எங்கள் உறவினர் ஒருவரின் பையன் இருந்தான். என் வயது தான் அவனுக்கும்.. அவன் கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஒன்னாங்கிளாஸில் இருந்தே முதல் ரேன்க் எடுத்துப்பழகிவிட்டான்.. வீட்டிலும் எப்போதும் படி, ஒப்பி, எழுது என்று ஒரே டார்ச்சராக இருக்கும்.. அவனும் ஸ்விட்ச் போட்ட வாஷிங் மெஷின் போல் இங்கிட்டு அங்கிட்டும் புத்தகத்தை புரட்டி படித்து, ஒப்பித்து, எழுதிக்கொண்டிருப்பான்.. ஒரு முறை கூட ‘படிக்க மாட்டேன்’ என்று எங்களை போல் முரண்டு பிடித்ததில்லை. விடுமுறை நாட்களில் நாங்கள் எல்லாம் விளையாண்டுகொண்டிருப்போம் ஜாலியாக.. அவன் விளையாட வர மாட்டான்.. கேட்டால், “எங்க அம்மா இந்த ஏழாவது லெஸ்ஸன ஒப்பிச்சிட்டு போய் தான் வெளாடணும்னு சொல்லிருக்காங்க”னு சோகமாக சொல்வான். அவன் ஏழாவது லெஸ்ஸனை ஒப்பித்துவிட்டு வரும் போது இரவு ஆகியிருக்கும்.. நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு திரும்பியிருப்போம்.. அவன் தனியாக ஏதாவதாவது விளையாடலாம் என நினைக்கும் போது அவன் அப்பா வந்துவிடுவார். காலையில் இருந்து அவன் அம்மா செய்த டார்ச்சர்களை இப்போது அப்பா செய்வார். அவனுடைய ஒவ்வொரு விடுமுறையிலும் இப்படித்தான்.. இப்படியே இருந்ததால் எங்களால் அவனை எங்கள் செட்டில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அவனும் எங்களோடு எல்லாம் பேச மாட்டான். எங்களைப்போல் கிண்டலாக பேச வராது அவனுக்கு. எப்போதும் புத்தகம் தான்..
எங்கள் அம்மா, அப்பாவும் அவர்கள் வீட்டில் சொல்வார்கள், அவனை கொஞ்ச நேரமாவது விளையாட அனுப்பச்சொல்லி.. அவர்கள் வீட்டில் மறுத்துவிடுவார்கள்.. “உலகத்துல போட்டி ஜாஸ்தியாயிருச்சி.. எதிலயும் ஃபர்ஸ்ட்டா இருந்தா தான் மதிப்பு” என்பார் அவங்க அப்பா.. “என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குனா தான சொந்தக்காரங்க மத்தியில பெருமையா இருக்கும்?” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு?’னு அந்த கொஸ்டின் பேப்பரை தூர வீசிவிடுவோம்.. இவன் வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் அவன் எழுதிய பதில்களை எல்லாம் சொல்ல வேண்டும். அவர் புக்கை வைத்து செக் பண்ணிக்கொண்டிருப்பார்.. எல்லாம் சரி என்கிற திருப்தி வந்தவுடன் தான் அவன் அடுத்த தேர்வுக்கே படிக்க முடியும்.
இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில் அவன் பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்துவிட்டான்.. நாங்கள் எல்லாம் அவனை பெருமையாக பார்த்தோம்.. உறவினர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள்.. அவன் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான்? போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான? ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான? அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா? அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்? அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும்? இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா? ஹ்ம் அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பிள்ளைகளோட பெத்தவுக எல்லாம் புண்ணியம் பண்ணுனவுகளா இருக்கும்” இப்படி புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.. அவன் எடுத்த மார்க் 489!!!
ஊர் உலகமே அவன் எடுத்த மார்க்கை கொண்டாடும் போது பெற்றவர்கள் அவனை தூற்றிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் ஆசை எல்லாம் பிள்ளையை வைத்து தாங்கள் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டதே என்கிற கடுப்பு. சொந்தக்காரர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தம்பட்டம் அடித்தாகிவிட்டது தன் பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான் அப்படி இப்படி என.. இப்போது அது இல்லையென்றதும் அந்தப்பையன் எடுத்த நல்ல மதிப்பெண் கூட அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த இரண்டு வருடம் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான். ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் நேரம் அவன் பெற்றோர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர் ஒவ்வொரு வீட்டிலும் ‘எம்பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவியான் பாரு’ என்று.. ரிசல்ட் வந்தது.. அவன் பள்ளி முதலிடம் கூட வாங்கவில்லை.
பின் என்ன? வழக்கம் போல் அவனை வீட்டில் கரித்துகொட்டி, அவனது தன்னம்பிக்கையை சிதைத்து, ‘நீ எதற்கும் லாயக்கு இல்லை’ என்கிற முத்திரையை சில வருடங்கள் அவன் மீது குத்தி, வசை மொழியை பல காலம் சொல்லி, சொந்த பந்தங்களை கொஞ்ச நாட்களுக்கு அண்டாமல் இருந்தார்கள்.. இப்போது அவன் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வெளிநாட்டில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்கிறான் என்பது வேறு விசயம். ஆனால் அவன் இழந்த அந்த குழந்தைப்பருவ சந்தோசம், தெருக்கிரிக்கெட், கரண்ட் போன இரவின் ஒழிஞ்ச விளையாட்டு, விடலை வயதில் தவற விட்ட செக்ஸ் ஜோக்ஸ், சினிமா அரட்டை, முதல் காதல் இதெல்லாம் திரும்ப வருமா அவனுக்கு? அவனோடு சுமாராக படித்த நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம் இப்போது. அவன் பெற்றோர்கள் இப்போது எங்களை பொறாமையாக பார்க்கிறார்கள், அவர்கள் பையனை விட நாங்கள் ஜாலியாக, அறிவு கூர்மையானவர்களாக இருக்கிறோம் என்று.. இதான் வாழ்க்கை..
இந்த பத்திரிகை டிவிக்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பத்து, ப்ளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஃபோட்டொ பிடித்து, பேட்டி எடுத்து போடுகிறார்களே, அவர்கள் எல்லாம் ஒரு 5,6 வருடம் கழித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஏன் எந்த பத்திரிகையும், டிவியும் பேட்டி எடுப்பதில்லை? சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே?.. இதைத்தானே ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்காத நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்?
ஆனால் பெற்றவர்களுக்கு ஏன் இந்த விசயங்கள் புரியவில்லை? புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்குறியான்?” என ஆச்சரியப்படுவான்.. ஆனால் அவனுக்கு முழுதாக அங்கீகாரம் கிடைக்க வேண்டிய வீட்டில், அவன் நூறு மார்க்கை தவற விட்டதற்கு வசவு விழும். அந்த குழந்தை இதனால் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவான் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பரிட்சையில் பாஸானதற்கே மிட்டாய் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் மாணவர்கள், ஆனால் இவனோ 99 தானே எடுத்திருக்கிறோம், எப்படி வீட்டுக்கு செல்வது என பயந்து கொண்டிருப்பான்.
அவனால் அதன் பின் வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட தாங்கிக்கொள்ள முடியாது.. மனதைரியம் சுத்தமாகப்போய் விடும். எதைப்பார்த்தாலும் பயமாக இருக்கும். ஒரு வித வெறுமையும் வெறுப்பும் மனதை நிறைத்துவிடும். நூறு மார்க் எடுத்தால் அதைக்கூட கொண்டாடாமல் “ஏன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கவில்லை?” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது? இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா? ஒரு வேளை எடுக்காவிட்டாலும், அடுத்த முறை எப்படி எடுப்பது என ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும். பாராட்டாமல் ஏசிக்கொண்டே இருந்தால், அது ஒவ்வொரு முறை மார்க் குறையும் போதும் படிப்பின் மீது எரிச்சல் தான் வரும். ஒரு நிலையில் அந்த எரிச்சல் படிப்பையே மொத்தமாக தூக்கி வீசிவிட வைத்துவிடும்.. அப்படி ஒரு உதாரணம் தான் கீழே கொடுக்கப்பட்டிருப்பது...
(கீழிருக்கும் உதாரணத்தின் உண்மைத்தன்மை சரிவரத் தெரியாததால் அது நீக்கப்படுகிறது.. உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்..)
(கீழிருக்கும் உதாரணத்தின் உண்மைத்தன்மை சரிவரத் தெரியாததால் அது நீக்கப்படுகிறது.. உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்..)
.................................................................................................................. படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வேறு எதையோ நாடிச்செல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருக்கிறான் என்றால் அவன் மக்கு பையானாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்று படிப்பால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று, அன்பு, பாசம் எல்லாம் கிடைக்காதா என ஏங்கிப்போன பையனாக கூட இருக்கலாம்..
இவ்வளவு நேரம் பெற்றவர்களுக்கு சொல்லியாகிவிட்டது. இப்போது மாணவர்களுக்கு.. இவ்வளவு பேசுவதனால் நான் ஏதோ மதிபெண்ணிற்கு எதிரி, மதிப்பெண்ணே கூடாது என்று சொல்கிறவன் அல்ல.. ப்ளஸ் ஒன்னில் முதல் குரூப் படிக்க ஆசை என்றால் அதற்கென்று இருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுக்க படித்துத்தான் ஆக வேண்டும். அந்த அக்கறை அம்மா, அப்பா என யாரும் சொல்லி வர வேண்டியதில்லை. அண்ணா பல்கலையில் சீட் வேண்டும் என்றால் அதற்கும் அப்படித்தான்.. IITக்கு ஆசை என்றாலும் அதே.. ஒரு வேளை உங்கள் ஆசை நிறைவேறவில்லை என்றால் மீண்டும் முயலுங்கள். அல்லது கிடைத்த மதிப்பெண்ணிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டாக சொல்வார், “பெண் கிடைக்க வேண்டுமானால், நான்கு இலக்க ப்ளஸ் டூ மார்க்கும், ஐந்து இலக்க சம்பளமும் இருக்க வேண்டும்” என.. உண்மை தான், உங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். படிக்கும் போது மார்க், ரேன்க், வேலைக்கு சென்ற பின் சம்பளம், கல்யாணம் ஆகும் போது பவுன் கணக்கு, குடும்பம், பிள்ளைகள் என ஆன பின் வீட்டில் இருக்கும் ஏசி, கார், பைக், வீடு என அனைத்தும் எத்தனை இருக்கின்றன என்கிற கணக்கு. இந்த கணக்குகள் எல்லாம் முதலில் உங்களை திருப்திப்படுத்த வேண்டும். இந்த போட்டி மிகுந்த உலகில், நம்பர்களை வைத்து உங்களை மதிப்பிடும் இந்த உலகில் நீங்கள் உங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் உங்கள் வருங்கால வாழ்க்கை உங்களுக்காவது திருப்திகரமாய் அமைய என்ன செய்ய வேண்டும் என இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டாக சொல்வார், “பெண் கிடைக்க வேண்டுமானால், நான்கு இலக்க ப்ளஸ் டூ மார்க்கும், ஐந்து இலக்க சம்பளமும் இருக்க வேண்டும்” என.. உண்மை தான், உங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். படிக்கும் போது மார்க், ரேன்க், வேலைக்கு சென்ற பின் சம்பளம், கல்யாணம் ஆகும் போது பவுன் கணக்கு, குடும்பம், பிள்ளைகள் என ஆன பின் வீட்டில் இருக்கும் ஏசி, கார், பைக், வீடு என அனைத்தும் எத்தனை இருக்கின்றன என்கிற கணக்கு. இந்த கணக்குகள் எல்லாம் முதலில் உங்களை திருப்திப்படுத்த வேண்டும். இந்த போட்டி மிகுந்த உலகில், நம்பர்களை வைத்து உங்களை மதிப்பிடும் இந்த உலகில் நீங்கள் உங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் உங்கள் வருங்கால வாழ்க்கை உங்களுக்காவது திருப்திகரமாய் அமைய என்ன செய்ய வேண்டும் என இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சரி இப்போது மீண்டும் பெற்றவர்களுக்கு. உங்கள் கனவை, கௌரவத்தை எல்லாம் சுமக்கும் அளவிற்கு பிள்ளைகளுக்கு சக்தி போதாது. நீங்கள் உறவினர்களிடம் அவனை டாக்டர் ஆக்கிக்காட்டுகிறேன் என்று சொன்னதற்காக, ஒரு பையனை அந்த குழந்தைப்பருவத்தின் எந்த வித அனுபவத்தை பெற விடாமல் தடுப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது? உறவினர்களிடம் பெருமை பீற்றுவதற்காகவும், ஒரு நாள் மீடியா வெளிச்சத்திற்காகவும் பிள்ளைகளை மனப்பாடம் செய்து கக்கும் ஒரு மிஷின் போல மாற்றாதீர்கள். காசு இருக்கும் எல்லோரும் இப்போது பி.ஈ. படிக்கலாம், மருத்துவம் படிக்கலாம்.. ஆனால் அந்த துறையில் எப்படி முன்னேறுவது என்பதற்கு அவனுக்கு பகுத்தறிவும், practical updationம், பாடப்புத்தகத்தை தாண்டிய பரந்த சிந்திக்கும் திறனும் வேண்டும். இதை புத்தகம் சொல்லிக்கொடுக்காது. படிப்பிற்கு மதிப்பு குறைந்து எல்லாமே பணம் என்று ஆகிப்போன உலகில் எப்படி பிழைப்பது என்கிற practicalityஐ அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அவனுக்கு எல்லைக்குட்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அது தான் நீங்கள் அவன் வாழ்க்கைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல விசயம்.
தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து தான் திருபாய் அம்பானி கூட முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் வளர்த்திருப்பார்.. ஆனால் அதே நினைப்பில் தான் இன்று அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. அதனால் தன் பிள்ளைகளை ஃபெர்ஃபெக்ட் ஆக்க துடிக்கின்றனர். ரேன்க் எடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என நம்புகின்றனர்.. ரேன்க் எடுக்காவிட்டாலும் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது.. இந்த உலகில் நாம் பார்த்து பிரமிக்கும், ஆச்சரியப்படும் எல்லோரும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தவர்கள் அல்ல, தினமும் ஆசையாக கண்ணாடியில் பார்க்கும் நாம் உட்பட.. 8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. நம் பிள்ளை அந்த எட்டு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் பிள்ளை நமக்கு ஸ்பெசல் தான். முதலாவதாக வரும் பிள்ளை தான் எனக்கு வேண்டும் என்றால் நீங்கள் பெற்றோரே அல்ல.. உங்கள் பிள்ளைக்கு இருக்கும் திறமைக்கு, அது வாழ்வில் முன்னேற சரியான அடிப்படையை அமைத்து கொடுத்தால் தான் நீங்கள் சிறந்த பெற்றோர். அப்படிப்பட்ட சிறந்த பெற்றோருக்கு கண்டிப்பாக சிறந்த பிள்ளைகள் அமையும்.. சிறந்த பிள்ளைகள் என நான் சொல்வது ரேன்க்கை மட்டும் வைத்து அல்ல, என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..
வணக்கம் இராம்குமார் (அண்ணே )
ReplyDeleteஅவசியமாய் இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு பதிவு ...(தேர்வு முடிவு வரும் நேரத்தில் கூட மறுக்கா பேஸ் புக்கில் போடலாம்னு நெனைக்கிறேன்) மதிப்பெண் மட்டும் வாழ்வு இல்லை என்பதை உணர்த்துகிறது .. ஆனா தேவையற்ற வீண் பேராசைக்கு பசங்களின் மன அழுத்தம் தான் கூடுகிறது ... கூண்டுக்கிளி போல் தான் இருக்கிறார்கள் ..
உண்மை நண்பா... நீங்க நான் எல்லாம் என்ன நாசமாவா போயிட்டோம்? ப்ளடி
Deleteஉங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம்.
ReplyDelete>>>
நிஜம்தான் சகோ! என் மகள் 12ல ஃபெயில் ஆனா, நான் அவளை விமான பணிப்பெண் பயிற்சிக்கு அனுப்பி இப்ப அவள் லுதான்சா என்ற வெள்நாட்டு ஏர்லைன்ஸ்ல 42 ஆயிரம் சம்பளம் வாங்குறா. ஆனா, ப்ளச் டூவில் இவளோடு படிச்சு பாஸ் செஞ்சு 18 அரியரோடு இஞ்சினியரிங் படிக்குற பொண்ணைப் பார்த்து என் அம்மா என் மகளை திட்டிக்கு இருப்பாங்க, 12 பாஸ் பண்ண துப்பில்லன்னு:-(
கணேஸ்ஹ் அண்ணாக்கூட ஊர் சுத்திய சிவகாசிக்காரன் நீங்கதானா!? உங்களை இத்தனை நாள் எப்படி கவனிக்காம போனேன்!?
ReplyDeleteஉங்கள் அம்மா சொல்வதில் தவறும் இல்லை.. பாஸ் ஆகும் அளவிற்காவது படிக்க வேண்டுமே? ஆனால் ஃபெயில் ஆனதை நினைத்து ஓய்ந்து போய் விடாமல், முயற்சி செய்து இன்று ஒரு லெவலில் இருக்கும் உங்கள் பெண் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான்..
Deleteஹ்ம் ஆமா ஊர் சுத்துன அந்த செவாசிக்காரேன் நாந்தேன்...
குழந்தைகள் தங்கமோ பிலாஸ்டிக்கோ அல்ல, உருக்கி ஊற்றினால் வடிவம் பெறுவதற்கு... என் உடன் படித்த ஒன்றுமே படிக்கத் தெரியாத மக்கு தற்போது ஊரில் பெரிய பிசினஸ்மேன்... படிப்பு தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்பதற்கான மாற்றுக்கருத்தே இந்தப்பதிவு... அவரவர் அவரவர் விருப்பப்படி வளரட்டும்...
ReplyDelete/// யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. ///
ReplyDeleteஇது ஒன்றே போதாதா...? வேறு என்னத்த சொல்ல..!?
அசத்தல்.... நாட்டுக்கு தேவையான ஒரு பதிவு.. இதை தினசரிகளிலோ, அல்லது மாத இதழ்களின் மூலமாகவோ, பெற்றோரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete//8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. // மிக சரியான கருத்து நண்பா.. ஆமா இது கடந்தவார ஆனந்த விகடனில் நீங்கள் எழுதிய கட்டுரையா :-)
ReplyDeleteகுசும்பு? பிச்சு பிச்சு...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?
நன்றி அண்ணே :)
Delete>>ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான்.<<
ReplyDeleteஎன்னை அழுதுகொண்டே சிரிக்கவைத்தது!
நல்ல பதிவு..
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்தேன்..
சமூகம் ஒரு செம்மறியாட்டுக் கூட்டம் ...
Hi Ram,
ReplyDeleteExcellent article. But the one who got state first, Mr. A.C. Arun is married to his lady love who is also a doctor and he is doing MD. I think what you wrote here is just a rumor. Rest all extremely well written..
I removed that content da..
Deleteஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ராம்குமார்.
Parents kavalai patradha vita ipa students dhan athikam kavalaipatrainka engineering &medical cutoff poitey .....
ReplyDeleteState vainkanavainkala perusa onnu sathikala antha oru nal mass avainkaluku avlothan.10 th state 1st vainkanavainkalum nainka padikra athey dappa clg la padikraka
மிகச் சிறப்பான கட்டுரை ராம்குமார்..... பல பெற்றோர்கள் குழந்தைப் பருவத்தின் குதூகலத்தினையே தங்களது குழந்தைகள் அனுபவிக்க விடாது செய்து விடுகிறார்கள்......
ReplyDelete