://archieve.bhageerathi.in/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
உங்கள் மெனக்கெடலுக்கும் தேடலுக்கும் மிகுந்த நன்றி மேடம்.. palindromeற்கு நீங்கள் கொடுத்த சரியான தமிழ் பதத்திற்கும் நன்றிகள் பல.. :)
Deleteதேடல் அருமை
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteஇவையிரண்டும் அடியேன் உருவாக்கிய மாலைமாற்று கவிதைகள். இன்னும் வேண்டுமாயின் தருகின்றேன்.
நன்றி.
வைகை நாயக சலச மிருத
மாய மாலவர் தூயடிகொள்
கொடிய தூர்வல மாயமா
தருமி சலச கயநா கைவை
தீத்தம ராதீ யசெய்போ துவாடி
தேக நோய் மென்று யிகமா
கயிறுன் மெய்நோ கதேடி
வாது போய்செய தீரா மதத்தீ
சார் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. மிகப்பெரிய திறமை இது... இதன் அர்த்தம் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து...
Deleteஓ செய்யலாமே!
Deleteவைகை நாயக சலச மிருத
மாய மாலவர் தூயடிகொள்
கொடிய தூர்வல மாயமா
தருமி சலச கயநா கைவை
வைகை நாயக - வைகை ஓடும் மதுரைக்கு நாயகரே
சலச மிருத மாய மாலவர் தூயடிகொள் - கடலினுள் இருந்து அமிருதத்தைக் கொண்டு வர உதவிய மாய மாலவருக்கும் தூய அடியைக் காட்டியவரே
கொடிய தூர்வலமாய - பாண்டியன் பரிசை எப்படியாயினும் பெற வேண்டும் என்ற ஆர்வக் கொடியதை ஊர்வலமாய்க் கொண்டு வந்த
மாதருமி சலச கய - மா மைந்தன் தருமியின் கண்ணீரைப் போக்குமாறு சகயமாக
நா கைவை - நாவிலிருந்து ஏட்டிற்குப் பாடலாய்க் கைவைத்தவரே!
தீத்தம ராதீ யசெய்போ துவாடி
தேக நோய் மென்று யிகமா
கயிறுன் மெய்நோ கதேடி
வாது போய்செய தீரா மதத்தீ
இதன் பொருள்:
தீயவரையே தமராய்க் (வேண்டியவர்களாய்) கொண்டு தீயனவற்றை செய்கின்ற போது வாடி, தேகத்தினை நோய் மென்றிட, இகத்தினைக் கட்டியிருக்கும் பெரிய கயிறான உன் மெய்யது நோக, மற்றவரைத் தேடிப் போய் வாது செய, தீராது மதத்தீ.
சுவாரஸ்யம் - சிறிய மாற்றத்தால் உங்கள் பெயரும் இருப்பதும்...!
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், ரத்தினகிரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இதெல்லாம் தெய்வீக்கப்பெயர் அண்ணே.. அப்படித்தான் இருக்கும் :-D
Deleteமிக அருமையான பதிவும், திருமறைப் பாடலும். சகா. அது பக்தி இலக்கிய பாடல் சங்கப்பாடல் கிமு 3 ம் முதல் கிபி 3 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டவை பக்தி இலக்கியங்கள் கிபி 7 முதல் கிபி 12 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. அது போக கருத்துப் போட்டவர்கள் மாலைமாற்று முறையைப் பற்றியும் எழுதி கவிதையாக தந்ததும் மகா சிறப்பு. சூப்பர்பா.
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா.. தவறை திருத்தி விட்டேன்.. :)
Deleteசுவாரஸ்யமான பதிவு
ReplyDeletepalindrome வித்தியாசமான புதிய தகவல்
ReplyDeleteஇதோ மற்றுமொன்று:
ReplyDeleteதுருவி தேவர் சேனை வால்கொள்
ஆகாத வகைபட வேடநாயகர்
கயநாட வேட பகைவ தகா
ஆள்கொல் வானை சேர்வதே விருது
துருவி தேவர்களின் சேனையின் வால் முதற்கொண்டு கொண்ட ஆகாத, சூரனின் வம்சமே பட்டொழிய, வேட்டுவர்களின் நாயகனாம் முருகன், கயமை உணர்வு அவனை நாட, வேலும் மயிலுமாய் வேடம் புனைந்தவனும் பகைவனும் தகாத ஆளானவனுமாகிய சூரனைக் கொல்வானைச் சேர்வதே வாழ்வில் சிறந்த விருது ஆகும்!
இது இன்னுமொன்று!
ReplyDeleteகருவறை பிணிபோக ஏழை பேதை
கோன்கா மன்வறு தலைவ சம்மத
தமம்ச வலைதறு வன்மகான் கோதை
பேழை ஏகபோ ணிபிறை வருக
தாயின் கருவறையில் தங்கும் பிணியாகிய பிறவி போக, ஏழையும் பேதையுமான எனது அரசரும், காமனை வறுத்த தலைவருமான சிவபெருமானின் மைத்துனரே (சம்மதர் - மைத்துனர்), தமமாகிய அகங்காரத்தையும், சவலையெனும் மன அழுக்கையும் உற்ற சமயத்தில் நீக்கும் பெரியவரே, கோதை நாச்சியாரின் பெரும் பேழையே, ஒருமுதலே (போணி - முதல்) சந்திரன் போல் தண்மையாய் வருக.
அருமையான பகிர்வு.....
ReplyDeleteவாழ்த்துகள் ராம் குமார். இப்படி நிறைய வாக்கியங்களை ஒரு சமயத்தில் தேடித் தேடி படித்ததுண்டு.....
Wow, what a fantastic blog..here i stumbled upon today. You made my day dear RamU kumar. Keep it up.
ReplyDeleteசிறந்த பதிவு. மாலைமாற்று ரத்தினகிரி கருவிலேயே திருவுடையவர் என்கிறேன். வாழிய தோழமையே
ReplyDeleteஅன்புடன் , கம்கோராஜா