என் செல்ல நாயே - சிறுகதை...

Thursday, June 27, 2013

முன் குறிப்பு:
2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங்கில கதையான "My Dog Marcus”ன் தமிழ் படுத்தல்.. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில சமாச்சாரம் சேந்திருக்கும், கண்டுக்காதீங்க.. சரி, கதையை வாசிக்கலாம்..

வீட்டில் அம்மா மிகவும் சோகமாக இருந்தார். வழக்கமாக வேலை முடிந்து நான் படியேறி வரும் சத்தம் கேட்டவுடனேயே ஓடி வரும் மார்க்கஸும் இன்று வரவில்லை. அம்மா சோகமாக இருப்பதை விட மார்க்கஸ் வராமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அம்மாவின் சோக முகம் பார்த்து பழகி சலித்துவிட்ட ஒன்று. ஆனால் நான் வீட்டில் நுழையும் போதே, மூச்சு இரைக்க குடுகுடுவென்று ஓடி வந்து என் இடுப்பில் தனது முன் கால்கள் இரண்டையும் தூக்கி வைத்துக்கொண்டு, என்னை தன் நாக்கால் நக்கிவிடும் மார்க்கஸ் இன்று என்னை கண்டுகொள்ளாமல் வேறு எங்கோ முகத்தை திருப்பியபடி இருப்பதைத் தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..

”ம்மா மார்க்கஸ் ஏம்மா உம்முனு கெடக்கு?”

’நான் உம்முனு இருக்குறதவிட மார்க்கஸ் உம்முனு இருக்கிறது தான் ஒங்கண்ணுக்கு தெரியுதா?’னு தான் அம்மா கேட்பார் என நினைத்திருந்தேன்.. ஆனால் அம்மா “தம்பி நம்ம மார்க்கஸுக்கு காது கேக்க மாட்டேங்குதுனு நெனைக்கிறேன்ப்பா” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டார்..

நான் லேசாக பதறினாலும், ”எம்மா அப்படிலாம் இருக்காது.. இருங்க நான் பாக்குறேன்” என்றேன்.. மெதுவாக மார்க்கஸ் அருகில் சென்று “மார்க்கஸ்” என்றேன்.. அது அப்படியே எனக்கு எதிர் திசையில் முகத்தை திருப்பியது போல் படுத்திருந்தது.. இப்போது இன்னும் சத்தமாக “மார்க்கஸ்” என்றேன்.. ஹ்ம்ஹிம் என் குரல் அதற்கு கேட்டதாகவே தெரியவில்லை. நான் அதை மெதுவாக தொட்டேன்.. சடாரென்று பதறி திரும்பியது.. என்னை பார்த்தவுடன் தன் வழக்கமான இரண்டு லொள் லொள்களை உதிர்த்துவிட்டு வாலை ஆட்டி கொஞ்சமாக நக்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.. நான் மார்க்கஸ் மார்க்கஸ் என்கிறேன், பதிலே இல்லை.. ஆம் எங்கள் மார்க்கஸுக்கு காது கேட்கவில்லை.

மார்க்கஸ் - இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்த லேப்ரடார் வகை நாய்.. வந்த சில நாட்களுக்கு மட்டும் தான் அது ‘நாய்’ என்று விளிக்கப்பட்டது.. அதன் பின் ஆசையாக தேடிப்பிடித்து ‘மார்க்கஸ்’ என எல்லோரும் நாய்களுக்கு வைப்பது போல் ஒரு வெளிநாட்டு பெயரை வைத்தோம்.. 


எங்கள் வீட்டிற்கு வந்த போது மார்க்கஸ் பால் குடி மறக்காத 25நாள் குட்டி.. அதைப்பார்க்கவே மிகவும் பாவமாக இருக்கும்.. அது முகம் சோகமாக இருப்பது போலவே எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது. அப்பா தினமும் சொல்லி விடுவார், “தம்பி அத வாங்குனவங்கட்டயே குடுத்துட்டு வந்துரு, பாவமா இருக்கு”னு.. பால் வைத்தால் மட்டும் குடிக்கும்.. எங்களை பார்த்தாலே பயப்படும்.. பாத்ரூம் அருகில் இருக்கும் ஈரப்பதத்தை தேடிப்பிடித்து படுத்துக்கொள்ளும். இதெல்லாம் முதல் ஒரு வாரம் தான்.. அடுத்தடுத்த நாட்களில் அது செய்த வயலென்ஸ் எல்லாம் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் அளவுக்கு மோசமானவை..


பல் முளைக்க ஆரம்பித்த போது அது எங்கள் வீட்டில் கடித்து கிழிக்காமல் பாவப்ப்ட்டு விட்டுவைத்த ஒரே பொருள் எங்கள் வீட்டு பீரோ தான்..  மற்ற அனைத்தும் கலவர பூமியில் கண்டெடுத்த பொருட்கள் போலவே இருக்கும்.. நாயால் கடிக்கவே முடியாத பொருள் இரும்பு மட்டும் தான் என்பதை புரிந்துகொண்டோம்.. ஆனால் அதற்காக ஷீ, பர்ஸ், செய்தித்தாள், துணிமணி என எல்லாவற்றையும் இரும்பிலா செய்ய முடியும்? அது முழித்திருக்கும் போது யார் தூங்கினாலும் அதற்கு பிடிக்காது.. குரைத்துக்கொண்டே இருக்கும்.. நாங்கள் எழுந்தால் வாலை ஆட்டிவிட்டு அது படுத்துக்கொள்ளும் எங்கள் தூக்கம் போய்விடும்.. பின் அதற்கு முழிப்பு வந்தவுடன் பழையபடி எங்களை எழுப்பிவிட்டு மீண்டும் வாலை ஆட்டிவிட்டு அது உறங்கிவிடும். 

இதாவது பரவாயில்லை, என் அப்பா எப்போதும் தரையில் தான் படுத்திருப்பார்.. தன் குட்டி உடலை ஆட்டிக்கொண்டே ஓடி அவரின் மேல் தாவிக்கொண்டு காதை நக்க ஆரம்பித்துவிடும்.. சில சமயம் கடித்தும்விடும். அவர் பதறி எழுந்து சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மீண்டும் படுப்பார்.. மார்க்கஸ் மீண்டும் கடிக்கும்.. அவர் மீண்டும் கெட்ட வார்த்தை, மார்க்கஸ் மீண்டும் கடிக்கும்.. கெட்ட வார்த்தை - கடி என்றே அவரின் தூக்கங்கள் கலைந்தன. நாங்கள் கட்டிலில் படுத்திருப்பதால் தப்பித்தோம்.. சரி, கட்டிப்போடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. கட்டிப்போட்டால் பயங்கரமாக குரைக்கும்.. பின் சோகமாக உட்கார்ந்து எங்களை ஒரு மாதிரியாக பார்க்கும்.. எங்களுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிடும். நாங்களும் அவிழ்த்துவிட்டுவிடுவோம்.. பின் சந்தோசமாக வழக்கம் போல தன் அட்ராசிட்டியை ஆரம்பித்துவிடும் மார்க்கஸ்..


மார்க்கஸிற்கு மிகப்பிடித்த 3 விசயங்கள் 1.சோறு, 2.சோறு, 3.சோறு மட்டும் தான்.. என் தம்பி அதற்கு ஜம்ப் பண்ண, சொன்னபடி கேட்க, தூக்கி போடும் பொருளை மீண்டும் எடுத்த வர என்று பல விசயங்களை கற்றுக்கொடுக்க முயன்றாலும், மார்க்கஸ் தானாக மிக வேகமாக கற்றுக்கொண்டே ஒரே விசயம், தன் சோத்து தட்டை வேளா வேளைக்கு எடுத்து வந்து என் அம்மாவிடம் கொடுப்பதை தான்.. அம்மா சோறு போடும்வரை விடாது.. காலையே சுற்றி சுற்றி வரும்.. அதன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,.. அந்த எல்லையை தாண்டியும் என் அம்மா அதற்கு சோறு போடவில்லை என்றால் தன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்ட ஆரம்பித்துவிடும். அம்மாவின் சேலையை கிழிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பாசத்தில் அதை மிஞ்ச ஆள் இல்லை.. சாயந்தரம் அப்பாவின் வண்டி தெருவில் நுழையும் சத்தம் கேட்கும் போதே, உறங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்துவிடும். அப்பா கதவைத்திறக்கும் போது அது ரெடியாக அவரை வரவேற்க வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். அப்பாவிற்கு மட்டும் அல்ல, வீட்டில் யார் வெளியில் சென்றுவிட்டு திரும்பினாலும் இப்படித்தான்.


நாய் வளர்ப்பு பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாதலால், நாங்கள் அதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டோம்.. இப்போது அது எங்கள் வீட்டில் ஒரு ஆள் சாப்பிடும் சாப்பாட்டை விழுங்கிக்கொண்டிருக்கிறது.. விளையாட அழைத்தாலும் வருவதே இல்லை.. உடலும் மிகவும் சோர்ந்து போய், குண்டாகி நடக்கவே முடியாமல் இருக்கிறது. கஷ்டப்பட்டுத்தான் நடக்கும். ஆனாலும் சோறு போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் திங்கும். தின்றுவிட்டு அங்கேயே படுத்துக்கொள்ளும்.. அவ்வளவு தான்.. அதன் உடம்பில் அசையும் ஒரே பாகம் அதன் வாய் மட்டும் தான். ஒரு நாள் ஒரு வெடினரி டாக்டரை அழைத்து மார்க்கஸை காட்டினோம்.. அவர் அதை பார்த்தவுடனே, “டெய்லி காலைலயும் சாந்தரமும் நாயை ஒரு 2கி.மீ வாக்கிங் கூட்டிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு ஊசியும் போடாமல், மருந்தும் கொடுக்காமல் 500ரூ புடுங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.. அவர் ஊசி போடாமல் போனதை விட, அதற்காக 500ரூ வாங்கியதை விட மார்க்கஸை ‘நாய்’ என்று சொன்னது தான் எங்களுக்கு கடுப்பாக இருந்தது. எங்கப்பா அந்த டாக்டர் போனவுடன், “நாய்க்கு பொறந்த பய, நம்ம மார்க்கஸ நாய்ங்கிறியான்” என்றார் கோவமாக..

டாக்டர் மார்க்கஸை வாக்கிங் போகச் சொன்னதில் அம்மாவிற்கு சந்தோசம் தான்.. அப்பாவை டாக்டர் பல முறை வாக்கிங் போகச்சொல்லியும் அப்பா இது வரை சென்றதே இல்லை.. இனி மார்க்கஸோடு அப்பாவும் வாக்கிங் செல்வார்.. முதல் நாள் காலை அப்பா ”மார்க் செல்லம் வா அப்பா கூட வாக்கிங் போலாம்” என்றபடியே மார்க்கஸின் கழுத்தில் பெல்ட்டை மாற்றி அதை வாக்கிங் அழைத்து சென்றார்.. அப்போதே அது ஒரு முடிவோடு அவரைப்பார்த்தது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு சென்றார் அப்பா.. சில நிமிடங்களில் அவரின் சத்தம் தெருவே அலறும் அளவிற்கு கேட்டது. தெரு முக்கை தாண்டும் முன்பே மார்க்கஸ் ரோட்டில் படுத்துக்கொண்டது. அவர் அரட்டியும், அடித்தும், மன்றாடியும், இன்னும் என்னென்னவோ சர்க்கஸ் வேலைகள் செய்தும் அது ஒரு இன்ச் கூட நகரவில்லை. மீண்உம் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டோம். ‘சரி கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்ல பழக்கலாம்’ என முடிவு செய்து எங்கள் வீட்டு மாடியில் உலாவ விட்டோம்.. ஹிம்ஹிம், அது இப்போதும் எப்போதும் போல் படுத்துக்கொண்டுவிட்டது.. 

சரி, சோறு போடாமல் விடலாம் என்றால், சரியாக சாப்பாட்டு நேரத்திற்கு எங்கள் அருகில் வந்து எங்கள் முகத்தை எல்லாம் ஒரு மாதிரி பார்க்கும்.. அம்மாவிற்கு உடனே கண்டிப்பு எல்லாம் விலகி பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும்,.., அதன் சோத்து கிண்ணத்தை எடுத்து சோறு பிசைந்து கொடுத்துவிடுவார்.. ஆனால் அது சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் செய்யவேயில்லை.. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அது கஷ்டப்படுவது எங்களுக்கு மிக வருத்தமாக இருந்தது.. மீண்டும் டாக்டரை அழைத்து இதற்கு ஏதாவது தீர்வு உண்டா என விசாரித்தோம்.. “வாக்கிங் தான் ஒரே தீர்வு.. இல்லேனா ஒங்க நாயி சீக்கிரம் செத்துரும்” என்று குண்டை தூக்கிப்போட்டார்.. ”சார் அது நாயி இல்ல மார்க்கஸ்” என்று சொல்லிவிட்டு அவரை அப்பா வழியனுப்பினார். “நம்ம மார்க்கஸ நாயினு சொன்னது மட்டும் இல்லாம, அது செத்துப்போயிரும்னு நம்மட்டயே தைரியமா சொல்லிட்டு 500ரூவா காசு வேற வாங்கிட்டு போறான் பாத்தியா? இவனுக்கு என்ன தைரியம்?” என்றார் அப்பா உண்மையான கோவத்தோடு.. எங்கள் யாருக்கும் மார்க்கஸை எங்கள் வீட்டில் இல்லாமல் நினைத்துப்பார்க்கவே மனம் வரவில்லை. அது ரேசன் கார்டில் பெயர் இணைக்க முடியாவிட்டாலும் எங்கள் குடும்ப உறுப்பினராகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன..இனி பாவம் புண்ணியம் பார்த்து பிரயோஜனம் இல்லை என்பதை முடிவு செய்துகொண்டு, அதை எப்பாடுபட்டாவது வாக்கிங் கூட்டிப்போக மொத்த குடும்பமும் முயற்சி செய்தோம்.. முதலிலாவது தெருமுக்கில் படுத்து அடம் பிடித்தது.. இப்போது ”வீட்டு வாசலை தாண்டி இறங்குவேனா?” என மல்லுக்கட்டியது.. அதனால் நடக்க முடியாது என்று இல்லை.. நடக்க சோம்பேறித்தனம் அவ்வளவு தான்.. நான், தம்பி, அப்பா அம்மா என எல்லாரும் அதை ஒரே ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வீட்டில் இருந்து 10அடி தூரம் நடக்கவைத்துவிட்டோம்.. வீட்டில் யாராவது “வாக்கிங்” என்று சொல்வதை கேட்டால் கூட அது பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது... அதற்கு வாக்கிங் செல்லவே சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. இதற்கு மேலும் அதை நாங்கள் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.. அதன் விதிப்படி என்று விட்டுவிட்டோம்.. அதுவும் ‘இந்த கொடுமையில் இருந்தெல்லாம் தப்பிக்க முடியாதா?’ என்கிற மாதிரி ஏக்கத்தோடேயே எங்களை பார்க்கும்.. சரி, இனிமேல் வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டாம் என இன்று காலை தான் முடிவு செய்தோம்.. மாலையில் வீடு வந்து பார்த்தால் அதற்கு காது கேட்கவில்லை..

மீண்டும் டாக்டரை அழைத்தோம்..  அவர் வந்து மார்க்கஸின் காதில் டார்ச்சை அடித்து பார்த்து விட்டு, ”நீங்க நாய வாக்கிங் கூட்டிட்டு போறீங்கல்ல?”

“அது நாயி இல்ல சார், மார்க்கஸ்” - எங்கப்பா..

“சரி சரி மார்கஸ்.. அத வாக்கிங் கூட்டிட்டு போறீங்கலா இல்லையா?”

“அது நடக்கவே கஷ்டப்படுது டாக்டர்.. அதனால இருக்குற வர இப்படியே இருக்கட்டும்.. பாவம்”

“ஹ்ம் நீங்க ஒழுங்கா வாக்கிங் கூட்டிட்டு போகாதனால தான் அதுக்கு காது கேக்காம போயிருச்சி.. இப்டியே வச்சிருந்தீங்கன்னா ஒடம்புல ஒவ்வொரு பார்ட்டா இப்படி தான் போயிரும், பாத்துக்கோங்க”னு சாதரணமா சொல்லிட்டு வழக்கம்போல தன் 500ரூபாயை வாங்கிக்கொண்டார்.. 500 அவரின் லக்கி நம்பர் போல...

நானும் தம்பியும் மார்க்கஸை வாக்கிங் கூட்டிப்போக உறுதியாக இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் விடாப்படியாக மறுத்துவிட்டார்கள்.. அதை கஷ்டப்படுத்துவதை விட, அது இஷ்டப்படி நிம்மதியாக வாழ விடுவதே சரி என்பது அவர்கள் கருத்து.. நானும் தம்பியும் ஒத்துக்கொண்டோம்.. நாங்கள் என்ன பேசினாலும் மார்க்கஸிற்கு கேட்பதில்லை. நாங்களும் அதை வழக்கம் போல கவனித்துக்கொண்டோம்.. அதை அருகிலேயே வைத்திருந்து தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தோம்.. எல்லோர் மனதிலும் மார்க்கஸை நினைத்த ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது..

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.. 

நாங்கள் எல்லோரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.. மார்க்கஸிற்கு மிகவும் பிடித்த எலும்புக்குழம்பு. வழக்கமாக நாங்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் மார்க்கஸிற்கு சோறு வைப்போம்.. அது எங்கள் டைனிங் டேபிளை தாண்டி, டேபிளிற்கு எதிர்ப்புறம் முகத்தை திருப்பி வைத்திருந்து படுத்துக்கிடந்தது.. என் அப்பா ஒரு நல்லி எலும்பை நன்றாக உரிந்துவிட்டு டேபிளில் வைக்கும் போது, அது நழுவி தரையில் இருந்த ஒரு எவர்சில்வர் தட்டின் மீது “டங்” என்கிற சத்தத்தோடு விழுந்தது. அந்த சத்தம் கேட்ட மறுநொடி, மார்க்கஸ் டக்கென்று திரும்பி எலும்பு விழுந்த திசையை பார்த்தது. மார்க்கஸின் இந்த திடீர் செயல்பாடு, டக்கென்ற அதன் உடல் அசைவு எங்கள் அனைவரையும் அதை பார்க்கச்செய்தது. ஒரு நொடி சுதாரித்து விட்டு எங்களை பார்த்தது மார்க்கஸ்... நாங்கள் அனைவரும் அதையே பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து மெதுவாக ஒன்றும் நடக்காதது போல் முகத்தை அந்தப்பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு படுத்துவிட்டது..

அம்மாவும் அப்பாவும் ‘மார்க்கஸ், மார்க்கஸ்’ என்று பல முறை அழைத்தும் அது திரும்பவில்லை. என் தம்பி அவன் கையில் இருந்த ஒரு எலும்பை எடுத்து  மீண்டும் அந்த சில்வர் தட்டில் போட்டான்.. ‘டங்’ என சத்தம் வந்த மறுநொடி மார்க்கஸ் திரும்பி எலும்பை பார்த்தது.. டக்கென்று சுதாரித்து எங்களை பார்த்தது.. நாங்கள் அனைவரும் கண்களை சிமிட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.. ஒன்றுமே நடக்காதது போல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் திரும்பிவிட்டது.. எங்களுக்கெல்லாம் ஒரே குஷி..

அம்மா, “நம்ம மார்க்கஸுக்கு காது கேக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றார் சந்தோசமாக..

“எம்மா அது இத்தன நாளா காது கேக்காத மாரி நடிச்சிருக்கு” - கோவமாக என் தம்பி..

எங்கள் எல்லோருக்கும் அவன் மார்க்கஸை இப்படி சொன்னதை நினைத்து பயங்கர கோபம்.. “இருங்க ஒங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணுறேன்”னு அவன் சவால் விட்டான்.. அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.. மார்க்கஸ் எங்கள் பக்கம் அடுத்து திரும்பவே இல்லை.. நாங்கள் எல்லோரும் சமையல் அறையில் நுழைந்துகொண்டு ஒன்றுமே பேசாமல் கம்மென்று இருந்தோம்.. என் தம்பி அவன் கையில் இருந்த எலும்புத்துண்டை சரியாக அந்த சில்வர் தட்டில் தூக்கி எறிந்தான்.. டக்கென்று திரும்பிய மார்க்கஸ் நாங்கள் அங்கு இல்லை என்பதை அறிந்ததும், குடுகுடுவென்று ஓடி அந்த எலும்பை கவ்விக்கொண்டு மீண்டும் தன் இடத்திலேயே படுத்துக்கொண்டது.. இத்தனை நாள் நாங்கள் நடக்கவே முடியாது என்று நினைத்த மார்க்கஸ் எங்கள் கண் முன் குடுகுடுவென்று ஓடுவதை எங்களாலேயே நம்ப முடியவில்லை. நாங்கள் அடுத்து “மார்க்கஸ்” என்று பல முறை கத்தினோம், அது திரும்பவே இல்லை.. இரண்டு மூன்று முறை இதை செக் செய்து பார்த்த பின்பு தான் தெரிந்தது, மார்க்கஸ் எங்களை காது கேட்காத மாதிரியும் நடக்க முடியாத மாதிரியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று..

இதில் என் அம்மாவுக்கு தான் பயங்கர கோவம்.. “பாரேன், நாம அது மேல எவ்வளவு பாசமா இருந்திருக்கோம்? ஒரு மனுசன விட கேவலமா இப்படி பண்ணிருச்சே?” என்று மிகவும் வருத்தப்பட்டவரும் அம்மா தான்.. ஏனென்றால் எங்கள் எல்லோரையும் விட மார்க்கஸிடம் அதிக நேரம் செலவிட்டது, மார்க்கஸின் மேல் அதிக பாசம் கொண்டவர் அம்மா தான்.. அது அப்படி எங்களை ஏமாற்றினாலும், அம்மா பலமுறை அதை மார்க்கஸ் மார்க்கஸ் என்று அழைத்து ஒரு முறையாவது திரும்பி பார்க்காத என ஏங்குவார். அது காது கேட்காத மாதிரியே தன் நடிப்பை தொடர்ந்தது.. அம்மாவுக்கு அப்போதெல்லாம் அழுகையாக வந்துவிடும்.. சில நேரங்களில் அழவும் செய்துவிட்டார்..

நான் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தேன்.. ஒரு நாள் மார்க்கஸ் தூங்கும் போது அதன் காதுகளில் பஞ்சை வைத்துவிட்டேன்.. அது இருக்கும் அறையில் வெளி சத்தம் எதுவும் கேட்காதவாறு சன்னல்களையும் மூடிவைத்துவிட்டேன். வீட்டில் எல்லோரிடமும் மார்க்கஸின் முன் பேசும் போது சத்தம் இல்லாமல் வாயை மட்டும் அசைக்குமாறு சொல்லியாகிவிட்டது.. மாலை மார்க்கஸ் மெதுவாக தூங்கி முழித்தது.. அம்மா அதன் முன் சென்று “மார்க்கஸ் மார்க்கஸ்” என்று சிரித்துக்கொண்டே வாயை மட்டும் அசைத்தார்.. ”என்னடா நடக்குது இங்க?” என்பது போல் அது டக்கென்று தன் முகத்தை பின்னால் இழுத்து ஒரு கனம் யோசித்தது..

நான் என் அம்மாவின் அருகில் வந்து என்னமோ சொல்வது போல் வாயையும் கையையும் அசைத்தேன்.. மார்க்கஸின் முகத்தில் லேசான பீதி தெரிந்தது.. பின் டிவியை ஆன் செய்து மியூட்டில் வைத்தே படத்தை பார்த்தோம்.. இது வரை லேசாக கூட நடக்காத மார்க்கஸ் இப்போது வேகமாக எழுந்து வந்து டிவியையும் எங்களையும் மாறி மாறி பார்த்தது. நாங்கள் அதை பார்த்து ஏதோ பேசுவது போல் வாய் அசைத்தோம்.. மார்க்கஸ் மிகவும் குழம்பி விட்டது.. அங்கும் இங்கும் ஓடியது.. சில நிமிடம் குரைத்தது.. நாங்கள் எங்கள் நடிப்பை விடவே இல்லை.. பின் எங்களை மிகவும் சோகமாக பார்த்தது.. 

அன்றைய தினம் முழுவதும் எங்கள் வீட்டில் எந்த சத்தமும் கேட்கவேயில்லை.. மிக மிக அமைதியாக அனைத்தையும் செய்தோம்.. மார்க்கஸ் கொஞ்ச நேரத்திலேயே மிகவும் வருந்தி ஒரு மூலையில் படுத்துக்கொண்டு எங்கள் செய்கைகளையே சோகமாக பார்த்துக்கொண்டிருந்தது.. அன்று முழுவதும் அம்மா வைத்த உணவை அது உண்ணவே இல்லை.. ‘நிஜமாவே நமக்கு காது செவிடாகி விட்டதோ’ என்கிற பீதி அதன் பார்வையில் தெளிவாக தெரிந்தது.. அது சாப்பிடாவிட்டாலும் நாங்கள் எங்கள் செய்கை பாஷையை நிறுத்தவே இல்லை. எங்களை எத்தனை நாள் ஏமாற்றியிருக்கிறது இந்த மார்க்கஸ்? நாங்கள் இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்தோம்.. மார்க்கஸ் மிக மிக சோர்ந்துவிட்டது... எங்கள் அனைவரையும் அழுவது போல் பார்க்கும், வாலை ஆட்டிவிட்டு அப்படியே படுத்துக்கொள்ளும்.. சில நேரம், ‘நீங்க பேசுறது எதுவுமே எனக்கு கேக்கலடா’ என்று உரக்க சொல்வது போல் குரைக்கும். எங்களுக்கும் அதைப்பார்க்க  பாவமாகத்தான் இருந்தது.. 

இரண்டாம் நாட்கள் இப்படியே ஓடின. இரண்டாம் நாளின் இரவில் மார்க்கஸின் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டோம்.. மூன்றாம் நாள் காலை...

என் அப்பா “மார்க்கஸ் வா வாக்கிங் போலாம்” என்று மிக சத்தமாக கூறினார்.. ஏதோ உலமகே அழிந்துவிடுவது போன்ற வேகத்தில் என் அப்பாவிடம் வேகமாக ஓடி வந்த மார்க்கஸ் ’லொள் லொள்’ என மிக சந்தோசமாக குரைத்து அம்மா, நான், தம்பி, அப்பா என அனைவரையும் பாசத்தோடு நக்கிவிட்டு, அப்பாவை வாசல் நோக்கி இழுத்தது வாக்கிங் செல்ல...35 comments

 1. அற்புதமான எழுத்தாற்றல் - ராம் குமார் நாய் வளர்த்த - மன்னிக்கவும் - என்னையும் திட்டுவார் - மார்க்கஸ் வளர்த்த கதை - என இருக்கலாம். = எங்கள் யாருக்கும் மார்க்கஸை எங்கள் வீட்டில் இல்லாமல் நினைத்துப்பார்க்கவே மனம் வரவில்லை. அது ரேசன் கார்டில் பெயர் இணைக்க முடியாவிட்டாலும் எங்கள் குடும்ப உறுப்பினராகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.. = நண்பர்களே, படித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன். Pet Animal வளர்த்தால் நமது மனசு மிகவும் இலகுவாகி விடுகிறது. எனது தங்கை வீட்டில் (அடுத்த வீடு) கிளி வளர்த்தார். நான் மாலை 6 மணிக்கு வருவேன், எனது TVS 50 சத்தம் கேட்டு வந்து விடும். எனது காலடியிலேயே வந்து உட்காரும். சப்பாத்தி, சட்னி தனித்தனி கிண்ணங்களில் வைத்து விடும்; நம்ப மாட்டீர்கள்; நம்மைப் போல் சப்பாத்தி எடுத்து சட்னியில் தொட்டு சாப்பிடும். அதற்காக மாற்றி மாற்றி உணவு தயாரிப்போம். விதவிதமான தானியங்கள் மாற்றி மாற்றி வாங்கி கொடுப்போம். இரவு 10 மணியானவுடன் ஒரு சத்தம் கொடுத்து அவர்கள் வீட்டுக்கு செல்லும். நாய் கடித்து இறந்து விட்டது. நீண்ட நாட்கள் எங்களுக்கு அந்த பிரிவு துயர் தாங்க முடியவில்லை. = நன்றி ராம்குமார்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார்.. செல்லப்பிராணிகளை நாம் கவனித்துக்கொள்ள வேண்டியதில்லை.. அவைகள் நம்மை கவனித்துக்கொள்ளும்.. நம்மை மகிழ்விக்கும்.. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்

   Delete
 2. ரசித்தேன்....

  மனிதர்கள் போலவே நாயும்... அடடா தப்பாகச் சொல்லி விட்டேன் - மார்க்சும் நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டது போலும்...

  ReplyDelete
 3. அதன் உடம்பில் அசையும் ஒரே பாகம் அதன் வாய் மட்டும் தான்.

  என் சகல பாகங்களும் இப்போது வெடிச்சிரிப்பில்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ எங்க மார்க்கஸ பாத்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா?

   Delete
 4. மார்க்கஸ்யை வழிக்கு கொண்டு வர என்ன பாடு பாட வேண்டியிருக்கிறது...! ரசிக்க வைக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. ஒரு ஆங்கிலக் கதையை தமிழாக்கம் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். அந்த வகையில் உங்களுடைய இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட கதை அருமை. துளியும் ஆங்கில வாடையின்றி சிவகாசிக்காரனின் டிப்பிக்கல் கதைபோல் உள்ளது. வாழ்த்துக்கள் ராம்குமார்...

  ReplyDelete
  Replies
  1. ஏன்னா இது நான் பத்து வருடங்களுக்கு முன் படித்த கதை.. நெட்டில் கூட வேறு எங்கும் கிடைக்கவில்லை அந்த கதையின் ஒரிஜினல் வெர்சன்.. அதனால் என் கற்பனை அதுபாட்டுக்க ஓடிவிட்டது.. :-)

   Delete
 6. மார்க்கஸ் கண் முண்ணே கொண்டு வந்து ரசிக்க செய்தது உங்கள் கதை அண்ணா.
  இது நெஜமாலுமே நடந்த கதையா?

  உங்கள் கதை படித்ததுமே வீட்டில் ஒரு நாய் வலர்க்கனும்போல ஆசையா இருக்கு:)  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா நாய் வளருங்கள் வீட்டில்.. நாம் போடும் ஒரு வேளை சோற்றுக்காக காலம் பூரா தன் உயிரை கொடுத்து பாசம் காட்டும் ஒரே ஜீவன் அது தான் :-)

   Delete
 7. மார்க்கஸ்
  நடிப்பைப் புரிந்துகொண்டு
  நடிப்பாலேயே வழிக்குக் கொண்டுவந்த
  புத்திசாலித்தனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. அந்த புத்திசாலித்தனம் கூட மார்க்கஸால் வந்தது தான் :-)

   Delete
 8. ரசித்துச் சிரிக்கவைத்த ராம்குமாருக்கு மகிழ்வுடன் நன்றி.

  ReplyDelete
 9. சில கதைகளை படித்து முடிக்கும் போது சொல்லவே முடியாத ஒரு சந்தோசம் வருமே அப்படித் தான் இருந்தது எனக்கு இந்தக் கதையை முடிக்கும் போது, வழக்கமாக சில நெகடிவ் எண்டிங் கதைகளை உங்களிடம் இருந்து படித்துப் பழகிய எனக்கு படுபாவிபய மார்க்ஸ கொல பண்ணிறக் கூடாதேன்னு ஒரு திகிலோட தான் படிச்சேன், நல்ல வேள ரொம்ப பிடித்த முடிவு,

  இந்தக் கதை ஸ்கூல் ல படிச்ச நியாபகம் இல்ல, காரணம் அது இங்க்லீஷ் கத!, பட் எங்கையோ கேள்வி பட்டிருக்கேன்,

  உங்க இயல்பான நடையில ரொம்ப அருமையான கதை, வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா.. //படுபாவிபய மார்க்ஸ கொல பண்ணிறக் கூடாதே// இந்த ராம்குமார் கோவக்காரன் தான்.. கொடூரமானவன் தான்.. ஆனா வாயில்லாத ஜீவன கொல்லுற அளவுக்கு ஈரமில்லாதவன் இல்ல.. எலே சம்முகம் எட்ரா வண்டிய...

   Delete
  2. //சில நெகடிவ் எண்டிங் கதைகளை உங்களிடம் இருந்து படித்துப் பழகிய எனக்கு படுபாவிபய மார்க்ஸ கொல பண்ணிறக் கூடாதேன்னு ஒரு திகிலோட தான் படிச்சேன்/// ஹா ஹா

   Delete
 10. மார்க்கஸ் போலவே எங்களுக்கு ராஜின்னு ஒருத்தர்.., அவர் நினைவாகவே அந்த பேருல எழுதுறேன்

  ReplyDelete
  Replies
  1. ஓ சூப்பர்.. அதான் அந்த ராஜி படம் போட்டு இருக்கீங்களா

   Delete
  2. பார்ரா.. ம்ம் நல்ல பெயர்.. ராஜி என்ன செய்கிறார்?

   Delete
 11. மிகவும் சுவையான தமிழாக்கம். ஆங்கிலத்தின் வாடை துளியும் தென்படாத அளவுக்கு நேர்த்தியான மொழிநடை. ரசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.

  ReplyDelete
 12. நல்ல எழுத்து நடை...அருமை.

  ReplyDelete
 13. இந்த கதையை நீங்கள் சொன்னது போல கேள்விப்பட்டு மட்டுமல்ல பிள்ளைகளுக்கு சொல்லியும் இருக்கிறேன்! சோம்பேறி மார்க்கஸை பீதியில் அலறவிட்டு திருத்தியவிதம் சிறப்பு! அருமையான மொழிபெயர்ப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா, இந்தக்கதையை தெரிந்திருக்கும் ஒருவரை நான் கண்டுவிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் சார் :-)

   Delete
 14. அழகான மொழிபெயர்ப்பு. சொல்லப்போனால் இது ஒரு மொழிபெயர்ப்பு கதை போலவே தெரியவில்லை. So real. வாழ்த்துகள்.

  இக்கதையை நானும் படித்திருக்கிறேன் :) ஆனால் இப்போது வாசித்தது புது அனுபவம் போல் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுபத்ரா :-) இந்த கதையின் ஒரிஜினல் வெர்சன் எங்குமே கிடைக்கவில்லை :-(

   Delete
 15. இந்த கதையை நான் முன் பின் கேள்விபட்டது இல்லை.... என் மனதில் சிவகாசிக்காரன் சொல்லிய கதையாகத்தான் பதிகிறது.... தொடர்ந்து உங்களிடம் இருந்து கதைகளை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. இது என் பத்தாம் வகுப்பு ஃபேவரைட் கதை.. இந்தக்கதை நடத்திய ஆசிரியரின் வீட்டு நாயின் பெயரும் மார்க்கஸ் தான்.. அவரிடம் படித்த என் வீட்டு நாயின் பெயரும் மார்க்கஸ் தான்.. :-)

   Delete
 16. அருமையான கதை ராம்குமார்.. நாய் வைத்திருப்பவர்களுக்கு தான் அதன் பாசம் புரியும்.. இது சோற்றுக்கான பாசம் இல்லை.. சோறே போடாவிட்டாலும் அதன் பாசம் குறையாது... அதன் பாசத்துக்காக நாம்தரும் நன்றிக்கடன் தான் சோறு. எங்க வீட்டு ராக்கோ பாம்பு கடிச்சு செத்து போச்சு. எங்கம்மா அழுத அழுகைக்கு அளவே இல்லை.. அது செத்து போனதை நான் தான் பார்த்தேன்.. வாழ்க்கையில் என்றுமே அது கண்ணை விட்டு மறையாது. வீட்டிலே அந்த இடத்தை பார்க்கும்போதெல்லாம் அது தான் நினைவில் வரும்.. ஹ்ம்ம்.. நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க..

  ReplyDelete
  Replies
  1. என் நண்பர் டான் அசோக் ஒரு முறை சொல்லியிருந்தார், ”அறிவில் மனிதனுக்கு ஆறறிவு, ஆனால் அன்பில் நாய்க்கு தான் ஆறறிவு” என்று.. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

   Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One