என்ன ஒரு ரேடியா வியாபாரி தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமா!!!

Sunday, March 19, 2023

ஒரு ரேடியா கம்பெனிக்காரர் தான் இரண்டாம் உலகப்போருக்கும் பல லட்ச உயிர் இழப்புக்கும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? மீடியாக்காரர்கள் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான costly & deadly உதாரணம் இது.


இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலகட்டம் அது. உலகப்போர் என்பதை விட, ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் இரண்டாகப் பிரிந்து அடித்துக் கொண்டிருந்த கண்டப் போர் தான் அது. மற்ற கண்டங்கள் எனப் பார்த்தால் ஆசியாவில் இருந்த ரஷ்யா ஒரு அணிக்கும், ஜப்பான் இன்னொரு அணிக்கும் ஆதரவு.


போரில் ஜெர்மனியின் கையே ஓங்கி இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஜெர்மன் & இத்தாலிப் படைகளின் குண்டு இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் நாட்டைத் துளைத்தெடுத்துவிடும் என்கிற நிலை. வெற்றி பெற இன்னொரு பலமான நாட்டின் ஆதரவு தேவைப்படுகிறது இங்கிலாந்திற்கு. அமெரிக்காவைத் தங்களுக்கு ஆதரவாக உள்ளே இழுக்கலாமா என நினைக்கிறது. அப்போது தான் இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI6ற்கு ஸ்டீபன்சன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.


பிறப்பால் கனடியரான ஸ்டீபன்சன் முதல் உலகப்போரில் போர் விமானியாக இருந்தவர். பின் இங்கிலாந்தில் ரேடியோ தொழிலில் கொடிகட்டிப் பறந்தார். அதுவும் போரடித்த பின், சில நிபுணர்கள் & தனியார் உளவாளிகளின் துணை கொண்டு British Industrial Secret Service என்கிற பெயரில் ஒரு உளவு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். இங்கிலாந்தின் MP ஒருவர் இவரைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சிலிடம் தெரிவிக்கிறார். ஸ்டீபன்சன்னைப் பற்றி விசாரித்து, சில பல விபரங்களைச் சேகரித்த பின், அமெரிக்காவை உலகப் போருக்குள் இழுக்கும் திட்டத்திற்கு அவரைத் தலைவராக நியமிக்கிறது MI6.இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் ஈடுபடலாமா என்கிற கேள்விக்கு வெறும் 7% குடிமக்களே சரி என்றார்கள். ஆனாலும் ஹிட்லர் ஒரு கொடுங்கோளன் எனப் பலரும் நம்பினர். அதிபர் ரூஸ்வெல்ட்டும் பெரிதாக உலகப் போரில் ஆர்வம் காட்டவில்லை. 1929-30 காலகட்டத்தில் நடந்த மாதிரியான ஒரு பொருளாதாரச் சரிவை மீண்டும் ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை. ஆனால் அமெரிக்கா வராவிட்டால் இங்கிலாந்து காலியாகிவிடும். இந்த இக்கட்டான சூழலில் தான் ஸ்டீபன்சன் புதுப் பொறுப்பில் அமர்கிறார்.இப்போது ஜெர்மானிய அரசு அதிகாரி ஒருத்தர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவர் ஒரு செய்தி நிறுவன அதிபரோடு இருக்கும் புகைப்படம் ஸ்டீபன்சன்னின் கைகளுக்குக் கிடைக்கிறது. விடுவாரா?? 'ஹிட்லரின் ரகசிய உளவாளியோடு இருக்கும் அமெரிக்க முதலாளி' எனச் செய்தி வெளியிடுகிறார். அவ்வளவு தான். அந்த நிறுவனம் ஒரே வாரத்தில் இழுத்து மூடப்படுகிறது. அந்த ஜெர்மானிய அதிகாரி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுகிறார். லேசாக ஜெர்க் ஆன அதிபர் ரூஸ்வெல்ட், பணி ஓய்வு  பெற்ற ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியை இங்கிலாந்திற்கு அனுப்பி, உலகப்போர் பற்றிய விபரங்களைச் சேகரிக்கச் சொல்கிறார். போதாதா ஸ்டீபன்சன்னுக்கு?


அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு இங்கிலாந்தின் மன்னர் நான்காம் ஜார்ஜ், மகாராணி மற்றும் சர்ச்சில் அனைவரிடமும் செல்கிறார். ஒவ்வொருத்தரும் ஸ்டீபன்சன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே அந்த அதிகாரியிடம் சொன்னார்கள். அதாவது 'இங்கிலாந்தைப் போன்ற மிகப்பெரிய நாட்டின் ஆதரவு உங்களுக்கு இல்லாமல் போனால் ஹிட்லரிடம் இருந்து அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது' என்பது தான் அது. ஆனால் உண்மை அப்படியேத் தலைகீழ் என்பது இங்கிலாந்திற்கு மட்டுமே தெரியும். அத்தனையும் கேட்ட அந்த அமெரிக்க அதிகாரிக்கு வியர்த்துக் கொட்டியது. உடனடியாக அமெரிக்கா கிளம்பினார் ரூஸ்வெல்ட்டைப் பார்க்க.


அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் கிளிப்பிள்ளை போல் அனைத்தையும் ஒப்பித்தார். ஸ்டீபன்சன் தொடர்ந்து அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்து, பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார். ரூஸ்வெல்ட்டின் காதுகளுக்கு அந்தக் கட்டுக்கதைகள் எல்லாம் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். அடுத்ததாக மக்களைப் பீதியாக்க வேண்டுமே???


"அமெரிக்கத் தெருக்களில் வலம்வரும் நூற்றுக்கணக்கான ஜெர்மானிய உளவாளிகள்", "அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்தை அழிக்கச் சபதம் பூண்ட ஹிட்லர்", "உலக வரைபடத்தில் பல நாடுகளை 'ஜெர்மன்' என மாற்றி அமைத்து வெளியிட்டு மகிழ்ந்த ஹிட்லர்" என இரும்புக் கை மாயாவி ரேஞ்சிற்கு அமெரிக்கச் செய்தி நிறுவனங்களுக்கு தினம் ஒரு தகவலைக் கசிய விடுகிறார். செய்தி நிறுவனங்களுக்குத் தான் இtaப்படிப்பட்டச் செய்திகள் அல்வா மேட்டர் ஆயிற்றே?! ஊரே பற்றிக்கொண்டது. இப்போது அமெரிக்கா முழுவதும் இரண்டாம் உலகப்போர் பற்றித் தான் பேச்சு.


'எங்களிடம் MI6 என்கிற உலகத்தில் சிறந்த உளவு அமைப்பு உள்ளது. நீங்களும் அது போல் ஆரம்பியுங்களேன்' என அமெரிக்காவிற்கு ஆலோசனையும் தருகிறார்.. அப்படி உருவானது தான் அமெரிக்க உளவு அமைப்பான CIA.


அமெரிக்கர்கள் மத்தியில் பயம் வந்துவிட்டது இப்போது. செய்தித்தாள்களில் வேறு மாதிரி செய்தி கொடுத்தார் ஸ்டீபன்சன் இப்போது. 'ஜெர்மானியப் படையைத் துவம்சம் செய்த இங்கிலாந்து ராணுவம்', 'ஹிட்லரின் பிடியில் இருந்த கிறிஸ்தவர்களைக் காத்த இங்கிலாந்து பாராசூட் வீரர்கள்' என இங்கிலாந்தை ஒரு ஆபத்பாந்தவன் போல் காட்டும்படி செய்தி வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லருக்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கும் மூட நம்பிக்கைகள் உண்டென தெரியும் ஸ்டீபன்சனுக்கு. 'ஜோசியர்களின் கணிப்புப்படி ஹிட்லரின் ஆயுசு இன்னும் சொற்பம் தானாம். ஒரு மேற்கத்திய தேசத்தால் தான் ஹிட்லரின் மரணம் நிகழுமாம் - ஆந்தையாரின் நேரடி ரிப்போர்ட்' எனச் செய்தி வெளியிட்டார். 'ஐயா சாமி நீங்க தான் எங்களக் காப்பாத சரியான ஆள்' என அமெரிக்கா இங்கிலாந்திடம் உதவிக்கு வந்துவிட்டது. 75% அமெரிக்கர்கள் இப்போது உலகப்போருக்கு ஆதரவாக. அமெரிக்கா போரில் இறங்குவதாக அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக நடந்த பேர்ல் ஹார்பர், ஹிரோஷிமா என அடுத்தடுத்த ரத்தச் சகதிகள் மற்றும் அதற்குப் பிந்தைய வரலாறெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனால் அதற்கு முந்தைய இந்தக் குள்ளநரி விளையாட்டு நாம் அறியாதது. இந்த ஸ்டீபன்சன் நம்ம இயான் ஃப்ளெம்மிங்கிற்கு நண்பர். ஸ்டீபன்சன்னின் திறமைகளைக் கண்டு வியந்து தான் ஃப்ளெம்மிங், ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கினார் எனக் கூறுவோரும் உண்டு.சாதாரண வதந்திகள், எந்த அளவிற்கு மக்களைப் பீதிக்குள்ளாக்கி, ரத்தக்களறியான  உலகப்போரையே நிகழ்த்தி முடித்திருக்கிறது எனப் பார்த்தீர்களா?? இதனால் அறியப்படும் நீதி என்ன??? வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளையும் செய்திச் சேனல்களையும் தவிர்க்கவும்.

1 comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One