அம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...

Wednesday, May 13, 2015

மழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும்? மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று எத்தனையோ இருக்கின்றன.. எனக்கு மழை என்றால் முதலில் ஞாபகம் வருவது உளுந்த வடை தான்..



சிவகாசியில் மழை என்றாலே கொண்டாட்டம் தான்.. வருடத்தில் எப்பயாவது இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வரும் ஸ்பெசல் விருந்தாளி அல்லவா? அப்படி மழை பெய்யும் நாட்களில் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் லீவு விட்டுவிடுவார்கள்.. நான் பள்ளியில் இருக்கும் போது மழை வந்தால் ஒரே குஷியாகிவிடும் எனக்கு. ஏனென்றால் மாலை நான் தனியாக வீட்டிற்குச் செல்லத்தேவையில்லை. ஃபயர் ஆஃபிஸ் லீவு என்பதால் அப்பா என்னை அழைக்க வருவார் என்பதால்..

வகுப்பு முடிந்து நான் பள்ளி வாசலுக்கு வரும் போது, அப்பா தன் ஒரு பக்க வேஷ்டியின் நுனியை தூக்கிப் பிடித்துக்கொண்டபடி கம்பீரமாக என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருப்பார்.. என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பும், அவரைப் பார்த்ததும் என் முகத்தில் ஒரு சிரிப்பும் சொல்லி வைத்தது போல் வந்திருக்கும். என் பைக்கட்டை வாங்கி சைக்கிளில் கோர்த்துக்கொண்டு என்னை அலேக்காகத் தூக்கி சைக்கிளில் உட்கார வைப்பார்..

அன்றைய ஸ்கூல் கதைகளை எல்லாம் கேட்டுக்கொண்டே என்னை ஒரு டீக்கடைக்கு அழைத்துச்செல்வார்.. “ஸ்ட்ராங்கா ஒரு டீ” என்று அவருக்கு ஆர்டர் செய்து விட்டு என்னிடம் மிச்சக்கதைகளைக் கேட்பார். பிள்ளைகளைப் பேசவிட்டு ரசிப்பது தானே பெற்றவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு? டீ குடித்து முடித்ததும் சூடாகப் போட்டிருக்கும் உளுந்து வடைகளைகள் நான்கை பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புவோம்.



எனக்குக் கோபமாக வரும் ‘வீட்ல நானு, தம்பி, அம்மா, அப்பான்னு நாலு பேரு தான். மொத்தமே நாலு வடன்னா, ஆளுக்கு ஒன்னொன்னு தானா?’ என.. அப்பாவிடம் எதுவும் பேச மாட்டான் வீடு வந்து சேரும் வரை. வீட்டிற்கு வந்ததும் பார்சலைப் பிரித்தால், சூடான வடை வாழை இலையுடன் கலந்து ஒரு வித அழகான வாசத்தைக் கொடுக்கும். எனக்கும் தம்பிக்கும் ஒன்றொன்று கொடுப்பார்கள் அம்மா. நாங்கள் அதை சாப்பிட்டு முடிக்கும் போது இன்னொரு வடையும் எங்கள் இருவரது தட்டிலும் இருக்கும். ஒரு பேச்சுக்காக அப்பா, அம்மாவிடம் கேட்பேன், “ஒங்களுக்கு?” என்று.. “நாங்க சாப்டோம்ப்பா, நீ சாப்புடு” என்பார்கள் இருவரும் கோரசாக..

ஒவ்வொரு மழை நாளிலும் இதே கதை தான்.. பள்ளி முடித்து, கல்லூரி முடித்து, அதன் பின் 3ஆண்டுகள் சிவகாசியிலேயே இருந்த வரையிலும் மழை நாள் என்றால் அன்று மாலை அப்பா கண்டிப்பாக உளுந்து வடை வாங்கி வந்திருப்பார் என்று உறுதியாகத் தெரியும் எனக்கு. அது ஏன் மழை என்றால் உளுந்து வடை, அன்று மட்டும் அப்பா ஏன் அதை வாங்குகிறார் என்றெல்லாம் தெரியாது. ஆனால் மழை நாள் என்றால் உளுந்து வடை நிச்சயம்.. சூடான உளுந்து வடையை தேங்காய்ச் சட்னியில் முக்கிச் சாப்பிடுவது அவ்வளவு சுவை..



இப்போது வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகும், ஒவ்வொரு மழை நாளிலும் மனம் உளுந்து வடைக்கு ஏங்குகிறது.. மழை வாசம் வந்தாலே மனதுக்குள் உளுந்து வடை ஞாபகம் வந்துவிடுகிறது.. ஆனால் என்ன செய்ய, கையில் காசு இருந்தாலும் தனியே போய்ச் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. அனைத்து வடைகளையும் எங்களுக்குக் கொடுத்துவிட்டு “நாங்க சாப்டோம்ப்பா நீ சாப்புடு” என்று கோரசாக சொன்ன அவர்களின் அன்பும் அக்கறையும் எந்தக் கடையில் கிடைக்கும் எனக்கு??


5 comments

  1. ஏங்க ராம்குமார் கலங்க வைக்கிறீங்க...

    ReplyDelete
    Replies
    1. கலங்காதே ராசா காலம் வரட்டும்.. நல்லிரவு போனபின் தான் வெள்ளி முளைக்கும்..

      Delete
  2. அருமை ராம்குமார். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிமையான நினைவுகள் , வீட்டை விட்டு வெளிய வந்திருக்கையில் அதே நினைவுகள் சற்று அழுத்தமான பாரத்தை கொடுக்கவும் செய்கிறது. என்ன செய்ய பொருளாதாரம் தேட வேண்டிய நிர்பந்தத்தில் இதெல்லாம் இழப்பீடாக கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது தான்! வெளிநாடு வாழ் நண்பர்களின் மனநிலையை எண்ணி நாம் அமைதி கொள்ள வேண்டியது தான் ப்ரோ .. ஆமாம் எதற்கு அம்மன் கோவில் பட்டி அழகிகள் ? என்ற தலைப்பு ...

    ReplyDelete
    Replies
    1. அம்மன் கோவில்பட்டி என்பது சிவகாசியில் எங்கள் ஏரியா.. அங்கு நான் பார்த்த, அந்த ஏரியாவோடு இரண்டறக் கலந்த பெண்களைப் பற்றி தொடராக எழுத ஆரம்பிக்க நினைத்தே அந்தத் தலைப்பு வைத்தேன்.. இரண்டு பதிவுகள் அப்படி வந்தன.. மூன்றாவது பதிவு அந்த ஏரியாவை மட்டும் டச் செய்தது, பெண்களை அல்ல.. :)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One