காலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ்புக்குல ரத்தமெல்லாம் கொதிக்க கொதிக்க கண்டினியூ பண்ணுறாய்ங்க.. என்னது? எதப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? அட அது தான் நம்ம தேசத்தொழில் பத்தித்தான் பேசுறேன்.. ஹ்ம் ஆமா, புரணி பேசுறது தான் அது.. அது தானே நம்ம தேசத்தொழில்? ஏன் இப்படி காலை முதல் மாலை வரை அதையே சீரும் சிறப்புமாக செய்கிறார்கள் என்று கேட்டால், ‘புரட்சி பண்ணுறோம்’னு சுய விளக்கம் என்னும் பெயரில் வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள். எனக்கு ஃபேஸ்புக் வந்த புதிதில் இவர்கள் பேசும் புரட்சி எல்லாம் மிகவும் புல்லரிக்க வைத்தன.. “ப்ப்ப்ப்ப்ப்ப்பா இப்படியெல்லாம் நாட்டில் புரட்சிக்காரர்கள் இருப்பார்களா?” என நைட்டு முழுக்க தூங்காமல் புரண்டு புரண்டு அவர்களை நினைத்து வியந்திருக்கிறேன்.. ஆனால் அந்தப்புரட்சி எல்லாம் அவர்களின் ஃபேஸ்புக் சுவரை தாண்டி வேறு எங்கும் ஒலிப்பதில்லை என்ற நிதர்சனம் புரியும் போது ‘ச்செய்’ என்று ஆகிவிட்டது..
காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை பஞ்சாயத்து செய்வது தான் இவர்கள் வேலை.. பஞ்சாயத்து என்றால், அவனவன் சொந்த குடும்ப பஞ்சாயத்தா? இல்லை இல்லை.. எல்லாமே ஸ்டேட் லெவல், நேசனல் லெவல், இண்டர்நேசனல் லெவல் பஞ்சாயத்துக்கள்.. இதில் என்ன காமெடி என்றால் இவர்கள் செய்யும் பஞ்சாயத்து எல்லாம் அந்த ஸ்டேட், நேசனல், இண்டர்நேசனல் ஆட்களுக்கு சுத்தமாக தெரியாது.. அவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அதை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் நம் பஞ்சாயத்து பார்டிகள் அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், தங்கள் அறிவுரைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள்.. அரசியல், சினிமா, பொருளாதாரம், விளையாட்டு, ஜாதி, மதம், சுற்றுச்சூழல் என இவர்கள் பஞ்சாயத்து பண்ணாதே ஏரியாவே இல்லை.. ஆஃபிஸில் பாஸ் கொடுத்திருக்கும் தங்கள் சொந்த வேலையை கூட உருப்படியாக செய்ய தெரியாத இவர்கள் ஊரில் அடுத்தவன் வேலைக்கு அட்வைஸ் செய்வார்கள். இந்த பதிவு அப்படி பஞ்சாயத்து செய்யும் ஆட்களை நோக்கி சில கேள்விகளை எழுப்பவிருக்கிறது... (நானும் ஒரு சில பஞ்சாயத்துக்களில் வாலண்டியராக நுழைந்திருப்பதால், ஒரு சில கேள்விகள் என் டவுசரையும் கழட்டும் :-P).. கேள்விகளுக்கான விடையை நான் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.. அந்த கேள்விகளை ஒவ்வொருவரும் தன்னைப்பார்த்து கேட்டுக்கொண்டு தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் சொன்னாலே போதும்..
முதலில் அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் வைத்து பஞ்சாயத்து நடத்துபவர்களுக்கான கேள்விகள்..
1. அரசியல்வாதியும் ஆட்சியாளரும் தப்பு செய்கிறான் என்றால் அதற்கு காரணம் நாம் தானே? அவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தது யார்? கெட்டவனை தேர்ந்தெடுத்து விட்டு, ‘அவன் ஒன்றுமே செய்யவில்லை’ என்று கதறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒருவனை நல்லவனா கெட்டவனா என்று மட்டும் பார்க்காமல், அவன் ஜாதி, குலப்பெருமை, கட்சி இதெல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்பது நம் தவறு தானே?
2. அவர்களை குறை கூறும் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக ஓட்டு போட்டிருப்போம்? தேர்தல் நாளை ஏதோ ஞாயிறு அல்லது பண்டிகை நாள் போல் வீட்டில் நான்- வெஜ் சாப்பிட்டு பொழுதை கழிக்க பயன்படுத்தும் நமக்கு அவர்களை குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?
3. என்ன? யாரும் சரி இல்லாததால் ஓட்டு போடவில்லையா? சரி, யாரும் உருப்படி இல்ல தான்.. அத சொல்றதுக்கு தான் வாக்குச்சாவடில 49'O' இருக்கே? அதை நம்மில் எத்தனை பேர் கேட்டிருப்போம்? பொதுவாக அதை நாம் கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள்.. அந்த சூழலில் எத்தனை பேர் சண்டை போட்டிருப்போம்? தியேட்டர்ல டிக்கெட் வாங்குற வரிசையில நம்மள தாண்டி ஒருத்தன் குறுக்கே வந்து வரிசையில் நிற்கும் போது வரும் கோபத்தில் கொஞ்சம் கூட 49'O' பாரம் இல்லாத போது வருவதில்லையே?
4. சரி, இது எதுவுமே பண்ணல.. ஒருத்தன் எம்.பி.யாவோ, எம்.எல்.ஏ.வாவோ தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து வருசம் நமக்கு ஒன்னுமே செய்யலைனு வச்சுக்குவோம்.. அடுத்த தேர்தலில் அதே ஆள் நிற்கும் போது, கட்சி, ஜாதி, மதம் இதையெல்லாம் பார்த்து அவனுக்கே மறுபடியும் ஓட்டுப்போடுகிறோமே? இதை விட பெரிய அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாதே? இப்படி செய்து விட்டு அரசியல்வாதியை குறை சொல்லி, நாட்டின் அக்கறையில் நமக்கு பங்கு இருக்கிறது என காட்டுவது அருவெறுப்பாக இல்லையா?
அரசியல்வாதிகளுக்குப்பிறகு நம் மக்கள் அதிகம் கேள்வி கேட்பது லஞ்சம், ஊழல் பற்றித்தான்.. சரி அவர்களுக்கும் ஒரு சில கேள்விகள்..
1. சின்ன வயதில் நம் வீட்டுப்பிள்ளைகளை கடைக்கு போகச்சொல்கிறோம்.. அல்லது வேறு ஏதாவது சிறு வேலை சொல்கிறோம்.. பையன் ‘முடியாது’ என்கிறான். உடனே அவன் கையில் எட்டணவோ, ஒரு ரூபாயோ கொடுத்து, “ஒனக்கு ஒரு சாக்லேட் வாங்கிட்டு, அப்டியே ரெண்டு தேங்கா சில்லு வாங்கிட்டு வந்திருப்பா” என்று பிஞ்சிலேயே லஞ்சத்தை கற்றுக்கொடுப்பது யார்?
2. அரசு ஊழியர் லஞ்சம் பெறுகிறார்.. உண்மை தான்.. நாம் தான் லஞ்சத்திற்கு எதிராக பொங்குகிறோமே.. எங்கே மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, “நாங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டோம்” என்று இருக்க வேண்டியது தானே? டீக்கடையிலும் ஃபேஸ்புக்கிலும் லஞ்சத்தை பற்றியும் அரசு ஊழியர்களைப்பற்றியும் கிழித்துவிட்டு, மறுநாளே தாசில்தார் அலுவலகத்தில் அம்பதோ நூறோ கொடுத்து தன் காரியத்தை சாதித்திக்கொள்பவர் நம்மில் எத்தனை பேர் என்று நினைத்துப்பாருங்கள்.. நாம் யாரும் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் என்ன நம் சட்டையை பிடித்தா லஞ்சம் கேட்கப்போகிறார்கள்? லஞ்சத்தை ஆரம்பித்தது பொது மக்களாகிய நாம் தானே?
3. அரசியல்வாதி ஊழல் பண்ணுகிறான்.. ஆம், உண்மை தான்.. யார் இல்லை என்றது? உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை ஏமாற்றி சொத்தை ஆட்டையைப்போடும் நமக்கு ஊழல் பற்றிப்பேச என்ன தகுதி இருக்கிறது? நம்மை நம்பி முதல் போட்டு தொழில் தொடங்கும் நண்பனை ஏமாற்றி அவன் பணத்தை ஏப்பம் விடும் நாம் தானே மிகப்பெரிய ஊழல்வாதிகள்?
4. அரசு ஊழியர்கள் தான் ஒழுங்காக வருமான வரி கட்டுபவர்வள்.. நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக வரி கட்டியிருக்கிறோம்? பொருட்கள் வாங்கும் போது பில் போடாமல் வாங்குவது கூட தேச துரோகம் தான், பொருளாதாரத்தை அது பாதிப்பதால். சிறு தொழில் செய்யும் எத்தனை பேர் முறையாக வரி கட்டியிருக்கிறோம்?
5. வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருக்கிறோமா?
6. பெட்டிக்கடைக்காரன், ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்பானத்திற்கு 1ரூ. அதிகம் சொன்னால் சுர்ரென என்னமாய் கோவம் வருகிறது நமக்கு? ஆனால் என்றாவது ஒரு நாள், மருந்துக்கடைகளிலோ, மருத்துவமனைகளிலோ, பொறியியல், மருத்துவ கல்லூரிகளிலோ, தியேட்டரிலோ, நகராட்சி கட்டண கழிப்பறையிலோ தேவை இல்லாமல் அதிக பணம் கேட்கும் போது அந்த கோபத்தில் 1 சதவிகிதமாவது வந்திருக்கிறதா?
நம் மக்கள் அரசியல்வாதியை பற்றியோ, நாட்டின் வளர்ச்சி பற்றியோ கூட பேசாமல் இருந்துவிடுவார்கள்.. ஆனால் சினிமா பற்றி மட்டும் பேசவில்லையென்றால் இவர்களுக்கு தூக்கம் வராது..
1. நடிகர்/நடிகை பலரை காதலிப்பது பற்றி பேசும் இவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பெண்/ஒரு ஆணை தவிர வேறு யாரையும் ஏறெடுத்தே பார்க்காதவர்களா?
2. ஒரு இயக்குனர் தன் படத்தில் காதலுக்கு ஆதரவு சொல்கிறாராம்.. ஆனால் தன் மகள் காதலித்தால் அதற்கு எதிர்க்கிறாராம்.. இப்படி மேம்போக்காக சொன்னால் அவர் மீது தப்பு இருப்பது போல் தான் இருக்கும்.. ஒரே ஒரு சின்ன கேள்வி.. அந்த பையன் மீது போலீசில் 3 பெண்கள் தனித்தனியாக புகார் செய்து விசாரணை ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஒரு பையனுக்கு நம் பஞ்சாயத்து ஆட்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை கட்டிவைப்பார்களா? அடுத்தவனைப்பற்றி பேசும் முன் தான் அந்த சூழலில் இருந்தால் என்ன செய்வோம் என்று ஒரு முறையாவது யோசித்திருப்போமா?
3. ஒரு நடிகனை நடிகன் என்னும் எல்லையை தாண்டி ரசித்தது நம் தவறு தானே? ஒரு நடிகன் அவன் தொழிலை செய்கிறான்.. திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு.. அதை முதல் நாள் சட்டை கிழிய டிக்கெட் கவுண்டரில் சண்டை போட்டு டிக்கெட் எடுத்து, நம் பொழுதை கொல்லும் விதமாக மாற்றிக்கொண்டது நம் தவறா? சினிமாவின் தவறா?
இனி சில பொதுவான கேள்விகள்..
1. சுற்றுச்சூழல் பற்றியும், எங்காவது மரம் வெட்டப்பட்டால் அதை பார்த்து பொங்கியும் பேசிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வரும்? நம் அலுவலகத்தில் இருக்கும் ஏசியை நிர்வாகத்திடம் சொல்லி கழட்டி வீசிவிடலாமே? எத்தனை பேர் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது? ஏசி, ஃப்ரிட்ஜ் எல்லாம் நம் வீட்டில் இருக்கும்.. ஆனால் அப்போதெல்லாம் வராத சுற்றுச்சூழல் அக்கறை, நமக்கு அடுத்தவன் தவறு செய்யும் போது பொத்துக்கொண்டு ஏன் வர வேண்டும்? ஃப்ரிட்ஜும் ஏசியும் எவ்வளவு பெரிய சுற்றுப்புறக்கேடை உண்டு பண்ணுகின்றன என நமக்கு தெரியும் தானே?
2. அரசையும் அரசு இயந்திரத்தையும் குறை சொல்லும் நாம் முதலில் ஒரு நல்ல குடிமகனாக இருந்திருக்கொறோமா? சாலையில் போலீஸ் இல்லாவிட்டால் சர்வசாதாரணமாக ஒன் வேயில் செல்கிறோமே? சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றுகிறோமா? எல்லாவற்றையும் விடுங்கள், ஆம்புலன்சிற்கு வழிவிட வேண்டும் என்கிற சிறு அறிவு கூட இல்லாமல் இவர்கள் என்ன ஊர் ஞாயம் பேசி என்ன பிரயோஜனம்?
3. வீடு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.. நம் வீட்டை கட்டும் இன்ஜினியரில் இருந்து கடைசியில் அதை பெயிண்ட் அடித்து முடித்து வைக்கும் பெயிண்டர் வரை லஞ்சமும் ஊழலும் அதில் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்று தெரியுமா? சிமெண்ட் கடையில் இருந்து, செங்கல், பெயிண்ட், பைப், கடை வரை அவர்கள் நம் பெயரை சொல்லி லஞ்சம் வாங்காத இடமே இல்லை.. நாம் அதை கண்டுகொள்வதேயில்லையா அல்லது நம்மை சுற்றி இருக்கும் விசயங்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லையா?
4. வெளியில் பெண் சுதந்திரம் பற்றிப்பேசும் நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுப்பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்?
5. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கு முதல் ஆளாக குரல் கொடுக்கும் நம்மில் பலர் தானே சினிமாவில் நடிகைகளின் அங்கங்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம்? பெண்களின் ஆடையை வைத்து அவர்களின் ஒழுக்கத்திற்கு இலக்கணம் வகுக்கிறோம்?
6. ரேசன் அட்டையை ஒழுங்காக பயன்படுத்துவோர் நம்மில் எத்தனை பேர்?
7. வீடு, நிலம் வாங்கும் போதும் விற்கும் போதும் மிகச்சரியான விலையில் தான் பதிகிறோமா?
8. முதலில் பணத்தை நமக்கு ஒழுங்காக செலவளிக்க, சேமிக்க தெரிந்திருக்கிறதா? Disposable income அதிகமாக இருக்கும் சமூகம் உருப்படாது என்பது பொருளாதார விதி.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் சேமிக்கும் சமூகத்தில் இருந்து செலவளிக்கும் சமூகத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறோம் என்னும் சொரணை நம் மனதில் உரைக்கிறதா?
7. தேவையே இல்லையென்றாலும் ஒரு பொருளை பக்கத்து வீட்டுக்காரன் வாங்குகிறானே என்று நாமும் வாங்குவது எப்படிப்பட்ட சமூக, சுற்றுப்புற அநீதி என்று நமக்கு தெரியுமா?
8. நம்மில் எத்தனை பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ஃபோன், பைக், கார், டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி, என்று இருக்கின்றன? அவை எல்லாமே இந்த சுற்றுப்புறத்தை என்ன செய்கின்றன என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா?
9. தேவைக்கு அதிகமாக ஒருவன் வைத்திருக்கும் பொருட்கள் என்ன விதமான சமுதாய, ஒழுக்க, பொருளாதார சீர்கேடுகளை கொண்டுவரும் என்பதையாவது அறிந்து வைத்திருக்கொறோமா?
10. குப்பைகளை நாம் ஒழுங்காக கொட்டுகிறோமா? ரோட்டில் நாம் வீசும் குப்பைகள் தானே அதிகம்?
11. எல்லாவற்றையும் விட, சமூகம் என்பது நம்மையும் சேர்த்துத்தான் என்பதை நாம் பிறரை குறை சொல்லும் போது என்றாவது உணர்ந்திருக்கொறோமா?
11. எல்லாவற்றையும் விட, சமூகம் என்பது நம்மையும் சேர்த்துத்தான் என்பதை நாம் பிறரை குறை சொல்லும் போது என்றாவது உணர்ந்திருக்கொறோமா?
நான் இத்தனை கேள்விகள் கேட்டிருப்பது யாரோ ஒருவருக்காக அல்ல.. இதில் இருக்கும் பல கேள்விகள் நானே என்னை அடிக்கடி கேட்டுக்கொள்வது தான்.. ஆனால் கேள்வி தோன்றும் அந்த ஒரு நொடியில் மட்டுமே மனம் லேசாக குறுகுறுக்கும்.. அவ்வளவு தான்.. பின்பு எப்பவும் போல் அடுத்தவரை குறை சொல்ல கிளம்பிவிடும் வீறுகொண்டு.. ”இந்த உலகில் என்ன விதமான மாற்றத்தை எதிர்பார்க்கிறாயோ அதை உன்னில் இருந்து ஆரம்பி” என்று விவேகானந்தரோ யாரோ சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றவும் முயன்று கொண்டிருக்கிறேன்.. சில விசயங்களில் வெற்றிகரமாக பின்பற்றியும் வருகிறேன்.. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக அது கொடுக்கும் ஆத்ம திருப்திக்கும் அளவேதும் இல்லை. நாம் சரியாக நடக்கிறோம் என்கிற மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து நல்ல பல விசயங்களை செய்ய வைக்கும்.
எவ்வளவு பெரிய பயணமும் முதல் அடியில் இருந்து தானே தொடங்கும்? அதனால் நம்மை முதலில் திருத்திக்கொள்வோம் கொஞ்சம் கொஞ்சமாக.. கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் பழகிய பின் அது நமக்கு ஒரு ஒழுக்கத்தை கொடுக்கும். பின் நிச்சயம் இந்த சமூகமும் உருப்படும்.. ஏனென்றால் நாம் எல்லோரும் சேர்ந்தது தானே சமூகம்?
ReplyDeleteஎல்லாமே நெத்தியடி கேள்விகள்தான்... ஆனால் இங்க பிரச்சனையே வேற... முகநூளில் பொங்கு பொங்குனு பொங்குபவர்களில் ஒரு சதவிகிதத்தினர் கூட உத்தமன் கிடையாது. அவனுகளோட நோக்கமே அப்போ என்ன பிரச்சனையோ அதை பத்தி ஏதாவது கிளப்பிவிட்டு லைக் வாங்குவது. இப்படி யோசித்துப் பாருங்கள்... லைக் பட்டனுக்கு பக்கத்தில் ஒரு அன்லைக் பட்டன் இருந்தால் என்னாகும்..? இப்ப இருக்கிற கருத்து கந்தசாமிகள் பாதிபேர் முகநூலை விட்டு ஓடிப்போயிடுவானுக...
முகநூளில் இருக்கும் இன்னொரு கொடுமை தனிமனித தாக்குதல். ஊர்ல சண்டை வரும்போது நமக்கு சப்போர்ட் பண்ண ரெண்டு பேர் கூட இருந்தால் ஒரு தெம்பு வரும் பாருங்க...அதேப்போல இங்க அஞ்சு பத்து லைக் விழுந்தால் போதும் நானும் ரவுடிதான்னு சில பேர் கிளப்பிடுரானுக...
ஆனா பாருங்க அவுனுகளுக்கு ஒரு விஷயம் தெரியிறதில்ல... 5000 பிரன்ட்ஸ்+ 5000 க்கு மேல் பாலோயர்ஸ் இருக்கிற நமக்கு 5 சதவித லைக் மட்டுமே விழுது என்று. ஒருவேளை அன்லைக் ஆப்சன் இருந்தால் மற்ற 95 சதவிகித பேர் அன்லைக் பண்ணினா இனிமேல் ஏதாவது ஸ்டேடஸ் போடுவானுக..?
unlike buttone அவசியம் வைத்தே ஆக வேண்டும்
Deleteஃபேஸ்புக்கில் unlike பட்டன் ஏற்கனவே இருக்கிறது.. தேவை ‘dislike' பட்டன் தான்..
Deleteஆனால் நான் இங்கு சொல்வது ஃபேஸ்புக்கை பற்றி மட்டும் இல்லை.. எல்லா இடத்திலும் தானே நாம் புரணி பேசுகிறோம்?
Deleteசரியான கேள்விகள் ராம்...
ReplyDeleteபேஸ்புக்கில் வாதிடுவது அவர்களுக்கு கௌரவம்...
அடுத்தவனிடம் எப்படி லைக்ஸ், கமெண்ட்ஸ் வாங்கினோமா? என தம்பட்டம் பேஸ்புக் ஸ்டேடஸ்இல் வெளிப்படும்
பாதி வாழ்க்கை லைக்கிலும் followers சேர்ப்பதிலுமே முடிந்துவிடுகிறதே...
Deleteஇப்படி பலமுறை யோசித்து தூக்கத்தை கெடுத்துகொண்டுள்ளேன்.
ReplyDeleteநீங்களுமா? ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteசாட்டையடியான கேள்விகள்.......
ReplyDeleteநன்றி.. செயல்களில் பதில் வர வேண்டும்.. அது தான் நம் ஆசை
Deleteஅடேயப்பா என்னாமா யோசிக்கிராறு.. ஒருவேள பட்டணத்துல படிச்சி இருப்பாரோ... :-)
ReplyDeleteசில சமுகம் சார்ந்த கேள்விகளுக்கு தனி நபரால் பதில் கூற முடியாது, ஆனால் சமுகம் ஒன்று சேர்ந்து பதில் கூறலாம்
சமுகம் ஒன்று சேர தனிநபர் மாற்றம் வேண்டும்
தனிநபர் மாற்றத்தை என்னில் இருந்து தொடங்குகிறேன்
ஹா ஹா பட்டணத்துல படிச்சா இதெல்லாம் தோனாது நண்பா..
Delete//தனிநபர் மாற்றத்தை என்னில் இருந்து தொடங்குகிறேன்
// வாழ்த்துக்கள் :-)
அனைவருக்கும் இது போன்ற எண்ணங்கள் அவ்வப்போது வந்து , கடந்து போவது உண்டு. இடுகை படிக்கையில் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அனைத்தையும் மாற்றி விட்டது கடைசி பத்தி. இருப்பினும் சில உடன்படாத வரிகளில் முதன்மையானது இதுதான் .// நாம் யாரும் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் என்ன நம் சட்டையை பிடித்தா லஞ்சம் கேட்கப்போகிறார்கள்? லஞ்சத்தை ஆரம்பித்தது பொது மக்களாகிய நாம் தானே?//
ReplyDeleteகிட்டத்தட்ட அதே மாதிரியான நிலைதான்
நாம் போனவுடன் ஒரு ஏளனப் பார்வை வரவேற்பாக கிடைக்கும் .
அந்த பார்வையில் தெரியும் உதாசினத்தை நம்மால் சகிக்க இயலாது .
இது (NOC) போல இங்கு தருவதில்லை என்பார்கள். யாரவது முன்பு வாங்கி இருந்தால் வாங்கி கொண்டு வாருங்கள் என்பார்கள்.
சம்மந்தமில்லா ஆட்களிடத்தில் அலைய விடுவார்கள்.
அய்யா பிஸியாக இருக்கிறார் மதியம் வாங்க என்பார்கள் .
கையெழுத்தான விண்ணப்பத்தை தராமல் இழுத்தடிப்பார்கள்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதலில் லஞ்சம் கேட்க ,வாங்க வெட்கப் பட வேண்டும். ஆனால் நமது மனநிலை இதை எல்லாம் தாண்டி ரொம்ப காலம் ஆகி விட்டதை போல தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் வாங்காமல் இருக்க நினைப்பதே நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாக கருதுகிறேன் .
நல்ல மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும் ...
அரசு ஊழியன் வாங்க மாட்டேன் என்றாலும் வலிந்து கொடுக்கிற மக்களை நான் பார்த்திருக்கிறேன்.. மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பிப்போம் பாஸ்..
Deleteநெத்தியடி கேள்விகள்! பதில் சொல்ல முடியவில்லை! ஆனால் இதையெல்லாம் பேஸ்புக் போராளிகள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்!
ReplyDeleteஇதை நான் ஃபேஸ்புக் ஆட்களுக்காக கேட்டிருக்கிறேன் என்று சொல்வதை விட எனக்காகத்தான் கேட்டிருக்கிறேன்..
Deleteஎல்லோரும் தம்மை கேட்டுக்கொள்ளக்கூடிய அருமையான கேள்விகள்..தன் முதுகை யாருமே பார்ப்பதேயில்லை...என் முக நூல் நண்பர்களும் கேட்டுக்கொள்ளட்டுமே...
ReplyDeleteநம் முதுகை நம்மால் பார்க்க முடியாததால் தான் நாம் எப்போதுமே அடுத்தவரின் முதுகை பார்க்கிறோம் போல..
Deleteநான் எந்த சண்டைக்கும் போறது இல்லப்பா! நல்லா கேள்வி கேட்டிங்க, இதுல நெறைய விசயம் நான் சரியா செய்யல, அதே மாதிரி நெறைய சரியா செய்றேன்னு நெனைகறேன்...! நீங்க என்ன எழுதி என்ன புண்ணியம், இத வச்சே அடுத்த சண்ட, புரட்சி கெளம்புனாலும் கெளம்பும்! :) :P
ReplyDeleteஆமா.. நாம தான் எது கெடச்சாலும் புரட்சி பண்ணுவோம்ல? வாழ்க புரட்சி...
Delete”இந்த உலகில் என்ன விதமான மாற்றத்தை எதிர்பார்க்கிறாயோ அதை உன்னில் இருந்து ஆரம்பி” என்று விவேகானந்தரோ யாரோ சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.விவேகனந்தர் தான்.
ReplyDeleteஅவர் மேலும் சொன்னார் உங்களை போல் 100 இளைஞர் தேவை என்றும் சொன்னார்.
என்னை மாதிரியா? அய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க..
Deleteஅருமை ராம்குமார்.
ReplyDeleteஅற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
இளைஞர்களிடம் இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.
வாழ்த்துகள் ராம்குமார்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/4_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...
எதையும் முந்தித்தருவதே அண்ணனின் சிறப்பு.. நன்றி அண்ணே...
Deleteஅன்பின் ராம்குமார் - நல்ல் தொரு பதிவு
ReplyDeleteஇந்த உலகில் என்ன விதமான மாற்றத்தை எதிர்பார்க்கிறாயோ அதை உன்னில் இருந்து ஆரம்பி” என்று விவேகானந்தரோ யாரோ சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றவும் முயன்று கொண்டிருக்கிறேன்.. சில விசயங்களில் வெற்றிகரமாக பின்பற்றியும் வருகிறேன்.. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக அது கொடுக்கும் ஆத்ம திருப்திக்கும் அளவேதும் இல்லை. நாம் சரியாக நடக்கிறோம் என்கிற மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து நல்ல பல விசயங்களை செய்ய வைக்கும்.
நன்று நன்று - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக் வந்து படித்து மகிழ்ந்து மறுமொழி இடுகிறேன்
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிக்க நன்றி சீனா சார் :-)
DeleteReminding Sujatha's Anniyan dialogues
ReplyDeleteRam's best Non fiction so far.
"Be the change you want to see in the world. - MK Gandhi"
"உன்னிடம் பிழை எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டு மற்றவற்றைப்பேசு" என்று சிவகாசிச் சரவெடியாகத் தொடர்ந்து வெடித்திருக்கின்றீர்கள். வளர்க.வெல்க.
ReplyDelete