அர்விந்த் கெஜ்ரிவால் - (பம்)மாற்று அரசியல்!!!!

Thursday, January 23, 2014

ஒரு கேஸ் ஸ்டடியோடு (case study) ஆரம்பிப்போம் நம் பதிவை..
நீங்கள் ஒரு கம்பெனியில் புதிதாக மேனேஜராக பொறுப்பேற்று இருக்கிறீர்கள்.. உங்கள் துறை சார்ந்த எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும், உரிமையும் உங்களுக்கு உண்டு. நீங்களும் ’இந்த துறைக்கு நான் மேனேஜராக வந்தால், மேற்கில் சூரியனை உதிக்க வைப்பேன், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதை 30 மணி நேரமாக மாற்றுவேன்’ என்று இன்டர்வ்யூவில் அளந்து விட்டுத்தான் இப்பதவிக்கு வந்திருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஒரு பியூன் உண்டு.. அவன் நீங்கள் சொன்ன எதையும் சரி வரக்கேட்பதில்லை, உங்கள் உத்தரவுக்கும் கீழ்ப்படிவதில்லை.. எந்த வேலை சொன்னாலும், ‘எனக்கென்ன?’ என்பது போல் மெத்தனமாக இருக்கிறான். அதையும் மீறி உங்கள் துறைக்கே கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பல தவறுகள் செய்து கொண்டிருக்கிறான் அவன். இப்போது தான் உங்களுக்கு ஒரு உண்மை உரைக்கிறது, மொத்த துறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பியூன் மட்டும் உங்கள் கட்டுப்பாட்டில் வராமல் ஜெனரல் மேனேஜரின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறான் என்பது.. இப்போது உங்கள் பிரச்சனை, உங்கள் துறை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அந்த பியூன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முடிந்தால் பியூனை உங்கள் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது தான்.. நீங்கள் என்ன செய்வீர்கள் அந்த மேனேஜராக இருந்தால்?

ரொம்ப சிம்பிள், இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் ஜெனரல் மேனேஜரிடம் சொல்லி பியூன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.. சரி, ஜெனரல் மேனேஜர் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது நடவடிக்கை எடுக்க யோசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்யலாம்? நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் பிரச்சனையை கொண்டு செல்லலாம்.. உங்களுக்கு இருக்கும் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நீங்கள் நிறுவனத்தில் யாரையும் பார்க்க முடியும். ஜெனரல் மேனேஜருக்கு மேல் இருப்பவரை சந்திப்பது தான் முறை.. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஜெனரல் மேனேஜர், பியூன் மீது நடவடிக்கை எடுக்க யோசிப்பது உங்களுக்கு தெரிந்தவுடனே, கம்பெனியின் வெளியே ஒரு ஷாமியானா பந்தல் போட்டு, உங்கள் அல்லக்கைகளை சேர்த்துக்கொண்டு பியூன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். முடிவு எடுக்கும் பொறுப்பில் இருந்து கொண்டு, அதிகாரத்தின் எந்த எல்லையையும் நினைத்த நேரத்தில் சந்தித்து எளிதாக தீர்க்க முடிந்த பிரச்சனையை இப்படி உண்ணாவிரதம், பந்தல் என போட்டு உங்கள் கையாலாகாத்தனத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவது சரியா?

ஆனால் நம் இந்திய தேசத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் இந்த மாதிரி தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.. பொதுவாகவே யூனியன் பிரதேசங்கள் எல்லாமே மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.. ஆனால் இவற்றில் டெல்லியும் புதுச்சேரியும் மட்டும் கொஞ்சம் சிறப்பு அந்தஸ்து பெற்றவை. இரண்டிற்கும் சட்டசபை, மந்திரிகள், முதல்வர் எல்லாம் உண்டு.. சண்டிகர், அந்தமான் நிக்கோபார், டையூ டாமன், லட்சத்தீவுகள், மற்றும் தாத்ரா நகர் ஹவேலி போன்ற மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சட்ட்சபையோ முதல்வர் என்கிற அதிகாரமோ கிடையாது.. அதிலும் டெல்லி தேசிய தலைநகர் என்பதால் இங்கு மத்திய அரசின் அதிகாரம் மற்ற யூனியன் பிரதேசங்களை விட அதிகமாகத்தான் இருக்கும். போலீஸ் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உண்டு. ஒரு தேசத்தின் தலைநகரில், பாராளுமன்றம் இருக்கும் நகரத்தில் அரசியல் சாதக பாதகங்களை அலசும் போது, போலீஸ் துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் சரி எனப்படும். அதே நேரத்தில் தனக்கென்று தனி சட்டசபை, முதல்வர், என்று இருக்கும் போது, அந்த போலீஸ் துறை மாநில அரசின் பேச்சுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய ரெண்டுங்கெட்டான் சூழலில் சிக்கி இடிபட்டுக்கொண்டிருக்கும். 

இந்த சூழலில் தான் நம் அர்விந்த் கெஜ்ரிவால், தன் அரசு சொன்ன எந்த வேலைகளையும் செய்யாமல் மெத்தனமாக இருக்கும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி டெல்லியில் நடுரோட்டில் தர்ணா போராட்டம் செய்திருக்கிறார். எனக்கு என்ன சந்தேகம் என்றால், அதிகாரத்தின் மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு முதல்வர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தீர்க்க முடிந்திருக்க வேண்டிய ஒரு விசயத்திற்கு ஏன் தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்து, மக்களையும் கஷ்டப்படுத்த வேண்டும்? உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா, கோர்ட்டிற்கு போய் இருக்கலாம், பிரதமரை பார்த்திருக்கலாம், அல்லது எந்நேரமும் மீடியாவை கூடவே வைத்திருக்கிறாரே, அதில் வழக்கம் போல ஒரு பேட்டி கொடுத்திருக்கலாம், தேசம் முழுவதற்கு செய்தி போய் சேர்ந்திருக்கும், மத்திய அரசும் பயந்து நடவடிக்கை எடுத்திருக்கும்.. ஆனால் அனைத்தையும் விட்டுவிட்டு, முதல்வன் படத்தில் ரகுவரன் எளிதாக தீர்க்க வேண்டிய ஒரு பஸ் பிரச்சனையை பெரிய கலவரமாக மாற்றுவாரே, அது போல் தன் விளம்பரத்திற்காக இவ்வளவு தூரம் இழுத்து வந்திருக்கிறார் இவர். இதில் ”இவர் இரவில் பனியில் கிடந்தார், வீட்டில் இருந்து மனைவி கொண்டு வந்த சப்பாத்தியை மென்றார்” என்று டிவியிலும், செய்தித்தாள்களிலும் சிம்பதி செய்திகள் வேறு.

இன்று மாற்று அரசியலின் முன்னோடி, சுத்தமான அரசியல்வாதி என்று விளம்பரப்படுத்தபடும் அர்விந்த் கெஜ்ரிவாலே, இந்திய அரசை ஏமாற்றியிருக்கிறார், இன்னமும் அந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இவர் மத்திய அரசு வேலையில் இருக்கும் போது 2003ம் ஆண்டில் மத்திய அரசின் செலவில் மேற்படிப்பு படிக்க போனார். அரசின் செலவில் படித்தால், படிப்பு முடிந்ததும், மூன்று வருடங்கள் வேலையை ராஜினாமா செய்யாமல் கண்டிப்பாக பணியில் தொடர வேண்டும். இடையில் ராஜினாமா செய்தால் அந்த படிப்பிற்கான செலவை கட்டிவிட்டுத்தான் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் ஐயா ஒன்னரை வருடத்தில் வேலையை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் சட்டத்தை மதித்தாரா என்றால் இல்லை. நாம் கம்பெனியில் notice periodஐ மதிக்காமல் வெளியேறினால் என்ன ஆகும்? அந்த notice periodற்கான பணத்தை கட்ட சொல்வார்கள். கட்டவில்லை என்றால் கோர்ட் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.அரசும் கிட்டத்தட்ட 9லட்ச ரூபாயை இவர் கட்டாமல் ஏமாற்றுகிறார் என பல முறை நோட்டீஸ் அனுப்பியும் இவர் அசரவேயில்லை. கூலாக, “என் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் என்னை தடுக்க நினைக்கிறார்கள்” என்கிறார். இன்று வரை அரசின் தயவில் தான் படித்த கல்வியை முறையாக அவர் பயன்படுத்தவும் இல்லை, சட்டத்தை மீறியதற்கான விலையையும் அவர் கொடுக்கவில்லை. இவர் தான் clean politics செய்வாரா? தன் வேலையில் நாணயமாக இல்லாத ஒரு மனிதன் ஊரில் பிறர் மீது பழி போடுவது என்ன ஞாயம்? இவர் எப்படி மற்ற விசயங்களில் சுத்தமானவராக இருப்பார்?

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னா ஹஜாரே என்னும் வயதான மனிதர் ஊழலை எதிர்த்து லோக்பால் வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு பக்கபலமாக இருந்தது இப்போதைய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தான். அந்த ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்பது மக்களை எப்படி முட்டாள்களாக்கியது என்பது ஒரு புறம் என்றாலும், பலரும் அதற்கு ஆதராவாக வந்தனர்.. மத்திய காங்கிரஸ் அரசு கூட லேசாக பயப்பட ஆரம்பித்தது.. மொத்த மீடியாவும் அந்த அன்னா ஹஜாரே தாத்தாவை ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்த்திப்பேசிக்கொண்டிருந்தன.. அப்போது திடீரென, வெறும் உண்ணாவிரதமும் தர்ணா போராட்டமும் வேலைக்கு ஆகாது ஓட்டு அரசியல் தான் தீர்வு என்று அர்விந்த் கெஜ்ரிவால் சொன்னார். அன்னா ஹஜாரே ‘நம் ஆசை அரசியல் அல்ல, ஊழை ஒழிப்பது தான்.’ என்பதில் தீவிரமாக இருந்தார். இனிமேலும் அன்னா ஹஜாரேவிடம் இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்ட அர்விந்த் கெஜ்ரிவால் அவரிடம் இருந்து பிரிந்து வந்து ஆம் ஆத்மி என்னும் கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்து முதல்வரும் ஆகிவிட்டார். அவர் எதிர்பார்த்தபடியே பதவியும் அதிகாரமும் வந்துவிட்டது. சரி என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தால், ஒன்றும் செய்யாமல் ரோட்டில் வந்து தர்ணா செய்கிறார். ஓட்டு அரசியலுக்கு வந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைத்து வந்த அவர் மீண்டும் போய் சேர்ந்திருப்பது பழைய தர்ணாவிற்கு.. இதற்கு தான் அரசியலுக்கு வந்து முதல்வரும் ஆனாரா? முதல்வர் பதவிக்கான அதிகாரம் என்னவென்றே தெரியாமல் ரோட்டில் ரெண்டு நாள் லூசு மாதிரி பனியில் கிடப்பதற்கு பெயர் தான் பாமரனுக்கான அரசியல் என்றால் அப்படிப்பட்ட அறிவுகெட்ட அரசியல் எதற்கு? பேசாமல் அன்னா ஹஜாரேவோடே இருந்து இதை செய்திருக்கலாமே?மக்களும் இவர் ஜெயித்து வந்ததும் டெல்லியே மாறிவிடும் என்பது போல் நப்பாசையோடு தான் இருந்தார்கள். பாவம், நம் மக்களை சொல்லியும் குற்றம் இல்லை. தாங்கள் ஒரு நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என எப்போதுமே யோசிக்க மாட்டார்கள்.. ஆனால் அரசியல்வாதியும் அரசு ஊழியனும் மட்டும் 24 காரெட் ஹால்மார்க் தங்கம் போல் மாசற்று இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.. மக்களின் இந்த பல்ஸை நன்றாக புரிந்து கொண்டு, மாற்று அரசியல் என்கிற போர்வையோடு அரசியலுக்குள் வந்தார் கெஜ்ரிவால். அடுக்கடுக்காக காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். அப்போதைய டெல்லி முதல்வர் மீது எக்குத்தப்பான ஊழல் புகார்களை அடுக்கினார். நாடு நாசமாய் போய்க்கொண்டிருப்பதற்கு, ஊழல் எங்கும் நிறைந்திருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் என சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக மேடை மேடையாக கூவிக்கொண்டிருந்தனர் இவர் ஆட்கள். அவர்கள் பேசுவதற்கும் வசதியாக 2G, ஆதர்ஷ், நிலக்கரி என காங்கிரஸும் வெட்கமே இல்லாமல் வரிசையாக ஊழலில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டாலே நாடு சுபிட்சமாகிவிடும் என பாமர மக்களை நம்ப வைத்தார். டெல்லி தேர்தல் முடிவும் வந்தது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல். ஆனால் தான் இத்தனை நாட்களாக யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தாரோ, யாரை நாட்டுகே கெடுதல் என்றாரோ அதே காங்கிரஸின் ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இது எப்படி என்றால் தி.மு.க.வின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமைத்தால் எபப்டி இருக்கு? அது போன்ற கேவலமான காம்பினேசன். அப்போது தான் இவரின் மாற்று அரசியலில் முதல்முறையாக லேசான கறை படிந்தது.

ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தவுடன் பி.ஜே.பி.யினர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் ஒரு கேள்வி கேட்டனர், ‘அதான் ஆட்சிக்கு வந்தாகிவிட்டதே, நீங்கள் இத்தனை நாட்களாக குற்றம் சுமத்திய முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?’ என்று.. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ‘தகுந்த ஆதாரங்களை பி.ஜே.பி.கொடுக்கும் பட்சத்தில் ஷீலா தீட்சித் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மாறிவிட்டதை நிரூபித்தார். என்ன இருந்தாலும் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சி அல்லவா காங்கிரஸ்? ஆதாரம் இருக்கிறது என பிரச்சாரத்தின் போது சொன்னவர், பதவி ஏற்ற பின் அந்த ஆதாரத்தை தொலைத்து விட்டார் போல, பாவம்.. இந்த இடத்தில் அவரது மாற்று அரசியலில் நன்றாக மீண்டும் ஒரு முறை கறை படிந்தது.

ஜெயித்த பின் தலைகால் புரியாமல் அனைத்திலும் விளம்பரம் தேட ஆசைப்பட்டார். அரசு கொடுத்த முதல்வர் பங்களாவை ஏற்க முதலில் ஒத்துக்கொண்டவர், பின் எதிர்க்கட்சிகளின் நக்கல் கேள்விகளை தொடர்ந்து ‘எனக்கு ஆடம்பரம் பிடிக்காது’ என ஸ்டண்ட் அடித்தார்.. சிலர் குழம்பி விட்டார்கள், ‘என்னய்யா இந்த ஆளு நேத்து வரைக்கு அந்த வீட்டுக்கு போறேன்னாரு, இன்னைக்கு திடீர்னு ஆடம்பரம் பிடிக்காது, பீதாம்பரம் பிடிக்காதுன்னு சீன் போடுறாரு?’ என்று. கடைசியில் தான் ஏற்கனவே இருந்த வீட்டை விட கொஞ்சம் பெரிய வீட்டிற்கு மாறினார்.. இவர் அமைச்சர்கள் இவருக்கு மேல். ஜெயித்து ஆட்சி அமைத்த முதல் ஒன்றிரெண்டு நாட்கள் பஸ்ஸிலும், மெட்ரோ ரயிலிலும் வந்தவர்கள், பின் இன்னோவோ காருக்கு மாறினார்கள். அதை பற்றிய சலசலப்பு வந்த போது ஒரு அமைச்சர், ‘விஐபி கலாச்சாரத்தை தானே பின்பற்ற மாட்டோம் என்று சொன்னோம்? கார் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லவில்லையே?’ என்று லாஜிக்காக ஒரு கேள்வி கேட்டார். அடுத்ததாக அரசு கொடுத்த பாதுகாப்பு வாகனங்களில் சிகப்பு சுழல் விளக்கையும் வைத்துக்கொண்டனர் பிரச்சாரத்தில் சுழல் விளக்கு கலாச்சாரத்தை எதிர்த்த இந்த மாற்று அரசியல்வாதிகள். அதற்கும் ஒரு லாஜிக் சொன்னார்கள், ‘தனியாக சுழல் விளக்கு வைத்துக்கொள்வதை தான் எதிர்த்தோம், அரசு வாகனங்களில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று அப்படியே பிளேட்டை மாற்றினார்கள்.. மாற்று அரசியல் என்றால் அப்படியே மாற்றி பேசுவது தானோ என்று பலரும் குழம்பிவிட்டார்கள். இவர்களுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரும் ங்ங்கே என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள் இவர்களின் மாற்று அரசியலை. மிகுந்த எதிர்பார்ப்போடு ஓட்டளித்த பலருக்கும் இவர்களின் இது போன்ற அடுத்தடுத்த விசயங்களால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.இவர்களை விமர்சித்தால் பலரும் சொல்வது ஆட்சிக்கு வந்து சில நாள் தானே ஆகிறது அதற்குள் விமர்சிக்க வேண்டுமா என்கிற கேள்வி தான். ஒரு திட்டம் போடுகிறார்கள், தீட்டுகிறார்கள் என்றால் அதை பொறுமையாக கவனித்து செயல்பாட்டிற்கு வரும் போது நிறுத்தி நிதானமாக கவனித்து விமர்சிக்கலாம். ஆனால் ஒரு முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை கூட அறிந்து கொள்ளாமல், அந்த பதவிக்கான அடிப்படை புரிதல் கூட இல்லாமல் புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று கிறுக்குத்தனம் செய்வதற்கு எல்லாம் ஏன் நேரம் கொடுத்து விமர்சிக்க வேண்டும்? இதெல்லாம் உடனே களையப்பட வேண்டியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், ஈழப்பிரச்சனைக்கு கலைஞர் மெரினாவில் உண்ணாவிரதம் இருந்ததை இப்போது வரை எத்தனை பேர் இன்னமும் கோபமுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம்? கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விசயம் தான் இரண்டு நாட்களுக்கு முன் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தது. கலைஞருக்கும் கெஜ்ரிவால் போல கொஞ்ச வயதாக இருந்திருந்தால் அவரும் அரை நாள் உண்ணாவிரத்திற்கு பதிலாக, நாள் கணக்காக, பனி, மழை, வெயில் பாராமல் மெரினாவில் உட்கார்ந்திருப்பார்.. இன்னொரு விசயம், நாளைக்கே காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கர்நாடகம் மறுக்கிறது, நம் முதல்வர் உடனே கர்நாடக அரசை எதிர்த்து தர்ணா என்று சாலையில் உட்கார்ந்து கொண்டால் அதையும் மாற்று அரசியல் என்போமா? பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறினால், இனி பிரதமரையும், ஜனாதிபதியையும் பாகிஸ்தான் சாலைகளில் தர்ணா செய்ய சொல்லலாமா? நினைக்கவே எவ்வளவு கேடுகெட்டத்தனமாய் இருக்கிறது? தர்ணா செய்வதற்காக மக்கள் ஓட்டு போட்டு முதல்வராக்கி இருக்கிறார்கள் கெஜ்ரிவாலை? தன் பதவியின் அதிகாரத்தை கூட முழுதாக பயன்படுத்த தெரியாமல் அனைத்தையும் மீடியாவின் துணை கொண்டு விளம்பரம் சம்பாதிக்கவே விளைகிறார்.

இப்போது கூட போலீஸாரை எதிர்த்து ஆரம்பித்த தர்ணாவை என்ன காரணம் சொல்லி முடித்துள்ளார் என கவனித்தீர்களா? அந்த போலீஸ்காரர்களை விடுப்பில் அனுப்பி விட்டார்களாம், அதுவே இவர் தர்ணாவிற்கு கிடைத்த வெற்றியாம்.. அடப்பாவமே, மீண்டும் அந்த போலீஸ்காரர் விடுப்பு முடிந்து வேலைக்கு வருவாரே? அப்போது பிரச்சனை செய்தால் மீண்டும் தர்ணாவா? இவர் தர்ணா செய்ததற்கான காரணம் ஒரு சதவிகிதம் கூட நிறைவேறாத போது, அதை எப்படி வெற்றி என்று கொண்டாடுகிறார்? முதல்வர் என்கிற இவருடைய பதவியை பற்றி இவருக்கு இருக்கும் அதிகார புரிதல் தான் என்ன? ஆட்சி அமைத்ததில் இருந்து இது வரை ஒரு காரியத்தை கூட பரிபூரணமாக ஆரம்பிக்கவும் இல்லை, முடிக்கவும் இல்லை, இந்த மாற்று அரசியலின் ஹீரோ.. தானும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என நிரூபித்துக்கொண்டே தான் வருகிறார் தன் ஒவ்வொரு நடவடிக்கையாலும். 

சொகுசு பங்களா ஆசை, பின் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு பின் மனமாறுதல், பிரச்சாரத்தில் தானே தைரியமாக கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம், ஆடம்பரத்தை எதிர்த்து பேசிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் சுழல் விளக்கு கார் என ஆடம்பர மாற்றம், மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளை தீர்ப்போம் என அளந்து விட்டு உடனே பின் வாங்கியது, சாதாரணமாக தீர்க்க வேண்டிய பிரச்சனையை கூட மீடியா முன் பெரிதாக சீன் போட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்தது, பின் ஒரு சொத்தை காரணத்திற்காக அந்த போராட்டத்தை வாபஸ் வாங்கியது என்று இவரது மாற்று அரசியல், அரசியலில் எந்த மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பது தான் உண்மை. 

ஆரம்பத்தில் நன்றாக, வக்கனையாக, நல்ல மாற்று அரசியல்வாதி போலவே பேசியவர் ஆட்சிக்கு வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக, ‘நானும் காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு சளைத்தவன் அல்ல’ என்று நிரூபித்துக்கொண்டே வருகிறார். மாற்று அரசியல், சுத்த அரசியல் என நம்பி ஓட்டு போட்ட மக்களும் இந்த ’விளம்பரப்பிரிய அரசியலை’ பார்த்து நொந்து போக ஆரம்பித்துவிட்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நம்பிக்கையில் மீடியாவை இவ்வளவு தூரம் நம்புகிறார் என்று புரியவில்லை. மீடியாக்களின் உண்மை முகம் தெரியாமல் அரவிந்த் கெஜ்ரிவால் அதை வைத்தே பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று பார்க்கிறார்.. இதே மீடியா தான் அன்று அன்னா ஹஜாரே என்னும் பெரியவரை சிகரத்தில் கொண்டு போயும் வைத்தது, இன்று சீண்டுவார் இல்லாமலும் வைத்திருக்கிறது.. இதை புரிந்து கொண்டு, சீப் பப்ளிசிட்டிக்காக அரசியல் ஸ்டண்ட் அடிக்காமல் ஒழுங்காக மக்கள் பணி ஆற்றினால் பிழைப்பார்.. இல்லையென்றால் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக மற்ற அரசியல்வாதிகளுடன் தான் இணைய வேண்டும்...

மக்களும் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதி என்பவன் மக்களில் இருந்து தான் வருகிறான். நல்ல குடிமக்கள் தான் நல்ல அரசியல்வாதியை கொடுக்க முடியும். நாம் நல்ல குடிமகனாக இல்லையென்றால் நம்மிடம் இருந்து வரும் அரசியல்வாதி மட்டும் எப்படி வருவான்? குப்பை அரசியல்வாதி தான் வருவான். விஜயகாந்த வந்த போது தமிழகத்தின் மாற்று என நம்பினோம்.. அந்த மாற்று என்னவானது என்பது கண்கூடு. நாளைக்கே அரவிந்த் கெஜ்ரிவால் போல் இன்னொருவர் வரலாம். அப்போதும் அவரின் வாய்ஜாலங்களை கண்டு ஏமாறத்தான்  போகிறோம். நாம் ஒழுங்கான, ஒழுக்கமான, உண்மையான குடிமகனாக இருக்காத வரை, நம்மிடம் இருந்து உருவாகும் அரசியல்வாதியும் அப்படித்தான் இருப்பான். நாம் திருந்தாதவரை நல்ல அரசியல்வாதியை எதிர்பார்ப்பதும் தவறு தான்..

19 comments

 1. நாம் திருந்தாதவரை நல்ல அரசியல்வாதியை எதிர்பார்ப்பதும் தவறு தான்..

  ReplyDelete
 2. //நாம் திருந்தாதவரை நல்ல அரசியல்வாதியை எதிர்பார்ப்பதும் தவறு தான்.// - Well said!

  ReplyDelete
 3. முடிவு எடுக்கும் பொறுப்பில் இருந்து கொண்டு, அதிகாரத்தின் எந்த எல்லையையும் நினைத்த நேரத்தில் சந்தித்து எளிதாக தீர்க்க முடிந்த பிரச்சனையை இப்படி உண்ணாவிரதம், பந்தல் என போட்டு உங்கள் கையாலாகாத்தனத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவது சரியா? = எங்கள் அருமை Ram Kumar இன் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. விகடன் போன்ற பெரிய பத்திரிக்கைகளில் வர வேண்டிய கட்டுரை நண்பா

  ReplyDelete
  Replies
  1. தண்ணிய ஊத்துறாய்ங்கடா, தலைய சிலிப்பிறாத...

   Delete
 5. EXCELLENT POST GE YOU HAVE ANALYZED EACH AND EVERY NODE OF THEIR PHASE A REAL POLITICAL COVER STORY BUT ALL ARE ABSOLUTELY TRUE. HATS OFF

  ReplyDelete
 6. கெஜ்ரிவால் ஒரு நல்ல அரசு அதிகாரியாகவும் பணியாற்றவில்லை இப்போது நல்ல அரசியல்வாதியாகவும் இல்லை. அவர் ஒரு பொறுப்பற்றவர் என்பதை மிகக் குறுகிய காலத்திலேயே காட்டிவிட்டார். ஆனாலும் அவருக்கு இன்னமும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அவருடைய சாயம் வெகு விரைவிலேயே வெளுத்துவிடும் என்பது தெரிந்துதான் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளித்தது. அதை அவர்களாக மீண்டும் விலக்கிக்கொண்டால் தன்னுடைய அரசு கவிழும் அதனால் மக்கள் தம்மீது இரக்கம் கொள்வார்கள். மீண்டும் தேர்தல் வரும் பட்சத்தில் நாம் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையுடந்தான் தர்ணா நடத்தினார். ஆனால் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நெருங்கிய சகாக்களைத் தவிர தில்லி மக்கள் யாரும் இவருடைய அழைப்பை ஏற்கவில்லை. வேறு வழியின்றி ஆளுநர் அழைப்பை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிடுகிறேன் என்ற ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு நிறுத்திக்கொண்டார். கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பார்கள். இவருக்கு எட்டு மாதங்களாகலாம். பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்.. டெல்லியில் போன டிசம்பரில் ஒரு பெண் கெடுக்கப்பட்ட போது ஓவராக பொங்கியவர்கள் தான் இவர்கள்.. ஆனால் இப்போது இவர்களின் மந்திரி வெளிநாட்டு பெண்களை அடிக்கிறார், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.. அவர்கள் தவறு செய்பவர்களாகவே இருக்கட்டும், அடிக்கவும் மிரட்டவும் இவருக்கு யார் உரிமை கொடுத்தது?

   Delete
 7. கட்டுரையில் உள்ள பல கருத்துக்களை ஆமோதிக்கிறேன். இருந்தாலும் சில மாற்றுக் கருத்துக்கள்:

  - ஜெயலலிதா காவிரிப் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தது அரசியல் என்றால் கெஜ்ரிவால் செய்வதும் அரசியலே.

  - பல நாட்களாகப் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்காத / மற்ற செயல்பாட்டிலும் (மகளிருக்கு எதிரான வன்முறைகள்) மெத்தனம் காட்டும் காவல் துறையை மாநிலக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் (அ) காவலர்களுக்குத் தங்களின் கடமையை உணர்த்த நினைக்கும் கெஜ்ரிவாலின் நோக்கம் சரியானது. அதை அவர் எடுத்துரைத்த விதம் கேள்விக்குரியது.

  இருந்தாலும் மக்களுக்கு ஒன்றும் செய்ய ஆசைப்படாத அரசியல்வாதிகள் மத்தியில், இவர் ஒரு மாற்று சக்தி என்பது என் கருத்து.

  அவரது செயல்பாடுகளை 6 மாதம் / 1 வருடம் வரை அலசிய பின் கருத்து தெரிவிப்பது உகந்ததாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. /காவலர்களுக்குத் தங்களின் கடமையை உணர்த்த நினைக்கும் கெஜ்ரிவாலின் நோக்கம் சரியானது. அதை அவர் எடுத்துரைத்த விதம் கேள்விக்குரியது. // உண்மை தான்.. அதே தர்ணாவை அவர் வெற்றி என்று கூறுகிறார்.. எப்படி? என்று கேட்டால், போலீஸை விடுப்பில் அனுப்பிவிட்டார்களாம்.. இது தான் வெற்றியா? இவர் நிஜமாகவே மக்களுக்காக போராடுகிறாரா? தன் பெயருக்காக போராடுகிறாரா?

   //இருந்தாலும் மக்களுக்கு ஒன்றும் செய்ய ஆசைப்படாத அரசியல்வாதிகள் மத்தியில், இவர் ஒரு மாற்று சக்தி என்பது என் கருத்து.// என்ன மாற்று சக்தி? அவர்கள் வேறு விதமான உதவாக்கரை என்றால், இவர் இன்னொரு விதமான உதவாக்கரை..

   Delete
 8. Suggest give the new person a fair trial! Everybody is prone to make mistakes....

  ReplyDelete
 9. கலக்கல் நண்பரே, அன்றாடம் கவனித்து நானும் facebook ல சின்னச் சின்ன நியூசாப் போட்டுட்டிருந்த விஷயம் இது. அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. நல்ல அலசல் ராம்குமார். பாராட்டுகள்......

  தில்லியில் இருப்பதால் பல விஷயங்கள் நேரடியாக பார்க்கிறேன். ஆனாலும் எனது பக்கத்தில் அரசியல் கட்டுரை வெளியிடுவதில் சில சிக்கல்கள்..... :) எழுத நினைத்திருந்த பல விஷயங்கள் உங்கள் கட்டுரையில்.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.. :)

   Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One