ஆதிக்க சாதி மனோபாவ தமிழ்நாடு!!

Sunday, March 5, 2023

சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மெஷினில் நடந்த கொள்ளைச் சம்பவம் உங்கள் நினைவில் இருக்கலாம். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு எந்தச் சேனலைத் திருப்பினாலும் "ஏ.டி.எம்.மை உடைத்துத் திருடிய வடமாநில கும்பல்", " வடக்கன்ஸின் கைவரிசை" என்று தான் ஓயாமல் செய்தி ஓடியது. அந்தக் கொள்ளைக் கும்பலில் இருந்து ஒவ்வொருத்தனாகப் பிடிபட்டு, அவர்களுடைய பெயர் வெளி உலகிற்குத் தெரிய வந்த போது, வடக்கன்ஸ் வடக்கன்ஸ் என மூச்சுக்கு முன்னூறு தரம் முழங்கிய சேனல்கள் எல்லாம் அமுங்கிவிட்டன. நேற்று கூட ஒருத்தன் அதே வழக்கில் பிடிபட்டான். அவனுடைய பெயரைச் சொல்லக் கூட மீடியாவிற்குத் தயக்கம். அதுவும் போக அவனை வடமாநிலத்தவன் என்றும் அவர்கள் குறிப்பிடவில்லை. வெறும் "திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது" என பொதுப்படையாகச் செய்தி போட்டார்கள். அது எப்படி வடக்கன், வடநாட்டான் என்றெல்லாம் குத்தப்பட்ட முத்திரை சடக்கென அமுங்கியது?

நம்மூரில் நீங்கள் ஒருத்தனை மதம் பார்த்தோ ஜாதி பார்த்தோ ஒதுக்கினால், ஒதுக்க வேண்டாம், அட்லீஸ்ட் "அவங்க என்ன ஆளுங்க?" எனக் கேட்டாலே உங்களை ஒரு நாகரீகமற்ற நபராகத் தான் பார்ப்பார்கள். அந்த அளவிற்குத் தமிழர்கள் நாம் முன்னேறி வருகிறோம். அனைவரும் படிக்கிறோம், உலக விஷயங்கள் அறிகிறோம், சமநிலை சமுதாயம் என்பதை நோக்கி நகர்கிறோம். அதனால் தான் 90களில் டாமினேட் செய்த ஜாதிக் கட்சிகள் இன்று கூட்டணிக்கு அல்லாடுகின்றன; சொந்தச் சின்னத்தில் அல்லாமல் வேறு சின்னத்தில் நிற்கின்றன. மதத்தை முன்னிறுத்தும் பாஜக போன்றக் கட்சிகள் இன்னமும் இங்கு வளர முடியாமல் தடுமாறுவதற்கும் மதத்தைப் பிரதானமாக அது முன்னிறுத்திவிடுமோ என்கிற ஐயத்தில் தான்.


ஆனால் ஜாதி, மதம் என்கிற பிரிவினைவாதக் கட்டமைப்பை விட்டு வெளியே வரத்துடிக்கும் தமிழகம், மொழி & இனப் பிரிவினைவாதக் கட்டமைப்பிற்குள் விழுவது தான் மிகவும் வருத்தமான விஷயம்.





யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருத்தன் அடிமை எனப் பேசியதால் அந்த மதத்தையும் அந்த ஜாதியையும் நாம் எவ்வளவு கேவலமாகப் பார்க்கிறோம்? ஒருவரால் கீழ்நிலையில் பார்க்கப்படுவதன் வலியை அறிந்தவர்கள் தானே நாம்? அதே நாம் இன்று வேறொருத்தனை கீழானவனாகப் பார்க்கிறோமே இது ஞாயமா? 


அவன் ஒன்றும் நம்மிடம் திருட வரவில்லையே? உழைத்துத் தானே தின்கிறான்? நாம் உழைக்கத் தயாராய் இருந்தால் அவனுக்கும் நிச்சயம் அந்த வேலை கிடைத்திருக்காது, வந்திருக்கவும் மாட்டானே? நம் சோம்பேறித்தனத்தால், நாம் பார்க்காமல் தவிர்க்கும் வேலையைப் பார்க்க வருபவன் மேல் ஏன் இத்தனை வஞ்சம் நமக்கு? 'தமிழ்நாடு மாதிரி ஒரு வளர்ந்த மாநிலத்திற்குக் போகிறோம். இனி நாம் நன்கு சம்பாதித்து நம் குடும்பக் கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடலாம்" என எண்ணி வருபவனுக்கு நாம் கொடுக்கும் பரிசு, 'வடக்கன்ஸ்' என்னும் பட்டம், கிண்டல் யூட்யூப் வீடியோஸ் & மீம்ஸ். உச்சகட்டமாக, மீடியாவே அவர்களை "வடக்கன்ஸ்" என அழைப்பது தான். "குண்டு வைப்பவனை மதம் வைத்து அடையாளப்படுத்தாதீர்கள் டோலர்" எனச் சொல்லும் புரட்சியாளர்கள் வட இந்தியரை மட்டும் ஏன் பொதுமைப்படுத்துகிறார்கள் என்னும் சூட்சுமத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.





அவன் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன?


ட்ரெயினில் ரிசர்வ்டு சீட்டில் ஏறி அமர்கிறான். ஓட்டல், கட்டிடக் கூலி, சூப்பர் மார்க்கெட், நூற்பாலை என எங்கும் அவன் தான் வேலை செய்கிறான். குற்றச் செயல் செய்கிறான்.


சாதா டிக்கெட் எடுத்துட்டு ரிசர்வ்டு சீட்டில் பயணிப்பது சட்டபடி குற்றம் தான். ஆனால் அவனைக் குற்றம் சொல்லும் நம்மில் எத்தனை பேர் வரி கட்டி, லஞ்சம் கொடுக்காமல், சாலை விதிகளை மதித்து, ஏமாற்றாமல் வாழ்கிறோம் என மன்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இது எல்லாவுமே கூடக் குற்றங்கள் தான் சார். அவன் டிக்கெட் எடுக்காம வாரத விட இதெல்லாம் சட்டப்படி மிகப்பெரிய குற்றங்கள். அடுத்தது வேலைவாய்ப்பு. நீங்கள் செய்யாத/செய்ய அதிகம் கூலி கேட்கும் வேலைகளை அவன் செய்கிறான். இதில் என்ன தவறு? வேலை வாய்ப்பு என்பது demand vs supply சார்ந்தது தானே? இரண்டு கடைகள் அருகருகில் உள்ளன. ஒன்று தமிழனது, மற்றொன்று வடமாநிலத்தவரது. நம்மாள் அதிக விலை, நல்ல கஸ்டமர் சர்வீஸ் இல்லை, ஞாயிறு லீவு என இருக்கிறார். அந்த ஹிந்திவாலா கம்மி விலை, நல்ல சேவை & அனைத்து நாட்களிலும் வியாபாரம் என இருக்கிறான். நாம் யாரிடம் பொருள் வாங்குவோம்? அதையே தான் இன்றைய ஓட்டல், கட்டுமான & ஜவுளி முதலாளிகள் செய்கிறார்கள். அடுத்தது குற்றச் செயல்கள். குற்றச் செயல்களை எல்லாம் இனம், மொழி, ஜாதி, மதம் வைத்துப் பார்ப்பதே அபத்தம். அப்படியெல்லாம் பார்த்தால் குண்டு வைப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான். தமிழக ஜெயில்களில் இருப்பதெல்லாம் சில குறிப்பிட்ட ஜாதிப்பிரிவினர் தான். குற்றச் செயல்களைக் குற்றங்களாகப் பார்க்காமல், செய்தவனின் ஜாதி, மத, இன, மொழியை நோண்டுவதைப் போன்ற அசிங்கம் எதுவுமில்லை.


சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் 'இந்தியர்களை வெளியேற்றுவேன்' என பகிரங்கமாகச் சொல்லியே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் ஓட்டுக் கேட்டார். ஏனென்றால் இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கனை விடக் கம்மிக் கூலிக்கு கம்ப்யூட்டரில் கோட் எழுதத் தயாராய் இருந்தோம். அமெரிக்கனைப் பொருத்தவரை அது கம்மிக் கூலி. ஆனால் நம்மாள் அதே கம்மிக் கூலியைக் கொண்டு இங்கு இந்தியாவில் என்னென்ன வசதிகளோடு குடும்பத்தை முன்னேற்றினான் என்பதையெல்லாம் கடந்த 20,30 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு தானே வருகிறோம்? 




நாம் அமெரிக்கா போய் அமெரிக்கனின் கம்பெனியில் வேலை செய்தால் முன்னேற்றம், ஃபாரின் ரிட்டன், ஆன் சைட் ஆஃபர். வளைகுடாவிலும் சிங்கப்பூர் மலேஷியாவிலும் கட்டிட வேலை, ஓட்டல் சர்வர் வேலை, கூலி வேலை செய்வது பெருமை. அதையே வட மாநிலத்தவன் இங்கு செய்தால் அசிங்கம். அப்படித் தானே? நாம் வட மாநிலத்தவனைப் பார்ப்பது போல் தானே, அமெரிக்கனும் ஐரோப்பியனும் நம்மைப் பார்க்கிறான்? நமக்கு ஒரு வடக்கன் மாதிரி, மேற்கத்தியனுக்கு நாம் ஒரு colored தானே? ஒரு இடைநிலை ஜாதிக்காரன் பட்டியலினத்தவரை நடத்துவது போன்ற ஆதிக்கத் திமிரில் தானே நாம் வடமாநிலத்தவரை நடத்துகிறோம்? பின்ன 'தமிழன்னா படிச்சவன்', 'தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலம்' போன்ற வெற்றுப் பெருமைகளினால் துளிப் பிரயோஜனம் இல்லை.


"எங்கள் மத நூலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டதைத் தான் இப்போது கண்டுபிடிக்கிறார்கள்" என விமானம் முதல் அணு ஆயுதம் வரை எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நடந்தாலும் புலங்காகிதப்படும் கும்பல் நம் நாட்டில் உண்டு. அவர்களை நாம் சங்கிகள் என நக்கலாகக் கூறுகிறோம். புத்தர், மஹாவீரர் என அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மதத்தை ஒரு மதமே இல்லை என ஏசுகிறோம். பூமியில் இருந்து எந்தச் சிலையை எடுத்தாலும் அதைக் கடவுள் எனச் சொல்லும் அவன் ஒரு காட்டுமிராண்டி நமக்கு. இத்தனையும் செய்யும் நாம் தமிழனுக்கு மதமே இல்லை, தமிழ் தான் மூத்த குடி, மொழிகளுக்கெல்லாம் தாய் எனப் பெருமையும் படுகிறோம். அதையே அவன் செய்தால் சங்கி. நாம் அப்போ என்ன மொழிச்சங்கியா?? 


மொழிப் பெருமை பேசும் நம்மில் எத்தனை பேருக்குத் தமிழ் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும்? நாம் பேசும், எழுதும் தமிழுக்கும் அந்தக் கல்வெட்டுக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா சொல்லுங்கள்? அட அதை விடுங்கள், 60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் செய்தித் தாளைப் படிக்க முடியுமா இன்றைய இளைஞர்களால்? பின்ன என்னங்க தமிழ், தமிழன்னு பெருமை? சாதிப் பெருமை, மதவெறி மாதிரி இதுவும் ஒரு வகை வறட்டுப் பிடிவாதம் தானே? அதைத் தாண்டி இந்தப் பெருமையால் நீங்கள் முன்னேறினீர்களா அல்லது உங்கள் மொழி தான் முன்னேறியுள்ளதா? மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதியைத் தவிர ஒருத்தனும் முன்னேறவில்லை என்பதே நிஜம்.


சாதி, மதம் மட்டுமே பிரிவினை அல்ல. இனமும் மொழியும் கூடப் பிரிவினை தான். ஒருத்தனைச் சாதி, மதம் பார்த்து ஒதுக்கினால் மட்டுமே எனக்குள் இருக்கும் புரட்சிக்காரன் பொங்கி எழுவான்; அதுவே மொழி&இனம் பார்த்து ஒருத்தனை ஒதுக்கினால், எனக்குள் இருக்கும் புரட்சிக்காரன் படுத்துறங்கிவிடுவான் என்பது என்ன ஞாயம்? இதென்ன புதுவகையான புரட்சிப் பிரிவினைவாதமா? மனிதம் என்பதற்கு மொழி & இனம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிரிவினைவாதம் எந்த வகையில் பேசினாலும் அது மனிதத்திற்கு இழுக்கு தானே? தமிழன் என்பதற்காக ஒருத்தன் பேசும் பிரிவினைவாதத்தைக் கை கொட்டி ரசித்தால், "என் சாதி", "என் மதம்" எனப் பிறர் பிரிவினைவாதம் பேசுவதைத் தட்டிக் கேட்க நமக்கு என்ன அருகதை உள்ளது சொல்லுங்கள்.




ஒரு கொள்ளை வழக்கில் சந்தேகப்படும் நபர் வடமாநிலத்தவர் என்பதற்காக மூச்சுக்கு முன்னூறு தரம், அவனை இனத்தால் பொதுமைப்படுத்தி, வடக்கன் வடக்கன் எனச் சொல்வது உங்களுக்குச் சரியெனப் படுகிறதா? சரி, அப்படியானால் அவன் பிடிபட்ட பின், அவனுடைய பெயர் ஒரு இஸ்லாமியப் பெயராக இருக்கும் சூழலில் ஏன் எந்த பொதுப் பெயரும் வைத்து அழைக்கவில்லை? அட வட மாநிலத்தவர் என்று கூட இப்போது அவர்களைச் செய்திச் சேனல்கள் சொல்வதில்லை. ஜஸ்ட், "முக்கியக் குற்றவாளி கைது" என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மதத்தால் பிரிவினை பேசுவது தப்பு எனத் தெரிந்திருக்கும் மீடியாவிற்கு இனத்தால் பிரிவினைவாதம் பேசுவது மட்டும் சரியாகப் படுகிறது போல.


தமிழர்கள் இது போன்ற ஆதிக்க சாதி மனோபாவத்தில் இருந்து வெளிவர வேண்டும். இல்லையென்றால் மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் ஆயுதங்களாக்கி விடுவார்கள் நம்மை. நமக்கு மேலும் எவனும் இல்லை, கீழும் எவனும் இல்லை என்பதை உணர்ந்து மனிதனாக நடக்க முயற்சிப்போம். பெருமை என்பது நாம் பிறந்த ஜாதியிலோ, பின்பற்றும் மதத்திலோ, பேசும் மொழியிலோ, வாழும் இனத்திலோ இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது.





'அமெரிக்கர் வேலை அமெரிக்கருக்கே. இங்கிருக்கும் இந்தியர்களை விரட்டிவிடுவோம்' எனப் பேசி ஓட்டு கேட்ட அந்த ஜனாதிபதி வேட்பாளர் உலக அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட்டார். உள்நாட்டில் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். சமூக வலைதத்தில் அவரை ஒரு காமெடிப் பீஸாக்கினார்கள். தமிழர்களுக்கும் அதே அளவு பக்குவம் வர வாழ்த்துகள்.

3 comments

  1. Oru interview la Rangaraj pandey solliruparu vetrumaiyil otrumai nu sollikuduthnga aana ipo vetrumai mattum than solluranga otrumai enga solluranga nu.. im working in a company that is running in Bangalore.. if we think like this, we can not work any where 😔

    ReplyDelete
    Replies
    1. அதுவே தான். நாம் பிழைப்புக்காக வெளியூர் போனால் முன்னேற்றம். அதுவே இன்னொருத்தன் நம்மூருக்கு வந்தால் அவனை வந்தேறி, திருடன், வடக்கன்ஸ் என்றெல்லாம் அசிங்கப்படுத்துவோம். என்ன ஒரு pervert மனநிலை இது?!

      Delete
  2. Super. Well said

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One