கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன நான் விஜய்யை பெரிய திரையில் பார்த்து.. கடைசியாக பார்த்தது “சச்சின்” (சந்திரமுகி டிக்கெட் கிடைக்காத காரணத்தால்) என நினைக்கிறேன்.. விஜய் நடித்த ஐம்பத்தி சொச்சம் படங்களில் எனக்கு பிடித்தவை என்றால் மொத்தமே ஐந்து படங்கள் தான். அந்த அளவுக்கு நான் ஒரு விஜய் படங்களை ஸ்கேலில் கோடு போட்டு பிரித்தெடுத்து பார்ப்பவன். நேற்று தீபாவளிக்கு "துப்பாக்கி” படம் வந்து மதியம் இரண்டு மணிக்கே நண்பர்கள் ஆஹா ஓஹோவென படத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் ரசிகர்கள் முதற்கொண்டு அப்படி பேசியது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி, படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாமே என இன்று போனேன்.. படம் என்னை கவர்ந்ததா, எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிந்த, புரிந்த, நான் அறிந்த வரையில் சொல்கிறேன்.
மிலிட்டரியில் இருந்து விடுமுறைக்கு வரும் விஜய், லீவில் பொழுது போகாமல், நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிவிட்டு மீண்டும் மிலிட்டரி ட்ரைனிங்கிற்கு செல்வதே கதை. நடுவே குடும்பம், காதல் என்று ஜனரஞ்சக அம்சங்களும் உண்டு. விஜய்யை காமித்துவிட்டு ஒரு இண்ட்ரோ பாடல் வைத்தவுடன், “அய்யோ பயபுள்ளைக ’நல்லா இருக்கு’னு படத்த பத்தி வெளிய புரளிய கெளப்புறாய்ங்களோ?”னு மைல்டா டவுட் ஆனேன். ஆனால் அந்த இண்ட்ரோ காட்சி மட்டும் தான் விஜய்க்காக.. மற்ற அனைத்து காட்சிகளிலுமே கதைக்காக தான் விஜய்!!!!
இந்த இடத்தில் நான் விஜய்யை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன்னுடைய வழக்கமான நடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, தீர்க்கமான பார்வை, புத்திசாலித்தனமான பேச்சு & செயல், வேகமான செயல்பாடு என ஒரு ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோ போல், ஆனால் முன் வரிசை ரசிகனையும் விசில் அடிக்க வைத்து பின் வரிசை ஏ.சி.ரூம் ஆட்களையும் கை தட்ட வைத்துவிட்டார். லோக்கல் SPயை முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் தீவிரவாதியிடம் அவர் ”கதை முடிஞ்சிருச்சி” என்று சைகையால் சொல்லும் இடம் க்ளாஸ். அதே போல் தங்கையை மீட்கும் இடம், “ஏற்கனவே நீ ரொம்ப செலவு பண்ணிட்ட, ஒன்ட்ட வேற ஒன்னும் கேக்க மாட்டேன்” என்று முதல் டேட்டிங்கில் காதலியிடம் அப்ராணியாக நடிக்கும் இடம், அந்த க்ளைமேக்ஸ் ஃபைட் என்று கிடைத்த பாலில் எல்லாம் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் விளாசிவிட்டார் விஜய். க்ளைமேக்ஸிற்கு முன் குத்து பாடல் இல்லாமல் ஒரு டூயட் மெலடி பாடல் வரும் போதே தெரிந்து விட்டது, விஜய் மாறிவிட்டார் என்பது.
ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற வார ஆனந்த விகடன் பேட்டியில் “என் படத்தின் திரைக்கதை மிகவும் இறுக்கமாக, தேவையற்ற காட்சிகள் இல்லாமல் இருக்கும்” என்றார். அவரின் ஏழாம் அறிவு பார்த்து நான் நொந்தது தான் ஞாபகம் வந்தது அந்த பேட்டி படிக்கும் போது.. ஆனால் அவர் பேட்டிக்கு ஞாயம் கற்பித்துவிட்டது இந்த படம். அவரும் தன் வழக்கமான, நாட்டை காப்பாற்றும் “டீம் வொர்க்” கான்செப்டால் ஹீரோ ஜெயிக்கும் கதையை தான் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தப்பினாலும் வேலாயுதம் போல் ஆகிவிடும் கதையில், நேர்த்தியான திரைக்கதையையும், விறுவிறுப்பான நம்பும்படியான காட்சிகளையும், உண்மையான வசனங்களிலும் பளிச்சிடுகிறார். ஒரு டைரக்டராக அவர் ஜெயித்திருக்கும் இடம், ஹீரோவும் வில்லனும் அறிவார்த்தமாக பிளான் போட்டு அதை செயல்படுத்துவதை குழப்பாமல் காட்டியிருப்பதில் தான். ஆனால் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக்கில் விஜய் தப்பிப்பது போல் எடுத்திருந்தாலும் “மாஸ் ஹீரோ படமாகிவிட்டால் க்ளைமேக்ஸில் வேறு என்ன தான் செய்ய முடியும்?” என நாமும் பொறுத்துக்கொள்ளலாம். கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் போன்றவர்களை தொடர்ந்து இவரும் ஒரு சீனுக்கு வந்து போகிறார்.
ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோயின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார் காஜல் அகர்வால். மிதமான கவர்ச்சி, அரை லூசுத்தனமான கேரக்டர், சப்பை காரணத்துக்காக ஹீரோவை லவ்வுவது என்று வந்து போகிறார். விஜய்யை காட்டும் போது வந்த விசில் சத்தத்தில் பாதி அளவு இவரை காமிக்கும் போதும் வந்தது. ஆனால் சச்சினில் ஜெனிலியாவை பார்த்து விஜய் ”இவா கிட்டலாம் என்ன இருக்குனு?” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. அந்த பெரிய பற்களும், பல் தேய்த்தாரா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாத வாயும் என்னை இவரை ரசிக்க விடுவதில்லை. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் இவரை பலர் ரசிப்பதால் இவர் வரும் காட்சிகள் கொஞ்சம் பழசாக வழமையானதாக இருந்தாலும், படத்தின் வேகத்தை அது பாதிப்பதில்லை.
காமெடிக்கு என்று பெரிதாக திரைக்கதையில் வாய்ப்பில்லை என்றாலும், சத்யனும் ஜெயராமும் ஓரளவு சிரிக்க வைக்கின்றனர். “பெட்ரமேக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று சத்யன் கேட்கும் இடம் சிரிப்பலை. ஜெயராமும் “ ஜெகதீஷ் நீ எங்கள சந்தேக படாத, என் சுண்டு விரல் கூட அவ மேல படல” என்று சிரிப்பூட்டுகிறார். ஜெயராம் ஏகனில் செய்த மாதிரி இந்த படத்திலும் கொஞ்சம் கழண்ட மாதிரி தான் நடித்திருக்கிறார். அவரின் பால் வடியும் முகத்திற்கு அதுவும் பொருந்திப்போகிறது.”பில்லா 2” வில்லன் தான் இதிலும் வில்லன். ஹீரோவும் வில்லனும் கடைசி காட்சியில் தான் பார்க்கிறார்கள். ஆனாலும் இருவரின் பாத்திரப்படைப்பும் அந்த கடைசி காட்சியில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.
விஜய்யை தவிர படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள் இருவர். சந்தோஷ் சிவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கேச்சா.. சந்தோஷ் சிவனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பன்னிரெண்டு பேரை போட்டுத்தள்ளும் காட்சியிலும், மாட்டிக்கொண்ட தங்கையை விடுவிக்கும் காட்சியிலும் இருவரும் சேர்ந்து உழைத்திருப்பது நம் கைதட்டல்களில் புரிகிறது. விஜய் அடித்தால் 10 பேர் கூட பறப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஜெகதீஷ் என்னும் மிலிட்டரிக்காரன் சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். அங்கங்கே விஜய்யின் மேனரிஸங்களும் இருக்கும் சண்டை காட்சியில்.
தன் பாடல்களை மட்டுமே தான் காப்பியடித்த காலமெல்லாம் போய், இப்போது தன் பின்னணி இசையையும் தானே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். வேட்டையாடு விளையாடு, மின்னலே என்று தான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையை முறையே சேசிங்க் & காதல் காட்சிகளில் கோர்த்து விட்டுவிட்டார். பாடல்களிலும் கோட்டை விட்டுவிட்டார். பாடல்கள் சரியான் ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்றாலும், இது போன்ற திரைக்கதையில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பாடல்கள் வேண்டும்.. ஆனால் இவ்வளவு மொக்கையான பாடல்கள் தேவையில்லை.
இந்த படத்தில் நான் எதைப்பற்றி எழுத்த நினைத்தாலும் விஜய் தான் மனதை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். தன் தங்கையையே தீவிரவாதிகளிடம் அனுப்பி, தைரியமாக மீட்கும் காட்சியிலும், சத்யனிடம் “என் குடும்பத்துல என் அளவுக்கு யாரும் விவரம் கிடையாது. நீ அடிக்கடி அவங்கள போயி பாத்துக்கோ” என்று வருந்தும் காட்சியிலும், இறுதியில் ”இப்போ கை விலங்க கழட்டிட்டு அட்றா” என்று திமிராக சொல்லும் காட்சியிலும் - மாஸ்..
விஜய் நீங்கள் இது போன்ற படங்களில், நடியுங்கள், ஏழு வருடம் கழித்தென்ன, உங்கள் ஒவ்வொரு படத்தையும் நான் ரசிப்பேன்.
நீங்கள் அஜித் ரசிகர் என்பதற்காக விஜய் நல்ல நடிகர் அல்ல என்பது போல் உள்ளது உங்கள் துவக்கம். வேலாயுதமும் நல்ல படம் தான் ஒருசில குறைகளை தவிர. நன்பனில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உங்களுடைய ஒரு சார்பான பார்வை மொக்க பில்லா 2 படத்தின் விமர்சனத்தில் ஆஹா என்று புகழ்ந்துள்ளதை பார்தாலே தெரிகிறது. அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்?
ReplyDeleteஉங்களுடைய ஒரு சார்பான பார்வையும் மொக்க //வேலாயுதமும் நல்ல படம் தான்// என்று சொல்வதை வைத்தே தெரிகிறது.. நான் இங்கு விமர்சனம் செய்யவில்லை.. என் பார்வையில் படங்கள் எப்படி இருக்கின்றன என்று தான் சொல்கிறேன்.. நண்பன் படத்தை பற்றி பேசும் முன் கொஞ்சம் “3Idiots" படத்தை நல்லா பாத்துட்டு பேசுங்க..
Delete//அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்?// இந்த பதிவில் விஜய்யின் நடிப்பை நான் குறை சொன்னதாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லவும்.. ஏனோதானோவென்று மேம்போக்காக படித்துவிட்டு உளறவேண்டாம்...
வேலாயுதம் மொக்கை என்று நீங்கள் சொல்கிறிர்கள் அனால் ஆனந்த விகடன், குமுதம் , போன்ற முதன்மை பத்திரிக்கைகளிலும் பல பொது சினிமா விமர்சகர்களும் படம் நன்றாக உள்ளது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஏழாம் அறிவில் நல்ல கதை இருந்தும் திரைக்கதை நன்றாக இல்லாத காரணத்தினால் பார்பதற்கு நன்றாக இல்லை அனால் வேலாயுதம் நல்ல கதை இல்லை என்றாலும் திரைகதை ரசிக்கும் படியாக உள்ளது. நான் 3 IDIOTS நண்பன் வெளியாகும் முன்னே பார்த்து விட்டேன் அதில் அமிர்கான் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் விஜய் அமீர் கான் அளவு இல்லை என்றாலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நடித்திருப்பார். நான் பார்த்த அஜித் படங்களில் ஆஞ்சநேயவுக்கு பிறகு என்னை எரிச்சலூட்டும் விதமாக அமைந்தது பில்லா2 அவ்வளவு மோசமான திரைகதை அமைத்து இருக்கிறார் சக்ரி. அதையே நல்ல படமென்று புகழ்ந்த நீங்கள் வேலாயுதம் நன்றாக இல்லை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்களாவது பரவ இல்லை சில அஜித் ரசிகர்கள் BILLA2 வை விட துப்பாக்கி நன்றாக இல்லை என்று சொல்லி காமெடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அஜித் நடித்தால் மட்டும்தான் படம் நன்றாக இருக்கும் போல....
Deleteஅஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார் enna oru periya manasu thalaivaa ungalukku
ReplyDeleteஎன்ன பண்ணுறது? அப்படியே வளந்துட்டோம்
Delete