காசு is directly proportional to சந்தோஷம் - சிறுகதை...

Friday, May 30, 2014

 ”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களுக்கு?” புலம்பிக்கொண்டே பைக்கில் இருந்து கீழே இறங்கி, எனக்கு முன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருந்த ராகேஷையும் இறக்கினாள்.. 

மூச்சு விடுவது எப்படி நாம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து நடக்குமோ அது போல் தான் அவள் புலம்புவதும்.. அவள் பேசுவதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், எப்போதும் போல் அன்னிச்சையாக என் கை, பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் சொருகியது.. தீக்குச்சியை உரசி அந்த சிகரெட்டின் நெற்றியில் திலகம் இடும் முன் வெடுக்கென்று சிகரெட்டை பறித்து எறிந்து விட்டாள்.. சாகப்போன சிகரெட் மயிரிழையில் தப்பித்ததற்கு அவளுக்கு நன்றி சொல்லியிருக்கும்.. இப்படி செய்வது எனக்கு பயங்கர கோபத்தை கொடுக்கும் என தெரிந்திருந்தும் அவள் இப்படி செய்வதை நிறுத்தவே மாட்டாள்.. எந்த பொண்டாட்டி தான் புருசனுக்கு மரியாதை கொடுத்திருக்கிறாள்?

“உங்களுக்கு எத்தன தடவ சொல்றது, பப்ளிக் ப்ளேஸ்ல சிகரெட் பிடிக்காதீங்கன்னு?”

”உனக்கு நான் எத்தன தடவடீ சொல்றது, இப்படி வெடுக்குனு புடுங்காதன்னு? அறிவு இல்ல உனக்கு?” அடிப்பது போல் நெஞ்சை நிமிர்த்தி அவள் அருகில் சென்றேன்..

அவள் கொஞ்சமும் அசந்தவளாய் தெரியவில்லை. “லவ் பண்ணுறப்ப ‘டீ போட்டு பேச மாட்டேன்’னு சொல்லிட்டு, இப்பலாம் டெய்லி டீ போட்டு தான பேசுறீங்க? ரோட்ல வச்சி அடிக்க வேற வரீங்களா?”

“நீ கூடத்தான் லவ் பண்ணும் போது மாமானு அழகா கூப்டுவ.. இப்ப? எவனோ சிலிண்டர் வைக்க வர லோடுமேன்ட்ட பேசுற மாதிரி, ’வாங்க’ ’போங்க’ ‘சொல்லுங்க’ ‘அப்புறம்’னு மூஞ்ச திருப்பிக்கிட்டு பேசுற?.. சரி ரோட்டுலயே ஆரம்பிக்காத இன்னைக்கு.. நீ சொன்ன மாதிரி மாலுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. வந்த வேலைய மட்டும் பாரு”.. 





சென்னையின் அந்த பிரமாண்ட மாலுக்குள் நுழைந்தோம்.. எங்கள் இருவரின் கையையும் பிடித்துக்கொண்டு ராகேஷ் நடந்து வந்து கொண்டிருந்தான்.. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அடம்பிடித்து ஒரு வழியாக இன்று என்னை சம்மதிக்க வைத்து விட்டாள்.. உண்மை தான் காதலிக்கும் போது நாங்கள் அடிக்கடி வந்த இடம் தான்.. காதலிக்கும் போது நான் இப்படி நடந்து கொள்ளவில்லை தான்.. ஆனாலும் காதலும் கல்யாணமும் ஒன்றா?

காதலிக்கும் போது இவளை எங்கு சந்திக்க முடியும்? பஸ் ஸ்டாப் - அய்யோ ரோட்ல போறவன் எல்லாம் ஒரு மாதிரி பாப்பான்.. காலேஜ் - அய்யோ மேடம் யாராவது பாத்துட்டா? தியேட்டர் - ச்சீய் நான் அங்கெல்லாம் வர மாட்டேன். பீச் - அந்த வெயில்ல எப்படித்தான் இருக்காங்களோ? இப்படி நான் கேட்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு காரணம் சொன்னவள், கடைசியாக ஒத்துக்கொண்ட இடம் தான் மால்.. முதல் முறை இந்த இடத்தின் பிரமாண்டத்தையும் பகட்டையும் பார்த்து பயந்தவள், அடுத்தடுத்த முறை ஜோதியுடன் ஐக்கியம் ஆக ஆரம்பித்துவிட்டாள்.. 

ஆரம்பத்தில் பெண்களுக்கே உரித்தான விண்டோ ஷாப்பிங் மட்டும் தான்.. பின் காதலிகளுக்கே உரித்தான ஓசி பர்ச்சேஸ் ஆரம்பம் ஆனது. “அந்த செப்பல் நல்லா இருக்குல?”

“ஏ போனவாரம் தானமா ஒன்னு வாங்கி குடுத்தேன்?”

“அது ஏதாவது functionக்கு போனா போடுறதுக்கு. இப்ப ரஃப் யூஸ்க்கு ஒன்னு வேணும்ல? ப்ளீஸ் மாமா”.. அவளுக்கு தெரியும், மாமா என்று சொன்னால் நான் ஆஃப் ஆகிவிடுவேன் என்று.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் டெபிட் கார்டு ஸ்வைப் ஆகி, பேங்க்க்காரன் எனக்கு எஸ்.எம்.எஸ். வடிவில் ஓலை அனுப்பியிருப்பான்..

“மாமா இந்த டாப்ஸ் சூப்பரா இருக்குல?”

“அதுக்கு?”

“வாங்கிக்குடு மாமா” - செல்லமாக சிணுங்குவாள்..

“ஏ இதே மாதிரி உன்ட்ட இன்னொன்னு இருக்குல?”

“அது லைட் எல்லோ கலர் மாமா.. இது மெருன் கலர்.. ப்ளீஸ் மாமா”

“ஏய் எதுக்கு ப்ளீஸ்லாம் சொல்ற?” உரிமையுடன் கோபப்படுவேன். டெபிட் கார்ட் ஸ்வைப் - பேங்க் எஸ்.எம்.எஸ்..

இது வாராவாரம் அவள் கல்லூரி விடுமுறை நாட்களில் நடக்கும் சாதாரண விசயம் தான் அப்போது.. அவள் கேட்டதெல்லாம் கிடைத்தன. நானும் சந்தோசமாகத்தான் வாங்கிக்கொடுத்தேன். காதலிக்கும் போது பெரிதாக பொறுப்புகள் ஒன்றும் கிடையாது.. ஊரில் குடும்ப செலவை அப்பா பார்த்துக்கொள்வார்.. அதனால் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டிய கவலை இல்லை. நான் சம்பாதிக்கும் காசு முழுதும் எனக்குத்தான்.. அதை இவளுக்கு மட்டும் தான் செலவழித்து ஆக வேண்டும்.. 

காதலிக்கும் போது வாரத்தில் இரண்டு மணிநேரம் தான் அவளை பார்க்க முடியும், பேச முடியும். அவள் கல்லூரியில் ஒரு நாள் தான் வெளியே விடுவார்கள், செல்ஃபோனும் கிடையாது.. அந்த சில நிமிடங்களில் நான் அவளிடம் எத்தனை கதைகளை பேச முடியும்? எவ்வளவு பேசினாலும் பேசாதது போல் தான் இருக்கும். முடிந்தவரை நல்ல விசயங்களை, சந்தோசமான விசயங்களை மட்டும் பேசுவேன்.. ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் நக்கல் அடிப்பேன். அது அவளுக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கும்.. நான் ஏதோ எப்போதும் இப்படித்தான் சந்தானம் மாதிரி பேசிக்கொண்டிருப்பேன் என அவளாகவே நினைத்துக்கொண்டாள்.  கேட்டது அனைத்தும், கேட்காதது பலதும் கிடைத்தன அவளுக்கு. எப்போதும் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருப்பாள்.. கல்யாணத்திற்கு பிறகும் இருவராலும் அப்படியே இருக்க முடியுமா? 





குடும்பம் என்று வந்து விடுகிறது, பொறுப்புகள் கூடி விடுகின்றன, பையன் நடக்க ஆரம்பிக்கும் போதே அவனது கல்யாணம் வரை யோசித்து, சேர்க்க வேண்டும் பணத்தை.. காதலிக்கும் போது வாரத்தில் இரண்டு மணிநேரம் பேசினோம் நல்ல விசயங்களை மட்டும், எங்களின் நல்ல பக்கத்தை மட்டும் காட்டிக்கொண்டு.. இப்போது கல்யாணம் ஆன பின் 24 மணிநேரமும் அவளோடு தான்.. எந்நேரமும் இளித்துக்கொண்டே இருந்தால் லூசு மாதிரி இருக்காது? நல்லது, கெட்டது என அனைத்தையும் அவளிடம் தானே காட்ட முடியும்? காதலித்த போது கேட்ட மாதிரி, ‘இன்னைக்கு எத்தன இட்லி சாப்ட்ட? பன்னெண்டு தானா? அய்யோ ஏன்மா? உடம்பு சரியில்லையா?’னு கொஞ்சவா முடியும்? காதலர்கள் என்ற நிலையில் இருந்து குடும்பம் என்ற நிலைக்கு வந்து விட்டால் அதற்கு ஏற்றவாறு தானே இருக்க வேண்டும்?

ஆனால் இவள் இன்னமும் என்னிடம் அந்த பழைய மாமாவையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.. தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும், வேலை முடிந்து எவ்வளவு அலுப்பாக வந்தாலும் ஈஈஈஈ என இளித்துக்கொண்டு அவளை கொஞ்ச வேண்டும், கோபமே படக்கூடாது.. இதெல்லாம் முடியுமா? அதுவும் வேலையின் இடையிடையே அடிக்கடி கால்  பண்ணி, ‘செல்லம் சாப்டியா?’ ’கண்ணு தூங்கிட்டியா?’னுலாம் கேக்கணுமாம், அன்னைக்கு சண்டை போடும் போது சொல்கிறாள்.. சரி இத்தனை நாள் மாலுக்கு கூட்டிப்போகச்சொல்லி சண்டை. இன்று கூட்டி வந்திருக்கிறேன், இன்றாவது சந்தோசமாக இருக்கிறாளா என்று பார்க்கலாம்..

“ஏங்க அந்த கடைக்கு போலாம்ங்க”.. அது எப்படி எங்கு போனாலும் இந்த துணிக்கடைகள் மட்டும் பெண்களின் கண்களில் முதலில் படுகின்றன? என் பதிலுக்கு காத்திராமல் அவளே அந்தக் கடைக்குள் சென்று விட்டாள் ராகேஷை இழுத்துக்கொண்டு... நான் என் விதியை நொந்து கொண்டு மெதுவாக அந்த கடையை நோக்கி சென்றேன்..

“அந்த ஸாரி.. அது இல்லப்பா பக்கத்துல மூனாவதா இருக்கு பாரு அந்த ப்ளூ கலர்.. ஹ்ம் அதான்”..

எனக்கு அந்த சேல்ஸ்மேனை நினைத்துக் கவலையாக இருந்தது. இவன் வீட்டிலும் பொண்டாட்டியை சமாளித்து விட்டு, இங்கு தினமும் அவன் பொண்டாட்டி மாதிரி துணி எடுக்கிறேன் பேர்வழி என்று டார்ச்சர் செய்யும் நூற்றுக்கணக்கான பெண்களையும் எப்படி சமாளிக்கிறான் என்று.. கவலை ஒரு பக்கம் என்றாலும், பெரிய ஆளு தான் என சர்டிஃபிகேட் கொடுத்தேன் அவனின் நிதானத்திற்கும் பொறுமைக்கும் அந்த கூட்டத்திலும் அவன் முகத்தில் இருந்த சிரிப்பிற்கும்.. நான் அந்தக்கடையை சுற்றி பார்த்தேன்.. இவ்வளவு லைட், பளீர் என்று கடைக்கு ஒரு வித அழகான ஒளியை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது.. டிசைன் என்று பார்த்தால் மிகவும் கம்மி தான்.. ஆனால் அதை அவர்கள் அடுக்கி display செய்திருந்த விதமே அந்த கடைக்கு ஒரு லுக்கை கொடுத்தது. பல முறை வந்திருந்தாலும் இப்போது தான் இதையெல்லாம் கவனிக்கிறேன்.. ஹ்ம் காதலிக்கும் போது நமக்கு காதலியை தவிர வேறு எதை கவனிக்க நேரம் இருந்திருக்கிறது?

“ஏங்க?” அவள் குரல் வந்த திசையில் மெதுவாக திரும்பி பார்த்தேன்.. “இந்த ரெண்டு ஸாரியும் நல்லாருக்குல?”

’அதுக்கு?’ என்பது போல் அவளைப் பார்த்தேன்.. அவள் என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை. தகவலை சொல்லிவிட்டு, கடைக்காரனிடம் பில் போட கொடுத்துவிட்டாள்.. இரண்டு சேர்த்து ஐயாயிரத்தி சொச்சம்.. பர்ஸில் அவ்வளவு பணம் இல்லை.. காதல் காலம் போல் கார்டு ஸ்வைப் தான்.. 

கடையில் இருந்து வெளியே வந்தவுடன் அவளிடன் சொன்னேன், “ஏன்டீ ஒனக்கு சேலையே இல்லையா? எதுக்கு இப்ப ரெண்டு சேல?”

“நீங்க எனக்கு கடைசியா எப்ப சேல எடுத்து குடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா? கல்யாணத்துக்கு பிறகு இந்த 4 வருசத்துல இப்படி எங்கயாச்சும் கூட்டிட்டு வந்திருக்கீங்களா? இன்னைக்கு ஒரு நாள் வாங்குறதுல என்ன தப்பு?” கோபமும் வருத்தமுமாக கேட்டாள்.. அவள் கேள்வியை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.. “ஏங்க ஆண்டிக் ஜுவெல்லரி கடைங்க” நான் கவனித்தேனோ, அந்த கடைக்குள் வருகிறேனா என எதையும் சட்டை செய்யாமல் அந்தக்கடைக்குள்ளும் ஓடினாள்..





நான் அவளருகில் சென்று மெதுவாக, “மாசம் இப்பத்தான்டீ ஆரம்பிச்சிருக்கு.. மொத்த சம்பளத்தையும் இன்னைக்கே காலியாக்கிறாத” என்றேன்.. என்னைப்பார்த்து ஒரு முறை முறைத்தாள்.. சேல்ஸ்மேன் எங்களை ஒரு மாதிரி பார்த்தான்.. “அது ஒன்னும் இல்ல, நீங்க அந்த கம்மல எடுங்க”னு இவள் ஆரம்பித்துவிட்டாள்.. இந்தக்கடையும் துணிக்கடை போல் பளீர் என்றிருந்தது.. கல்லாவில் இருந்த சேட்டிடம் கேட்டேன் எவ்வளவு வாடகை என்று.. ரெண்டு விரலைக் காட்டினான்.. வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.. கொஞ்ச நேரத்தில் “ஏங்க?” அவள் குரல் தான்.. கார்டை எடுத்து நீட்டினேன்.. முடிந்தது 17000த்திற்கு சோலி...

கடையில் இருந்து வெளியே வந்ததும், “ஏன்டீ டிரெஸ் அய்யாயிர ரூவாய்க்கு தான் போடுவியா? இப்ப என்ன ஒனக்கு கம்மலே இல்லையா? எதுக்கு தேவயில்லாம அதுல போயி காச கொட்டுற? ஒரே நாள்ல இப்படி எல்லாத்தையும் வாங்கி என்ன பண்ணப்போற? அடுத்த மாசம் ஒலகம் அழிஞ்சிறப்போகுதா? கொஞ்ச கொஞ்சமா வாங்குனாத்தான் என்னவாம்?” இந்த மாத பட்ஜெட், இந்திய பட்ஜெட் ஆன கடுப்பு எனக்கு..

“அடுத்த மாசம் நீங்க கூட்டிட்டு வரலேனா?”

“ஏன் அடுத்த மாசம் செத்தா போயிரப்போறேன்?” வெறுப்பில் டக்கென்று கூறிவிட்டேன்.. என்னோடு நடந்து வந்து கொண்டிருந்தவள், திடீரென திரும்பி, வந்த திசையிலேயே வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.. நான் திரும்பி பார்ப்பதற்குள் அந்த நகைக்கடைக்கு சென்று நகையை திரும்ப கொடுத்துக்கொண்டிருந்தாள்.. ”ஏய் என்ன இது?”

“இல்ல வேண்டாம் எனக்கு” அவள் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தன.. கடைக்காரன் “ஸாரி மேடம் திரும்ப வாங்க மாட்டோம்” என்றான்.. அவள், “ப்ளீஸ் தயவு செஞ்சு வாங்கிக்கோங்க,” என்று அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.. கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது..

“ஒன்னுமில்லைங்க” என்று அவனிடம் சொல்லி, அந்த நகையை கையில் வாங்கிவிட்டு அவளை வெளியே கூட்டி வந்தேன்... “ஏன்டீ இப்படியெல்லாம் பண்ணுற?”

“நான் எனக்கு பிடிச்சத வாங்குறது உங்கள கொல்லுற மாதிரி இருக்கா? கடைசியா நீங்க எனக்கு ஆசையா என்ன வாங்கி குடுத்தீங்க? கல்யாணம் ஆனப்ப தான் எல்லாம்.. இப்ப? எதுவுமே இல்ல. எனக்கும் ஆசை எல்லாம் இருக்காதா?” அழ ஆரம்பித்துவிட்டாள்..

"சரி தான்டீ, அதுக்காக ஒரே நாள்லயேவா? கொஞ்சம் கொஞ்சமா வாங்கலாம்ல? நான் யாருக்காகடீ சேத்து வைக்கிறேன்? உங்களுக்காகத்தான?”

“சேத்து வச்சி என்னங்க பிரயோஜனம்? என்ன பண்ணிருக்கீங்க எங்களுக்கு? இதுவே உங்கள மாசக்கணக்குல கெஞ்சி தான கூட்டிட்டு வர முடிஞ்சது? உங்க கூட வெளிய வரணும்னு, இப்படி சுத்திப்பாக்கணும்னு எனக்கு எவ்ளோ ஆச தெரியுமா?” கண்ணீரை அடக்கொண்டு பேசினாள்.. முடியவில்லை அவளுக்கு. தொண்டை அடைத்தது..

“இங்க பாரு அழுகாத.. எல்லாரும் பாக்குறாங்க” எனக்கு இவள் அழுதால் வருத்தம் வருவதை விட, முதலில் கோபமும் பயமும் தான் வரும்.. பயத்திற்கான காரணம், ‘ஐயோ நினைத்ததை சாதித்து விடுவாளே’ என்று.. “சரி வா மாடிக்கு போலாம். படம் பாக்கணும்னு சொன்னியே?”

“இல்லைங்க ஒன்னும் வேண்டாம்.. படத்துக்குலாம் போக வேண்டாம்.. வாங்க வீட்டுக்கு போலாம்”

“ஏன்டீ இப்படி பண்ணுற? வா போலாம்”

“இல்லைங்க நான் வல்ல.. நீங்க வேணா போய்ட்டு வாங்க.. நானும் ராகேஷும் இங்கயே ஒக்காந்திருக்கோம்.. நீங்க வந்ததும் வீட்டுக்கு போலாம்”

”சரி சரி அடம் பிடிக்காத.. வா, அட்லீஸ்ட் வந்ததுக்கு ராகேஷை ஏதாது கேம்ஸாவது வெளையாட வச்சிட்டு போவோம்”.. முப்பது செகண்ட் அமைதிக்கு பிறகு ஒன்றும் பேசாமல் என்னுடன் வந்தாள்.. 

ஒரு கேமுக்கான டோக்கனுக்கு 50ரூபாய் கேட்டான் அந்த கொள்ளைக்கார பாவி.. ஒன்று மட்டும் வாங்கினேன்.. அவள் முறைத்தாள்.. “என்னடீ?”

“திருந்தவே மாட்டீங்களா? ஒரு டோக்கன வச்சி அவன் எத்தன கேம் வெளையாட முடியும்? பையனுக்கு கூட பண்ண மாட்டீங்களா?”.. இந்த கண்ணீரும், குத்திக்காட்டும் பேச்சும் தான் பெண்களுக்கான இலக்கணம் போல.. மொத்தத்தில் 7 விளையாட்டுக்கள் இருந்தன.. அத்தனைக்கும் ஒரு ஒரு டோக்கன் வாங்கினேன்..

பைக் ரேஸ், கார் ரேஸ், கூடையில் பொம்மையை போடுவது, பெரிய சைஸ் கேரம் காயினில் டேபிள் டென்னிஸ் போன்று விளையாடுவது என்று எல்லாம் விளையாண்டோம்.. மூவர் முகத்திலும் அந்த சில நிமிடங்கள் சிரிப்பு இருந்தன.. அந்த விளையாட்டு ஹாலில் ரிப்பேர் ஆகியிருந்த ஒரு ரேஸ் பைக் பொம்மைக்கு அருகில் நின்று கொண்டு அவர்கள் விளையாடும் அழகை பார்த்துக்கொண்டிருந்தேன்..

ஹ்ம் வீட்டில் இருந்தால் டிவி, செல்ஃபோனில் பொழுதை கழித்து, ஒருவரோடு ஒருவர் பேசாமல் உம்மென்று போகும் வாழ்க்கை, இது போன்ற சில நிமிடங்களில் தான் சந்தோசத்தை கொடுக்கிறது.. இதற்காக காசை செலவழிக்கலாம் தப்பில்லை.. கடைசியாக நான் அவளுக்கு அன்பாக சேலையோ, நகையோ வாங்கிக்கொடுத்து கண்டிப்பாக இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும்.. அதற்கு அடுத்து அவளுக்கு எப்போது எது எடுக்க வேண்டும் என்றாலும், பட்ஜெட் பட்ஜெட் என்று காரணம் தான் சொல்லிக்கொண்டிருப்பேன்.. அவளும் பாவம் மனுஷி தானே? அவள் சொன்னது போல் அவளுக்கும் ஆசைகள் எல்லாம் இருக்குமே? இனி மாதாமாதம் அவர்களின் சொந்த தேவைகளுக்கென்று ஏதாவது பணம் ஒதுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.. விளையாடிவிட்டு வந்தார்கள்..

அந்த விளையாட்டு ஹாலுக்கு வெளியில் தான் வரிசையாக சாப்பாட்டுக்கடைகள் இருந்தன.. “வா சாப்டுட்டு போலாம்”

“டேய் ராகேஷ் வேண்டாம்னு சொல்றா.. நாம வீட்லயே போய் சாப்டுக்கலாம்”

“ஏய் வாடீ சும்மா அடம் பிடிக்காம” என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனேன்.. பையன் வழக்கம் போல இட்லி என்றான்.. இன் இனமடா நீ என மனதுக்குள் சிரித்துக்கொண்டே, பார்வையால் அவளிடம் என்ன வேண்டும் என கேட்டேன்... அவள் வரிசையாக அடுக்கினாள்.. நான் ஒன்றும் சொல்லாமல் அனைத்தயும் வாங்கி வந்து அவர்கள் முன் அடுக்கினேன்.. மெதுவாக சாப்பிட ஆரம்பித்தோம்.. என் மனது எது எதையோ எண்ண ஆரம்பித்தது...

இந்த அவசர காலத்தில், பர பர உலகத்தில்குடும்பத்திற்கு என்று கூட தனியாக நேரமும், பணமும் ஒதுக்கினால் தான் சந்தோசம் கிடைக்கும் போல.. எனக்கு என்ன இவர்களை கஷ்டப்படுத்திப் பார்க்க ஆசையா? சந்தோசமாக வைக்க தான் நினைக்கிறேன்.. ஆனால், இதோ இது மாதிரி அதிக பணம் செலவழித்தால் தான் கொஞ்சமாவது சந்தோசம் கிடைக்கிறது இவர்களுக்கு.. ஆனால் அதிக பணத்திற்கு என்ன செய்வது? என் சம்பளத்தில் இன்று செய்த செலவை ஈடுகட்டவே இன்னும் 3 மாதம் ஆகும். வேறு கம்பெனிக்கு நல்ல சம்பளத்திற்கு மாறலாம்.. ஆனால் அந்த பணத்தால் கிடைக்கும் சந்தோசம் எவ்வளவு நாளைக்கு, அட எவ்வளவு நிமிசத்திற்கு நீடிக்கும்? இதோ இப்போது கம்மென்று சாப்பிடும் இவளும், ராகேஷும் சாப்பிட்டு முடித்தது வீட்டுக்கு போனதும் வழக்கம் போல ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி டிவியையும் செல்ஃபோனையும் நோண்டிக்கொண்டு தானே இருப்பார்கள்.. நான் என் பங்குக்கு கம்ப்யூட்டரை மேய்ந்து கொண்டிருப்பேன்.. மீண்டும் இன்று இருந்தது போல் சந்தோசம் கிடைக்க வேண்டும், நினைத்ததை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும்.. மாதத்திற்கு ஒரு முறை வர வேண்டும் என்றால் மாதத்தில் நான்கு ஒன்னாம் தேதி வந்தால் தான் சாத்தியம்.. ஹ்ம் இந்த காலத்தில் குடும்பம், பிள்ளை குட்டிகளை சந்தோசமாக வைத்திருப்பது ரொம்ப கஷ்டம் தான்.. காசு இருப்பவனால் தான் அது முடியும்.. நமக்கெல்லாம் இது மாதிரி வருசத்துக்கு ஒரு தடவை அரை மணிநேர சந்தோசம் தான் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. இப்போது தான் அந்த காட்சியை கவனித்தேன்..

ஒரு ஆள், அவன் மனைவி, எங்கள் ராகேஷ் வயதொத்த பையன் ஒருவன் என மூன்று பேர் இருந்தார்கள்.. அந்த ஆள் அவன் ஊரில் கிடைத்த டிசைனில் ஒரு மீட்டர் பிட்டு துணி எடுத்து உடம்போடு ஒட்டியது போல் சட்டை தைத்து போட்டிருந்தான், பேண்ட் ஊருக்கே பாத்தியப்பட்ட கருப்புக்கலரில்.. அவன் மனைவி திக் பச்சைக் கலரில் ஒரு பட்டுச்சேலை கட்டியிருந்தாள் இந்த இடத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், அதற்கு ஒரு சிகப்பு கலர் ஜாக்கெட் வேறு.. இருவரின் காலிலும் பிளாஸ்டிக்கா, ரப்பரா என்று கண்டுபிடிக்க முடியாத கலர் & டிசைனில் செருப்புகள் இருந்தன.. அவள் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கையில் கண்ணாடி வளையல்களும் வெளுத்துப்போன கவரிங் வளையல்களும்.. காதில் ஒன்றும் கிடையாது.. என்றோ ஏதோ இருந்ததற்கான அடையாளமாய் காதில் ஒரு சிறு துளை மட்டும் இருந்தது.. அந்த சிறுவனும் அவர்கள் பாரம்பரிய கலரில் ஒரு பேண்டும் சட்டையும் போட்டிருந்தான்.. இந்த இடத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் அந்த மூவரும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்..

‘இவங்கள எல்லாம் யார் உள்ள விடுறது?’ என அவர்களை விட கொஞ்சம் உயர்ந்தவன் என்கிற கர்வத்தில் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.. பின் தான் யோசித்தேன், ’ஓரளவு சம்பாதிக்கிற நம்மளாலேயே நம்ம பொண்டாட்டி கேக்குறத வாங்கித்தர முடியல, பிள்ளைய கேக்குற விளையாட்டுல திருப்தியா விளையாட வைக்க முடியல.. பாவம் இவனெல்லாம் என்ன செய்யப்போறானோ?’ என ஒரு ஆணாக அவனுக்காக வருந்தவும் செய்தேன்..

அவனும் அவன் பொண்டாட்டியும் கடைகளை ஆவென வேடிக்கை பார்ப்பதிலேயே திருப்தி பட்டுக்கொண்டார்கள்.. மாலில் இருக்கும் இளசுகளும், ஹை கிளாஸ் அங்கிள், ஆண்டிகளும் அவர்களை விநோதமாக பார்ப்பதை கூட கண்டுகொள்ளாமல் அவர்கள் அந்த கடைகளையும், பிரமாண்டத்தையும், விதவிதமான பொருட்களையும் ஏதோ பல வருடம் பார்வை இல்லாதவனுக்கு பார்வை கிடைத்தது போல் ஆச்சரியாமாகப் பார்த்தார்கள்.. ஒவ்வொரு கடையையும் பார்க்கும் போது கணவனும் மனைவியும் தங்களுக்குள் வாய் பிளந்து கையை ஆட்டி வியந்து பேசுகிறார்கள் என்பது தூரத்திலேயே எனக்கு நன்றாக தெரிந்தது.. நாங்கள் சாப்பிடும் இடத்தை கடந்து மெதுவாக விளையாட்டு ஹாலுக்கு சென்றார்கள்.. அங்கு எல்லா விளையாட்டு மெஷினிலும் கூட்டம் அம்மியது.. கூட்டம் இல்லையென்றாலும் இவர்கள் கண்டிப்பாக டோக்கன் வாங்க மாட்டார்கள் எனத்தெரியும்.. அங்கிருந்த விளையாட்டு மெஷின்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு, நான் கொஞ்சம் முன்னாடி நின்று கொண்டிருந்தேனே, அந்த ரிப்பேர் ஆன பைக் அருகில் வந்தார்கள்.. தங்கள் பையனை அதில் அமர வைத்து அந்த கணவனும் மனைவியும் அந்த பைக்கை இடமும் வலமும் ஆட்டி அவனுக்கு விளையாட்டு காட்டினார்கள்.. அந்தப் பையன் முகத்திலும், பெற்றோர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம், சிரிப்பு.. அந்தப் பையன் வாயாலேயே டுர்ர்ர்ர்ர் என்று சத்தம் போட்டுக்கொண்டே பைக் ஓட்டினான்..

”அங்க பாத்தீங்களா?” என்றாள்.. 

“ஹ்ம்..”

“எவ்வளவு சந்தோசமா இருக்காங்க பாருங்க.. ஆனா பாவம் விளையாட காசு இல்ல போல”

“அதான் சந்தோசமா இருக்காங்க”

“என்னது?” புருவத்தை சுருக்கி என்னை குத்தலாக பார்த்துக்கேட்டாள்.. நான் ஒன்றும் சொல்லவில்லை.. எதையோ யோசித்தவளாக சில நொடிகளில் அவளே சொன்னாள், “ஆமா உண்ம தான்”..

விளையாட்டு ஹாலில் இருந்து வெளியில் வந்தவர்களை நானும் அவளும் பார்த்துக்கொண்டே இருந்தோம்.. அவர்கள் முகத்தில் சந்தோசம் இருந்தாலும் அந்தப்பையனுடைய முகத்தில் மற்ற விளையாட்டுப்பொருட்களில் விளையாடாத ஏக்கம், உடைந்து போன பொருளில் விளையாடிய ஏமாற்றம் தெரிந்தது.. எஸ்கலேட்டர் அருகில் வந்த அவன் மனைவி ஏதோ கண்டுபிடித்தவள் போல அவள் புருசனை மட்டும் அதில் கீழே போகச்சொன்னாள்.. அவன் கீழே போனான்.. அவளும் பையனும் மேலேயே நின்று கொண்டார்கள்.. அவள் என்ன செய்யப்போகிறாள் என்று ஆவலாக பார்த்தேன்..






அவன் கீழே சென்றவுடன் அவள் அந்த பையனை மட்டும் எஸ்கலேட்டரின் படிகளில் தூக்கி அழகாக நிறுத்தி கீழே அனுப்பினாள்.. நகரும் எஸ்கலேட்டரில் அவன் மெதுவாக பயத்துடன் திரும்பி அவளைப்பார்த்தான்.. அவள் கைதட்டிக்கொண்டே “கீழ பாரு, அப்பாவ பாரு” என்றாள்.. அவன் திரும்பி கீழே அவன் அப்பாவை பார்த்தான்.. அந்த அப்பாவும் கை தட்டிக்கொண்டே, “வா வா வா” என்று சைகை செய்தான்.. லேசாக குதித்துக்கொண்டும் இருந்தான்.. அந்தப்பையன் கீழே வந்ததும் அந்த அப்பன், அவனை பக்கத்தில் இருக்கும் மேலே போகும் இன்னொரு எஸ்கலேட்டரில் ஏற்றி அம்மாவிடம் அனுப்பினான் டாட்டா காட்டிக்கொண்டே.. மேலே அவன் அம்மா ‘வா வா வா’ என்று சிரித்துக்கொண்டே கடைசி படிக்கு அவன் வரும் போது கட்டி அள்ளிக்கொண்டாள் தன் மாரோடு.. அந்தப்பையன் முகத்தில் பயம் மறைந்து சிரிப்பு அப்பிக்கொண்டது.. மீண்டும் மீண்டும் அதிலேயே விளையாண்டு கொண்டிருந்தார்கள் மூவரும்..

எங்களைப்போல் இன்னும் சில குடும்பங்களும் அவர்களின் விளையாட்டை ரசித்துகொண்டிருந்தன.. சில கல்லூரிப்பெண்கள் அந்தப்பையனை கொஞ்சியும், அவர்கள் குடும்பத்தை கைதட்டியும் உற்சாகப்படுத்துக்கொண்டிருந்தார்கள்.. பலரும் தங்களை கவனிப்பதை உணர்ந்த அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தார்கள்..

அவர்களை கவனித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் ஒரு மிகப்பெரிய உண்மையை உணர்த்தியவர்களாய் மெதுவாக அந்த மாலில் இருந்து திருப்தியுடன் சிரித்த முகத்துடன் கிளம்பினார்கள்.. அவர்களையே இவ்வளவு நேரம் பார்த்தவர்கள் முகத்திலும் மகிழ்ச்சி.. சாப்பிட்டு முடித்து பில் கட்டிவிட்டு நாங்களும் கிளம்பினோம்.. வெளியில் பைக் ஸ்டாண்டிற்கு வந்தோம்.. அதற்கு எதிரே சாலையில் அவர்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.. அப்போது அவன் பீடியை எடுத்து வாயில் வைத்தான்.. அவன் பொண்டாட்டி அதை டக்கென்று பறித்து எறிந்தாள்.. நான் பதறி விட்டேன்.. ஏனென்றால் ஒரு சிகரெட் பிடிப்பவனுக்குத் தான் தெரியும் அதை டக்கென்று ஒருவர் நம் வாயில் இருந்து பிடுங்கினால் எவ்வளவு கோபம் வரும்னெறு.. இவ்வளவு நேரம் சந்தோசமா இருந்தவங்க பஸ் ஸ்டாப்ல சண்டை போடப்போறாங்கனு நெனச்சேன்..

ஆனா, கொஞ்சம் கூட கோபமடையாத அவன் சிரித்துக்கொண்டே அவளை அடிப்பது போல் கையை ஒங்கி, லேசாக அவளில் புஜத்தில் செல்லமாக குத்தினான்.. அவள் அந்த பீடியை எடுத்து மீண்டும் அவன் வாயிலேயே வைத்தாள்.. அவன் இல்லை என்பது போல் மண்டையை ஆட்டி அந்த பீடியை எடுத்து வீசி விட்டான்..

நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே அனிச்சையாக வழக்கம் போல சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து என் வாயில் வைத்தேன்.. இவளும் வழக்கம் போல பறித்து எறிந்தாள்.. டக்கென்று அவள் பக்கம் திரும்பினேன்.. கண்ணைச்சிமிட்டி என்னைப்பார்த்து சிரித்தாள்.. கண்ணீரை விட சிரிப்புக்கு பெரிய சக்தி இருப்பது உண்மை தான் போல.. “என்ன மாமா இன்னும் கோவம் போலையா?” என்றாள்... 

அவள் மாமா என்றதும் எங்கள் காதல் கால அவள் தான் கண் முன் தெரிந்தாள்.. நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. ”என்ன பாத்துட்டே இருக்கீங்க? வண்டிய எடுங்க மாமா, போலாம்”

“நீ படம் பாக்கணும்னு தான இங்க வந்த? வா படம் பாத்துட்டு போவோம்”

“அட இருக்கட்டும் மாமா, பெரிய்ய்ய்ய படம்.. போனா போது.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என் முதுகில் அணைப்பது போல் கையை வைத்துக்கொண்டு சொன்னாள்.. வண்டியை கிளப்பினேன். எங்கள் இருவருக்கும் தெரியும் இன்னொரு நாள் இங்கு வர வேண்டும் என அவளும் சொல்ல மாட்டாள், அப்படி சொல்லும் அளவிற்கு நானும் நடந்து கொள்ள மாட்டேன் என்று.. எங்கள் சந்தோசத்திற்கு மாலோ தியேட்டரோ தேவையில்லை என்பதை உணர்ந்திருந்தோம்.. 

33 comments

  1. kadaiyum, ninga elutiya vithathum rompa nalla irunthichu anna.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் தம்பி...

      Delete
  2. நல்லா இருக்கு. ரசித்தேன்.

    //பின் காதலிகளுக்கே உரித்தான ஓசி பர்ச்சேஸ் ஆரம்பம் ஆனது//

    அட! இப்படி ஒன்னு எங்க காலத்தில் இல்லையே:( காதலனிடமிருந்து வாங்குவது அவமானமால்லெ நினைச்சேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற பெண்கள் இந்த காலத்தில் இருந்தால், நம்ம பசங்க எல்லாம் ரொம்ப சந்தோசப்படுவாய்ங்க அக்கா..

      Delete
  3. சிரிப்பு என்றும் மருந்து...

    ReplyDelete
    Replies
    1. ஆனால் காஸ்ட்லியான மருந்து அண்ணே

      Delete
  4. சூப்பர்.. தலைப்பு மிக மிக உண்மை..

    ReplyDelete
    Replies
    1. ஆமா கதை கொஞ்சம் மொக்கை தான்..

      Delete
  5. //பெண்களுக்கே உரித்தான விண்டோ ஷாப்பிங்

    Adadae!!! :) :)

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஒத்துக்க மாட்டீங்களா?

      Delete
  6. ஒரு குறும்படம் பார்த்த திருப்தி.. சூப்பர் பாஸு.. சமீபத்தில் படித்த மிக சிறந்த சிறுகதை ... ஆசம் ஆசம்

    ReplyDelete
    Replies
    1. //ஆசம் ஆசம்// இத கேட்டாலே ரோபோ சங்கர், விஜயகாந்த வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணுனது தான் ஞாபகம் வருது.. :P

      Delete
  7. மிகச்சிறப்பான சிறுகதை! அந்த ஏழைக் குடும்ப பாத்திரப்படைப்பு கண் முன்னால் நிற்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மிகச் சிறப்பான சிறுகதை ராம்குமார். பல வீடுகளில் நடக்கும் விஷயங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கீங்க! பாராட்டுகள்....

    ReplyDelete
    Replies
    1. வீட்ல நடக்கிறத சும்மா பராக்கு பாத்துட்டே இருந்தா எப்படி? இந்த மாதிரியும் கொஞ்ச நஞ்சம் எடுத்து விடணும்ல? ;)

      Delete
  9. அருமையான எழுத்தாற்றல். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்..

      Delete
  10. Very nicely written

    ReplyDelete
  11. Window shopping எவ்வளவு குஷ்டம் தெரியுமா ராம் ?

    ReplyDelete
  12. Replies
    1. //Window shopping எவ்வளவு குஷ்டம் தெரியுமா ராம் ?// ஹா ஹா நம்ம ஹீரோவுக்கு காசு செலவு வைக்காத எதுவுமே குஷ்டம் இல்ல... :P

      //Second Half Superb ...// Thank you so much :-)

      Delete
  13. கொஞ்சம் டிராமா. நிறைய உண்மை. ஏழைக்குடும்பத்தின் மகிழ்ச்சி நம்மையும் நெகிழ வைத்தது தான் இந்தக் கதையின் வெற்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..... சோற்றுக்கு அப்புறம் மனிதன் இந்த உலகில் எதிர்பார்ப்பது மரியாதையையும், மகிழ்ச்சியையும் தானே?

      Delete
  14. நன்று :) அழகான கதை :)

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. அண்ணா சூப்பர்ணா!!!உங்க blogல வர பதிவுகள் எல்லாம் படிக்கறப்ப,என் மனசுல இருக்கர விஷயங்கள நீங்க அப்படியே சொல்ற மாதிரி இருக்குணா!!!உங்க பதிவுகள் வாரத்துக்கு ஒன்னாச்சும் போடுங்கண்ணா!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி.. முடிந்தவரை பதிவிடுகிறேன்.. என் ஆசையும் வாரத்துக்கு ஒன்று தான்.. முயல்கிறேன்..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One