”டேய் தம்பி என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?” பதுங்குக்குழிக்குள் இருக்கும் ராணுவ வீரனை எதிரி நாட்டுக்காரன் கண்டுபிடித்துவிட்டதை போல் போர்வைக்குள் பதுங்கி எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்த என்னை என் அம்மா கையும் களவுமாக பிடித்துவிட்டார். “நைட்டு ஒன்ரைக்கு ஃபோன்ல என்னடா நோண்டிக்கிட்டு இருக்க? ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் அறிவே வராதா?” என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். நான் அர்த்த ஜாமத்தில் செல்ஃபோனால் அவரிடம் மாட்டிக்கொள்வது இது முதல் முறையும் அல்ல, என் அம்மா வருத்தப்படுவதால் இது கடைசி முறையாகவும் ஆகிவிடாது. இதற்கு முன்னும் சில முறைகள் பின்னிரவில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த போதும், பல முறைகள் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்த போதும் என்னை பிடித்து கண்டித்திருக்கிறார். வருத்தமும் பட்டிருக்கிறார். அந்த வருத்தத்தில் ஒரு வித பயம் அவர் கண்களில் தெரியும்.
என் அம்மாவின் பயத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். பெண்களை பெற்றவர்களே தைரியமாக இருக்கும் இந்த காலத்தில், ஒரு ஆண் மகனின் தாய் இப்படி பயப்படலாமா? நான் அப்படி என்ன செய்துவிட்டேன்? எனக்கு சில பெண் தோழிகள் உண்டு. எப்போதும் அவர்களிடம் பேசிக்கொண்டோ, மெசேஜ் அனுப்பிக்கொண்டோ இருப்பேன். நண்பர்கள் அதை கடலை போடுவது, பொங்கல் கிண்டுவது என சிறப்புப்பெயரிட்டு அழைப்பார்கள். ஆனாலும் எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. அம்மா சொல்லியே கேட்காதவன் நண்பர்கள் சொல்லியா சும்மா இருக்கப்போறேன்? அது என்னவென்று தெரியவில்லை, இந்த ஆம்பள பயலுக கிட்ட சொல்றத விட ஒரு விசயத்த பொம்பள பிள்ளைக கிட்ட சொன்னாத்தான் என் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா ஆறுதலா இருக்கு. அதனாலேயே பெண்களிடம் தான் எப்போதும் பேச்சு, ஆம் உங்கள் பாஷையில் கடலை தான்.
ஆண்களிடம் பேசுவதை விட பெண்களிடம் அதிக உரிமையோடு பேசுவேன். ’டீ’ போட்டு தான் அழைப்பேன். அப்போதெல்லாம் என் அம்மாவிற்கு பத்திக்கொண்டு வரும். “ஃபோன்ல எந்த பக்கி பேசுதுனு தெரில.. அவுக வீட்ல எல்லாம் பிள்ளைய கண்டிக்க மாட்டாகளோ என்னவோ?” என்று சத்தமாக என்னிடம் பேசுபவளுக்கு கேட்க வேண்டும் என்றே கத்துவார். பின்னே சும்மாவா? படித்துமுடித்துவிட்டு வேலைக்கும் போய், கையில் கொஞ்சம் காசும் வந்துவிட்ட மகன், கல்யாணத்திற்கு முன் ’பொறுப்பாக’ இல்லாமல் பெண்களிடம் இப்படி பேச ஆரம்பித்தால் எந்த தாய்க்கும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்? நானும் சும்மா இருக்காமல், அம்மாவிடம் சில நேரங்களில், என் தோழிகள் சிலர் தங்கள் வாழ்க்கையில் படும் அவஸ்தைகளை சொல்வேன். “இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுப்பா. இந்த மாரி தான் பாவம் போல பேசி மயக்கிருவாளுக!” என்பார் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு. எனக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “எம்மா ஒங்களுக்கு பிடிச்ச பாட்டு” என்று அவர் கவனத்தை டிவியின் பக்கம் திருப்பிவிடுவேன்.
ஆனால் என் அம்மா நினைப்பது போல் இப்போது நான் எவளையோ காதலிக்கவெல்லாம் இல்லை. முன்பு, நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன், சில பெண்கள் என்னிடம் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எல்லாத்துக்கே அல்பாயுசு தான். முதல் பள்ளிக்காதல் தான் அதிகபட்சமாக 6 மாதம் நீடித்தது . காதல் எல்லாம் நமக்கு சரி வராது என்று உணர்ந்து கொள்ளவே எனக்கு அத்தனை காதல்கள் தேவைப்பட்டன. அதனால் பெண்கள் எல்லாருமே இப்போது தோழி என்னும் எல்லை வரை தான் அனுமதி. ஆனாலும் வீட்டில் இதையெல்லாம் எப்படி புரியவைக்க முடியும்? பெண்ணிடம் பேசுகிறேன் என்று தெரிந்தாலே ஒரே கூப்பாடு தான்.. அப்பா ஏனோ இதிலெல்லாம் தலையிடுவது இல்லை. ‘சரி என்னால் முடியாததை என் மகன் செய்யட்டுமே’ என்கிற உயர்ந்த எண்ணமோ? ஆனாலும் அம்மா, எனக்கு ஃபோன் வரும் போதெல்லாம் பொங்கி எழுந்துவிடுவார். இப்படி என் வாழ்க்கை சந்தேகத்தின் கோர பிடிக்குள் சிக்கிய சாமியார் மாதிரி போய்க்கொண்டிருக்கையில் தான் அந்த எஸ்.எம்.எஸ் எனக்கு வந்தது..
எங்கள் பக்கத்து வீட்டு ஸ்டெல்லாவிடம் இருந்துவந்திருந்தது அந்த குறுஞ்செய்தி. என் அம்மாவுக்கென தனியாக மொபைல் ஃபோன் வாங்கும் வரை, அவர் சம்பந்தப்பட்ட எண்கள் எல்லாம் என் ஃபோனில் தான் இருக்கும். அப்படி இன்று வரை என் ஃபோனிலேயெ இருக்கும் நம்பர்களில் ஒன்று தான் ஸ்டெல்லாவினுடையது. பக்கத்து வீடு என்பதால் அவளிடம் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. தோழி என்று சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் பேசிக்கொள்வதை இருவர் வீட்டிலும் இது வரை ஒன்றும் சொன்னதில்லை. என் அம்மா என்னை சந்தேகப்படாத ஒரு பெண்ணின் பழக்கம்.
”ஹாய் ப்ரகாஷ், எப்படி இருக்க? உன்ட்ட இன்னைக்கு பேச முடியுமா? - ஸ்டெல்லா” - அவள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இப்படி இருந்தது. என்ன புதுசா பேசுறதுக்கு எல்லாம் மொபைல்ல பெர்மிஷன் கேக்குறா, என யோசித்துக்கொண்டே “Ok but when?" என்று பதில் அனுப்பினேன். அவளிடம் இருந்தும் உடனே பதில் வந்தது, “This evening by 5 at velayutham rastha?"...
”ஹாய் ப்ரகாஷ், எப்படி இருக்க? உன்ட்ட இன்னைக்கு பேச முடியுமா? - ஸ்டெல்லா” - அவள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இப்படி இருந்தது. என்ன புதுசா பேசுறதுக்கு எல்லாம் மொபைல்ல பெர்மிஷன் கேக்குறா, என யோசித்துக்கொண்டே “Ok but when?" என்று பதில் அனுப்பினேன். அவளிடம் இருந்தும் உடனே பதில் வந்தது, “This evening by 5 at velayutham rastha?"...
மாலை ஐந்து மணிக்கு எங்கள் ஊரில் ஆள் புழக்கம் இல்லாத அந்த சாலையில் என் பைக்கை நிறுத்திவிட்டு நான் காத்திருந்தேன். அவள் நான் வந்த அரை மணி நேரம் கழித்து வந்தாள். என் அருகில் மெதுவாக தன் சைக்கிளை நிறுத்தினாள். ஸ்டெல்லா - ஒரு கட்டுக்கோப்பான ப்ரொடெஸ்டெண்ட் குடும்பத்தை சேர்ந்தவள்.
நீளமான எண்ணெய் வடியும் கூந்தல், காதில் வளையம், பொட்டு வைக்காத நீண்ட
புருவம் கொண்ட நெற்றி, கூரான மூக்கு. இப்போது தான் அவளை கவனிக்கிறேன், என்னை வசீகரிக்கும் இத்தனையும் இருந்தும் இவளை ஏன் இதுவரை கவனித்ததே இல்லையென்று. எப்போதும் போல் இன்றும் ஒரு ப்ளைன் சுடிதார் அணிந்து வந்திருந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம், என்ன பேசுவது என்று தெரியாமல். அவள் முகத்தில் பயமா பதட்டமா என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு வித உணர்ச்சி இருந்தது.
முகத்தை நார்மலாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து, என்னிடம் “நீ சீக்கிரமாவே வந்துட்டியா?” பேச்சை இப்படி ஆரம்பித்தாள்.
“இல்ல நீ தான் லேட்டா வந்திருக்க”
“சாரி சாரி, தண்ணி வந்துச்சி வீட்ல, பிடிச்சி வச்சிட்டு வர லேட் ஆகிருச்சி”
“சரி என்னமோ பேசணும்னு சொன்னியே என்ன?”
“ஒன்னும் இல்ல சும்மா உன்ட்ட பேசணும் போல இருந்துச்சி, அதான். சாந்தரம் வீட்ல பேசலாமா?”
எனக்கு கோவம் வந்துவிட்டது. “என்னது? அர மந்நேரம் இங்க நிக்கிற நான் என்ன லூசா?”
“ஏ ஏ இப்ப ஏன் கோவப்படுற?”
“சரி என்ன பேசணும் சொல்லு”
“இல்ல நீ கோவமா பேசுற. நான் பெறகு சொல்றேன். சரி எனக்கு லேட்டாகுது, நான் கெளம்பட்டுமா?”
போய்த்தொலை என்பது போல் விட்டுவிட்டேன்.. நான் அங்கே இங்கே சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்ததும் ஒரு கை ரிமோட்டை எடுத்தது, இன்னொரு கை ஃபோனை எடுத்தது. அதில் ஸ்டெல்லாவிடம் இருந்து மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். “நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கிட கூடாது. எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, ப்ரகாஷ்”. எனக்கு அந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் என்ன சொல்லவென்று தெரியவில்லை. நான் பதில் எதுவும் அனுப்பவில்லை. அவளிடம் இருந்து 10நிமிடங்களில் இன்னொரு எஸ்.எம்.எஸ். “ஹேய் என்ன ஆச்சு? சாரிப்பா..” நான் அதற்கும் பதில் அனுப்பவில்லை. அவளிடம் இருந்து சாரி கேட்டும் தன்னிலை விளக்கும் கொடுத்தும் அடுத்தடுத்து பல எஸ்.எம்.எஸ்.கள் வந்தன. நான் எதையும் சட்டை செய்யவில்லை. அவளிடம் இருந்து கடைசியாக இப்படி வந்தது இரு எஸ்.எம்.எஸ் - “ப்ளீஸ் அட்லீஸ்ட் நாம ப்ரெண்ட்ஸாவாச்சும் இருப்போம்” என்று. நான் அதையும் மதிக்கவில்லை.
அவளுக்கு பதில் அனுப்ப நான் விரும்பவில்லை என்பதை விட பயந்தேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஏன் பயந்தேன் என தெரியவில்லை. என்னை யாரென்று அறியாத பெற்றவர்களின் பெண்களுடன் காதலாகவும் நட்பாகவும் தைரியமாக பேசிய எனக்கு, என்னை நம்பிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணிடம் காதல் எண்ணத்துடன் பேச தைரியம் இல்லை. ஏன் அப்படி பயப்படுகிறேன் என்றும் புரியவில்லை. ஆனால் அன்றில் இருந்து நான் ஸ்டெல்லாவிடம் பேசுவதே இல்லை.
அவளும் தெருவில் என்னை கடக்கும் போது என்னை கண்டுகொள்வது கூட இல்லை. எனக்கு எல்லாமே மனதில் நெருடலாகவும், ஒரு வித குற்ற உணர்வுடனும் இருந்தன ’பாவம், நம் மேல் ஆசையாக இருந்த பெண்ணை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே’ என்று. சில நேரங்களில் ஸ்டெல்லாவிடம் “நானும் ஒன்ன லவ் பண்றேன்”னு சொல்லிரலாமானு யோசிப்பேன். மீண்டும் அந்த பயம் மனதை தொற்றிக்கொள்ளும். ஆனால் அவள் மீண்டும் ஒரு முறை என்னிடம் பேசினால் கண்டிப்பாக காதலை ஒத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.
அவளும் தெருவில் என்னை கடக்கும் போது என்னை கண்டுகொள்வது கூட இல்லை. எனக்கு எல்லாமே மனதில் நெருடலாகவும், ஒரு வித குற்ற உணர்வுடனும் இருந்தன ’பாவம், நம் மேல் ஆசையாக இருந்த பெண்ணை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே’ என்று. சில நேரங்களில் ஸ்டெல்லாவிடம் “நானும் ஒன்ன லவ் பண்றேன்”னு சொல்லிரலாமானு யோசிப்பேன். மீண்டும் அந்த பயம் மனதை தொற்றிக்கொள்ளும். ஆனால் அவள் மீண்டும் ஒரு முறை என்னிடம் பேசினால் கண்டிப்பாக காதலை ஒத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.
ஒரு முன்னிரவு வேளையில் ஊரெல்லாம் சுற்றிவிட்டு நான் வீட்டுக்கு வந்த போது, ஸ்டெல்லாவின் வீட்டு வாசலில் புதிதாக ரெண்டு ட்யூப் லைட்டுகள் எரிந்தன. மனிதனுக்கு மனிதன் சொந்தக்காரனாக வந்திருப்பது போல், நாற்காலிக்கும் பக்கத்து வீட்டில் இருந்து சில நாற்காலி சொந்தங்கள் வந்திருந்தன. என்னவென்று மெதுவாக நோட்டம் விட்டுக்கொண்டே எங்கள் வீட்டிற்குள் சென்றேன். அம்மா என்னிடம் ஒரு மிட்டாயை கொடுத்து “நம்ம ஸ்டெல்லாக்கு மாப்ள பாத்திருக்காங்க. கல்யாணத்துக்கும் இன்னைக்கே தேதி குறிச்சுருவாங்கன்னு நெனைக்குறேன்” என்றார் சிரித்த முகத்துடன். நான் என் ஃபோனை எடுத்து பார்த்தேன், எனக்கு ஏதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறாளா என்று.. ஹிம் ஒன்றும் இல்லை. வழக்கமா நான் ஃபோனை எடுத்தாலே கத்தும் அம்மா இப்போது எதுவுமே சொல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா இப்போது சில நாட்களாக அப்படித்தான், நான் ஃபோனில் பேசினால் முன்பு போல் கோவப்படுவதில்லை.
எனக்கு ஸ்டெல்லா எப்படி இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாள் என்று ஒரே யோசனையாக இருந்தது. அவள் ஒரு வேளை வீட்டின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் இப்படி செய்திருப்பாளோ என்கிற எண்ணம் வந்தது. இரவு வரும் வரை காத்திருந்தேன். எல்லோரும் தூங்கிய பின் என் பதுங்குக்குழி போர்வையினுள் சென்று ஸ்டெல்லாவிற்கு ஃபோன் அடித்தேன். கால் வெயிட்டிங் வந்தது. இரண்டு நிமிடங்களில் அவளே கூப்பிட்டாள். ஃபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டு அம்மா கண் விழித்து என்னை பார்த்தாலும், அமைதியாக “வேமா பேசிட்டு வாப்பா” என்றார். நான் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
“சொல்லு ப்ரகாஷ்”
“என்ன ஸ்டெல்லா, இப்டி பண்ணிட்ட?”
“எப்டி பண்ணிட்டேன்?”
“என்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு, இப்ப இன்னொருத்தர கல்யாணம் பண்ணப்போறியாமே?”
“ஏ என்ன சொல்ற நீ?”
“நீ யாருக்கு பயப்படுற ஸ்டெல்லா? நான் இருக்கேன். கவல படாத. நான் உன்ன நல்லா பாத்துக்குறேன்”
“லூசு மாரி பேசாத. நான் சொல்றத கேளு”
“நீ அன்னைக்கு ப்ரபோஸ் பண்ணப்ப நான் ஒத்துக்கல, ஆனா இன்னைக்கு நான் ஒத்துக்குறேன் ஸ்டெல்லா. நாளைக்கு எங்கம்மாட்ட சொல்லி ஒங்க வீட்ல பேச சொல்றேன்”
“ஏ முண்டம், நான் எப்பவுமே ஒன்ன லவ் பண்ணல” - ஆணித்தரமாக அதட்டலுடன் சொன்னாள்.
“என்னது?” - இந்த வாட்டியும் பல்ப்பா என்பது போல் நான் கேட்டேன்.
“ஆமா. ஒங்கம்மா தான் உன் கிட்ட அப்டி பேச சொன்னாங்க”
“அவங்க எதுக்கு அப்டி சொன்னாங்க?”
“நீ நெறைய பொண்ணுங்க கிட்ட பழகுறது அவங்களுக்கு பயமாவும் மனசுக்கு கஷ்டமாவும் இருந்தது.”
“சரி அதுக்கு என்ன இப்ப?”
“அதான் என்ன சும்மா அப்டி சொல்ல சொன்னாங்க.”
“சும்மாவா?”
“ஆமா. ஒரு வேள நீ நான் சொன்னதுக்கு ‘சரி’னு சொல்லிருந்தா நீ எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படித்தான் பழகுறனு முடிவு கட்டிருப்பாங்க. ஆனா நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னதுல இருந்து, நீ என்கிட்ட பேசுறதே இல்ல, ஒதுங்கி போறனு சொன்னேன். ஒங்க அம்மாவுக்கு ஒரே சந்தோசம். நீ எந்த பொண்ணுங்க கிட்டயும் தப்பா பேச மாட்ட, ஃப்ரெண்ட்லியா தான் பழகுறனு”
“நான் சொன்னப்பலாம் நம்பாத எங்கம்மா உன்ட்ட கேட்டாங்களாக்கும்?”
“ஆமா.. ஒன்ன பத்தி நல்ல விதமா சொன்ன என்ட்டையே தைரியமா என் நிச்சயதார்த்தத்தன்னைக்கே லவ்வ சொல்றீல நீயி? இரு இரு ஓங்க அம்மாட்ட சொல்றேன்” என்று என் பதிலுக்கு காத்திராமல் கோவமாக ஃபோனை வைத்தாள்.
இருக்கும் குழப்பத்தில் நான் என்ன ஏதுவென்று சுதாரிப்பதற்குள், என் அம்மா வெளியில் வந்து “என்னப்பா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்க? பனி வேற விழுது, வா தூங்கலாம். சளி பிடிச்சிறப்போது. காலேல பேசு”
நான் வீட்டிற்குள் திரும்பவும் ஸ்டெல்லா வீட்டு வராந்தாவில் டியூப் லைட்டு எரியவும் சரியாக இருந்தது. எரிந்தது ஸ்டெல்லா வீட்டு ட்யூப் லைட் மட்டும் அல்ல.. சில நிமிடங்களில் என் அம்மா சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த காட்டுக்கத்தலை ஆரம்பித்துவிட்டார். இந்த சண்டாளி ஸ்டெல்லா தான் போட்டுக்கொடுத்து விட்டாள். அன்று நான் கடாசிய ஃபோன் தான்.. இன்னைக்கு வரை எடுக்கவே இல்லை..
பெண்ணிடம் பேசுகிறேன் என்று தெரிந்தாலே ஒரே கூப்பாடு தான்.. அப்பா ஏனோ இதிலெல்லாம் தலையிடுவது இல்லை. ‘சரி என்னால் முடியாததை என் மகன் செய்யட்டுமே’ என்கிற உயர்ந்த எண்ணமோ?
ReplyDeleteஅருமை ராம்குமார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
மிகவும் நன்றி சார் :-)
Deleteநல்ல வேளை சாமி, எங்க வீட்ல இது மாதிரி டெஸ்ட் வச்சா நான் உடனே மாட்டி இருந்துருப்பேன், வம்பே வேண்டாம்
ReplyDeleteஹா ஹா.. வாழ்க்கை என்பதே ஒரு தேர்வு தானே
Deleteநல்லா இருக்கு ராம்.... எங்க வீட்லும் இது மாதிரி டெஸ்ட் வச்சா நான் காலி...நல்ல வேலை...
ReplyDeleteயாரா இருந்தாலும் காலியாகிருவோம் நண்பா.. இந்த கதைல அவரு ஹீரோங்குறனால தப்பிச்சிட்டாரு.. அவ்வளவு தான்
Deleteயாரு அந்த ஸ்டெல்லா ராம் குமார். :p
ReplyDeleteஒரு பெண் பாத்திரம்.. ஏன்?
Delete//காதல் எல்லாம் நமக்கு சரி வராது என்று உணர்ந்து கொள்ளவே எனக்கு அத்தனை காதல்கள் தேவைப்பட்டன//
ReplyDelete//“என்னது?” - இந்த வாட்டியும் பல்ப்பா என்பது போல் நான் கேட்டேன்.//
நான் ரசித்த வரிகள் .
நன்றி SAKTHIVEL
Deleteஇத்தனை நாலா படிக்காம இருந்திட்டேன்
ReplyDeleteவித்யாசமா இருக்கு!
வாழ்துக்கள் அண்ணா