ஹார்ட் அட்டாக்!!!!!

Wednesday, January 9, 2013

எனக்கு இந்த சத்தம் தலைவலி கொடுப்பது போல் இருக்கிறது. இது என்ன சத்தம் என உணர முயற்சிக்கிறேன். லேசாக கண்களை திறக்கிறேன். ராணியின் முகம் மங்கலாக தெரிகிறது. அழுதுகொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன். ஆம்புலன்ஸ் வேறு, சினிமாவில் காமிப்பார்களே, அது போன்ற சத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் அவள் மடியில் கிடக்கிறேன். மெதுவாக அவளை பார்த்தவாறே யோசிக்கிறேன், “இவளுக்கு உண்மை தெரிந்தால் என்னாவது?” என.. எங்களுக்கு பக்கவாட்டில் வெள்ளை ஆடையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். நான் கண் விழிப்பதை பார்த்ததும் ராணியிடம், “மேடம், சார் கண்ண தொறக்குறாரு, பாருங்க” என்கிறாள் அந்த பெண். 



“என்னங்க.............” ஆம்புலன்ஸே கவிழ்ந்து விழும் அளவுக்கு கத்துகிறாள் என் பதிபத்தினி. டிரைவர் கூட லேசாக பயந்திருப்பார் என நினைக்கிறேன். என் தலைவலிக்கான காரணம் புரிந்து விட்டது. ‘இந்த சத்தத்தை தடுக்க முடியாது’ என என் 27வருட இல்லறம் கற்றுக்கொடுத்திருந்ததால் தலைவலியை ஏற்றுக்கொண்டு கண்களை மூடுகிறேன்.

இன்று மதியம் தான் அது நடந்தது. மிகவும் டென்ஸனோடு வீட்டிற்கு சாப்பிட வந்தேன். டென்ஸன் ஏனென்றால், டென்ஸன். எனக்கு காரணம் எல்லாம் தெரியாது. காலை ஆபிஸ் கிளம்பும் போது, மதியம் சாப்பிட வரும் போது, மாலை ஆபிஸில் இருந்து வந்து மீண்டும் மறுநாள் காலை கிளம்பும் வரை, பின் ஆஃபீஸில் இருக்கும் நேரம் இந்த சமயங்களில் மட்டும் தான் நான் டென்ஸனாக இருப்பேன். ஆனால் இந்த ராணி நான் எப்போதுமே டென்ஸனாக இருப்பதாக சொல்வாள். பொறுமை கெட்டவள். ஆனால் எவ்வளவு டென்ஸன் என்றாலும் அவளிடம் என் டென்ஸன் 25வது ஓவரில் விளையாடிக்கொண்டிருக்கும் டெயில் என்டர்களை போல் பம்மிவிடும்.

இன்று மதியம் இவள் வேறு என்னை கோவப்படுத்திவிட்டாள். கோவப்படுத்தினாலும் கோவத்தை காட்ட முடியாது. ஒவ்வொரு மணமான ஆணும் வீட்டில் இருக்கும் குட்டி மன்மோகன் சிங் தான். வீட்டிற்கு வந்ததும் சமையக்கட்டு பரணில் புத்தாண்டுக்கு செய்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருந்த குலாப் ஜாமூனை எடுத்து கொஞ்சம் வாயில் போட்டேன். அந்த இனிப்பை நாக்கு உணரும் முன்,

“என்னங்க..............................” தன் ரயில் வண்டி சத்தத்தோடு என்னை நோக்கி வந்தவள், “ஒங்களுக்கு தான் சுகர் இருக்குல, டாக்டர் இனிப்பு பலகாரமெல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காருல?” என கேட்டு அதை பிடிங்கி நான் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள். சண்டாளி, எப்படி கண்டுபிடித்தாள் என தெரியவில்லை. 

ரெண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒன்று நான் திங்க வேண்டும், அல்லது அவள் திங்க வேண்டும். புத்தாண்டு பிறந்த 25வது மணிநேரத்தில் இருந்து அது அந்த பரணில் தான் இருக்கிறது. அவளுக்கு தெரியாமல் ஒன்றிரண்டு தின்னலாம் என்றாலும், “என்னங்க.............................” இதோ இந்த ரயில் வண்டி ஓட ஆரம்பித்துவிடும். நான் எப்போது இனிப்பை எடுத்தாலும் சரியாக கண்டுபிடித்து ரயில் வண்டியை ஓட்ட ஆரம்பித்துவிடுவாள். அலுவலகத்தில் மாலை டீயோடு கொடுக்கும் இனிப்புகளை வாயில் வைக்கும் போது கூட, மூளை, காதுகளை கொஞ்சம் உஷாராக இருக்க சொல்லி செய்தி அனுப்புமளவுக்கு அந்த ரயில் வண்டி என்னை டார்ச்சர் செய்தது.


“என்னங்க..........................”

“சொல்லும்மா” - அங்கு ரயில் வண்டி ஓடினாலும் நாம் சைக்கிள் கூட மிதிக்க முடியாது. ஒன்லி வாக்கிங் தான். 

“சாப்புட வாங்க, மணி மூனாகுது”

“இந்தா வந்துட்டேன்மா”

எனக்கு சுகர், பிரஷர் எல்லாமே உண்டு. நம் குழந்தைகள் ஃபிகர் பார்க்கும் வயதில் நாம் ஆஸ்பத்திரியில் சுகர் பார்த்தால் தானே அந்த வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு? என் மூத்த பையன் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் கோட் எழுதிக்கொண்டிருக்கிறான், ரெண்டாவது பையன் இப்போது தான் எம்.பி.ஏ முடித்துவிட்டு மூத்தவனோடு தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறான். நான் 30வருடங்களுக்கு முன்பே பி.காம் முடித்துவிட்டு, ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருக்கிறேன்.

“ஏம்மா ரெண்டு குலாம்ஜாமுன் சாப்புடுறதுல என்ன ஆகிறப்போகுது?” டைனிங் டேபிள் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு கேட்டேன்.

“ரெண்டா? ஒங்கள டாக்டர் இனிப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிருக்காருல?”

டாக்டர் என்னிடம் இனிப்பை குறைத்துக்கொள்ளத்தான் சொன்னார். ‘இனிப்பு பக்கமே போகக்கூடாது’னு இவா சேத்து சொல்றா..

“சரி, அப்ப அதெல்லாம் எதுக்கு இன்னும் பத்திரமா மேலேயே வச்சிருக்க? நான் ஆஃபிஸ் போன பிறகு நீ திங்கவா?”

“ஆமா திங்குறாங்க.. எனக்கும் சுகர் தான?”

“அப்ப அத கீழேயாவது கொட்ட வேண்டியது தானம்மா?”

“இல்லைங்க, கணேஷும், வெங்கெட்டும் பொங்கல் லீவுக்கு வராங்கல, அதான் அவங்களுக்காக பத்திரமா வச்சிருக்கேன்”

இந்த மாதிரி எல்லார் வீட்டிலேயும் இருக்கும் போல? அதான் சாப்பிட்டு வயித்துக்கு எதும் ஆனாலும் ஆகும்னு நெனச்சு, ரெண்டு நாள் லீவு விடுறாய்ங்க பொங்கல் தீபாவளி மாதிரி பண்டிகைகளுக்கு. இந்த பெண்களும் இந்த மாதிரி மிச்சம் இருக்கும் ஐட்டங்களை கீழே கொட்டாமல் ஏதோ பொக்கிஷம் போல் சேர்த்துக்கொண்டிருப்பார்கள்.

“ஏ ஏ ஏம்மா கொஞ்சமா சோறு வைக்குற?”

“இன்னைக்கு காலைலேயும் சோறு தான் சாப்பிட்டுருக்கீங்க.. இப்பவும் சோறு. ஒடம்புல சுகர் அதிகமாயிரும், அதான் கொஞ்சமா வைக்குறேன்”

“எனக்கு ரொம்ப பசிக்குதும்மா, இது காணாது”

“அதான் கூட்டு, அவியல் நிறைய இருக்குல?” என்று கூறிக்கொண்டே அந்த கண்றாவிகளை என் தட்டில் வைத்தாள்.

முட்டைகோஸ், கீரை, வாழைத்தண்டு என்று ஆடு மாடுகளுக்கு கொடுப்பதை அடுப்பில் வேக வைத்து எனக்கு கொடுத்திருந்தாள். கோவமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு வயதிற்கு மேல், வீட்டுக்காரியிடம் கோவப்பட முடியாது.கோவப்பட்டால் மாலை மகன்களிடம் இருந்து ஃபோன் வரும், “என்னப்பா, இந்த வயசுல எதுக்கு அம்மாவ அழுக வைக்குறீங்க?” என்று.

பாவம் அவர்களுக்கு தெரியாது அவள் இங்கே என்னை படுத்தும் பாடு. நான் 30வருடங்களுக்கு முன் அப்பாவை பார்த்து இதே கேள்வியை கேட்கும் போது அவர் என்னை ”உனக்கும் காலம் வரும் மகனே” என்பது போல் நக்கலாக பார்த்தார். இப்போது அதே பார்வையை என் மகன்களை நோக்கி நான் பார்க்கிறேன். வருங்காலத்தில் என் பேரனை நோக்கி அவர்கள் இதே பார்வையை பார்ப்பார்கள். இதெல்லாமே ஒரு சைக்கிள் தானே?

”சரி, எல்லாத்தையும் இப்படி அவியலாவே பண்ணணுமா? ஏதாவது பொறிச்சி கிறிச்சி வச்சிருந்தா நல்லாருக்கும்ல?”

“உங்களுக்கு எண்ணெயும் சுத்தமா சேக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காருல்லங்க?”

நாம் போன பிறவியில் செய்த பழிபாவங்கள் தான் இந்த பிறவியில் நோயாகவும், அக்கறை என்னும் பெயரில் நம்மை சுவையாக சாப்பிடக்கூட விடாத பொண்டாட்டியாகவும் வரும். இவள் என்னை கடைசியாக சுவையான இனிப்பான பலகாரங்கள் சாப்பிட விட்டது, இவள் அப்பா இறந்த போது தான். இவள் அழுது கொண்டிருக்கும் கேப்பில் நான் ரெண்டு லட்டை, கார்டூனில் ஜெர்ரி விழுங்குமே அது போல், இவள் அசந்திருக்கும் கணப்பொழுதில் விழுங்கிவிட்டேன். மூச்சு முட்டாமல் தொண்டையில் இறங்கியது என் மாமனார் செய்த புண்ணியம்.

”சரி எண்ணெய் தான் சேக்கக்கூடாது, கொஞ்சம் உப்பு ஒரப்பாவது சேத்து போட்டிருக்கலாம்ல?”

“என்னங்க, ப்ரெஷர் இருக்கும் போது இதெல்லாம் சேக்க முடியுமா? வயசாக வயசாக உப்பு ஒரப்பு எல்லாத்தையும் கொறச்சிக்கிணும்ங்க”

’அப்புறம் ஏன்டீ சோத்த மட்டும் போடுற? அந்த கருமத்தையும் போடுறத நிறுத்திரு’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ரோசம் இல்லை. எல்லாம் இவள் உப்பில்லாமல் வைக்கும் சமையல் தான் காரணம் என நினைக்கிறேன். பேசாமல் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் காலையிலேயே ஆஃபீஸில் பியூன் மணியை அனுப்பி கால் கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸஸும் சீனி அதிகம் போட்டு ரெண்டு காஃபியும் வாங்கி வரச்சொல்லி வயிறு முட்ட சாப்பிட்டிருந்தேன். ’சார் என்ன சார் இதெல்லாத்தையும் ஒரே ஆளா சாப்பிடிறீங்க?” என அவன் கண் வைத்த காரணத்தினால் அவனுக்கு மட்டும் ரெண்டு சிப்ஸை முறைத்துக்கொண்டு கொடுத்தேன்.


தினமும் நான் ஆஃபிஸில் தின்னும் கேக், அல்வா, முந்திரி, கிரீம் பிஸ்கட், சிப்ஸ் வகைகள், சீனி அதிகம் போட்ட ஜூஸ் ஐட்டங்கள் & டீ காஃபி இதையெல்லாம் நான் சாப்பிடுகிறேன் என தெரிந்தால் என்னை விட அதிகம் பிரஷர் வந்துவிடும் என் ராணிக்கு. நாக்கு நம்மை பார்த்து கேள்வி கேட்கும் போது, டாக்டர், சுகர், பிரஷர், ஹார்ட், உயிர், பொண்டாட்டி, பிள்ளைகள் இது எதைப்பற்றியும் அக்கறை வராது. நாக்கை சந்தோஷப்படுத்திவிட்டால் மனம் தானாக சந்தோஷமாகிவிடும். உடல் ஏதாவது கோளாறு செய்தாலும் டாக்டர் இன்னொரு கார் வாங்கும் அளவுக்கு செலவு செய்து சரி செய்து கொள்ளலாம். ஆனால் நாக்கை மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் கட்டுப்படுத்தகூடாது, இது தான் என் பாலிஸி.

”ஜெயில் கைதிகங்களுக்கு கூட வாரத்துக்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாம், தெரியுமா ஒனக்கு?”

என்னை அவள் திரும்பி முறைக்கும் போது நான் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்துவிட்டேன். கை கழுவ நடக்கும் போது தான் நான் அதை உணர்ந்தேன். என் இடது தோள்பட்டை, புஜம், நடு மார்பில் வலி. தோளிலும் புஜத்திலும் அழுத்தமான வலி, மார்பில் சுறுக்கென முள்ளால் தைப்பது போன்ற வலி.ஒரு சில நொடிகளில் முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. கை கால்கள் நடுங்கின. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. 

“என்னங்க, என்ன அங்கேயே நிக்குறீங்க?” - அவள் பேசுவது ஒரு தெளிவில்லாமல் என் காதில் விழுந்தது. மெதுவாக திரும்பி கண்களை சிமிட்டாமல் அவளை பார்த்தவாறு கீழே சரிந்தேன்.

இதோ இப்போது தலைவலி கொடுக்கும் அவளின் “என்னங்க” சத்தத்தோடு ஆம்புலன்ஸில். ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைகிறது. வேகமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஐ.சி.யூ.விற்கு கொண்டு செல்கிறார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே ஸ்ட்ரெச்சரில் பயணம் ஆகிறேன். அவளைப்பார்த்து கையசைக்க எண்ணுகிறேன். வழக்கம் போல் ஆஸ்பத்திரியே அதிரும் அளவிற்கு “என்னங்க” என ஆரம்பித்தாள். கையசைக்கும் முடிவை கைவிட்டு ஸ்ட்ரெச்சரில் வசதியாக சாய்ந்துகொண்டேன்.

டாக்டர் உள்ளே வந்தார். எதெதையோ வைத்து டெஸ்ட் எடுத்தார். என்னை சந்தேகமாக பார்த்தார். “கொஞ்சம் எந்திரிச்சி உக்காருங்க” என்றார்.

“முடியல டாக்டர் புஜம் நெஞ்சு எல்லா பக்கமும் ஒரே வலி”

ப்ரெஷர் டெஸ்ட் செய்து கொண்டே ”மதியம் என்ன சாப்பிட்டிங்க?” என்றார்.

இவள் அவித்து போட்ட அந்த தாவர வகைகளை சொன்னேன். நெற்றியை சுறுக்கி தன் மூளையில் இருக்கும் எம்.பி.பி.எஸ். பாடத்தில் எந்த பக்கத்தையோ புரட்டிக்கொண்டிருந்தார். “எதாவது கிழங்கு, காலிஃப்ளவர், கொண்டை கடலை மாதிரி சாப்பிட்டீங்களா?” என்றார்.

“ஏன் டாக்டர் எங்க பியூன் மணி நீங்க சிப்ஸ் வாங்குற கடையில தான் எனக்கு ஸ்நாக்ஸ் வாங்குனானா?”

“என்னது?”

“இல்ல, டாக்டர் காலையில கொஞ்சமா உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டேன்” என்றேன். அவர் அருகில் இருந்த நர்ஸிடம், “இவரோட வைஃப கூப்பிடுங்க” என்றார்.

”பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.. சிப்ஸ் அதிகமா சாப்பிட்டனால பிரஷர் கொஞ்சம் அதிகமாகி மயக்கம் வந்திருக்கு, வாயுத்தொல்லையும் வந்திருக்கு, அவ்வளவு தான். அத நீங்க ஹார்ட் அட்டாக்னு நெனச்சு பய்ந்துட்டீங்க” என்றார். 

அவர் சொல்வதை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது என் மனைவிக்கு சிப்ஸ் மேட்டர் எல்லாம் தெரியப்போவதை நினைத்து வருத்தப்படுவதா? அவள் உள்ளே வந்தாள். “சாருக்கு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, சிப்ஸ்...............” அப்படின்னு அவர் ஆரம்பிக்கும் போது நான் எகிறிக்குதித்து அந்த ஆஸ்பத்திரியை கடந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன், எனக்கு பின்னால் “என்னங்க......................” என்னும் ரயில் வண்டி சதாப்தி வேகத்தில் கோவமாக துரத்தி வந்தது..

8 comments

  1. //காலை ஆபிஸ் கிளம்பும் போது, மதியம் சாப்பிட வரும் போது, மாலை ஆபிஸில் இருந்து வந்து மீண்டும் மறுநாள் காலை கிளம்பும் வரை, பின் ஆஃபீஸில் இருக்கும் நேரம் இந்த சமயங்களில் மட்டும் தான் நான் டென்ஸனாக இருப்பேன். ஆனால் இந்த ராணி நான் எப்போதுமே டென்ஸனாக இருப்பதாக சொல்வாள்.// எத்தனை அற்புதமான வரிகள். வெகுவாய் ரசித்தேன் தல

    //நம் குழந்தைகள் ஃபிகர் பார்க்கும் வயதில் நாம் ஆஸ்பத்திரியில் சுகர் பார்த்தால் தானே அந்த வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு?// ஹா ஹா ஹா

    ஹா ஹா ஹா சிறுகதை உங்களுக்கு இயல்பாய் இயல்பை மீறி வருகிறது தல. வார்த்தைக் கோர்வைகள் ஒவ்வொன்றும் அருமை... தொடர்ந்து அடித்து ஆட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பா கதை எழுதுன ஐஞ்சு நிமிஷத்துல கமெண்ட்டா? மொத அதுக்கே உங்களுக்கு ஸ்பெசல் நன்றி.. கதை தான் நம்ம ஃபீல்டு.. கட்டுரை எழுத உக்காந்தாலும் கதை தான் எழுத வருது.. பலரும் என் கதைகளை நீளம் என சொன்னதால் இதை நிஜமாகவே ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறேன்.. நிஜமாகவே சுவாரசியமாக இருக்கிறதா என தெரியவில்லை.. ஆனாலும் உங்கள் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சியடையவைத்துவிட்டது நண்பா.. நன்றி..

      Delete
  2. நன்றி கேரளாக்காரன் :-)

    ReplyDelete
  3. ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து நடை . எனக்கு நிறைய இடத்துல சிரிப்பு பொத்துகிட்டு வந்தது . அருமை அருமை இப்படி எத்தன தடவ வேணும்னாலும் சொல்லிகிட்டே இருக்கலாம் . அவ்ளோ சிரிச்சேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீ திரு.Udhaya Kumar :-)

      Delete
  4. அருமையான எழுத்தாற்றல்.
    வாழ்த்துகள் ராம்குமார்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    Very Good & Keen observation.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ரொம்ப நன்றி சார்.. எல்லாம் தலைவர் சுஜாதாவின் ஆசிகள் தான்..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One